
க்ளாரா ஜெட்கின் [5.7.1857 — 20.6.1933]
பேரா. ஆர். சந்திரா
ஜெர்மனியை சேர்ந்த க்ளாரா ஜெட்கின் ஒரு தலைசிறந்த மார்க்சீயவாதி. பெண்ணுரிமை போராளி. கல்லூரியில் படிக்கும் பொழுதே, மார்க்சீய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து செயல்பட்டார். 1878இல் அக்கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட பொழுது, சூரிச்சுக்கு சென்றார். பின்னர் பாரீஸில் தலைமறைவாக இருந்து கொண்டே கட்சி பணிகளை மேற்கொண்டார். மொழிபெயர்ப்பு செய்வதில் சிறந்தவர். இதழியல் கற்றார். இவரது கணவர் ஜெட்கினும் சிறந்த மார்க்சீயவாதி ஆவார். அவர்களுக்கு 2 குழந்தைகள். ஜெட்கின் உடல்நலம் குன்றி சிறு வயதிலேயே இறந்து போனார். க்ளாரா, ஜார்ஜ் ஃபிரெடெரிக் சன்டெல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது கருத்துக்களை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், முன்வைக்கும் தைரியம் கொண்டவர். பெர்ன்ஸ்டீன் முன்வைத்த சீர்திருத்தவாத ஆய்வுகளை கடுமையாக சாடியவர். மார்க்சீய திருத்தல்வாதம் பற்றிய தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்தவர். 1898இல் மற்றொரு தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவரான, ரோசா லக்ஸம்பர்குடன் இணைந்து மகளிர் உரிமைக்காக குரலெழுப்பியவர். க்ளாரா முதலாளித்துவ பெண்ணீயத்திற்கெதிராக வலுவாக குரல் கொடுத்தவர். முதலாளித்துவ அமைப்பில் பெண் விடுதலை சாத்தியமல்ல. பெண் விடுதலையை தனியாக நிலவும் ஒன்றாக கருதக் கூடாது. அது மாபெரும் சமூக மாற்றத்துடன் கட்டுண்டது என்பதை தெளிவாக உணர்ந்தவர். பெண்கள் வீட்டு வேலைகளில் இருந்து விடுபட்டு, தொழிற் சங்க பணிகளில் பங்கு பெற்று, தங்கள் வாழ்நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியவர். உழைக்கும் மக்களை, குறிப்பாக பெண்களை அரசியல்படுத்தி கட்சிக்குள் கொண்டு வந்தவர். பெண்ணீயத்தை மார்க்சீய அடிப்படையில் அணுக கற்று கொடுத்தவர். பெண்ணீயம் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தியவர். இன்று உலகம் முழுவதிலும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் பின்பற்றப்படுகிறது. அதற்கு வித்திட்டவர்களில், க்ளாரா முக்கியமானவர் என்றால் அது மிகையாகாது. மகளிருக்கு வாக்குரிமை, பொது வெளியில், பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து போராடியவர். ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை பற்றி க்ளாராவும், ரோசா லக்சம்பர்க்கும் [20 ஆண்டுகள் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தவர்கள்] நிறைய விவாதிப்பார்கள்.
ஜெர்மனியின் பொதுவுடமை கட்சியின் உறுப்பினராக, அதன் அரசியல் குழுவில் 1920-1933 வரை அயராமல் பணியாற்றினார். பத்திரிக்கைகள் மக்களை அரசியல்படுத்த உதவும் சிறந்த ஆயுதம் என்பதை புரிந்து வைத்திருந்த க்ளாரா, சமூக ஜனநாயகக் கட்சியின் பத்திரிக்கைக்கு ஆசிரியராக 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார். 1907இல் எஸ். பி. டியில் புதிதாக நிறுவப்பட்ட “பெண்கள் கழகத்தின்” தலைவராக செயல்பட்டார். 1920இல் லெனினுடன் இவர் நடத்திய நேர் காணல் [The Women’s Question] மிகவும் புகழ்பெற்றது. மகளிர் உரிமை, தொழிற்சங்க செயல்பாடு, ஒரு கம்யூனிஸ்ட் அரசை எப்படி கட்டமைப்பது என்பது பற்றி லெனினுடன் விவாதித்தார். முதல் உலகப் போர் வெடித்த பொழுது, போருக்கு எதிராக , வலுவாக குரலெழுப்பினார். அதற்காக கைது செய்யப்பட்டார். 1919இல் நவம்பர் புரட்சிக்கு பின்னர் ஜெர்மனியில் பொதுவுடமை கட்சி நிறுவப்பட்டது. அதில் இணைந்து செயல்பட்டார். கட்சி எடுத்த சில முடிவுகளில் மாற்றுக் கருத்து இருந்த பொழுது, அவற்றை வெளிப்படுத்தினார். 1932இல் அவரின் உடல்நிலை மோசமாகியது. இருப்பினும் நாஜி பாசிசத்திற்கெதிராக, அனைத்து தொழிலாளர்களையும் ஒன்று சேர அழைப்பு விடுத்தார்.1933இல் மாஸ்கோ அருகே மரணமடைந்தார். இவரது உடல் அடக்கம் ஜோசப் ஸ்டாலின், க்ரூப்ஸ்காயா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் முன்னிலையில் நடந்தது. 2011இல் இருந்து ஆண்டுதோறும், க்ளாரா ஜெட்கின் மகளிர் விருது ஜெர்மனியின் இடதுசாரி கட்சி வழங்கி வருகிறது. இந்த அற்புத பெண்மணியின் நினைவு தினத்தில் நமது செவ்வணக்கம்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply