கேரளாவில் பொருளாதாரத் திட்டமிடல்
பேரா. வி. கே. ராமச்சந்திரன்
கேரளாவின் முதல் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் எடுத்த ஆரம்ப கால முடிவுகளில், இந்திய அரசு திட்டக் கமிஷனையும், ஐந்தாண்டுத் திட்டத்தையும் ஒழித்தாலும், கேரளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்காக, கேரள மாநில அரசு ஐந்தாண்டு திட்டத்தையும், வருடாந்திரத் திட்டத்தையும் தொடர வேண்டும் என்பதும் ஒன்று. இது ஒரு துணிவான, சுதந்திரமான முடிவு. இந்தியாவிலேயே கேரளா மட்டும்தான் திட்டமிடல் செயல்முறையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு பகிரங்கமாக உறுதியளித்த மாநிலமாகத் திகழ்கிறது. தற்போது 14-வது ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது (2022-23 முதல் 2026-27).
கேரளாவில் ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பது என்பது மக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் ஒரு செயல்பாடு. கடந்த 1967 ஆம் ஆண்டிலிருந்து, இந்த திட்டங்களை தீட்டும் பணியானது கேரள மாநில திட்ட வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓர் ஐந்தாண்டு திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, திட்டம் தீட்டப்படுவதற்கு முன்பாக, சாத்தியமான அளவுக்குப் பரந்த அளவிலான கலந்துரையாடல்களை நடத்தும் முயற்சிகளை திட்ட வாரியம் முன்னெடுக்கிறது. திட்டக் குழுவானது, அறிஞர்கள், நிர்வாகிகள், சமூக, அரசியல் செயல்பாட்டாளர்கள், பிற வல்லுநர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பணிக்குழுக்களை அமைத்தது. இந்த பணிக்குழுக்கள் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் உள்ளடக்கியிருக்கின்றன. உதாரணமாக, பொது சேவைகள், சமூக நலன் மற்றும் சமூக நீதி, உற்பத்தித் துறைகள் (விவசாயம், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்), வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு, சேவைகள், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், வெளிநாடு வாழ் கேரள மக்களின் பிரச்சனைகள், வளங்கள் மற்றும் வளங்களை திரட்டுதல் ஆகிய துறைகளை உள்ளடக்கியுள்ளன. 13 வது ஐந்தாண்டு திட்டத்திற்காக, மொத்தம் 700க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட 43 பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டில், 14வது ஐந்தாண்டு திட்டத்திற்காக, மொத்தம் 1,200 உறுப்பினர்களைக் கொண்ட 44 பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்த குழுக்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் ஐந்தாண்டு திட்டத்திற்கு அடித்தளமாக அமைகின்றன.
அரசாங்கத்தினுடைய அமைச்சர்களும், அதிகாரிகளும் பொதுமக்களுடன் தீவிரமாக இணைந்து செயல்பட்டு, மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் (பஞ்சாயத்து) அரசாங்கங்களுக்குச் சென்று அதாலத்துகளை நடத்துகிறார்கள்; நவ கேரள சதஸ் போன்ற தளங்களை சாத்தியப்படுத்துகிறார்கள். இந்த கலந்துரையாடல்கள் மக்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. பின்னர், திட்டத்தில் சேர்ப்பதற்காக முன்மொழியப்படும் திட்டங்களில் அவை பிரதிபலிக்கின்றன.
ஐந்தாண்டுத் திட்டம் ஒரு வழிகாட்டும் கட்டமைப்பாக செயல்பட்டு, அதிலிருந்து துறைகள் குறிப்பிட்ட கொள்கைகளையும், திட்டங்களையும் உருவாக்குகின்றன. ஐந்தாண்டுத் திட்டத்துடன் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் அரசுத் துறைகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதொரு செயல்முறையின் மூலம் வருடாந்திரத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. வேறு பல மாநிலங்களில் கொள்கை வகுப்புப் பணியை பெரும்பாலும் அதிகார-அமைப்பே இயக்குவதைப் போலல்லாமல், கேரளாவின் அணுகுமுறையானது பொது உரையாடலில் வேரூன்றியுள்ளது. திட்டமிடல் செயல்முறை பல மட்டங்களில் விவாதங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கும் வகையில் ஆலோசனை செயல்முறையை விரிவுபடுத்துகிறது.
கேரளத்தில் திட்டமிட்ட வளர்ச்சி என்பது உள்ளாட்சி அமைப்புகளில் மக்களின் பங்கேற்பை வலியுறுத்துவதன் மூலமாக வரையறுக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் கேரளத்தின் அனுபவம் மூன்று முக்கிய வழிகளில் வேறுபட்டது. முதலாவதாக, இந்தியாவின் பிற பகுதிகளைக் காட்டிலும் கேரளத்தில் நிதி அதிகாரப் பகிர்வு என்பது மிகவும் முக்கியமானது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு வழங்கும் நிதிப் பகிர்வு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது. பட்ஜெட் நிதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு செல்கிறது. அதில் பெரும்பாலானவை பிணைக்கப்படாத நிதிகளாக இருக்கின்றன. இரண்டாவதாக, திட்டங்களை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு பிற பகுதிகளைக் காட்டிலும் கேரளாவில் அதிகம். இறுதியாக, வளர்ச்சித் திட்டமிடலில் மக்களின் பங்கேற்பின் அளவு பிற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.
முதலாம் மக்கள் திட்ட இயக்கமானது, மக்கள் பங்கேற்பு மற்றும் உள்ளூர் ஜனநாயகத்தின் கருவிகளாக உள்ளாட்சி அரசாங்கங்களை மாற்ற உதவியது என்றாலும், அவர்களுடைய வரலாற்றின் அடுத்த கட்டம் அவற்றை வளர்ச்சிக்கான கருவிகளாக மாற்றிடும். 14-வது ஐந்தாண்டுத் திட்டமானது, முதன்மைத் துறையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதிலும், இரண்டாம் நிலை மற்றும் சேவைத் துறைகளில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், ஊக்குவிப்பதிலும், அறிவியல் ரீதியான இயற்கை வள மேலாண்மையை ஊக்குவித்தல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பை ஊக்குவித்தல் மற்றும் சேவை வழங்கலின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் உள்ளாட்சி அமைப்புகளுடைய செயலூக்கமிக்கப் பங்களிப்பை எதிர்பார்க்கிறது.
அரசியலமைப்பு கட்டாயப்படுத்துகிற மாவட்ட வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதில் கேரளா முன்னோடியாகத் திகழ்கிறது. இந்தத் திட்டங்கள் ஓர் விவாதச் செயல்முறையின் மூலமாகவும் தீட்டப்படுகின்றன.
மனிதவள மேம்பாட்டு குறியீடுகளில் கேரளா அடைந்துள்ள வரலாற்றுச் சாதனைகளை, உற்பத்தி, உட்கட்டமைப்பு மற்றும் பொதுவாக சேவைத் துறைகளில் மேன்மேலும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான உந்துசக்தியாக பயன்படுத்துவதே இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது.
14வது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாக, சமூக முதலீடு (சுகாதாரம், பள்ளிக் கல்வி மற்றும் வீட்டுவசதி), சமூக நலன், சமூக மற்றும் பாலின நீதி ஆகியவற்றின் பலத்தை அதிகரிப்பது; அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கும் பொருளாதாரத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் மனித வளர்ச்சியில் அரசின் பலங்களைப் பயன்படுத்துவது; வேளாண்மை, வேளாண் தொழில் சார்ந்த செயல்பாடுகள், நவீன தொழில், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட வருவாய் தரும் சேவைகளில் வளர்ச்சியை மேம்படுத்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன திறன்களைப் பயன்படுத்துவது; ஒரு நவீன, உயர் வேலைவாய்ப்பு, உற்பத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது; உயர்கல்வி முறையை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் கேரள இளைஞர்களுக்கு நவீன பொருளாதாரத்தில் கிடைக்கக்கூடிய சிறந்த திறன் வேலைவாய்ப்புகளை வழங்குவது; கேரளாவில் நிலவும் தீவிர வறுமையை ஒழிப்பது; கழிவு மேலாண்மையில் விரிவான மற்றும் புதுமையான முறைகளை நிறுவுவது; உள்ளாட்சி அரசாங்கங்கள் வளர்ச்சியின் பொறியாக மாற உதவுவது; மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி செயல்முறையை ஊக்குவிப்பது – எந்தவொரு நபரையும் விட்டுவிடக்கூடாது என்பதே வளர்ச்சி செயல்முறையின் வழிகாட்டும் கொள்கையாக இருக்கும்.
இருந்தபோதிலும், இன்று இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஆதாரங்கள் கிடையாது. அத்தகைய ஆதாரங்களைத் திரட்டுவதற்கான உரிமையும் அவற்றுக்கு இல்லை. மாநிலங்களால் வரிகளை திரட்டிக் கொள்ள முடியாது; பயனுள்ள நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அவர்களால் கடன் மூலமாகத் திரட்டிக் கொள்ள முடியாது. வளர்ச்சி திட்டங்களுக்காக பட்ஜெட்டுக்கு வெளியிலான நிதி ஆதார அமைப்புகளை உருவாக்கிட ஒரு மாநில அரசால் இயலாது. அந்த நிறுவனங்கள் திரட்டக்கூடிய கடன்கள் (3 சதவீத நிதிப்பற்றாக்குறை) உச்சவரம்புக்கு உட்பட்ட தொகையுடன் சேர்க்கப்படும்.
மாநிலத்திற்கு ஒன்றிய அரசு வழங்குகிற நிதி வெகுவாகக் குறைந்துள்ளது. நிதிக் குழுவின் பரிந்துரைகளில் மாநிலத்தின் பங்கு, 10-வது நிதிக்குழுவின்போது இருந்த 3.88 சதவீதத்திலிருந்து 15-வது நிதிக்குழுவின்போது 1.93 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி இழப்பீட்டை ரத்து செய்தல், வருவாய் பற்றாக்குறை மானியங்களை நிறுத்துதல் மற்றும் கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (KIIFB) மற்றும் கேரள சமூக பாதுகாப்பு ஓய்வூதிய நிறுவனத்தின் (KSSPL) கடன்களை மாநிலத்தின் கடன்களில் சேர்த்தல் – ஆகியவை மாநில வருவாயில் மேன்மேலும் தடைகளை ஏற்படுத்துகின்றன.
ஒன்றிய அரசின் வரிகளில் ஐம்பது விழுக்காட்டிற்குக் குறையாமல் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசால் வசூலிக்கப்படும் செஸ் மற்றும் சர்சார்ஜுகள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து திரும்பப் பெறப்படும் லாபத்தில் ஒரு பங்கு, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பெறப்படும் பணம் ஆகியவற்றையும் சேர்த்து இந்த வரிகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது.
மாநிலங்களுக்கு போதுமான நிதி ஆதாரங்கள் கிடைப்பதை மறுப்பதோடு, வளர்ச்சித் துறையில் மாநில அரசுடைய பொறுப்பின் ஒவ்வொரு பகுதியையும் ஒன்றிய அரசு ஆக்கிரமித்துள்ளது. ஒன்றிய அரசு நிதியுதவி பெறும் திட்டங்கள், ஒன்றிய அரசின் முன்னுரிமைகளை மாநிலங்கள் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட வகையிலும், ஒன்றிய அரசின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டும், பாரபட்சமான வகையிலும் திணிக்க முயல்கின்றன.
அதாவது, பள்ளிக் கல்வி அல்லது பொது சுகாதாரத்தில் நீண்ட கால சாதனை வரலாற்றைக் கொண்ட ஒரு மாநில அரசு – ஒன்றிய அரசைப் போலல்லாமல் – தற்போது குறிப்பிட்ட துறையில் அதன் செலவினங்களை அதிகரிக்கவும், இந்தத் துறைகளில் புதிய வழிகளில் பணத்தை செலவிடவும் விரும்பினால், அது ஒன்றிய திட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றியாக வேண்டும்; ஒன்றிய அரசின் வண்ணத் தேர்வுகளோடு ஒன்றிய அரசினை விளம்பரப்படுத்தியாக வேண்டும்; பிரதமரின் உருவப்படத்தைத் தவிர்க்கவே முடியாது.
ஒன்றிய அரசு நிதியுதவி பெற்ற திட்டங்கள், மாநிலங்களால் முழுமையாக வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டங்களால் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய, ஒன்றிய அரசு நிதியளிக்கும் திட்டங்களுக்காக இப்போது செலவிடப்படும் நிதி முழுவதும் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இந்த அம்சத்தில் மாநிலங்களுக்கு சுதந்திரமும் நெகிழ்வுத்தன்மையும் அவசியம்.
அன்றிய அரசின் பாதகமான கொள்கைகளால் மட்டுமின்றி, வரலாறு காணாத சவால்களாலும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கங்களின் பதவிக்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான பருவநிலை பாதிப்புகள் நிகழ்ந்தன: 2017ஆம் ஆண்டில் ஓக்கி புயல், 2018, 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் கடும் மழைபொழிவுகளைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. கடந்த 2018-ஆம் ஆண்டு மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் நீப்பா வைரஸ் தொற்று பரவியது. 2016-இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, 2017-இல் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவற்றால் மாநிலப் பொருளாதாரத்தில் புதிய அழுத்தங்கள் ஏற்பட்டன. பிற பகுதிகளைப் போலவே கேரளாவிலும், கோவிட்-19 தொற்றுநோயுடன் தொடர்புடைய நெருக்கடி பொருளாதாரத்தை உலுக்கியது. இச்சூழ்நிலைகளில் திட்டமிடுதலின் பங்கு மிகவும் முக்கியமானதாகிறது.
இயற்கை பேரழிவு, தொற்றுநோய், வெட்டப்பட்ட நிதி ஆதாரங்கள், ஒன்றிய அரசின் நாசகர கொள்கையால் ஏற்பட்ட பிற பின்னடைவுகள் தொடர்பாக, கேரள மாநிலம் எதிர்கொள்ள வேண்டிய பல சவால்கள் இருந்தபோதிலும், எல்.டி.எஃப் அரசாங்கம் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, கேரளாவில் கல்வியறிவு விகிதம் (94 சதவிகிதமாக) – ஆண்களுக்கு (96.11 சதவீதம்), பெண்களுக்கு (92.07 சதவீதம்) – அதிகமாக உள்ளது. பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை, கேரளா அனைவரையும் உள்ளடக்கிய சேர்க்கையை எட்டியிருக்கிறது; இந்தியாவிலேயே மிகக் குறைந்த இடைநிற்றல் விகிதத்தைக் கொண்டிருக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், பள்ளி கல்வியில் அரசாங்கம் முதலீடுகளை அதிகரித்துள்ளது, டிஜிட்டல் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பொதுப் பள்ளி உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது, அனைத்து மட்டங்களிலும் நவீன அறிவியல் பாடத்திட்டங்களை நிறுவிட பணியாற்றியுள்ளது. உயர்கல்விக்கான மாநிலத் திட்ட முதலீடு அதிகரித்துள்ளது. கேரள மக்களின், குறிப்பாக இளைஞர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் உயர்கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வி முதல் முதுகலை கல்வி வரை ஒவ்வொரு மட்டத்திலும் ஆசிரியர் பயிற்சி மேம்படுத்தப்பட்டுள்ளது. மத்தியிலும், பல மாநிலங்களிலும் கல்வியில் பிற்போக்குத்தனம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ள நிலையில், பள்ளி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி) நாடுகளின் (IMR) சிசு மரண விகிதத்துக்கு சமமான ஒற்றை இலக்க குழந்தை இறப்பு விகிதத்தை (IMR) கொண்ட ஒரே மாநிலம் கேரளா மட்டுமே. கேரளாவில் பிறக்கும்போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் (75) இந்தியாவின் சராசரி எண்ணிக்கையை (70) விட அதிகம். கேரளாவில் பேறுகால இறப்பு விகிதம் (MMR) 19 ஆக உள்ளது. பிற மாநிலங்களைக் காட்டிலும் இந்த விகிதம் மிகக் குறைவு. தேசிய சராசரி 97 ஆக இருக்கிறது.
கேரள அரசின் ஆர்த்திரம் இயக்கம், ஆரம்ப சுகாதார நிலையங்களை குடும்ப சுகாதார மையங்களாக தரம் உயர்த்தியது. அதே நேரத்தில் அனைத்து மட்டங்களிலும் நவீன குணப்படுத்தும் சுகாதார வசதிகள் (தொற்றா நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகள் உட்பட) பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்தது.
சுகாதாரம், கல்வி, உணவு, வீட்டுவசதி மற்றும் ஓய்வூதியங்கள் கிடைப்பதை உறுதி செய்கிற சமூகத் திட்ட ஏற்பாடுகள் வாயிலாக பெண்களின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டை மேன்மேலும் உயர்த்துவதற்கான கொள்கைகள் என்பது – கேரளாவில் திட்டமிட்ட வளர்ச்சிக் கொள்கையின் ஓர் அடையாளமாகவே இருந்து வருகின்றது.
நிதி ஆயோக் அமைப்பின் மிக சமீபத்திய பல பரிமாண வறுமைக் குறியீட்டின்படி, கேரளாவில் பல பரிமாண வறுமை தலை எண்ணிக்கை 0.55 சதவீதமாக இருந்தது, இது இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே மிகக் குறைவு. 2022-23ஆம் ஆண்டில், அனைத்து இந்திய மாநிலங்களிலும் கிராமப்புற தனிநபர் செலவினத்தில் கேரளா 1-வது இடத்திலும், நகர்ப்புற தனிநபர் செலவினத்தில் 5-வது இடத்திலும் இருக்கிறது.
2025 நவம்பரில், தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒன்றியத்தின் முதல் மாநிலமாக கேரளா விளங்கும்.
கேரளாவின் தொழிலாளர் சந்தை மொத்த வேலைவாய்ப்பில் வியப்பளிக்கும் அதிகரிப்பையும் அதிக பெண்களின் பங்கேற்பையும் காட்டுகிறது. 2017-18 மற்றும் 2023-24க்கு இடையில் வேலைவாய்ப்பு 16 சதவீதம் அதிகரித்து, 2023-24ஆம் ஆண்டில் 1.51 கோடியை எட்டியதாக, பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே (பி.எல்.எஃப்.எஸ்) தெரிவித்துள்ளது. 2023-24ஆம் ஆண்டில், கேரளாவில் பணிபுரியும் அனைத்து நபர்களில் 35 சதவீதம் பேர் நிரந்தர வேலைவாய்ப்பு கொண்ட (Regular) தொழிலாளர்களாக இருப்பார்கள். இதன் தேசிய சராசரி 22 சதவீதமாக இருக்கிறது. இந்த தேசிய சராசரி 2020-21 இல் 31 சதவீதமாக இருந்தது. கேரளாவில் நிரந்தர வேலைகளில் உள்ள பெண்கள் தற்போது 41 சதவீதமாக இருக்கின்றனர், 2011-12இல் நிலவிய 29 சதவீதத்தில் இருந்து உயர்ந்துள்ளது. இதன் தேசிய சராசரி பெண்களில் 16 சதவீதமாக உள்ளது. தேசிய போக்குக்கு மாறாக, கேரளாவில் தற்காலிக வேலை குறைந்தது. அன்றாடக் கூலி வேலைவாய்ப்பிலிருந்து கேரள மாநிலம் விலகி முன்னேறிச் செல்வதை இது குறிக்கிறது.
அண்மையில் செயல்படுத்தப்பட்ட மாநில வணிக சீர்திருத்த செயல் திட்டத்தில், மாநிலங்களிலேயே கேரளாதான் தற்போது முதலிடம் வகிக்கிறது. கேரளாவின் தொழில்துறை சூழல் மற்றும் கொள்கைக்கான தற்போதைய தேசிய அங்கீகாரமானது, மாநில அரசு, உள்ளாட்சி அரசாங்கங்கள் மற்றும் தொழில்துறை பொருளாதாரத்தின் பங்கேற்பாளர்களுடைய சமீபத்திய முன்முயற்சிகளின் விளைவாகும்.
இடது ஜனநாயக முன்னணி அரசின் பொருளாதாரக் கொள்கை தொழிலாளி வர்க்கத்திற்கு சேவை செய்வதாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகளை நேரடியாக அணுகி, மதச்சார்பற்ற ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவதில் அது உறுதியாக இருக்கிறது. அசல் ஊதியங்கள் வீழ்ச்சியடைந்து வரும் உலகில், தொழிலாளர்களின் உரிமைகள் மேன்மேலும் வெட்டப்பட்டு வரும் ஓர் உலகில், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் ஊதியங்கள் நாளுக்கு நாள் மேம்படும் ஒரு பிராந்தியமாக கேரளா தனித்து நிற்கிறது.
கேரளத்தின் சாதனைகளை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இடதுசாரி ஜனநாயக இயக்கத்தின் சாதனையாகவே கருத வேண்டும். வகுப்புவாதம் மற்றும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் தாக்குதல்களை எதிர்கொண்டு, அந்த இயக்கம் உயிரோடு இருப்பதும், வலுவடைவதும் இந்தியாவில் இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கத்தின் வெற்றிக்கு முக்கியமானது.
தமிழில்: நர்மதா தேவி
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
