
மாக்ஸிம் கார்க்கி [28.3.1868 – 18.6.1936]
பேரா. ஆர். சந்திரா
அலெக்ஸி மாக்சிமோவிச் பெஷகோவ் மிக சிறந்த மார்க்சீய எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேய அனாதையாக்கப்பட்ட அவர் வாழ்க்கை துன்பங்களும், அவமானங்களும் நிறைந்த ஒன்று. துன்பங்களை பொறுக்க முடியாமல் 1887இல் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவர் செய்யாத வேலைகளே இல்லை. வேலை தேடி ரஷ்யா முழுவதும் கால்நடையாக ஒவ்வொரு இடமாக சென்றவர். 10 வயதுக்கு மேல் பள்ளிக்கு செல்ல முடியாத வறுமை. செருப்பு தைக்கும் ஒரு தொழிலாளியிடம் வேலைக்கு சேர்ந்த அவர் , தனது பெயரை மாக்ஸிம் கார்க்கி என்று மாற்றிக் கொண்டார். [கார்க்கி என்றால் கசப்பு என்று பொருள்] ரஷ்யாவில் மக்கள் வாழ்க்கை கசப்பு நிறைந்ததாகத்தான் இருந்தது. கசப்பான உண்மைகளை சொல்ல விரும்பினார். ஒரு சமையல்காரர்தான் அவரது படிக்கும் ஆர்வத்தை தூண்டினார். 1892இல் அவரது முதல் சிறுகதை [மகர சுத்ரா] பிரசுரமாகியது.1898இல் அவருடைய கட்டுரைகள், கதைகளின் தொகுப்பு வெளியானபோது மாபெரும் வெற்றி பெற்றது. மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு எழுத்தாளராக கார்க்கி மாறினார். விளிம்பு நிலையில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் நிறைந்த கொடுமைகளையும், அவமானங்களையும், அவற்றை தாண்டி அவர்களின் மன உறுதியையும் தனது எழுத்துக்களில் வெளிப்படுத்தினார். ரஷ்யாவின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார தளங்களில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் குறித்து மக்கள் மத்தியில் சிந்தனையை தூண்டும் வகையில் அவரது எழுத்துக்கள் இருந்தன. 1899ஆம் ஆண்டில், ஏழை உழைப்பாளி மக்கள் மட்டுமின்றி, படித்த அறிவுஜீவிகள் மத்தியிலும் கார்க்கி பிரபலமானார். ஹில்லெல் என்ற யூத அறிஞரின் எழுத்துக்கள் தன் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என கார்க்கி குறிப்பிட்டுள்ளார். ஜார் மன்னனின் ஆட்சியை கடுமையாக, வெளிப்படையாக தொடர்ந்து விமர்சித்த கார்க்கிக்கு பல புரட்சியாளர்களின் நட்பு கிடைத்தது. 1902இல் தோழர் லெனினுடன் ஏற்பட்ட சந்திப்பு குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டுதான் அவர் இலக்கிய துறையின் முக்கிய பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஜார் மன்னன் அதை ஏற்கவில்லை. அதை தொடர்ந்து ஆன்டன் சேகோவ் போன்றவர்கள் அந்த அகாதமியை விட்டு விலகினர்.
மாக்ஸிம் கார்க்கி ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமின்றி சிறந்த மார்க்சிஸ்ட் சோஷலிஸ்ட்டாகவும் திகழ்ந்தார். யதார்த்த சோஷலிசத்தை கட்டமைத்தவர். ரஷிய சமூக ஜனநாயக கட்சிக்கு நிறைய நிதி உதவி செய்தார். சிவில் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கும், சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் ஆதரவு அளித்தார். 1905இல் நடந்த மாஸ்கோ எழுச்சிக்கு உதவினார். அதற்கு பின்னர் அவர் வீடு தாக்கப்பட்டதும், பின்லாந்து சென்று விட்டார். 1906இல் போல்ஷ்விக் கட்சி நிதி திரட்ட கோரி அமெரிக்காவுக்கு அனுப்பியது. கார்க்கி ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்த போதிலும் கடவுள் கட்டமைப்பு பற்றி தோழர் லெனினுடன் நிறைய விவாதித்தார். முதல் உலக போர் வெடித்த பொழுது, போரை கடுமையாக எதிர்த்தார். அது பற்றி நிறைய எழுதினார். தனது விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவித்தார்.
பிரபல எழுத்தாளராக, சோஷலிச சிந்தனையாளரான கார்க்கி இறந்த பின்னர் ரஷ்யாவில் பல தெருக்களுக்கு மாக்ஸிம் கார்க்கி என பெயரிடப்பட்டது. அவரது பெயரில் ஒரு கிராமமே இருக்கிறது. மாஸ்கோவில் உள்ள நாடக அரங்குகள், கலாச்சார மையங்கள் தவிர கார்க்கி பெயரில் பல்கலைக்கழகங்களும் நிறுவப்பட்டன. ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் பல மாநிலங்களில் கார்க்கியின் சிலையை காணலாம். இந்தியாவில் கொல்கத்தாவில் ‘கார்க்கி சதன்’ என்ற பெயரில் ஒரு கலையரங்கம் உள்ளது. இலக்கிய உலகில், முக்கிய இடம் பிடித்த எழுத்தாளர், சிந்தனையாளர் மாக்ஸிம் கார்க்கிக்கு நமது செவ்வணக்கம்.
.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply