தொழில் முதலீடுகளின் வருகையும் – உண்மை நிலையும்
எஸ். கண்ணன்
மூலதனத்தை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு பயணம் பெரும் பேசுபொருளாக உள்ளது. அதற்காக முதலீட்டாளர் மாநாடு அல்லது மேக் இன் இந்தியா போன்ற பெரும் பொருள் செலவில் விழாக்கள் அவசியம் போன்ற சொல்லாடல்கள் தீவிரம் பெறுவதும் நடைபெறுகிறது. அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் மாநில அரசுகளுக்கு இடையிலான போட்டியை உருவாக்குவது, ஒன்றிய அரசின் செயல்களில் ஒன்றாக உள்ளது. இவை தாராளமய கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. பாஜக ஆட்சி தொழிலாளர் சட்டங்களை திருத்தி 4 சட்டத் தொகுப்புகளாக சுருக்கியும், உரிமைகளை பறித்தும் வெளியிட்டுள்ளது. இதை முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளில், மிக முக்கிய உத்தியாக பெருமை பேசவும் செய்கிறது.
முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச்சாளர முறை, வரி செலுத்துவதில் சில சலுகைகாலம், மின்சாரம், உள்கட்டமைப்பு போன்றவை உறுதி செய்வது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பிரதிபலிக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழில் துவங்க வருவோர், தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகள் போனஸ் வழங்க வேண்டியதில்லை என்ற வாக்குறுதிகளும் உள்ளது. இவை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை, பாதித்தது. பாஜக ஆட்சியாளர்களின், 2020ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டத்திருத்தம் முதலீட்டாளர்களின் லாபத்தை உறுதி செய்ய வழங்கப்படுவது மட்டுமல்ல. தொழிலாளர் உரிமைகளை பறிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் லைசன்ஸ் ஆகும். இது ஜனநாயக வளர்ச்சியில் இந்தியா பின்னோக்கி செல்கிறது என்பதற்கான அப்பட்டமான வெளிப்பாடு என்பதே முக்கியமானது.
வகுப்பு வாதமும், ஏகபோகமும் ஒரு சேர வளர்ந்தால்
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் கால் வைத்து நெறித்துக் கொல்லும் கொலை எப்படி விமர்சிக்கப்பட்டதோ, அது போல் விமர்சிக்கப் பட வேண்டியது, தொழிலாளர் உரிமை பறிப்புகள். ”கருப்பு இன மக்களின் வாழ்வு பிரச்சனையே”, ”என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்பது எப்படி பெரும் குரலாக உலக மக்களை ஆக்கிரமித்ததோ, அது போல் ஆக்கிரமிக்க வேண்டிய முழக்கமாக, ”தொழிலாளர்கள் வாழ்வும் பிரச்சனையே” ”பெண் தொழிலாளர் வாழ்வு கூடுதல் பிரச்சனையே”, ”புலம்பெயர் தொழிலாளர் வாழ்வு மேலும் கூடுதல் பிரச்சனையே”, காண்ட்ராக்ட், பயிற்சித் தொழிலாளர்கள் வாழ்வு மேலும் மேலும் கூடுதல் பிரச்சனையே என்பதுதான் இன்றைய யதார்த்த நிலையாக உள்ளது.
சுரண்டலுக்கும், மூலதன குவிப்பிற்கும் இத்தகைய தேவைகள் இருக்கிறது. இதற்கு ஆட்சியாளர்கள் பாதை அமைத்து கொடுப்பதை, தாராளமய கொள்கைகள் நிர்பந்திக்கின்றன. வகுப்புவாத வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகிற பாஜக, தொழிலாளர் ஒற்றுமையை சிதைத்து, மேற்படி சுரண்டலுக்கான வசதியை உறுதி செய்கிறது. வகுப்புவாதத்தை எதிர்க்கும், ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள் வகுப்புவாதத்தை மட்டும் எதிர்த்தால் போதுமானது என்ற கொள்கையுடன் செயல்படுகின்றன.
அமெரிக்காவின் வளர்ச்சி கட்டமைப்பு ரீதியில் குறைவானதல்ல. ஆனால் அங்கு ஜார்ஜ் பிளாய்டு போன்ற மரணங்கள் அல்லது கொலைகள் நடக்கின்றன. அமேசான் அல்லது ஸ்டார் பக்ஸ் போன்ற நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைப்பது பிரச்சனையாக உள்ளது. மேற்படி இரண்டு உண்மைகளும் சில தெளிவை உருவாக்குகின்றன. தோற்றத்தில், உள்கட்டமைப்பில் வளர்ச்சி பெறும் நாடுகளில் இன்னும் மனித உரிமை மீறல், இனத்தின் பெயரிலும், நிறத்தின் பெயரிலும் உள்ளது. மற்றொன்று ஏகபோக நிறுவனங்கள் வளர்ச்சி பெறும் நாடுகளில், அந்த ஏகபோக நிறுவனத்தில் தொழிலாளர்கள் சங்கம் வைப்பதும், உரிமை கோருவதும் பிரச்சனை ஆகும்.
இதை இந்தியாவிலும் காண முடியும். தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களான, குஜராத், மகாராஷ்ட்ரா, மேற்கு உத்திர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா ஆகியவற்றில், மதம், இனம், மொழி ஆகிய பெயர்களில் மோதல்களும், கலவரங்களும் நடைபெறுகிறது. அது கொலைகளுக்கு இட்டு செல்கிறது. அதேநேரம், இந்திய பெரு முதலாளிகளின் நிறுவனங்களான, ரிலையன்ஸ், அதானி குழும நிறுவனங்கள், டாடா குழும நிறுவனங்கள், பஜாஜ், மஹேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களில் தொழிற்சங்கம் இல்லை. அமைப்பதும் எளிதான நிகழ்வாக இல்லை. அதேநேரம் மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள சில பன்னாட்டு ஆலைகளில் தொழிற்சங்கம் வைக்கவும், கூட்டு பேர உரிமையை நிலைநாட்டவும் முடிந்துள்ளது.
தமிழ்நாடு இதில் விதிவிலக்காக உள்ளதா என்பதை விவாதித்தால், ஒரு சிலவற்றில் காண முடிகிறது. ஒப்பீட்டு அளவில் கூட்டுபேர உரிமை மூலமான ஒப்பந்தங்கள் ஏற்படுவதில் முன்னேற்றம் உள்ளது. ஆனாலும் பெரும்பான்மை தொழிலாளர்கள் இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர். குறிப்பாக சென்னை, சென்னை புறநகர், கோவை, ஓசூர், சேலம், ஈரோடு, திருச்சி, தூத்துக்குடி, கடலூர் ஆகியவை குறிப்பிடத்தக்க தொழிற்வளர்ச்சி கொண்ட பகுதிகளாக உள்ளன. இங்கு அண்மைக் காலங்களில் உள்நாட்டு பெரும் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைப்பது பெரும் நெருக்கடியை சந்திக்கிறது. டி.வி.எஸ் குழுமத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை இருந்தாலும், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனமாக உள்ளது. சன் குழுமம், ராம்கோ உள்ளிட்ட நிறுவனங்களிலும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைகளை காண முடிவதில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் மதம், இனம் ஆகியவை தொழிலாளர் மத்தியில் வேறுபாடுகளை உருவாக்கவில்லை என்றாலும், சாதி உணர்வு குறித்த புகைச்சல் இருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர் மீது வெறுப்பை விசிறும் முயற்சிகள் தொடர்கிறது.
விடுதலைக்கு பின் சிம்சன், டி.வி.எஸ் போன்ற நிறுவனங்களிலும், கோவை, மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் பஞ்சாலைகளிலும், திருச்சி மாநகரில் தொழிற்சங்க உரிமைக்காக நடந்த பெரும் தொழிலாளர் போராட்டங்கள் தொழிற்சங்க உரிமைகளை சற்று வலுப்படுத்துவதாக இருந்தது. ஆனாலும் பஞ்சாலைகள் இன்று என்ன நிலையில் உள்ளன?. தொழில் மற்றும் உற்பத்தி ஆகியவை இருக்கிறது. ஆனால் சங்க உரிமை கொண்ட நிரந்தர தொழிலாளர்கள் இல்லை. மாறாக 2000ஆம் ஆண்டு முதல் 2015 வரை டெல்டா முதல் கொங்கு வரை என இருந்த புலம்பெயர்தல், தற்போது ஹவுரா முதல் கொங்கு வரையாக புலம்பெயர்தல் எல்லை நீடித்திருக்கிறது. அதாவது முதலாளித்துவம் புதிய வடிவங்களில் தனது சுரண்டலைத் தக்க வைத்து கொள்கிறது. இந்த பின்னணியில் வலுவான தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டுவதே, ஜனநாயக வளர்ச்சியை உறுதி செய்யும்.
கம்யூனிசத்தின் கோட்பாடுகள் குறித்து ஏங்கெல்ஸ் எழுதியது முக்கியமானது. “பெருவீதத் தொழிற் துறையை நிறுவுவதற்கு கட்டற்ற போட்டி அவசியம். பெருவீத தொழிற்துறையின் வளர்ச்சிக்கு அத்தகைய சமுதாய நிலை அவசியம். முதலாளித்துவ வர்க்கமானது, பிரபுகுலத்தார், கைவினை குழும எஜமானர் ஆகியோரின் சமூக அதிகாரத்தை அழித்த பின் அவர்களுடைய அரசியல் அதிகாரத்தையும் அழித்தொழித்தது. சட்டத்தின் முன், முதலாளித்துவம் அனைவருக்கும் கட்டற்ற போட்டிக்கான அங்கீகாரத்தை நிறுவியதன் மூலம் இதை சாதித்தது”, எனக் குறிப்பிடுகிறார். இது இன்றைய தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தும் கவலையை பிரதிபலிக்கிறது. இந்தியா போன்ற நாட்டில், முதலாளிகளுக்கு இடையிலான போட்டி ஒருபுறம் என்றால், தொழிலாளர்களுக்கு இடையிலும் போட்டியை பலப்படுத்துகிறது. தகுதி அடிப்படையில் மட்டுமல்லாது, அடையாளங்களின் பெயரிலும் போட்டியை உருவாக்கி, தனது லாபத்தை உறுதி செய்கிறது மூலதனம்.
வேலை வாய்ப்பற்ற வளர்ச்சியா? வேலை இழப்பு வளர்ச்சியா?
நம்முடைய ஆட்சியாளர்கள் உற்பத்தி அளவு, ஏற்றுமதி அளவு ஆகியவை மூலமான வரவுகளை கொண்டு, வளர்ச்சியை அளவீடு செய்கின்றனர். ஆனால், கடந்த காலத்தை விடவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து உற்பத்தி அதிகமாவது, லாபத்தை அதிகப்படுத்தி, தொழிலாளர்களுக்கு செலவிடப்படும் ஊதிய அளவு குறைகிறது. இது சந்தையில் நுகர்வு விகிதத்தை குறைக்கும் என்பதை, பாமரரும் விளக்க முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாடு, உற்பத்தி செலவில் தொழிலாளர் ஊதியத்தின் விகிதம் படிப்படியாக, இந்தியாவில் குறைந்து வருவது குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. 1990ஆம் ஆண்டுகளில் ஊதிய விகிதம், 30 சதம் எனவும், 2000ஆம் ஆண்டுவாக்கில் அது 20 சதமாக குறைந்தது, பின்னர் 2010ஆம் ஆண்டுகளில் அது 10 சதமாக சரிந்தது. அண்மையில் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் மனிதவள அதிகாரியிடம் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் வெளிப்பட்ட உண்மை பெரும் அதிர்ச்சியை அளித்தது. அதாவது 7 சதம் மட்டுமே தொழிலாளரின் ஊதியத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறியதே அதிர்ச்சிக்கு காரணம்.
ஊதியத்திற்கான ஒதுக்கீடுக்குள் நிறுவனத்தின் அதிகாரிகளின் ஊதியமும் உள்ளடங்கும். மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு ஊதியத்தில், அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ளது. ஆனாலும், தொழிலாளர்களுக்கான ஊதிய தேவைக்காக, நிதி ஒதுக்கீடு குறைவான அளவில் இருப்பது, மூலதன அதிகரிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதன் விளைவுதான், அதானிக்கு 750 சதம் சொத்து மதிப்பும், அம்பானிக்கு 350 சதமும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் மேல்தட்டில் உள்ள 10 நபர்களிடம் 57 சதமான சொத்தும், கீழ்தட்டில் உள்ள 50 சதமானோரிடம் 13 சதம் சொத்தும் உள்ளதாக ஆக்ஸ்பேம் அறிக்கை 2021இல் கூறியுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிப்பதற்குக் காரணம், வேலைவாய்ப்பிலும், உற்பத்தி துறையிலும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகும். வளர்ச்சி என்ற மாய வார்த்தைக்குள் சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும் கூட சிக்கியுள்ளது.
வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி குறித்த வாதம் 2000ஆம் ஆண்டுக் காலத்தில் சர்ச்சைக்கு ஆளானது. வாஜ்பாய் ஆட்சிக்காலம். இந்த காலத்தில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருந்த காலம். முதலீடுகள் வந்தது; ஆனால் அவை வேலைவாய்ப்பை உயர்த்தவில்லை. புதிய பங்கு விற்பனைகள் மூலம் அந்நிய முதலீடுகள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தன. மற்றபடி வேலைவாய்ப்புகளை இந்த முதலீடுகள் உருவாக்கவில்லை. அதே காலத்தில் அரசுகள் வேலை நியமனத் தடைச்சட்டங்களை அமலாக்கி வேலைவாய்ப்பு சந்தையை முடமாக்கியது. வங்கி ஊழியர்களுக்கான தேர்வுகள் நடத்தும் வாரியத்தை கலைத்தது. இந்த காலம் வேலை வாய்ப்பற்ற வளர்ச்சிக் காலமாக இருந்தது. அதாவது, பொருளாதார புள்ளி விவரங்களில் முன்னேற்றமும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பூஜ்ஜியமாகவும் இருந்தது.
மற்றொரு வளர்ச்சி இன்று முதலாளித்துவத்திற்கு பெருமளவில் பயன்படுவது. வேலை இழப்பு வளர்ச்சி. செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே ரோபோக்களும், தானியங்கி முறைகளும் உற்பத்தி துறையில் ஆதிக்கம் செய்து வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் கூடுதல் தாக்கத்தை வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுத்தும். ஒருபுறம் வேலை இழப்பையும், மறுபுறம் வேலையின்மை எண்ணிக்கையை பெருக்கவும் உதவும். இதன் காரணமாக, கூலி விகிதம் மேலும் குறையும். கடந்த 30 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் இந்திய உழைக்கும் மக்கள் மீதும், வேலையற்ற இளைஞர்கள் மீதும் செயல்படுத்தி வரும் தாக்கம் இதுதான்.
அந்நிய நேரடி மூலதனம் ஏன் வருகிறது?
நமக்கு வேலை, அவருக்கு மூலதன விரிவாக்கம் என்று மிகச் சாதாரண உரையாடலில், கடந்து செல்லும் நிகழ்வு அல்ல, அந்நிய முதலீடுகளின் வருகை. மூலதன விரிவாக்கத்திற்கு உதவும், உபரி உழைப்பு முதலாளித்துவத்திற்கு தேவைப்படுகிறது. அந்த உபரி உழைப்பு, அதிக உற்பத்தி திறன், உற்பத்தி அளவீடு ஆகிய கணக்கீடுகளைக் கொண்டதாகவும் உள்ளது. தொழில்நுட்பத் திறன் அதிகரித்து வரும் நாடுகள் இதற்கு இலக்காகின்றன. இந்த நாடுகளில் வேலைதேடுவோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. எனவே கூலி விகிதமும் குறைவாக இருப்பதால், இரு மடங்கு அளவில், மூலதன விரிவாக்கத்திற்கு உதவி செய்கிறது. எனவே மேலே கூறிய செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் வேலைவாய்ப்பை பறித்தாலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் செய்கிறது. இது முரணான ஒன்று அல்ல. மாறாக, தொழில்நுட்ப வளர்ச்சியை முதலாளித்துவம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது என்பது கவனிக்கத் தக்கது.
அடுத்த ஒரு விவரம் மேலே நாம் விவாதித்ததை உறுதி செய்கிறது. ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி அதிகம் உள்ள மாநிலங்களில், அதிக அந்நிய முதலீடுகளைக் காண முடிகிறது. முதலீடுகளை ஈர்க்க உள்கட்டமைப்புகளை உருவாக்குகிறோம் என்ற வாதத்தில் சாலைகள், இதர வசதிகளுக்கு முன் கல்வி புலமும் உள்ளதை மறுக்க முடியாது. அதேபோல் அந்நிய முதலீடு உபரிமதிப்பை விரிவாக்கம் செய்து கொள்ள இந்தியா போன்ற நாடுகளை நாடுகிறது என்பதற்கு நாம் கூடுதலாக சில உதாரணங்களை காண முடியும்.
கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில், நாடுகளுக்கு இடையிலான கூலி வேறுபாடுகள் குறித்து விவாதிக்கிறார். உழைப்பு சக்தியின் மதிப்பின் மாறுபாடு, அவசிய பண்டங்களின் விலை, தொழிலாளர்களை பயிற்றுவிக்க ஆகும் செலவு, உழைப்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் வகிக்கும் பாத்திரம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகிறது. உழைப்பின் மும்முரம் நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது. ஒருநாட்டில் உழைப்பின் மும்முரம் அதிகமாக இருக்குமானால், அவ்வளவு மும்முரம் இல்லாத இன்னொரு நாட்டுடன் ஒப்பிடுகையில், அது அதிக மதிப்பை உற்பத்தி செய்கிறது என்கிறார் மார்க்ஸ். இது இன்றைய இந்தியாவில் முதலீடு செய்து வரும் அந்நிய நேரடி முதலீட்டு துறைகளான, தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் காண முடியும். அதிகமான உற்பத்தி மதிப்பை அளிக்கும், குறைவான கூலியை பெறும் நிலை ஆகியவை பிரதிபலிப்பதையும் காணமுடியும்.
இதை மற்றும் ஒரு விளக்கத்தில் இருந்து கூடுதலாக புரிந்து கொள்ள முடியும். இன்று அவுட் சோர்சிங் மிக அதிகமாக காணப்படுகிறது. அதாவது உற்பத்தியை பெருக்குவது, பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்து, குறைவான செலவில் வருவாய் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது. உற்பத்தி துறையில் டையர் 1, டையர் 2 ஆகிய உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. இது துணை தொழில்களையும், ஏகபோகமற்ற நிலையையும் உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, உற்பத்தி செலவை, தனக்கு கீழான உற்பத்தியாளர் மூலம் குறைக்கும் நோக்கம் கொண்டது. தற்போது தமிழக முதல்வரின் ஜப்பான் பயணம் மேற்படி உதிரிபாக உற்பத்தி சார்ந்ததே அதிகம். இதன் முதலீடு அளவிலும், வேலை வாய்ப்பின் அளவிலும் குறைவாக இருக்கும். இங்கு முதலீட்டின் அளவை விடவும், கூலியை குறைக்கும் உத்தியே முக்கியமானது. பெரும் நிறுவனங்கள் தங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்வோரிடம் குறைவான செலவில் உற்பத்தி செய்யும் போட்டியை உருவாக்குகிறது. உற்பத்தி செலவை குறைக்க, மூலப்பொருள் விலையை சிறு முதலாளிகளால் குறைக்க முடியாது. ஆனால் எளிதானது உழைப்பு சக்தியின் விலையை கட்டுப்படுத்துவது என்பதாக உள்ளது.
மோடி ஆட்சி மாற்றம் செய்த மற்றும் ஒரு சட்டம் மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டம். இதன் மூலம், இனி ரீடெய்ல் வணிகமும் பாதிக்கும். பிராண்ட் சார்ந்த உதிரி பாகங்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். மேலும் பழுதுபார்ப்போரும் தனது சிறு ஷெட்டை மூடி விட்டு, பிராண்ட் சார்ந்த பழுது நீக்கும் நிறுவனங்களில் மட்டுமே செய்ய முடியும். இதுவும் பெரும் நிறுவனங்களை மட்டுமே சார்ந்து, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயங்கும் நிலையை உருவாக்கும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தற்போது சந்தைக்கு அளிக்கும் கூடுதல் உற்பத்தி தடைபடும். ஆக மொத்தத்தில், கூலி தொடர்ந்து உண்மை நிலையை அடையவிடாமல் தடுக்கப்படும் சூழலே இருக்கும்.
கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை?
தொடர்ந்து மார்க்சிஸ்ட்டுகள் கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை. அதேநேரம் அந்நிய நேரடி முதலீட்டை முற்றாக கைவிடவும் கோரவில்லை. அது வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும், தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலும் கூலியை கட்டுப்படுத்தும் நிலையை மாற்றி, உண்மைக் கூலிக்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் அவசியம். அதேபோல் புலம்பெயர்தல் அதிகரித்து, காண்ட்ராக்ட், பயிற்சி போன்ற தொழிலாளர் எண்ணிக்கை பெருகிவருவதை கட்டுப்படுத்த, சம வேலைக்கு சம் ஊதிய சட்டம் அமலாக வேண்டும். இது புலம்பெயர்தலைக் கட்டுபடுத்தும். மேலும் உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.
இவை எதுவும் சோசலிச சமூகத்தில் அமலாகிவரும் நடைமுறைகளல்ல. மாறாக, முதலாளித்துவ சமூகத்தில் உள்ள சுரண்டலை கட்டுப்படுத்தும் சிறிய நடவடிக்கைகள் மட்டுமே. அதேபோல் வேலைநேரம் குறைப்பு குறித்து கவலை கொள்ளவும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், இதுவே சரியான தருணம். ஏனென்றால், செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் அதிகரித்து, உழைப்பு சக்தியை விற்று பிழைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைப்பு என்பதையும் கட்டுபடுத்துவது அவசியம். உதாரணத்திற்கு, வேலை நேரத்தை, சி.ஐ.டி.யு மாநாடு கூறுவது போல், தினசரி 7 மணிநேரம், வாரம் இருநாள்கள் விடுமுறை என அமலாக்க வேண்டும். அல்லது மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டம் கூறுவது போல், ஒருநாளைக்கு 6 மணி நேரம் என்ற முறையில் 4 ஷிப்டுகளை கொண்டதாக மாற்றுவது, உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் பெருக்கும் என்பதை மேலும் வலுவாக வலியுறுத்த வேண்டியுள்ளது.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
