இந்துத்துவா வகுப்புவாதம்
மத்திய கட்சிகல்வி பாடக்குறிப்பு
வகுப்புவாதம் நவீன காலத்திய அரசியல் அம்சம். வகுப்புவாதம், என்பது மதத்தின் பெயரால் செயல்படும் அரசியல் ஆகும். அது அரசியல் அணி திரட்டலுக்காக மத அடையாளத்தை பயன்படுத்துகிறது. தனது அரசியல் நோக்கத்துக்காக, மதத்தையும், மத அடையாளத்தையும், தவறாக, வஞ்சகமாக பயன்படுத்துகிறது. மதத்தை தீய நோக்கத்துக்காகச் சுரண்டுகிறது. அதற்காக சமூக வாழ்வை மதவாதமயமாக்குகிறது.
மதங்களிடையே உள்ள முரண்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும், மற்றும் அந்த முரண்பாடை அதிகரிக்கும் ஒரு சித்தாந்தமே மதவாதம் என அழைக்கப்படுகிறது. பலர் மத முரண்பாடுகளும், மதவாதமும், நமது சமூகத்தில் நிரந்தரமாக உள்ள ஒரு அம்சம் என நம்புகின்றனர். மதவாதம் எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது; இனியும் இருக்கும் என கருதுகின்றனர். மதவாத சக்திகள் அத்தகைய கற்பிதத்தை வலுவாக்கி, தமது அரசியல் ஆதாயத்துக்காக பரப்புகின்றனர். மதங்களிடையே உள்ள முரண்பாடுகள் மற்றும் மதப்பிளவுவாதம் மூலம், அரசியல் அல்லது வேறு வகையான ஆதாயங்களை அடைய மதவாத சக்திகள் முனைகின்றன.
மத முரண்பாடுகள் நமது சமூகத்தின் நிரந்தரமான அம்சம் எனும் புரிதல் வரலாற்றுக்கு பொருத்தமற்ற, ஆழமான, தவறான புரிதல். இந்தியாவில் வகுப்புவாதம் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் உருவானது என கருதப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில் அது மூர்க்கத்தனமாக உருவெடுத்து பரவியது. அதற்கு முன்பாக, அடையாளம் என்பது முற்றிலும் மதத்தின் அடிப்படையில் மட்டுமே உருவானது. ஒவ்வொரு மதமும் கூர்மையாக ஒன்றிலிருந்து வேறுபட்டது அல்லது முரண்பட்டது எனும் நிலை இருக்கவில்லை. பல்வேறு மதப்பிரிவுகளை சார்ந்திருந்த மக்களும், தமக்குள் எவ்வித வேறுபாடுமின்றி உறவு கொண்டிருந்தனர். பல மதம் சார்ந்த நம்பிக்கைகள் ஒன்றுக்கொன்று பிணைந்திருந்தன. வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள் பல வேறுபட்ட பண்பாடுகளையும் வழிபாட்டுமுறைகளையும் தமக்குள் பயன்படுத்தி கொண்டனர். இந்த வேறுபாட்டு கோடுகள் மெலிதாகவே இருந்தன.
காலனிய அரசும் அதன் கொள்கைகளும், அதேபோல அந்த கொள்கைகளை எதிர்த்த பிரிவினரும்தான் மதவாத அடையாளங்கள் வளர்ந்ததற்கும், அவை கெட்டிப்பட்டதற்கும் பொறுப்பாளர்கள் ஆவர். இந்த மத முரண்பாடுகள் இரு தரப்பிலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன; ஊக்கப்படுத்தப்பட்டன. ஒரு பக்கம் காலனிய அரசு, மறுபக்கம் அதனை எதிர்த்தவர்கள் என இரு தரப்புமே மதவாதம் வலுவானதற்கு காரணகர்த்தாக்கள் ஆவர்.
பிரிட்டஷ் காலனிய அரசாங்கம் உணர்வுபூர்வமாகவே திட்டமிட்டு உருவாக்கிய கொள்கைகள், மத அடையாளங்களை கூர்மைபடுத்தியது மட்டுமல்ல; அவை மதங்களிடையே ஒற்றுமையின்மையையும் விரோதத்தையும் அதிகப்படுத்தின. உதாரணத்துக்கு, மக்களின் போராட்டங்கள் காரணமாக வேண்டா விருப்பமாக ஆட்சியாளர்கள் இந்தியர்களுக்கு சில பிரதிநித்துவம் வழங்கியபொழுது, மத அடிப்படையில் வாக்களிக்கும் முறையை காலனிய அரசு உத்தரவாதப்படுத்தியது. காலனிய அரசு, கட்டுப்படுத்தப்பட்ட சிறிதளவு ஜனநாயகத்தையே அமலாக்கியது. எனினும், அந்த ஜனநாயக நடைமுறை கூட, மதவாத உணர்வுகள் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தன.
பிரிட்டஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக தேசிய உணர்வுகள் அடிப்படையிலான எதிர்ப்புகள் உருவான அந்த தொடக்க காலத்தில்தான் முக்கிய வகுப்புவாத அமைப்புகள் தோன்றின. 1906இல் முஸ்லீம் லீக் / 1915இல் இந்து மகாசபா / 1925இல் ஆர்.எஸ்.எஸ். ஆகிய வகுப்புவாத அமைப்புகள் உருவாயின.
முஸ்லீம் லீக் / இந்து மகாசபா / ஆர்.எஸ்.எஸ் இன் தோற்றம்
விடுதலைக்கான தேசிய இயக்கம் உருவானதும் அதற்கு பிரிட்டஷ் அரசாங்கத்தின் எதிர்வினையின் ஒரு விளைவாகவும், 1906ஆம் ஆண்டு “ஆகா கான்” என்பவரது முன்முயற்சியில் முஸ்லீம் நிலப்பிரபுக்களின் ஒரு பிரிவினரால் 1906ம் ஆண்டு டாக்காவில் முஸ்லீம் லீக் தொடங்கப்பட்டது. முஸ்லீம் லீக் முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவத்தையும் தனி வாக்குரிமையையும் கோரியது. பிரிட்டஷ் அரசாங்கம் தனது சூழ்ச்சிக்காக இதனை சாதகமாக கையாண்டது. பல்வேறு திருப்பங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு பின்னர், அரசு “இந்திய அரசாங்கம் சட்டம் 1935” எனும் சட்டத்தை இயற்றியது. இதன் அடிப்படையில் 1937ஆம் ஆண்டு மாகாணங்களுக்கும் மத்திய அவைகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தனித்தனியாக வாக்குரிமை அளிக்கப்பட்டது.
இதே காலகட்டத்தில், 1909ஆம் ஆண்டு பஞ்சாபில் தொடங்கி பல மாகாணங்களில் இந்து சபாக்கள் உருவாக்கப்பட்டன. 1915ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் இந்து மகாசபா உருவானது. இந்து மதத்தை சீர்திருத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட “ஆர்ய சமாஜம்”, பின்னர் “இந்துக்களையும் இந்து மதத்தையும் காப்பது” எனும் செயல்களில் இறங்கியது. இந்த அமைப்புதான் முதன் முதலில் பஞ்சாபில் இந்து மகாசபாவை தொடங்கியது. அதன் முக்கிய தலைவர்களில் ஒருவர் லாலா லஜபதி ராய். அவர் இந்து மகாசபாவில் ஆற்றிய ஒரு உரையில் கூறினார்: “இந்துக்களுக்கு ஒரு தனி தேசம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஏனெனில் அவர்கள் தமக்கென சொந்தமாக ஒரு தனி நாகரிகத்தை கொண்டுள்ளனர்.”
இந்து மகாசபா சில ஆண்டுகள் காங்கிரசுக்குள் செயல்பட்டது. காங்கிரஸ் அமைப்புக்குள் தனது நிகழ்ச்சி நிரல் குறித்து அழுத்தம் தரும் ஒரு குழுவாக இந்து மகாசபாவின் செயல்கள் இருந்தன. ராஜேந்திர பிரசாத், மதன்மோகன் மாளவியா, லாலா லஜபதி ராய் ஆகியோர் இந்து மகா சபாவுடன் தொடர்புடைய சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள்.
ஒத்துழையாமை இயக்கத்தை “கிலாஃபத்” இயக்கத்துடன் இணைத்தது; சவுக்கத் அலி முகம்மது அலி சகோதரர்களுக்கு காங்கிரசில் தரப்பட்ட முக்கியத்துவம்; மலபாரில் மாப்பிள்ளைமார் இயக்கம்; ஒத்துழையாமை இயக்கத்தை 1922இல் மகாத்மா காந்தி திடீரென திரும்ப பெற்றதால் அன்றைய ஐக்கிய மாகாணத்தில் உருவான மதக்கலவரங்கள், இவையெல்லாம் இந்து மகாசபாவின் சித்தாந்த நிலைப்பாட்டை மேலும் இறுக்கியது. அதன் தலைவர்கள், முஸ்லீம்களுடன் ஒப்பிடும்பொழுது, இந்து சமூகத்தில் “தாழ்வு மனப்பான்மை” நிலவுவதாக கூறினர். இந்துக்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும், முஸ்லீம்களிடையே உள்ள பாறை போன்ற உறுதியான ஒற்றுமை குறித்தும் பேசினர். மத முரண்பாடுகளை கூர்மையாக்க இந்துக்களாகிய தாங்கள் “பாதிக்கப்பட்டவர்கள்” எனும் உணர்வையும், முஸ்லீம்களை “மற்றவர்கள்” என்பதை பிம்பப்படுத்துவதும் தேவையாக இருந்தது. இந்துக்கள் ஒன்று கூடுவதற்கு எவ்வித ஏற்பாடும் இல்லை எனவும், ஆனால் முஸ்லீம்கள் பெரும் எண்ணிக்கையில் மசூதிகளில் ஒன்று கூடுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதன் தொடர்ச்சியாக, பல முக்கிய நகரங்களில் பிர்லா குழுமம் “பிர்லா கோவில்களை” கட்டியது. தமது தொடக்க காலத்திலேயே இந்து வகுப்புவாத அமைப்புகள் முக்கிய முதலாளியின் ஆதரவு பெற்றதற்கு இது ஒரு உதாரணம்.
இந்துத்துவா சித்தாந்தம்
1923ஆம் ஆண்டில் இந்து மகாசபாவின் எதிர்கால தலைவரான (1937-42) விநாயக் தாமோதர் சவர்க்கர் “இந்துத்துவா: யார் இந்து?” எனும் நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலில் அவர் கூறுகிறார்:
“நினைவுக்கு அப்பால் உள்ள காலத்திலிருந்தே, இந்த நிலமும் அதில் வாழ்ந்த மக்களும்தான் இந்து என பெயர் பெறுகின்றனர். வேதம் குறிப்பிடுகிற சிந்து எனும் பெயர் கூட, பின்னர் உருவான இரண்டாம் பட்சமானதுதான்.”
மேலும் அவர் கூறுகிறார்:
“கஜினியின் முகம்மது இண்டஸ் பகுதியை கடந்து இங்கு என்றைக்கு வந்தாரோ, அன்றே வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே முரண்பாடு தோன்றிவிட்டது. “
“(இந்து அல்லாத) சுயமற்றதுடன் உள்ள முரண்பாடை போல (இந்து எனும்) சுயத்தின் உணர்வை வேறு எதுவும் உருவாக்குவது இல்லை”
யார் தம்மை இந்துத்துவாவுக்கு சொந்தமானவர்கள் என கூறிக்கொள்ள முடியும்? இந்து என்பவர் யார்? இதனை கீழ்கண்டவாறு சவர்க்கர் வரையறுக்கிறார்:
“சிந்துவிலிருந்து சிந்து வரை, இண்டஸிலிருந்து கடல்கள் வரை, யார் இந்த மண்ணை நேசிக்கின்றனரோ, அதன் தொடர்ச்சியாக யாருடைய ரத்தம் பழங்கால சப்தசிந்துக்களின் இன வழித்தோன்றல்கள் மூலம் பரிணமித்ததாக சொந்தம் கொண்டாடுகின்றனரோ, இவர்கள் மட்டும்தான் இந்துத்துவாவின் இரண்டு முன்தேவைகள் உள்ளவர்கள் என கூற முடியும். நமது தேசத்தில் உள்ள சில முகம்மதியர்களும் கிறித்துவர்களும் இந்துக்கள் அல்ல; அவ்வாறு தம்மை அங்கீகரித்து கொள்ளவும் முடியாது. அவர்களுக்கு, பல இந்துக்களை போல, இந்துஸ்தான் தந்தை தேசம் என்றாலும், அவர்களுக்கு இந்துஸ்தான் புண்ணிய தேசம் அல்ல. அவர்களது நேசம் பிளவுபட்டுள்ளது. தமது நேசத்திலும் பக்தியிலும் அவர்கள் ஒரே மனிதனாக, தமது தந்தை தேசத்தைவிட புண்ணிய தேசத்தை உயர்த்தி வைத்தாக வேண்டும்.”
சவர்க்கர், முஸ்லீம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இந்த தேசத்தை தந்தையர் தேசமாக மட்டுமல்ல; புண்ணிய தேசமாகவும் ஏற்றுகொள்ளும்படியும், அதன் மூலம் இந்து (அதாவது இந்தியா) எனும் கட்டுக்குள் ஏற்றுகொள்ளப்பட சூழலை உருவாக்கிகொள்ளுமாறும் அறிவுறுத்துகிறார். இந்த வகையில் சவர்க்கருக்கு தேசியம் என்பது மதத்துடன் பிரிக்க முடியாத தொடர்புடைய பண்புதான்! ஏனெனில், அவர் முஸ்லீம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில், அவர்களது மத நம்பிக்கையை கைவிட வேண்டும் எனும் சாத்தியமற்ற நிபந்தனைகளை கூறுகிறார்.
1923ஆம் ஆண்டு மதன்மோகன் மாளவியா முஸ்லீம்களின் கொடூரங்களிலிருந்து இந்துக்களை காப்பாற்ற ஒரு இந்து அமைப்பை உருவாக்க வேண்டும் என்கிற ஆலோசனையை முன்வைத்தார். டாக்டர் முஞ்சே (ஆர். எஸ். எஸ். உருவாக்கிய ஹெட்கேவரின் வழிகாட்டி) இந்து பெண்களை காக்க இந்து அமைப்புகளை உருவாக்க வேண்டும் என கூறினார். முக்கியமாக, இத்தகைய திட்டங்களை மகாத்மா காந்தி கடுமையாக எதிர்த்தார்.
1923ஆம் ஆண்டு நாக்பூரில் ஒரு மதக்கலவரம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஹெட்கேவர் இந்து இளைஞர்களுக்கு உடற்பயிற்சியும் சித்தாந்த பயிற்சியும் தொடங்கினார். 1925இல் ஹெட்கேவரும் இந்து மகாசபாவை சேர்ந்த 4 பிராமணர்களும் இணைந்து விஜயதசமி நாளன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவானதாக அறிவித்தனர். இந்த அமைப்பின் குறிப்பான நோக்கம் பிரிட்டஷாரிடமிருந்து விடுதலை பெற அல்ல; மாறாக இந்துக்கள் பாதுகாப்பு மட்டும்தான்! ஹெட்கேவர் அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தேசிய விடுதலை இயக்கம் வலுப்பெற்று கொண்டிருந்த பொழுதுதான், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தொடங்கி வளர்ச்சி பெற்றது. உண்மையில், அந்த காலகட்டத்தில் பகத்சிங் மற்றும் ஏனைய புரட்சியாளர்களின் நடவடிக்கைகள் உச்ச கட்டத்தில் இருந்தன. இன்று பகத்சிங் மற்றும் அவரது தோழர்களை தமது கள நாயகர்கள் என ஆர். எஸ். எஸ். கூறிக்கொள்கிறது. ஆனால் அன்று அவர்கள் பகத்சிங்கை ஆதரிக்கவுமில்லை; அவரையும் அவரது சகாக்களையும் சிறையில் அடைக்கப்பட்டபொழுது, அவர்களின் விடுதலையை கோரவுமில்லை; அவர்களை தூக்கிலிட்ட பொழுது அதனை கண்டிக்கவுமில்லை. ஆர். எஸ். எஸ். அமைப்பும் இந்து மகாசபாவும் தேசிய விடுதலை இயக்கத்தை தொடர்ச்சியாக சிறுமைப்படுத்தியும் எள்ளி நகையாடியும் வந்தனர். தேசிய விடுதலை இயக்கம் என்பது காங்கிரசார், புரட்சியாளர்கள், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என அன்று ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய அனைவருமே ஆர்.எஸ்.எஸ்./ இந்து மகாசபா அமைப்புகளால் எள்ளி நகையாடப்பட்டனர்.
விடுதலை இயக்கம் அனைத்து சாதிகள், சமூகங்கள், பிரதேசங்கள், மொழிகள் கொண்ட மக்களையும் தேச விடுதலை போராட்டத்தில் அணிதிரட்டுவதில் வெற்றி பெற்றது. விடுதலை அடைந்த தேசத்தில் அனைவரும் சம உரிமை பெற்ற குடிமக்களாக வாழ்வது என்பதே நோக்கமாக இருந்தது. ஆனால் ஆர். எஸ். எஸ். அமைப்போ, இந்துக்கள் மட்டுமே இந்தியா/பாரதத்தின் குடிமக்களாக தகுதி பெற்றவர்கள் என கூறியது. மேலும், இந்தியாவின் அடிப்படை சட்ட அமைப்பாக (நால் வர்ண கோட்பாடை வலியுறுத்தும்) மனுஸ்மிருதிதான் இருக்க முடியும் எனவும் கூறியது. இதன் மூலம் பெரும்பான்மையான இந்தியர்களை, அவர்கள் உரிமையை பெறுவதிலிருந்தும், சரிசமமான குடிமக்கள் எனும் தகுதியிலிருந்தும் விலக்கி வைப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தது.
ஆர். எஸ். எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது என்பது மகாராஷ்ட்ராவில் வலுப்பெற்று கொண்டிருந்த சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கான எதிர்வினையாகும். ஜோதிபா பூலே (1827-1890) ஏற்கெனவே “சத்யசதோக் சமாஜ்” எனும் அமைப்பை உருவாக்கியிருந்தார். பின்னர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனது இயக்கத்தை தொடங்கினார். பிராமண இந்துயிசத்துக்கு எதிராக தலித் மக்களை அம்பேத்கர் விழிப்புறச்செய்து அணிதிரட்டினார். 1936இல் மனுஸ்மிருதியை தீயிட்டு கொளுத்தினார். ஆர். எஸ். எஸ். அமைப்புக்கு வர்ணாசிரம தர்மமும் இந்து தர்மமும் பிரிக்க முடியாதவை!
ஆர். எஸ். எஸ். அமைப்பின் சிந்தனை மீது தாக்கம் உருவாக்கிய இன்னொரு முக்கிய காரணி என்பது வரலாற்று மாற்றத்தை உருவாக்கிய 1917 போல்ஷ்விக் புரட்சியும் சோவியத் யூனியனில் உருவான புதிய வகையான சமூகமும் ஆகும். புதியதாக உருவாகத் தொடங்கியிருந்த தொழிலாளி வர்க்கமும் கிராமப்புற ஏழைகளும் நிலமற்றவர்களும் இணைந்து, ஜார் மன்னனையும் நிலப்பிரபுத்துவத்தையும் தூக்கியெறிந்தனர். சமூக – பொருளாதார சுரண்டல் அடிப்படையிலும் பிறப்பின் அடிப்படையிலும் வேறுபாடுகளை கொண்ட படிநிலை சமூகமே தேவை என ஆழமாக கருத்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் ஆழமான, அளவில்லாத வெறுப்பு (சமத்துவத்தை நிலை நாட்டிய) சோவியத் புரட்சிக்கு எதிராக இருந்தது.
ஆர். எஸ். எஸ். அமைப்பில் ராணுவ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படை அமைப்பான “ஷாக்காக்களில்” உடற்பயிற்சி தரப்பட்டது. ஆர். எஸ். எஸ். ஊழியர்களுக்கு பிரிட்டஷ் காவல்துறையினர் அணிந்த காக்கி அரை டவுசர்கள்கள் அணிவது அறிமுகப்படுத்தப்பட்டது.
1930ஆம் ஆண்டு இந்து மகாசபை தலைவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவருமான முஞ்சே, இத்தாலி சென்று (பாசிச கருத்தியலின் பிதாமகர்) முசோலினியை சந்தித்தார். இத்தாலி அரசாங்கம் நடத்திய “மத்திய மற்றும் தொலை தூர கிழக்கு நிறுவனம்” அமைப்புக்கும், பின்னாளில் இந்து மகாசபாவில் இணைந்த சியாம் பிரசாத் முகர்ஜி துணைவேந்தராக இருந்த கல்கத்தா பல்கலை கழகத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் நிலைநாட்டப்பட்டன. 1938இல் இட்லரின் ஜெர்மனி (செக்கோஸ்லாவாகியாவில் இருந்த) சுடடென்லாண்டை ஆக்கிரமித்த பொழுது சவர்க்கர் அதனை பாராட்டினார்.
ஹெட்கேவருக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற கோல்வால்கர் 1939ஆம் ஆண்டு “நாம் அல்லது நமது தேசியம் வரையறுக்கப்பட்டது” எனும் இந்துத்துவாவாதிகளிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய நூலை எழுதினார். இந்த நூல்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்த அடித்தளத்தை உருவாக்கியது. இதில் கோல்வால்க்கர் கூறுகிறார்:
“தனது இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை நிலைநிறுத்த ஜெர்மனி தனது தேசத்திலிருந்து யூத இனத்தவர்களை களையெடுத்ததன் மூலம் உலகிற்கு அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு இனங்களும் கலாச்சரங்களும் தமக்குள் உட்கிரகித்து கொண்டு ஒன்றுபட்டு இருப்பது சாத்தியமே இல்லை என்பதை ஜெர்மனி எடுத்துக் காட்டியுள்ளது. இந்துஸ்தானில் உள்ள நமக்கு இதனை கற்று பயனடைவதற்கு நல்ல படிப்பினையாகும்.”
பின்னர் அவர் கீழ்கண்டவாறு நஞ்சை உமிழ்கிறார்:
“இந்துஸ்தானில் உள்ள இந்துக்கள் அல்லாத அன்னிய இனத்தவர்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இந்து மதத்தை புகழ்பாட வேண்டும். இந்து இனத்தையும் கலாச்சாரத்தையும் புகழ்பாடுவதை தவிர, வேறு எந்த சிந்தனையும் (இந்துக்கள் அல்லாதவர்களுக்கு) இருக்கக்கூடாது. “
“அவர்கள் அன்னியர்களாக இருப்பதை நிறுத்த வேண்டும். (அவர்கள் அன்னிய மதத்தை கைவிடாவிட்டல்) இந்த நாட்டில் இந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைகளாக மட்டுமே இருக்கலாம். எந்த உரிமையையும் அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. குறிப்பாக எவ்வித விசேட சலுகைகளை மட்டுமல்ல; இந்திய குடிமகனுக்கான உரிமையை கூட எதிர்பார்க்ககூடாது” இதில் சவர்க்கரின் இந்துத்துவா தாக்கம் இருப்பதை தெளிவாக காணலாம்.
புகழ் பெற்ற அரசியல் ஆய்வாளரான கிறிஸ்டோபர் ஜெஃபர்லெட் ஆர். எஸ். எஸ். அமைப்பின் அன்றைய அணுகுமுறையை, கீழ்கண்டவாறு வரையறுக்கிறார்:
“இந்து தேசிய வெறி கோணத்திலிருந்து முஸ்லீம்கள் ‘பயமுறுத்துகின்ற (அன்னியர்கள்) மற்றவர்கள்’ எனும் பங்கை பூர்த்தி செய்கின்றனர். அதே சமயத்தில் பிரிட்டஷ் காலனியவாதிகள் “பின்பற்ற வேண்டிய மற்றவர்கள்” என்பதை பிரதிநித்துவப்படுத்துகின்றனர்.
இரு தேச கோட்பாடும் தேசப்பிரிவினையும்
முஸ்லீம் லீக்/ இந்து மகாசபா/ஆர்.எஸ்.எஸ். ஆகிய மூன்று அமைப்புகளும் தேசப்பிரிவினைக்கு முந்தைய காலகட்டங்களில் வலுவாக வளர்ந்தன. இந்தியா என்பது இரு தேசங்கள் எனும் கருத்தை மூன்று அமைப்புகளுமே வலியுறுத்தின. அதற்கான வலுவான பிரச்சாரம் செய்து மக்களை அணி திரட்டின. மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதை கூர்மையடையச் செய்தனர். இதன் விளைவாக தேசப்பிரிவினைக்கான இயக்கம் (கணிசமாக) வலுவடைந்தது. 1909இல் பஞ்சாப் இந்து மகாசபா கூட்டத்தில் லாலா லஜபதி ராய் இந்துக்கள் தனி தேசம் என பேசியதை மேலே குறிப்பிடோம். இதே கருத்தை இந்து மகாசபாவின் 19வது மாநாட்டில் கீழ்கண்டவாறு சவர்க்கர் எதிரொலித்தார்:
“இந்தியாவில் இரண்டு முரண்பட்ட தேசங்கள் அருகருகே வாழ்ந்து கொண்டுள்ளன. முக்கியமாக இரண்டு தேசங்கள் உள்ளன: இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள்.” இந்த கோட்பாடை இந்து மகாசபா ஏற்றுக்கொண்டது. ஆர். எஸ். எஸ். ஒரு போதும் இதில் முரண்படவில்லை.
1940ஆம் ஆண்டு லாகூர் மாநாட்டில் முஸ்லீம் லீக் “பாகிஸ்தான் தீர்மானத்தை” நிறைவேற்றியது. இது பற்றிய சவர்க்கர் கூற்று குறிப்பிடத்தக்கது. 1943 ஆகஸ்டு 15 அன்று நாக்பூரில் சவர்க்கர் கூறினார்: “திரு. ஜின்னாவின் இரு தேசங்கள் எனும் கோட்பாடில் எனக்கு எந்த சச்சரவும் இல்லை. இந்துக்களாகிய நாம் ஒரு தனி தேசம். இந்துக்களும் முஸ்லீம்களும் இரு தேசங்கள் என்பது வரலாற்று உண்மை”.
இரு தேசங்கள் குறித்து முஸ்லீம் லீக் / இந்து மகாசபா / ஆர். எஸ். எஸ். ஆகிய மூன்று மதவாத அமைப்புகளுக்கும் ஒன்றிசைந்த கருத்து இருந்தது என்பது நமக்கு ஆச்சர்யத்தை தரக்கூடாது. அவர்கள் அனைவரும் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதில் ஆழமாக ஈடுபாடு கொண்டிருந்தனர். அதன் மூலம் அவர்கள் அனைவரும் அதிகமாக பலன் பெற்றனர். அவர்களின் பிரிட்டஷ் எதிர்ப்பு என்பது மிக மிக மட்டுப்பட்டிருந்தது. தமக்குள் அவர்கள் மிகக்குறைவாக விமர்சித்து கொண்டனர். அவர்களது நஞ்சு கலந்த எதிர்ப்பு காங்கிரசுக்கு எதிராகவும், மதச்சார்பின்மையை ஆதரிப்பவர்களுக்கு எதிராகவுமே இருந்தது. வங்காளத்தில் இந்து மகாசபாவும் முஸ்லீம் லீகும் இணைந்து ஆட்சி கூட அமைத்தனர். தேசப்பிரிவினை விளைவித்த மதக்கலவரங்கள் மற்றும் மதப்பிளவுவாதங்கள் மூலம் மூன்று அமைப்புகளும் கணிசமாக பலன் அடைந்தனர். உண்மையில் இன்றைக்கும் கூட அவர்கள் அந்த பலனை பெறுவது தொடர்ந்துகொண்டுள்ளது.
விடுதலைக்கு பின்னர் ஆர். எஸ். எஸ் / இந்து மகாசபா
விடுதலைக்கு சற்று முன்னரும் பின்னரும் ஆர்.எஸ்.எஸ் தனது அமைப்பு ரீதியிலான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம் ஓரளவு வலுப்பெற்றது. இதனை ஒப்பிடும் பொழுது இந்து மகாசபா தோல்வி முகத்தில் இருந்தது என்றுதான் கூற வேண்டும்.
ஷாக்காக்கள் மற்றும் பிரச்சாரங்கள் அடங்கிய தனது வலைப்பின்னல் போன்ற அமைப்பு நடவடிக்கைகள் மூலமும், பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளிடையே தனது பணிகள் மூலமும் ஆர். எஸ். எஸ். ஒரு “இந்து (நலன் காக்கும்) அமைப்பு” எனும் கருத்தை, குறிப்பாக வட இந்திய இந்துக்களிடையே, உருவாக்கியிருந்தது. விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கும் செலுத்தவில்லை என்றாலும், இன்னும் சொல்லப்போனால் விடுதலைப் போராட்டத்தை எதிர்த்திருந்த போதிலும், ஆர்.எஸ்.எஸ். மக்களின் ஆதரவை ஓரளவு பெற்றது. மகாத்மா காந்தியை கோட்சே கொன்றதுதான் அதன் ஆதரவு பெருமளவு சரிய காரணமாக அமைந்தது. காந்திஜியின் படுகொலை கோடிக்கணக்கான மக்களிடையே ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக கடும் அதிருப்தியை தோற்றுவித்தது. அரசாங்கம் ஆர். எஸ். எஸ்.க்கு தடைவிதித்தது. இவற்றின் விளைவாக ஆர். எஸ். எஸ். கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மதவாத அமைப்புகளை தடுக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். எனினும் இந்திய அரசாங்கம் காந்திஜியின் படுகொலை சதியில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யவில்லை. ஆர்.எஸ்.எஸ். அளித்த போலியான வாதங்களையும் வாக்குறுதிகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. விரைவில் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அரசாங்கம் விலக்கி கொண்டது.
வகுப்புவாத உணர்வுகள் நிறைந்திருந்த அந்த தருணத்தில் கோட்சேயின் மிருகத்தனமான நடவடிக்கைக்கு சிலரிடையே ஆதரவு நீறுபூத்த நெருப்பாக இருந்தது. இந்த மறைமுக ஆதரவு பின்னாட்களில் பிரிவினைக்கான காரணம் குறித்த ஆர்.எஸ்.எஸ்.இன் பிரச்சாரமும், காங்கிரஸ் சிறுபான்மை மக்களுக்கு அதீதமாக சலுகைகளை வழங்குகிறது எனும் பிரச்சாரமும், மக்களிடையே எடுபடும் சூழலை உருவாக்கியது.
1949ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவானது. இதனை வடிவமைப்பதில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மிகப்பெரிய பங்கை ஆற்றினார். அவரது ஆழமான தாக்கம் அரசியலமைப்பு சட்டத்தில் இருந்தது. ஜனநாயகம்/ சமூக மற்றும் பாலின சமத்துவம்/ மதச்சார்பின்மை ஆகியவை நமது அரசிலமைப்பு சட்டத்தின் முக்கிய உட்கூறுகள் ஆகும். ஆர்.எஸ்.எஸ். நமது அரசிலமைப்பு சட்டத்தை முழுமையாக எதிர்த்தது. மனுஸ்மிருதிதான் இந்திய சட்டங்களின் ஏற்றுக்கொள்ளத்தக்க அடிப்படையாக இருக்க வேண்டும் என கருதியது. இதனை ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாகவே வெளிப்படுத்தியது.
1940 முதல் 1973 வரை கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவராக இருந்தார். அவரது (Bunch of Stray Thoughts) “இலக்கற்ற சிந்தனை கொத்துகள்” எனும் அவரது உரைகள் அடங்கிய தொகுப்பு 1960இல் வெளியிடப்பட்டது. இதில் அவர் கூறிய கருத்துகளும் கோட்பாடுகளும்தான் சங் பரிவார சிந்தாந்தத்தின் அடிப்படைகளாக உள்ளன. முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு எனும் நெருப்பை விசிற வேண்டும் என்பதை, மீண்டும் அழுத்தமாக குறிப்பிடும் அவர், கிறித்துவர்களுக்கு எதிராகவும் கூறுகிறார். கிறித்துவர்கள் “சர்வதேச சதியின் ஒரு பகுதியாக, நமது மத மற்றும் சமூக வாழ்வை அழிக்க முயல்வது மட்டுமல்ல; தனது அரசியல் அதிகாரத்தை பல பகுதிகளில், சாத்தியமிருந்தால், உலகம் முழுவதுமே, நிலைநாட்ட முனைகின்றனர்” என கூறுகிறார். அவர் மூன்றாவது எதிரியாக குறிப்பிடுவது கம்யூனிசத்தை! “கடவுள் நம்பிக்கையற்ற” கம்யூனிஸ்டுகள் ஆர். எஸ். எஸ்.இன் இலக்குகளுக்கு ஆபத்தாக உள்ளனர் என கூறுகிறார்.
கோல்வால்கர் தலைவராக பல ஆண்டுகள் இருந்த நீண்ட கால கட்டத்தில் ஆர். எஸ். எஸ். அமைப்பும் சங் பரிவாரத்தினரின் செல்வாக்கும் சீரான வளர்ச்சியை கண்டன. பழங்குடி மக்கள்/ மாணவர்கள்/ இளைஞர்கள்/ பெண்கள்/ இந்து மத ஆன்மீக மடங்களின் தலைவர்கள்/ கோவில்கள்/ ஆசிரமங்கள்/ தொழிலாளர்கள்/ அரசியல் அரங்கு என பல தளங்களில் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதன் அரசியல் பிரிவாக ஜனசங்கம் உருவாகி, பின்னர் பல அரசியல் பரிசோதனைகளுக்கு பின்னர் உருவான பா.ஜ.க. சிறிய தொடக்கத்தை சந்தித்து, சில பின்னடைவுகளுக்கு பின்னர், அரசியலை ஆக்கிரமிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆர். எஸ். எஸ். தனது ஒரே நோக்கமாக இந்து ராஷ்ட்ராவை அமைப்பதில் தீவீர கவனம் செலுத்தி வந்திருக்கிறது. இதற்காக பெரும்பான்மை சமூகத்தின் பல பரந்த பிரிவுகளை இந்து அடையாளம் எனும் ஒரே குடையின் கீழ் திரட்டி ஒருமுகப்படுத்த வேண்டிய தேவை ஆர். எஸ். எஸ். க்கு உள்ளது. எனினும் இந்த ஒருமுகப்படுத்தலில் அசமத்துவம் மாறாமல் இருக்கிறது.
அதிக எண்ணிக்கையிலான தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் முறைகளையும் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கணிசமான வெற்றியை கண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை கீழே காண்போம்.
வன்முறை:
வன்முறை எப்பொழுதுமே ஆர். எஸ். எஸ். சித்தாந்தத்துக்கு மையமாக இருந்து வந்துள்ளது. அதன் தொடக்க காலத்திலிருந்தே இலக்கை நோக்கிய திட்டமிட்ட வன்முறையை ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தி வந்துள்ளதுதான் காரணமாக இருந்து, மதக்கலவரங்களை தூண்டிவிட்டு, அந்த கல்வரங்களின் பொழுது ஆர்.எஸ்.எஸ். வன்முறையை நடைமுறைப்படுத்துகிறது. தான் வரையறுத்த எதிரிகளுக்கு எதிராக, வன்முறையை பயன்படுத்துமாறு, இந்துக்களை தூண்டுகிறது. தேசப்பிரிவினையின் பொழுது ஆர்.எஸ்.எஸ். பல வன்முறை செயல்களை அரங்கேற்றியது. விடுதலைக்கு பின்பு, உடனடியாக மிகப்பெரிய கொடூர வன்முறையை – காந்திஜியின் படுகொலையை- மத வெறுப்பு சக்திகள் செய்தன.
தினசரி நடக்கும் ஷாக்காக்கள் உடற் பயிற்சியையும், லத்திகளை எப்படி பயன்படுத்துவது என்பதை மட்டும் சொல்லித் தருவது இல்லை. சில தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்றுதருகின்றனர். இந்த ஆயுதங்களை எதிரிகள் மீது பயன்படுத்துவது மகத்தான செயல் என கற்பிதம் உருவாக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட நாளான விஜயதசமி அன்று ஆயுதங்கள் பகிரங்கமாக பூஜிக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் ஊர்வலங்களின் பொழுது ஆயுதங்கள் வெளியே காட்டுவது மிகவும் குறைவாக இருந்தன. ஆயுதப்பயிற்சிகள் ரகசியமான முகாம்களில் தரப்பட்டது. ஆனால், சமீப காலங்களில், இவை பகிரங்கமாக வெளிப்படையாக செயல்படுத்தப்படுகின்றன. அறிவியல் பூர்வமான பகுத்தறிவு கருத்துகளையும் சாதிய எதிர்ப்பு கருத்துகளையும் முன்வைத்ததற்காக தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகள் சங்கிகளால் நடத்தப்பட்டன. கொலை செய்தவர்கள் பயிற்சி பெற்ற இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அசீமானந்தா, பிரக்யா தாகூர் மற்றும் பல ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத செயல்களுக்காக நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கேரளாவில் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் கம்யூனிஸ்டுகள் மீது கொலை வெறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். விடுதலைக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ். மதக்கலவரங்களை தூண்டிவிட்டதும் அவற்றில் பங்கேற்றதும் குறித்தும் பல விசாரண ஆணையங்கள் சிறப்பான முறையில் ஆவணப்படுத்தியுள்ளன. டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளன்று 1992ஆம் ஆண்டு, அவர் உருவாக்கிய அரசியல் சட்டத்துக்கு பழி தீர்க்கும் வகையில், வன்முறையின் மூலம், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு குஜராத்தில் சங் பரிவாரத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மதக்கலவரங்கள் அனைவரும் அறிந்த ஒன்று.
இத்தகைய பல்வேறு வன்முறைகளும் இந்து ராஷ்ட்ராவை உருவாக்குவது எனும் ஒற்றை குறிக்கொளை நோக்கியே நடத்தப்படுகின்றன. தொலை நோக்கு திட்டம் என்ற முறையில் சங் பரிவாரத்தின் பல பிரிவுகள், பல வழிகளில், இந்த வன்முறைகளுக்கு எதிர்வினையாற்றுகின்றனர். சிலர் கண்டிக்கின்றனர்; சிலர் வன்முறைகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ஒதுங்குவது போல வெளிக்காட்டுகின்றனர்; சிலர் வன்முறையை வலுவாக வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். எதை நாம் கவனிக்க வேண்டுமெனில் இந்த வன்முறைப் பாதை, சங் பரிவாரத்தின் வளர்ச்சிக்கும், வலிமை அதிகரிப்பதற்கும், காரணமாக அமைந்துள்ளது. அதன் சித்தாந்தம் பரவுவதற்கும், வளர்வதற்கும் பயன்பட்டுள்ளது. பெரும்பான்மை சமூகத்திற்குள் உருவாகும் தொடர்ச்சியான ஆதரவு வட்டங்கள் காரணமாக அதன் சித்தாந்தம் ஏற்புடையதாக பரிணமித்துள்ளது.
இது பல வகைகளில் சாதிக்கப்படுகிறது. முதலில் எதிரி அடையாளம் காணப்படுகிறார். இந்த எதிரி சிறுபான்மை சமூகத்தை, குறிப்பாக முஸ்லீம் சமூகத்தை, சார்ந்தவராக அல்லது அவர்களை ஆதரிப்பவர்களாக அடையாளம் காட்டப்படுகின்றனர். இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட நிகழ்வு வன்முறையை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு, காந்திஜி படுகொலைக்கு பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு தருவதாக ஏற்றுக்கொண்ட ஈட்டு தொகையை தர வேண்டும் என காந்திஜி வற்புறுத்தியதுதான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், கோட்சே தனது கொலை செயலுக்கு முற்றிலும் வேறுபட்ட விளக்கத்தை தந்தது மட்டுமல்ல; விடுதலைக்கு முன்பே பலமுறை காந்திஜியை கொல்ல முயற்சிகள் நடந்தன என்பதும் வெளிப்பட்டுள்ளது. சங் பரிவாரம் காந்திஜி படுகொலைக்கு சொன்ன காரணம் பொய் என்பது தெளிவாகிறது. எனினும், சங் பரிவாரத்தின் விளக்கங்கள் பொது வெளியில் நீண்ட நாட்களாக தாக்கம் உருவாக்குவது தொடர்ந்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் சங் பரிவாரம் தான் வன்முறைக்கு குற்றம்சாட்டப்படும் பொழுது இத்தகைய தந்திரத்தைத்தான் கையாள்கிறது. பல சமீபத்திய உதாரணங்களும் உண்டு. குஜராத் வன்முறைக்கு கோத்ரா சம்பவம்/ முசாபர்பூர் வன்முறைக்கு இந்து பெண்கள் கேலி செய்யப்பட்ட சம்பவம்/ இந்து மத ஊர்வலங்களில் கல்லெறி சம்பவங்கள் என சில நிகழ்வுகள், பின்னர் நிகழ்ந்த பரவலான வன்முறைக்கு காரணம் என நியாயப்படுத்தப்படுகிறது. முஸ்லீம்களும், கந்தமால் போன்ற இடங்களில் கிறித்துவர்களும் வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகின்றனர். எனவே சங் பரிவாரத்தின் வன்முறை நியாயம் என கற்பிதம் உருவாக்கப்படுகிறது. இதனால்தான் அனைத்து கலவரங்களிலும் முஸ்லீம்கள் அதிகமாக உயிர்களையும் சொத்துக்களையும் இழந்த பொழுதும் அவர்கள்தான் இந்துக்களைவிட அதிக எண்ணிக்கையில் சிறைகளில் தள்ளப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள்தான் வன்முறையை ஆரம்பித்தனர் என்பதும், எனவே வன்முறைகளில் ஈடுபட்ட இந்து வெறியர்கள் அல்லது ஆதரவாளர்களை குற்றம்சாட்டக்கூடாது என்பதும் சங் பரிவாரத்தின் நிலைபாடு ஆகும்.
உண்மையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே சங் பரிவாரத்தின் நிலை ஆகும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையில் மேலும் மேலும் சாதாரண ஏழை இந்துக்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களும் சங் பரிவாரத்தால் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த குற்றங்களில் ஏழை இந்துக்களும் குற்றாவாளிகளாக ஆவது மட்டுமல்ல; அவர்களுக்கு தாங்கள் ஆற்றல் மிக்கவர்கள் எனும் மனோபாவமும் ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட திருப்தி உணர்வும் உருவாக்கப்படுகிறது. இதனை நாம் நினைவில் கொள்வது மிக மிக முக்கியம். ஒரு குடிசைப்பகுதியிலிருந்து ஒரு ஏழைப்பெண் பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றார். அவர் ஒரு பேட்டியில் என்ன கூறினார் எனில், தான் அயோத்தியாவுக்கு கிளம்பிய பொழுது, மாலைகள் போடப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு, வழியனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதேபோல திரும்பி வந்த பொழுது, களநாயகி போல வரவேற்பு தரப்பட்டதாகவும் கூறினார். அத்தகைய அனுபவம் தனது வாழ்நாளில் பெற்றதே இல்லை எனவும் அவர் கூறினார்.
எனவே வன்முறை என்பது ஆர்.எஸ்.எஸ்.ன் முக்கிய நிகழ்ச்சி நிரல் மட்டுமல்ல; வன்முறை ஆர்.எஸ்.எஸ்.இன் பிரிக்க முடியாத குணம் மட்டுமல்ல; அதன் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும் முக்கிய வழிமுறையும் கூட! 2014க்கு பிறகு முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த கணக்கிலடங்காத கும்பல் கொலைகளில் தலித் / ஆதிவாசி / பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இளைஞர்கள் பங்கேற்றனர். இத்தகைய வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. ஏனெனில் நிர்வாகம் / காவல்துறை / நீதித்துறை ஆகியவை இந்த வன்முறைகளை ஆதரிக்கின்றன; அல்லது நடவடிக்கை எடுக்காமல் நடு நிலை வகிக்கின்றன. இதன் காரணமாக, மேலும் மேலும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளை சேர்ந்த இளைஞர்கள் இந்துத்துவா நோக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.
கலவரங்கள் ஆழமான வடுக்களை உருவாக்குகின்றன. இந்த வடுக்கள் அவ்வளவு எளிதாக குணமாவது இல்லை. கலவரங்கள் மிக வேகமாக அதிகமான மக்களை பிளவுபடுத்துகின்றன. மக்கள் கலவரங்களில் பங்கேற்பாளராக இருக்கலாம் அல்லது பார்வையாளராக இருக்கலாம் அல்லது அதனை கேள்விப்பட்டவராக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையானவர்களை கலவரங்கள் அவர்களை தமது மத அடையாளத்துடன் இறுக பிணைக்கிறது. ஒவ்வொரு மதக்கலவரமும் மக்களை மத சகிப்புத்தன்மையற்ற அடையாளங்களுடன் இறுக்குகிறது. மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்குகிறது. இது மேலும் மேலும் அதிக இந்துக்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.ன் சித்தாந்த பிடியை பலம் கொண்டதாக மாற்றுகிறது.
வார்ட் பெரென்ஷாட் எனும் ஆய்வாளர் “கலவர அரசியல்” எனும் குஜராத் கலவரங்கள் குறித்து எழுதிய முக்கிய நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“கலவரங்களை தூண்டிவிட்டு, அதில் ஈடுபடும் குழுக்களுக்கு, தேர்தல் காலங்களில் நல்ல பலன்கள் கிடைக்கின்றன என்பது மீண்டும் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. குஜராத் வன்முறைகளும் அதே போன்ற அனுபவத்தையே வெளிப்படுத்தின. கலவரங்களுக்கு 10 மாதங்களுக்கு பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க. பெரிய வெற்றியை பெற்றது. தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த பொழுது, கலவரங்கள் நடக்காத பகுதிகளில் பா.ஜ.க. சராசரியாக 3% வாக்குகளை இழந்தது. அதே சமயத்தில் கலவரங்கள் நடந்த பகுதிகளில் 10% வாக்குகள் கூடுதலாக கிடைத்தன. மத வன்முறைகள் காரணாமாக விளையும் தேர்தல் விளைவுகளை பல தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கலவரங்கள் விளைவிக்கும் தேர்தல் கள மதப்பிளவுகள் காரணமாக, மக்கள் மேலும் மேலும் மதத்தின் அடிப்படையில் வாக்குகளை செலுத்துகின்றனர். தமது மதத்தை பிரதிநித்துவப்படுத்தும் என அவர்கள் கருதும் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர்.”
பிரச்சாரமும் தகவல் தொடர்பும்
ஷாக்காக்களில் பங்கேற்றவர்களும் பங்கேற்பை தொடர்பவர்களும் அடிக்கடி சொல்லும் ஒரு செய்தி என்னவெனில், காலை வழக்கமான நிகழ்வுகள் முடிந்தவுடன் “அன்றைய நாளின் வதந்தி” பற்றி விவாதிக்கப்படுமாம்! இந்த வதந்தி பின்னர் சங் ஊழியர்களால் பொது இடங்களிலும் சாத்தியமான அளவு பல குழுக்களிலும் பரப்பப்படுமாம்! தனது தொடக்க காலத்திலிருந்தே சங் பரிவாரம் வதந்திகளை பரப்புவதிலும், உண்மைகளை திரித்து சொல்வதிலும், தவறான தகவல்களை பரப்புவதிலும், அவற்றை உண்மை போல சித்தரிப்பதிலும், கைதேர்ந்த கலையாக செய்து வருகின்றனர். இத்தகைய வதந்திகள் மூலம் மதப்பிளவுவாதத்தை இன்னும் கூர்மையாக்கும் தமது நோக்கத்தை நிறைவேற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள்/ மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட தனி நபர்கள்/ தலைவர்கள்/ அமைப்புகள் ஆகியவர்கள் குறித்து இந்த வதந்திகளை பரப்புகின்றனர். சாதாரண மக்களின் பெரிய அளவுக்கான அறியாமையும் தவறான புரிதல்களும் சங் பரிவாரத்தின் வதந்தி பரப்பலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளன.
சங் பரிவரத்துக்கு புத்தகங்களையும் பிரசுங்களையும் வெளியிடுவது என்பது தனது சித்தாந்த பிரச்சாரத்தை முன்னே கொண்டு செல்லும் பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு ஒரு உதாரணம் கீதா அச்சகம் வெளியிட்ட பரவலான எண்ணிக்கையிலான மதம் தொடர்பான பிரசுரங்கள். இவை முழுமையாகவோ அல்லது மறைமுகமாகவோ சங் பரிவாரத்தின் உலகப்பார்வையை பரப்புவதில், மதம் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில், முக்கிய பங்கை செலுத்தின. பத்திரிக்கைகள்/ வார இதழ்கள்/ அமர் சித்ரா கதைகள் போன்ற வரலாற்று நூல்கள்/ சித்திர கதைகள் என பல வடிவங்களில் வெளியிடப்பட்டன. இவையெல்லாம் சங் பரிவாரத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே! ஜனதா கட்சி அரசாங்கத்தில் திரு. அத்வானி தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்த பொழுது, ஆர்.எஸ்.எஸ். கருத்துகளை ஆதரித்த பலர் ஊடக அமைப்புகளின் பல நிலைகளில் பணியமர்த்தப்பட்டனர். இன்று பா.ஜ.க. மத்தியிலும் மாநிலங்களிலும் அரசாங்கத்தில் இருப்பதால், ஊடகத்துறையில், காட்சி ஊடகங்கள் மற்றும் எழுத்து ஊடகங்கள் இரண்டுமே, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ். செல்வாக்கு பரவலாக இருந்த காரணத்தால் முந்தைய கால கட்டங்களில் மதக்கலவரங்கள் அல்லது முரண்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் பொழுது, பெரும்பான்மை சமூகத்துக்கு ஆதரவாகவும், சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக இழிவுபடுத்தியும், பாரபட்சமாக செய்திகள் வெளியிடப்பட்டன. இன்று இத்தகைய போக்குகள் இன்னும் கூடுதலாக, ஆழமாக மாறியுள்ளன. வெளிநாட்டு செய்திகள் கூட மதவாத பாரபட்சத்துடன் வெளியிடப்படுகின்றன. இஸ்ரேல்- பாலஸ்தீன தகவல்கள் அல்லது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் பொழுது இத்தைய பாரபட்ச செய்திகளை காண முடியும். இன்று எந்த அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது எனில் கிட்டத்தட்ட ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு செய்தியுமே மதப்பிளவையும் வெறுப்பையும் உருவாக்கும் வகையில் உள்ளது.
சமூக ஊடகங்களில் சங் பரிவாரம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பல ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமது மதவாத நிகழ்ச்சி நிரலை ஆழமாக்க, சங் பரிவாரம் பொய் செய்திகளை தொடர்ந்து வெளியிடுகிறது. மத வன்முறைகளை கொழுந்துவிட்டு எரியச்செய்ய “வாட்ஸப்” போன்ற சமூக ஊடகங்கள் பயன்படுத்துவது சர்வசாதரணமாக மாறியுள்ளது.
வரலாற்றை பொய்மைப்படுத்துதல் – பாடப்புத்தகங்களை மதவெறிமயமாக்குதல்
ஆர்.எஸ்.எஸ். தொலை நோக்கு திட்டத்தில் வரலாற்றை பொய்மைப்படுத்துவதும் பாடப்புத்தகங்களை மதவெறி மயமாக்குதலும் முக்கிய உட்கூறுகள் ஆகும். இது 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் மட்டுமே செய்யப்படும் செயல் அல்ல. தொடர்ச்சியாக விடுதலைக்கு பின்னரிலிருந்தே சங் பரிவாரத்தால் அமலாக்கப்படுகிறது. கல்வி மற்றும் வெளியீட்டு நிறுவனங்களில் உள்ள தமது ஆதரவாளர்கள் மூலம், ஆர்.எஸ்.எஸ். பாட புத்தகங்களின் திட்டங்களில் தனது செல்வாக்கு மூலம் பல பொய்களை புகுத்தி வந்துள்ளது.
1993 மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் பாடப்புத்தகங்களின் மதிப்பீட்டு குழு கீழ்கண்ட கருத்துகளை கூறியது:
“சரஸ்வதி சிசு மந்திர் எனப்படும் பள்ளிகளில் (1952ல் கோல்வால்க்கரால் துவங்கப்பட்டது) தொடக்க வகுப்புகளில் பயன்படுத்தப்படும் சில பாட புத்தகங்களில் மிக மிக மோசமான, கொடூரமான, மதவெறி கோணத்திலிருந்து இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது. எவ்வித எல்லைகளுமின்றி வரலாற்று உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளன. அந்த நூல்கள் கூறிக்கொள்வது போல தேச பக்தியை அல்ல; மாறாக கண்மூடித்தனமான வெறுப்பையும் மத வெறியையும் உயர்த்தி பிடிக்கின்றன.”
இந்த குழு மேலும் கூறுகிறது:
“வித்யாபாரதி பள்ளிகளில் ‘சன்ஸ்க்ரிடி ஞான்’ எனப்படும் நமது கலாச்சார அறிவு என்ற பெயரில் கற்பிக்கப்படும் தொடர்கள் பகிரங்கமான முறையில் மதவெறியை தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை 6,000 என கருதப்படுகிறது. இளம் தலைமுறையினருக்கு நமது கலாச்சாரம் பற்றிய அறிவு போதிக்கப்படுவது என்ற பெயரில் வெறுப்பும் அதீத மதவெறியும் முன்னெடுக்கப்படுகின்றன.”
இந்திய கலாச்சாரம் குறித்து ஆர்.எஸ்.எஸ். புரிதல் வெறுப்பு மற்றும் அதீத மதவெறி அடிப்படையிலானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே மத்தியிலும் மாநிலங்களிலும் பா.ஜ.க. அரசாங்கங்கள் அமைந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் என்ன புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டனவோ, அவை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள பாடப்புத்தகங்களிலும் திணிக்கப்பட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் வெறுப்பு/பொய்கள்/அதீத மத வெறி ஆகியவை வரலாறு, தேசபக்தி, கலாச்சாரம் என்ற பெயரில் பள்ளி பாடத்திட்டமுறை அனைத்திலும் முன்னெடுக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் பல்கலைக்கழக தளத்திலும் இந்த வஞ்சக செயல்கள் விரிவாக்கப்படுகின்றன.
இயக்கங்கள்
ஆர்.எஸ்.எஸ். தனது சித்தாந்தத்தை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் தமது சித்தாந்தமாக ஏற்றுக்கொள்ள வைக்க பல இயக்கங்களை முயற்சித்தது. இவற்றில் ராமர் கோவில் இயக்கம்தான் மிகப்பெரிய வெற்றியை அவர்களுக்கு அளித்தது. சங் பரிவாரத்தின் பல்வேறு பிரிவினருக்கு தாம் செயல்படும் தளங்களில் கிட்டத்தட்ட முழு மேலாதிக்கத்தை இந்த இயக்கம் உருவாக்கி தந்தது.
ராமர் கோவில் இயக்கம் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதிகளில் தொடங்கியது என கூறலாம். அன்று இரவுதான் ராமர் சிலைகள் பாபர் மசூதியில் இந்து மகாசபா உறுப்பினர்கள் சுவாமி திக் விஜய்நாத் போன்றவர்களால் அன்றைய மாவட்ட நீதிபதியின் ஆதரவுடன் வைக்கப்பட்டன. சர்தார் பட்டேல் அவர்கள் அன்றைய உ.பி. முதல்வர் பண்டிட் பண்ட் அவர்களுக்கு சிலைகளை அகற்றுமாறு கடிதம் எழுதினார். ஆனால் அவை அகற்றப்படவில்லை. பின்னர் மசூதியின் வாயிலில் பூட்டு போடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஒரு காங்கிரஸ்காரர் மவுலானா கச்சோச்வி மசூதியை காப்பாற்றவும், இன்னொரு காங்கிரஸ்காரர் தவ் தயாள் கன்னா ராமர் பிறந்த இடமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் இரு இயக்கங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான நடவடிக்கைகள் நீதிமன்றங்களில்தான் அரங்கேறின. 1983இல் விஸ்வ இந்து பரிஷாத் “தரம் சன்சாட்” எனும் மாநாட்டை நடத்தி அயோத்யா/ காசி/ மதுரா ஆகிய மூன்று இடங்களில் உள்ள மசூதிகளை இந்து சமூகத்திடம் தர வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதனை தொடர்ந்து பல பேரணிகளும் இயக்கங்களும் 1984 தேர்தலையொட்டி நடந்தன. ஆனால் இந்த தேர்தலில் இந்திரா காந்தி படுகொலை காரணமாக பா.ஜ.க. பெரிய தோல்வியை சந்தித்தது.
தேர்தலுக்கு பின்னரும் தொடர்ந்த ராமர் கோவில் இயக்கம் மக்களின் ஆதரவு பெறத் தொடங்கியது. தென்னிந்திய பகுதிகளில் ராமர் கோவில் இயக்கத்தை வலுப்பெற வைக்க கர்நாடகாவில் ஒரு தரம் சன்சாட் மாநாடு நடத்தப்பட்டது. ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்திலும் இந்த பணிக்கான ஆதரவை பெருக்க “பஜ்ரங் தள்” எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. 01.02.1989 அன்று மிகவும் தவறாக வழிகாட்டப்பட்ட ஒரு நடவடிக்கை மூலம் ராஜிவ் காந்தி பைசா பாத் மாவட்ட நீதிபதி மூலம் மசூதியின் பூட்டுகளை திறந்து செங்கல் பூஜைக்கு அனுமதித்தார். இதன் தொடர்ச்சியாக சில முக்கிய முஸ்லீம் பிரமுகர்கள் “பாபர் மசூதி நடவடிக்கை குழு” எனும் அமைப்பை உருவாக்கினர். மிக மிக கூர்மையாக மதப்பிளவுகள் உருவாக்கும் நிகழ்வுகளை ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் அரங்கேற்றுவதற்கு அச்சாரம் போடப்பட்டது. சங் பரிவாரத்தின் அனைத்து அமைப்புகளும் இந்த இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றன. சங் பரிவாரத்துக்கு மிகப்பெரிய சித்தாந்த நன்மைகளையும் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய அரசியல் ஆதாயங்களையும் இந்த இயக்கம் கொண்டு வந்து சேர்த்தது.
எல்.கே. அதவானி அயோத்தியாவுக்கு ரத யாத்திரையை அறிவித்தார். இந்த ரத யாத்திரை இரண்டு நோக்கங்களை சாதித்தது. 1. தேசம் முழுவதும் இந்து-முஸ்லீம்களிடையே மதப்பிளவை ஆழமாக்கியது. 2. சாதிய வேறுபாடுகளை ஒட்டு மொத்த இந்து ஒற்றுமையில் கரைப்பதற்கு அடித்தளத்தை உருவாக்கியது. மசூதியை இடிப்பதற்கான இயக்கம் வேகம் எடுத்தது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் மசூதி இடிக்கப்பட்டது.
மசூதி இடிப்பு பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது:
- ஆர்.எஸ்.எஸ். தனது நீசத்தனமான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இடைவிடாது வெறித்தனத்துடன் செயல்படும் என்பதற்கு நிரூபணம்.
- பல பகுதிகளிலிருந்தும் பல சாதிய சமூகங்களிலிருந்தும் இந்துக்களின் மிகப்பெரிய ஆதரவு ஆர்.எஸ்.எஸ். பெற்றதற்கு நிரூபணம்.
- அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளன்று அவர் உருவாக்கிய மதச்சார்பற்ற அரசியலமைப்பு சட்டத்தின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நிரூபணம்.
- அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ்/ நீதித்துறையின் ஒரு பகுதி/ நிர்வாகம் ஆகியவை அரசியலமைப்பு சட்டத்தின் மீது உள்ள ஈடுபாட்டில் ஊசலாட்டம் வெளிப்படுத்தியதற்கு நிரூபணம். இவர்களின் நேரடி பார்வையின் கீழ்தான் மசூதி இடிக்கப்பட்டது.
ராமர் கோவில் இயக்கமும் மசூதி இடிப்பில் அவர்கள் பெற்ற வெற்றியும் சங் பரிவாரத்துக்கு ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய நன்மைகளை தந்தது. அந்த வெற்றியை அடித்தளமாக கொண்டு சங் பரிவாரம் இந்து ராஷ்ட்ரா உருவாக்குவது எனும் தனது மிக முக்கிய ஒற்றை நோக்கத்தை நிறைவேற்றும் திசையில் பயணிக்க பயன்படுத்தி கொண்டுள்ளது.
2014க்கு பிறகு இந்துத்துவா வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் அமலாக்கம்
ஜனசங்கமும் பின்னர் பா.ஜ.கவும் தமது வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை இடைவிடாது முன்னெடுத்த அதே வேளையில் மாநில கட்சிகளுடன் அரசியல் களத்தில் ஒன்றுபட பல நெகிழ்வான தந்திரங்களை கையாண்டது. இதன் விளைவாக 2014இல் பா.ஜ.க. மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆளுகின்ற அல்லது முதன்மையான கட்சியாக உருவெடுத்தது. பா.ஜ.க. அரசாங்கங்கள் தமது அடிப்படை இலக்குகளை நோக்கி மிக வேகமாக செயல்பட்டன. தொழிலாளர்கள்/ விவசாயிகள்/ பெண்கள்/ இளைஞர்கள் ஆகியோர் மீதான வரலாற்றில் இல்லாத அளவுக்கு தொடுக்கப்படும் பா.ஜ.க.வின் தாக்குதகள் என்பது வரைமுறையல்லாத சுரண்டலுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவு தருவதும், நிலப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஆதரவாக செயல்படும் ஒட்டு மொத்த திட்டத்தின் ஒரு பகுதிதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மதப்பிளவுகளை இடைவிடாமல் விரிவடையச் செய்வதும் ஆழமாக்குவதும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு செய்யும் உதவிதான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லீம்களை கொடூரர்களாக சித்தரிக்க பல வழிகளை சங் பரிவாரம் பயன்படுத்துகிறது. ‘லவ் ஜிகாத்’/ சில முஸ்லீம்கள் மத்திய தேர்வாணைய தேர்வுகளில் கூடுதலாக தேர்ச்சி பெற்றால் ‘ஐ.ஏ.எஸ். ஜிகாத்’/ முஸ்லீம்கள் சொத்துக்களை வாங்கினால் ‘நில பறிப்பு ஜிகாத்’/ ‘கொரனோ ஜிகாத்’ காதலர்களில் ஒருவர் முஸ்லீமாக இருந்தால் அவர்களை தாக்க ‘ரோமியோ ஸ்குவாடு’ அமைப்பது என பல பழிகளை திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் உருவாக்குகின்றனர். இவற்றை அடிவருடிகளாக உள்ள ஊடகங்கள் மூலம் மிகைப்படுத்துகின்றனர். அன்றாடம் நிகழும் சிறிய குற்றங்கள் அல்லது சச்சரவுகளை பெரிய அளவுக்கு மிகைப்படுத்தி மதச்சாயம் பூசி மதப்பிளவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்கின்றனர். உ.பி/ ம.பி/ உத்தர்காண்ட்/ கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மதமாற்றத்துக்கு எதிராக மிகக்கடுமையான சட்டங்களை உருவாக்கியுள்ளனர். இந்த சட்டங்கள் மூலம் இந்து பெண்களை காதலிக்கும் முஸ்லீம் ஆண்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் சிறைகளில் தள்ளப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட இந்து பெண்ணும் அவமானப்படுத்தப்படுவது மட்டுமல்ல; அவரின் வாழ்க்கை இணையர் தேர்வு உரிமையும் மறுக்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்து ஆண்கள் முஸ்லீம் பெண்களை திருமணம் செய்து கொள்வதை சங் பரிவாரம் பாராட்டுகிறது; மகிமைப்படுத்துகிறது.
முஸ்லீம்களுக்கு எதிராகவும் கிறித்துவர்களுக்கு எதிராகவும் மேலும் மேலும் கூடுதலாகவும் தீவிரமாகவும் வன்முறைகள் ஏவப்படுகின்றன. கிறித்துவர்கள் மீது, குறிப்பாக தலித் மற்றும் பழங்குடி இன மக்கள் வாழும்பகுதிகளில், மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டி தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. முஸ்லீம்கள் மீது பசுவை கொல்கின்றனர் அல்லது திருடுகின்றனர் அல்லது பசுக்களை கடத்துகின்றனர் அல்லது இந்து பெண்களை கேலி செய்கின்றனர் என பல குற்றச்சாட்டுகளை சுமத்தி கும்பல் படுகொலை செய்யப்படுகின்றனர். இத்தகைய கும்பல் படுகொலை தமிழ்நாடு/ கேரளா தவிர தேசத்தின் பல பகுதிகளில் நடக்கிறது. ராமநவமி/ அனுமான் ஜெயந்தி ஆகிய விழாக்களின் ஊர்வலங்கள் நடக்கும் பொழுது முஸ்லீம்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீதும் தாக்குதல்கள் நடக்கின்றன. தாக்குதல்களில் முஸ்லீம்கள் படுகாயமடைகின்றனர்; கை-கால்களை இழக்கின்றனர். ஆனால் காவல்துறையோ அவர்கள் மீதே ஊர்வலங்கள் மீது கல் வீசியதாக குற்றம்சாட்டி சிறைபிடிக்கின்றனர். இவ்வாறு பெரிய எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் பொய்க் குற்றச்சாட்டுகளில் சிறைகளில் உள்ளனர். சமீப காலங்களில் உ.பி./ம.பி/தில்லி ஆகிய பகுதிகளில் குற்றம்சாட்டப்பட்ட முஸ்லீம்களின் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடிக்கும் செயல் நடக்கிறது.
நவராத்திரி விழாக்கள் மூலம் முஸ்லீம்களை தாக்குவது என்பதும் சமீப காலங்களில் குறிப்பாக குஜராத்தில் நடக்கிறது. இந்த விழாக்களில் பங்கேற்கும் முஸ்லீம்கள் அடையாளம் காணப்பட்டு தாக்கப்படுவது மட்டுமல்ல; அவர்களின் வீடுகள் மற்றும் குடும்பத்தாரும் தாக்கப்படுகின்றனர். நவராத்திரி விழாக்களில் முஸ்லீம்கள் கற்களை எறிந்தனர் என குற்றம்சாட்டப்பட்டு இந்த வன்முறைகள் நடக்கின்றன. காசி கியான்வாபி மசூதி மற்றும் மதுரா ஈத்கா மசூதி பிரச்சனைகளும் திட்டமிட்டு கிளப்பப்படுகின்றன. அதற்கு பரவலான விளம்பரமும் தரப்படுகிறது.
இத்தகைய நிகழ்ச்சிகள் ஊடகங்களில் ஒலி பரப்பப்படுவதும், குறிப்பாக காட்சி ஊடகங்களில் மற்ற செய்திகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு இது பற்றிய விவாதங்கள் நடத்துவதும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. 2014லிருந்து ஊடகங்கள் அம்பானி/அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் கைகளில் குவிந்துள்ளன. அவர்கள் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய ஆதரவை அளிக்கின்றன. பா.ஜ.க. அரசாங்கம் அவர்களுக்கு வரிவிலக்கு/ மான்யம் போன்ற பல அபரிமித பொருளாதர சலுகைகளை வழங்குகின்றனர். இந்த ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் மதவாத பிரச்சார நிகழ்ச்சிகளை எல்லையில்லாமல் ஒளி பரப்புகின்றனர். பல இந்து ஆண் மற்றும் பெண் ஆன்மீகவாதிகள் இந்த ஊடகங்களில் பங்கேற்பது மட்டுமல்ல; சில ஆன்மீகவாதிகள் தாங்களே சொந்தமாக ஊடகங்களை வைத்துள்ளனர். இவர்கள் மிக மோசமான மூடநம்பிக்கைகளை பரப்புவது மட்டுமல்ல; முஸ்லீம்களுக்கு எதிராக வெறித்தனமான தாக்குதல்களையும் தொடுக்கின்றனர். முஸ்லீம்களை கொல்லுமாறும் முஸ்லீம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யுமாறும் பகிரங்க அறைகூவல் விடுகின்றனர்.
இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது சங் பரிவாரத்தால் ஒரு பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் சிலர் கைது செய்யப்படுவதை முன்வைத்து முஸ்லீம்கள் அனைவருமே அத்தகைய குழுக்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது ஆதரிப்பவர்கள் என பிம்பம் உருவாக்க முயற்சி செய்யப்படுகிறது. அதே சமயத்தில் இந்துத்துவா குழுக்கள் நடத்தும் பயங்கரவாத செயல்கள் முற்றிலுமாக மறைக்கப்படுகின்றன.
சவர்க்கர் மற்றும் கோவல்க்கர் எழுத்துக்களில் முன்வைக்கப்பட்ட குறுகிய தேசியத்தை உண்மையான தேசியமாக சங் பரிவாரம் மற்றும் அதன் பிரச்சார அமைப்புகளும் ஊடகங்களும் பறைசாற்றுகின்றன. உள்நாட்டு எதிரிகளான சிறுபான்மை மக்கள்/மதச்சார்பின்மை ஆதரவு அமைப்புகள் மற்றும் தனி நபர்களும் பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு எதிரிகளும் சங் பரிவாரத்தின் தேசியம் குறித்து விவாதங்களில் கூடுதல் கவனம் பெறுகின்றனர். தேசியவாதிக்கும் ஆர்.எஸ்.எஸ். அங்கீகரிக்கின்ற இந்துவுக்கும் உள்ள இணைப்பு வலுவாக்கப்படுகிறது. ஜே.என்.யூ. போன்ற அமைப்பு போராடும் பொழுதோ அல்லது குடியுரிமை சட்ட எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் நடக்கும் பொழுதோ அல்லது 2019 தேர்தல் போன்ற காலத்திலோ அதீத தேசிய வெறி கிளப்பப்படுகிறது.
2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பா.ஜ.க. இன்னும் வேகமாக ஆர்.எஸ்.எஸ்.இன் நோக்கத்தை நிறைவேற்றுவதில் செயல்படுகிறது. கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்துதல்/ பொதுக்கல்வியை அழித்தல்/தொழிலாளர்களின் உரிமைகளை பறித்தல்/ விவசாயிகளை அழிவுப்பாதையில் தள்ளிவிடுதல்/வரலாறு காணாத அளவுக்கு தனியார்மயத்தை ஊக்குவித்தல்/தேசிய வளங்களை பணமயமாக்குதல்/அரசின் எதேச்சதிகாரத்தை முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தல் போன்றவற்றை அமலாக்க பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அரசின் மதச்சார்பின்மை கட்டமைப்பை சிதைத்து மதப்பிளவை முன்னெடுக்கும் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. 370வது பிரிவு நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக தரம் தாழ்த்தப்பட்டன. முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மாநிலம் எனும் தன்மையை மாற்றவும், அங்கு நிலவும் நிலவுடமையை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மாற்றவும், பகிரங்கமாக திட்டமிடப்படுகிறது. சங் பரிவாரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இசைந்த வகையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைக்கும் ஆபத்தான செயல்களும் திட்டமிடப்படுகின்றன.
பா.ஜ.க. அரசாங்கம் ராமஜென்மபூமி- பாபர் மசூதி பிரச்சனையில் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்க வைப்பதில் வெற்றிபெற்றது. பெரும்பான்மை சமூகத்தின் பரவலான பிரிவினர் இந்த தீர்ப்பை வெற்றி என கொண்டாடி வரவேற்றனர். பல அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை வரவேற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும்தான் இந்த தீர்ப்பை விமர்சித்து அறிக்கையை வெளியிட்டது. 2019, ஆகஸ்டு 5ஆம் தேதி பிரதமரும் உ.பி. முதல்வரும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் எங்கு முதலில் மசூதி இருந்ததோ அதே இடத்தில் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றனர்.
அந்த விழாவில் மோகன் பகவத் மனுஸ்மிருதியிலிருந்து ஒரு சுலோகத்தை கூறினார்.
அந்த சுலோகம்:
“முதலில் பிறந்தவனிடமிருந்து (அதாவது பிராமணரிடம் இருந்து) இந்த பூமியில் உள்ள அனைவரும் தம்தம் கடமையை கற்று கொள்ளட்டும்” இந்த நிகழ்ச்சியை இந்து ராஷ்ட்ரா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா என கருதுவதற்கு வாய்ப்பு உண்டு. இது இன்னொரு முக்கியமான அடையாளத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. இந்து சமூகத்தில் உள்ள சமூக முரண்பாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் தக்கவைத்து கொண்டே ஒரு ஒட்டு மொத்த இந்து அடையாளத்தை உருவாக்கிட, எத்தகைய நீண்டகால திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியது என்பதையும், எந்த அளவுக்கு அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பதையும், இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. இந்து சமூகத்தின் மிகப்பெரிய பிரிவினர் தம்மை கடுமையாக பாதிக்கும் கொள்கைகளை எதிர்ப்பதில் மிகவும் பலவீனமாகவே குரல் தருகின்றனர். ஏனெனில் அரசும் அதன் சித்தாந்த சங் கூட்டாளிகளும் சிறுபான்மை மக்களை தாக்குவதை ஆதரிக்கின்றனர்.
பா.ஜ.க.வும் சங் பரிவாரமும் வெற்றி பெற்றதற்கும், தமது வலுவை உறுதி செய்து கொண்டதற்கும், ஒரு முக்கிய காரணம் முதலாளி வர்க்கத்தின் அனைத்து பிரிவினரும் கார்ப்பரேட் குழுமங்களும் தங்கு தடையில்லாமல் அளிக்கும் ஆதரவு ஆகும். காங்கிரஸ் தனது புகழ் உச்சத்தில் இருந்த பொழுதும் கூட இந்த அளவுக்கு முதலாளிகளின் ஆதரவை பெற்றிருக்கவில்லை. கார்ப்பரேட் நன்கொடைகளில் மூன்றில் இரு பங்கை பா.ஜ.க. பெறுகிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வரும் நிதியும் அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கே போகிறது. பல பெரிய தொழில் குடும்பங்கள் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுடன் உணர்வுபூர்வ பிணைப்பை கொண்டுள்ளன. எனினும் கார்ப்பரேட்டுகளின் ஆதரவுக்கு மிக முக்கிய காரணம் அது அல்ல. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதும் தனியார்மயத்துக்கு முழு ஆதரவை பா.ஜ.க. தருவதும்தான் முதலாளிகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தர முக்கிய காரணம் ஆகும். பா.ஜ.க.வுக்கு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் முழு ஆதரவு என்பது, மதப்பிளவுவாத அரசியலுக்கு அவர்களும் உடந்தை என்றே பொருள். இது இன்னொரு விளைவாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்புரைகள்/வெறுப்பு அரசியல்/ மதத்தின் பெயரால் கும்பல் படுகொலைகள்/ அதிகரிக்கும் சகிப்பற்ற தன்மை ஆகியவை அன்றாட நிகழ்ச்சிகளாக மாறுகின்றன. மறுபுறத்தில் இந்த மதப்பிளவுவாதம் பா.ஜ.க.வுக்கு தேர்தல் ஆதரவையும் சங் பரிவாரத்துக்கு கூடுதல் பலத்தையும் தருகிறது.
ஆர். எஸ். எஸ்., அதன் துணை அமைப்புகளின் அரசியல் மற்றும் கொள்கைகளை எதிர்த்த போராட்டம்
ஜனநாயகம்/மதசார்பின்மை/அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதங்கள்/ கூட்டாட்சி தத்துவம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டுமெனில், பெண்கள்/ தொழிலாளர்கள்/விவசாயிகள்/ ஆதிவாசி மக்கள்/ தலித் /சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகள் பாதுக்காக்க வேண்டுமெனில், சங் பரிவாரத்தினரின் கொள்கைகளுக்கு எதிராகவும், அவர்களின் அரசியலுக்கு எதிராகவும், போராடுவது தவிர்க்க இயலாத ஒன்று.
அதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது என்னவெனில், சங் பரிவாரமும் பா.ஜ.க.வும் வெல்ல முடியாத சக்திகள் என அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள பொய் பிம்பம் உடைக்கப்பட வேண்டும். மிகப்பரவலான மக்களின் ஆதரவு அவர்களுக்கு உள்ளது எனும் மாயத்தோற்றம் சுக்குநூறாக்கப்பட வேண்டும். உண்மையில் அவர்கள் பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் ஒரு போதும் பெரும்பான்மை வாக்குகளை பெற்றது இல்லை. மாநில தேர்தல்களிலும் அவர்களது வெற்றிக் கதை வேறு மாதிரியாக இல்லை. அவர்களது வாக்கு வலிமை 40%க்கும் குறைவாகவே உள்ளது.
அவர்கள் மனுஸ்மிருதியை வலுவாக ஆதரிக்கின்றனர். இதன் விளைவாக நமது அரசியலமைப்பு சட்டம் / பெண்களுக்கு சம உரிமை/ இட ஒதுக்கீடு கொள்கைகளை நீர்த்து போகச் செய்தல்/பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித், ஆதிவாசி மக்களுக்கு தரப்படும் விசேட உரிமைகள் ஆகியவற்றை எதிர்க்கின்றனர். வர்ணாசிரம ஆதரவு நிலையையும் எடுக்கின்றனர். இதனை முழுமையாக அம்பலப்படுத்துவது மட்டுமல்ல; இப்பிரச்சனைகளில் ஆர்.எஸ்.எஸ்.இன் நிலையை எதிர்த்து போராடுவதும் அவசியம். தனியார்மயம் எதிர்க்கப்படுவது மட்டுமல்ல; இட ஒதுக்கீடு கொள்கைகளை ஆதரிப்பதும் அவற்றை தனியார் துறையிலும் அமலாக்க வேண்டும் என கோருவதும் அவசியம். சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை நாம் வலுவாக முன்னெடுக்க வேண்டும். தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகளை வலுவாக எதிர்க்க வேண்டும். அத்தகைய கொடூரங்களுக்கு எதிராக தலையிட வேண்டும்.
பெண்கள் பிரச்சனைகளும் கோரிக்கைகளும் அனைத்து இயக்கங்களிலும் ஒரு பகுதியாக இருத்தல் வேண்டும். பெண்களின் உரிமைகளுக்கு எதிரான அனைத்துவித வன்முறைகளும் தாக்குதல்களுக்கு எதிராகவும் போராட வேண்டும். அதே சமயத்தில் பாலின சமத்துவம்/ பெண்களுக்கு எதிரான பாலியல் உரைகள் அல்லது கருத்துகள் ஆகியவை அம்பலப்படுத்த வேண்டும்; எதிர்க்க வேண்டும்.
சங் பரிவாரம் ஒரு போதும் பெண்களின் சம உரிமையை அங்கீகரிப்பது இல்லை. பெண்கள் தம் வாழ்க்கை தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலும், அவர்களுக்கு உள்ள உரிமைகளையோ அல்லது பொது வாழ்வில் ஈடுபடும் உரிமையையோ, சங் பரிவாரம் ஏற்றுக்கொள்வது இல்லை. சங் பரிவார பெண்கள் அமைப்புகளான துர்கா வாகினி/ ராஷ்ட்ரியா சேவிகா தள் ஆகியவை திருமணத்திலும் இல்லங்களிலும் பெண்களின் உரிமையை எதிர்க்கின்றனர். திருமணத்தின் புனிதத்தை பாதுகாக்க பெண்கள் ஒவ்வொரு வழியிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என கருதுகின்றனர். குடும்பங்களில் கூட பெண்கள் தமது உரிமைகளை பெறுவதை அவர்கள் எதிர்க்கின்றனர்.
சங் பரிவாரம் பொது வாழ்வில் பெண்களுக்கு அங்கீகரிக்கும் ஒரே செயல், அவர்கள் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக, போராட வேண்டும் என்பதுதான்! இந்து மதத்துக்கு எதிரிகள் என கருதப்படும் சிறுபான்மையினருக்கு எதிராக, பெண்கள் வன்முறையில் ஈடுபடுவதை கூட, அவர்கள் ஆதரிக்கின்றனர். பெண்கள் கீழ்படிந்தும் அடக்க ஒடுக்கமாகவும் இருக்க வேண்டும் என சங் பரிவாரம் எதிர்பார்க்கிறது. ஆனால் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் தேவை உருவாகும் பொழுது, அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மதவாத முரண்பாடுகளை அதிகரிப்பதில் பெண்களை பயன்படுத்தும் போக்கு எதிர்க்கப்பட வேண்டும். பெண்கள் உரிமைகளை ஒரு புறம் மறுப்பதும், மறுபுறத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் அவர்களை பயன்படுத்துவதும் ஆகிய இந்த முரண்பாடை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
சமூக சீர்திருத்தத்துக்கான இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும். சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் ஆதரிக்கப்பட வேண்டும். அறிவியலுக்கு எதிரான பிற்போக்குத்தனமான கருத்துகளை உரிய தரவுகள் மற்றும் வாதங்கள் மூலம் முறியடிக்க வேண்டும்.
நலத்திட்டங்கள், குறிப்பாக பெண்கள் தொடர்பான நலத்திட்டங்கள், அமலாக்கம் என்பது நமது போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக உள்ள பா.ஜ.க. அரசின் கொள்கைகளை எதிர்த்து அந்த வர்க்கங்களை ஒன்று திரட்ட வேண்டும். ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்த வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் ஒரு மிகச்சிறந்த ஊக்கமளிக்கும் உதாரணம். சங் பரிவாரம் “வர்க்க சுரண்டல்” எனும் கோட்பாடை ஏற்றுக்கொள்வது இல்லை. அவர்களின் தொழிலாளர் மற்றும் விவசாய பிரிவுகள் சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையே சுமுகமான உறவு இருக்க வேண்டும் என கூறுகின்றன. இதன் பொருள் என்னவெனில், முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நலன்களுக்காக தொழிலாளர்கள் விவசாயிகள் நலன்களை பலியிட வேண்டும் என்பதாகும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டங்களையும், கருப்பு வேளாண் சட்டங்களையும் பா.ஜ.க. அரசாங்கம் நிறைவேற்றியது இந்த புரிதலின் அடிப்படையில்தான்! தொழிலாளர்கள் – விவசாயிகள் போராட்டத்தை வலுப்படுத்திட சங் பரிவாரத்தின் இந்த கார்ப்பரேட் ஆதரவு புரிதலை பரவலாக அம்பலப்படுத்த வேண்டும்.
சங் பரிவாரத்தின் மதவாத சித்தாந்தத்துக்கும் தேசியம் குறித்து அதன் தவறான குறுகிய நோக்கம் உடைய விளக்கத்துக்கும் நாம் இடம் அளிக்கக் கூடாது. சித்தாந்த தளத்தில் சங் பரிவாரத்துக்கு எதிராக போராடாமல், ஆர்.எஸ்.எஸ்.இன் பாசிச இந்துத்துவாவின் மேலாதிக்கத்தை பலவீனப்படுத்த இயலாது. இதன் மூலம்தான் சங் பரிவாரம் பெரும்பான்மை சமூகத்தின் மக்களிடையே தனது செல்வாக்கை உருவாக்கியுள்ளது. மனுவாத இந்து ராஷ்ட்ராவை அமைக்கும் நகர்வில் மக்களின் உரிமைகள் மீது தாக்குதலை தொடுக்க, இந்த சித்தாந்த பலம்தான் ஆர்.எஸ்.எஸ்.க்கு கை கொடுக்கிறது. எனவே அவர்களின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை சங் பரிவாரத்தின் தீங்கு விளைவிக்கும் சித்தாந்தத்துக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டிய தேவை உள்ளது.
இன்று சங் பரிவாரம் தனது சித்தாந்தத்தை “உண்மையான தேசியம்” என கட்டமைக்க கடுமையாக முயன்று கொண்டுள்ளது. விடுதலை போராட்டத்தில் சங் பரிவாரத்தின் போராளிகள் எவரும் அறவே இல்லை எனும் உண்மையை அகற்ற முனைகிறது. அதற்காக சவர்க்கரை புகழ்பாடி அவர் பிரிட்டஷ் அரசுக்கு எழுதிய மன்னிப்பு கடிதங்கள் குறித்த பொது மக்களின் நினைவில் உள்ள உண்மையையும் அகற்ற முயல்கிறது. இதில் இரு நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வது என்பது சங் பரிவாரத்தின் நோக்கம். ஒன்று, சவர்க்கர் உண்மையான விடுதலை போராளி என சித்தரிப்பது; இரண்டாவது, அவருடைய இந்துத்துவாவை உண்மையான தேசியம் என முன்வைப்பது. இந்த இரு நோக்கங்களையும் நாம் முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது.
மனுவாத இந்துத்துவா சித்தாந்தத்தை அம்பலப்படுத்தி, அதை எதிர்ப்பது முக்கியம் என்பது மட்டுமல்ல; நமது சொந்த சித்தாந்தத்தை மிகவும் சிறப்பான முறையில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதும் மிக அவசியம். ஆர்.எஸ்.எஸ். ஐ எதிர்த்து போராட இது தேவை என்பது மட்டுமல்ல; மக்கள் ஆதரவு மாற்று கொள்கைகள் அடிப்படையில் நமது தேசத்தின் வளர்ச்சிக்காகவும் பொருளாதார நீதி, சமூக நீதி இரண்டையும் உத்தரவாதப்படுத்தவும் இது தேவை.
இதனை செய்வதற்காக நமது வரலாறு, நமது சித்தாந்தம் இரண்டையும் பிரச்சாரம் செய்ய நமது முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.
விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் மகத்தான பங்கை பொருத்தமான முறையில் வெளிப்படுத்தி, உயர்த்தி பிடிக்க வேண்டும். தேசிய இயக்கத்தை உத்வேகப்படுத்திய கொள்கைகளையும் அதன் பன்முகத்தன்மை கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய பரவலான இயக்கத்தின் முக்கியத்துவத்தையும் பிரச்சாரப்படுத்தி பாதுகாக்க வேண்டும். மனுவாத தாக்குதல்களிலிருந்து நமது அரசியல்மைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும். நமது அரசியலமைப்பு சட்டம் முன்வைக்கும் சமூக/பொருளாதார/பாலின/அரசியல் சமத்துவத்தை நமது இயக்கங்கள் மற்றும் பிரச்சாரங்களில் மையப்புள்ளியாக இருத்தல் வேண்டும். மறுபுறத்தில் பிரிட்டஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை இந்து மகாசபாவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் எதிர்த்தன. சங் பரிவாரத்தின் சித்தாந்தவாதிகள் திரும்ப திரும்ப தமது சீடர்களை விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்குமாறு வற்புறுத்தினர். தேசத்தின் எதிரிகள் பிரிட்டஷார் அல்ல, மாறாக முஸ்லீம்கள்/ கிறித்துவர்கள்/ கம்யூனிஸ்டுகள்தான் என தொடர்ந்து கூறினர்.
சுரண்டலை எதிர்த்து போராட வர்க்க ஒற்றுமையை கட்டுவதன் அவசியம் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இந்திய பெரு முதலாளிகளுக்கும், எகாதிபத்தியத்துக்கும் உள்ள இணைப்பையும், அதனை சங் பரிவாரம் ஆதரிப்பதையும் அம்பலப்படுத்தி எதிர்க்க வேண்டும்.
அனைத்து வகையான மதவாதங்களையும் எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். சமீப காலங்களில் முஸ்லீம் வகுப்புவாத அமைப்புகள் தமது வலிமையை அதிகரித்து கொண்டுள்ளனர். ஜமாயத்-இ- இஸ்லாமி பல அரசியல் மற்றும் ஏனைய அமைப்புகளை உருவாக்கியுள்ளது. மனித உரிமைகள் / வகுப்புவாத எதிர்ப்பு மேடைகளில் ஒன்றிணைய முயல்கின்றனர். நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அத்தகைய அமைப்புகளுடன் கூட்டு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். அவர்கள் பிளவுவாத சித்தாந்தத்தை முன்வைப்பது மட்டுமல்ல; மதப்பிளவுகள் உருவாக்குவதன் மூலம் அவர்கள் இந்துத்துவா சக்திகளுக்கு உதவுகின்றனர்.
சாதிய ஒடுக்குமுறை/ வர்க்க சுரண்டல்/ பாலின அடக்குமுறை ஆகிய பிரச்சனைகளை ஒன்றிணைக்கும் போராட்ட அணுகுமுறை வலுவாக்கப்பட வேண்டும். மேலும் மேலும் கூடுதலான அமைப்புகள் போராட்டங்களில் ஈர்க்கப்பட வேண்டும்.
தேசிய ஒற்றுமையை பாதுகாக்க மதச்சார்பின்மையை உத்தரவாதம் செய்ய வேண்டியதன் தவிர்க்க முடியாத அவசியத்தை நாம் அழுத்தமாக முன்வைக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளை சமரசத்துக்கு இடமில்லாமல் பாதுகாப்பது நமது கடமை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்துத்துவாவுக்கு எதிராக நாம் செல்ல வேண்டிய பாதை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநாடு தனது அரசியல் தீர்மானத்தில் இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் கீழ்கண்ட கடமைகளை முன்வைத்துள்ளது:
பத்தி 2.168:
கட்சியை வலுப்படுத்துவது என்பது இந்துத்துவா சக்திகளை தனிமைப்படுத்துவதற்கு அடிப்படை முன்தேவையாகும். இந்துத்துவா மற்றும் அதன் பல்வேறு வகுப்புவாத அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தை அரசியல் / சித்தாந்தம் / பண்பாடு / சமூக தளங்களில் இடைவிடாது தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். இந்துத்துவாவின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான போராட்டத்தை வலுவாக்க (சூழலுக்கேற்ற) குறிப்பான நடவடிக்கைகளும் முன்னெடுப்புகளும் வடிவமைக்கப்பட வேண்டும்.
பத்தி 2.169:
கட்சியும் வெகுமக்கள் அமைப்புகளும் கீழ்கண்ட பணிகள் செய்வதன் மூலம் (இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக) தொடர்ச்சியான போராட்டத்தை நடத்த வேண்டும்:
- அ). கட்சியால் இந்த குறிப்பிட்ட பணிக்காகவே உருவாக்கப்படும் விசேட குழுக்கள் மூலம் சித்தாந்த மற்றும் அரசியல் பிரசுரங்கள் மற்றும் ஆவணங்களை தொடர்ச்சியாக தயாரிக்க வேண்டும். இவை மக்களின் மொழியில் எளிமையாக பரந்துபட்ட மக்களை சென்றடையும் வகையில் இருக்க வேண்டும்.
- ஆ). கொடூரமான வெறுப்பு பிரச்சாரத்தையும், பயங்கரவாத செயலையும், பாசிச தாக்குதல்களையும், குறிப்பாக சிறுபான்மை மக்கள் மீது ஏவும் இந்துத்துவா குழுக்களுக்கு எதிராக வலுவாக எதிர்வினையாற்ற வேண்டும். பொது தளங்களை மதவாத மயமாக்குவதை தடுக்க, நுண்ணிய அளவிலும், பெரிய அளவிலும், மிக மிக கூடுதலான விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்!
- இ). பகுத்தறிவு அடிப்படையிலான மதசார்பற்ற அறிவியல் சிந்தனையை வளர்ப்பதன் மூலம் அதிகரித்து கொண்டிருக்கும் பிற்போக்குத்தனம்/மூட நம்பிக்கை/பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை/ குருட்டு நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக சமூக/ பண்பாடு நடவடிக்கைகளையும் மக்களை சென்றடையும் வகையில் அறிவியல் இயக்கங்களையும் உருவாக்க வேண்டும். இந்துத்துவா கும்பல்கள் பரப்பும் பகுத்தறிவுக்கு எதிரான காரண காரியங்களுக்கு ஒவ்வாத கருத்துகளை முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது.
- ஈ) சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான பிரச்சனைகளை வலுவாக முன்னெடுக்க வேண்டும். பெண்களுக்கு சம உரிமையை இந்துத்துவா மறுக்கிறது. பாலின அடிமைத்தனத்தை நியாயப்படுத்துவதன் மூலம் பெண்கள் மீது கொடூரமான தாக்குதல்களை ஏவுவதற்கு உகந்த சூழலை உருவாக்குகிறது.
- உ) மிக மோசமான இந்துத்துவா சாதிய மற்றும் பிற்போக்குத்தனமான விழுமியங்கள் தலித் மற்றும் ஆதிவாசி மக்களிடையே பரப்பப்படுவதற்கு எதிரான போராட்டம் நடத்தப்பட வேண்டும். இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மையை முன்நிறுத்தும் பண்பாட்டு நிகழ்வுகளை நடத்துவதில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
- ஊ) சமூக சேவை செயல்கள் நடத்தப்பட வேண்டும். சுகாதார மையங்கள் மூலமாக கோவிட் காலத்தில் நடந்த பணிகள் தொடர வேண்டும். நூலகங்கள்/வாசக சாலைகள்/ கல்வி பயிற்சி நிலையங்கள்/திறன் வளர்ப்பு மையங்கள் முதலியன உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
- எ) கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா மதவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன. அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பதன் மூலம் மதச்சார்பற்ற/ ஜனநாயக/ பன்மைத்தன்மை கொண்ட உள்ளடக்கத்தை கல்வித்துறையில் உருவாக்கவும் பரப்பவும் இந்த துறையில் தலையீடு செய்வதற்கான முன்முயற்சியை நாம் எடுக்க வேண்டும்.
பத்தி 2.170:
(நம்முடைய) இத்தகைய நடவடிக்கைகள் இல்லை எனில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத அமைப்புகள் “ஒட்டு மொத்த இந்து அடையாளம்” என்பதை கட்டமைப்பதன் மூலம் தம்மை வலுப்படுத்தி கொள்வதில் வெற்றி அடைகின்றன. இந்த அடையாளத்தை சமூக /இன வேறுபாடுகளையும் தாண்டி சங் பரிவாரத்தினர் உருவாக்குகின்றனர். பகுத்தறிவுக்கு ஒவ்வாததை பகுத்தறிவு மூலமும் காரணத்தை மறுக்கும் மூடத்தனத்தை காரணம் மூலமும் எதிர்வினையாற்றுவது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழில்: அன்வர் உசேன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
