செவ்வணக்கம் தோழர்! புத்ததேவ் பட்டாச்சார்யா (மார்ச் 1, 1944 – ஆகஸ்ட் 8, 2024)
ஆசிரியர் குழு
1977 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி இடது முன்னணி அரசு மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தபோது, அந்த அரசில் செய்தி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான துறையின் அமைச்சராக தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 33.
அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, 1968லிருந்து தொடங்கி 1981 வரை அவர் மேற்கு வங்க மாநில வாலிபர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். மேற்கு வங்க மாநிலக் குழு, மாநில செயற்குழு, மத்தியக் குழு, அரசியல் தலைமைக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகச் செயல்பட்ட அவர் கட்சியின் கலாச்சார முகமாகவும் திகழ்ந்தார்.
மேற்குவங்கத்தில் நன்கு ஆழ வேரூன்றியிருந்த கலை-இலக்கியம்-கலாச்சாரம் ஆகிய துறைகளில் செயல்பட்டு வந்த உத்பல் தத், சத்யஜித் ரே, மிருணாள் சென், சவ்மித்ர சாட்டர்ஜி, அன்னதா சங்கர் ராய், ஆஷாபூர்ணா தேவி போன்ற பல பெரும் ஆளுமைகளின் உள்ளம் கவர்ந்தவராகவும் இருந்தார். கலாச்சார அரங்கில் நமது பணி என்ற ரித்விக் கட்டாக்கின் புகழ்பெற்ற ஆய்வுரையை, மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, இருட்டறையில் இருந்து நமக்கு மீட்டெடுத்துத் தந்தவரும் அவரே. மிகுந்த எளிமையும், ஆற்றலும், மிக்கவராகவும் அவர் திகழ்ந்தார்.
மார்க்சிய சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர், அமைச்சர், முதல்வர் என்ற பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி மறைந்த தோழர் புத்ததேவ் தனிப்பட்ட வகையில் மிகச் சிறந்த வாசகர். எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். ருஷ்யக் கவிஞர் மயாகாவ்ஸ்கியின் கவிதைகளையும், உலகப்புகழ்பெற்ற கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்-இன் பல கதைகளையும், எழுத்துக்களையும் வங்காள மொழியில் மொழிபெயர்த்தவர். நாடக ஆசிரியர். 1993ஆம் ஆண்டில் பாப்ரி மஸ்ஜித் இடிப்பினைத் தொடர்ந்து இந்து-முஸ்லீம் இனத்தவரிடையே எழுந்த மனப்பிளவை ‘துர் சமாய்’ என்ற பெயரில் நாடகமாக உருவாக்கினார். 2015-17 ஆம் ஆண்டுகளில் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் இரு சிறு நூல்களை அவர் எழுதினார். முதல் பகுதி, மேற்கு வங்க இடது முன்னணி அரசின் முதல் ஐந்து ஆண்டு சாதனைகளை விவரித்தது. இரண்டாவது பகுதி, இடது முன்னணி அரசின் இறுதி ஐந்து ஆண்டுகளில் எதிர்கொண்ட சவால்களை விவரிப்பதாக அமைந்திருந்தது. மத்தியில் வலதுசாரி ஆதிக்கம் வலுப்பெற்று வந்த தருணத்தில் 2018ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பாசிஸத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலை எழுதினார். 2019ஆம் ஆண்டில் ‘சொர்க்கத்தின் கீழே களேபரங்கள்’ என்ற தலைப்பில் எழுதிய சிறு நூலில், சீனாவின் பெருஞ்சுவர் கட்டப்பட்ட காலத்திலிருந்து தொடங்கி, அலிபாபா என்ற உலகளாவிய நிறுவனத்தின் வளர்ச்சி வரையிலான காலத்தை அவர் விவரித்திருந்தார்.
அவரது நினைவிற்கு மார்க்சிஸ்ட் இதழ் செவ்வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
