
தீவிர வறுமை ஒழிப்பில் கேரள இடது ஜனநாயக அரசின் மகத்தான சாதனை!
உணவு, வீடு, வாழ்வாதாரம், ஆரோக்கியம் என்ற நான்கு சமூக அளவுகோல்களை அடிப்படையாக வைத்து, அவற்றில் கடும் குறைபாட்டுடன் இருந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, தரம் உயர்த்தி, மாநிலத்தில் தீவிர வறுமை என்பது கடந்த நவம்பர் 1 முதல் முற்றாக ஒழிக்கப்பட்ட அறிவிப்பு முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களால் செய்யப்பட்டது.
தீவிர வறுமை ஒழிப்பை செய்து காட்டிய நாடு சோஷலிச சீனம். அது பற்றிய விவரங்கள் பிரமிக்கத் தக்கவை. அவர்களது அனுபவத்தின் சாராம்சமும் கேரளாவால் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது முழுமையான, ஜனநாயக ரீதியான ஒரு கூட்டு உழைப்பின் பலன். அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள், குடும்பஸ்ரீ உறுப்பினர்கள், ஸ்கீம் தொழிலாளிகள் என அனைவரின் உழைப்பும் ஒருங்கிணைக்கப்பட்டது. தீவிர வறுமைக்கு ஆட்பட்ட 64,006 குடும்பங்களை (1,03,099 நபர்கள்) அடையாளம் கண்டதும் பல மட்ட விவாதம் நடத்தி, இறுதியாக கிராம சபை, வார்டு சபை, ஒப்புதல் பெற்றே இது நடந்தது.
இரண்டாவதாக, ஒற்றை பரிமாண நோக்கில் வழக்கமான வறுமை ஒழிப்பு தீர்வை அனைவருக்குமான தீர்வாக எந்திரகதியாக முன் வைக்காமல், நான்கு குறியீடுகளின் அடிப்படையில் பன்முக பரிமாணங்கள் கணக்கில் எடுக்கப்பட்டன. இத்தகைய ‘தேவையை ஒட்டிய திட்டமிடல்’ (micro plan) என்பதும், “பல அடுக்கு அணுகுமுறை” (multi layered approach) என்பதும் இத்திட்டம் வெற்றி பெற முக்கிய காரணங்கள். 56,697 மைக்ரோ திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அரசாங்கத்தின் அனைத்து துறைகளுக்கு இடையேயும் முழு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. குறுகிய கால, நடுத்தர கால, நீண்ட கால திட்டங்கள் தீட்டப் பட்டன.
இந்தக் குடும்பங்களுக்கு உணவுதான் பிரச்னை என்றால், சமைக்கும் வாய்ப்பு இருந்தால், அத்தியாவசிய சமையல் பொருட்கள் அடங்கிய உணவு பெட்டகம் (food kit); சமைக்க முடியாத நிலை இருந்தால், சமைத்த உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வீடு என்றால் தேவையைப் பொறுத்து, வீடு பழுது பார்ப்பது, இடம் ஏற்பாடு, வீடு கட்ட உதவி, விடுதி ஏற்பாடு, வாடகை வீடு ஏற்பாடு செய்து அரசே வாடகையைக் கொடுப்பது எனப் பல்வேறு முறைகள் செயல்படுத்தப்பட்டன.
ஒன்றிய அரசு மிக மோசமாகக் கேரளாவை நிதிரீதியாக பட்டினி போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், இடது ஜனநாயக அரசு இதனை செய்து முடித்திருப்பது, அதன் முன்னுரிமை எதில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மக்கள் நலனை ஆதார சுருதியாகக் கருதும் அதன் தத்துவார்த்த கண்ணோட்டம், அரசியல் உறுதிப்பாடு, சமூக நீதி, அரசாங்கத்தை வழி நடத்தும் கம்யூனிஸ்ட் இயக்கம் வைத்திருக்கும் சோஷலிச குறிக்கோள் போன்றவை சித்தாந்தம் மட்டுமல்ல; நடைமுறைக்கான அரசியல் மாற்று என்பது முன்னுக்கு வருகிறது. இந்தியாவுக்கே மாற்றுப்பாதையை காட்டுவது இடதுசாரிகள்தான் என்பதற்கான மற்றுமொரு சாட்சியம் கேரளாவின் தீவிர வறுமை ஒழிப்பு திட்டம்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply