நிதித்துறை – மாநில சுயாட்சி சீர்குலைவு
அபிநவ்சூர்யா
தேசிய இனங்களின் உரிமைகளை அங்கீகரித்தும், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட்ட இன்றிய ஒன்றியத்தின் ஸ்திரத்தன்மை அண்மைக் காலங்களில் கடும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. மாநில முதலமைச்சர்களும், பல எதிர்க் கட்சி தலைவர்களும் ஒன்றிய அரசிற்கு எதிராக தில்லி வீதிகளில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, கேரள அரசின் அமைச்சரவையே நேரடியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளது. இது, மோடி அரசு மாநிலங்களின் சுயாட்சி மீது தொடுத்து வரும் தீவிர தாக்குதல்களுக்கு அத்தாட்சி.
எதேச்சாதிகார முறையில் செயல்படும் ஆளுநர்கள் மூலம் பல மாநிலங்களில் அரசாங்க செயல்பாடுகளை சீர்குலைத்து, மாநில அரசாங்கங்கள் கையில் உள்ள சிறிதளவு சட்டம் இயற்றும் உரிமைகளையும் பறிப்பது, புதிய கல்வி கொள்கை இயற்றுதல், மத்தியில் கூட்டுறவு அமைச்சகம் அமைத்து கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வருதல் என்பது போன்ற மாநில பட்டியலில் இருக்கும் துறைகளில் மத்திய அரசு ஊடுருவுதல் என்பது போன்ற நேரடியான தாக்குதல்கள் மூலம் மட்டுமல்லாமல், மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி விட்டு எதிர்க் கட்சி தலைவர்களை அச்சுறுத்துதல், குதிரை பேரம் மூலம் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தல் போன்ற சட்டவிரோத தாக்குதல்கள் மூலமும் மாநில அரசாங்கங்களை சீர்குலைத்து, கூட்டு ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க. அரசு.
இந்த போக்கின் ஒரு பகுதியாக, மாநிலங்களின் நிதி சுயாட்சி (fiscal federalism) அடிப்படைகளை தீவிரமாக அழிக்கும் வேலைகளும் வலுப்பெற்றுள்ளன. நவ தாராளமய காலத்தில், நாட்டை மொத்தமாக கார்ப்பரேட்டுகளுக்கு விற்க ஏதுவாக, நிதி உட்பட அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிக்கும் நடவடிக்கைகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று தான் வருகிறது. ஆனால் எல்லாவற்றையும் போலவே, காங்கிரஸ் செய்து வந்த ‘நிதி சுயாட்சி’ அழிப்பையும் அதி தீவிர நிலைக்கு கொண்டு சென்றுள்ளதே பாஜக அரசின் சாதனை. நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது, இன்று ஊடகங்களில் பரவலாக உலா வரும், “கட்டும் வரி ஒவ்வொரு ரூபாய்க்கும் தமிழ்நாட்டிற்கு கிடைப்பது 30 பைசா மட்டுமே, உத்திர பிரதேசத்திற்கு 1.7 ரூபாய் கிடைக்கிறது” என்பது போன்ற குறுகிய நோக்கம் உடைய பார்வை தவறானது என்பது மட்டுமல்லாமல், ஆபத்தானதும் கூட. இது ‘சுயாட்சி’ தத்துவத்தை வெறும் ‘யாருக்கு எவ்வளவு’ என்ற பார்வைக்கு சுருக்குவதோடு மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் உள்ள தாராளமய எதேச்சதிகார போக்குகளை மறைக்கிறது.
அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையும் நேர் கோடு கிடையாது. பல வரலாற்று மற்றும் சமகால காரணிகளின் விளைவாக, சில மாநிலங்கள் வேகமாக வளர்ந்ததோடு மட்டுமல்லாமல், அதிக வரி ஈட்டும் திறனும் பெற்றன. இதனால், இந்த மாநிலங்களில் இருந்து ஈட்டப்பட்ட வரியின் ஒரு பகுதி, வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு மடை மாற்றப்பட்டது. இந்த பங்கீட்டு முறை, உண்மையான கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நிகழ்ந்த வரை பிரச்சனை எழவில்லை. ஆனால் மாநில சுயாட்சி அழிக்கப்படும் பொழுதுதான், அந்த கோபம், இது போன்ற தோற்றத்தில் வெளிப்படுகிறது. மாநிலங்களின் நிதி உரிமைகளே அழிக்கப்படுவதுதான் இங்கு பிரதான பிரச்சனை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
இவ்வாறு மத்திய மாநில அரசுகள் இடையே நிலவும் நிதி உட்பட அனைத்து உரிமைகளின் ஏற்றத்தாழ்வை நம் அரசியல் சாசனமும் அங்கீகரித்து உள்ளது. உதாரணமாக, 2021இல், மத்திய-மாநில அரசுகளின் மொத்த வருவாயில் 37 விழுக்காடு மட்டுமே மாநிலங்களால் வசூலிக்கப்பட்டது. ஆனால் 63 விழுக்காடு செலவுகளை மாநில அரசுகள் மேற்கொண்டன. குறிப்பாக, மாநில அரசுகள் பெரும்பாலும் மக்களுக்கு அத்தியாவசியமான கல்வி, மருத்துவம், சட்டம்-ஒழுங்கு போன்ற சேவைகளை வழங்க கடமைப்பட்டுள்ளதோடு, இந்த சேவைகள் வழங்குவதன் மூலம் பெருமளவு வருவாய் ஈட்டும் சாத்தியம் இல்லை என்ற நிலையும் உள்ளது.
இதனால் மாநில அரசுகள் தங்கள் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதிக்காக மத்திய அரசை சார்ந்து இருக்கும் நிலை உள்ளது. இன்று, மத்தியில் அதிகார குவியல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த முரண்பாடு மேலும் கூர்மை அடைந்து வருகிறது.
பாஜக உருவாக்கும் நிதி நெருக்கடி
மத்திய மோடி அரசு மாநிலங்களின் நிதி சுயாட்சியை சீர்குலைக்க கையாண்டு வரும் முக்கியமான முழக்கம் “டபுள் என்ஜின் சர்க்கார்” என்பதுதான். அதாவது, மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால்தான் சுமுகமான வளர்ச்சி சாத்தியம் என்பதுதான் இதன் பொருள். இதை வேறு பாணியில் சொல்ல வேண்டும் என்றால், பாஜக-விற்கு வாக்கு அளிக்கவில்லை என்றால், அந்த மாநில வளர்ச்சி குலைக்கப்பட்டு, பாஜக-வை தேர்ந்தெடுக்காத மக்கள் தண்டிக்கப்படுவர் என்பதுதான். மாநிலங்களின் வளர்ச்சிக்கான உரிமையானது, பாஜக-வின் அதிகார வெறிக்கு பணயமாக வைக்கப்பட்டுள்ளது.
பாஜக-வின் இந்த உக்தியின் விளைவுகளை கேரள மாநிலத்தின் நிலையின் ஊடாக புரிந்து கொள்ளலாம். 2016இல் ஆட்சிக்கு வந்த இடது ஜனநாயக அரசு, மாநிலம் சந்தித்த பல இயற்கை பேரிடர்களையும் சமாளித்து, மோடி அரசு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை மூலம் நிகழ்த்திய அச்சுறுத்தல்களையும் பொய் பிரச்சாரத்தையும் கையாண்டு, மக்கள் வளர்ச்சி திட்டங்களை அமலாக்குவதில் வெற்றி கண்டு, வரலாறு காணாத விதமாக இரண்டாம் முறை மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இம்முறை அம்மாநில அரசை நிதி நெருக்கடிக்குள் தள்ளத் துவங்கியது மோடி அரசு. ஆவாஸ் யோஜனா (வீட்டு வசதி திட்டம்), சுவாச் பாரத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், தேசிய சுகாதார திட்டம், ஊட்டச்சத்து திட்டம் என பல திட்டங்களின் கீழ், கேரள அரசு பெற வேண்டிய ரூ.5000 கோடி நிதியை தராமல் முடக்கி வைத்துள்ளது மத்திய அரசு. இதன் காரணம் – கேரள அரசு இந்த திட்டங்களில் மோடியின் முகத்தை ஸ்டிக்கரில் ஒட்ட மறுத்தது தான். மேலும் கேரள அரசின் வரவு செலவுகளின் மீது மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்ததால், புகழ் பெற்ற கேரளாவின் மக்கள் நலன் சார்ந்த “வளர்ச்சி மாடல்” பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது – கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு மாதமும் வழங்கும் ஓய்வூதியம் வழங்க இயலாமல், நிலுவைத் தொகை ரூ.4600 கோடியை எட்டியுள்ளது.
இது போன்ற நெருக்கடிகளை தமிழகம், கர்நாடகம் என பல மாநிலங்களும் சந்தித்து வருகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களும் சந்திக்கின்றன. ஆனால் இந்துத்துவா அரசியல் போர்வையில் இவை அனைத்தும் மறைக்கப்படுகின்றன. இந்த பல இடங்களிலும், நிதி நெருக்கடிக்கான பழி மாநில அரசாங்கங்கள் மீது திணிக்கப்படுகின்றன. ஆனால் இந்த நெருக்கடியை உருவாக்க மத்திய அரசு செய்த நடவடிக்கைகளை ஊடகங்கள் மூடி மறைப்பது மட்டுமல்லாமல், “வட-தென் மாநில பிரிவினைகளை உருவாக்குகிறார்கள்” எனக் கூறி, மோடியும் திசை திருப்புகிறார்.
மாநிலங்களின் உரிமை
நவதாராளமய ஆட்சியில் மாநில அரசாங்கங்களின் உரிமை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதை கண்டோம். இதன் முக்கிய துவக்கப் புள்ளி, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் பதினோராவது நிதி ஆணையம் (finance commission) பரிந்துரை அடிப்படையில், மாநில அரசுகள் கடன் நிவாரண சலுகை பெற, “நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை” சட்டம் (FRBM) இயற்ற நிர்ப்பந்திக்கப்பட்டதுதான். இதன் மூலம் மாநில அரசாங்கங்களின் பட்ஜெட் செலவினங்கள் கடும் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று வரையும் கூட மாநில அரசாங்கங்கள் தங்கள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்ற இயலாமல் போகும் நிலை உள்ளது.
இதன் பின், நவதாராளமய காலத்தில் அதிவேகமாக வளர்ந்து வந்த சேவை துறைக்கான வரி விதிப்பு உரிமையை மாநிலங்களுக்கு அளிக்காமல் இருந்தது மத்திய அரசு (காங்கிரஸ்-பாஜக, இரண்டு அரசுகளும்).
மேலும் நவதாராளமய காலத்தில் மாநிலங்களை பாதிக்கும் முக்கிய அம்சமானது, “பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள்”. தாராளமய காலத்தில் அனைத்து சந்தைகளும் “சுதந்திர வர்த்தகத்திற்கு” திறந்து விடப்பட்ட நிலையில், மத்திய அரசு தன் விருப்பத்திற்கு ஏற்ப தாராள வர்த்தக ஒப்பந்தங்களை பல்வேறு நாடுகளுடன் செய்துகொண்டு வருகிறது. இது மாநில அரசாங்கங்களையும், மக்களையும் எந்த விதத்தில் பாதிக்கும் என்பதை கிஞ்சித்தும் எண்ணாமல், மாநிலங்களுக்கு எந்த உரிமையும் அளிக்காமல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 2022இல் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் முடிவானது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் என்பது ஒரு வர்த்தக மையப்புள்ளி. பல்வேறு நாடுகளின் வர்த்தகம் இந்த நாட்டின் வழியாகவே நடக்கும். ஆக, இது வர்த்தகத் துறையில் கணிசமான ஆதிக்கம் உள்ளது நாடு. இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்திய உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக வளைகுடா நாடுகளுடன் நெருங்கிய உறவு கொண்ட கேரளாவிற்கு பல பாதிப்புகள் ஏற்படும். ஆனால் கேரள அரசுடன் ஆலோசனை கூட நடத்தாமல், ஒப்பந்தம் செய்தது மத்திய அரசு.
இது போன்ற நடவடிக்கைகளை அதீத அளவுக்கு இட்டுச் சென்றது தான் மோடி அரசு நிறைவேற்றிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) சட்டம். “ஒரே நாடு ஒரே வரி” எனக் கூறி, மாநில அரசாங்கங்கள் தங்கள் வளர்ச்சிக் குறிக்கோள்களுக்கு ஏற்ப எந்த பண்டங்களுக்கும் வரியை தீர்மானிக்கவே முடியாது என்ற நிலை உருவானது. “ஜி.எஸ்.டி. கவுன்சிலில்” அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு என கூறுகின்றனர் வலதுசாரி அறிஞர்கள். ஆனால் இந்த கவுன்சிலில் மத்திய அரசுக்கு தான் அதிக வாக்கு எண்ணிக்கை உண்டு. இதனால் மத்திய அரசு நிர்ணயிப்பது தான் வரி. இதை பயன்படுத்தி, பல தேர்தல் சமயங்களில் வரி விகிதங்களை குறைத்து-கூட்டி, மாநில அரசாங்கங்களின் வருவாய்க்கு பங்கம் விளைவிக்கிறது மத்திய அரசு. அது மட்டும் இல்லாமல், ஜி.எஸ்.டி சட்டம் இயற்றிய பொழுது, ஜி.எஸ்.டி வரி வருவாய் ஆண்டிற்கு 14 சதவீதம் வளரும் என்றும், அப்படி வளரும் நிலையை எட்டும் வரை ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றும் கூறியது மோடி அரசு. ஆனால் பல ஆண்டுகள் கழித்தும் ஜி.எஸ்.டி வருவாய் வளர்ச்சி போதுமான அளவை எட்டவில்லை. உதாரணமாக, ஜி.எஸ்.டி அமலாக்கலுக்கு முன் கர்நாடக அரசின் வணிக வரி வருவாயின் வளர்ச்சி விகிதம் ஆண்டிற்கு 15 சதவீதம் இருந்து நிலையில், ஜி.எஸ்.டி-க்கு பின் அது வெறும் 9 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் இந்த குறைவையும், கோவிட் காலத்தில் மாநில அரசாங்கங்கள் சந்தித்த செலவினங்கள் மற்றும் வரி வருவாய் குறைவையும் கணக்கில் கொள்ளாமல், நெருக்கடிக்கு நடுவே, 2022ஆம் ஆண்டு நஷ்ட ஈடு வழங்குவதை நிறுத்தியது மத்திய அரசு. இதனால் மக்கள் நலனுக்கு செலவிட அவசியமான நேரத்தில், போதுமான வருவாய் இல்லாமல் நெருக்கடியில் தள்ளப்பட்டன மாநில அரசாங்கங்கள். வரி விதிக்கும் உரிமையையும் பறித்து விட்டு, நஷ்ட ஈடையும் நிறுத்தி விட்டு, மாநில அரசாங்கங்களை நிர்க்கதியில் விட்டுவிட்டது மோடி அரசு.
நவ தாராளமய காலத்தில் மாநிலங்களின் உரிமைகளை பறித்த அடுத்த நடவடிக்கை, “திட்ட ஆணையம்” (planning commission) கலைக்கப்பட்டது தான். திட்ட ஆணையம் இருந்த வரை, மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கான நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் மாநில அரசாங்கங்களுக்கு குரல் இருந்தது. தங்கள் மாநிலங்களின் வளர்ச்சி தேவைக்கு ஏற்ப மாநில அரசுகள் நிதியை கோர முடியும். இதுவே “திட்டமிட்ட வளர்ச்சி” பாதையின் அவசியத்தை உணர்த்தியது. ஆனால் திட்ட கமிஷன் ஒழிக்கப்பட்ட பின்பு, புதிய திட்ட நிதிகளை செலவு செய்யும் முழு உரிமையும் மத்திய அரசின் கையில் மட்டுமே உள்ளது. பரந்துபட்ட தேவைகள் இருக்கும் இந்தியாவில், பல்வேறு மாநிலங்களுக்கு என்ன அவசியம் என்பதை கணக்கில் கொள்ள அவசியமே இல்லை! “மோடி தீர்மானிப்பது தான் திட்டம் ” என திணிக்கும் நிலை உருவானது.
இவ்வாறாக, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமல்லாமால், அந்த உரிமை பறிப்பு மூலம் மாநிலங்களை காலடியில் வைக்க நினைக்கும் மோடி அரசு, இதை தன் “டபுள் என்ஜின் சர்க்கார்” குறிக்கோளுக்கு ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தி வருகிறது.
மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு
வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்ற நேரடி வரிகள் அனைத்தும் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதால், அதை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வழிமுறை வகுக்க, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை நிதி ஆணையம் நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரைப்படி நிதிப் பகிர்வு நடக்கிறது. 14-வது நிதி ஆணையம் நியமிக்கப்பட்ட பின், மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய பங்கை மோடி குறைக்க நினைத்ததாகவும், ஆனால் நிதி ஆணைய தலைவர் அதை ஏற்க மறுத்ததாகவும் செய்தி வந்தது. அது ஒரு புறம் இருக்க, 13-வது நிதி ஆணையத்தின் 32% பங்கிலிருந்து, 14-வது நிதி ஆணையம் மாநிலங்களின் பங்கை 42%-ற்கு உயர்த்தினாலும், இன்றும் பல மாநிலங்கள் நிதி நெருக்கடியில் தவிப்பது தான் அவல நிலை. இதற்கு மத்திய அரசு கொள்கைகள் முக்கிய காரணம்.
14-வது நிதி ஆணையம் வரை, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு 1971 மக்கள் தொகை அடிப்படையில் நிகழ்ந்தது. ஆனால் 15-வது நிதி ஆணையம் துவங்கி, 2011 மக்கள் தொகை அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அதிக வளர்ச்சி பெற்ற தென் மாநிலங்கள் கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தியதால், தென் மாநிலங்களின் வரிப் பங்கு குறைந்து விட்டது. மொத்த வரியில் கர்நாடகாவின் பங்கு 4.71%-லிருந்து 3.65%-மாக குறைந்தது. ஆனால் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது கேரளா தான். கேரளாவின் பங்கு 2.5%-லிருந்து 1.92%-மாக குறைந்தது மட்டுமல்லாமல், அம்மாநிலத்திற்கு கிடைக்கும் மொத்த வரி அளவே, 2019-ல் 19 ஆயிரம் கோடியில் இருந்து, 2023-ல் 18.2 ஆயிரம் கோடியாக குறைந்தது. அதாவது செலவினங்கள் வளர்ந்து வந்த நிலையில், வரி வருவாய் வளராமல், குறைந்தது. இங்கே “மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன” என்ற வாதம் முன்நிற்கிறது. அது ஒரு புறம் இருந்தாலும், அதிக மக்கள்தொகை உள்ள மாநிலங்கள், இன்றைய வளர்ந்த மாநிலங்களின் நிலையை அடைய நிதி தேவை என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் அதே வேளையில், இப்படி திடீரென கேரளாவிற்கு கிடைக்கும் மொத்த வரி அளவே குறையும் பொழுது, அது நெருக்கடிக்கு இட்டுச் செல்லாமல் தடுக்க, மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல், கேரளாவை தவிக்க விட்டது மோடி அரசு.
ஆனால் மோடி அரசு இதை விட முக்கியமாக நிகழ்த்தும் கயமைத்தனம் என்னவென்றால், மத்திய அரசு தான் ஈட்டும் வரிகளில் ‘செஸ்’ (cess) எனப்படும் ‘வீதவரி’ மற்றும் ‘சர்ச்சார்ஜ்’ (surcharge) எனப்படும் ‘மேல்வரி’ ஆகியவற்றை கூட்டியது தான். இந்த செஸ் மற்றும் சர்ச்சார்ஜ் வரிகளை நிதி ஆணைய பரிந்துரைப்படி மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள அவசியம் இல்லை. இந்த செஸ் மற்றும் சர்ச்சார்ஜ் வரிகள் 2009-10இல் 70 ஆயிரம் கோடியாக இருந்தது, நடப்பு ஆண்டில் 6.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மோடி ஆட்சி துவங்கிய பொழுது, மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 9.5% பங்கு வகித்த செஸ் மற்றும் சர்ச்சார்ஜ் வரிகள், 2020-21இல் 20.2%-ஆக உயர்ந்து விட்டது. வசூலிக்கும் நிதியில் 42%த்தை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நிதி ஆணையம் பரிந்துரைக்கையில், இந்த செஸ் மற்றும் சர்ச்சார்ஜ் வரிகளையும் “மாநிலங்களுடன் பகிர வேண்டிய நிதி” பட்டியலில் சேர்த்துக் கொண்டால், 31.7% நிதி மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்படி “பகிர அவசியம் இல்லை” என்று இருக்கும் செஸ் மற்றும் சர்ச்சார்ஜ் வரிகளை அதிகரித்ததன் விளைவாக, மாநில அரசாங்கங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வரி கிடைப்பதில்லை.
இதைத் தவிர, குறிப்பிட்ட சில திட்டங்களுக்கும், சில மாநில தேவைகளுக்கும், மத்திய அரசு மானியங்கள் (grants-in-aid) வழங்க வேண்டும். இதுவும் அறுதி மதிப்பில், 2016இல் 1.95 லட்சம் கோடியில் இருந்து, இன்று 1.65 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
மத்திய அரசு மாநில அரசாங்கங்களை வஞ்சிக்கும் மற்றொரு வழி, கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கும் வரிச் சலுகைகள். 1991இல் இந்தியாவின் கார்ப்பரேட் வருமான வரி விகிதம் 45% ஆக இருந்தது. அடுத்தடுத்த அரசாங்கங்கள் இதை குறைத்துக் கொண்டே வந்தன. நாட்டின் வளர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்து வந்ததன் நடுவே, 2019இல் நிதி அமைச்சர் இதை வெறும் 22%க்கு குறைத்தார் (ஏகாதிபத்திய ஜாம்பவான் அமெரிக்காவில் கூட வரி விகிதம் 25%த்தை விட அதிகம்). மேலும், இப்படி குறைக்கப்பட்ட வரியிலும் கூட பெருமளவை சலுகையாக கொடுத்து விடுகிறது மத்திய அரசு. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி வரி கார்ப்பரேட் வரிச் சலுகையாக வீணாகச் செல்கிறது. இந்த வரி வசூலிக்கப்பட்டால், இவை நியாயமாக மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால், மாநிலங்கள் சந்திக்கும் நிதி இழப்பை கணக்கில் கொள்ளாமல், சுயேச்சையாக கார்ப்பரேட்களுக்கு வரிச் சலுகை அளிக்கிறது மோடி அரசு.
இவ்வாறு, மானியங்களை வெட்டி, பகிரத் தேவையில்லாத செஸ்-சர்ச்சார்ஜ் வரிகளை கூட்டி, கார்ப்பரேட்டுகளுக்கு வரி விலக்கு வாரி வழங்கி, மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதியை குறைப்பதன் மூலம், மாநில சுயாட்சிக்கு பெரும் பாதகம் உண்டாக்கி வருகிறது மோடி அரசு.
மத்திய அரசு திட்டங்கள்
மாநிலங்களுக்கு பகிரப்படும் பங்கின் அளவு குறைய, மறு முனையில், மத்திய அரசு மற்றும் மத்திய அரசு ஆதரவு அளிக்கும் திட்டங்களின் பங்கு அதிகரிக்கிறது. இவை மாநில அரசுகளின் இலாகாக்களில் உள் நுழைந்து, மாநில அரசின் அதிகாரத்தை சீர்குலைக்கிறது
இதில் முக்கியமான பாதகம் உண்டாக்குவது மத்திய அரசு ஆதரவு அளிக்கும் திட்டங்கள் தான். வீட்டு வசதி திட்டம், தேசிய சுகாதார திட்டம் போன்ற திட்டங்களில், ஒரு பங்கு நிதியை மத்திய அரசு கொடுக்க, மற்றொரு பங்கு நிதியை மாநிலங்கள் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால் இந்த திட்ட நிதியை பயன் படுத்த முடியாது. மாநிலங்கள் தங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கே நிதி ஒதுக்க முட்டி மோதும் நிலையில், இந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க நிர்பந்திக்கப்படுகின்றன. இந்த பங்கு, முதலில் 60% மத்திய அரசு, 40% மாநில அரசு என்று இருந்த நிலையில் இருந்து, இன்று மாநில அரசுகள் பாதி செலவின சுமையை சுமக்க வேண்டும் என்றாகி விட்டது.
மேலும், இந்த திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற கெடுபிடியான கட்டளைகளை மத்திய அரசு மட்டுமே சொல்லும். அதிலிருந்து விலகினால் நிதி மறுக்கப்படும். உதாரணமாக, வீட்டு வசதி திட்டத்தில் வீடுகளில் மத்திய அரசு விளம்பரங்கள் ஒட்ட கட்டளை. “வீடு என்பது மக்களின் அடிப்படை உரிமை. விளம்பரம் மூலம் கொச்சை படுத்த வேண்டாம்” எனக் கூறி, விளம்பரம் இட மறுத்த கேரள அரசிற்கு நிதி வெட்டப்பட்டது. மத்திய அரசு ஆதரவு அளிக்கும் திட்டங்கள் கீழ் கேரளாவிற்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட நிதியில், 2015-16இல் 85% நிதியை அம்மாநிலம் பெற்ற நிலையில், 2021-22இல் வெறும் 40% நிதியை மட்டுமே பெற்றது.
மேலும் இந்த திட்டங்களை அறிவிக்கும் பொழுது, அது அந்தந்த மாநிலங்களுக்கு உகந்ததாக இருக்குமா என்ற எந்த கவலையுமின்றி, தன்னிச்சையாக செயல்படுகிறது மத்திய அரசு. உதராணமாக, வீட்டு வசதி திட்டத்தில், தமிழக மக்களுக்கு ஏதுவான வீடு கட்ட, கட்டுமான செலவில் எவ்வாறு 60%க்கும் மேலான செலவை தமிழக அரசு தான் ஏற்க வேண்டிய நிலை உள்ளது என்பதை அண்மையில் பட்ஜெட் தாக்கல் நேரத்தில் தமிழக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இப்படி மாநிலங்களின் வளர்ச்சி தேவைகளை உணராமல், மாநில அரசுகள் அதிகாரத்தை குலைக்கும் மத்திய அரசு ஆதரவு அளிக்கும் திட்டங்கள் மூலம் வரும் நிதி, 2015-16இல் 2.04 லட்சம் கோடியில் இருந்து, 2023-24இல் 4.76 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது.
இதைத் தவிர, மத்திய அரசே முழுமையாக செயல்படுத்தும் திட்டங்களும் உள்ளது. இந்த திட்டங்கள் மூலம் அளிக்கப்படும் நிதி, 2015-16இல் 5.2 லட்சம் கோடியில் இருந்து, 2023-24இல் 14.7 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. திட்ட கமிஷன் ஒழிக்கப்பட்ட பின்பு, எந்த மாநிலம் மத்திய அரசுடன் சுமூகமாக செல்கிறதோ, அந்த மாநிலத்துக்கே இந்த திட்ட நிதிகள் அதிகமாக ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், இந்த திட்டங்கள் மூலமாக கிடைக்கும் நிதியும் பெரும்பாலும் குறைவாக இருப்பதால், மாநில அரசுகள் கூடுதல் செலவு செய்தால் மட்டுமே திட்டத்தை சரிவர நடத்த முடியும் என்ற நிலையும் உள்ளது.
இவ்வாறு எவ்வளவு செலவு செய்ய வேண்டும், எங்கே செலவு செய்ய வேண்டும், எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்ற கட்டளைகளுடன் வரும் நிதிகளின் பங்கும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் எதிர்க் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு இந்த நிதிகள் சரிவர சென்று சேராமல் இருப்பதால், “‘டபுள் என்ஜின் சர்க்கார்’ மட்டும் தான் சரியான வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்” என்ற சொல்லாடலை மேலும் வலுவாக முன் நிறுத்துகிறது பாஜக அரசு.
மாநிலங்களின் கடன் பெரும் உரிமை
எவ்வாறு FRBM சட்டம் மூலம் மாநிலங்களின் பட்ஜெட் மீது கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என முன்னரே கண்டோம். இவ்வாறு அரசாங்க “நிதிப் பற்றாக்குறை” (fiscal deficit) எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற கோட்பாடு நவதாராளமய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசு செலவினங்களை வெட்டி, பொதுத் துறை நிறுவனங்களை மூடி, மக்களுக்கு அரசு வழங்க வேண்டிய சேவைகளை முடக்கி, தனியார் லாபத்தை கூட்டும் முயற்சியே இது.
மேலும், இந்த அரசு நிதிப் பற்றாக்குறையை மொத்த உற்பத்தியில் 3% மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற கட்டளை மாநில அரசுகள் மீது தான் கறாராக விதிக்கப்படுகிறது. மத்திய அரசு பற்றாக்குறை 5-6%க்கு மேல் (கோவிட் நேரத்தில் 10%க்கு மேல்) இருந்தாலும் தண்டனை ஏதும் இல்லை. மேலும், “மின்சார துறையை தனியார்மயம் ஆக்குவது போன்ற நவதாராளமய கொள்கைகளை நிறைவேற்றுங்கள், நிதிப் பற்றாக்குறையை 3.5% வரை வைத்துக்கொள்ள அனுமதிக்கிறோம்” என சிறிதும் நாணமற்ற கட்டளைகள் விதிக்கிறது மத்திய அரசு. பல்வேறு மாநிலங்களின் நிதி நிலையும், வளர்ச்சிக்கான தேவைகளும் வேறுபட்டதாக இருக்கும். சில மாநிலங்கள் கடன் வாங்கி செலவு செய்தால் தான் எதிர்காலத்தில் நல்ல மனித வள வளர்ச்சியை அடைய முடியும் என்ற நிலை இருக்கக் கூடும். இவை எதையும் கணக்கில் கொள்ளாமல், பொத்தாம் பொதுவாக கடன் வாங்கும் உரிமையை கட்டுப்படுத்துகிறது மத்திய அரசு.
இதன் உச்சபட்சம் தான் இன்று கேரள அரசு சந்தித்து வரும் நெருக்கடி. கேரளாவின் கட்டுமான தட்டுப்பாட்டை தீர்க்க, ‘கிஃபி’ என்ற பொதுத்துறை நிதி நிறுவனம் புதுப்பிக்கப்பட்டு, அதன் கடன்கள் மூலம் பெருமளவிலான கட்டுமான திட்டங்களை அமலாக்கி, கட்டுமானத்தில் தேர்ந்த மாநிலமாக கேரளாவை உயர்த்த இடது ஜனநாயக அரசு முனைந்தது. ஆனால் இப்போது மத்திய அரசானது கிஃபி மற்றும் இதர கேரள அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் கடனை, அதாவது “பட்ஜெட்டுக்கு வெளியிலான கடன்” என வரையறை செய்யப்பட்டதை கேரள அரசின் கடன் என்ற கணக்கில் கொண்டு வர வேண்டும் என முனைப்புடன் உள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்கமாக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3% கடன் வாங்கலாம் என்று இருந்து வந்துள்ள நிலையில், அண்மையில் 2023-24 நிதி ஆண்டிற்கு கேரளா அனுமதிக்கப்பட்டுள்ளது 2% கடன் உசசவரம்பு மட்டுமே. இதனால் கேரள அரசு ரூ.13,600 கோடி வருவாய் இழப்பு சந்தித்துள்ளது. இதன் விளைவாக பல நலத் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்படி மாநில அரசாங்க நிதிகளில் தலையிடும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை. இதை எதிர்த்து மத்திய அரசு மேல் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது கேரள அரசு. உச்ச நீதி மன்றத்தில், ‘கேரள அரசு பெரும் கடனாளி அரசு’, எனக் கூறி வருகிறது மத்திய அரசு. “மொத்த உள் மாநில உற்பத்தியில் அரசு கடனின் பங்கு” எனப் பார்த்தால், கேரளாவின் கடன் அளவு பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை விட குறைவு. கடந்த பத்து ஆண்டுகளின் அரசாங்க கடன் வளர்ந்த விகிதம் எனப் பாரத்தால், அதிலும் கேரள அரசின் கடன் வளர்ச்சி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை விடக் குறைவு தான். கேரள அரசின் வளர்ச்சி திட்டங்களை முடக்க இப்படி பல்வேறு காரணங்கள் சொல்லி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு.
இவ்வாறு “நிதிப் பற்றாக்குறை கட்டுப்படுத்துதல்” என்ற சாக்கு சொல்லியும் மாநில அரசுகளின் நிதி திரட்டும் உரிமைகளை அழித்து, எதேச்சதிகார போக்கை வளர்த்து வருகிறது மத்திய அரசு.
நிறைவாக
மாநிலங்களின் நிதி ஈட்டும் உரிமைகளை முடக்கி, பகிர அவசியமில்லாத நிதிகளை கூட்டி, கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கி, கட்டளைகளுடன் வரும் மத்திய அரசு திட்டங்களின் பங்கை கூட்டி, மாநிலங்களுக்கு பாதகமான தன்னிச்சையான முடிவுகளை எடுத்து, நிதித் துறையில் மாநில சுயாட்சி முறையை குழி தோண்டி புதைக்கும் வேலையை செய்து வருகிறது மோடி அரசு. பாஜக & ஆர்எஸ்எஸ்-ஸின் ஒற்றை ஆட்சியை நாடு முழுவதும் நிலை நாட்டி, கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டு மூலம் நாட்டை சூறையாடும் திட்டத்தை அமலாக்க, மத்திய-மாநில அரசுகள் இடையே நிலவும் அதிகார பாகுபாட்டை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்த துவங்கிவிட்டது பாஜக. எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மக்கள் நல மற்றும் வளர்ச்சி திட்டங்களை அமலாக்கி எதிர் கட்சிகள் மக்கள் ஆதரவு பெறுவதை எல்லா விதத்திலும் தடுக்க முனைகிறது கவி கும்பல்.
இந்த பாசிச தன்மை கொண்ட அரசுக்கு எதிராக அனைத்து எதிர் கட்சிகளையும் ஒன்றிணைக்க, “மாநில நிதி சுயாட்சி” ஒரு முக்கிய களமாக அமையும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
