2024 ஒன்றிய பட்ஜெட் என்ற செல்லாக்காசு
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
2024 பிப்ரவரி 1 அன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அது பற்றிய விமர்சன பூர்வமான கருத்துக்களை பகிர்வதற்கு முன்னால், பட்ஜெட் என்ற அரசின் ஆயுதம் பற்றிய அறிவியல் பூர்வமான பார்வை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை காண்போம். அதன்பின் தாராளமய கால பட்ஜெட்டுகளின் பிரத்யேக தன்மைகளை விளக்குவோம். இதனை தொடர்ந்து நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ள பட்ஜெட்டை ஆய்வுக்கு உட்படுத்துவோம். இறுதியாக, இத்தகைய சூழலில் முற்போக்கு இயக்கங்களின் எதிர்வினை பற்றி விவாதிப்போம்.
பட்ஜெட்டுகளுக்குப் பின்னால்
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மீது தாக்கம் ஏற்படுத்த பட்ஜெட் மட்டுமின்றி பல கருவிகள் அரசிடம் உள்ளன. எனினும் அண்மைக் காலங்களில் – குறிப்பாக, 24 மணி நேர தொலைக்காட்சி சேனல்கள், ஆன்லைன் ஊடகங்கள் வந்த பிறகு – பட்ஜெட் பொதுவெளியில் கூடுதல் கவனம் பெற்று வருகிறது. இந்திய ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் முன்மொழியப்படும் மொத்த வரவு-செலவு தொகைகள் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 12-13%க்குக் குறையாமல் உள்ளதால் அதை ஆழமாக பரிசீலிப்பதும், விவாதிப்பதும், ஒரு ஜனநாயகக் கடமையாகும். அதே நேரத்தில், அரசு முன்மொழியும் பட்ஜெட் நிலவுகின்ற பொருளாதார அமைப்பின் அடிப்படை தன்மைகளை ஒட்டித்தான் இருக்க முடியும். நாட்டின் பெரும் பகுதி உற்பத்திக் கருவிகளும் பொருளாதார வளங்களும் ஒரு சிறிய பகுதியினர் கையில் குவிந்திருப்பதால், இவர்கள் நலன்களை ஒட்டியே பட்ஜெட்டுகள் அமையும் என்பதை நாம் அறிவோம். இந்திய பட்ஜெட்டுகளும் அவ்வாறே இந்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் சாதகமாகவே இருந்து வந்துள்ளதை நாம் பார்க்க முடியும். எனினும் நிலமும் பெரும்பகுதி இதர உற்பத்திக் கருவிகளும் சொத்துக்களும் ஒரு சிலரிடம் குவிந்திருப்பதும், இவற்றின் உடைமையாளர்களின் லாப வேட்டைக்கு மட்டுமே இவை பயன்படுவதும், மறுபுறம் பெரும்பகுதி மக்கள் தொழிலாளிகளாகவும் சிறு குறு உற்பத்தியாளர்களாகவும் இருந்துகொண்டு வேலையின்மை, விலைவாசி உயர்வு, வாழ்வாதாரங்களின் சீரழிவு ஆகியவற்றை சந்தித்து வருவதும் ஜனநாயக விரோதமானது என்ற அடிப்படையில் இவற்றை எதிர்த்து நாம் போராடி வருகிறோம். இத்தகைய வர்க்கப் போராட்டத்தின் பகுதியாகவே பட்ஜெட் பற்றிய நமது விமர்சனமும் களச்செயல்பாடும் அமையவேண்டும்.
தாராளமய கால பட்ஜெட்டுகள் – வரவு சார் கொள்கைகள்
இந்தியா போன்ற ஒரு முதலாளித்துவ நாட்டில் பொதுவாகவே பட்ஜெட்டுகள் பெருமுதலாளிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்றாலும் தாராளமய கால பட்ஜெட்டுகளுக்கு என்று ஒரு பிரத்தியேக தன்மை உண்டு. அது என்னவெனில், முதலாளித்துவ உலகம் முழுவதும் நிதி மூலதன ஆதிக்கம் கோலோச்சுவதால் அதன் நலனை பட்ஜெட்டுகள் புறந்தள்ள இயலாது என்பதாகும். இத்தகைய நிதி மூலதன ஆதரவு பட்ஜெட்டுகள் அரசின் பொருளாதார பங்கேற்பை குறைப்பதையும் தனியார்துறை பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதையும் தங்கள் இலக்காகக் கொண்டவை. இதன்படி வரவுகளை திரட்டும் அரசின் வரி கொள்கை கார்ப்பரேட்டுகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் மிகக்குறைவாகவே வரிபோடுவதாக இருக்கும். இதனால் ஏற்படும் வரவு பலவீனத்தை உழைக்கும் மக்கள் மீது கடுமையான வரிகளை விதித்து கறாறாக வசூல் செய்வதன் மூலம் அரசு எதிர்கொள்ளும். இதனை கார்ப்பரேட் வருமான வரி விகிதம் தாராளமயகாலத்திற்கு முன்பு 40-50% என்று இருந்த நிலையில் இருந்து 22%ஆக குறைக்கப்பட்டிருப்பதில் இருந்து நாம் அறியலாம். (அக்டோபர் 2019 இல் இருந்து புதிதாக அமைக்கப்படும் ஆலைத்தொழில் நிறுவனங்களின் லாபங்கள் மீது வரி 15% என்று குறைக்கப்பட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது.) அதிகபட்ச தனி நபர் வருமான வரி விகிதம் 30% என்றுள்ளது. இவ்விரு வரிவகைகளும் வரிசெலுத்துபவரின் கொடுக்கும் திறன் சார்ந்த வரிகள். அதிக வருமானம் என்றால் அதிக வரி விகிதம் என்ற வகையில் அமையும். எனவே இத்தகை வரிவிகிதங்களை உயர்த்தி வசூல் செய்து நாட்டு வளர்ச்சிக்கு, உழைக்கும் மக்கள் நலனுக்கு பயன்படுத்த முடியும். ஆனால் அத்திசையில் ஒன்றிய அரசு பயணிக்கவில்லை.
இந்திய திருநாட்டில் பாஜக ஒன்றிய அரசு சொத்து வரியை ரத்து செய்து விட்டது. வாரிசு வரி இல்லை. கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருமான வரிவிகிதங்கள் குறைவு. அதாவது, கொடுக்கும் வாய்ப்பு உள்ள செல்வந்தர்களுக்கும் அவர்களின் சந்ததிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் மேலும் மேலும் வரிச்சலுகைகள், குறைவான வரிவிகிதங்கள். மறுபுறம் அனைவருக்கும் ஒரே வரிவிகிதம் என்றமைந்துள்ள மறைமுக வரிகள் – ஜிஎஸ்டி, பெட்ரோல் டீசல் வரிவாயு மீதான கலால் வரிகள், இன்னபிற – தொடர்ந்து இந்திய நாட்டில் ஒன்றிய, மாநில அரசுகள் வசூலிக்கும் மொத்த வரி தொகையில் மக்களை தாக்கும் மறைமுக வரிகளின் பங்கு கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்காகும்.
வருமான வரிவிகிதங்கள் குறைக்கப்படுவதால் ஏற்படும் வரி வருமான இழப்பு மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானத்தையும் குறைக்கிறது. ஏனெனில், ஒன்றிய மாநில நிதிப்பகிர்வு ஏற்பாட்டின்படி, கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வரிவருமானம் மாநிலங்களுடன் பகிரப்படவேண்டியதாகும். மாநிலங்களின் மீதான ஒன்றிய அரசின் இன்னொரு நிதிசார் தாக்குதல், கூடுதல் சிறப்பு கலால் வரிகள் (இவற்றை ஸர்ச்சார்ஜ் என்று அழைப்பதுண்டு), குறிப்பிட்ட துறைகளின் செலவீனத்தை ஈடுகட்ட போடப்படும் பிரத்யேக ஸெஸ்(cess) வரிகள் ஆகிய வரிகளை உயர்த்தி மக்களையும் தாக்கி மாநிலங்களையும் வஞ்சிப்பதாகும். ஏனெனில் இவை ஒன்றிய அரசுக்கே சேரும்; மாநிலங்களுக்கு இதில் பங்கு இல்லை.
ஆக, ஒன்றிய அரசின் வரிக்கொள்கை நாட்டின் செல்வத்தை உருவாக்குகின்ற உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், உழைப்பு சுரண்டல் மூலம் கிடைக்கின்ற உபரிகளை வைத்து தங்கள் செல்வங்களை பெருக்கிக்கொண்டிருக்கும் முதலாளிகளுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் ஆதரவாகவும், உள்ளதை நாம் உணரலாம்.
வரிகள் தவிர , பொதுத்துறை நிறுவனங்களின் லாபம், பல்வேறு சேவைகளுக்கு அரசு விதிக்கும் கட்டணங்கள், இயற்கை மற்றும் இதர வளங்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானங்கள் ஆகியவையும் அரசுக்கு கிடைக்கும் வரவுகள். இவை எல்லாம் கடன் அல்லாத வரவுகள். இவை தவிர, கடன் வாங்குவதன் மூலமும் அரசு (பொதுத்துறை) சொத்துக்களை விற்பதன் மூலமும் அரசு கூடுதல் நிதி திரட்டலாம். இவை மூலதன வரவு என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் தாராளமயகொள்கை அரசு வாங்கும் கடனை வரவு கணக்கில் சேர்ப்பதில்லை. அரசின் மொத்த செலவில் இருந்து கடன் அல்லாத வரவுகளை மட்டும் கழித்து பற்றாக்குறையை கணக்கிடுகிறது. அதேசமயம் அரசு தனது (உண்மையில் மக்களது) பொதுத்துறை சொத்துக்களை விற்று பெறும் வருமானத்தை வரவாக கணக்கில் கொள்கிறது. அரசின் நிதிப் பற்றாக்குறையை ஒரு இலக்கிற்குள் கொண்டுவர வேண்டும் என்று நிர்ப்பந்தித்து, பொதுத்துறை சொத்துக்களை தனியார்மயமாக்கும் முனைவை தாராளமயக் கொள்கை மேற்கொள்கிறது. இதன் வர்க்கத்தன்மையை நாம் உணரவேண்டும்.
பெறுகின்ற வரி உள்ளிட்ட மொத்த வருமானத்தை ஒன்றிய அரசு எப்படி செலவு செய்கிறது என்று அடுத்து பார்ப்போம்.
தாராளமய கால பட்ஜெட்டுகள் – செலவு சார் கொள்கைகள்
அரசின் செலவுகளை குறைக்கவேண்டும் என்பதே தாராளமயத்தின் இலக்கு. எனவே தொடர்ந்து மக்களுக்கான முக்கிய மானியங்கள் – உணவு, உரம் மற்றும் எரிபொருள் மானியங்கள் – வெட்டப்படுகின்றன. பல்வேறு நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் பண அளவில் சிலசமயம் உயர்த்தப்பட்டாலும் விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் சரிந்துவருகின்றன. அல்லது மிக மந்தமாக அதிகரிக்கின்றன. இந்த ஒதுக்கீடுகளை தேச உற்பத்தி மதிப்பின் சதவிகிதமாக கணக்கிட்டால், ஒன்றிய பாஜக ஆட்சியில் அவை பல துறைகளில் தொடர்ந்து குறைந்துவருகின்றன என்று கூட கூறலாம். ஆனால் பாதுகாப்பு துறையை ஒதுக்கிவிட்டு பார்த்தால், ஒரு செலவு இனம் கூடிக்கொண்டே போகிறது. மக்கள் மீது அதிக வரிச்சுமையை ஏற்றி கார்ப்பரேட்டுகள் மற்றும் செல்வந்தர்களின் வரிகளை குறைத்துவரும் ஒன்றிய அரசின் கொள்கைகள் ஒப்பீட்டளவில் குறைந்துவரும் அரசின் செலவை எதிர்கொள்ளக்கூட கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்துகின்றன. இதனால் கடனும் வட்டியும் கூடுகின்றன. ஒருபுறம் உணவு, உரம், எரிபொருள் ஆகிய மூன்று முக்கிய மானியங்களின் கூட்டுத்தொகை தேச உற்பத்தி மதிப்பில் 2%ஐக் கூட தாண்டுவதில்லை. மறுபுறம் அரசுக்கு கடன் கொடுக்கும் செல்வந்தர்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் ஆண்டு தோறும் வட்டியாக ஒன்றிய அரசு தரும் தொகை தேச உற்பத்தி மதிப்பில் 4% ஐ பல ஆண்டுகளில் விஞ்சியுள்ளது. ஏழைகளை கொள்ளையடித்து செல்வந்தர்களுக்கு வாரிக் கொடுக்கும் கருவியாக பட்ஜெட் செயல்பட்டு வருவது பொது விவாதங்களில் இடம் பெறுவதில்லை. தாராளமய கொள்கைகளின் கீழ் கல்வி, ஆரோக்கியம், கட்டமைப்பு ஆகியவை லாப அடிப்படையில் செயல்படும் என்பதால், இத்துறைகளின் மீதான அரசின் நெறிமுறைகள் வலுவாக இல்லை. அரசின் ஒதுக்கீடுகள் பொருத்தமான அளவிற்கு அதிகரிப்பதில்லை. வர்க்க வெகுஜன போராட்டங்களின் விளைவாக, அரசு இத்துறைகளில் ஓரளவிற்கு செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்துறைகளில் அரசின் திட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும் பணி நிலமைகளும் மோசமாகவே உள்ளன. இதில் பெண் ஊழியர்கள் பிற துறைகளைவிட கூடுதலாக உள்ளனர்; கூடுதல் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர் என்பதையும் குறிப்பிட வேண்டும். இத்தளங்களில் தனது அரசியல் நலன் கருதி பாஜக ஒன்றிய அரசு பல திட்டங்களை பெருத்த விளம்பரங்களுடன் துவக்கினாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் திட்டங்களின் செலவுகளை மாநில அரசுகள் மீது சுமத்தும் போக்கும் உள்ளது.
மொத்தத்தில் தாராளமய கால ஒன்றிய பட்ஜெட்டுகள் பன்னாட்டு நிதி மூலதனத்தை ஈர்க்க வேண்டும் என்பதையே பிரதான நோக்கமாக வைத்துள்ளன. இதன்பின் இருப்பது என்ன? பன்னாட்டு வர்த்தகத்தின் கதவுகளை முழுமையாக கட்டுப்பாடின்றி திறந்து விட்டிருப்பதால் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி மதிப்பை விட இறக்குமதி மதிப்பு தொடர்ந்து மிக அதிகமாக உள்ளது. இதனால் அந்நியச்செலாவணி கணக்கில் ஏற்படும் பெரும் பள்ளத்தை சேவைத்துறை ஏற்றுமதி மூலம் நிகரமாக கிடைக்கும் அந்நியச்செலாவணியையும் வெளிநாடுவாழ் இந்திய உழைப்பாளி மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் அந்நியச் செலாவணியையும் வைத்து சமாளிக்க இயலவில்லை. இதனால் அந்நியச்செலாவணியை எப்படியாவது கொண்டுவரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனவே அந்நிய நிதி மூலதனத்தை ஈர்க்க அரசு சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் மக்களை தாக்குவதும் மூலதனத்தை ஈர்ப்பது என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பன்னாட்டு நிதிமூலதனத்திற்கும் வரிச்சலுகைகளை வாரி வழங்குவது என்பதும் பட்ஜெட்டிலும் பிறவழிகளிலும் தொடர்கின்றன.
பாஜகவின் 2024 ஆண்டுக்கான பட்ஜெட்
சென்ற மாத இதழில் பாஜக அரசின் பத்தாண்டுகால (2014-2024) நாசகர பொருளாதார கொள்கைகள் மக்களை பெரும் துயருக்கு உள்ளாக்கியிருந்தது பற்றி விரிவாக விளக்கியிருந்தோம். சுருக்கமாக மூன்று அம்சங்களை நினைவு கூறலாம். ஒன்று, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ள தாராளமய கொள்கையுடன் கூடுதலாக பெருமுதலாளிகளையும் பன்னாட்டு நிதி மூலதனத்தையும் ஈர்ப்பதை மைய நோக்கமாகக் கொண்ட அதிதீவிர தாராளமயம். இரண்டு, முறைசாராத் துறைகளையும் சிறுகுறு தொழில்முனைவோர், சிறுகுறு விவசாயிகள், சிறுகுறு வணிகர்கள், தொழிலாளி வர்க்கத்தினர் ஆகியோரையும் சாதாரண மக்களையும் பெரும் துயரத்திற்கும் இழப்புகளுக்கும் உட்படுத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்த, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள். மூன்று, பெரும் தொற்று காலத்தின் சவால்களை பாஜக அரசு எதிர்கொண்ட விதம் புலம்பெயர் தொழிலாளர்களையும், மாநில அரசுகளையும், பெரும்பகுதி உழைப்பாளி மக்களையும் கடுமையாக பாதித்த விதம். இக்கொள்கைகளின் விளைவாக நாடும் மக்களும் இருபெரும் பிரச்சினைகளை இன்று எதிர்கொண்டுள்ளனர். ஒன்று, எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வேலையின்மை, அதிலும் இளம்வயதினர், படித்தவர்கள், மற்றும் பெண்கள் இதில் கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டாவது, வரலாறு காணாத விலைஉயர்வு. இவ்விரு பிரச்சினைகளைப் பற்றி பட்ஜெட் உரையிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி, எந்த விவாதமும் இல்லை. மாறாக, எல்லாம் சிறப்பாக இருப்பதாகவும், பாஜக அரசு வருகிற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், அப்பொழுது விவரங்களையும் திட்டங்களையும் பேசிக்கொள்ளலாம் என்ற தொனியில் பட்ஜெட் உரை அமைந்துள்ளது. 2024-2025க்கான முழு ஆண்டு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கோரவில்லை என்றும், நடப்பு நிதி ஆண்டு மார்ச் 31 2024 அன்று முடிந்துவிடுவதால் அதற்குப் பின் தேர்தல் நடந்து புதிய அரசு பொறுப்பு ஏற்கும் காலம் வரை மேற்கொள்ள வேண்டிய செலவுக்கு மட்டுமே ஒப்புதல் கோருவதாகவும் நிதி அமைச்சர் உரை கூறுகிறது. எனவே 2024-25 க்கான வரவு-செலவு முன்மொழிவுகளை விவாதிக்க வேண்டியதில்லை என்றாலும், அமைச்சர் முன்வைத்துள்ள தரவுகள் மக்களுக்கு எதிரான தீவிர சிக்கன நடவடிக்கைகள் தொடரும் என்பதை சூசகமாக தெரிவிக்கின்றன. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், மானியங்கள் வெட்டப்படும் என்றும் தெரிகிறது.
மானியங்கள் வெட்டு
இக்கட்டுரையில் 2023-24 பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டபொழுது முன்வைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகள், இப்பொழுது அமைச்சர் முன்வைத்துள்ள திருத்தப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைக்கலாம்.
மக்களுக்கு அவசியமான மானியங்களை முதலில் பார்ப்போம். 22-23 ஆண்டில் உணவு மானியம் ரூ 2,72,802 கோடியாக இருந்தது. 23-24இல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ 2,12,332 கோடியாக குறைந்துள்ளது. ரூ 60,500 கோடி வெட்டப்பட்டுள்ளது. உரமானியம் 22-23இல் ரூ 2,51,339 கோடி. 23-24 திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ 1,88,894 கோடி ஆகி, ரூ 62,445 குறைவு. வரும் 24-25இல் இவை முறையே ரூ 2,05,250 கோடி, ரூ 1,64,000 கோடி என்று குறைக்கப்பட்டுள்ளன. ஆக மக்களுக்கான மானியங்களை வெட்டிச்சாய்க்கும் தனது திருப்பணியை ஆர் எஸ் எஸ்-பாஜக அரசு தொடர்கிறது.
இவ்விரு மானியங்களோடு பெட்ரோல் மானியத்தையும் சேர்த்துக்கொண்டால், 22-23இல் ரூ 5,30,968 கோடி என்று இருந்த மானியத்தொகை 23-24 ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ 4,13,466 கோடியாக குறைந்துள்ளது. வரும் ஆண்டில் அதைவிட குறைவாக ரூ 3,81,175 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேகாலத்தில் நாட்டின் ஜிடிபி ஆண்டுக்கு 7 சதமான வேகத்தில் அதிகரிப்பதாக அரசு கூறிவருகிறது. இதன் நம்பகத்தன்மை சர்ச்சைக்குரியது என்றாலும், மூன்று முக்கிய மானியங்களின் மொத்த அளவு ஜிடிபி விகிதமாக பார்த்தால் மேலும் குறைந்துள்ளதை அறியலாம்.
அதிகரிக்கும் கடன் மற்றும் வட்டி சுமை
அரசின் நடப்பு செலவுகளில் ஒரு முக்கிய இனம் அரசு செலுத்தும் வட்டி. செல்வந்தர்களுக்கு வரிச்சலுகைகள் வாரி வழங்கப்படுவதால், தனது சிக்கனமான செலவை சந்திக்கக்கூட ஒன்றிய அரசு ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாக கடன் வாங்குகிறது. இதனால் வட்டி சுமை கூடுகிறது. இச்சுமை 22-23இல் ரூ 9,28,000 கோடியாக இருந்தது. 23-24 திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, ரூ10,55,427 கோடியாக உயர்ந்துள்ளது. இதே ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட மூன்று முக்கிய மானியங்களின் கூட்டு தொகை முறையே ரூ 5,30,988 கோடி, ரூ 4,13,466 கோடி என்றிருந்தன. அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெரும் வட்டி பெறுவது எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள செல்வந்தர்கள். இதைவிட கணிசமாகக் குறைவான மானியத்தொகை எண்ணற்ற விவசாயிகளையும் ஏழை மக்களையும் சென்றடைகிறது. வர்க்க நோக்கில் சொல்வதாக இருந்தால், ஏழைகளிடம் மறைமுக வரிமூலம் பணம் திரட்டி, அதில் ஒருபகுதியை பெரும் செல்வந்தர்களுக்கு வட்டியாக செலுத்தும் கொள்ளை பட்ஜெட் வாயிலாக நடக்கிறது. பொதுவெளியில் நிகழும் பட்ஜெட் பற்றிய விவாதங்களில் இதுபோன்ற உண்மைகளைப் பேசவே வாய்ப்பு குறைவு! பிரதானமாக நேர்முக வரிகள் மூலம் கறாராக வரி வசூல் செய்யப்பட்டால், அரசு மக்கள் நலனுக்கான செலவுகளை கணிசமாக உயர்த்த முடியும். ஆனால் அரசின் வரக்கத்தன்மையும் பன்னாட்டு நிதிமூலதன சார்பும் இதனை அனுமதிக்காது.
அரசின் பிஸ்கல் பற்றாக்குறை பற்றி
நமது நாட்டில் 2004ஆம் ஆண்டில் அமலுக்கு கொண்டுவரப்பட்ட ஃபிஸ்கல் (நிதிசார்) பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் (Fiscal Responsibility and Budget Management Act) ஒன்றிய அரசின் ஃபிஸ்கல் பற்றாக்குறை (அதாவது, அரசின் மொத்த செலவில் இருந்து கடன் அல்லாத வரவுகளை கழித்தால் வரும் தொகை) தேச உற்பத்தி மதிப்பில் 3 சதவிகிதத்தை தாண்டக் கூடாது என்று ஒன்றிய அரசை பணிக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இச்சட்டம் பெரும்பாலும் மீறப்பட்டுள்ளது என்றாலும் (அதுதான் யதார்த்தம், சட்டம் முட்டாள்தனமானது!) தனது மக்கள் நலம் சார்ந்த பொறுப்புகளை நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய செலவுகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு இதனை ஒரு கேடயமாக ஒன்றிய அரசு பயன்படுத்திவருகிறது. நடப்பு நிதி ஆண்டில் இப்பற்றாக்குறை 5.8% ஆகிய உள்ளதாக அரசு கணக்கு காட்டுகிறது. ஆகிய அரசே தொடர்ந்து இச்சட்டத்தை மீறுகிறது. ஆனால் ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தால் மாநில அரசுகள் தங்கள் ஃபிஸ்கல் பற்றாக்குறையை மாநில உற்பத்தி மதிப்பில் 3%க்கும் குறைவாக வைத்திருக்க வேண்டுமென பணிக்கப்படுகிறார்கள். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் தொடர்ந்து நியாயம் வழங்க மறுக்கும் நிலையில், இது மாநில உரிமைகளுக்கும் நலனுக்கும் எதிரானது என்பதை நாம் பார்க்க வேண்டும். நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளதுபோல், கடனை ஒரு மாநில அரசின் வருவாயாகக் கருத மறுக்கும் இச்சட்டம் பொதுத்துறையை தனியார் மயமாக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லவே பயன்படுகிறது.
ஒரு கொடுமையை நாம் இங்கு பதிவிட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கடன் வாங்கினால் அதை வரவு என்று கருத முடியாது என்று சொல்லும் தாராளமய தத்துவம் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெரும் கம்பனிகள் பெறும் கடனுக்கு வரம்புகளை வைக்கவில்லையே? இதுதான் நவீன தாராளமயம்! வாங்கிய கடனை பெரு முதலாளிகள் கொடுக்காவிட்டால் பரவாயில்லை; நாங்கள் கடனை வாராக்கடன் என்று எழுதிவைத்து, பின்னர் கோப்பை மூடி விடுகிறோம் என்பது இந்த கொடுமைக்கு ஒன்றிய பாஜக அரசின் சிறப்பு பங்களிப்பு!
நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒன்றிய நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ள அர்த்தமற்ற பட்ஜெட்டை சுற்றி நமது கள விவாதங்கள் அமைவதை விட, பாஜக அரசின் பத்தாண்டு கால பன்னாட்டு, இந்நாட்டு பெருமுதலாளிகளுக்கு ஆதரவான, உழைக்கும் மக்களுக்கு விரோதமான, மாநில உரிமைகளுக்கு விரோதமான, கொள்கைகளையும், அதனையொட்டி கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பட்ஜெட்டுகள் மக்கள் விரோதமாக இருப்பதையும் மிக முக்கிய களப் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை பட்ஜெட் கண்டுகொள்ளாமல் கடந்துபோவதன் வர்க்கத்தன்மையையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
