தென் தமிழகத்தில் தொடரும் சாதிய வன்கொடுமைகள்: வரலாற்றுஆய்வாளர் கா.அ.மணிக்குமார் பேட்டி
- நேர்காணல் செய்தவர்: கே.ஜி.பாஸ்கரன்
(தென் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அக்கறை கொண்டோர் அனைவரையும் இது கவலையடையச் செய்துள்ளது. குறிப்பாக, தென் தமிழகத்தில் உழைக்கும் வர்க்க இயக்கம் விடுதலைப் போராட்டக் காலத்தில் இருந்தே மகத்தான பங்கினை ஆற்றிய வரலாறு உண்டு. இன்று சாதியம் அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தை சிதைத்திடும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் பல்வேறு பரிமாணங்கள், அடிப்படைக் காரணங்கள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆழமாக சிந்தித்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இதற்காக வரலாற்று ஆய்வாளர் கா. அ. மணிக்குமாருடன் ஒரு நேர்காணல் மேற்கொண்டோம். தமிழகத்தின் வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து ஏராளமான பங்களிப்பை செய்திருக்கிற பேராசிரியர் மணிக்குமார் மேற்கண்ட நிகழ்வு குறித்து தனது ஆழமான கருத்துக்களை இங்கு மார்க்சிஸ்ட் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கே.ஜி.பாஸ்கரன் அவரோடு உரையாடி நேர்காணல் கருத்துக்களை தொகுத்து வழங்கியுள்ளார் – ஆசிரியர் குழு.)
- சாதிய ஒடுக்குமுறையும், சாதிய அணிதிரட்டலும் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. நாங்குநேரி சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது என்று கூறலாம். பள்ளி மாணவர்களிடத்தில், அதாவது எதிர்கால தலைமுறையினரிடம், சாதிய உணர்வு மேலோங்கி வருவதை எவ்வாறு புரிந்து கொள்வது?
நாங்குனேரியில் பள்ளி மாணவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் ஏற்கனவே நிலவி வரும் சாதிய மனோபாவத்தின் ஒரு கொடூரமான வெளிப்பாடுதான். பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் என்பது புதிதல்ல. அம்மக்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கிய நாளிலிருந்து இத்தகைய தாக்குதல்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குத் தீர்வு, சமூக உறவுகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்; பொருளாதார ரீதியாக, யாரும் யாரையும் சார்ந்திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது ஒருபுறமிருக்க, சாதிய உணர்வு என்பது சாதி வெறியாக மாறத் தொடங்கியது 1995-தென்தமிழக சாதிய மோதல்களுக்குப் பின்னால் தான். 1995இல் மோதல்களின் போது கிராமப்புறங்களில் படித்துப் பட்டம் பெற்றும் வேலை கிடைக்காத இளைஞர்கள்தான் மோதல்களில் முன்னின்றவர்கள். எடுத்துக்காட்டாக, தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டபோது, வீரசிகாமணியில் கடைவீதிகளில் புகுந்து தாக்குதல் நடத்தியது வடநத்தம்பட்டியைச் சேர்ந்த படித்த இளைஞர்கள்.
அதுபோல் சாதி ஆதிக்க சக்திகள் பக்கமும், விவசாயத்தை நம்பி, பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்த குடும்பங்களைச் சேர்ந்த வருமானமற்ற இளைஞர்கள்தான் தாக்குதல்களை நடத்தினர். அதேநேரத்தில், சாதி ஆதிக்க சக்திகள் மாணவர்களிடையே சாதிய ஆணவம் மேலொங்கியிருந்ததையும், பட்டியலின மாணவர்களை இழிவாகக் கருதும் அவர்களது போக்கையும், அன்றே கங்கைகொண்டான் பள்ளி கபடி போட்டியின் முடிவில் நடந்த மோதல்கள் வெளிப்படுத்தின. போட்டியில் இரு அணிகளும் சாதி அடிப்படையில் பிரிந்து விளையாடியபோது தேவேந்திர மாணவர்கள் வென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், சாதி ஆதிக்க சக்திகள் அவர்களைத் தாக்கினர். அதுவே சாதி பிரச்சனையாகி, அணைத்தலையூரில் தேவர்களும் தேவேந்திரர்களும் மோதினர். அப்போது பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களின் மன நிலையை வெளிப்படுத்தமுடியாமல் போயிருக்கலாம்.
ஆனால் அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே சாதிய உணர்வு வீரியமாக வேரூன்றியிருக்கிறது என்பதை நாம் அறிய முடிகிறது. கைகளில் சாதிக்கான கலர் கயிறு கட்டுதல், கோயில் திருவிழாக்களில் சாதிய உணர்வுகளை தூண்டக்கூடிய பாடல்களை பாடுதல் போன்றவை இன்று அதிகரித்திருக்கின்றன. பட்டியலின ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ சாதி மறுப்பு திருமணம் என்றால், ஆணவக் கொலை என இடைநிலை சாதியினருக்கும் பட்டியலினத்தவருக்கும் பகைமை கூடியிருக்கும் சூழலில், நாங்குநேரியில் மட்டுமின்றி, அதைத் தொடர்ந்து கழுகுமலை பள்ளியிலும் பட்டியலின மாணவன் தாக்கப்பட்டிருக்கிறான்.
1995இல் நடந்த மோதல்களின் போது இருபிரிவினருக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் அவர்களியிடையேயான வெறுப்புணர்வை மேலும் ஆழமாக்கியிருக்கிறது. அக்காலகட்டத்தில் எங்கெல்லாம் பட்டியலினத்தவர் சிறுபான்மையினராக இருந்தனரோ, அங்கெல்லாம் பெரும்பான்மையினராயிருந்த தேவர்கள் கிராமங்களிலிருந்து அவர்களை விரட்டியடித்தனர்- உ.ம்: மங்காபுரம் (இராஜபாளையம்) விருதுநகர் மாவட்டம். அதுபோல் எங்கு தேவேந்திரர்கள் பெரும்பான்மையாய் இருந்தார்களோ, அங்கு சிறுபான்மையினராக இருந்த தேவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் உ.ம்: ஊருடையான் குடியிருப்பு (திருநெல்வேலி), நாரைக்கிணறு (தூத்துக்குடி மாவட்டம்). இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் சாதியினர் பெரும்பான்மையாய் இருக்கும் கிராமங்களுக்கு சென்று குடியேறினர். தங்கள் சொந்த வீடு, நிலம் போன்றவற்றை விற்றுவிட்டு, நிரந்தரமாக அங்கேயே வாழத் தொடங்கிவிட்டனர். இத்தகைய பிரச்சனைககளில் அரசு தலையிடாததால், இதன் வெளிப்பாடுதான் தென் மாவட்டங்களில் தொடரும் பதற்ற நிலை.
தென் மாவட்டங்களில் வாழ்வாதாரத்திற்கு சாதி ஆதிக்க சக்திகளை சார்ந்து இருக்கும் பட்டியலினத்தினர், எதிர் தாக்குதல் நடத்தமுடியாத சூழலில், பாதுகாப்பற்ற சூழலில், வாழ்கின்றனர்.
1995யிலும் இப்போது நாங்குநேரியிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மட்டுமின்றி, அங்கே குடியிருப்பில் வாழும் அத்தனை குடும்பங்களுமே சாதி ஆதிக்க சக்திகளையே அண்டி வாழவேண்டியுள்ளது. கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகி அல்லல்படுகின்றனர். எங்கு பெரும்பான்மையாக உள்ளனரோ, அங்கு சாதி ஆதிக்க சக்தியினர் நிலத்தில் வேலை செய்வது கிடையாது, அவர்களிடமிருந்து கந்து வட்டிக்கு கடன் வாங்குவதில்லை என அவர்களால் முடிவு எடுக்க முடிகிறது. இதர இடங்களில் அவர்கள் இடைநிலை சாதியினரில் ஏதோ ஒருபிரிவினருக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டியுள்ளது.
தென் தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினர் மீது பல்வேறு தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தபோதிலும், தலித் மக்கள் ஒன்றிணைந்து போராடுவது இயலாததாய் உள்ளது. 1995இல் தேவேந்திரர்கள் மோதலில் ஈடுபட்டபோது, இதர பட்டியலினத்தினரான பறையர், அருந்ததியினர் மௌனம் காத்தனர். சொக்கம்பட்டியில் களஆய்வின் போது பறையர் குடியிருப்பில் நாட்டாமையை சந்தித்து அவர்கள் நிலைபாட்டை கேட்டபோது, அவர்களும் அக்கிராமத்திலிருந்த தேவர்களும் அண்ணன்-தம்பி ஆக வாழ்கிறோம் எனக்கூறி சமாளித்தார். இந்நிலை மாறி, தங்கள் துயரங்களை போக்கிட, தலித் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்படுவது பயனளிக்கும்.
- ஆணையங்கள் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையா?
1957 இல் நடந்த முதுகுளத்தூர் கலவரத்திற்குப் பிறகு, பல வளர்ச்சிப்பணிகளை அன்றிருந்த காங்கிரஸ் அரசு முனைப்புடன் மேற்கொண்டது. புதிய சாலைகள், பள்ளிகள், இரயில் போக்குவரத்து என பல மாற்றங்களை அவ்வரசு அப்பகுதியில் ஏற்படுத்தியது. அது போன்ற வளர்ச்சிப்பணிகள் இப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. அரசுப்பள்ளிகளில் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தாததன் விளைவே நாங்குநேரி மாணவர்கள் வள்ளியூரில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி பயில செல்லவேண்டியதாய் இருந்திருக்கிறது.
ஒரு காலத்தில் புகழ் பெற்ற சங்கர் ரெட்டியார் உயர்நிலைப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை இன்று கணிசமாகக் குறைந்திருக்கிறது. இதற்கான பல காரணங்களில் சாதிய பதட்டமும் ஒரு காரணம். கங்கைகொண்டான் பள்ளிக்கு பல சுற்றுக்கிராமங்களிலிருந்து செல்லும் மாணவர்கள், அப்பகுதியில் கலவர பதற்றம் எப்போதும் உள்ளதால், பள்ளிப்படிப்பை பலநேரங்களில் கைவிட நேர்வதாகவும், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில், மற்றொரு பள்ளி அமைத்திட வேண்டி பொது மக்கள் வைத்த கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. நீதிபதி மோகன் விசாரணை ஆணையம் பரிந்துரைத்தவற்றில் சாத்தியப்பட்ட சிலவற்றைக்கூட அமல்படுத்த, அதன் பின் வந்த ஆட்சிகள் தவறிவிட்டன.
கந்து வட்டிக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டிருந்த போதிலும், அரசு அதிகாரிகள்-அரசியல்வாதிகளின் ஆதரவுடன், கந்து வட்டி இம்மாவட்டங்களில் தொடர்வதாகவும், கந்து வட்டிக்காரர்களுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் சட்டப்படி எடுக்கப்படுவதில்லை என தன்னார்வத் தொண்டு நிறுவனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்போது நாங்குனேரியில் பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பம் உட்பட பல தலித் குடும்பங்கள் கந்து வட்டிக்கு கடனை வாங்கி அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சமூக வன்முறைகளுக்கான அடிப்படை காரணங்களை அறிந்து, தீர்வுகாண முயலாமல், வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சனையாகவே தொடர்ந்து ஆட்சியாளர்கள் கருதினார்கள். வன்முறை சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம், உள்ளூர் அரசியல் சாதித் தலைவர்கள் மூலம் சமரச போக்கையே கையாண்டனர். அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் இடைநிலை சாதியினர் மாறியிருப்பதால், அவர்களுக்கு ஆதரவாகவே அரசு செயல்படுகின்றது என்ற கருத்து தலித் அறிவுஜீவிகள் மத்தியில் நிலவுகிறது.
வன்முறைக்கு பின்னால் உள்ள சமூகப் பின்னணியை புரிந்து கொள்ள ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர். சமூக வன்முறை ஏற்படுத்தும் காயங்களைத் தவிர, பிளவுபட்டு அச்சத்துடனும், சந்தேகத்துடனும் வாழும் இரு சமூகத்தினரும் இணக்கமாக வாழ வழிமுறைகளை கண்டறிவது அரசின் கடமை.
- சாதிய அமைப்பிற்கு எதிரான குரல்கள் ஒலித்து வந்த தமிழகத்தில், இன்றைக்கு சாதிய அமைப்பின் இறுக்கம் தீவிரமாகி இருப்பது ஏன்?
தமிழகத்தில் நில சீர்திருத்த நடவடிக்கைகள் கண்துடைப்பாகவே அமைந்தன. நில உச்சவரம்பு சட்டங்கள் (1961 – 1972) கறாராக அமல்படுத்தப்படாததால் போதுமான உபரி நிலங்களை கையகப்படுத்த அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். கையகப்படுத்தப்பட்ட நிலங்களும் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கவில்லை. அவை கூட நிலமற்ற ஏழைகளுக்கு உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டது தலித் மக்களே. குறிப்பாக ஆட்சிக்கு வர ஓட்டு வங்கி அரசியலுக்கு இடைநிலை சாதியினரை சார்ந்து பிரதான கட்சிகள் இருப்பதால் அவர்கள் அரசியலில் மட்டுமின்றி அரசு அதிகாரத்திலும் அலுவலகங்களிலும் அதிக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். உதாரணமாக, எம்.ஜி.ஆர் ஆட்சியில் தலித்துகளுக்கு ஆரம்பத்தில் முக்கியத்துவம் கிடைத்தபோதிலும், பெரும் எண்ணிக்கை கொண்ட வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர் கட்சியிலும் அரசு அலுவலகங்களிலும் செலுத்திய ஆதிக்கம் தலித் மக்களை விரக்தி அடையச் செய்தது. இதன் விளைவாக 1980களில் தலித்துகள் சாதிய அமைப்புகளில் நம்பிக்கை வைத்து அணிசேரத் தொடங்கினர்.
தென் தமிழகத்தில் நடந்த சங்கனாங்குளம் (1980- திருநெல்வேலி மாவட்டம்) போடிநாயக்கனூர் மீனாட்சிபுரம் (1982- மதுரை மாவட்டம்), வட தமிழ்நாட்டில் நடந்த சாதிய மோதல்கள், ஒரு பகுதி தலித்துகளை ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் (1982), தொல். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் (1991) ஆகியவற்றில் முறையே இணையச் செய்தது. பின்னாளில் தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பை (இன்றைய புதிய தமிழகம்) உருவாக்கிய டாக்டர் கே. கிருஷ்ணசுவாமி ஆரம்பத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தில் இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- 1990களில் தலித் அரசியல் சமூக விடுதலையை நோக்கி நகர்ந்தது என்றால் அது ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?
1990களில் சாதிய ரீதியான திரட்டல் அரசியல் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஏழை எளியவர்களை வல்லமைப்படுத்துவது கல்வி ஒன்றே என உணரச் செய்தது. தேர்தலில் வாக்களிக்க தேவையான தைரியத்தை கொடுத்தது. பட்டியலின மக்களுக்கான உரிமைகளை சங்கத்தின் மூலம் போராடி பெறச் செய்தது. ஆனால் தேர்தல் அரசியலில் பங்கேற்கத்தொடங்கிய உடன், தமிழ்நாட்டில் உள்ள இரு பெரும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் தான் சட்டமன்றமோ அல்லது பாராளுமன்றமோ செல்ல முடியும் என்ற நிலை இருப்பதால், இக்கட்சிகளின் போர்க்குணம் மங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன்.
பட்டியலின மக்களின் நலன் காக்க இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியும் கடந்த காலங்களில் முழு மனதுடன் முன் வரவில்லை. சாதிய ஆதிக்க சக்திகள் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடத்திய போது, கீழ்வெண்மணி (1968), அன்றைய அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர தவறியது. அதுபோல் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்கள் நடத்திய போதும் (நாலுமூலைக்கிணறு-1992, கொடியன்குளம்-1995, தாமிரபரணி 1999), அன்றைய அரசாங்கங்கள் காவல்துறை அடக்குமுறையை நியாயப்படுத்தின. எனவே சமூக பொருளாதார விடுதலை என்பது பெரும்பான்மையான பட்டியலின மக்களுக்கு பகற் கனவாகவே இருந்து வருகிறது.
- சாதிக்கு எதிரான சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்களிப்பை எவ்வாறு மதிப்பீடு செய்வது?
முதலில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய முழுமையான புரிதல் அவசியம். சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு முன் சமூக எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. சீர்திருத்த இயக்கங்களுக்கு பின் சமூக மாற்றம், சமத்துவத்திற்கான புரட்சிகர இயக்கங்களும் தோன்றியிருக்கின்றன. சமூக எதிர்ப்பு பன்முக கலாச்சார சூழலில் பண்பாட்டு தளத்தில்தான் வெளிப்படும். இதர பகுதிகளைப் போல தமிழகத்திலும் இத்தகைய எதிர்ப்பு இயக்கம் சமயத்தை மையமாக வைத்தே தொடங்கியது. சமூக விலக்குகளுக்கு ஆளாகியிருந்த அனைத்து பிரிவினரையும் அந்தந்த சமயத்திற்குள் கொண்டுவரும் எண்ணத்தில் வேத-பிராமண கோட்பாடுகளுக்கு எதிராக குரல்கள் எழுப்பப்பட்டன. புத்த, சமண கோட்பாடுகளின் ஆதிக்கத்தை தடுத்திட இராமானுஜர் சமூக விலக்குகளுக்கு ஆளான மக்களை வைணவ சமயத்திற்குள் கொண்டுவர சாதியத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
ஆனால் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை பரவலாக்கச்செய்தது ஐரோப்பிய சமயப் பணியாளர்களே. ஐரோப்பிய கிருத்துவ பாதிரிகளின் நோக்கம் மத மாற்றமாக இருந்தபோதிலும் அவர்களின் சாதியத்திற்கு எதிரான பிரச்சாரம், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை கிருத்துவ மதத்திற்கு மாறச் செய்தது. மதம் மாறிய மக்களுக்கு கல்வி வழங்கி அவர்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டில் சமூக இயக்கங்களை நடத்துவதற்கு வித்திட்டது கிருத்துவ சமயப் பணியாளர்களே. இக்காலகட்டத்தில் வைகுண்டசாமி, வள்ளலார் போன்றோர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழி இன அடிப்படையில் வேத-பிராமண பாரம்பரியங்களுக்கு எதிராக மக்களை திரட்டுவதில் திராவிட இயக்கம் முனைப்புடன் செயல்பட்டது. இதில் ஈ.வே.ரா பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தின் பங்கு மகத்தானது, இதே காலகட்டத்தில் சமூக-பொருளாதார அரசியல் சமத்துவத்தை ஏற்படுத்திட புரட்சிகர இடதுசாரி இயக்கங்களும் தோன்றின. அடித்தள மக்களை திரட்டுவதில் கம்யூனிஸ்டுகள் உயிர் தியாகம் செய்து சமூக ஒடுக்குமுறைகளையும் பொருளாதார சுரண்டல்களையும் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். சீர்திருத்தவாதிகளாக இருந்தவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்காக இடதுசாரி இயக்கங்கள் நடத்திய போராட்டங்களை ஒடுக்கவும் செய்திருக்கின்றனர். தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் கொடுக்கப்பட்ட தண்டனைகளையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது.
தமிழகத்தில் இக்குறிப்பிட்ட பிரச்சனையில் தாங்கள் சாதித்ததாக யார் கூறினாலும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடதுசாரி வெகுஜன இயக்கங்களும் போராடி அரசுக்குக் கொடுத்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவை சாத்தியமாயின என்பதை மறந்து விட முடியாது.
- இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான சனாதன கோட்பாடுகள், உற்பத்தி முறையில் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்குப் பின்னும் மிக ஆழமாக வேரூன்றி நீடித்திருப்பதன் காரணம் என்ன?
இக்கேள்விக்கு விரிவான பதில் தேவை என நினைக்கிறேன்.
முதலாவதாக “சனாதன கோட்பாடு” பற்றி ஒரு வரலாற்று மாணவன் என்ற முறையில் விளக்க விரும்புகிறேன். “சனாதன தர்மம்” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு மாறாத, நிலையான விதி அல்லது உலக நியதி என இதன் பொருளை விளக்குகிறார்கள். வேத இலக்கியங்களில் (சுருதிகள்) இச்சொல் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை; வேதகாலத்திற்குப் பின் தோன்றிய சுமிருதிகள், காப்பியங்கள், புராணங்களில் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மகாபாரதத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் செயல்களையும் நியாயப்படுத்துவதற்கு இவ்வார்த்தை அதிகம் உபயோகிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பல பரிமாணங்கள் கொண்ட இச்சனாதன தர்ம கோட்பாடு பிராமண, ஆணாதிக்க, வருணாசிரம சமூக அமைப்புக்குள் உருவானதாகும். பிராமணர்களின் மேலாண்மையை நிலைநிறுத்திட, இதர பிரிவு மக்களை கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்திட, உருவாக்கப்பட்ட இந்த சதுர்வர்ண சமூக கட்டுமானத்தை எதிர்த்த சமணம், பௌத்தம், அஜீவகம் உண்மையை உரக்கப் பேசின. சத்திரியர்களின் மதங்களாக தோன்றிய சமணமும், பௌத்தமும் வைசிய வகுப்பினரின் ஆதரவு பெற்றதால், மகாபாரதத்தில் விஷ்ணுவின் அவதாரமாக சொல்லப்படும் கிருஷ்ணர், ஒரு சத்திரியராக அறிமுகப்படுத்தப்படுகிறார். ரிக் வேத இலக்கியத்தில் குறிப்பிடப்படும் இயற்கை வழிபாட்டுக்கு மாறாகவும், ஸ்வேதாஸ்வதாரா உபநிடதத்தில் (யசுர் வேதம்) குறிப்பிடப்படும் ருத்ரனுக்கு (சிவன்) மாற்றாகவும் தோன்றும் இக்கடவுள், வேத இலக்கியங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களிலிருந்து வேறுபட்ட வாழ்வியல் விதிமுறைகளை பகவத் கீதையில் வழி மொழிவதை நாம் படிக்கிறோம்.
பகவத் கீதைக்கு எதிராக எவ்வித கருத்தையும் தெரிவித்திட, அதன் பின் தோன்றிய சமய சித்தாந்தவாதிகள் எவரும் துணியவில்லை ஆதி சங்கரரே பகவத்கீதை அத்வைத தத்துவத்தின் எளிமையான வடிவம் என்றார். மகாத்மா காந்தி அதை ஒழுக்கத்திற்கான வழிகாட்டி என்கிறார். உண்மையாய், நேர்மையாய் இருத்தல், சுய கட்டுப்பாடு, பொறுமை, பிற உயிர்க்கு தீங்கு இழைக்காதிருப்பது, எளிமை, ஈகை, இரக்கம், மறப்பது, மன்னிப்பது போன்ற வேத இலக்கியங்களிலும் புராணங்களிலும் கூறப்படும் அறநெறிகள் ஏட்டளவில் எழுதிவைக்கப்பட்டன. ஆனால் சமூக எதார்த்தம் வேறு விதமாக இருந்தது.
பேரரசுகள் உருவானவுடன் அதுவரை பொதுஅவைகளில் நடைபெற்ற சமயம், வாழ்வியல் பற்றிய தர்க்கங்கள் அரசவையில் நடந்ததால், ஏற்கனவே ஏற்பட்டிருந்த பிராமண-சத்திரியர் உடன்பாட்டால் அடக்குமுறைக் கொடுமைகள் நிறைந்த, சுரண்டல் மிக்க வர்ணாசிரம தர்ம சமூகக் கட்டுமானம் வலுவடைந்தது. அண்ணல் அம்பேத்கர் தீயிட்டு எரித்த, அனைத்து வகையான நெறிமுறைகளும் அடங்கிய மனுசுமிருதி அரசாள்பவர்களுக்கு சட்ட விதிகளாயின.
பௌத்த, சமண சமயங்களைப் பின்பற்றி நிறுவப்பட்ட சைவ, வைணவ மடங்கள், சமயத்தை நிறுவன ரீதியாக்கின. பிராமண, ஆணாதிக்க, வருணாசிரம சமூக கட்டுமானத்தை ஏற்று, அரசாள, எந்த சமூகப் பிரிவுகளிலிருந்து எவர் வந்தாலும், அவர்களை வேத புனிதச் சடங்குகள் மூலம் சத்திரியர்களாக பிராமண குருக்கள் பிரகடனம் செய்ய முடிந்தது. பிறப்பால் சூத்திரரான சதவாகன வம்சத்தின் முதல் மன்னர் கௌதமிபுத்திர சதகரணிக்கு (பொது ஆண்டு 77-102) ஆந்திரதேசத்தில் முடிசூட்டியபோது இப்படியாக ஒரு சடங்கு நடந்தது.
வேத தத்துவங்களை பல கோணங்களில் பார்க்க முடியும். ஆனால் பிராமணர்கள் கொடுக்கும் விளக்கமே முடிவானது என்ற நிலை இருந்ததால், அரசர்களும் அவர்கள் ஆதரவைப் பெற நிலங்களை தானமாக வழங்கியும், பரிசுப்பொருள்கள் கொடுத்தும், திருப்திப்படுத்த வேண்டியிருந்தது. சங்க காலத்தில் பார்ப்பனச் சேரியில் மற்ற சமூகப் பிரிவினரைப்போல் வாழ்ந்த நிலையில் இருந்து, ஓர் பத்து நூற்றாண்டுகளில் சோழ மன்னர்கள் காலத்தில் பிரமதேயங்களில் பிராமணர்கள் பெரும் நிலஉடமையாளர்களாக உருவாகிறார்கள்.
ஆங்கிலேயர்களும் பிராமண பண்டிதர்களால் தொகுக்கப்பட்ட கோட்பாடுகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியதால், வருணாசிரம சமூக கட்டுமானம் மாறவில்லை. எனவே, உற்பத்தி முறைகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், உற்பத்தி உறவுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. உற்பத்திக் காரணிகளான நிலம், சுரங்கம், தொழிற்சாலை, வினியோகக் காரணிகளான வங்கி, போக்குவரத்து போன்றவை அரசு கட்டுப்பாட்டில் இல்லாதபோது உற்பத்தி உறவுகளிலும் சமூக உறவுகளிலும் முழு மாற்றத்தை கொண்டுவர முடியாது. இன்றும் உற்பத்தி உறவுகளில் அதே நிலை நீடித்து, சமூக உறவுகளிலும் அது பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
சோசலிச சோவியத் யூனியனில் மட்டுமின்றி, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பெரும்பாலான நாடுகளில், முதல் நடவடிக்கையாக விவசாய நிலங்களை கையகப்படுத்தியோ, அல்லது அரசே தேவைக்கு அதிகமாக வைத்திருந்த தனியார் நிலங்களை விலைக்கு வாங்கியோ, அவற்றை நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கும் குத்தகை விவசாயிகளுக்கும் மறு விநியோகம் செய்தது. அத்தகைய நடவடிக்கையை சுதந்திர இந்தியாவில் ஆட்சிக்கு வந்த அரசுகள் மேற்கொள்ளாததால், இன்று வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் யார் என்றால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களே. இங்கு சாதி-வர்க்க தொடர்பை நாம் எளிதில் பார்க்க முடியும்.
- கிராமங்களில் நீடித்திருக்கும் நிலப்பிரபுத்துவ பத்தாம் பசலித்தனமான கண்ணோட்டங்கள் நகர்ப்புறங்களிலும் நீடிக்கின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களிலும் இத்தகைய கண்ணோட்டம் நீடிக்கின்றன. கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் வாழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஏன் பண்பாட்டு தளங்களில் பிரதிபலிக்கவில்லை?
கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்றால், எந்த சமூகப் பிரிவினருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். நகர்ப்புறங்களில், பொருளாதார உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களின்போது ஓரங்கட்டப்படும், சுரண்டப்படும் சமூகப் பிரிவினர் அடித்தள மக்களாகிறார்கள். நகருக்கு வெளியே வாழும் அவலநிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். சென்னையைப் பொறுத்தமட்டில், இத்தகைய நெரிசலான, அடிப்படை வசதி இல்லாத குடியிருப்புகள் 18 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் சுமார் 1,200 இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. கிராமங்களில் விவசாய நெருக்கடி, கடன் சுமை, மாற்று வாழ்வாதாரம் இல்லாமை காரணமாக துயரத்துக்கு ஆளாகும் குடும்பங்கள் பிழைப்பிற்காக நகரத்திற்கு குடிபெயரும்போது, அத்தகைய நகர்ப்புற ஏழைகள் வாழும் சேரிகளிலும், அரசு அங்கீகாரம் இல்லாத குடியிருப்பு இடங்களிலும் வாழ்கின்றனர். ஆளும் அரசியல் கட்சிகள் இத்தகைய மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அனைத்து தந்திரங்களையும் கையாளுகின்றனர். சமூக, பொருளாதார நிலையில் சிறு முன்னேற்றமும் இல்லாத நிலையிலும் தங்கள் கோரிக்கைகளை அரசாளும் அரசியல் கட்சிகள் மூலமே வென்றெடுக்க முடியும் என சேரிவாழ் மக்களும் நம்பி ஏமாறுகின்றனர்.
இக்குடியிருப்புகளில் நிலவும் சூழ்நிலை என்ன? வசதிபடைத்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்வி பயிலும் பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ அவர்கள் குழந்தைகள் படித்திட பண வசதி கிடையாது. எனவே, வேலைவாய்ப்புகளிலும் கடைநிலை பதவிகளுக்குத்தான் அவர்கள் தகுதியுள்ளவர்களாகிறார்கள். அரசியலில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் தொண்டர்களாக இருக்கும் நிலையிலேயே, ஆளும் அரசியல் கட்சிகளால் வைக்கப்படுகின்றனர். பல்வேறு சாதியினர் வாழும் குடியிருப்புகளில், விழிப்புணர்வு பெற்றிருக்கும் இளைஞர்கள் தங்கள் அனுபவத்தில் வர்க்க வேறுபாடுகளைப் புரிய முடிகிறது. இருப்பினும் அரசியல் அதிகாரம், பணபலம் கொண்ட கட்சிகளில் இணைவதையே விரும்புகின்றனர். சமீப காலமாக மத அடையாள அரசியலுக்கு அவர்கள் பலியாகி வருகிறார்கள். அவர்கள் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படுத்திட இடதுசாரி அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்துவது இன்று அவசியமாகிறது.
- சோசலிச பின்னடைவுக்குப் பின் உருவான பின் நவீனத்துவ கோட்பாட்டுக்கும் சாதிய அணிதிரட்டலுக்கும் பின்னால் உள்ள அரசியலையும் தமிழக அரசியல் சூழலில் எவ்வாறு பொருத்திப் பார்க்க வேண்டும்?
பின் நவீனத்துவவாதிகள் அரசியல் பொருளாதாரத்தை எதிர்கொள்ள மறுக்கின்றனர். அரசியல் பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விலகி நின்று, பண்பாட்டுத்தளத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது என முடிவு செய்துள்ளனர். முதலாளித்துவத்தின் பொருளாதார சுரண்டல்கள், மத, இன, மொழி அடிப்படையில் சிறுபான்மையினர் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் கொடுமைகள், ஏழ்மை போன்றவை பற்றிய சிந்தனையோ கவலையோ அவர்களுக்கு கிடையாது. உலகெங்கிலும் அடித்தட்டு மக்களின் அடையாளத்தையும், அடையாள அரசியலையும் ஊக்குவிக்கிறார்கள். இடதுசாரிகளுக்கு சவாலாக எதிர் அணியில் அவர்களை நிறுத்த முனைப்போடு செயல்படுகிறார்கள். முதலில் அடித்தட்டு மக்கள் வரலாறு எழுத அவர்கள் எடுத்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் பின்னர்தான் அவர்களது மறைமுகத் திட்டம் வெளிப்பட்டது. இன்று அவர்களது ஆய்வு முழுமையும் புராண, சமய இலக்கியங்கள் பற்றியும், பூர்விகக் குடியினர் பாரம்பரிய கலாச்சாரங்கள் பற்றியதாகவே இருக்கின்றன. பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களும் அத்தகைய ஆய்வுகளுக்கே தாராளமாக நிதி உதவி செய்கின்றன.
தமிழகத்தில் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள், மத அமைப்புகள் சாதிய ரீதியாக அடித்தட்டு மக்கள் அணிசேர்வதையே ஆதரிக்கிறார்கள். அவ்வாறு அணி சேரும் பிரிவினர்க்கே அனைத்து உதவிகளும் செய்கின்றனர். வெளிநாட்டிலிருந்து நிதி உதவியை இத்தகைய நிறுவனங்களே பெறுகின்றன. கிராமப்புற பகுதிகளில் இடதுசாரி இளைஞர் அமைப்புகள் மக்களுடன் இணைந்து அவர்கள் அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்திட இயக்கம் நடத்துவதன் மூலம் இத்தகைய தொண்டு நிறுவனங்களின் நோக்கங்களை முறியடிக்கமுடியும்.
- ஒரே மதம் என இந்துத்துவா அமைப்புகள் பேசி வந்த போதிலும் சாதி எனும் பாகுபாடு இந்து மதத்தின் ஆணிவேராக இருந்த போதிலும் பல்வேறு பகுதியினரை இந்துத்துவா சக்திகள் எவ்வாறு ஆட்கொள்ள முடிகிறது? முற்போக்கு இயக்கங்கள் செய்யத் தவறியதாக எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?
சாதி, இனம், வர்க்கம் அனைத்திற்கும் மேல், மக்களைத் திரட்ட மொழி, மதம் இரண்டும் உதவக் கூடியவை. மொழி அடிப்படையில் பங்களாதேஷ் உருவானது. மொழி அடிப்படையில் இலங்கையில் சிங்கள தேசியம் தமிழ் இனத்திற்கு அநீதி இழைக்கின்றது. பல மொழிகள் பேசும், ஆனால் பெரும்பான்மையினர் இந்துக்களாக வாழும் இந்திய நாட்டில், மத ரீதியாக மக்களை திரட்டுவது மிக எளிது. அத்தகைய உத்தியை அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராக மக்களைத் திரட்ட திலகர் முதலில் கையாண்டார். பின்னர், இந்துமகாசபை, ஆர் எஸ் எஸ் நிறுவனங்கள் மதத்தை அரசியலாக்கி இந்து தேசியம் பேசினார்கள். ஆனால் அன்று அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. அதற்கான காரணம் ஏகாதிபத்திய வல்லரசின் ஆதிக்கத்தை அகற்றிட இந்திய தேசியம் பேசிய தலைவர்கள், மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை வகுத்துப் போராடியதால் மக்கள் மனதை வென்று இந்துத்துவா அரசியலை நீர்த்துப்போகச்செய்தனர்.
இடதுசாரி கட்சிகள் தவிர அனைத்துக்கட்சிகளும் முதலாளித்துவ நாடுகளால் திணிக்கப்பட்ட உலகமயமாதல், தனியார் மயமாதலை ஆதரிக்கின்ற இன்றய சூழலில், புறக்கணிக்கப்படுகின்ற விவசாயிகள், தொழிலாளர்கள், துயரத்திற்குள்ளாகும் அடித்தட்டு மக்கள், சிறுபான்மையினர் ஆகியோர் நலன்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மூலமே இந்துத்துவா சக்திகளை எதிர்கொள்ளமுடியும். மக்கள் வரிப்பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராளமாக அள்ளி வழங்கி, பின்னர் அவர்களிடமிருந்து தேர்தல் நிதியாக பெற்று, பணம் கொடுத்து வாக்கு பெற்றிட முயற்சிக்கும் கட்சிகளை அம்பலப்படுத்தி, அவற்றை மக்கள் புறக்கணிக்குமாறு செய்யவேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முற்போக்கு இயக்கங்கள் தொடர்ந்து தீவிரமாக செயல்பட வேண்டும்.
பாரம்பரிய மதத்திற்கு எதிராக தாங்கள் இல்லை; அரசியலாக்கப்பட்ட மதத்தைத்தான் எதிர்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்தவேண்டும். மதம் பற்றிய அறிவியல் ரீதியான புரிதல் இருந்தாலும், மதத்தின் மூலம் மக்கள் உணர்வுகளை எளிதில் தட்டி எழுப்பவும், திசை திருப்பவும் முடியும் என்பதை புரிந்து, முற்போக்குவாதிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
- தமிழக இடதுசாரி இயக்கத்திற்கு முன் உள்ள பண்பாட்டு சவால்கள் எத்தகையது? அதனை எதிர்கொள்ள செய்ய வேண்டியது என்ன?
வல்லரசு நாடுகள் புதிய குடியேற்றவாதம் (neo-colonialism) அடிப்படையில் ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளின் மீது திணித்த உலகமயமாதல், தாராளமயமாதல் கொள்கையால் இன்று உலகெங்கிலும் வலதுசாரி பாசிச சக்திகளின் கைகள் ஓங்கி வருவதை நாம் பார்க்கிறோம். இந்தியாவும் இத்தகைய போக்கில் செல்வது கவலையளிக்கிறது. பிற்போக்கு சமூக பொருளாதார அரசியல் சிந்தனைகள் கொண்ட, இத்தகைய வலதுசாரி அரசியல் இந்தியாவில் வலுவாக வேரூன்றாது பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, ஜனநாயக, மதச்சார்பற்ற, சமத்துவ சமுதாயத்தை விரும்பும் அனைத்து தரப்பினரின் கடமையாகும். அதற்கான முயற்சியை முன்னெடுக்கவேண்டியது இடதுசாரி கட்சிகளின் பொறுப்பாகும். அத்தகைய பொறுப்புடன் இன்றைய இந்திய இடதுசாரி கட்சிகளும் இயக்கங்களும் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் மொழியை வைத்தோ, மதத்தை வைத்தோ, அடையாள அரசியல் செய்யும்போது, சிறுபான்மை இன, மொழி, மத பிரிவினர் பாதிப்புக்குள்ளாவர். மத அடிப்படையில் சிறுபான்மையினர் கணிசமான எண்ணிக்கையில் வாழும் தமிழ்நாட்டில், வட இந்தியாவைப் போன்ற பாதுகாப்பற்ற நிலை அவர்களுக்கு வராதவாறு பார்த்துக்கொள்வது இடதுசாரிகளின் இன்றைய தலையாய கடைமையாக உள்ளது. மத, ஜாதி துவேஷத்தைப் பரப்பி அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் நடவடிக்கைகளை அதிக உத்வேகத்துடன் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இத்தகைய முயற்சியில் தமிழகத்தில் உள்ள அறிவுஜீவிகளையும், தொழிற்சங்கங்கள், ஆசிரியர், அரசு ஊழியர் அமைப்புகள், வெகுசன இயக்கங்கள் போன்றவற்றையும் இணைத்து செயல்படுவது நலம் பயக்கும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
