நாடாளுமன்றம் என்ற களத்தில்..
டி. கே. ரங்கராஜன்
(தோழர் டி.கே. ரங்கராஜன் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த ‘தொடர் ஓட்டம்’ என்ற நூலில் இருந்து சில பகுதிகள்)
நிதித்துறைக்கான குழுவும் பணமதிப்பு நீக்கமும்
இந்தக் குழுவில் இருக்கும்போது பணமதிப்பு நீக்கம் பற்றிய பிரச்சனை வந்தது. இது பற்றி விவரங்களை அறிய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்களாக இருந்த ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், சக்திகாந்த தாஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் தவிர வங்கியாளர்கள் சங்க (Bankers Association) நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்தோம். எவரும் இது பற்றி தங்களுக்குத் தெரியும் என்றோ தங்களுடன் விவாதிக்கப்பட்டதாகவோ கூறவில்லை. அமைச்சர்கள் கூட தேநீர் விருந்துக்கு என்று அழைக்கப்பட்டதாகவும் அங்கே தான் பிரதமர் டிவியில் பேசப் போகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தக் குழுவில் உர்ஜித் படேலிடம் கேள்விகள் கேட்டபோது அவரைப் பேசவிடாமல் மன்மோகன் சிங் தடுத்ததோடு, கூட்டத்தையும் முடிக்கச் சொல்லிவிட்டார். குழுவின் தலைவராக இருந்த வீரப்ப மொய்லியும் அப்படியே செய்துவிட்டார். இதுதான் ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் அதிகார வர்க்கப் போக்கு என்பது.
பாதுகாப்புத்துறை நாடாளுமன்றக்குழு அனுபவங்கள்
பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித்துறை 200 வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்திடம்தான் இருந்தது. இதற்கொரு காரணம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவோர் ஆயுதங்களை எடுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதுதான். பிரிட்டனில் இது தனியாரிடம் இருந்தது என்பதை கவனித்தால் இது புரியும். நாடு விடுதலை அடைந்தபின் பாதுகாப்புத் துறைக்கான தொழிற்சாலைகளில் 80 சதவீதம் அரசாங்கத்திடம்தான் இருந்தது. இப்போது இதில் தனியாரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு நேரடி முதலீடும் வரலாம் என்று மோடி அரசு கூறிவிட்டது.
டாடா நுழைந்துவிட்டது, ரிலையன்ஸ் வந்துவிட்டது, மஹிந்திரா புகுந்திருக்கிறது, கல்யாண் குழுமம் நுழைந்திருக்கிறது, எல் அண்ட் டி வந்துவிட்டது – இவர்கள் 100 சதவீதம் முதலீடு செய்யலாம். இப்படிப்பட்ட நடவடிக்கை ஆசியா கண்டத்திலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஆயுதப் போட்டியை உருவாக்கும். இது அத்துடன் நிற்காது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி வரும்; இந்தியாவுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் போட்டி வரும்.
பாதுகாப்புத்துறையில் தனியார் மயம் என்பது காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கியது. ஆனால் அதனை ஓரளவு தடுத்து நிறுத்த முடிந்தது. இப்போது ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவான பிஜேபி ஆட்சி முழுபலத்துடன் இருப்பதால் எதையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக செயல்படுத்துகிறது.
இதன் பொருள் என்னவென்றால் ஆயுதங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதாகும். அதாவது சமாதான சக வாழ்வு என்ற கோட்பாட்டிலிருந்து இந்தியா வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது என்பது பொருள். ஆயுதங்களின் அதிகப்படியான உற்பத்தி என்பது சந்தையைத் தேடுவதாக – அவற்றுக்கான தளங்களை அமைப்பதாக – மாறிவிடும். இது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் வலியுறுத்தியும் வருகிறோம்.
ஒழுங்கைக் குலைப்பதும் நியாயம்தான்
ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்காக மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் உறுப்பினர் என்ற பெருமை தோழர் அனந்தன் நம்பியாருக்கு உண்டு. நம்பியார் நடந்து கொண்ட விதத்தை எஸ்.ஏ.டாங்கே கண்டித்தார். ஆனால் சுந்தரய்யா வரவேற்றார். ஒரே கட்சிதான் என்றாலும் நாடாளுமன்ற அமைப்பைப் பற்றிய இருவித அணுகுமுறை இருந்துள்ளது. நாடாளுமன்றத்திற்குள் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை, அவற்றை வகுத்தவர்களின் நோக்கத்திற்கு சார்பானவையாகவே இருக்கும். பொதுவான ஒழுங்கு என்பது வேறு. ஒழுங்காகத்தான் இருக்க வேண்டும்; அல்லது விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு ஒழுங்காகத்தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் ஆளும் வர்க்கம் விதிகள் வகுப்பது வேறு. ஆளும் வர்க்கம் அத்துமீறுமானால் ஒழுங்கைக் குலைப்பதுதானே நியாயம்! இதைத்தான் நம்பியார் செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன்.
நாடாளுமன்றத்தை முடக்குவது அரசுதான்; எதிர்க்கட்சிகள் அல்ல
எனக்கு இன்னொரு சிக்கலை ஏற்படுத்தியது கொறடாக்கள் மாநாடு. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். நான் விசாகப்பட்டினம், கோவா மாநாடுகளில் கலந்துகொண்டேன். கோவா மாநாட்டில் என்ன நடந்ததென்றால் இரவு ஒரு மணிக்கு அறைக் கதவைத் தட்டி ஒரு தீர்மான நகலைக் கொடுத்து காலையில் இதை நீங்கள்தான் முன்மொழியவேண்டும் என்கிறார்கள்.
அதில் என்ன இருக்கிறதென்றால் அவையில் முறைகேடாக நடந்தால் உறுப்பினரின் ஊதியத்தை வெட்டலாம் என்றுள்ளது. இது கருத்துரிமைப்பறிப்பு; ஜனநாயக உரிமை பறிப்பு. நம்ம கையை எடுத்து நம் கண்ணையே குத்தச் சொல்வது போன்றதாக தீர்மான வாசகம் இருந்தது. இது பிஜேபி அரசின் தந்திரம். நிகழ்ச்சி நிரல் முன் கூட்டியே தயாரிக்கப்படுவதால் முன்மொழியாமல் இருக்க முடியாது. தீர்மானத்தை வாசித்துவிட்டேன்.
வாசித்து முடித்த உடனேயே இந்தத் தீர்மானத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அதிரடியாக அறிவித்துவிட்டேன். சட்டம் இயற்றும் பொறுப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை இது அத்தக் கூலிபோல், தற்காலிகத் தொழிலாளிபோல் நடத்த நினைக்கிறது அரசு. அதனை நான் ஏற்கமாட்டேன்; நீங்களும் ஏற்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்றேன்.
எனது கலகம் கூட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பிரச்சனை ஏன் உருவாகிறது, உருவாகும் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வுகாண்பது என்று சிந்திப்பதற்கு பதிலாகத் தண்டனை விதிப்பது என அச்சுறுத்தி உறுப்பினர்களின் குரல் வளையை நெறிக்கவே ஆட்சியில் அமர்வோர் நினைக்கிறார்கள். எந்தக் காலத்திலும் இந்த நினைப்பு வெற்றி பெற்றதில்லை.
நாடாளுமன்றம் முறையாக நடக்கவில்லை; எதிர்க்கட்சிகள் நடத்த விடுவதில்லை என்று யார் ஆட்சி செய்தாலும் குறை கூறுவது வழக்கமாகிவிட்டது. இதற்குள் ஒளிந்திருக்கும் உண்மை என்னவென்றால், விவாதத்திற்கோ, வெளிப்படையாக மக்களிடம் உண்மைகளை உரைப்பதற்கோ, உண்மையான அரசியல் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ள உதவுவதற்கோ எவரும் தயாராக இல்லை என்பதுதான்.
நாடாளுமன்ற அமளி பற்றி பேசும் பிஜேபி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் என்ன செய்தது? ஒரு சின்ன உதாரணம் மட்டும்.
இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே நதிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டு அதன் பாதை சம்பந்தமாக இந்திய வரைபடத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா. இதற்கு விவாதம் கூட தேவையில்லை. ஆனால் அசாம் மாநில எம்பிக்கள் எதிர்த்துக் குரலெழுப்புகிறார்கள். பிஜேபி உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவாக முழக்கமிடுகின்றனர். அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்தவர் சல்மான் குர்ஷித்.
பிரச்சனை இவ்வளவு பெரிதாகிறதே. இந்தியாவுக்கோ அசாமின் எல்லைப்புறப் பகுதிகளுக்கோ ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று கேட்டேன். அதெல்லாம் ஒன்றுமில்லை. வரைபடத்தில் திருத்தம் செய்வது மட்டும்தான் என்றார். இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்த பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மசோதாவை எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றிவிட்டது. காரணம் அசாம் மாநிலக் கட்சிகளுடன் பிஜேபி கூட்டணியில் இருந்தது.
இப்படிப்பட்ட அப்பட்டமான அரசியல் காரணங்களாலும் செயல்பாடு முடங்கும். உண்மை என்ன என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல விமர்சனக் கண்ணோட்ட இதழ்களோ, அமைப்புகளோ பரவலாக இல்லை. செய்தி ஊடகங்கள் பரபரப்பு செய்திகளோடு நின்று விடுகின்றன. நாடாளுமன்ற நடவடிக்கைகளின் உண்மை பற்றிய ஆய்வுகளோ நூல்களோ கூட தமிழில் வருவதில்லை. ஒரு சில தலைவர்களின் உரைகள் தொகுப்புகளாக வருகின்றன. நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய கண்ணோட்டத்தை உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும்; அதை உள்வாங்க மக்களும் தயாராக வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது குறைந்தபட்சக் கடமையையாவது நிறைவேற்ற முன்வரும்.
மகளிர் இடஒதுக்கீடும் வாக்கெடுப்பும்
குடியரசுத் தலைவராக ஐந்து ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றிருக்கும் திரு ராம் நாத் கோவிந்த் அவர்கள் கூட்டுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை ஒன்றுக்குத் திருத்தம் அளிக்கப்பட்டிருந்தது.
அவரது உரையில் நாம் எதிர்பார்ப்பது இல்லையென்றால் அதைச் சேர்க்க வேண்டும் என்று திருத்தம் கொடுக்கலாம். அதன்படி நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய அம்சம் உரையில் இடம் பெறவேண்டும் என்று திருத்தம் கொடுத்திருந்தேன். ஏராளமான திருத்தங்களில் இதுவும் ஒன்று என்று ஆளும் தரப்பினர் அக்கறை செலுத்தவில்லை.
ஆனால் மகளிர் இடஒதுக்கீட்டைத் தொடர்ந்து வலியுறுத்தும் நாம் இதனை வலியுறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தோம். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது சில நாட்கள் விவாதம் நடைபெறும். பின்னர் இந்த விவாதத்திற்குப் பிரதமர் பதிலளிப்பார். இதைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும். திருத்தங்கள் கொடுத்தவர்கள் வலியுறுத்துகிறார்களா என்று கேட்கப்படும். பெரும்பாலோர் இல்லையென்று கூறிவிடுவார்கள். பிறகு குரல் வாக்கெடுப்பு நடத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறியதாக முடிப்பது வழக்கம்; மரபு.
இந்த வழக்கம், மரபுக்கெல்லாம் மாறாக நான் (சிபிஐஎம் சார்பில்) கொடுத்த திருத்தம் வந்தபோது வலியுறுத்துவதாகக் கூறினேன். அவையே பரபரப்பாகிவிட்டது. அருண்ஜெட்லி உட்பட பல அமைச்சர்கள் என் அருகே வந்து திருத்தத்தை வலியுறுத்த வேண்டாம் என்று வலியுறுத்துகிறார்கள். நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.
டிவிஷன் கோருகிறீர்களா என்று அவைத்தலைவர் கேட்கிறார். டிவிஷன் என்றால் வாக்கெடுப்பு. ஆம் கோருகிறேன் என்று கூறினேன்.
இந்த வாக்கெடுப்பில் திருத்தத்திற்கு ஆதரவாக 52 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் கிடைத்தன. தீர்மானம் தோல்வியடைந்தது. தோற்கும் என்று தெரிந்தேதான் வாக்கெடுப்பை வலியுறுத்தினோம். காரணம், மகளிர் இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆர்எஸ்எஸ்-பிஜேபி எதிரானது என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என்பதுதான். இதனைக் குரல் வாக்கெடுப்புக்கு விட்டால் அது அவைக்குறிப்பில் இடம்பெறாது. நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது என்று முடித்துவிடுவார்கள். அதுதான் அவர்கள் விருப்பமும். ஆனால் நமது கொள்கை நிலைபாட்டை உலகறியச் செய்யவேண்டும். அது அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும். வரலாற்றுப் பதிவாக மாறவேண்டும் என்பதற்காகத்தான் வாக்கெடுப்பு கோரினோம். நமது நோக்கம் நிறைவேறியது.
நாடாளுமன்றத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதனை உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். நமது கொள்கை நிலையைப் பதிவு செய்ய அதை நாம் பயன்படுத்த வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
