முதல் விடுதலைப் போரின் முன்னோடி வேலூர்ப் புரட்சி
- பேரா. கா.அ. மணிக்குமார்
18ஆம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றுப் பின்னணி
தென் இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவன வணிகர்களாக வந்த ஆங்கிலேயர்கள், தங்களது மேலாண்மைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய தென் தமிழகப் பாளையக்காரர்கள் பூலித்தேவன் (நெற்கட்டும்செவல்: 1755-67), வேலுநாச்சியார் (சிவகங்கை: 1780-96), வீரபாண்டிய கட்டபொம்மன் (பாஞ்சாலங்குறிச்சி: 1790-99) மருது சகோதரர்கள் (சிவகங்கை: 1801) ஆகியோரை, தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியாலும் பீரங்கி பலத்தாலும் வென்றனர்.
இதே காலகட்டத்தில், ஹைதர் அலிக்குப் பிறகு ஆங்கிலேயரை எதிர்த்த மைசூர் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் (1799). தங்களை எதிர்க்க வலுவான எதிரி இனி யாரும் இல்லை என எண்ணிய ஆங்கிலேயர், நான்காம் மைசூர் போரின்போது (1798-99) திப்பு சுல்தானுடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்ததாக, ஆற்காட்டு நவாப் மீது குற்றம் சுமத்தி, அவரை அரியணையிலிருந்து அகற்றினர்.
இதன் விளைவாக, வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள் ஆங்கிலேயர் வசமாகின. மைசூரில் உடையார் சந்ததியினரை அரியணையில் அமர வைத்தனர். திப்புவின் மகன்களுக்கு மாத உதவித் தொகை வழங்கி, மைசூரிலிருந்து வேறொரு இடத்திற்கு அவர்களை மாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. தென் தமிழகப் பகுதிகளில் தங்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு கோட்டைகளை இடித்துப் படைகளைக் கலைத்த பாளையக்காரர்கள் அல்லது அவர்களது வாரிசுகளை ஜமீன்தார்களாக சென்னை மாகாண அரசு 1802ஆம் ஆண்டு (ஒழுங்குமுறை: 25) பிரகடனம் செய்தது.
வேலூர்க் கோட்டை அன்றைய வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த அரண்மனைகளில் (ஹைதர் மஹால், திப்பு மஹால்) திப்புவின் மகன்கள், 6 மகள்கள், உறவினர் ஆங்கிலேயப் படையினரின் நேரடிக் கண்காணிப்பில் குடியமர்த்தப்பட்டனர். குன்றுகளால் சூழப்பட்ட வலுவான சுற்றுச்சுவராலும் அகழியாலும் எளிதில் எதிரிகள் ஊடுருவ முடியாத இடமாக வேலூர்க் கோட்டை இருந்தது. திப்புவின் குடும்பத்தினரை குடியமர்த்த உகந்த இடமாக அது கருதப்பட்டது. திப்புவின் குடும்பத்தினரைத் தொடர்ந்து திப்புவின் ஆதரவாளர்கள், ஏவலாளிகள் 3,000 பேர் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்த பேட்டையில் குடியேறினர்.
1806ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது கோட்டைக்குள் பேரரசரின் 6ஆம் படையின் நான்கு பிரிவுகளும் இந்திய காலாட்படையில் 1ஆம் படையின் 1ஆம் பிரிவும், 23ஆம் படையின் 2ஆம் பிரிவும் இருந்தன. 1ஆம் படையின் 1ஆம் பிரிவில், திப்புவிடம் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் அதிகம் இருந்தனர். 23ஆம் படையின் 2ஆம் பிரிவில், கலைக்கப்பட்டிருந்த தென் தமிழகப் பாளையக்காரர்களின் படைகளிலிருந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றினர். இந்திய அதிகாரிகளும், போர் வீரர்களும் சேர்ந்து 1700 பேர் இருந்தனர். கர்னல் ஜான் ஃபேன்கோர்ட் கோட்டையின் தலைமை அதிகாரியாக இருந்தார் (Commandant). கோட்டையின் துணைத் தலைமை அதிகாரி (Adjutant) கேப்டன் மக்லின் ஆவார். 1ஆம் படை 1ஆம் பிரிவின் தலைவர் லெப்ட்டினன்ட் கர்னல் நத்தேனியேல் ஃபோர்ப்ஸ். துணைத் தலைமை அதிகாரி லெப்ட்டினன்ட் ஒ’ரெய்லி. 23ஆம் படை 2ஆம் பிரிவின் தலைவர் லெப்பட்டினன்ட் கர்னல் ஜான் மக்காரஸ். துணைத் தலைமை அதிகாரி லெப்ட்டினன்ட் கோம்ஸ் ஆகியோர் இருந்தனர்.
சர்ச்சைக்குரிய புதிய இராணுவ விதிமுறைகள்
தலைமைத் தளபதி ஜான் பிரடெரிக் கிரடாக் 1806 ஜனவரியில் வெளியிட்ட புதிய இராணுவ விதிமுறைகள் மார்ச் 13 அன்று இராணுவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி ஓர் இந்திய வீரன் சீருடையில் இருக்கும்போதும், அணிவகுப்பின்போதும் திருநீறு, நாமம் போன்ற மத, சாதிக்குறிகளை நெற்றியில் வெளிப்படுத்தக்கூடாது; காதணி அணியக் கூடாது; முகத்தைச் சுத்தமாக மழித்திருக்க வேண்டும்; மீசையின் பருமனும் அளவும் ஒரே சீராக இருக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது.
அரசுக்கு அறிவிக்காமல், 1805ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாளிட்ட ஆணையின் மூலம் இந்திய வீரர்களின் தலைப்பாகையையும் தலைமைத் தளபதி மாற்றியிருந்தார். இந்த வட்டத் தொப்பி ஐரோப்பியர், கிறிஸ்தவர் அணியும் தொப்பிபோல் இருந்தது மட்டுமின்றி, தொப்பியின் முன்னே இருந்த குஞ்சம் வழக்கமான பருத்தித் துணியாலான ரிப்பனுக்கு பதிலாக விலங்குத் தோலாலான பட்டைகளால் இணைக்கப்பட்டிருந்தது. பன்றியின் தோல் இஸ்லாமியர்களுக்கு அருவருக்கத்தக்கது. பசுவின் தோல் இந்துக்களுக்கு வெறுக்கத் தக்கது என்பதால் அனைவரையும் கிறிஸ்தவர்களாக மத மாற்றம் செய்வதற்கான திட்டம் இது எனக் கருதி தென் இந்திய இராணுவ முகாம்களில் தொப்பிக்கான எதிர்ப்பு கிளம்பியது.
மே 7ஆம் நாள் முதல் எதிர்ப்பு
1806 மே 6ஆம் நாள் வேலூர்க் கோட்டையில் மாலை 6 மணி அணிவகுப்பின்போது 4ஆம் படையின் 2ஆம் பிரிவினர் அவர்களது ஆயுதங்களைத் தோளில் ஏந்த மறுத்தனர். படை நடத்துநர் லெப்டினன்ட் கர்னல் ஜான் டார்லி கோட்டைத் தலைமை அதிகாரி என்ற முறையில் ஃபேன்கோர்ட்டிடம் முறையிட்டபோது, அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மறுநாள் (மே 7) வெளிப்படையாக புதிய தலைப்பாகையை அணிய படையினர் மறுத்தனர். நிலைமை மோசமாவதைக் கண்ட ஃபேன்கோர்ட் தலைமைத் தளபதி ஜான் கிரடாக்குக்கு படை ஒழுங்கீனம் பற்றித் தெரிவித்தபோது, முக்கியத் தலைவர்களைக் கைது செய்து விசாரணைக்குச் சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு அவர் ஆணையிட்டார்.
குற்றம் சுமத்தப்பட்ட 21 படை வீரர்களை (10 முஸ்லிம்கள், 11 இந்துக்கள்) பேரரசரின் 19ஆம் குதிரைப்படை பாதுகாப்பாக விசாரணைக்கு நடத்திச் சென்றது. இராணுவ விசாரணை மன்றத் தீர்ப்பின்படி 19 வீரர்களுக்கு ஆளுக்கு 500 சவுக்கடிகள் கொடுத்து, அவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு, எதிர்கால நன்னடத்தைக்கு உத்தரவாதம் கொடுத்ததால் மன்னிக்கப்பட்டனர். தவறு என ஒப்புக்கொள்ள மறுத்த இரு வீரர்கள் (ஷேக்அப்துல் ரகுமான், அனந்தராமன்) 900 சவுக்கடிகள் கொடுத்து பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
4ஆம் படையின் 2ஆம் பிரிவு வேலூரிலிருந்து அகற்றப்பட்டு அதன் இடத்தில் வாலாஜாபாத்திலிருந்த 23ஆம் படையின் 2ஆம் பிரிவு நிறுத்தப்பட்டது. நடைபெற இருந்த பெரும் ஆபத்தைத் தவிர்த்து விட்டதாக தலைமைத் தளபதியிடமிருந்து வந்த தகவலை அனைவரும் நம்பியிருந்தபோது, அடுத்த இரு மாதங்களில் வேலூரில் கிளர்ச்சி பூகம்பமாக வெடித்தது.
வேலூர்ப் புரட்சி
1806 ஜூலை 10 அதிகாலை இரண்டு மணிக்கு வேலூர்க் கோட்டையில் இந்திய வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஒரு பகுதியினர் ஆயுத, வெடிமருந்துக் கிடங்குகளுக்குச் சென்று, அங்கிருந்த துப்பாக்கிக் குண்டுகளையும், ஆயுதங்களையும் கையகப்படுத்தி அனைத்து வீரர்களுக்கும் விநியோகம் செய்தனர். மற்றொரு பிரிவினர், ஐரோப்பியர் குடியிருப்புக்குச் சென்று, அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஐரோப்பிய அதிகாரிகளையும், வீரர்களையும் அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாகக் குறிவைத்து சுடத் தொடங்கினர். எவரும் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக குடியிருப்பைச் சுற்றிலும் நின்றுகொண்டு தீ வைத்தனர். வீரர்களால் தேடப்பட்ட லெப்ட்டினன்ட் கோம்ஸ் இந்திய வீரர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார் என்பதால், வீரர்கள் அவரை அதிகமாக வெறுத்தார்கள். முதலில் தாக்கப்பட்டுத் தீக்கிரையானது அவரது வீடே. ஆனால் கோம்ஸ் தப்பி உயிர் பிழைத்தார். திப்புவின் மகன்களுக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாவலராக பணியமர்த்தப்பட்டியிருந்த தாமஸ் மர்ரியட் தனது வீட்டில் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார்.
தொடர் துப்பாக்கிச் சப்தம் கேட்டு விழித்த கோட்டைத் தலைமை அதிகாரி ஃபேன்கோர்ட் தன் வீட்டைவிட்டு வெளியே சென்று அனைத்து வீரர்களையும் அணிவகுக்க உத்தரவிட்டபோது குண்டடிபட்டு அவரது மனைவி அமெலியா கண்முன் மடிந்தார். வீரர்களின் குண்டிற்கு இரண்டாவது பலி 23ஆம் படை 2ஆம் பிரிவின் தலைவர் மக்காரஸ் ஆவார்.
1ஆம் படை 1ஆம் பிரிவு ஃபோர்ப்ஸ் கோட்டைக்கு வெளியே சென்றிருந்ததால், அதற்கு பொறுப்பேற்றிருந்த ஓ ரெய்லி குண்டுச் சப்தம் கேட்டு ஃபேன்கோர்ட் வீட்டிற்கு விரைந்தபோது வழியில் கொல்லப்பட்டார். இரவுக் காவல் பணியில் ஐரோப்பியப் படையினருக்கு தலைமை தாங்கிய லெஃப்ட்டினன்ட்கள் ஜான் இலி, பூபம் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கோட்டையின் தலைவாயில் வழியாகச் சென்றுகொண்டிருந்த 16ஆம் படை 1ஆம் பிரிவு மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டு தனது பல்லக்கில் இருந்திறங்கி ‘என்ன நடக்கிறது’ என வினவியபோது, அவரது உடலில் குண்டு பாய்ந்து அவ்விடத்திலேயே சுருண்டு விழுந்து மாண்டார். தொப்பியை அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதற்காக, கேப்டன் டேவிட் வில்லிசன் அவரது வீட்டிலிருந்து இழுத்துவரப்பட்டுக் கொல்லப்பட்டார். சார்ஜன்ட் ஃபிரோஸ்ட் தலைவாயிலுக்கருகில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
கோட்டை இந்தியர் வசமாதல்
மொத்தம் 15 ஐரோப்பிய அதிகாரிகளும், 119 ஐரோப்பிய வீரர்களும் கொல்லப்பட்டிருந்தனர். அனைத்துக் காவல் மையங்களும் வீரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. கோட்டையில் ஆங்கிலேயர் கொடி அகற்றப்பட்டு திப்புவின் மூன்றாவது மகன் மொய்சுதீன் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மைசூர் புலி வரிக்கொடி பறக்க விடப்பட்டது. மொய்சுதீன் வீட்டிற்குமுன் கூடியிருந்த போராளிகள் அனைவரும் வெற்றியைக் கொண்டாடினர். வரலாற்றில் இந்நிகழ்வு வேலூர்ப் படுகொலை, வேலூர் சிப்பாய்க் கிளர்ச்சி, வேலூர்ப் புரட்சி என அவரவர் சித்தாந்தக் கண்ணோட்டத்திற்கு ஏற்றாற்போல் அழைக்கப்படுகிறது.
கோட்டையை நழுவவிட்ட விதம்
கோட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் திப்புவின் மூத்த மகன் பதே ஹைதரை வெற்றிப் படைக்குத் தலைமை தாங்குமாறு வீரர்கள் அழைத்தபோது “300 பேர் கொண்ட படையைத் தலைமை ஏற்று நடத்திச் செல்ல, நான் ஒன்றும் முட்டாள் அல்ல” எனக் கூறி வீரர்களின் வேண்டுகோளை அவர் நிராகரித்தார். அதைத் தொடர்ந்து வீரர்கள் சிலர் மதில் மீது ஏறி ஆயுதங்களுடன் வரும்படி பேட்டையில் இருந்தவர்களுக்கு அறைகூவல் விடுத்தனர். ஜூலை 9ஆம் நாள் ஜமேதார் ஒருவர் மது அருந்திய போதையில் நடைபெற இருந்த கிளர்ச்சி பற்றி உளறியதால் அன்று இரவே தாக்குதலைத் தொடுக்க வேண்டியிருந்தது. இதனால் பேட்டையில் இருந்தவர்களுக்குக் கூட தகவல் சென்றடையவில்லை. எதிர்பார்த்ததுபோல் குன்றத்தூரிலிருந்தும், ஆற்காட்டிலிருந்தும் படைகள் வரவில்லை. மேலும் தப்பி உயிர் பிழைத்திருந்த ஆங்கிலேய அதிகாரிகள், வீரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிக்க போராளிகள் தவறினர்.
இந்திய வீரர்களின் இந்தக் கவனக் குறைவைச் சாதகமாகப் பயன்படுத்தி கோட்டைக்குள் ஒளிந்திருந்த, கோட்டைக்கு வெளியே அணிதிரண்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகளும், வீரர்களும் தங்கள் துரித நடவடிக்கையின் மூலம் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவர முடிந்தது.
கோட்டையை மீட்க ஆங்கிலேயர் எடுத்த நடவடிக்கைகள்
23ஆம் படை 2ஆம் பிரிவின் துணைத் தலைமை அதிகாரி லெஃப்ட்டினன்ட் ஈவிங் வீட்டில் கோட்டைக்குள் அதுவரை ஒளிந்திருந்த ஆறு ஆங்கிலேய அதிகாரிகள் ரகசியமாகக் கூடினர். ஆனால் அங்கும் சில இந்திய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அங்கிருந்து வெளியேறினர். அனைத்து முயற்சிகளிலும் தோல்வியடைந்து எதுவும் செய்ய இயலாத நிலையில், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்த ஒரு நுழைவாயிலில் அரசின் எதிர்நடவடிக்கை மீது நம்பிக்கை வைத்து, ஐரோப்பியர் ஒரு சிறு படையுடன் பொறுமையாகக் காத்திருந்தனர். இதற்கிடையில் கோட்டைக்கு வெளியே இருந்த லெஃப்டினன்ட் கர்னல் ஃபோர்ப்ஸ் ஒரு மலைக்கோட்டைக்குச் சென்று அங்கிருந்தபடி கோட்டைக்கு வெளியில் இருந்தவர்களை இயக்கினார்.
இதை எதிர்பார்த்து மொய்சுதீன் திப்புவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகப் பணியாற்றிய சையது கபூர் மகன் சையது உசைனை மலைக்கோட்டைக்கு ஒரு படையுடன் அனுப்ப எடுத்த முயற்சி, தலைவாயில் கதவு பூட்டப்பட்டு கோட்டைக்கு வெளியே ஆங்கிலேயர் படை நின்றதால் தோல்வியடைந்தது. இதனால் ஃபோர்ப்ஸ் சுதந்திரமாக செயல்பட முடிந்தது. ஆற்காட்டிலிருந்து குதிரைப்படையை வர ஏற்பாடு செய்யுமாறு கோட்டைக்கு வெளியே பணியிலிருந்த மேஜர் கோட்ஸ்ஸை ஃபோர்ப்ஸ் வேண்டினார். கேப்டன் ஸ்டீவன்சன் ஆற்காட்டு இராணுவ முகாம் தலைவர் கர்னல் கில்லெஸ்பிக்கு ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்ட செய்தியை எடுத்துச் சென்றார். அப்போது காலை 6 மணி.
ஆற்காட்டிலிருந்து குதிரைப்படை வருகை
கில்லெஸ்பி 7 மணிக்கு கேப்டன் எங் தலைமையில் 19 ஆம் குதிரைப்படையை அழைத்துக் கொண்டு, மதராஸ் ஏழாம் குதிரைப் படையை உட்ஹவுஸ் தலைமையில் பின் தொடருமாறு உத்தரவு பிறப்பித்துவிட்டு, வேலூர் நோக்கிப் புறப்பட்டார். அவர் வேலூர்க் கோட்டையை சென்றடைந்த நேரம் 8:30மணி. ஏற்கெனவே இரு வாயில் கதவுகள் திறந்திருந்தன. மூன்றாவது வாயில் கதவு எளிதாக குதிரைப் படையினரால் திறக்கப்பட்டது. நான்காவது வாயில் கதவைத் திறக்க முடியாததாலும், இந்திய வீரர்கள் துப்பாக்கிக் குண்டுமழை பொழிந்ததாலும் எறிகுண்டு படையினர் வரும் வரை காத்திருக்க கில்லெஸ்பி முடிவு செய்தார். மலைக் கோட்டையில் இருந்த போர்ப்ஸ், கோட்டைக்கு வெளியே தன்னுடன் இருந்தவர்களுடன் கில்லெஸ்பி படையுடன் இணைந்தார். சிறிது நேரத்தில் ஏழாம் குதிரைப் படையினர் எறிகுண்டு வீரர்களுடன் வந்து சேர்ந்தனர். அப்போது மணி பத்து.
துப்பாக்கியால் பூட்டு தகர்க்கப்பட்டு நான்காம் வாயிற்கதவு திறக்கப்பட்டது. தாமஸ் மர்ரியட் கில்லெஸ்பியை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். குதிரை வீரர்கள் கைவாளுடன் உள்ளே நுழைந்தபோது, கில்லெஸ்பி தலைமைத் தளபதி ஜான் கிராடாக்குக்கு அடுத்த நாள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது போல், இந்திய வீரர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பல ஆங்கிலேய இராணுவ வீரர்களை இழக்க நேரிட்டது. இருப்பினும் சிறிது நேரத்திலேயே குண்டுகள் தீர்ந்ததால் இந்திய வீரர்கள் பின்வாங்க நேர்ந்தது.
கில்லெஸ்பியின் கொலைவெறி
பின்வாங்கிய இந்தியப் படை வீரர்களைக் கொல்வதில் கில்லெஸ்பியின் தலைமையிலான படையினர் குறியாக இருந்தனர். நான்காம் வாயில் கதவைத் தகர்ப்பதில் முக்கியமான பங்காற்றிய லெப்டினன்ட் ஜே. பிளாக்கிஸ்தான் கூறும் கணக்கின்படி, 810 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். திப்புவின் மகன்களையும், குடும்பத்தினரையும் கில்லெஸ்பி கொல்ல முயன்றபோது, அவர்கள் தனது பாதுகாப்பில் இருப்பதாகக் கூறி தடை போட்டார் தாமஸ் மர்ரியட். கோட்டைக்குப் பின்புறம் இருந்த அவசர வழியின் மூலமாகத் தப்ப முயன்ற வீரர்களைக் கைது செய்து அவர்களைக் கொல்வதற்கும் கில்லெஸ்பி ஆணையிட்டார். இருந்தும் கணிசமான எண்ணிக்கையில் வீரர்கள் தப்பியிருந்தனர். அவர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கும் ஆட்சியர்களுக்கும் பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இராணுவ வரலாற்றறிஞர் டபிள்யு.ஜெ. வில்சன் கணக்குப்படி கோட்டையினுள் இருந்த 1,700 பேரில் 879 பேர் கொல்லப்பட்டிருந்தனர். வேலூரில் சிறைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் 466. கைதாகாமல் தலைமறைவாயிருந்தவர் 321. இவர்களைத் தவிர நாட்டின் இதர பகுதிகளில் மரண தண்டனை சிறையிலடைக்கப்பட்டிருந்தவர்களும் இருந்தனர்.
1806 செப்டம்பர் 2ஆம் நாள் இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின்படி வேலூர்க் கோட்டை கிளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கோட்டையின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த ஹர்கோர்ட் துணை படைத்தளபதி (Adjutant General) பி.ஏ. அக்னீவ்க்கு எழுதிய கடிதத்தில் பெயரை எழுதாமல் கிளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை, அவர்கள் எண்ணிக்கை, வகித்த பதவி ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடுகிறார்.
அதன்படி 1ஆம் படை 1ஆம் பிரிவில்:
ஒரு ஹவில்தார், ஒரு நாயக் பீரங்கி வாயில் வைத்து உடல் தகர்க்கப்பட்டார்கள்.
ஒரு நாயக், நான்கு வீரர்கள் சுடப்பட்டார்கள்.
ஒரு ஜமேதார், நான்கு வீரர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். மூன்று ஹவில்தார்கள், இரண்டு நாயக்குகள், ஒரு வீரர் (பினாங்குக்கு) நாடு கடத்தப்பட்டார்கள்.
23ஆம் படை 2ஆம் பிரிவில்:
இரண்டு சுபேதார்கள், இரண்டு லஸ்கர் பீரங்கி வாயில் வைத்து உடல் தகர்க்கப்பட்டார்கள்.
இரண்டு ஹவில்தார்கள், ஒரு நாயக் தூக்கிலிடப்பட்டார்கள்.
கொல்லப்பட்ட பத்தொன்பது கிளர்ச்சியாளர்களில் நான்கு பெயர்களை மட்டும் நம்மால் அரசின் இரகசிய ஆவணங்களிலிருந்து கண்டுபிடிக்க முடிகிறது.
ஒருவர் பீரங்கி வாயில் வைத்து உடல் சிதறக் கொல்லப்பட்ட சுபேதார் ஷேக் ஆடம்; மற்றொருவர் தூக்கிலிடப்பட்டு, பூத உடல் சங்கிலியிடப்பட்டுப் பொதுமக்களை எச்சரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஜமேதார் ஷேக் காசிம். மூன்றாமவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட 1ஆம் படையின் 1ஆம் பிரிவின் நாயக் ஷேக் மீரான். துப்பாக்கி தோட்டாக்கள் விநியோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட லேன்ஸ் நாயக் அப்துல்காதரைக் கழுத்தை நெரித்துச் சாகடித்தனர்.
ஒடுக்கியவர்களுக்குச் சன்மானம்
கில்லஸ்பியின் துரித நடவடிக்கை, கம்பெனி அரசுக்கு எதிராக உருவாகிக் கொண்டிருந்த ஆபத்தான கூட்டணியை ஒழிக்க உதவியதாக தலைமைத் தளபதி ஜான் கிராடாக் நம்பினார்.
தலைமை அரசு கில்லஸ்பியை பாராட்டி 7,000 வராகன் (ரூ. 24,500) பரிசாக வழங்கியது. கில்லெஸ்பியின் பரிந்துரைப்படி சார்ஜன்ட் பிராடிக்கு, கோட்டைக்குள் ‘இந்திய வீரர்களை எதிர்கொள்வதில் ஆற்றிய சிறப்பான பங்கினை அங்கீகரிக்கும் விதமாக’, 800 வராகன் (ரூ. 2,800) வழங்கப்பட்டது. அந்நியர் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிக்கான திட்டமிடுதலில் இந்திய அதிகாரிகளோடு முதலில் இருந்துவிட்டு, பின்னர் லெப்டினன்ட் கர்னல் ஃபோர்ப்ஸ் இடம் காட்டிக்கொடுக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து, பைத்தியக்காரன் பட்டம் சூட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஸ்தபா பெக் கிளர்ச்சியின்போது தப்பிச் சென்று திரும்பியிருந்தார். துரோகி முஸ்தபாவிற்கு சுபேதாராக பதவி உயர்வும் 2000 வராகன் சன்மானமும் வழங்கப்பட்டது.
பலிகடா ஆன மாகாண உயர் அதிகாரிகள்
புதிய இராணுவ விதிமுறைகள்தான் கிளர்ச்சிக்குக் காரணம் என முடிவு செய்த சிறப்பு விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், புதிய ஒழுங்கு விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டன. 1797 மார்ச் 15இல் அங்கீகரிக்கப்பட்ட தலைப்பாகையே இராணுவத்திற்குரியதாகத் தொடரும் என ஆணையிடப்பட்டது. தாய்நாட்டு அரசின் உயர்மட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்தபடி, சென்னையில் தலைமைப் பொறுப்பில் இருந்த ஆளுநர் வில்லியம் பென்டிங்க், தலைமை படைத் தளபதி ஜான் கிரடாக், துணைத் தலைமை படைத்தளபதி பி.ஏ.அக்னீவ் அனைவரையும் “குழப்பத்திற்குப்” பொறுப்புள்ளவர்களாக்கி, அவர்களை கிழக்கிந்திய கம்பெனி இயக்குநரகம் பணியிலிருந்து நீக்கியது. ஆனால் இறுதியில் துணைத் தலைமை இராணுவ அதிகாரி மேஜர் பீர்ஸ் பலிகடாவாக்கப்பட்டு, இங்கிலாந்திற்குத் திரும்ப அழைக்கப்பட்டார். பி.ஏ.அக்னீவ் பணியில் மீண்டும் அமர்த்தப்பட்டார்.
திப்புவின் குடும்பத்தினர், இளவரசர்கள் உட்பட வேலூரிலிருந்து கொல்கத்தாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர். திப்புவின் மகன்களது மாத உதவித் தொகை கணிசமாகக் குறைக்கப்பட்டது.
தென்னிந்திய இராணுவ முகாம்களில் எதிர்ப்பு பரவுதல்
ஐதராபாத், வாலாஜாபாத், பெல்லாரி, சங்ககிரிதுர்கம், பெங்களூர், நந்திதுர்கம், பாளையங்கோட்டை போன்ற இராணுவ முகாம்களில் கிளர்ச்சி எதிரொலித்தது. முதலில் வெளிப்பட்ட ஐதராபாத் கிளர்ச்சியும், இறுதியாக நிகழ்ந்த பாளையங்கோட்டைக் கொந்தளிப்பும் இங்கு விவரிக்கப்படுகின்றது.
ஐதராபாத் கிளர்ச்சி
ஹுசைன் சாகர் இராணுவ முகாமில் துணைப் படையில் பணியாற்றிய இந்திய வீரர்கள் புதிய தொப்பியை அணிய மறுத்ததோடு ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்ட திவான் மீர் ஆலமை படுகொலை செய்வது, நிஜாம் சிக்கந்தர் ஜாவை அரியணையிலிருந்து இறக்கி, அவரது மற்றொரு சகோதரரை அரியணையில் அமர்த்துவது போன்ற இரகசியத் திட்டங்களோடு செயல்படுவதாக வந்த செய்தியின் அடிப்படையில், அங்கிருந்த துணைப்படை வீரர்களை அதன் தலைவர் கர்னல் மாண்ட்ரெஸ்ஸர் அணிவகுக்கச் சொல்லி, இராணுவ விதிகள், புதிய தொப்பி பற்றிய ஆணைகளை ரத்து செய்வதாக ஜூலை 17 அன்று அறிவித்தார். இருப்பினும் அங்கு பதற்ற நிலை தொடர்ந்து நீடித்ததால், பிரதான சூழ்ச்சிக்காரர்கள் என குற்றம் சாட்டப்பட்டு சுபேதார்கள் சித்திக் ஹுசைன். காதர் பெக், உமர் அலி பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டனர். ஜமேதார் ஷேக் சுல்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாளையங்கோட்டை
வேலூரில் ஆங்கிலேயருடன் போரிட்டு உயிரிழந்தவர்களின் உறவினர் பலர் இங்கிருந்த படையில் பணியாற்றினர். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் மதமாற்றம் என்பது கண்கூடாக நடந்துகொண்டிருந்தது. மதம் மாறிய கிறிஸ்தவர்கள் வாழ முதலுர் தனி குடியிருப்பாகத் தோன்றியிருந்தது (1799). எனவே, ஆங்கிலேயருக்கு எதிராகக் கிளர்ந்தெழும் எண்ணம் இப்படையினரிடையே தீவிரமாக இருந்தது.
இச்சூழலில் நடத்துநர் ஜேம்ஸ் வெல்ஷ் தனது படைப் போர்வீரர்களில் மறவர்களை நம்ப முடியாது என்ற முடிவுக்கு வந்து, முதலில் அச்சமூகத்தைச் சேர்ந்த நூறுக்கும் மேலான படைவீரர்களைப் பணி படை நீக்கம் செய்தார். பின்னர் முஸ்லிம் அதிகாரிகள், வீரர்கள் 450 பேர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறித்து, முகாமை விட்டு வெளியேற்றினார். 150 இந்து வீரர்களை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருக்க வைப்பதற்காக, அவர்களில் பலருக்குப் பதவி உயர்வு வழங்கினார். ஏற்கெனவே சமரசப் போக்கைக் கடைப்பிடித்திருந்த கம்பெனி அரசு, ஜேம்ஸ் வெல்ல் நடவடிக்கைகளை அங்கீகரிக்க மறுத்து, ஒரு விசாரணை மன்றத்தில் முன் விளக்கமளிக்குமாறு வேண்டியது. ஆனால் வெல்ஷ் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தலைமையின் எண்ணங்களையே வெல்ஷ் பிரதிபலித்திருந்தாலும், அதன் அடிப்படையில் அப்போதைக்கு அதை வெளிப்படுத்தாமல் இருக்க நினைத்ததே அதற்குக் காரணமாக இருக்க முடியும்.
பொது மன்னிப்பு
சிறையிலிருக்கும் கைதிகள் ‘எப்போதும் கம்பெனி இராணுவப் பணியில் சேர அனுமதிக்கக் கூடாது என்கிற தெளிவான புரிதலிலேயே விடுதலை செய்ய வேண்டும்’ என சிறப்பு விசாரணைக் குழு உரைத்திருந்ததையும் மீறி, இந்தியப் படையினருடன் சமரசப் போக்கை கடைபிடிக்க கம்பெனி நிர்வாகம் முடிவு செய்தது. சிறையிலிருந்து சுமார் 516 பேரை அரசு விடுதலை செய்து, இராணுவப் பணியில் மீண்டும் அனுமதித்தது. புதிய இராணுவ விதிகளையும் கிளர்ச்சிக்குக் காரணமாகப் புரிந்து கொண்டிருந்த அரசு மரண தண்டனை, பணி நீக்கம், நாடு கடத்தல் என தண்டனை வழங்கி அச்சுறுத்தியிருந்த போதிலும், கிளர்ச்சி மனப்பான்மை குறைவதற்குப் பதிலாக இந்தியப் படையினரிடையே அது பெருகி வந்ததைக் கண்டு அஞ்சியதே அதற்குக் காரணம் ஆகும்.
கிளர்ச்சிக்கான காரணங்கள்
சிறப்பு விசாரணைக் குழு ஐரோப்பிய இராணுவ ஒழுங்கு முறைகள், புதிய தலைப்பாகை ஆகியவை இந்திய வீரர்கள் மீது கிறித்தவ மதத்தைத் திணிப்பதற்கான முயற்சியாகக் கருதப்பட்டது. ‘தீ வைப்பதற்குரிய வெடிக்கிடங்கைத் திப்பு குடும்பத்தினரே தந்தனர்’ எனத் தீர்மானித்தது. கிளர்ச்சியின்போது சென்னை மாகாண ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிங் என்பவர், திப்பு மகன்களின் சூழ்ச்சியே கிளர்ச்சிக்கான காரணம் எனக் கருதினார். குறிப்பாக பதேஹைதர், மொய்சுதீன் ஆகியோர் சதிகாரர்களாக சித்தரிக்கப்பட்டார்கள். இராணுவத்தைப் பலிகடாவாக ஆக்குவதற்கு விரும்பாத கிராடாக் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் திருப்தி அடையாமல், மேலும் தீவிர விசாரணை நடத்திட அரசை வற்புறுத்தினார். சில இராணுவ நெறிமுறைகளின் தூண்டுதலால் ஏற்பட்ட மதம் சம்பந்தப்பட்ட பீதியே முக்கியமான காரணம் என கடப்பா, கர்னூல், பெல்லாரி மாவட்டங்களின் (Ceded districts) அன்றைய பிரதான ஆட்சியர் தாமஸ் மன்றோ கருத்து தெரிவித்தார்.
தலைப்பாகையை மாற்றியது ஓர் அற்ப விஷயமே அன்றி, அதுவே கிளர்ச்சிக்கான தூண்டுதலாக இல்லை எனவும், அரசியல் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், மாற்றங்கள் அமைதியான முறையில் அமல்படுத்தப்பட்டிருக்கும் என்றும் வரலாற்றறிஞர் எஸ்.எஸ். ஃபர்னல் எண்ணினார். நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்திலிருந்து இங்கு வந்த, இந்திய மக்களின் மொழி, பண்பாடு புரியாத, புதிய இளம் சந்ததியினர் இனத்திமிரால் தங்களை இந்தியரிடமிருந்து அந்நியப்படுத்திக்கொண்டதாக, ஜான் கே போன்ற இராணுவ வரலாற்றறிஞர்கள் கிளர்ச்சிக்கான காரணத்தை விளக்கினர். ஆனால் காரணிகளால் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் 1806இல் போர்ப் பதற்றம் நீடித்தது.
நாடுகளைக் கைப்பற்றும் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றிய கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம், அரியணையிலிருந்து அகற்றப்பட்டிருந்த மன்னர்களின் மத்தியில் பெரும் பகைமை உணர்வை ஏற்படுத்தியிருந்தது. வேலூரில் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின்னரும், மருது பாண்டியர் பிரகடனம் (1801) சென்னை வீதிகளில் ஒட்டப்பட்டிருந்ததும், இரகசியமாக இராணுவ மையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்ததும் இதைத் தெளிவாக்குகிறது. ஆனால் வேலூர்க் கிளர்ச்சியை இந்தக் கண்ணோட்டத்தில் வரலாற்றறிஞர்கள் உற்றுநோக்கவில்லை.
மதிப்பீடு
ஆங்கிலேயரின் நிலவரிச் சுரண்டல் கொள்கையினால் கடும் வறட்சி, உணவுப் பற்றாக்குறை என உருவாகியிருந்த கடுஞ்சூழலில், ஆட்சியை இழந்ததால் பாதிக்கப்பட்டிருந்த சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், அவர்களது சந்ததியினர், குறிப்பாக ஆந்திரா, ஒரிஸா மாநிலங்களுக்கிடையேயான பகுதிகளில் கம்பெனி அரசுக்குக் கப்பம் செலுத்தி வந்த கிட்டத்தட்ட பத்துப் பாளையக்காரர்கள், ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த தருணத்திற்காகக் காத்திருந்தார்கள்.
இந்தச் சூழ்நிலையில் புதிய இராணுவ விதிகள், தலைப்பாகை, உடை, கிறித்தவ மதமாற்றத்திற்கான முயற்சி என்ற பீதி பரப்பப்பட்டு, அதன் மூலம் தென்னிந்தியாவில் உருவாகியிருந்த மக்களுடைய அதிருப்தியைப் பயன்படுத்தி, ஆங்கிலேயர் ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு, மைசூர் சுல்தானின் ஆட்சியை மீண்டும் நிறுவத் திட்டமிடப்பட்டது. தென்னிந்தியப் படை வீரர்களும் அந்நியர் ஆதிக்கக் கொள்கையை வெறுத்து, வட்டார, அதிகாரிகளும், மொழி, சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஆங்கிலேய ஆட்சியைத் தூக்கியெறியத் திட்டமிட்டனர்.
போர் வீரர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்தி இறுதி முயற்சியை மேற்கொள்ள, ஆயுதங்களில் ஒன்றாக மதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வேலூரில் மட்டுமில்லாது, தென்னிந்தியாவில் இராணுவ முகாம்கள் உள்ள பகுதிகளில் அரசியல் நோக்கோடு தோன்றிய எழுச்சிகள், 1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சிக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தன. எனவே 1806ஆம் ஆண்டில் வெடித்த வேலூர்க் கிளர்ச்சி, 1857ஆம் ஆண்டின் பெருங்கிளர்ச்சிக்கு முன்னோடி என்று தயக்கமின்றிச் சொல்ல முடியும்.
தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், விலை ரூ. 280.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
