சமகால உலகில் வளர்ந்துவரும் பலதுருவ போக்குகளும் அவற்றின் வரம்புகளும்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
சமகால உலகத்தில் சோசலிசத்தை நோக்கி மானுட சமூகம் பயணிக்கவேண்டும் என்ற புரிதலின் அடிப்படையில், வர்க்கத் திரட்டலையும் வர்க்கப் போராட்டத்தையும் பிரதானமாக வைத்து செயல்படும் புரட்சிகர இயக்கங்கள் சந்திக்கும் சிக்கலான பல பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று, முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாக உலகம் நாடுகளாக உருவாகி, பிரிந்து நிற்கிறது என்பதாகும். உலகமயமாக்கல் பற்றி பல பத்து ஆண்டுகள் பேசப்பட்டு வந்தாலும், ஒவ்வொரு நாட்டின் வர்க்கப் போராட்டமும் பெரும்பாலும் அதன் எல்லைக்குள்தான் களத்தில் நிகழ்கிறது. அதேபோல், உலகெங்கிலும் பன்னாட்டு நிதி மூலதனம் மிக முக்கிய சக்தியாக வளர்ந்துள்ள போதிலும், வலுவான நாடுகளின் அரசுகள் பன்னாட்டு களத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய சூழலில், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படும் நமது இயக்கத்திற்கு, பன்னாட்டு அரங்கில் நாடுகளுக்கிடையேயும், முகாம்களுக்கு இடையிலும், நடப்பில் உள்ள பலாபலங்கள் குறித்தும், முரண்கள் குறித்தும், சமகால ஏகாதிபத்திய முகாமிலும் சோசலிச நாடுகளிலும் மாறிவரும் கள நிலைமைகள் குறித்தும், பிற நாடுகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் குறித்தும், தொடர்ந்து பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தப்பணியை தொடர்ந்து செய்து வருகிறது.
வேகமாக மாறி வரும் உலகம்
கடந்த இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதல் உலகப்போர் துவங்கிய 1914இல், உலகம் முழுவதும் ஏகாதிபத்தியம் கொடிகட்டிப் பறந்தது. எனினும், முதலாளித்துவ வல்லரசுகளுக்கிடையில் வலுவான முரண்கள் இருந்தன. 1916ஆம் ஆண்டு லெனின் எழுதிய மிகச் சிறந்த மார்க்சீய சிறு நூலான ‘ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்’ வெளிவந்தது. இந்த நூல் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் லாப வேட்டையின் காரணமாக முரண்கள் முற்றி, மீண்டும் மீண்டும் யுத்தங்கள் வெடிக்கும் என்று மிகச்சரியாக கணித்தது. மேலும், சோசலிச புரட்சிகள் வெல்லும் வாய்ப்பும் ஏகாதிபத்திய காலத்தில் முன்னுக்கு வரும் என்பதையும் லெனின் தனது நூலில் விளக்கியிருந்தார். லெனின் முன்வைத்த கருத்துக்கள் ஆரூடம் அல்ல; அறிவியல்தான் என்று வரலாறு நிரூபித்தது. முப்பது ஆண்டுகளில் (1914-1945) ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் லாப வேட்டையால் மானுடம் இரண்டு கொடிய உலக யுத்தங்களை சந்திக்க நேர்ந்தது. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலக முதலாளித்துவம் அதன் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் பலவீனம் அடைந்திருந்தது. 1929-39கால பெரும் பொருளாதார வீழ்ச்சி; இரண்டு உலகப்போர்கள்; மிக முக்கியமாக ரஷ்யாவில் மகத்தான 1917 அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றிபெற்றது; மேலை நாடுகளின் பெரும் பொருளாதார வீழ்ச்சி காலத்தில் அதற்கு எதிர்மறையாக பாய்ச்சல் வேகத்தில் சோசலிச சோவியத் ஒன்றியம் முன்னேறியது ஆகியவை பன்னாட்டு வர்க்க பலாபலன்களை உலகெங்கிலும் உழைப்பாளி மக்களுக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை கொண்ட தேச விடுதலை இயக்கங்களுக்கும் சாதகமாக மாற்றியது. 1950களில் உலகில் ஆறில் ஒருபகுதி நிலப் பரப்பும் மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினரும் சோசலிச நாடுகளில், செங்கொடியின் ஆட்சியில் வந்துவிட்டன. உலகில் இரு பெரும் முகாம்கள் – உலக மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய-முதலாளித்துவ முகாம் ஒருபுறம்; சோசலிச பதாகையை உயர்த்தி பிடித்து, வளரும் நாடுகளுக்கும், உலகெங்கும் உழைப்பாளி மக்களுக்கும் உதவிட களத்தில் நின்ற சோசலிச முகாம் மறுபுறம் – ஒன்றை ஒன்று எதிர்கொண்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1980களின் இறுதிவரை உலகம் பிரதானமாக ஏகாதிபத்திய முகாம், சோசலிச முகாம் என்று இரு துருவங்களாக பார்க்கப்பட்டது.
அணிசேரா நாடுகளின் இயக்கம்
இக்காலத்தில் இன்னொரு முக்கிய அம்சமும் பன்னாட்டு உறவுகளில் இடம் பெற்றிருந்தது. 1945 – 1960கள் காலத்தில் காலனி ஆதிக்கம் உலகெங்கும் தகர்ந்தது. விடுதலை பெற்ற நாடுகள் பெரும்பாலும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் கொண்ட நாடுகளாக இருந்தன. எனினும், இந்த நாடுகள் பலவற்றிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகள் வலுவாக இருந்தன. சோசலிச நாடுகளின், குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் சாதனைகளும் ஓரளவிற்கு அறியப்பட்டு, சோசலிச பாதையின் மீதான ஈர்ப்பும் இருந்தது. இத்தகைய பின்புலத்தில், 29 வளரும் நாடுகள் 1955 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் பாண்டுங் நகரில் கூடி, ஒரு முக்கிய முடிவுக்கு வந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் சோசலிச முகாமின் மீது திணித்திருந்த “பனிப்போர்” சூழலில், இதன் விளைவாக, உலகம் இரு முகாம்களாக பார்க்கப்பட்ட சூழலில், சில அடிப்படை கோட்பாடுகளை ஏற்று, பன்னாட்டு பிரச்சினைகளில் “முகாம் சாரா” அணுகுமுறை கொண்டு செயல்படுவது என்பதுதான் இந்த முக்கிய முடிவு. இவ்வாறு பிறந்ததுதான் அணிசேரா நாடுகளின் இயக்கம். அணி சேராமை என்பது அனைத்து பிரச்சினைகளிலும் அனைத்து உறுப்பினர்களும் நடுநிலை வகிக்க வேண்டும் என்று புரிந்துகொள்ளப்படவில்லை. மாறாக, ஏற்கெனவே இந்தியாவும் சீனாவும் 1954ஆம் ஆண்டு தில்லியில் கூடி உருவாக்கிய (1) நாடுகளின் இறையாண்மையை பரஸ்பரம் மதித்தல், (2) பிற நாடுகளின் உள்விவகாரங்களில் பரஸ்பரம் தலையிடாமை, (3) பரஸ்பரம் தாக்குதல் தவிர்த்தல், (4) சமாதான சக வாழ்வு, மற்றும் (5) சம அந்தஸ்தும், அதன் அடிப்படையில் பரஸ்பர நன்மை பெறுதலும் ஆகிய “ ஐந்து கோட்பாடுகள்” (ஹிந்தி மொழியில் “பஞ்ச்ஷீல்”) அணிசேரா கொள்கையின் தத்துவ அடிப்படையில் இருந்தது.
“அணிசேரா இயக்கம்” என்ற பெயர் கொண்டிருந்தாலும், 1950கள் முதல் 1970களின் இறுதி வரை இவ்வியக்கம் ஒரு முக்கியமான ஏகாதிபத்திய எதிர்ப்பு பாத்திரம் கொண்டிருந்தது. 1956இல் எகிப்து நாட்டின் தலைவர் நாசர் சூயஸ் கால்வாயை நாட்டுடமையாக்கிய பொழுது, இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் எகிப்தின் மீது தாக்குதல் நடத்தின. இந்தியா உள்ளிட்ட பல அணிசேரா நாடுகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பின. இதை தொடர்ந்து சில ஆண்டுகள் அரபு தேசீயம் வலுப்பெற்றது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் அணிசேரா நாடுகளின் ஆதரவை பெற்றது. 1960களிலும் 70களிலும் இவ்வியக்கம் ஆப்பிரிக்க கண்டத்தில் நிகழ்ந்த எழுச்சிமிகு தேச விடுதலை போராட்டங்களுக்கு ஆதரவு குரல் எழுப்பியது. உலக அமைதிக்கு குரல் கொடுத்தது. அணிசேரா நாடுகளின் அரசுத் தலைவர்களின் முதல் மாநாடு 1961இல் அன்றைய யுகோஸ்லாவிய நாட்டின் தலைநகரமாக இருந்த பெல்கிரேட் நகரில் நடைபெற்றது. 1970ஆம் ஆண்டில் ஜாம்பியா நாட்டின் தலைநகரமான லுசாகாவில் நிகழ்ந்த இவ்வமைப்பின் மாநாடு அமைப்பின் குறிக்கோள்களாக நாடுகளுக்கிடையில் உள்ள சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்பதையும், வல்லரசுகளின் ராணுவ ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டமைப்புகளில் இடம் பெறுவதில்லை என்பதையும் அறிவித்தது. பிறநாடுகளில் ராணுவ தளங்கள் அமைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது. பேரழிவு ஆயுதங்களை கைவிட கோரும் இயக்கத்துடன் இணைந்துநின்றது. அக்காலச்சூழலில் இவை ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை கொண்ட நிலைபாடுகளாக அமைந்தன.
1974இல் நடந்த ஐக்கியநாடுகள் பொது அவையின் 37ஆவது அமர்வில், சோசலிச நாடுகளின் ஆதரவுடன், அணிசேரா நாடுகளின் முன்முயற்சியில், காலனி ஆதிக்க கொள்ளைக்கு நட்ட ஈடு கோரியும், சமத்துவ தன்மையிலான “புதிய பன்னாட்டு பொருளாதார அமைப்பு” கோரியும் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஏகாதிபத்திய – முதலாளித்துவ வல்லரசுகள் இதனை அமலாக்க விடவில்லை என்றாலும் இந்த நிகழ்வுகள் 1950 – 1980 காலத்தில் பன்னாட்டு உறவுகளில் சோசலிச முகாமும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், தேச விடுதலை இயக்கங்களும் குறிப்பிடத்தக்க பங்காற்றின என்பதையும், அணிசேரா இயக்கம் பொதுவாக ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை எடுத்து முற்போக்கான பங்கு ஆற்றியது என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றன.
வேகமாக மாறிய பன்னாட்டு நிலைமைகள்
1950 – 1980 கால பன்னாட்டு சூழலில் சோசலிச முகாமின் இருப்பும் வலிமையும், கணிசமான நிலப்பரப்பும் மக்கள் தொகையும் கொண்டிருந்த இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தங்கள் நாடுகளின் இறையாண்மையை பாதுகாத்துக்கொள்ளவும், இரு முகாம்களுடனும் பொருளாதார உறவுகள் வைத்துக்கொண்டதன் மூலம் முதலாளித்துவ பாதையில் ஓரளவு முன்னேறவும் உதவியது. எனினும், பொதுவாக காலனி ஆதிக்கம் தகர்ந்த பிறகும், தொழில்நுட்பம், சந்தைகள், நிதி, ஊடகங்கள் மற்றும் இராணுவபலம் ஆகிய அம்சங்களில் மேலை ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோக வல்லமை பல்வேறு வழிகளில் வளரும் நாடுகளை சுரண்ட அந்நாடுகளுக்கு வாய்ப்பு அளித்தது. 1980களில் துவங்கி நிதி மூலதன வளர்ச்சியும் தகவல் தொடர்பு புரட்சியும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தில் முதலாளித்துவ உலகமயமாக்கல் வேகமாக பரவிட உதவியாக இருந்தன. சோசலிச முகாமில் உருவாகிய பிளவுகளும், அந்நாடுகளில் நிகழ்ந்த தத்துவ-நடைமுறை தவறுகளும், ஏகாதிபத்தியத்தின் இடைவிடா அரசியல், பொருளாதார, தத்துவ தாக்குதல்களும், அது கட்டவிழ்த்துவிட்ட தீவிர ஆயுத போட்டியும், நிதி மூலதன பரவலும், சோசலிச முகாமை பலவீனப்படுத்தின. இவற்றால் ஏற்பட்ட விளைவுகள் வளரும் நாடுகளை கடன் வலையில் சிக்க வைத்தன. மேலை நாட்டு தொழிலாளி வர்க்க போராட்ட வலுவை சிதைத்தன. மிக முக்கியமாக, 1990களின் துவக்கத்தில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சோவியத் ஒன்றியத்திலும் சோசலிசம் வீழ்ச்சியடைய வழி வகுத்தன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சென்னையில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற தனது 14ஆவது அகில இந்திய மாநாட்டில் சோசலிச முகாமின் பின்னடைவு தொடர்பாக “சில தத்துவார்த்த பிரச்சினைகள் பற்றி” என்ற ஆவணத்தை விவாதித்து நிறைவேற்றியது. புதிய சூழலில், பன்னாட்டு உறவுகளிலும் பலாபலன்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறித்தும் அந்த ஆவணம் வெளிச்சம் தருகிறது. பன்னாட்டு களத்தில் இப்பின்னடைவுகள் வர்க்க சக்திகளின் சமநிலையை ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாக மாற்றியுள்ளது என்றும், ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்குமிடையிலான முரண்பாடு தீவிரமடையும் என்றும், இதன் விளைவாக இந்த நாடுகளில் ஆளும் வர்க்கங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான போராட்டங்கள் தீவிரமாகும் என்றும் சரியாக கணித்தது. முன்னணி முதலாளித்துவ நாடுகளில் மூலதனத்திற்கும் உழைப்பாளிகளுக்கும் இடையிலான முரண்பாடும் தீவிரமாகும் என்றும் அந்த ஆவணம் சுட்டிக் காட்டியது. மேலும் மானுடம் சந்திக்கும் கொடிய சமூக பொருளாதார துயரங்களுக்கும் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் முதலாளித்துவமே பெருமளவிற்கு காரணம் என்றும், எனவே, இவற்றிற்கு முதலாளித்துவ அமைப்புக்குள் தீர்வு கிடைக்காது என்றும் அந்த ஆவணம் சுட்டிக்காட்டியது. கடந்த முப்பது ஆண்டுகளின் அனுபவம் இந்த மதிப்பீடுகள் மிகச்சரியானவை என்று நமக்கு உணர்த்துகிறது.
“ஒரு துருவ” உலகில் இருந்து “பல துருவ” உலகை நோக்கி…
சோசலிச சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்டபொழுது ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் “வரலாறு முடிந்துவிட்டது; இனி எங்கும் முதலாளித்துவமே கொடிகட்டிப் பறக்கும்” என்று கொக்கரித்தனர். ஆனால் சோசலிசம் பின்னடைவை எதிர்கொண்டது உண்மை என்ற போதிலும் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மறைந்துவிடவில்லை; அதன் நெருக்கடியும் தீர்ந்துவிடவில்லை. உலகம் முழுவதும் வேலையின்மையும், வறுமையும், உணவுப்பாதுகாப்பின்மையும், கடும் உழைப்பு சுரண்டலும், இன்னபிற முதலாளித்துவக் கேடுகளும் தொடர்ந்தன. இவற்றிற்கான தீர்வு முதலாளித்துவத்திடம் இல்லை என்பது அம்பலமானது. புதிதாக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற நெருக்கடியும் முன்னுக்கு வந்தது. 1991-2011 இருபதாண்டு காலம் இதனை உணர்த்தியது. இந்த பின்புலத்தில் 2012ஆம் ஆண்டு கோழிக்கோடு நகரில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சியின் இருபதாம் மாநாடு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கணக்கில் கொண்டு உருவாக்கிய தத்துவார்த்தத் தீர்மானம் ஏகாதிபத்திய நெருக்கடி கூர்மையடைந்து வந்ததை சுட்டிக்காட்டியது. குறிப்பாக 2008இல் வெடித்த உலகளாவிய நிதி நெருக்கடி முதலாளித்துவ அறிவுஜீவிகளின், ஆதரவாளர்களின் “சோசலிசம் தோற்றுவிட்டது, முதலாளித்துவம் வென்று விட்டது” என்ற கூற்றை தவிடுபொடியாக்கியது என்பதை ஆவணம் கவனத்தில் கொண்டது. இதனை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பின்பும் இன்றுவரை உலக முதலாளித்துவம் முழு மீட்சி அடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.2020இல்பெரும் தொற்று வரும் முன்பே உலகளவில் மந்தநிலை பரவியது. அதன்பின் மூன்றாண்டு பெரும் தொற்று காலம் பன்னாட்டு ஏகபோகங்களுக்கும் அவற்றை சார்ந்த பெரும் செல்வந்தர்களுக்கும் கொழுக்க வாய்ப்பளித்து, பெரும் பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை சேதப்படுத்தியது. இன்றைய முன்னணி முதலாளித்துவ நாடுகளில் நிலவும் பரந்த சமூக பொருளாதார நெருக்கடி அந்த நாடுகளில் வலதுசாரி சக்திகளின் வளர்ச்சிக்கு இடம் அளித்துள்ளது என்றாலும், முதலளித்துவம் வரலாற்று ரீதியாக காலாவதியாகி வருவதையும் பறைசாற்றுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் கடந்த நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் ஏற்பட்ட ஒருதுருவ உலகில் கடந்த 15 ஆண்டுகளில் வேகமான மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. இன்றும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதனுடன் இணைந்து செயல்படும் இதர மேலை ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் ஜப்பானும் தொழில் நுட்பம், சந்தைகள், நிதி, ஊடகங்கள் மற்றும் பேரழிவு ஆயுத பலம் ஆகியவற்றில் முதன்மை இடத்தில் உள்ளன. இருந்தாலும், பல பிரச்சினைகளில் பல நாடுகளின் ஒன்றுபட்ட செயல்பாட்டை அவை சந்திக்கின்றன. இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு, உலக வர்த்தக அமைப்பில் முன்போல் மேலை நாடுகள் முழு ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை. சுற்று சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் என்ற பிரச்சினையில் நூறுக்கும் மேற்பட்ட வளரும் நாடுகளும் மக்கள் சீனமும் ஏகாதிபத்திய நாடுகளின் நிலைபாடுகளை எதிர்த்து நிற்கிறார்கள். அண்மையில் நடைபெற்ற COP 27 மாநாட்டிலும் இதைக் காண முடிந்தது. அதேபோல் உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்து அங்கு போர் தொடர்ந்து நடந்து வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவக் கூட்டான நேட்டோவும் ரஷ்யாவை வலுவிழக்கச் செய்யும் முனைவாக உக்ரைனுக்கு அனைத்துவகை ஆயுதங்களைக் கொடுத்து ராணுவ உதவிகளையும் செய்து வருகின்றனர். இதோடு ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அனைத்து இதர நாடுகளையும் ரஷ்யாவிற்கு எதிராக திரட்ட இப்பிரச்சினையில் மேலை ஏகாதிபத்திய நாடுகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். ஆனால் அவர்களால் தங்கள் முனைவுகளில் வெற்றி ஈட்ட முடியவில்லை என்பது பன்னாட்டு உறவுகளில் மாறிவரும் பலாபலன்கள் உணர்த்துகின்றன. அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்திலான ஒரு துருவ உலகம் இன்று இல்லை என்பதை நாம் காண முடிகிறது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மதிப்பீடுகள்
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி இத்தகைய பன்னாட்டு உறவு மாற்றங்கள் குறித்து தனது ஆவணங்களில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது. 2012இல் நடைபெற்ற அதன் 20ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் அச்சமயம் அரபு நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் மேலை நாடுகளிலும் நிகழ்ந்துவந்த எழுச்சிமிகு போராட்டங்களை குறிப்பிட்டு பின்வருமாறு கூறுகிறது:
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை தொடர்ந்து வெளியான முதலாளித்துவ “வெற்றி கொக்கரிப்பு” தணிந்துள்ளது. அதற்குப் பதில் முதாளித்துவத்தின் எதிர்காலம் பற்றிய (கவலைமிகு) விவாதங்கள் ஆளும் வர்க்கங்கள் மத்தியில் நிகழ்ந்து வருகின்றன. மக்கள் மென்மேலும் தங்களது பொருளாதார உரிமைகள் மீதும், பெருமுயற்சியால் பெறப்பட்ட பலன்கள் மீதும் நிகழும் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டக் களத்திற்கு வருகின்றனர்.
மானுடம் எதிர்கொள்ளும் (உலக முதலாளித்துவ) அமைப்பின் நெருக்கடியிலிருந்து மீள சோசலிசம் மட்டுமே தீர்வாகும் என்றும் அத்தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
தனது 21ஆவது மாநாட்டில் (2015) மார்க்சிஸ்ட் கட்சி பின்வருமாறு குறிப்பிட்டது:
தனது பொருளாதார வல்லமையில் நிகழ்ந்துவரும் நீண்டகால சரிவின் பின்புலத்தில், குறிப்பாக 2008 நிதி நெருக்கடியின் வெளிச்சத்தில், ஏகாதிபத்திய முகாமின் தலைவரான அமெரிக்கா புதிய பிரச்சினைகளையும் சவால்களையும் சந்தித்தது. மேற்கு ஆசிய பகுதியில் இராக்கில் இருந்து துவங்கிய அதன் ராணுவ தலையீடுகள் அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது என்ற நோக்கத்தை அடையவில்லை; கிழக்கு நோக்கிய அமெரிக்க – நேட்டோ முன்னெடுப்பை எதிர்த்து ரஷ்யா வலுவாக நின்றது; இரண்டாம் ஆகப்பெரிய பொருளாதாரமாகவும் சக்திமிக்க நாடாகவும் சீனம் உருவானது ஆசிய-பசிபிக் பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை அச்சுறுத்தியது; உலக வர்த்தக அமைப்பு போன்ற பன்னாட்டு அமைப்புகளில் தனது அதிகாரத்தை திணிப்பது அமெரிக்காவால் எளிதில் முடியவில்லை.
வளர்ந்துவரும் பலதுருவத்தன்மயை அத்தீர்மானம் சுட்டிக்காட்டியது. பிரசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பரிக்க நாடுகளின் கூட்டமைப்பான BRICS, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், இரான் உட்பட பலநாடுகள் இணைந்துள்ள ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பு, லத்தீன் அமேரிக்கா மற்றும் கரிபியன் நாடுகளின் கூட்டமைப்பு லத்தின் அமெரிக்காவின் பொலிவாரிய கூட்டமைப்பு,, தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் என்பது போன்ற பல பன்னாட்டு அமைப்புகள் மேலை ஏகாதிபத்தியத்திற்கு அப்பாற்பட்டும், எதிர்த்தும், சுயேச்சையாகவும் செயல்படுவதை அத்தீர்மானம் கவனப்படுத்தியது. தனது ஆறாவது மாநாட்டில் BRICS அமைப்பு உருவாக்கிய புதிய வளர்ச்சி வங்கி, சீனா உருவாக்கிய ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் தீர்மானம் சுட்டிக்காட்டி, உலகில் பலதுருவப்போக்கு வளர்ந்து வருவதை பதிவு செய்தது. பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலும் ஏகாதிபத்திய முகாமை எதிர்த்து ஏராளமான வளரும் நாடுகளும் மக்கள் சீனமும் ஒன்றாக நிற்பதையும் நினைவுபடுத்தியது.
2018இல் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் 22ஆவது மாநாடு, இந்தியா அமெரிக்காவுடன் மேலும் நெருக்கமான உறவுகளை வளர்த்துவருவது பலதுருவ போக்குக்கு எதிரானது என்பதை கவனத்தில் கொண்டது. எனினும் உலக அளவில் பலதுருவப்போக்கு தொடர்ந்தது. மேலும் ஏகாதிபத்திய முகாமின் உள் முரண்கள், குறிப்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவற்றிற்கும் இடையிலான சச்சரவுகளும் முரண்பாடுகளும் அதிகரித்துள்ளதையும் மாநாட்டு அரசியல் தீர்மானம் கவனப்படுத்தியது.
2022இல் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநாடு சீனாவின் அனைத்துவகையிலான அதிவேக வளர்ச்சியைக் கண்டு அதற்கெதிராக அமெரிக்க வல்லரசு எடுத்துவரும் தீவிர முயற்சிகளையும் விரிவாக குறிப்பிடுகிறது. உலகில் சீனாவின் வளர்ந்துவரும் செல்வாக்கு தனது மேலாதிக்கத்திற்கு எதிராக அமையும் என்று கருதும் அமெரிக்க வல்லரசு, சீனாவை உலக அரங்கில் தனிமைப்படுத்த முயன்று வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா என்ற நால்வர் அணியை அமைத்து கிழக்கு பசிபிக் பகுதியிலும் தென் சீனக் கடல் பகுதியிலும் கடல்சார் ராணுவ முஸ்தீபுகளை அது முன்னெடுத்துள்ளது. இந்திய பசிபிக் பகுதியில், குறிப்பாக இந்துமாகடல் பகுதியில் ‘’ஆகுஸ்” (ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து) ஆகிய மூவர் அணியை அமைத்துள்ளது. சீனா வேகமாக தொழில்நுட்பத்தில் முன்னேறி வருவதை தடுக்க பல தடைகளை உருவாக்கி வருகிறது. நீண்டகால பார்வையில் சீனாதான் தனது கடும் போட்டியாளராக இருக்கும் என்று அமெரிக்க வல்லரசு கருதுகிறது. சீனாவை தனிமைபடுத்த மேலை ஐரோப்பிய நாடுகளையும் நேட்டோவையும் தனது இதர நேச நாடுகளையும் நிர்ப்பந்திக்கிறது. சமகால சகாப்தத்தின் மைய முரண்பாடான ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் மீது அமெரிக்க-சீன முரண்பாடு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானம் கூறுகிறது. அண்மை ஆண்டுகளில் ரஷ்யா-சீனா உறவுகள் கணிசமாக முன்னேற்றம் கண்டுள்ளதையும் அவர்கள் இருவரும் பரஸ்பரம் கேந்திர நேச சக்திகளாக உருவாகியுள்ளனர் என்பதையும் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. உக்ரைன் விவகாரத்தில் சீனா எடுத்துள்ள நிலை இதையொட்டியே உள்ளது. சீன-ரஷ்யா கேந்திர உறவுகள் வலுப்பெற்றிருப்பது அமெரிக்கா தலைமையில் உள்ள மேலாதிக்க கூட்டுக்கு எதிராக அமையும் என்றும் தீர்மானம் உணர்த்துகிறது. மேலை நாடுகளின் பிடியில் இருந்துவரும் உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் வளரும் நாடுகள் கூட்டாக எடுத்துவரும் முனைவுகளும் பருவநிலை மாற்றம் பிரச்சினையில் G-77 மற்றும் சீனா ஒன்றாக நிற்பதும் பலதுருவ உலகை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இறுதியாக
இறுதியாக ஒன்றை நினைவுபடுத்தவேண்டும். பலதுருவப்போக்கு வலுப்பெற்று வந்தாலும், அமெரிக்க வல்லரசும் அதன் நேச நாடுகளும் இன்றுவரை பெரும் ராணுவ-ஆயுத வல்லமையை கைவசம் வைத்துள்ளனர். தொடர்ந்து உலக நாடுகளையும் இயற்கை வளங்களையும் சூறையாடி, தம்மை வலுப்படுத்திக்கொண்டு வருகின்றனர். சீன – ரஷ்யா உறவு முன்னேற்றம் ஏகாதிபத்திய எதிர்ப்பு பங்கு ஆற்ற வாய்ப்பு உள்ளது என்றபோதிலும் ரஷ்யாவும் ஒரு பெரிய பலம் மிகுந்த முதலாளித்துவ நாடு என்பதை நாம் மறந்துவிட முடியாது. அதேபோல் இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகள் முன்பின் முரணற்ற ஏகாதிபத்திய தன்மை கொண்டவை அல்ல என்பதையும், இந்திய அரசு அமெரிக்க வல்லரசுடன் நெருக்கமான உறவுகள் கொண்டுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
