வரலாற்றியல் பொருள் முதல்வாதம்
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு
அறிமுகம்
சமூக வளர்ச்சியையும், வரலாற்றின் வளர்ச்சியையும் இயற்கையுடனான மனிதர்களின் உறவு மற்றும் சக மனிதர்களுக்கிடையிலான உறவுகளின் அடிப்படையில் பார்க்கிறது வரலாற்றுப் பொருள்முதல்வாதம். மனிதனின் அடிப்படையான செயல்பாடு, உற்பத்தி என்பதுதான். மார்க்ஸ் – ஏங்கல்ஸ் வார்த்தைகளில் கூறுவதானால், ‘மனிதர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உற்பத்தி செய்யத் தொடங்கியதுதான் விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டியது’.[1] மனித சமுதாயம் தன்னை மறு உற்பத்தி செய்துகொள்ள, பொருள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அவசியமாகிறது. இந்த உற்பத்திச் செயல்பாட்டில் இயற்கையைப் பயன்படுத்துகிறோம். அதன் மூலம் அதனை மாற்றுகிறோம். பொருள் உற்பத்தியின் வழியாக நாமும் நம்மை மாற்றிக் கொள்கிறோம் என்பதும் அதேபோல் முக்கியமானது. அதன் வழியாக நாம் கற்றுக் கொள்கிறோம் என்பது மிக முக்கியமானது. மேலும், நமக்குத் தேவையான வகையில் சுற்றுப்புறத்தை ஓரளவிற்குக் கட்டுப்படுத்துகிறோம். இந்த பயிற்சியின் விளைவாகவே மனித அறிவு உருவாகிறது. உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம் நாம் வாழும் சூழல் மீது ஓரளவு ஆளுமை செலுத்த முடிகிறது. பொருள்சார் நடைமுறை செயல்பாடு மூலமாக மானுடத்தின் அறிவுக்களஞ்சியம் வளர்ச்சி பெறுகிறது.
மார்க்ஸும் ஏங்கல்ஸும் இதை, கீழ்க்கண்ட வார்த்தைகளில் குறிப்பிடுகிறார்கள்:
“வாழ்க்கை என்பதில் எல்லாவற்றிற்கும் முன்னதாக உண்ணுதல், குடித்தல், வாழ்விடம், உடையுடுத்தல் போன்ற பல விஷயங்கள் அடங்கும். முதல் வரலாற்று செயல்பாடு என்பது இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை உற்பத்தி செய்வதாகும். அதாவது, அது பௌதீக வாழ்க்கையின் உற்பத்தியே. மேலும் தனி மனிதர்கள் தங்கள் உயிர்வாழ்வை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்களோ, அதுவேதான் அவர்கள். ஆக, மனிதர்களின் இலக்கணம் அவர்கள் எதை, எதைக்கொண்டு, எவ்வாறு உற்பத்தி செய்கிறார்களோ, அதனுடன் இயைந்துள்ளது. தனி மனிதர்களின் இயல்பு இவ்வாறாக அவர்களது உற்பத்தியை நிர்ணயிக்கும் பௌதீக நிலைமைகளைப் பொறுத்து அமைகிறது.” [2]
உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தியின் சமூக உறவுகள்
நிச்சயமாக, உற்பத்தி ஒரு தனி மனிதனால், தனியாகச் செய்யப்படுவதில்லை. இது சமூகத்தில், சமூகத்தின் மூலமாகச் செய்யப்படுகிறது. அதாவது, உற்பத்தி என்பது, அவசியமாக சமூக உற்பத்தியே ஆகும். எனவே, ஒரு சமூகத்தில் உற்பத்தி என்பது, ஒருபுறம் இயற்கையுடனான உறவாகவும், மறுபுறம் சமூக உறவாகவும், இருவிதமான உறவுகளாகப் பார்க்கப்பட வேண்டும்.
உற்பத்தி, சமூக உற்பத்தியாக, பல தனி நபர்களின் ஒத்துழைப்பை உள்ளடக்கியிருப்பதால், அது எப்போதும் சமூக உறுப்பினர்களுக்கு இடையேயான சமூக உறவுகளையும் உள்ளடக்கியதாகும். எனவே சமுதாய உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி செயல்பாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர் குறிப்பிட்ட சமூக உறவு கொள்கிறார்கள்.
ஒரு மானுட சமுதாயத்தைப் பற்றிய ஆய்வில், ஒருவர் இவ்வாறாக இரண்டு அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். முதலாவது, பௌதீக வாழ்க்கைக்கான உற்பத்திமுறைகள். இவை, கடந்தகால மற்றும் சமகால நடைமுறைச் செயல்பாடுகளின் விளைவுகள். அதாவது, தத்துவார்த்த மற்றும் நடைமுறை செயல்பாடுகளால், கடந்த காலத்திலும் தற்காலத்திலும் நாம் இதுவரை பெற்ற மொத்த அறிவு மற்றும் சுற்றுச்சூழல் மீதான மனிதனின் கட்டுப்பாடு ஆகியவை காரணமாக நாம் பெற்றதாகும். இது கடந்த காலங்களில் இருந்த மற்றும் சமகாலத்தில் நிலவும் குறிப்பிடத்தக்க சமூக வடிவங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக, நாம் பரிசீலிக்க வேண்டியது சமூக உற்பத்தியில் பங்கெடுப்பதனால் சமூகத்தின் உறுப்பினர்களுக்கிடையே ஏற்படும் திட்டவட்டமான சமூக உறவுகள்.
மார்க்ஸ் முதலாவதை ‘உற்பத்தி சக்திகள்’ என்றும் இரண்டாவதை ‘உற்பத்தி உறவுகள்’ என்றும் அழைக்கிறார். தவறான புரிதலை தவிர்க்க, இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உற்பத்தி சக்திகள்’ என்பதை, நாம் ‘தொழில்நுட்பம்’ என்ற அளவில் குறுக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. மார்க்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால், ‘ ஒரு தொழில் கட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட வகை சமூக கட்டம் அல்லது ஒத்துழைப்பு வகையுடன் எப்போதும் தொடர்புடையது. மேலும், அந்தக் கூட்டுறவு வகை என்பதே உற்பத்தி சக்தியாகிறது’. (ஜெர்மானிய சித்தாந்தம், பக்கம் 121)
மனிதர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடும்போது கற்றுக் கொள்கிறார்கள்; நடைமுறை செயல்பாடுகள் மூலம் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்கிறார்கள். இதன் மூலம் சமூகம் புதிய உற்பத்தி சக்தியைப் பெறுகிறது. எந்த ஒரு சமயத்திலும், சமூகத்திலுள்ள உற்பத்தி சக்திகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் உள்ளன. இதன் விளைவாக, சமூகத்தின் உறுப்பினர்களுக்கிடையே, ஒரு குறிப்பிட்ட வடிவில் சமூக ஒத்துழைப்பு, வேலைப் பிரிவினை மற்றும் சமூக உறவுகள் நிலவுகின்றன. ‘உற்பத்தி சக்திகளின்’ வளர்ச்சி நிலைக்கு ஏற்ப, சமூக உறவுகள் என அழைக்கப்படும் ‘உற்பத்தி உறவுகள்’ நிலவுகின்றன.
எனவே, பொருள் உற்பத்தியில், நிலமும் விவசாயமும் முதன்மையாக இருந்த நிலவுடமை ஐரோப்பிய சமுதாயத்தில், நிலவுடமையாளனுக்கும் பண்ணை அடிமைக்குமான உறவே முதன்மையான உற்பத்தி உறவாக இருந்தது. நவீன முதலாளித்துவ தொழில்துறையில், கூலித் தொழிலாளிக்கும் முதலாளிக்குமான உறவே முதன்மையான உற்பத்தி உறவாக உள்ளது.
உற்பத்தி அமைப்பு
ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட கட்டத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலைக்கும், நிலவும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே ஒத்திசைவு இருந்தாலும், இந்த ஒத்திசைவு காலப்போக்கில் பலவீனமடைகிறது. இது நடந்தே தீரும். காரணம், சமூகம் வளர்வது என்பது, அதன் உற்பத்தி சக்திகள் தொடர்ந்து வளர்ச்சி அடைவதனால்தான் நிகழ்கிறது. சமூகம், தன்னை சமூக ரீதியிலும், பொருள் உற்பத்தி ரீதியிலும், மறு உற்பத்தி செய்துகொள்வது என்பது உற்பத்தி சக்திகளின் தொடர் வளர்ச்சியினால் நிகழ்வதால், சமூகத்தில், உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையே ஒரு முரண்பாடு ஏற்படுகிறது. சமூகம் தொடர்ந்து வளர்ச்சி அடையும்பொழுது, இந்த முரண்பாடு மேலும் மேலும் கூர்மை அடைகிறது. ஏனெனில், நிலவும் உற்பத்தி உறவுகளுக்கும், வளர்ந்துகொண்டே இருக்கும் உற்பத்தி சக்திகளுக்கும் இடையிலான ஒத்திசைவு, மேலும் மேலும் குறைந்துகொண்டே வருகிறது. (உற்பத்தி உறவுகள் என்பதை சுருக்கமாக சமூகத்தில் நிலவும் உற்பத்திக் கருவிகள் தொடர்பான உடமை உறவுகள் என்றும் குறிப்பிடலாம்). மேலும் மேலும் வளர்ந்து வரும் உற்பத்தி சக்திகளுக்கு, சமூகத்தின் உடமை உறவுகள் பொருந்தாதவையாக மாறிவிடுகின்றன. இந்த முரண்கள் அதிகரிக்க அதிகரிக்க, அந்த அளவு மாறுபாடு, ஒரு கட்டத்தில் பாய்ச்சலாக பண்பு மாற்றத்திற்கு இட்டுச் சென்று, அந்த வளர்ந்த சமுதாயக் கட்டத்தின் உற்பத்தி சக்திகளுக்கு பொருத்தமான புதிய உற்பத்தி உறவுகள் உருவாகின்றன. ஒரு சமூகப் புரட்சி ஏற்பட்டு, புதிய உற்பத்தி சக்திகளும், புதிய உற்பத்தி உறவுகளும் ஏற்பட வகைசெய்து, ஒரு ‘புதிய உற்பத்தி முறைக்கு‘ சமூகம் மாறுகிறது.
(இயக்கவியல் தத்துவத்திற்கு அளவு மாற்றம் தன்மை மாற்றமாக மாறுவது என்பது அவசியமான விதி.)
சமூக அமைப்பு
சமூக மாற்றத்தின் இயக்கம் குறித்த வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் கண்ணோட்டம்தான் மேலே மிக சுருக்கமாகவும், பொதுவான தன்மையிலும் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. உற்பத்தி அமைப்பு என்று நாம் குறிப்பிடுகிற கருத்தாக்கம் சரியானதுதான். எனினும், அது சுருக்கமாக முன்வைக்கப்படும் ஒரு தத்துவார்த்த கோட்பாடுதான் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். இது, வரலாற்றில் எந்த ஒரு சமூகத்தையும், அதன் உண்மையான நேரடியான பொருளில் குறிக்கவில்லை. சரியாகக் குறிப்பிடுவதென்றால், நாம் பார்க்கிற, இப்போது நடைமுறையில் உள்ள சமூகத்தை ‘சமூக அமைப்பு’ என்ற பெயரில் அழைக்கலாம். இவ்வாறான சமூக அமைப்பில் பல வகையான சமூக உற்பத்தி உறவுகள் நிலவுகின்றன; இவற்றில் சில ஒரு வகை உற்பத்தி அமைப்பினுடையதாகவும் மற்றவை வேறு உற்பத்தி அமைப்புகள் சார்ந்தும் உள்ளன.
எடுத்துக்காட்டாக, இந்திய சமூக அமைப்பில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் அவ்வமைப்பிற்கு முந்தைய உற்பத்தி அமைப்புகளுடன் சேர்ந்தே களத்தில் உள்ளன. இதில், நிலப்பிரபுத்துவ, மற்றும் அதற்கும் முந்தைய அமைப்புகளின் உற்பத்தி உறவுகள் ஆகியவை அனைத்தும் உள்ளன. உதாரணமாக, பண்டைக்கால பழங்குடி சமூக அமைப்பு உடைந்ததிலிருந்தே இந்தியாவில் சாதி அமைப்பு நிலவுகிறது. இந்திய சமூக அமைப்பின் நீண்ட கால பரிணாம வளர்ச்சியில் சமூக உறவுகளில் முக்கியமான சாதி அமைப்பு உள்ளிட்ட அனைத்து சமூக உறவுகளின் உள்ளடக்கம் இப்பொழுது கணிசமாக மாறியுள்ளது என்பதையும் உணரவேண்டும்.
பொதுவாக ஒரு நிலையான சமூக அமைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித்துவமான உற்பத்தி முறைகளின் திட்டவட்டமான கலவையாகக் கருதப்படுகிறது. ‘உற்பத்தி அமைப்பு’ மற்றும் ‘சமூக அமைப்பு’ ஆகிய கருத்துருவாக்கங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு மிக முக்கியமானது. ஒரு சமூக அமைப்பில், பல்வேறு உற்பத்தி அமைப்புகள் எவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டுள்ளன என்பது, அந்த சமூகம் வளரும்போது மாறிவிடுகிறது. எந்த திட்டவட்டமான வரலாற்று சூழலில் அச்சமூக அமைப்பை ஆய்வுக்கு உள்ளாக்குகிறோமோ, அதை வைத்துத்தான் அந்த ஒன்றிணைவின் தன்மையை நிர்ணயிக்க இயலும். முக்கியமாக, சமூக அமைப்பில் நிகழும் வர்க்கப் போராட்டத்தின் நிலைமைகள்தான் அந்த திட்டவட்டமான வரலாற்றுச் சூழலை முக்கியமாகத் தீர்மானிக்கிறது. இரண்டாவதாக, வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம், சமூக வரலாற்று வளர்ச்சியின் அகநிலை சாராத அடித்தளத்தை வலியுறுத்திய போதிலும், மாற்ற முடியாத வரலாற்று விதிகள் காரணமாக, ஒவ்வொரு மனித சமுதாயமும் ஒரே மாதிரியான வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியை கட்டாயமாக அடையவேண்டும் என்ற கருத்தை ஏற்கவில்லை.
மூன்றாவதாக, மார்க்சிய கண்ணோட்டத்தில், மனித வரலாற்றை இயக்குவது, ஒருதலைப்பட்சமாக கட்டமைக்கப்பட்ட உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான முரண்பாடு அல்ல. மாறாக, இந்த முரண்பாடு, மனிதர்களின் செயல்பாட்டினால்தான் திட்டவட்டமாக வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமாக உறுதியாக வெளிப்படுகிறது.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் வர்க்க சமூகங்களின் தோற்றமும்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நிலப்பிரபுத்துவம்’, ‘முதலாளித்துவம்’ மற்றும் ‘வர்க்கங்கள்’ போன்ற சொற்களின் உள்ளடக்க கருத்துகளில் தெளிவு தேவை.
மனித சமூக வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டங்களில் இயற்கையின் மீதான மனிதனின் கட்டுப்பாடு மிகச் சிறிய அளவே இருந்தது. உற்பத்தி சக்திகளும் மிகக் குறைந்த அளவே வளர்ச்சி பெற்றிருந்தன. அந்தக் கட்டத்தில், சமூகத்தில், மனித உழைப்பின் பொதுவான உற்பத்தித்திறன் குறைந்த அளவே இருந்திருக்கும். உழைக்கும் சக்தி உள்ள அனைத்து சமூக உறுப்பினர்களின் ஒட்டுமொத்த உழைப்பும், தொடர்ந்து உயிர் வாழும் அளவிற்குத்தான் வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய முடிந்திருக்கும். பின்னர், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் காரணமாக, ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த சமூகத்தில், மனித உழைப்பின் உற்பத்தித்திறன் உயர்ந்ததன் மூலம், அவர்களுக்கு சிறிது உழைப்பு நேரம் மிச்சமாக, உபரியாக மாறலாம். அதாவது, அதன் மூலம் அன்றைய வாழ்க்கை நிலைமைகளின் தேவையைவிட, அதிக உபரியான பொருட்களை உற்பத்தி செய்ய முடிந்திருக்கும். இத்தகைய உபரி உருவாவதால் சமூகத்தில் ஒரு சாரார் உழைக்காமல், பிறருடைய உழைப்பில் வாழும் நிலையை பெறும் வாய்ப்புள்ளது என நாம் வாதிடலாம்.
இந்த வாய்ப்பு ஒரு வர்க்க சமுதாயம் உருவாக, அதாவது ஒரு குழுவினர் பொருள் உற்பத்திக்கான சமூக அமைப்பில் தங்கள் நிலை காரணமாக, மற்றவர்களின் உழைப்பில் உருவான பொருட்களை அனுபவிக்க கூடிய சமூகப் படிநிலையை அடைய வழிவகுக்கிறது. இந்த சாத்தியக்கூறு, ஒப்பீட்டளவில் (உற்பத்தி சக்திகள் என்ற பொருளில்) மேம்பட்ட பழங்குடிகள் பிற பழங்குடிகளைக் கைப்பற்றுவதன் மூலம் வரலாற்றில் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. வர்க்க சமூகத்தின் துல்லியமான வரலாற்று தோற்றம்/தோற்றங்கள் ஒரு சிக்கலான பிரச்சனையாகும். எனவே நாம் அதற்குள் இப்பொழுது செல்ல வேண்டாம். ஆனால் நாம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, வர்க்க சமுதாயம் உருவாகும்போது, முக்கியமான மாற்றம் சொத்து உறவுகளினால்தான் ஏற்படுகிறது. அதாவது பொதுவுடமையிலிருந்து நிலம் மற்றும் உற்பத்தி சாதனங்கள் தனியுடமையாகின்றன.
இது இரண்டு விஷயங்களை நம் முன் வைக்கிறது. மனித வரலாற்றின் ஆரம்ப காலகட்டம், உற்பத்தி சக்திகளின் குறைந்த அளவிலான வளர்ச்சி மற்றும் வர்க்கமற்ற சமூகம் ஆகிய தன்மைகளைக் கொண்டிருந்தது. அந்த சமூகத்தில், யாரும் மற்றவர்களின் உழைப்பில் வாழவில்லை. பின்னாளில் உபரி தோன்றியதும், வர்க்க சமூகங்கள் தோன்றின. அதில் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள், சமூக உற்பத்தியின் செயல்பாட்டில், அவர்களது படிநிலையின் காரணமாக, மற்றவர்களின் உழைப்பில் வாழமுடிந்தது.
‘வர்க்கம்’ என்பதை சுருக்கமாகவும் எளிமையாகவும் ஒரு சமூக அமைப்பின், உற்பத்தி முறையில் ஒருவர் இருக்கும் படிநிலை என்று குறிப்பிடலாம். வர்க்க சமூகம் என்பது, வளர்ந்த சமூக வேலைப் பிரிவினையை (அடிப்படையில் உழைப்பவர்களும் உழைக்காதவர்களும் ஆன) அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகமாகக் காணப்படுகிறது. உழைக்காதவர்களுக்கும், அவர்களுக்காக உபரி உழைப்பை செலுத்துவோருக்கும் இடையிலான உறவு, ‘சுரண்டல்’ என்று மார்க்ஸால் குறிப்பிடப்படுகிறது. எனவே சுரண்டல் என்ற சொல் மார்க்ஸியத்தில் மிக தெளிவான அறிவியல் உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. ஒரு சிலர் கூறுவது போல அது தார்மீக நெறிமுறை சம்பந்தப்பட்டது அல்ல.
மேலும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, வர்க்க சமூகத்தை உருவாக்குகிறது. உற்பத்தி சாதனங்களை சொந்தமாக வைத்திருக்கும் சிறுபகுதியினர், பெரும்பகுதி மக்களின் உழைப்பை சுரண்டுவதன் மூலமே, ஒரு வர்க்க சமுதாயம் செயல்படுகிறது. எனவே, ஒரு வர்க்க சமுதாயம் உருவாகவும், மீள் உருவாக்கம் பெறவும், சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கத்தை தாம் சுரண்டப்படுவதை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துவது அவசியமாகிறது. எனவே, அரசு என்பது ஒடுக்குமுறைக் கருவியாக இருப்பது, வர்க்க சமூகங்களின் தவிர்க்க முடியாத அம்சமாகும்.
மேலும், தொடர்ந்து கட்டாயப்படுத்தி மட்டுமே சுரண்டுவது நடைமுறை சாத்தியமற்றது என்பதால், நிலவிக் கொண்டுள்ள சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சியையும், அதன் அடிப்படையிலான சமூக ஒழுங்குமுறையையும் நியாயப்படுத்துவது, ஆளும் வர்க்கங்களுக்கு அவசியமாகிறது. இந்தப் பங்கை அவர்களுடைய தத்துவம் ஆற்றுகிறது. மதம், இலக்கியம், புராணக் கதைகள், தமது வர்க்க நிலைக்கேற்றவாறு குடும்பம் மற்றும் சமூகத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப் பரப்புவதன் மூலம், அந்த தத்துவங்கள் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. உதாரணமாக, பள்ளி செல்வது என்பது வெறும் கல்வி சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல; உழைக்கும் மக்களின் குழந்தைகள் மனதில் கீழ்ப்படிதல், கேள்வி கேட்காமல் ஒப்புக் கொள்ளுதல் ஆகிய பண்புகளை குழந்தை பருவத்திலேயே வளர்ப்பதன் மூலம், பெரியவர்களான பிறகும், அவர்கள் அச்சமூக அமைப்பில் நிலவும் சுரண்டல் முறையிலான உற்பத்தி உறவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வர். மேலே விளக்கியபடி, தத்துவம் என்பது கருத்தாக்கம் மட்டுமல்ல; நடைமுறை செயல்பாடுகள் மூலமாகவும் தத்துவம் செயல்படுகிறது. உதாரணமாக, சடங்குகளைக் கூறலாம்.
வரலாற்றில் உற்பத்தி அமைப்புகள்
வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் பரந்த ஆய்வுசார் சட்டகத்தைப் பயன்படுத்தி, சமூக அமைப்புகளில் அடுத்தடுத்து ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள உற்பத்தி அமைப்புகளின் அடிப்படையில் மேற்கு ஐரோப்பிய வரலாற்றின் காலகட்டங்கள் பகுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:
- ஆதிப் பொதுவுடமை உற்பத்தி அமைப்பு – சிறிதளவு உபரி அல்லது உபரியற்ற மற்றும் வர்க்கமற்ற சமூகங்களின் நிலை;
- அடிமை உற்பத்தி அமைப்பு – வெற்றி கொண்ட குழுவிலிருந்து கிடைத்த அடிமைகளின் உழைப்பின் மூலம் கிடைக்கும் குறைந்த உபரி உற்பத்தியை பண்டமாற்றுத் தேவைக்கு ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொள்ளும் உற்பத்தி அமைப்பு
- நிலவுடைமை உற்பத்தி அமைப்பு: நிலப்பிரபுத்துவ அரை அடிமைகள் மூலம் பெறப்படும் உபரி, ஆரம்பத்தில் உழைப்பாக, பின் தொழில் வாடகை என்ற வகையில் விளைவிக்கப்பட்ட பொருளாக, இறுதியில் அதன் இறுதி காலத்தில் பண வாடகையாக வடிவம் பெறுகிறது. நிலப்பிரபுக்களின் அரசியல்-பொருளாதார ஆதிக்கம் இதன் இலக்கணம். இதன் பிரதான உற்பத்தி களம் வேளாண்மை.
- முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு: (நவீன தொழில்துறையின் எழுச்சி, மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் உற்பத்தி உறவுமுறை, முதலில் தொழில் மூலதனம் – பின்னர் நிதி மூலதனம். பிரதான உற்பத்தி உறவு: முதலாளி – கூலி தொழிலாளி (“சுதந்திரமான” தன்மை கொண்ட கூலி உழைப்பு) என்பதாகும். ‘சுதந்திர கூலி தொழிலாளி’ என்ற கருத்துருவை பொறுத்தவரையில், மார்க்ஸ் குறிப்பிடுவது போல், இவர் நிலப்பிரபுத்துவ முறையின் நிலத்தோடு பிணைக்கப்பட்ட அரை அடிமைகளுக்கு மாறாக, தோற்றத்தில் விடுதலை பெற்றவராக காணப்பட்டாலும், நிலப்பிரபுத்துவ அமைப்பில் இருந்த நிலம் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, தனது சொந்த வாழ்வாதாரத்திலிருந்து விடுதலை பெற்றதன் காரணமாக முதலாளிக்காக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டார்).
‘அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்திற்கான பங்களிப்பு’ என்ற தனது படைப்பிற்கு மார்க்ஸ் எழுதிய முன்னுரையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதியைக் கீழே காண்க:
- மனிதர்கள் தங்களுடைய வாழ்வுக்கான சமூக உற்பத்தியில் ஈடுபடும் போது தவிர்க்க முடியாத வகையில் தங்களுக்குள் திட்டவட்டமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
- இந்த உறவுகள் அவர்களுடைய விருப்பங்களுக்கு அப்பாற்பட்ட, பொருளாயத உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.
- இந்த உற்பத்தி உறவுகளின் ஒட்டுமொத்தமே, சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது.
- இந்த அடித்தளத்தின் மீது சட்ட, அரசியல் மேற்கட்டடம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.
- மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை; அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.
- வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள், இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள், அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு அல்லது – அவற்றை சட்டரீதியில் வெளிப்படுத்துகின்ற – சொத்துரிமை உறவுகளோடு மோதுகின்றன. இந்த உறவுகள், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் விலங்குகளாக மாறி விடுகின்றன.
- இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது. பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றியமைப்பதற்கு இட்டுச் செல்கின்றன.
- இப்படிப்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்யும் போது, இயற்கை அறிவியல் போன்று துல்லியமாகச் சொல்ல முடிகிற உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும், சட்டம், அரசியல், மதம், கலை அல்லது தத்துவஞான வடிவங்களுக்கும், சுருக்கமாகச் சொல்வதென்றால் மனிதர்கள் இந்த மோதலை உணர்ந்து மோதித் தீர்த்துக் கொள்ளும் சித்தாந்த வடிவங்களுக்கும், உள்ள வேறுபாட்டைக் காண்பது எப்போதுமே அவசியமாகும்.
- ஒரு நபரை, அவர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு, நாம் மதிப்பிடுவதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை, அதன் உணர்வைக் கொண்டு மதிப்பிட முடியாது. மாறாக, இந்த உணர்வு பொருளாயத வாழ்வின் முரண்பாடுகள் மூலமாக, சமூக உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான போராட்டத்தின் மூலமாக விளக்கப்பட வேண்டும்.
- எந்தச் சமூக அமைப்பும், அது போதுமானதாக இருக்கும் உற்பத்திச் சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள், தாம் நிலவுவதற்கான பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்று வட்டத்துக்குள்ளேயே முதிர்ச்சியடைவதற்கு முன்பு, பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றி விடுவதில்லை.
- எனவே, மனித குலம் தவிர்க்க முடியாதபடி, தன்னால் சாதிக்கக்கூடிய கடமைகளையே தனக்கு விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் அதிக நுணுக்கமாக ஆராயும்பொழுது, பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் ஏற்கனவே உருவாகி விட்ட பிறகு, அல்லது குறைந்தபட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான், அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது புலப்படும்.
- விரிவான உருவரையில் ஆசிய, பண்டைக்கால, நிலப்பிரபுத்துவ, நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளை, சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கும் சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம்.
- முதலாளித்துவ உற்பத்தி முறைதான் சமூக உற்பத்தி நிகழ்வில் கடைசி முரணியல் வடிவம், தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல; தனிநபர்களின் வாழ்நிலையின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியல் என்ற பொருளில்.
- ஆனால் முதலாளித்துவச் சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள், இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாயத நிலைமைகளையும் உருவாக்குகின்றன. எனவே இந்தச் சமூக படிவத்தோடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவுக்கு வருகிறது.
***
நடப்பில் உள்ள திட்டவட்டமான சமூக அமைப்பு, ஒரு உற்பத்தி அமைப்பின் ஆதிக்கத்திலிருந்து, மற்றொரு உற்பத்தி அமைப்பின் ஆதிக்கத்திற்கு மாறுவது தொடர்பான சிக்கலான பிரச்சினைகளுக்குள், நாம் செல்ல விரும்பவில்லை. ஆனால், சமூக மாற்றங்களில் முக்கியமான சக்தி என்பது, வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமே என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, “ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவத்தின் சிதைவுக்கு வழிவகுத்த மிக முக்கியமான காரணி, நிலப்பிரபுக்களுக்கும், நிலத்தில் உழைக்கும் பண்ணை அடிமைகளுக்கும் இடையிலான மோதலின் தீவிரம் ஆகும்; அதே நேரத்தில் நீண்ட தூர வர்த்தகம் மற்றும் பணம்-பண்டம் இரண்டுக்குமான உறவின் வளர்ச்சியும் முக்கியக் காரணமாக இருந்தது” என்று மாரிஸ் டாப் (Maurice Dobb) கூறுவது ஒப்புக்கொள்ளக் கூடியதாகும். ஐரோப்பிய சமூக அமைப்புகளில், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் வீழ்ச்சியிலிருந்து முதலாளித்துவ முறைக்கு மாறியது, முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு நீண்ட வரலாற்று நிகழ்வாகும். இந்த மாற்றத்தில் தீர்மானகரமான காரணியாக, வளர்ந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும், ஆளும் வர்க்கமாக இருந்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டம் இருந்ததை பிரிட்டனின் வரலாறு நிரூபிக்கிறது. (நீண்ட தூரப் போக்குவரத்தின் வளர்ச்சி – கப்பல் போக்குவரத்தில் முன்னேற்றம், இயந்திரங்கள், பெரிய நவீன தொழிற்சாலைகள், அதனுடன் இணைந்த வேலைப்பிரிவினையும் அவற்றின் ஒருங்கிணைப்பும்) உள்ளிட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, பிரிட்டனில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் ஒரு தீர்மானகரமான பங்கைக் கொண்டிருந்தது. அவர்கள் அதை முன்னேற்றங்களாகச் செய்யவில்லை; மாறாக, அது, உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகளுக்கு
இடையிலான இயக்கவியல் தொடர் செயல்முறையின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாக, அதாவது வர்க்கப் போராட்டத்தின் செயல்முறையாக நிகழ்ந்தது.
ஒருபுறம், சொந்த உழைப்பு சக்தி (வேலை செய்யும் திறன்) தவிர வேறெதுவும் இல்லாத பாட்டாளி வர்க்கமும், மறுபுறம், அந்த சொத்து இல்லாத தொழிலாளர்களைக் கூலிக்கு அமர்த்தி, அவர்கள் உழைப்பினால் உருவாக்கும் பொருட்களை விற்று, லாபம் ஈட்டுவதற்குத் தேவையான உற்பத்தி சாதனங்களை, ஏகபோகமாகத் தங்களிடம் வைத்திருக்கும் முதலாளி வர்க்கமும் இருக்க வேண்டும் என்பது, முதலாளித்துவ உற்பத்தி முறையின் முன்நிபந்தனைகளாகும். இந்த முன்நிபந்தனைகள், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் சரிவு மற்றும் சிதைவின்போது ஏற்பட்ட வர்க்கப் போராட்டங்களின் விளைவால் பூர்த்தியாயின. இவ்வாறு, உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகளுக்கு இடையிலான முரண்பாடு, சமூக மாற்றத்தின் அடிப்படை இயக்கவியல், உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்கும் வர்க்கங்களுக்கு இடையிலான இந்தப் போராட்டத்தில் உறுதியான முறையில் தன்னை வெளிப்படுத்துகிறது.
பல மார்க்சிய எழுத்தாளர்கள் உற்பத்தி சக்திகள் மற்றும் உறவுகளை ஒரு சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பு அல்லது பொருளாதார அடித்தளம் என்று விவரிக்கின்றனர். இதற்கு மாறாக, கருத்தியல், அரசியல், சட்ட மற்றும் பிற துறைகள் மேல்கட்டுமானம் என்று கூறப்படுகிறது.
சுருக்கமாக, வரலாற்று பொருள்முதல்வாதக் கண்ணோட்டம், சமூகத்தில் அரசியல், நீதித்துறை மற்றும் பிற உறவுகளை பொருளாதார அடித்தளம் தீர்மானிக்கிறது. அதாவது, கட்டமைப்பு மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்று கூறலாம். சில சமயங்களில் மேற்கட்டுமானமும் அடித்தளத்தின் மீது வினைபுரியலாம். ஆனால் அடித்தளம்தான் மேற்கட்டுமானத்தின் மீது தனது தீர்மானகரமான செல்வாக்கை செலுத்துகிறது என்பது நிச்சயமாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. கவனமாகக் கூறினால், இவை அனைத்தும் சரிதான் என்றாலும், இந்த சொற்பதங்களை தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதால் என்பதால் இவற்றை இக்குறிப்பில் தவிர்த்துள்ளோம்.
முதலாவதாக, பிரபலமான பேச்சுவழக்கில் பொருளாதாரம் என்ற சொல் பொதுப் பயன்பாட்டில் ஒரு குறுகிய பொருளைக் கொண்டுள்ளது. அதே சமயம், மார்க்சிய பயன்பாட்டில் பொருளாதார அடித்தளம் என்ற சொல், சமூக உற்பத்தியின் ஒட்டுமொத்தப் பொருள்முதல்வாத அடித்தளத்தை குறிக்கிறது. எனவே, மார்க்சின் பொருளாதாரம் என்ற வார்த்தையின் முக்கியத்துவத்தை முழுமையாக அறியாததால், பலரும் மார்க்சியம் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை “பொருளாதார நிர்ணயவாதம்” என்று தவறாக அடையாளம் காண்கிறார்கள். இரண்டாவதாக, வரலாற்றுப் பொருள்முதல்வாதம், பொருளாதார அடித்தளத்தால் சித்தாந்த மற்றும் அரசியல் மேற்கட்டுமானங்கள் எளிமையாகவும் இயந்திரத்தனமாகவும் தீர்மானிக்கப்படுகின்றன என்று
வாதிடுவதில்லை. மாறாக, கருத்தியல் மற்றும் அரசியல் துறைகள் ஓரளவு சுயேச்சையாக இயங்குகின்றன என்பதை அங்கீகரிக்கிறது. ஆனால், பொருளாதாரமே (மேலே கூறப்பட்ட விரிவான பொருளில்) இறுதியான தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது என்று மட்டுமே வாதிடுகிறது. முடிவாக, மாபெரும் சமூக மாற்றங்கள் ஏற்பட்ட காலங்களின் வரலாற்று அனுபவம் (உதாரணமாக, சோசலிசத்திற்கான சீன மாற்றம்) இந்த காலகட்டங்களில் அரசியல் மற்றும் கருத்தியல் காரணிகள் முக்கியமான பங்கை ஆற்றியுள்ளன என்பதைக் காட்டுகின்றது. எவ்வாறாயினும், வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் இன்றியமையாத கருத்துகளான – அது வலியுறுத்தும் சமூக உற்பத்தி, உற்பத்தி உறவுகள் மற்றும் வர்க்கப் போராட்டமே வரலாற்றின் உந்துசக்தி – என்பது இப்போது தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்.
சுருக்கம்
- வரலாற்றுப் பொருள்முதல்வாத (மார்க்சிய) அணுகுமுறையில், சமூகத்தை ஆய்வு செய்யும்போது, சமூக உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதில் முக்கியமாக ஆராயப்படவேண்டிய இரண்டு கருத்துகள்: உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள். உற்பத்தி சக்திகள் என்பவை வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தில் நிலவும், அதன் அறிவுசார் மற்றும் நடைமுறைசார் ஞானத்தை உள்ளடக்கிய தொழில் வளர்ச்சிக்கேற்ற, வேலைப் பிரிவினை மற்றும் சமூக ஒத்துழைப்பு வடிவங்கள், இயற்கை சக்திகள் மீதான ஆளுமை முதலியவற்றை உள்ளடக்கியது; உற்பத்தி உறவுகள் என்பது , உற்பத்திக்கான செயல்பாட்டில் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையிலான (வெவ்வேறு வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகள்) சமூக உறவுகளைக் குறிக்கிறது. இவை சட்ட வடிவில் சமூகத்தின் உடமை உறவுகளில் வெளிப்படுகின்றன.
- சமூக மாற்றத்திற்கான இயக்கசக்தி என்பது, உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகளுக்கு இடையே உள்ள உள்ளார்ந்த முரண்பாடாகும். இது சமூக உற்பத்தி அமைப்பில் வெவ்வேறு படிநிலைகளில் உள்ள சமூக வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டங்களின் வாயிலாக வெளிப்படுகிறது. முரண்பாடுகள் முற்றி சமூகப் புரட்சி நிகழ்கிறது. இச்சமூக புரட்சி, புதிய கட்டத்திற்கான உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் கொண்ட புதிய உற்பத்தி அமைப்பின் ஆதிக்கத்தை சமூகத்தில் நிலைநாட்டுகிறது.
- ஒவ்வொரு சமூக அமைப்பும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட உற்பத்தி அமைப்பின் ஆதிக்கத்தை கொண்டுள்ளது. எனவே, ஒரு சமூகத்தை ஆய்வு செய்ய, அதற்கேற்ற கருத்துருக்களை பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில், உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகளுக்கு இடையே உள்ள உள்ளார்ந்த முரண்பாட்டின் அடிப்படையில், ஒவ்வொரு சமூகமும் நிலையற்றது. இவ்வாறு மார்க்சிய அணுகுமுறை, சமூகப் பொருளாதார அமைப்புகளின் வரலாற்று் கட்டம் சார்ந்த தன்மையை வலியுறுத்துகிறது; மேலும், சமூகங்களின் ஆய்வில் வரலாற்று ரீதியாகப் பொருத்தமான குறிப்பிட்ட ஆய்வுசார் கருதுகோள்களை பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது.
- சில மார்க்சிய விளக்கங்களில், உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்தி சக்திகளின் தொகுப்பைக் குறிக்கும் பொருளாதார அடித்தளம், அரசியல் மற்றும் சித்தாந்தத்தைக் குறிக்கும் மேல்கட்டுமானத்தை தீர்மானிக்கும் என்று கூறப்பட்டாலும், ஒருவிஷயம் இங்கு வலியுறுத்தப்பட வேண்டும். பொருளாதாரம், அரசியல் மற்றும் சித்தாந்த வடிவங்களுக்கு இடையே இயந்திரகதியான தொடர்பு இல்லை. பிந்தைய இரண்டும், இறுதியில் பொருள்முதல்வாத அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்டாலும், ஒரு எல்லைக்கு உட்பட்ட தன்னாட்சியைக் கொண்டுள்ளன; மேலும் இந்த மூன்றின் சீரற்ற வளர்ச்சி சமூக முரண்பாடுகளை உருவாக்குகிறது. எனவே, மார்க்சியக் கண்ணோட்டம் சமூகத்தை ஒரு எளிய தொகுப்பாக (simple totality) கருதவில்லை. பின்னலான ஒற்றுமையாக (complex unity) பார்க்கிறது. சமூகத்திற்குள், எங்கும் நிறைந்த, எளிய ஒற்றை முரண்பாடு இல்லை. மாறாக, சமூகம், நுட்பமான பல முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த முரண்பாடுகளில் அடிப்படை பொருளாதார/ பொருள்முதல்வாத முரண்பாடே இறுதியில் தீர்மானகரமான சக்தியாக உள்ளது. இங்கு இன்னும் ஒரு விஷயத்தை குறிப்பிடலாம். மார்க்சிய புரிதலில் “சித்தாந்தம்” என்பது வெறுமனே ஒரு கருத்துக்களின் தொகுப்போ அல்லது ஒரு கருத்தியல் அணுகுமுறையோ மட்டும் இல்லை. சித்தாந்த ஆதிக்கத்தை நிலைநாட்ட மரபுகளும் சடங்குகளும் மக்கள் மீது திணிக்கப்படுவதையும் பயன்படுத்தப்படுவதையும் நாம் நன்கு அறிவோம்.
- மேலே தரப்பட்டுள்ள தத்துவ விளக்கங்கள் மட்டுமே எந்த வகையிலும் ஒரு வரலாற்றுத் தருணத்தை பற்றிய குறிப்பிட்ட கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளிக்க நமக்கு உதவாது. அதைச் செய்ய கவனமான, தரவுகள் அடிப்படையிலான, ஆய்வு தேவை. வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் ஆய்வுமுறையும், அணுகுமுறையும், வரலாற்று ரீதியாக குறிப்பிட்ட கருத்துருக்களை பயன்படுத்துவதன் மூலம், திட்டவட்டமான யதார்த்தத்தை புரிந்துகொள்ள உதவுகின்றன. ஸ்தூலமான நடைமுறை உண்மை நிலைமையை சிந்தனை மூலம் மறுகட்டமைப்பு செய்வது, ஏகப்பட்ட எண்ணற்ற விவரங்களை தன்னகத்தே கொண்டு பெரும் குழப்பமாக காட்சியளிக்கும் திட்டவட்டமான யதார்த்தத்தை, அதன் உடனடி தோற்றத்திற்கு கீழே சென்று புரிந்து கொள்ள உதவும். எவ்வாறாயினும், அந்த யதார்த்தத்தை மாற்ற, அத்தகைய தத்துவார்த்த புரிதல் கட்டாயத் தேவை. ஆனால், அதுவே போதுமானதல்ல. இவ்வாறு தத்துவார்த்த அடிப்படையில் யதார்த்தத்தை புரிந்துகொண்டபின், அப்புரிதலின் அடிப்படையில் நாம் மேற்கொள்ளும் பொருத்தமான நடைமுறைச் செயல்பாட்டின் மூலம்தான் யதார்த்தத்தை உரிய வகையில் மாற்ற முடியும். அத்தகைய சமூக மாற்றத்திற்குத் தேவையான மற்றும் போதுமான நிபந்தனை, கோட்பாடு மற்றும் நடைமுறையின் ஒற்றுமை, என்பது மார்க்சியத்தின் தவிர்க்க முடியாத வரையறை ஆகும்.
தமிழில்:
தோழர்கள் வெங்கடேஷ் ஆத்ரேயா,
சேலம் சோபனா
[1] மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ், ஜெர்மானிய சித்தாந்தம், பக்கம் 114
[2] மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ், ஜெர்மானிய சித்தாந்தம், பக்கம் 120
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
