
விவசாயி-தொழிலாளி விரோத ஒன்றிய நிதிநிலை அறிக்கை
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
பிப்ரவரி 1, 2026 அன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தனது உரையில், ஒன்றிய அரசின் நோக்கம் நம் நாட்டின் ஏழை மக்கள் மீது முழு கவனம் செலுத்துவதுதான் என்று கூறினார். வளர்ச்சியின் பயன், பட்டியல் இன மக்கள், பழங்குடியினர், நாடோடிகள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் மகளிர் ஆகிய பகுதியினரை சென்றடைவதை ஒன்றிய அரசு உறுதி செய்யும் என்றார். இவ்விரு கூற்றுகளும் கலப்படமற்ற பொய்கள் என்று அறுதியிட்டு சொல்ல முடியும். நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கும் கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கும் எந்த பயனும் இல்லை. மாறாக, நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முந்தைய பல மாதங்களாக, விவசாயிகள் விரோத, தொழிலாளிகள் விரோத நடவடிக்கைகள் பலவற்றை ஒன்றிய அரசு எடுத்துள்ளது.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலன் புறக்கணிப்பு
விவசாய விளைபொருட்களுக்கு பேராசிரியர் சாமிநாதன் தலைமையிலான தேசிய வேளாண் ஆணையம் பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்க, ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. வேளாண் துறையில் பன்னாட்டு பெரும் கம்பெனிகளும், இந்திய பெரு முதலாளிகளும் ஆதிக்கம் செலுத்த உதவும் வகையில், மிக மோசமான விதை மசோதாவை கொண்டு வந்துள்ளது. நிதிநிலை அறிக்கையில், கார்ப்பரேட் கம்பனிகளின் லாபம் கடந்த 2022-23, 23-24 ஆகிய இரு நிதி ஆண்டுகளில் மட்டுமே 25 லட்சம் கோடி ரூபாய் என்று கூறுகிறது. ஆனால், கொள்ளை லாபம் ஈட்டிவரும் பெரும் கம்பெனிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் ரத்து செய்துள்ள ஒன்றிய அரசு, விவசாயிகளுக்கு கடன் ரத்து செய்ய மறுக்கிறது. கிராமப்புற தொழிலாளிகளுக்கு, தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் மூலம் கிடைத்துவந்த ஓரளவு வேலை உத்தரவாதத்தையும், ஒன்றிய அரசு அழித்துவிட்டது. விவசாயிகளும் ஊரக தொழிலாளிகளும் போராட்டக் களத்தில் உள்ளனர்.
தொழிலாளி வர்க்கத்தை பொருத்தவரையில் தொழிலாளர் சட்ட தொகுப்புகள் (Labour Codes) மூலம் தொழிலாளர்கள் நீண்ட காலம் நெடிய போராட்டங்கள் நடத்திப் பெற்ற உரிமைகளை, ஒன்றிய அரசு பறித்துள்ளது. இதனை எதிர்த்து, தொழிலாளி வர்க்கம் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திவருகிறது. வரும் காலங்களில் இவை பேரலைகளாக எழும்.
நிதிநிலை அறிக்கையில் பன்னாட்டு அரங்கில் நிலவும் நெருக்கடி, இந்திய பொருளாதாரம் எதிர்கொண்டுவரும் மிகப்பெரும் வேலையின்மை மற்றும் வாழ்வாதார நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொள்ள, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை எந்தவகையிலும் உதவாது.
வளர்ச்சிக்கு ஊக்கம் இல்லை
2025-26 இல் ஒன்றிய அரசின் மொத்த செலவு (திருத்தப்பட்ட மதிப்பீடு) ரூ 49.65 லட்சம் கோடி. வரும் 26-27 நிதி ஆண்டுக்கு ரூ 53.4 லட்சம் கோடி செலவு என்ற மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6-7 % அளவுதான் அதிகம். இதுவும் நிறைவேறும் என்ற உத்தரவாதம் இல்லைl. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால், உண்மை அளவில் இது தேக்கநிலை என்றுதான் கொள்ளவேண்டும். மேலும், நடப்பு ஆண்டு, மொத்த தேச உற்பத்தி மதிப்பு – ஜிடிபி 8%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் பின்புலத்தில், தேச வருமானத்தின் விகிதமாக, ஒன்றிய அரசின் ஒதுக்கீடு பெரிதும் குறைந்துள்ளது என்ற முடிவுக்குத்தான் வர இயலும். இதன் விளைவு, இன்று பெரும் பகுதி மக்களை பாதித்துவரும் வேலையின்மை மற்றும் கிராக்கியின்மை பிரச்சினைகள், வரும் ஆண்டிலும் தொடர்வதை, தீவிரம் அடைவதைத் தடுக்க, ஒன்றிய அரசின் பட்ஜெட் எந்த வகையிலும் உதவாது என்பதை நாம் புரிந்துகொள்ள இயலும்.
செல்வந்தர்களை பாதுகாக்கும் பட்ஜெட்
ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்திவரும் பாஜக அரசு, 2014 முதல் சமர்ப்பித்துள்ள அனைத்து பட்ஜெட்டுகளிலும் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு ஏகபோகங்களுக்கும், வரிச்சலுகைகளை வாரி வழங்குவதையே தனது கொள்கையாக செயல்படுத்தி வருகிறது. 2019ஆம் ஆண்டில், இந்தியாவில் சந்தைகள் மந்தமாக உள்ளதாக பெருமுதலாளிகள் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த மந்தநிலைக்கு முக்கிய காரணம், பாஜக அரசின் அதிதீவிர தாராளமய கொள்கைகளும், அதன் மிகத்தவறான செல்லாக்காசு நடவடிக்கையும், குளறுபடியாக அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டி (GST)யும் தான். அது ஒருபுறமிருக்க, முதலாளிகளுக்கு உடன் செவிமடுத்து, 2019-20 நிதி ஆண்டில் (20-21 பட்ஜெட்டையும் சேர்த்து) அவர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரி சலுகை அளித்தது பாஜக அரசு. இந்த அரசின் கார்ப்பரேட் பாசம் எல்லையற்றது. சென்ற ஆண்டு பட்ஜெட்டில் உயர் வருமானம் பெறுவோரின் வரி விகிதங்களை குறைத்து, சலுகைகளை இணைத்து ரூ 1 லட்சம் கோடி மதிப்பிற்கு வருமான வரி சலுகை அளிக்கப்பட்டது. பெரும் கம்பனிகளுக்கு வரிச் சலுகைகள் தொடர்கின்றன. எந்த அளவுக்கு என்றால், 2025-26 நிதி ஆண்டில் கார்ப்பரேட் கம்பெனி லாபங்கள் மீதான வரிகள் மூலம் கிடைக்கின்ற வரித்தொகையைவிட தனிநபர் வருமான வரி மூலம் ஒன்றிய அரசுக்கு அதிகத் தொகை கிடைக்கிறது. இந்திய உழைப்பாளி மக்களின் உழைப்பால் கொழுத்துவரும் கம்பெனிகளும் செல்வந்தர்களும், நாட்டு வளர்ச்சிக்கு வருமானம் மற்றும் லாபம் மீதான வரிகள் மூலம் அளிக்கும் பங்கு ஒப்பீட்டளவில் குறைந்துகொண்டே வருகிறது. ஒன்றிய அரசு இவர்கள் மீது பெரும் பரிவு கொண்டிருப்பதோடு, இவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளால் ஏற்படும் அரசு வருமான இழப்பை ஜிஎஸ்டி மூலம் ஏழை நடுத்தர மக்களை தாக்கி ஈடுகட்ட முயற்சிக்கிறது. இதன் மூலம் மட்டும் வளர்ச்சிக்கான முதலீடுகளை அரசால் மேற்கொள்ள முடியாது என்ற நிலையில், அரசின் செலவுகளை குறைப்பது என்பதே அரசின் முக்கிய பாதையாகிறது. இதனால் பெரும் பகுதி மக்களின் வாழ்வில் பொருளாதார மந்தநிலை தொடர்கிறது. வேலை இன்மையும் கொடிய வறுமையும் இன்று நாட்டு மக்களின் அன்றாட வாழ்வை பெரும் சவாலாக மாற்றியுள்ளாதற்கு பெரும் பொறுப்பு ஏற்க வேண்டியது ஒன்றிய அரசுதான்.
பன்னாட்டு அரங்கில் ஏகாதிபத்தியம் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளதை நாம் அறிவோம். இன்று ஏகாதிபத்தியம் நெருக்கடியில் உள்ளது. அதன் சுமைகளை வளரும் நாடுகளின் மீது திணிக்க முயல்கிறது. துரதிர்ஷ்டவசமாக, ஏகாதிபத்திய முகாமை எதிர்க்கும் இடத்தில் நிற்க இந்திய அரசு மறுக்கிறது. பல பன்னாட்டு அரங்குகளில் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து நிற்கும் அவல நிலையை நாம் காண்கிறோம். இந்த நிலைக்கு, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ் – பாஜக அரசு பின்பற்றிவரும் தீவிர தாராளமய கொள்கைகளும், ஏகாதிபத்தியத்தின் பால் அரசு மேற்கொண்டுவரும் மென்மையான அணுகுமுறைகளும் நிலைகளும் காரணமாகும். 26-27 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள நிலைபாடுகள் இதனையொட்டியே அமைந்துள்ளன. பன்னாட்டு ஏகபோக கம்பனிகளுக்கு பல புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ‘தொழில் நடத்துவதை எளிதாக்குவது’ என்ற மந்திரம் நிதி அமைச்சர் உரைகளில் தொடர்ந்து முக்கிய இடம் பெறுகிறது. இதன் ஒருபக்கம், பன்னாட்டு, இந்நாட்டு பெரும் கம்பெனிகளுக்கு எல்லையற்ற வரி மற்றும் இதர சலுகைகள். இதன் மறுபக்கம் உழைக்கும் மக்கள் பல பல பத்தாண்டுகள் போராடிப்பெற்ற உரிமைகளை அழிக்கும் முயற்சி. விவசாயிகள் வீரம் செறிந்த போராட்டங்கள் நடத்தி அரசின் மூன்று கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை குப்பை தொட்டியில் போட வைத்த வரலாற்றை புறந்தள்ளி, பல மறைமுகமான வழிகளில் வேளாண் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை புகுத்த நடைபெற்றுவரும் தொடர் முயற்சிகளில் பட்ஜெட்டும் ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் அவலமும் நிகழ்கிறது.
தாராளமயத்தின் அறுவடை
பாஜக அரசின் அதிதீவிர தாராளமயத்தின் வெளிப்பாடுகளை நிதிநிலை அறிக்கையில் பார்க்கலாம். ஒரு சில அம்சங்களை விவரிப்போம். நடப்பு ஆண்டில் அரசுக்கு கிடைக்கும் “நடப்பு வருவாயில்” (revenue receipts) ஒரு கணிசமான பகுதி, வாங்கிய கடன்களுக்கு அரசு கட்டும் வட்டியில் செலவாகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் 12 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் அவ்வாறு செலவாகிறது. செல்வந்தர்கள் மீதும் கம்பனிகள் மீதும் வரி போட்டு வசூல் செய்வதற்கு பதில், இந்தப் பாதையில் தாராளமயம் பயணிக்கிறது. மீண்டும் மீண்டும் மானியங்களை வெட்ட வேண்டும் என்று பெருமுதலாளிகளும் ஊடகங்களும் கூவுகின்றன. ஆனால் உண்மை என்ன? நடப்பு ஆண்டில் உரம், உணவு மற்றும் எரிபொருள் ஆகிய மூன்று முக்கிய மானியங்களின் மொத்த தொகையே சுமார் 4.7 லட்சம் கோடி ரூபாய்தான். ஆனால், செல்வந்தர்களுக்கு வட்டியாக அரசு வழங்கும் தொகை, அதைப்போல மூன்று மடங்கு. இதுதான் தாராளமயம். “உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறி! விவசாயிகளின் வயிற்றில் அடி! நலத்திட்டங்களை வெட்டு!” என்பதுதான் தாராளமயம். இதைத்தான், பாஜக அரசின் பட்ஜெட்டுகளும் இதர கொள்கைகளும் பன்னிரண்டு ஆண்டுகளாக செய்து வருகின்றன.
நிதிநிலை அறிக்கைளும் நலத்திட்ட ஒதுக்கீடுகளும்
நிதிநிலை அறிக்கையில் முன்மொழியும் நலத்திட்ட ஒதுக்கீடுகளை அரசு மதிப்பதில்லை. தாராளமய கொள்கைகள் நலத்திட்ட ஓதுக்கீடுகளை வரவேற்பதில்லை. எனினும், மக்கள் போராட்டங்களின் வீச்சை முற்றிலும் அரசால் புறம்தள்ள முடிவதில்லை. எனவே, நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், ஒதுக்கீடுகள் ஓசைப்படாமல் பின்னர் குறைக்கப்படுகின்றன. இது தொடர்பான சில எடுத்துக்காட்டுகளை பார்ப்போம். “Budget at a glance, Major Expenditures” என்று ஆவணங்களில் ஒரு அட்டவணை உள்ளது. அதன்படி, சில உதாரணங்கள் :
துறை ஒதுக்கீடு (கோடி ரூபாய்களில்) 2025-26
(மதிப்பீடு) (திருத்தப்பட்ட மதிப்பீடு)
கல்வி 128650 121949
ஊரக வளர்ச்சி 265817 212750
அறிவியல் துறைகள் 55679 37014
சமூக நலம் 60052 50053
நகர்ப்புற வளர்ச்சி 96777 57204
மாநிலங்களுக்கு
தரவேண்டிய தொகை 555100 498159
பிரதமர் இன்டர்ன்ஷிப்
திட்டம் 10831 526
நலத்திட்ட ஒதுக்கீடுகளே குறைவு. அவை கூட முழுமையாக அமலாக்கப் படுவதில்லை! பிரதமர் இன்டர்ன்ஷிப் கதியை பாருங்கள். இதைத்தான் பெரும் வேலை வாய்ப்பு முனைவு என்று அரசு சொல்லி வருகிறது!!
இறுதியாக
இச்சிறிய கட்டுரையில் இந்திய ஒன்றிய அரசின் வரவு-செலவு அறிக்கை குறித்த ஒரு பருந்துப் பார்வையைத்தான் காண முடிந்தது. இனி வாய்ப்புகள் வரும்பொழுது மீண்டும் பேசுவோம்! ஆனால், ஒரு விஷயம் தெளிவாக முன்வருகிறது. பாஜக அரசு, அதிதீவிர தாராளமய கொள்கைகளை பின்பற்றி வரும் அரசு. இன்றைய சிக்கலான பன்னாட்டு சூழலை எதிர்கொள்ள இயலாமல், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் துணிவின்றி, தாராள மய பாதையிலேயே நிதிநிலை அறிக்கை தொடர்கிறது. அரசு சார்பாக முன்வைக்கப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், ஆங்காங்கு சுயச் சார்பு பேசப்பட்டாலும், நிதிநிலை அறிக்கையில் அவற்றின் சுவடே இல்லை எனலாம்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply