
மக்கள் தொகை, சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள்
பி. வி. ராகவலு
இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தலைமைப் பதிவாளர் நீண்ட தாமதத்திற்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் பிறகு, இறுதியாக 2027இல், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இதுவரையில்லாத பெரிய ஒரு மாற்றம், சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சேர்க்கும் முடிவாகும். இது ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) மற்றும் அதன் சித்தாந்தத் தாயான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) ஆகியவை நீண்ட காலமாக எதிர்த்துவந்த ஒரு விஷயமாகும். அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட இந்த முடிவு, அவர்களது கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது. அதுமட்டுமல்லாது, அதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்த சந்தேகங்களையும் எழுப்புகிறது. பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் இப்போது இந்த நடவடிக்கையை சமூக நீதிக்கான ஒரு நடவடிக்கை எனக் கூறினாலும், இது அவர்களது கொள்கைரீதியான உறுதிப்பாடு என்பதைவிட, ஓட்டுகளை அறுவடை செய்வதற்கான தேர்தல் அரசியலே இந்த முடிவின் பின்னணியில் உள்ளது என்பதை நடப்புச் சூழல் காட்டுகிறது.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதமான போதிலும், அதற்குப் பின்னர் அதை மீண்டும் தொடங்குவதில் பா.ஜ.க. அதிக அக்கறை காட்டவில்லை. 2026க்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள முடியும் என அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளதால், ஒருவேளை அச்செயல்முறை தாமதமாவதைத் தடுக்கும் நோக்கில் இருக்கலாம். 2026க்கு முன்பு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், தொகுதி மறுவரையறை செய்ய முடியாது. தற்போது 2027ஆம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதால், உடனடியாக தொகுதி மறுவரையறை செய்வதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
சாதி வாரிக் கணக்கெடுப்புக்கு பா.ஜ.க.வின் முந்தைய எதிர்ப்பு
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான கோரிக்கைகளை மோடி அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. தலித் மற்றும் பழங்குடியினர் தவிர பிற சாதிவாரியான கணக்கெடுப்புக்கு எதிரான கொள்கையை தமது அரசாங்கம் கொண்டுள்ளதாக 2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்தது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நிர்வாகரீதியாகச் சிக்கலானது என்றும், அதிகாரப்பூர்வப் பயன்பாட்டிற்கு அது நம்பத் தகுந்ததல்ல எனவும் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், இந்த நிலைப்பாட்டை மீண்டும் அது உறுதிப்படுத்தியது. பிரதமரே, 2023 தேர்தலுக்குப் பிந்தைய தனது உரையில், இந்தியாவில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் என நான்கு சாதிகள் மட்டுமே உள்ளன என்று அறிவித்ததன் மூலம், நிலவும் சாதிப் பாகுபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டார்.
இந்த நீண்டகால சமூகநீதி எதிர்ப்பு அவர்களது சித்தாந்தத்தில் வேரூன்றியுள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு இந்து சமூகத்திற்குள் உள்ள ஆழமான ஏற்றத்தாழ்வுகளை அம்பலப்படுத்திவிடும் என்ற ஐயத்துடனேயே சங் பரிவார் எப்போதும் பார்த்துள்ளது; ஏனெனில், தங்களது இந்துத்துவக் கொள்கைகள் அடிப்படையிலான ஒருங்கிணைப்புக்கு எதிராக அமைந்துவிடும் என்று அது அஞ்சுகிறது. அவர்களது உண்மையான கவலை என்னவென்றால், சாதிவாரித் தரவுகள் வளர்ச்சியடையாத சமூகங்களை உரிமைக்காகக் குரலெழுப்ப வைக்கும்; அவர்கள் தங்களது நியாயமான பங்கிற்காக வளங்களைச் சமமாகப் பங்கிடக் கோருவார்கள்; ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் வகுப்புவாத ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிநிரலுக்கு இது சவாலாக இருக்கும்.
அரசியல் நிலைபாட்டின் நேரெதிர்த் திருப்பம்
இருப்பினும், பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. 2024 தேர்தல் தோல்விகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதி வாக்காளர்களின் ஆதரவில் சரிவு ஆகியவற்றைத் தொடர்ந்து, 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரித் தரவுகள் சேகரிக்கப்படும் என்று கட்சி அறிவித்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக இந்தக் கொள்கை மாற்றம் எனத் தெரிகிறது. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டும் அதேவேளையில், எதிர்க்கட்சிகளின் செல்வாக்கைக் குறைப்பதற்காகவே அந்தக் கோரிக்கையை ஆதரிக்கவும் முற்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். கூடத் தன் நிலைப்பாட்டை மென்மையாக்குவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. சாதிவாரித் தரவுகள் தேர்தல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படாவிட்டால், அது மக்கள்நல நோக்கங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என, 2023ஆம் ஆண்டில், ஒரு முக்கிய ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய கரிசனம்
நம்மிடம் நீண்ட காலமாக சாதிவாரித் தரவுகள் இல்லாமலிருப்பதற்கு காங்கிரஸும் பொறுப்பாகும். அது நீண்டகாலம் நாட்டை ஆண்ட போதிலும், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவில்லை; மண்டல் குழுவின் பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்தவில்லை. 2011இல், அது சமூக-பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியது, ஆனால் பொது மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து வேண்டுமென்றே அதைப் பிரித்துத் தனியாக வைத்திருந்தது. பின்னர், தரவுகள் துல்லியமானதாக இல்லை எனக் காரணம் கூறி அதனை வெளியிடவில்லை. இந்தப் பணிக்காக ரூ.5,000 கோடி செலவிடப்பட்ட போதிலும், தொடர்ந்து 2014இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசாங்கம், சமூக-பொருளாதார, சாதிவாரிக் கணக்கெடுப்புத் தரவுகளை மொத்தமாகக் கிடப்பில் போட்டது.
2024 தேர்தலுக்கு முன்னதாக, முக்கியமாகத் தேர்தல் ஆதாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், காங்கிரஸ் திடீரென சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான கோரிக்கையை முன்வைத்தது.
சாதி வாரிக் கணக்கெடுப்பு ஒரு வரலாற்றுக் கோரிக்கை
இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒரு நீண்ட, பல கட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1881 முதல் 1941 வரையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் சாதிவாரித் தரவுகள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டாலும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. 1950ஆம் ஆண்டு வல்லபாய் படேல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இனி சாதி இடம்பெறாது என்று அறிவித்தார். 1953இல் காகா காலேல்கர் தலைமையிலான, பிற்படுத்தப்பட்டோருக்கான முதல் குழுவும், பின்னர் 1980இல் மண்டல் குழுவும், துல்லியமான எண்ணிக்கை இல்லாமல், இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் தவறுகள் நடக்கும் என்று வாதிட்டு, சாதிவாரித் தரவுகள் சேகரிப்பை மீண்டும் தொடங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தின. இருப்பினும், அடுத்தடுத்த ஒன்றிய அரசுகள் இந்தப் பரிந்துரைகளைப் புறக்கணித்தன. பொது மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து தனியாகப் பிரித்து, 2011இல் தயக்கத்துடன் எடுக்கப்பட்ட சமூக-பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு, 118 கோடி மக்களையும் உள்ளடக்கிய போதிலும், கைக்கொள்ளப்பட்ட முறைமைகளில் கடுமையான குறைபாடுகள் இருந்தன என்ற பெயரில் குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மீண்டும் சாதித் தரவுகளைச் சேகரிக்குமாறு, 2021ஆம் ஆண்டு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அரசாங்கத்தை வலியுறுத்தியது.
தேசிய அளவிலான சாதிவாரியான தரவுகள் இல்லாத நிலையில், பல மாநிலங்கள் தங்களுக்கென சாதிவாரிக் கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன. 1968ஆம் ஆண்டு, சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக, ஒரு விரிவான, அறிவியல்பூர்வமான முறையில் சாதிவாரி விவரங்களைச் சேகரிக்க, கேரளாவில் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம், சாதிகள் மற்றும் சமூகங்கள் குறித்த சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பிற்கு ஒரு குழுவை நியமித்தது. கேரளாவின் மக்கள்தொகையில் 12.5 சத மக்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு, பல்வேறு சமூகங்களுக்கிடையே நிலவிய சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்த நுட்பமான பார்வையை வழங்கியது. இது 45 தலித் மற்றும் 20 பழங்குடியினர் குழுக்கள் உட்பட 199 தனித்துவமான சாதிகள் மற்றும் சமூகங்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டது. தரவுகள், நிலவுடமையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தின. பீகாரின் 2023 சாதிவாரிக் கணக்கெடுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அம்மாநில மக்கள்தொகையில் 63%க்கும் அதிகமாக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இது பின்தங்கிய சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை 50%இலிருந்து 65%ஆக உயர்த்த பீகார் அரசாங்கத்தைத் தூண்டியது. இந்திரா சாவ்னி வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட 50% உச்சவரம்பை மீறியுள்ளதால், இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவாலாகும். இதேபோல், தெலுங்கானா அரசு, 2024ஆம் ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திய பிறகு, கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 42%ஆக உயர்த்துவதற்கான சட்டத்தை இயற்றி, அம்மசோதாவை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பதற்காக அனுப்பியது. அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் தரவுகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்த கவலைகள் காரணமாக அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளபோதிலும், கர்நாடகாவும் தனது சமூக-பொருளாதார, கல்வி குறித்த கணக்கெடுப்பு மூலம் இதற்கான முன்முயற்சியை எடுத்துள்ளது. தனது உடனடி அரசியல் தேவையைத் தாண்டி, குறிப்பிட்ட மாநிலங்களின் சாதிவாரிக் கணக்கெடுப்புகளால் உருவாக்கப்பட்ட அழுத்தம் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அதிகரித்து வரும் கோரிக்கை ஆகியவை இறுதியில் பா.ஜ.க.வை சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொள்ள வைத்துள்ளன.
2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயல்முறை
2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அக்டோபர் 2026இல் தொடங்கும் முதல் கட்டத்தில், ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பனிப்பொழிவுப் பகுதிகளும், மார்ச் 1, 2027இல் தொடங்கும் இரண்டாம் கட்டத்தில், நாட்டின் பிற பகுதிகளும் அடங்கும். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கூறுகளை உள்ளடக்கியது: வீடுகள் மற்றும் வீட்டுவசதிப் பட்டியல் கணக்கெடுப்பு, அதைத் தொடர்ந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. முதல் முறையாக, இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் இருக்கும்; மொபைல் செயலிகள், ஆன்லைன் சுய-பதிவேற்றம், தொடர்ந்து உடனடி திருத்தங்களைக் கண்காணித்தல் ஆகியவை இதில் அடங்கும். மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கட்டத்தில், சாதிவாரித் தரவுகள் சேர்க்கப்படும். கணக்கெடுப்பு முடிந்த பத்து நாட்களுக்குள் முதற்கட்டத் தரவுகள் வெளியிடப்படும்; அதைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குள் விரிவான, பிரிவு வாரியான தரவுகள் வெளியிடப்படும். இந்தக் காலக்கெடு முறையாகப் பின்பற்றப்பட்டால், தொகுதி மறுவரையறை செயல்பாடு 2029 தேர்தலுக்கு முன்பு முழுமையாக முடிந்துவிடும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பின் சாத்தியமான தாக்கங்கள் மற்றும் சவால்கள்
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதியைச் சேர்ப்பது வெவ்வேறு சாதி மக்களின் எண்ணிக்கை மற்றும் சமூக-பொருளாதார நிலை குறித்த நம்பகமான தரவை வழங்கும். இது இடஒதுக்கீடு அளவு அதிகரிப்பு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை வகைப்பாடு மற்றும் 50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்குதல் ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை வலுப்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தரவுகள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) 10% ஒதுக்கீட்டின் பின்னணியில் உள்ள நியாயத்தை, உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ கூடும். மேலும், இட ஒதுக்கீட்டைத் தனியார் துறைக்கு விரிவுபடுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைக்கான கோரிக்கைகளை சாதிவாரிக் கணக்கெடுப்பு வலுப்படுத்தக்கூடும்.
நீதிமன்றங்கள் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் நியாயத்தன்மையை மதிப்பிட, துல்லியமான சாதிவாரித் தரவுகள் உதவும். பெரும்பாலும் சரிபார்க்கக்கூடிய தரவுகள் இல்லாமலே அரசாங்கங்கள் முடிவுகளை எடுக்கின்றன; இது சட்டரீதியான சவால்களுக்கு வழிவகுக்கிறது. அத்தகைய வழக்குகளில், நடைமுறை அடிப்படையில் அல்லாமல் நம்பகமான சாதிவாரித் தரவுகளுடன், தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் நீதிமன்றங்களுக்கு ஏற்படும். மேலும், சமூக அடையாளத்திற்கும் சமூக-பொருளாதார நிலைக்கும் இடையிலான தொடர்பை சாதிவாரித் தரவுகள் வெளிப்படுத்தும்; இது தற்போதைய கொள்கைகளின் குறைகளை அம்பலப்படுத்தி, இன்றளவும் முன்னேற்றத்திலிருந்து விலக்கப்பட்ட சாதிக் குழுக்களை அடையாளம் காண உதவும்.
இருப்பினும், இன்னும் பல சவால்கள் உள்ளன. பல்வேறு மொழிகள் மற்றும் பல்வேறு பெயரிடல் மரபுகளைக் கடைப்பிடிக்கும் மக்களை, மண்டலங்கள் வாரியாக, ஆயிரக்கணக்கான சாதிகள் மற்றும் துணை சாதிகளாகப் பிரித்துக் கணக்கிடுவது மிகப்பெரிய ஒரு வேலையாகும். 2011 சமூக-பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு 46 லட்சத்திற்கும் மேற்பட்ட சாதிப் பெயர்கள் இருப்பதாகப் பதிவு செய்தது; இது கற்பனைக்கு அப்பாற்பட்ட எண்ணிக்கையாக இருப்பதால், வகைகளுக்குள் அடக்குவதைக் கடினமாக்குகிறது. ஒரு சரியான வகைப்படுத்தும் முறைமை இல்லாவிட்டால், தரவுகள் சீரற்றதாகவோ அல்லது பயன்படுத்த முடியாததாகவோ மாறக்கூடிய அபாயம் உள்ளது. எண்ணிக்கையை அதிகமாகவோ, குறைவாகவோ கணக்கிடுதல் மற்றும் தவறான வகைப்படுத்தல் போன்ற சவால்கள் எழக்கூடும். கர்நாடகாவின் அண்மைய அனுபவம் இந்தச் சிரமங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; ஏனெனில் கணக்கெடுப்பு முறைமைசார் குறைபாடுகள் மற்றும் அரசியல் பின்விளைவுகள் குறித்த கவலைகள், சாதிவாரிக் கணக்கெடுப்பின் தரவுகள் வெளியாவதைத் தடுத்துவிட்டன.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் தொடர்புடைய பிற சிக்கல்கள்
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இடஒதுக்கீடுகளைத் தவிர, பிற முக்கிய அரசியல் விஷயங்களையும் பாதிக்கிறது.
1976 முதல் முடக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறையை, 2026க்குப் பிந்தைய மக்கள்தொகைக் கணக்கீட்டின் அடிப்படையில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது ஒரு முக்கியமான கவலையாகும். இந்தச் செயல்முறை, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மோசமாகப் பாதிக்கும்; மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் பின்தங்கிய மாநிலங்களுக்கு ஆதரவாக, அவ்விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்த மாநிலங்களை – குறிப்பாகத் தென் மாநிலங்களை – இது பாதிக்கக்கூடும். இத்தகைய மாற்றம் கூட்டாட்சி முறையில் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பெரும் கவலைகளை எழுப்புகிறது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை செயல்பாட்டை முடிப்பதைப் பொறுத்தே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை செயல்படுத்துவதும் உள்ளதால், இது தொடர்பான அரசியல் கூறுகளை, இது மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்கப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் உள்ளது. ஏனெனில் இது சர்ச்சைக்குரிய தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. குடியுரிமைச் சட்டத்தில் தீங்கு விளைவிக்கும் திருத்தங்கள் கொண்டுவரப்படும் பின்னணியில், மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயல்பாடு, ஆளும் கட்சியின் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை மேலும் அதிகரிக்கத் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற பரவலான அச்சங்கள் காரணமாக, மதச் சிறுபான்மையினரை இது மிகவும் கவலைக்குள்ளாக்குகிறது. குறிப்பாக, அசாம், மேற்கு வங்கம் போன்ற பதற்றமான சூழல் நிலவும் எல்லைப்புற மாநிலங்களில் இந்தக் கவலைகள் அதிகம் வெளிப்படுகின்றன.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தரவுகள் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் சேர்க்கப்படக்கூடாது என்ற கோரிக்கையை இது வலுப்படுத்துகிறது.
சாதி வாரிக் கணக்கெடுப்பின் பயன்கள் மற்றும் குறைபாடுகள்
மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் பரவலான பயன்பாட்டைக் கொண்டுள்ளன. இது தேசிய அளவிலான ஏராளமான கணக்கெடுப்புகளின் பணிச்சுமையைக் குறைக்கிறது; கொள்கைத் திட்டமிடலுக்கான தரவுகளை அளிக்கிறது; அரசாங்க வளங்களைச் சரியாகப் பங்கிட வழிகாட்டுகிறது; மேலும் தேர்தல் எல்லைகளை வரையறுக்க உதவுகிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கண்காணிக்கும் அமைச்சகங்களுக்கு இது முக்கியமானதாகும். மேலும் பரந்த அளவில் புலப்பெயர்வு, கருவுறுதல், வேலைவாய்ப்பு மற்றும் சமூக இயக்கப் போக்குகளைக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ள உதவுகிறது.
ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்புத் தரவுகள் பயனுள்ளதாக இருந்தபோதிலும், அது அனைத்து நோய்களுக்குமான மருந்து அல்ல. தலித் மற்றும் பழங்குடியினர் வகைப்பாடு போல, சாதிவாரித் தரவுகள் கிடைக்கும் வகுப்பினர் மத்தியிலும் ஆழமான ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன. வெறும் கணக்கெடுப்பு நீதியை உறுதி செய்யாது. தேவையற்ற மாயைகள் சாதி அமைப்பை அழித்தொழிக்கும் போராட்டத்திற்கான நமது உறுதிப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யலாம். புதிய தாராளமயக் கொள்கைகள், குறிப்பாக மோடி அரசாங்கத்தின் கீழ், நலத்திட்டங்களை அரித்துவிட்டன; தனியார்மயத்தை ஊக்குவித்துள்ளன; பொதுச் செலவினங்களைக் குறைத்துள்ளன – குறிப்பாக, விளிம்புநிலை மக்களை மேம்படுத்தும் நோக்கமுடைய திட்டங்களுக்குத் தடையேற்படுத்துகின்றன. இந்தக் கட்டமைப்புப் பிரச்சினைகளை எதிர்கொண்டு சரிசெய்யாமல், சாதிவாரிக் கணக்கெடுப்பு மட்டும் செய்வதால் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மாறாது.
ஆயினும், நீதிக்கான போராட்டத்தில் சாதிவாரித் தரவுகள் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கமுடியும். இது சமத்துவமின்மையின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தவும், நடைமுறையிலுள்ள கொள்கைகளின் தோல்வியை அம்பலப்படுத்தவும், சாதி அடிப்படையிலான அடையாள அரசியலின் கேடுகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கும் உதவும். அனைத்துக்கும் மேலாக, தரமான கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, நிலச் சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு உத்தரவாதங்கள், பொதுச் சேவைகள் வழங்குதல் போன்றவற்றில் அடிப்படை மாற்றத்திற்காகப் போராடும் சாதி உணர்வை மீறிய மேலான ஒரு பரந்த இயக்கத்திற்குத் தேவையான தகவல்களை, சாதிவாரிக் கணக்கெடுப்பு அளிக்கமுடியும். பி.ஆர். அம்பேத்கர் எச்சரித்தபடி, சமூக – பொருளாதார ஜனநாயகம் இல்லாமல், அரசியல் ஜனநாயகம் பொருளற்றது. அந்த உணர்வுடன், சாதிவாரிக் கணக்கெடுப்பை அடையவேண்டிய இலக்காகக் கருதாமல், ஒரு நியாயமான, சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்த உதவும் ஒரு கருவியாகவே அதைக் கருத வேண்டும்.
தமிழில்: சா.சோபனா
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
