
சோஷலிசத்தை நோக்கிய இந்தியாவின் பயணம்
இ. எம். எஸ். நம்பூதிரிபாட்
(சோவியத் யூனியன் சிதறுண்டு, அதைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய சோஷலிஸ்ட் நாடுகளும் முதலாளித்துவப் பாதையை நோக்கிச் சென்ற பிறகு, சோஷலிஸ்ட் உலகத்திற்கு எதிர்காலம் ஏதுமில்லை என்ற முதலாளித்துவ நிபுணர்களின் ஆர்ப்பரித்த குரல்களுக்கு நடுவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1992 ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற 14வது அகில இந்திய மாநாட்டில் சோஷலிசத்தின் இந்தப் பின்னடைவுக்குப் பின்னால் இருந்த தத்துவார்த்த குறைபாடுகள் குறித்து ஆழமாக விவாதித்தது. இந்தப் பின்னணியில், அந்த மாநாட்டின்போது கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் இ.எம்.எஸ். அவர்கள் இந்த விவாதம் குறித்து ‘ஃப்ரண்ட்லைன்’ இதழிலும், ‘சோஷியல் சயிண்டிஸ்ட்’ இதழிலும் விரிவாக எழுதியிருந்தார். இந்த இரு கட்டுரைகளின் முக்கியமான கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம் – ஆசிரியர் குழு)
1943ஆம் ஆண்டில் பம்பாயில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) முதல் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று, இன்றும் உயிர் வாழும் ஒரு சிலரில் நானும் ஒருவன். (இக்கட்டுரை 1992ஆம் ஆண்டில் எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) சி.பி.ஐ-யின் அடுத்தடுத்த ஐந்து மாநாடுகளிலும், பின்னர், கட்சி பிளவுபட்ட பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொள்ளும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
கட்சி செய்தித்தாள்களில் வெளியான எனது தொடர் கட்டுரைகளில் (அவை பின்னர் புத்தக வடிவிலும் வந்தன), ஒரு கட்சி மாநாட்டிலிருந்து மற்றொரு கட்சி மாநாட்டிற்கு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரசியல் நிலைபாடு எவ்வாறு முன்னேறி, இறுதியில் ‘சோசலிசத்திற்கான இந்தியப் பாதை’ என்ற வடிவத்திற்கு வழிவகுத்தது என்பதை நான் விளக்கி வந்துள்ளேன்.
இத்தருணத்தில், சி.பி.ஐ-யின் முதல் மாநாட்டிற்கும், சி.பி.ஐ (எம்)-இன் 14-வது மாநாட்டிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளோடு மட்டுமே என்னை கட்டுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
சி.பி.ஐ-யின் முதல் மாநாடு, பாசிசத்திற்கு எதிராக உலகெங்கிலும் பிரம்மாண்டமான போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது நடைபெற்றது; அந்தப் போரின் விளைவைப் பொறுத்தே இந்திய விடுதலைப் போராட்டத்தின் வெற்றி அமைந்திருக்கும் என்று கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் கருதினோம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ‘வெள்ளையனே வெளியேறு!’ என்று அறைகூவி, இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய போராட்டம் இதற்கு எதிராக இருந்தது. அதற்கு இணையாக, முஸ்லிம் லீக், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை (இந்து மற்றும் முஸ்லிம் என்ற) இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என்று கோரியது. இந்திய தேசிய காங்கிரஸின் முழக்கமான ‘வெள்ளையனே வெளியேறு!’ என்பதற்குப் பதிலாக, ‘நாட்டை (இரண்டாகப்) பிரித்துவிட்டு வெளியேறு!’ என்பதே முஸ்லீம் லீகின் முழக்கமாக இருந்தது.
அதேநேரத்தில், ஜப்பானிய இராணுவவாதிகளின் நேரடி உதவியுடன் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை ‘விடுவிக்க’ முயன்று கொண்டிருந்த சுபாஷ் சந்திர போஸ்- இன் குழு இருந்தது. அதுபோக நாட்டில் எஞ்சியிருந்த ஒரே இடதுசாரிக் கட்சியான காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியோ, ‘வெள்ளையனே வெளியேறு!’ என்ற காங்கிரஸின் போராட்டத்தைச் செயல்படுத்தத் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தது.
அப்போது சிறிய சக்தியாக இருந்த சி.பி.ஐ., ‘பிரிட்டிஷாருடன் கைகோர்த்துக் கொண்டு ‘வெள்ளையனே வெளியேறு!’ என்ற காங்கிரஸின் போராட்டத்தைக் குழப்பிவிடுவதாக’ தங்களைக் கண்டித்து வந்த முதலாளித்துவ தேசியவாதிகளின் வலுவான கூட்டணிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தது. எனவே, அந்த முதல் மாநாடு, கோடிக்கணக்கான இந்திய மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த தேசியவாத ‘நீரோட்டத்திற்கு எதிராக நீந்துவது’ என்ற பிரச்சினையிலும், நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு உறுதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் லீக்கிற்கு எதிரான பிரச்சினையிலும் தனது கவனத்தைச் செலுத்த வேண்டியிருந்தது.
காங்கிரஸ் தலைவர்களால் ‘வெள்ளையனே வெளியேறு!’ என்ற அழைப்பு விடுக்கப்பட்டு இப்போது அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. அந்தப் போராட்டம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொடூரமாக அடக்கப்பட்டது. எனினும், விடுதலைப் போராட்ட உணர்வு மக்களிடையே உயிர்ப்போடு வைக்கப்பட்டது. மேலும், ஐரோப்பாவில் சோவியத் செம்படையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியும், சீனாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்களும் உலக நிலைமையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. எனவே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், காங்கிரஸ் கோரியதுபோல் இந்தியாவை விட்டு வெளியேறுவதே புத்திசாலித்தனம் என்று நினைத்தனர். அதே நேரத்தில், முஸ்லிம் லீக் கோரியதுபோல், நாட்டை இரண்டாகப் பிரிப்பது என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.
அப்போதிலிருந்து ஏறக்குறைய 45 ஆண்டுகளாக, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு காலத்தில் ஒன்றுபட்டிருந்த இந்தியாவின் இந்திய ஒன்றியப் பகுதியில் ஆளும் கட்சியாக இருந்துவந்தது. புதிய ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தின் கலகக்கொடியை முதலில் உயர்த்தியது கம்யூனிஸ்ட் கட்சிதான். எனினும், அதன் பின்னர் பல எதிர்க்கட்சிகளும் குழுக்களும் களத்திற்கு வந்தன. அவை அன்றிலிருந்து எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளன என்றால், இன்று நாட்டில் மூன்று பெரிய அரசியல் அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன—(1) இந்திய தேசிய காங்கிரஸ். இது இன்னும் நாட்டின் மிகப்பெரிய, மிக அதிக செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியாக உள்ளது; (2) பாரதீய ஜனதா கட்சி, இது செல்வாக்கில் காங்கிரஸுக்கு அடுத்த இடத்தில் உள்ளது; (3) கம்யூனிஸ்ட் மற்றும் பிற மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டணி: இடதுசாரி-தேசிய முன்னணி கூட்டணி.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், கட்சி, அதன் கொள்கை, அமைப்புகள் ஆகியவை பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி, முன்னேற்றங்களையும், பின்னடைவுகளையும் சந்தித்து, பிளவுகள், ஒன்றுபட்ட நடவடிக்கைகள் போன்றவற்றோடு நடைபோட்டு வருகிறது. சி.பி.ஐ (எம்), சி.பி.ஐ மற்றும் பல்வேறு நக்சல் குழுகளாகப் பிளவுபட்டு நிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கம், இன்று ஒரு நாற்சந்தியில் உள்ளது. இந்த உலகளாவிய மாற்றங்கள் குறித்த தனது கட்சிக்குள்ளான விவாதத்தின் ஒரு கட்டத்தை சி.பி.ஐ (எம்) 14-வது மாநாட்டில் முடித்துக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், சி.பி.ஐ., அதன் 15-வது மாநாட்டிற்குத் தயாராகும் வகையில் தீவிரமான உள் விவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், வேறு சில இடதுசாரிக் குழுக்களுடனும், ஜனதா தள்-தேசிய முன்னணியுடனும் சேர்ந்து, ஜனநாயகம், தேசிய ஒற்றுமையை பாதுகாத்தல், மதவெறி, இதர பிளவு சக்திகளுக்கு எதிராகப் போராடுதல், உழைக்கும் மக்களின் நலன்களுக்காகப் போராடுதல் என்ற திட்டத்தின் அடிப்படையில் கோடிக்கணக்கான மக்களைத் திரட்டிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு வளர்ந்துவரும் இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஐக்கிய முன்னணி பிரச்சினைகள், 14-வது மாநாட்டின்போது, அதன் அரசியல் தீர்மானத்தில் விரிவாக ஆராயப்பட்டன.
இதற்கிடையில், சர்வதேச அரங்கில் மகத்தான மாற்றங்கள் நடைபெற்றிருந்தன. நாட்டின் தேசப்பற்று மிக்க தற்காப்பை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியம் அதில் வெற்றி பெற்றது. அது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலக நிலைமையில் தீவிர மாற்றங்களைக் கொண்டுவர உதவியது: ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலைபெற்ற ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கக் கண்டங்களில் வாழ்ந்துவரும் கோடிக்கணக்கான மக்கள் அரசியல் விடுதலையை அடைந்துள்ளனர். அவர்கள் இன்று பொருளாதார, சமூக-கலாச்சார விடுதலைக்காக தங்களை அணிதிரட்டிக் கொண்டிருக்கின்றனர்.
எனினும், பாசிசத்திற்கு எதிரான போரில் யுகத்தையே மாற்றிய வெற்றியால் 1950களிலும் 1960களிலும் காலனியாதிக்கத்தை அகற்றுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்திய சோவியத் ஒன்றியம் இன்று இல்லை. பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்டு, உலக ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல் அல்லது மிருகத்தனமான சக்தியைக் கொண்டு பிளவுபடுத்தப்படவோ, அழிக்கப்படவோ முடியாதிருந்த சோஷலிஸ்ட் அமைப்பு, இப்போது முந்தைய அமைப்பின் திரிபுகள் மற்றும் அதன் பின்னரான (குருஷ்சேவ்-கோர்பச்சேவ்) திருத்தல்வாத கொள்கைகளின் கூட்டணியின் காரணமாக பிளவுபட்டுவிட்டது.
உலக சோஷலிசம் இவ்வாறு வலுவிழந்திருப்பது மட்டுமல்லாமல், பாசிசத்திற்கு எதிரான போரில் சோவியத் வெற்றியைத் தொடர்ந்து, அரசியல் சுதந்திரம் பெற்ற அனைத்து முன்னாள் காலனித்துவ, அரைகாலனித்துவ நாடுகளின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் அச்சுறுத்துகிற அளவிற்கு, அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய முகாம் இப்போது சக்திவாய்ந்ததாகவும், அகம்பாவம் கொண்டதாகவும் மாறியுள்ளது.
இதற்கிடையில், (சோஷலிசத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் செயல்முறையைத் தொடங்கியுள்ள முன்னாள் சோஷலிஸ்ட் நாடுகளையும் உள்ளடக்கிய) முதலாளித்துவ உலகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் தொடர்ந்து தீவிரமான நெருக்கடியில் தன்னைத் தள்ளிக் கொண்டுள்ளது. இந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்கள் திரள் முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி எழுகின்றனர். (முன்னாள் சோஷலிஸ்ட் நாடுகள் உட்பட) அனைத்து வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளி வர்க்கத் தலைமையிலான மக்களின் சக்திவாய்ந்த ஐக்கிய முன்னணி, இந்தியா உட்பட வளர்ந்துவரும் நாடுகளில் வாழும் மக்கள் திரள், சீனா, வட கொரியா, வியட்நாம், கியூபா ஆகிய நான்கு சோஷலிஸ்ட் நாடுகளில் உள்ள அரசுகளின் தலைமையிலான மக்கள் ஆகியோரின் சக்திவாய்ந்த ஐக்கிய முன்னணி சர்வதேச அளவில் இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் வந்துள்ளது.
இந்த வகையில், சி.பி.ஐ (எம்) மாநாட்டில் நான்கு சோஷலிஸ்ட் நாடுகள் மற்றும் அண்டை நாடான நேபாளத்திலிருந்து வந்த சகோதர பிரதிநிதிகளின் பங்கேற்பு, மேலும் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ, முன்னாள் சோஷலிஸ்ட் நாடுகளில் உள்ள சில கட்சிகள் உட்பட சகோதர கட்சிகளிலிருந்து வந்திருந்த வாழ்த்துச்செய்திகளுடன் சேர்ந்து ஒரு குறியீடாகவே அமைந்திருந்தது.
இவை எதைக் காட்டுகின்றன எனில், முன்னாள் சோஷலிஸ்ட் நாடுகளின் திருத்தல்வாத தலைவர்கள் தங்கள் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் உலக முதலாளித்துவத்திடம் சரணடையச் செய்துவிட்ட போதிலும், மார்க்சியம்-லெனினிசத்தின் கொடி இன்னும் உயரமாகப் பறந்துகொண்டிருக்கிறது என்பதைத்தான். முன்னாள் சோஷலிஸ்ட் நாடுகள் திருத்தல்வாதிகளின் துரோகத்தால் வலுவிழந்த போதிலும், மார்க்சியம்-லெனினிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை இன்றும் கடைப்பிடித்துவரும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் படையணியாக சி.பி.ஐ (எம்) மட்டுமே விளங்குகிறது.
இந்தப் பின்னணியில்தான், 14-வது மாநாடு உலக கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்கொள்ளும் சில கருத்தியல் கேள்விகள் குறித்த ஆவணத்தை விவாதித்து ஏற்றுக்கொண்டுள்ளது. ஐரோப்பாவின் முன்னாள் சோஷலிஸ்ட் நாடுகளில் சோஷலிசத்தின் பின்னடைவால் இயக்கத்திற்கு ஏற்பட்ட பெரிய சேதத்தை அங்கீகரித்த போதிலும், மார்க்சியம்-லெனினிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது, உலகம் முழுவதிலும் உள்ள கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்துவதைப் போல, மார்க்சியம்-லெனினிசத்தின் செல்லாத்தன்மையை குறிக்கவில்லை என்ற முடிவிற்கு சி.பி.ஐ (எம்) மாநாடு வந்தது.
மறுபுறத்தில், மார்க்சியம்-லெனினிசத்தின் அடிப்படை அனுமானங்கள்—வர்க்கப் போராட்டம், ஜனநாயக இயக்கங்களில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமை, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம், ஜனநாயகம் மற்றும் சோஷலிஸ்ட் மாற்றங்களைக் கொண்டுவருவதில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணிப் பங்கு, கட்சி அமைப்பிற்கான வழிகாட்டுதலாக ஜனநாயக மையப்படுத்தல் கொள்கை — இவை ஒவ்வொன்றும் அனுபவத்தின் அடிப்படையில் புதுப்பிக்கப்படவேண்டும் என்றபோதிலும், தொடர்ந்து இன்றும் பொருத்தமானவையாகவே இருக்கின்றன. இந்தக் கொள்கைகளின் உண்மையான செயல்படுத்தலில்தான் திரிபுகள் ஏற்பட்டுள்ளன; அவை சரிசெய்யப்பட வேண்டும் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயக மையப்படுத்தல் ஆகிய கொள்கைகள் நடைமுறையில் திரிபுக்கு ஆளாகியுள்ளன: பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது ஒரு கட்சியின் சர்வாதிகாரமாக குறுக்கப்பட்டது. மீண்டும் அது ஒரு முன்னணி குழுவின் சர்வாதிகாரமாகவும் – முன்னணியிலுள்ள ஓர் ஆளுமையின் சர்வாதிகாரம் இல்லையென்றாலும் – குறுக்கப்பட்டது. ஜனநாயக மையப்படுத்தலின் செயல்பாட்டிலும், மையப்படுத்தப்பட்ட தலைமை, அடிக்கடி உள் கட்சி ஜனநாயகத்தை விட முன்னுரிமை பெற்று, அதை அடக்கி வந்துள்ளது. இருந்தபோதிலும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமோ அல்லது ஜனநாயக மையப்படுத்தலோ, தன் செல்லுபடித் தன்மையையும் பொருத்தத்தையும் இழந்துவிட்டது என்று அதற்குப் பொருளல்ல.
சோவியத் ஒன்றியம் செயல்பட்டு வந்த முந்தைய ஆண்டுகளில்—1917-இல் அது நிறுவப்பட்ட காலத்திலிருந்து 1945-இல் பாசிச எதிர்ப்புப் போரின் முடிவு வரை — உலக ஏகாதிபத்தியம் தன் பலத்தைப் பயன்படுத்தி உலக சோஷலிசத்தை அழிக்கத் தொடர்ந்து முயன்று கொண்டேயிருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்திலும் இது மீண்டும் நடந்தது. ஹாரி ட்ரூமன் முதல் ரொனால்ட் ரீகன் வரையிலான அமெரிக்க அதிபர்கள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அணுசக்தியைப் பயன்படுத்த முயன்றபோது, ஏகாதிபத்திய எதிரிகளின் இந்த முயற்சிகளை மீறி, 1970களிலும், 1980களிலும் அணுசக்தி வலிமையில் சமநிலையை அடைந்தது சோவியத் ஒன்றியத்தின் பெருமைக்குரிய ஒரு சாதனையாகும்.
எனினும், வெற்றிபெற்ற ‘பிற வழிமுறைகள்’ மூலம் சோஷலிசத்தை அழிப்பதிலிருந்து ஏகாதிபத்தியத்தை இது தடுத்துவிடவில்லை. இன்று, ஏகாதிபத்தியம், சீனா, கொரியா, வியட்நாம், கியூபா ஆகிய நாடுகளைப் பிளவுபடுத்த ‘பிற வழிமுறைகளை’ பயன்படுத்த முயற்சித்து வருகிறது. முதலாளித்துவ நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளி வர்க்க இயக்கத்தையும், வளர்ந்துவரும் நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்களையும் வலுவிழக்கச் செய்து, பிளவுபடுத்துவதற்கு ஏகாதிபத்தியம் தன் வசம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், ஏகாதிபத்திய சக்திகள் தங்களுக்குள் கடுமையான மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், அது ஏகாதிபத்திய – எதிர் ஏகாதிபத்திய போர்களை நடத்தும் அளவிற்குச் செல்லவில்லை.
உலக நிலைமையில் உள்ள நான்கு பெரிய முரண்பாடுகள்—முதலாளித்துவத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு, முதலாளித்துவ சக்திகளுக்கிடையிலேயே உள்ள முரண்பாடு, முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு, ஏகாதிபத்தியத்திற்கும் வளர்ந்துவரும் நாடுகளின் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு — ஆகிய இவை அனைத்தும் ‘பனிப்போர்’ காலகட்டத்தில் இருந்ததைப் போல் இல்லையென்றாலும், இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக சோஷலிசத்திற்கான போராட்டத்தை உலக முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது என்ற உண்மையை எந்தவொரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டும் காணாமலிருந்துவிட முடியாது. எனவே அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கத்திற்குப் பின்னால் திரண்டு நிற்க வேண்டும். அந்த தொழிலாளி வர்க்கம் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சிகளின் தலைமையில் இருக்க வேண்டும்.
இந்த இரு அமைப்புகளுக்கு இடையிலான போராட்டம், இரு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம் மற்றும் உலக சோஷலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் பங்கு ஆகியவற்றைப் பற்றிய இந்த கருத்தைக் கைவிட்டுவிடுதல் என்பது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயக மையப்படுத்தலை திருத்தல்வாதிகள் கைவிடுவதில் ஊடு பாவாகத் திகழ்கிறது.
உண்மையில், கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, உழைக்கும் வர்க்க சர்வாதிகாரத்தின் உண்மையான செயல்பாட்டின் எதிர்மறை அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக ஜனநாயகம், கட்சியின் முன்னணிப் பங்குடன் இணைக்கப்பட வேண்டும். சமூக ஜனநாயக நாடுகளில் செயல்படுவதற்கான புதிய வழிகளை வகுப்பதன் அவசியத்தை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடாமல், உழைக்கும் வர்க்க சர்வாதிகாரத்தின் கொள்கையை கைவிடுவது என்பது (சமூக வாதம் என்ற) குழந்தையை (பெரெஸ்த்ரொய்க்கா மற்றும் க்லாஸ்னோஸ்த் போன்ற சீர்திருத்தங்களான) சூடான வெந்நீர்த் தொட்டிக்குள் எறிவதற்கு சமம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியனிலும் சமூக ஜனநாயக வாதம் சிதைந்துபோனது. எனினும் சீனா, கொரியா, வியட்நாம், கியூபாவில் அது பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும். கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியனிலும் போலல்லாமல், சீனாவில் பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்கள் நான்கு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப் படுகின்றன: சமூகவாத அமைப்பு, மக்களின் ஜனநாயக சர்வாதிகாரம், கட்சியின் முன்னணிப் பங்கு மற்றும் மார்க்சியம்-லெனினியம் ஆகியவையே அவை என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஜனநாயக மையவாதம் குறித்த கேள்வியைப் பொறுத்தவரையில், கடந்த சில காலமாகவே, அதிகாரத்துவம், தனிநபர்வாதம் மற்றும் உள்கட்சி ஜனநாயகத்தை மறுப்பதோடு தொடர்புடைய இன்ன பிற தீமைகளுக்கு எதிரான உறுதியான போராட்டத்தில் நமது கட்சி ஈடுபட்டு வருகிறது. 14வது கட்சி காங்கிரஸால் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பு குறித்த அறிக்கை, மையப்படுத்தப்பட்ட தலைமையுடன் இணைந்து செல்லும்படியான உள் கட்சி ஜனநாயகத்திற்கான இந்த போராட்டங்களின் அவசியத்தை உறுதிப்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட கட்சி செயல்பாட்டு மரபுகள் கைவிடப்பட வேண்டும்; அகில இந்திய, மாநில மற்றும் மாவட்ட மையங்களால் வழங்கப்படும் உறுதியான தலைமையுடன், முடிந்தவரை பரவலான உள்கட்சி ஜனநாயகத்தை இணைத்து புதிய நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அமைப்பு செயல்பாட்டில் புதிய முறை மற்றும் பாதை நிறுவப்பட வேண்டும். அப்போதுதான், கட்சி உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர வெகுஜன கட்சியாக உருவெடுக்க முடியும்.
சிபிஐ(எம்) உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனித்த வகையில் ஆர்வமாக இருந்தாலும், 14வது காங்கிரஸால் முன்வைக்கப்பட்ட அரசியல், கருத்தியல் மற்றும் அமைப்பு சார்ந்த கருத்துக்கள், நாட்டின் அனைத்து இடதுசாரி, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடத்திலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன; ஏனெனில், ஜனநாயகம் மற்றும் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்கும், உழைக்கும் மக்களின் நலன்களை காப்பாற்றுவதற்கும், நாடு முழுவதிலும் உள்ள மக்களின் அனைத்து பிரிவினரின் முழுமையான சமூக-கலாச்சார, அரசியல் முன்னேற்றத்தினை வென்றடையவும் சிபிஐ(எம்) உறுதிபூண்டுள்ளது.
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply