
பள்ளிகளில் தீண்டாமை: சீரழிந்த வடிவத்தின் மீது கட்டப்படும் நவீனம்
ச. லெனின்
‘ஒரு முறை அது புனிதமானது என்று வகைப்படுத்தப்பட்ட பிறகு, அது எல்லாக் காலத்திற்கும் புனிதமானதுதான். வர்ண பேதம் என்பது மாற்ற முடியாதது’ என்று புருஷ சுக்தம் கூறுவதை அம்பேத்கர் குறிப்பிட்டுப் பேசும்போது, “ஒரு சமூகமோ, தனி நபரோ சில நெறிமுறைகளை வகுத்துக்கொண்டு வாழ்வது தவிர்க்க முடியாததுதான். ஆனால், காலத்திற்கு ஏற்றார்போல் அந்த நெறிமுறைகளில் மாற்றம் செய்துகொள்வது அவசியமாகும். எல்லாக் காலத்திற்குமான நெறிமுறை என்று எதையும் நிறுவக் கூடாது” என்றார்.
இந்தியச் சமூகத்தில் வர்ணபேதம் என்பது சாதிய வடிவமாக வளர்ந்து, அதன் ஒடுக்குமுறைகளும் பாகுபாடுகளும் காலா காலத்திற்குமான நெறிமுறைகளாக முன்வைக்கப்பட்டு, அதன் கொடூரங்கள் இன்றுவரை தொடர்கின்றன. இதன் பொருள், இக்காலப்பகுதியில் மாற்றங்களே இல்லாமல் அவை தொடர்கின்றன என்பதல்ல. இவ்வளவு காலத்திற்குப் பிறகும், வளர்ச்சிகளுக்குப் பிறகும், சாதியப் பாகுபாடுகளும், ஒடுக்குமுறைகளும் நீடித்து நிலைத்து நிற்கின்றன என்பதுதான்.
ஆழமாக வேரோடிவிட்டது
’சாதி என்பது வர்க்கப் பிரிவினையின் தொடக்ககால வடிவமாகும். உற்பத்தியில் ஈடுபடுபவரை, தான் உற்பத்தி செய்து உருவாக்கும் உபரியிலிருந்து பிரித்து, அது தனக்குள்ளதல்ல என்ற மத ரீதியான சமூக உணர்வை உருவாக்கும் முறையாக சாதி உள்ளது’ என்கிறார் மார்க்சிய அறிஞர் டி.டி.கோசாம்பி. இந்திய ஆளும் வர்க்கம் தனது சுரண்டலுக்கு சாதகமான இந்த உணர்வு நிலையை பாதுகாத்து வளர்த்தது. இந்திய முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்தோடும், நிலப்பிரபுத்துவத்தோடும் சமரசம் செய்துகொண்டது. சாதிய ஒடுக்குமுறைகளும் பாகுபாடுகளும் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக முறையிலேயே ஆழமாக வேரோடிவிட்டன. முதலாளித்துவ வளர்ச்சிப்பாதை, இவற்றை அழித்தொழிக்காமல் இவற்றுடன் சமரசம் செய்துகொண்டது. முழுமையான முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியோ, விவசாயப் புரட்சியோ நடைபெறாததே சாதியப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் தொடர்வதற்கான அடிப்படை காரணமாகும். ‘இந்திய விவசாயத்தில் (இந்தியாவில்) முதலாளித்துவ வளர்ச்சி என்பது பழைய வடிவங்களை உறுதியான முறையில் ஒழித்து உருவாக்கப்படவில்லை. முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறை மற்றும் சமூக அமைப்பு முறையெனும் சீரழிந்த வடிவத்தின் மீது அது பொருத்தப்பட்டது. (இந்தியாவில் ஏற்பட்டுள்ள) நவீனத்தின் வளர்ச்சி, காலத்திற்கு ஒவ்வாதவற்றைத் தவிர்த்துவிடவில்லை’ என்பதே எதார்த்தமாகும். இந்தப் பின்புலம்தான் இந்தியாவில் நாம் அன்றாடம் சந்திக்கும் அனைத்துவிதமான சாதியப் பிற்போக்குத்தனங்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், பழமைவாதங்களுக்கும், அடிப்படையாக விளங்குகிறது. இந்த அடிப்படைக் காரணத்தைப் புறக்கணித்துவிட்டு, மேலோட்டமான தலையீடுகளும் திட்டங்களும் இவற்றைச் சரிசெய்வதற்குப் போதுமானதல்ல.
“முதலாளித்துவ நிலைக்கு முந்தைய அமைப்பான நிலப்பிரபுத்துவ பொருளாதார அடித்தளத்தின் மீது கட்டப்பட்ட கட்டமைப்பே சாதிய முறையாகும். அதாவது, அன்றைக்கு நிலவிய நிலம் சம்பந்தப்பட்ட உறவின் அடிப்படையிலேயே, ஆளும் வர்க்கங்களாலும் அவர்களின் தத்துவகர்த்தாக்களாலும் சாதிய உறவுகள் உருவாக்கப்பட்டன. அந்த நில உறவில் அடிப்படை மாற்றம் நிகழாமல், சாதிய அமைப்பில் அடிப்படை மாற்றம் சாத்தியம் இல்லை என்பதே உண்மை.” (சீத்தாராம் யெச்சூரி)
இளைய சமுதாயத்தினரிடையே
காலத்திற்கு ஒவ்வாத அம்சங்கள் வளரும் தலைமுறையினரிடமும் ஆழமாக வேரூன்றப்படுவது குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தமிழகப் பள்ளிகளில் நிலவும் சாதியப் பாகுபாடுகளும், ஒடுக்குமுறைகளும், தாக்குதல்களும், பொதுச் சமூகத்தின் கூடுதல் பங்களிப்பைக் கோருகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பயின்றுவந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவன், மாற்று சாதியைச் சார்ந்த மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். அதைத் தடுக்கவந்த மாணவனின் தங்கையும் பலத்த காயமுற்றார். இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மூவர், தாக்கப்பட்ட மாணவன் பயிலும் அதே பள்ளியில் படிப்பவர்கள். மற்றொருவர் வேறு ஒரு பள்ளியில் பயிலும் மாணவர். மேலும் இருவர் பள்ளிப்படிப்பில் இல்லாத பதினெட்டு வயது நிரம்பாதவர்கள். ஒருவர் மட்டும் இருபது வயது நிரம்பியவர். குற்றம் இழைத்த எழுவரில், ஆறு பேர் சிறார்கள். அதில் நான்கு பேர் பள்ளிப் படிப்பில் இருப்பவர்கள். சிறார்களைக் குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவது தண்டனைக் காலத்தைக் குறைவாக அனுபவிப்பதற்கான வழி என்றும் கூறப்படுகிறது.
“இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினை” என்று தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழலை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிட ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவையும் அமைத்து ஆணை பிறப்பித்தார். இந்தக் குழு விரிவான ஆய்வை நடத்தி, தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது. அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறை ஒரு நெடிய வழிகாட்டு நெறிமுறைகளைக் கடந்த மாதம் வெளியிட்டது. ஓய்வுபெற்ற நிதிபதி கே. சந்துரு கொடுத்துள்ள அறிக்கையும், பள்ளிகளில் சாதியப் பாகுபாடுகள் குறித்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வு அறிக்கையும் பல கொடுமையான எதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்றன.
கொடுமையான எதார்த்தங்கள்
தலித் மாணவர்களைப் பள்ளி கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைப்பது, உணவு சமைப்பதில் பட்டியல் இனத்தவரை அனுமதிக்க மறுப்பது, சாதி வாரியாகச் சத்துணவுக்குத் தனித்தனி வரிசையில் நிறுத்துவது, சக மாணவர்களிடம் சாதிய உணர்வை வெளிப்படுத்தும் ஆதிக்கச் சாதியைச் சார்ந்த மாணவர்கள் சாதியக் குழுக்களாகச் செயல்படுவது, ஆசிரியர்களுக்குள் சாதியப் பாகுபாடு, தலித் மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள், பெற்றோர்களின் நேரடி வழிகாட்டுதலால் மாணவர்களிடம் தொடரும் சாதியப் பாகுபாடு எனப் பள்ளிகளில் பல வகைகளில் சாதியப் பாகுபாடுகள் உள்ளதைத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் ”சாதிக்கென்று நிறத்தைக் கட்டமைத்து கயிறு, பொட்டு, டாலர், செயின், கடுக்கன், தொப்பி என அடையாளங்களுடன் பள்ளிகளுக்கு வருவது, சாதி அடையாளத்துடன் தலைவர்கள் படத்தை பஸ் பாஸுக்குள் வைத்து வருவது, டி சர்ட்டுகள், பனியன்கள் சாதி அடையாளத்துடன் அமைவது போன்றவையும் உள்ளன. பதின்பருவத்தில் இயல்பாக ஏற்படும் சீண்டலுக்கான உந்தல், சாதிச் சீண்டலாக மடைமாற்றம் ஆக்கப்பட்டுள்ளது” என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இன்றைய சூழ்நிலையில் சாதியப் பாகுபாடு என்பது பொதுவாகப் பட்டியல் சமூக மக்களுக்கும் இடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்குமானதாக மாற்றம்பெற்றுள்ளது.
கல்வி, சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள வட மாநிலங்களில் நடைபெறும் சாதிக் கொடூரங்களை விளங்கிக்கொள்ள முடிகிறது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் நீடித்து நிலைத்த தமிழ்நாட்டில், சாதி ஆணவப் படுகொலைகள், கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு, தாக்குதல்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை நீடிப்பது நாம் பயணிக்க வேண்டிய தூரத்தை உணர்த்துகிறது.
சீர்திருத்தங்கள் என்பது பொதுவாகச் சாதிய ஒடுக்குமுறைகளுக்கான காரணங்களை விடுத்து, விளைவுகள் மீது மட்டுமே வினை புரிகின்றன. அல்லது அதோடு தன் எல்லையைச் சுருக்கிக்கொள்கிறது. சீர்திருத்தங்கள் அவசியமானவை; அவையே சமூக மாற்றத்திற்கான படிக்கட்டுகளாகும். சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் நடவடிக்கைகளில் சீர்திருத்தங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. முற்போக்கு இயக்கங்களும், அரசும், பொதுச் சமூகமும் தொடர்ந்து அவற்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அரசு, தற்போது பள்ளிகளுக்கு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளும் அத்தகையவையே.
இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மநு
கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான சிறு கருவி. இந்தியாவில் சாதியப் பாகுபாடுகள் இத்தகைய பணிகளைத் தாமதப்படுத்தவும், சிக்கலாக்கவும் செய்கின்றன என்கிறது ‘ஆக்ஸ்ஃபாம்’ (Oxfam) அறிக்கை. சாதியப் பாகுபாடுகளால் கல்வியில் ஏற்பட்ட இந்தச் சிக்கலைச் சற்று சமன் செய்ய இடஒதுக்கீடு ஒரு இடைக்கால நிவாரணமாக முன்வைக்கப்பட்டது. இடஒதுக்கீட்டையே வன்மத்தோடு அணுகும் போக்கு, இங்கு பொதுக்கருத்தாக மாற்றப்படுகிறது. சாதிச் சான்றிதழும் இடஒதுக்கீடும் இல்லாமல் போனால், சாதி இல்லாமல் போய்விடும் என்று கதைவிடுவதும் நடக்கிறது. சாதியும் சாதிய ஒடுக்குமுறையும் இருப்பதால்தான், சாதிச் சான்றிதழும் இட ஒதுக்கீடும் இருக்கின்றனவே தவிர, அவை இருப்பதால் சாதி நிலைக்கவில்லை. உண்மையில், மநு அநீதியின் அடிப்படையில் அமைந்த சமூகக் கட்டமைப்புதான் முதல் இடஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டது. மநு நீதியின் அடிப்படையில் ஆதிக்கச் சாதியினருக்கு மட்டுமே அன்று படிக்கும் உரிமை (இடஒதுக்கீடு) இருந்தது. மற்றவர்களுக்கு, கல்வி உரிமை உள்ளிட்டு, பல்வேறு சமூக உரிமைகள் மறுக்கப்பட்டன. சாதி என்பது, ஒரு சமூகத்தினருக்குக் கல்வி பெறுவதற்கான உரிமையாகவும், மற்றொரு பிரிவினருக்கு அதுவே தடையாகவும் இருந்தது. மிக ஆழமான சமூகப் பாரபட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஏதேனும் ஒரு சமன்செய்யும் வழிமுறையாலன்றி தமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவை ஒருபோதும் கிடைக்காதவர்களுக்கும், வழங்கப்பட்ட இடைக்கால ஏற்பாடாகவே இட ஒதுக்கீடு அமைந்தது. சமூகத்தின் ஒரு பிரிவினருக்குக் காலம் காலமாக வழங்கப்பட்டுவந்த முன்னுரிமையின் விளைவாகப் பாதிக்கப்பட்ட இதர சமூக மக்களுக்கு உரிமை அளிக்கும் வகையில், அரசியல் சாசனம் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது.
இடஒதுக்கீடு என்பது ஒரு வலி நிவாரணிதானே தவிர, அதுவே தீர்வல்ல. கல்வியின்மை, வேலையின்மை, வறுமை ஆகியவற்றுக்கு இது தீர்வாகிவிடாது. முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளாகவே, சீர்திருத்தங்கள் மூலம் தீர்வைத் தேடும் வழியாக, அதைப் பார்க்க வைத்துவிடுகிறது. பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், நூலகம், நூலகத்தில் புத்தகங்கள், கழிப்பறை, குடிநீர், இதர அடிப்படை தேவைகளான தண்ணீர், ஆய்வுக் கூடம், துப்புரவுப் பணியாளர் நியமனம் ஆகியவற்றை நிறைவேற்றுவதை அரசு உறுதிபடுத்தும்போது மாணவர்களை அதில் ஈடுபடுத்துவது என்பது இல்லாமல் ஆகிவிடும். அனைவருக்கும் கல்வி, வேலை, சுகாதாரம் என்பதை நோக்கிய பயணம், எளிய மக்களுக்கான வாழ்வாதார மறுப்புக்கு எதிரான அணியை ஆளும் வர்க்கத்திற்கு எதிராகக் கட்டமைக்க வழிவகுக்கும். சாதிய ரீதியான அணிதிரட்டலும் மோதல்களும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தை மடைமாற்றுகிறது.
சாதி அரசியல் சக்திகள்
தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலைகளில் மாணவர்கள், சிறார்கள் பயன்டுத்தப்படுவது திட்டமிட்ட செயலோ என்ற நோக்கிலும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. 2025 ஆகஸ்ட் முதல் வாரத்தில் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் சாதி ரீதியாக மாணவர் ஒருவரை தாக்கியதற்காக ஐந்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறார்கள் எனில் தண்டனை குறைவு என்பதை பயன்படுத்தி சாதிய சக்திகள் இதில் அவர்கனை ஈடுபடுத்துகின்றனரா என்கிற சந்தேகத்தோடும் இவ்விஷயங்களை அரசு அணுகவேண்டியுள்ளது.
ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதி எதிர்ப்பு சாதியத் திரட்டல் மாணவர்கள் மத்தியில் பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. “இதன் பின்னணியில் சாதி அரசியல் சக்திகள் மட்டுமன்றி ஆசிரியர்களும் இருப்பதை அறிய முடிகிறது” (டைம்ஸ் ஆஃப் இந்தியா). தமிழ்நாட்டிலும் சாதிய மேலாதிக்கம் கொண்ட இந்துத்துவா ஊடுருவல்கள், சாதிய ஆதிக்கச் சக்திகளின் செயல்பாடுகள், மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்து வருவதை உணர முடிவதாகத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வு தெரிவிக்கிறது. “ஆர் எஸ் எஸ் போன்ற வலதுசாரிக் குழுக்கள் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிய கருத்தாக்கங்களைப் பரப்புகின்றன. சாதி, மதப் பெருமைகள் என்பதுபோன்ற கற்பனை கதைகளை இளம் மனங்களில் விதைக்கின்றன”. அரசு இவ்விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு கவனம் செலுத்த வேண்டும்.
சாதிக் கயிறு, திலகம் கூடாது என 2019 இல் அன்றைய அரசு ஒரு சுற்றறிக்கை விடுத்தபோது, அவை மத நம்பிக்கையுடன் சம்பந்தப்பட்டவை; ஆகவே அரசு அவற்றைத் தடுக்கக் கூடாது என பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. அன்றைய அ.இ.அ.தி.மு.க அரசும் பின்வாங்கியது. அந்தச் சுற்றறிக்கையை அனுப்பிய அதிகாரி மீது நடிவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாஜக கோரியது. மாணவர்களைச் சாதி, மத ரீதியாகத் அணிதிரட்டுவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை இதுவே எடுத்துக்காட்டும். தற்போது வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் கூட அது தனது எதிர்ப்பை மதவெறி நோக்கத்தோடு தெரிவித்துள்ளது. கலாச்சாரம் என்கிற பெயரில் சாதியாக மக்கள் பிரிந்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அது வெளிப்படுத்துகிறது. அரசியல் ஆதாயத்திற்காகச் சாதியக் கட்சிகளை, சாதிச் சங்கங்களை, தனிநபர் இயக்கங்களை அது ஒருங்கிணைத்து வருகிறது. இதற்குச் சமூக அணிதிரட்டல் (Social Engineering) என்று திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறது. சாதி, மத மோதல்களை உருவாக்கிக் களத்தைச் சூடாக வைத்திருப்பதோடு, தேர்தல் காலத்தில் அவற்றை அறுவடை செய்கிறது. எல்லாக் காலத்திலும் சாதி, மதம், இனம் எனப் பிரிவினை பேசுவது உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கு எதிரானதாகவே இருக்கும்.
வழிகாட்டு நெறிமுறைகள்
நீதிபதி கே. சந்துரு அறிக்கையின் வழிகாட்டுதல்களைக் கொண்டு சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. கல்வி நிலையங்களை ஜனநாயகப்படுத்திடவும், ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள் மேல் எழவும், மாணவர் பேரவை தேர்தல்கள் நடத்தப்படுவது அவசியமாகும். இதையும் அறிக்கை வலியுறுத்துகிறது. அதுகுறித்தெல்லாம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பேசவில்லை.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் எதார்த்த நிலைமைகளை எடுத்துக்காட்டுகின்றன. சாதி அடிப்படையில் வகுப்பறைகளில் மாணவர்கள் அமரும் போக்கு பள்ளிகளில் உள்ளது. அதை மாற்றி அமைக்கும் நோக்கில், ”ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களுக்கான இருக்கை ஒதுக்கீடு உயரத்திற்கேற்பவும் அவ்வப்போது மாற்றி அமைத்து அமரச்செய்தலும் வேண்டும். உடல் ஊனமுற்ற மாணவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களைத் தவிர்த்துப் பிற மாணவர்களை 15 நாட்களுக்கு ஒரு முறை வரிசையிலும் மாற்றி அமரச் செய்தல் வேண்டும்.” என்கிறது.
“பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்களை மந்தனமாக (அலுவலகத் தேவைகள் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமால் மறைவாக) வைத்திருக்க வேண்டும்.” “மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான எந்த நெடுவரிசையோ விவரங்களோ இருக்கக் கூடாது.” பள்ளி வருகைப் பதிவேட்டிலேயே பட்டியல் சாதி மாணவர்களின் பெயர்களைத் தனி வண்ண மையில் ஆசிரியர்கள் எழுதும்போக்கு உள்ளது என்று அறிக்கை கூறுவதை உள்ளடக்கியே இந்த வழிகாட்டு நெறிமுறை அமைந்துள்ளது.
“எந்த நேரத்திலும் வகுப்பு ஆசிரியர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களின் சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்கவோ, மாணவரின் சாதி அல்லது சாதிக்குக் காரணமான தன்மை பற்றி எந்த இழிவான கருத்துக்களையும் தெரிவிக்கவோ கூடாது” – இவையெல்லாம் பள்ளிகளில் தற்போது நடக்கிறது என்பதே இதன் பொருள்.
“எந்தவொரு மாணவரின் உதவித் தொகை தொடர்பாகப் பெறப்பட்ட விவரங்களை அறிவிப்பதற்கான இடம் வகுப்பறைகள் அல்ல. அத்தகைய தகவல்கள் பெறப்பட்டால், தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மாணவர்களைத் தனியே அழைக்காமல் குழுவாக அழைத்து தகவலை வாய் மொழியாகவோ அல்லது எழுத்துபூர்வமாகவோ வழங்க வேண்டும். இந்நேர்வுகளில் பெற்றோர்களுக்கு அலைபேசி வாயிலாக அனுப்பிடவும் தெரிவிக்கப்படுகிறது.” – பட்டியல் சாதி மாணவர்களை வகுப்பறையில் எழுந்து நிற்கவைத்து “உங்களுக்குப் புத்தகம் வந்துள்ளது; உங்களுக்கு உதவித் தொகை வந்துள்ளது” என்பதுபோன்ற அறிவிப்புகள் அந்த மாணவர்களைச் சங்கடப்படுத்தும் அளவிற்கு உள்ளது. அவற்றை இது சரிசெய்திடலாம்.
“பள்ளியில் மாணவரின் தனிப்பட்ட விவரங்கள் ஒரு பதிவு கோப்பாகப் பராமரிக்கும் நிலையில் தலைமை ஆசிரியர் அனுமதியுடன் மட்டுமே அக்கோப்பினைப் பயன்படுத்திட வகுப்பாசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குத் தலைமை ஆசிரியரால் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்கள் வண்ண மணிக்கட்டுப் பட்டைகள், மோதிரங்கள் அல்லது வேறுபாடுகளை வெளிப்படையாகத் தெரியக்கூடிய அடையாளங்கள் அணிவதைத் தடைசெய்வதோடு, அவற்றை அணிவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அவ்வப்போது வழங்கிடத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிப்பிடும் அல்லது சாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வருவதையும் தவிர்க்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றத் தவறினால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்துவதோடு கூடுதலாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’‘ என்பன போன்ற பல அறிவுறுத்தல்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளன. நீதிபதி கே. சந்துருவின் பரிந்துரைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளதாக இல்லை என்றபோதும் இவை எவ்வாறு அமலாக்கப்படப்போகிறது என்பது முக்கியமாகும். பல்வேறு அறிவிப்புகளைப் போல் இதையும் கடந்துபோனால், சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதில் தமிழ்நாடு எனும் சமூகச் சீர்திருத்தத்தின் தளம் தோற்றுப் போகும்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த காலங்களில் நிகழ்ந்த சாதிய மோதல்கள் மீது இதற்கு முன்பும் பல ஆணையங்கள் அமைக்கப்பட்டுப் பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்மீதான சில முன்னெடுப்புக்களையும் அரசு எடுத்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை கவனம் செலுத்தப்பட்டன. ஆனால், இன்றைய நவ தாராளமய காலத்தில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
விரிவான சமூக மாற்றம்
நாங்குநேரி பள்ளி மாணவன் மீதான தாக்குதலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களிடம் உரையாடியபோது, சாதி வன்முறைகளை எதிர்கொள்ள பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களால் மட்டும் முடியாது என்று தோன்றுவதாக நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். மேலும், பெற்றோர், சமூகம் என அனைவரின் மனமும் சிந்தனையும் மாற வேண்டும். சமூக அளவில் சாதியின் கொடுமை குறித்த தெளிந்த புரிதல் ஏற்படுத்தப்படாதவரை பள்ளிகளில் அமலாக்கப்பட வேண்டியவை குறித்து இக்குழு கொடுக்கும் பரிந்துரைகளுக்கு மிகக் குறைவான தாக்கமே இருக்கும். விரிவான சமூக மாற்றமே, சாதிய வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கான இறுதியான தீர்வாகும். அதுவே சாதி, மத வேற்றுமைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்று மிகத்தெளிவாக நீதிபதி சந்துரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“சாதி என்பது ஒரு கருத்து; அது ஒரு மனநிலை. சாதிப் பாகுபாடுகளைத் தகர்ப்பது என்பது ஒரு நடைமுறை சார்ந்த தடைகளை மட்டும் குறிக்கவில்ல. அது ஒரு தேசிய மாற்றத்தைக் குறிக்கிறது‘ என்றார் அம்பேத்கர்.
சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களும் உரிமைக்கான குரல்களும் சாதிய ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்கான முன்னெடுப்புகளே. அவை சாதிவாரியாகப் பிளவுபடுத்தப்பட்டுள்ள உழைக்கும் மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளே. தீண்டாமை ஒரு சமூகக் கொடுமை; அதை ஒழிப்பதற்கான போராட்டம் என்பது ஒடுக்கப்படும் மக்களின் பொறுப்பல்ல; அனைத்துப் பிரிவு மக்களின் கடமையாகும். சமூகத்தை ஜனநாயகப்படுத்துவற்கான களமாகச் சமூக நீதிக்கான போராட்டங்கள் நிற்க வேண்டும். அந்த உணர்வோடு அணிசேரும் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கான மேடையே தீண்டாமை ஒழிப்பிற்கான முன்னெடுப்பாகும். அதில் ஒன்றிணையும் அனைவரையும் இணைத்தே விவசாயப் புரட்சியை, ஜனநாயகப் புரட்சியைச் சாத்தியப்படுத்த முடியும். அதுவே சாதி ஒழிப்பிற்கு இட்டுச் செல்லும். “சமூக அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சிகளையும் நவீன வர்க்க சுரண்டலுக்கு எதிரான கிளர்ச்சிகளையும் இணைப்பதன் மூலம்தான் விவசாயப் புரட்சிக்கான போராட்டத்தை வலுப்படுத்த முடியும்.” மேலும், “பொருளாதாரக் கூறுகளே அடிப்படையில் தீர்மானிக்கும் சக்தி படைத்தவை என்று மார்க்ஸ் கூறியது உண்மைதான். ஆயினும், பொருளாதாரக் கட்டமைப்பில் மாறுதல் நிகழ்ந்தாலும், சமூகத்தில் பழமைக் கண்ணோட்டம் என்பது உடனடியாக நீங்கிவிடாது. இதைத் தொடர்ச்சியான தத்துவப் போராட்டத்தின் மூலமே நீக்க முடியும் என்று மார்க்சும் எங்கெல்சும் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளனர்” என்று யெச்சூரி சுட்டிக்காட்டுகிறார். பள்ளிகளில் நிகழும் சாதியக் கொடூரங்களை எதிர்த்து களத்திலும் கருத்தாலும் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
உதவிய நூல்கள்
Nanguneri Never.. Ever
Caste Violence in Educational Institution, A Report, Commissioned by the Tamil Nadu Government, Justice K Chandru, One Man Committee, July 2024
சாதியும் வர்க்கமும், சீத்தாராம் யெச்சூரி, 1999
சாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில்
பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஜனவரி 2024
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
