
கிராம்ஸி எனும் மகத்தான கம்யூனிஸ்ட்போராளி!
அன்வர் உசேன்
அந்தோனியோ கிராம்ஸி தலைசிறந்த இத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர். தனது கல்லூரி நண்பரும் இன்னொரு கம்யூனிஸ்ட் தலைவருமான டொக்லியாட்டியுடன் இணைந்து இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவர். 1891ம் ஆண்டு ஜனவரி 22ல் பிறந்த இவர் சிறு வயது முதலே முதுகெலும்பு பாதிக்கப்பட்டதால் பல உடல் பிரச்சனைகளை சந்தித்தார். அதன் விளைவாக வேறு பல நோய்களும் அவரை வாட்டின. எனினும் அவர் உழைக்கும் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டார். அவர் அரசியலில் ஈடுபட்ட காலத்தில்தான் இத்தாலியில் பாசிசமும் ஜெர்மனியில் நாஜிசமும் தலைதூக்கின. எனவே, இத்தாலி சூழலுக்கு ஏற்ப பாசிசத்தை எதிர்ப்பதில் மார்க்சியத்தை பொருத்த அவர் பெருமுயற்சி எடுத்து கொண்டார்.
அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுதும், அவரது சட்டப்பாதுகாப்பை அகற்றி, முசோலினியின் பாசிச அரசாங்கம் அவரை சிறையில் அடைத்தது. இதைத் தவிர்க்க, கட்சி அவரை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்ப முயன்றது. எனினும் “மூழ்கும் கப்பலில் அனைத்து பயணிகளும் காப்பாற்றப்பட்ட பின்னர்தான், கப்பல் தலைவன் தனது பாதுகாப்பை சிந்திக்க வேண்டும்” எனக்கூறி அதற்கு மறுத்துவிட்டார். சிறையில் பல இன்னல்களை சந்தித்தாலும், அதற்கிடையே அவர் எழுதிய “சிறைக் குறிப்புகள்” மார்க்சிய தத்துவத்துக்கு ஒரு முக்கிய பங்களிப்பு எனில் மிகை அல்ல.
அவரது குறிப்புகளில் இத்தாலி பாசிசத்தையும் ஜெர்மானிய நாஜிசத்தையும் “முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான பிரிவின் சர்வாதிகாரம்தான்” என மதிப்பிடுகிறார். இதுதான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மதிப்பீடு என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாசிசத்துக்கு எதிராக ஒரு பரந்தபட்ட எதிர்ப்பணியை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் அதே சமயத்தில் அந்த இயக்கத்தின் தலைமைப்பங்கு தொழிலாளி வர்க்கத்திடம் இருந்தால்தான், பாசிச இயக்கத்தை முற்றிலுமாக தோற்கடிக்க முடியும் என மதிப்பிட்டார். பாசிசத்துக்கு மாற்று முதலாளித்துவம் அல்ல- “சோவியத்தியம்” அதாவது உழைக்கும் மக்களின் தலைமை என குறிப்பிட்டார். தொழிலாளி வர்க்கம் தனது தலைமையில் அனைத்து உழைக்கும் மக்களையும் திரட்டி பாசிச எதிர்ப்புக்கு தலைமை தாங்க வேண்டும் என முன்வைத்தார்.
அவரது “நவீன இளவரசன்” எனும் குறிப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமை பாத்திரம் குறித்த முக்கிய பங்களிப்பு ஆகும். 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலி அரசியல் ஆய்வாளர் மாக்கியவல்லி “இளவரசன்” எனும் படைப்பை உருவாக்கி அரசு எப்படி செயல்பட வேண்டும் எனக் கூறினார். ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்குவதிலும், அதனை நிர்மாணிப்பதிலும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்கு பற்றி “நவீன இளவரசன்” படைப்பில் கிராம்ஸி வலுவாக முன்வைத்தார்.
அவரது இன்னொரு முக்கிய கருத்தாக்கம் என்பது “பண்பாட்டின்” பங்கு ஆகும். முதலாளித்துவம் தனது மூர்க்கத்தனமான வன்முறை மற்றும் சட்டங்கள் மூலம் மட்டுமே தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவது இல்லை. பண்பாடு மூலமாகவும் தனது ஆளும் வர்க்க சித்தாந்தத்தை உழைக்கும் மக்களின் சிந்தனையில் புகுத்துகிறது. எனவேதான் உழைக்கும் மக்களில் கணிசமானவர்கள் ஆளும் வர்க்க சித்தாந்தத்தின் ஆதரவாளர்களாக மாறிவிடுகின்றனர். எனவே ஒரு தொழிலாளிவர்க்க கட்சி, அரசியல், பொருளாதார தளங்களில் மட்டுமல்லாது, பண்பாட்டு தளத்திலும் வலுவாக செயல்பட வேண்டும் என கிராம்ஸி முன்வைக்கிறார். இது இன்றைய சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்பதை கூற வேண்டியதில்லை.
சிறையில் நோய்வாய்ப்பட்ட கிராம்ஸிக்கு பாசிச அரசு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. இதன் காரணமாக 1936ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் சிறைவாசத்தின் பொழுதே கிராம்ஸி உயிர் நீத்தார். அடுத்த சில வாரங்களில் அவர் விடுதலை பெறுவதாக இருந்தது. சிறைவாசம் காரணமாக தனது இரண்டாவது மகனின் முகத்தை கூட அவர் கடைசிவரை பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு கம்யூனிஸ்ட் ஊழியரும் கற்க வேண்டிய நூல்களில் கிராம்ஸியின் “சிறைக்குறிப்புகள்” அவசியம் இடம் பெற வேண்டிய ஒன்று.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply