
கம்யூனிசக் கோட்பாடுகள்
ஃபிரடெரிக் எங்கெல்ஸ்
கே 11: தொழில் புரட்சியினாலும், முதலாளித்துவ வர்க்கம் – பாட்டாளி வர்க்கம் என்ற வகையிலான சமுதாயப் பாகுபாட்டினாலும் ஏற்பட்ட உடனடி விளைவுகள் என்ன?
முதலாவதாக, எந்திர உழைப்பின் காரணமாக மிகமிக மலிவாகிப்போன தொழிற்சாலை உற்பத்திப் பொருள்கள், உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பட்டறைத் தொழில் அல்லது தொழில்துறையின் பழைய உற்பத்திமுறையை உலகின் அனைத்து நாடுகளிலும் முழுமையாய் அழித்தொழித்துவிட்டது.
இவ்வாறாக, அரை-அநாகரிக நாடுகள் அனைத்தும் அவற்றின் தனிமை நிலையிலிருந்து பலவந்தமாக வெளிக்கொணரப்பட்டன. இதுநாள்வரையில் அவை வரலாற்று வளர்ச்சிப் போக்கிலிருந்து ஏறத்தாழத் துண்டிக்கப்பட்டிருந்தன. பட்டறைமுறை அடிப்படையிலான தொழில்துறையைக் கொண்டிருந்தன. அவை ஆங்கிலேயர்களின் மலிவான சரக்குகளை விலைக்கு வாங்கித் தம் சொந்த பட்டறைத் தொழிலாளர்களின் அழிவுக்கு இடமளித்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வளர்ச்சியின்றிக் கிடந்த நாடுகள் – எடுத்துக்காட்டாக, இந்தியா – முற்றிலும் புரட்சிகர மாற்றத்துக்கு உள்ளாயின. இப்போது சீனாவும்கூட ஒரு புரட்சியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.
இங்கிலாந்தில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் எந்திரம் ஓராண்டு காலத்துக்குள் லட்சக்கணக்கான சீனத் தொழிலாளர்களின் அன்றாட உணவைச் சூறையாடும் ஒரு நிலைமைக்கு நாம் வந்து சேர்ந்துள்ளோம்.
இவ்வாறாக, பெருவீதத் தொழில்துறை இப்புவியின் அனைத்து மக்களையும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அனைத்து வட்டாரச் சந்தைகளையும் ஒருங்கிணைத்து ஒற்றை உலகச் சந்தையை உருவாக்கியுள்ளது. எங்கெங்கும் நாகரிகமும் முன்னேற்றமும் பரவ வழிவகுத்துள்ளது. இதன்மூலம் நாகரிகமடைந்த நாடுகளில் என்ன நிகழ்ந்தாலும், அது பிற நாடுகள் அனைத்திலும் பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதிலிருந்து அறியவருவது, இங்கிலாந்து அல்லது ஃபிரான்சு நாட்டிலுள்ள தொழிலாளர்கள் இப்போது தம்மை விடுவித்துக் கொள்வார்கள் எனில், அது இதர பிற நாடுகள் அனைத்திலும் புரட்சியைத் தொடங்கிவைக்கும். இந்தப் புரட்சிகள் இறுதியில் அந்தந்த நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையைப் பெற்றுத் தரும்.
இரண்டாவதாக, எங்கெல்லாம் பெருவீதத் தொழில்துறை பட்டறைத் தொழிலை இல்லாமல் செய்ததோ, அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம், செல்வத்திலும் அதிகாரத்திலும் ஆக உயர்ந்த நிலைக்கு வளர்ந்து, தன்னை நாட்டிலேயே முதன்மை வர்க்கமாய் ஆக்கிக் கொண்டது. இதன் விளைவு என்னவெனில், எங்கெல்லாம் இது நிகழ்ந்ததோ அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் அரசியல் அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டது. இதுகாறும் இருந்துவந்த ஆளும் வர்க்கங்களான பிரபுக் குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள் ஆகியோரையும், அவர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட வரம்பிலா முடியாட்சியையும் ஒழித்துக் கட்டியது.
நிலச்சொத்தின் நிரந்தர உடைமைகளை ஒழித்ததன் மூலமும், வேறு சொற்களில் கூறுவதெனில் நிலச்சொத்துகளை வாங்கவும் விற்கவும் உட்படுத்தியதன் மூலமும், பிரபுக்குலத்தின் சிறப்புச் சலுகைகளைப் பறித்துக் கொண்டதன் மூலமும், முதலாளித்துவ வர்க்கமானது, உயர்குடியினர், பிரபுக்குலத்தினரின் ஆட்சி அதிகாரத்தைப் பூண்டோடு அழித்தொழித்தது. கைவினைக் குழுமங்களையும், கைவினைஞரின் சலுகைகளையும் ஒழித்துக்கட்டியதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் கைவினைக் குழும எஜமானர்களின் அதிகாரத்தை அழித்தொழித்தது. அவற்றின் இடத்தில் தொழில்போட்டியை இடம்பெறச் செய்தது. அதாவது, தொழில்துறையின் எந்தப் பிரிவிலும் ஈடுபட ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ள, தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் இல்லை என்பது தவிர வேறெந்தத் தடங்கலும் இல்லாத, ஒரு சமுதாய அமைப்புமுறையை இடம்பெறச் செய்தது.
இவ்வாறு, கட்டற்ற போட்டியை அறிமுகப்படுத்தியதானது, இப்போது முதற்கொண்டு சமுதாயத்தின் உறுப்பினர்கள், அவர்களின் மூலதனம் சமமற்றது என்ற அளவுக்கு மட்டுமே சமமற்றவர்கள் எனவும், மூலதனமே தீர்மானகரமான சக்தி எனவும், இதனால் முதலாளிகள், அதாவது முதலாளித்துவ வர்க்கம், சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாய் ஆகிவிட்டது எனவும் அறிவிக்கின்ற ஒரு பகிரங்கப் பிரகடனம் ஆகும்.
பெருவீதத் தொழில்துறையை நிறுவுவதற்குக் கட்டற்ற போட்டி அவசியம். ஏனெனில், பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சிக்குரிய சமுதாய நிலைமை அது மட்டுமே. முதலாளித்துவ வர்க்கமானது, பிரபுக்குலத்தார், கைவினைக் குழும எஜமானர்கள் ஆகியோரின் சமூக அதிகாரத்தை அழித்தபின், அவர்களுடைய அரசியல் அதிகாரத்தையும் அழித்தொழித்தது. முதலாளித்துவ வர்க்கம், சமுதாயத்தின் முதன்மை வர்க்கமாகத் தன்னை உயர்த்திக் கொண்டபின், அதிகாரம் மிக்க அரசியல் வர்க்கமாகவும் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்டத்தின் முன் முதலாளித்துவ சமத்துவம், கட்டற்ற போட்டிக்கு அங்கீகாரம் ஆகியவற்றைச் சார்ந்து நிற்கிற பிரதிநிதித்துவ அமைப்புமுறையை நிறுவியதன் மூலம் இதனைச் சாதித்தது. இது ஐரோப்பிய நாடுகளில் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட முடியாட்சி வடிவத்தில் அமைந்தது. அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட இந்த முடியாட்சிகளில் ஓரளவு மூலதனம் வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதாவது முதலாளித்துவ வர்க்க உறுப்பினர்கள் மட்டுமே வாக்காளர்கள் ஆவர். இந்த முதலாளித்துவ வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த முதலாளித்துவப் பிரதிநிதிகள் வரிகளுக்கு எதிராய் வாக்களிக்கும் உரிமை வாயிலாய், ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
மூன்றாவதாக, எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தோடு கூடவே பாட்டாளி வர்க்கமும் படிப்படியாய் வளர்ச்சி பெற்றது. முதலாளித்துவ வர்க்கம் செல்வத்தில் வளர்ச்சி பெற்ற அதே அளவுக்குப் பாட்டாளிகள் எண்ணிக்கையில் அதிகரித்தனர். பாட்டாளிகளை மூலதனம் மூலமாக மட்டுமே வேலைக்கு அமர்த்த முடியும்; உழைப்பை வேலைக்கு அமர்த்துவதால் மட்டுமே மூலதனம் அதிகரிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மூலதன வளர்ச்சியுடன் கூடவே, துல்லியமாய் அதே வேகத்தில், பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியும் பின்தொடரும் என்பது புலனாகிறது.
இந்த நிகழ்முறை, ஏககாலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்தினரையும் பெருநகரங்களில் ஒன்றாகக் கொண்டுவந்து சேர்க்கிறது. இங்குதான் தொழில்களை மிகவும் லாபகரமான முறையில் நடத்த முடியும். இவ்வாறு மிகப்பெரும் மக்கள் திரளை ஒரே இடத்தில் ஒன்று குவிப்பதானது, பாட்டாளி வர்க்கத்தினர்க்கு அவர்களின் சொந்த வலிமை குறித்த உணர்வினை நல்குகிறது.
இதற்கும் மேலாக, இந்த நிகழ்முறை மேலும் முன்னேறிச் செல்லும்போது, உடல் உழைப்பைச் சிக்கனப்படுத்தும் புதிய எந்திரங்கள் எந்த அளவு அதிகமாகக் கண்டுபிடிக்கப்படுகின்றனவோ அந்த அளவு அதிகமாகப் பெருவீதத் தொழில்துறை கூலியைக் குறைப்பதில் முனைப்புக் காட்டும். நாம் அறிந்தவாறே, கூலி அதன் மிகக் குறைந்தபட்ச அளவைத் தொடும். அதனைத் தொடர்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை மென்மேலும் சகிக்க முடியாத அளவுக்குத் தாழ்ந்து போகும். இவ்வாறாக, பாட்டாளி வர்க்கத்தின் பெருகிவரும் அதிருப்தியுடன் சேர்ந்து, ஒரு பாட்டாளி வர்க்கச் சமூகப் புரட்சிக்குத் தயார்ப்படுத்துவதற்கான அதன் வல்லமையும் அதிகரிக்கிறது.
தமிழில்: மு. சிவலிங்கம்
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply