
மார்க்ஸ் பிறந்தநாள் : மே 5, 2026
தொகுப்பு: பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
மானுடத்திற்காகவே அதிகம் பணியாற்ற வாய்ப்பளிக்கும் வாழ்வை நாம் தேர்ந்தெடுத்திருந்தால், எந்தவிதமான சுமைகளும் நம்மை வீழ்த்த முடியாது. ஏனென்றால், இவை அனைத்து மக்களின் நலனுக்கான தியாகங்களாகும். அத்தகைய நிலையில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி என்பது குறுகிய, சுயநலமான மகிழ்ச்சி அல்ல. (மாறாக) நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களையே சென்று சேரும். நமது நற்பணிகள் தொடரும்; எப்பொழுதும் நன்மை பயக்கும். (நமது இறப்பிற்குப்பின்) நன்மக்களின் சூடான கண்ணீர் நமது சாம்பலின் மீது விழும்.
(19 வயதில் மார்க்ஸ் எழுதிய ஓர் இளைஞனின் எதிர்காலத்திற்கான சிந்தனைகள் என்ற கட்டுரையிலிருந்து…)
முதலாளித்துவம் குறித்து…
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு உருவாகிட சுயமாக உழைப்பதற்கான அனைத்து சொத்துக்களும் தொழிலாளிகளிடமிருந்து பறிக்கப்படவேண்டும். முதலாளித்துவ அமைப்பு உருவாகி சொந்தமாக செயல்படும்பொழுது, இந்த நிலையை தக்கவைப்பதோடு, இதனை விரிவடையவும் செய்யும். எனவே தொழிலாளியிடம் இருந்து உற்பத்தி கருவிகளை பறிப்பதுதான் முதலாளித்துவ அமைப்பிற்கு பாதை அமைத்துத் தரும் செயல்முறையாகும். இச்செயல்முறை ஒருபுறம் உற்பத்தி கருவிகளையும் வாழ்வாதாரங்களையும் மூலதனமாக மாற்றும். மறுபுறம் உற்பத்திசெய்யும் உழைப்பாளியை கூலித் தொழிலாளியாக மாற்றும். துவக்க மூலதன திரட்டல் என்பது வேறு ஒன்றும் இல்லை. உற்பத்தியாளரை (அனைத்து) உற்பத்தி சாதனங்களில் இருந்தும் பிரிப்பது என்ற வரலாற்று செயல்முறைதான்.
மார்க்ஸ் பற்றி எங்கெல்ஸ்…
இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்தது போலவே மானுட வரலாற்று வளர்ச்சியின் விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்.
சமகால முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் சிறப்பு இயக்க விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்.
அறிவியலை வரலாற்று ரீதியாக இயங்கிக்கொண்டே இருக்கின்ற புரட்சிகர சக்தி என்று மார்க்ஸ் கருதினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்ஸ் ஒரு புரட்சியாளர். அவரது வாழ்வின் உண்மையான இலக்கு என்பது முதலாளித்துவ சமூகத்தையும் அது உருவாக்கியுள்ள அரசு அமைப்புகளையும் தூக்கி எறிவதுதான்; நவீன தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு பங்களிப்பதுதான்.
இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்…
இந்திய சமூகத்தின் சட்டகம் முழுவதையும் இங்கிலாந்து உடைத்து தகர்த்து விட்டது. சமூகத்தை மீண்டும் கட்டமைப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இங்கிலாந்தினால் ஆளப்படும் இந்தியா அதன் முந்தைய வரலாற்றில் இருந்தும் அதன் அனைத்து பண்டைய மரபுகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் இந்திய மக்கள் தற்சமயம் எதிர்கொள்ளும் சோகம் தனித்தன்மையானது. அவர்கள் தங்களின் பழைய உலகத்தை இழந்து நிற்கிறார்கள். ஆனால் புதிய உலகம் எதுவும் உருவாகவில்லை.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply