காஸ்த்ரோ நூற்றாண்டை நோக்கி…கூபாவின் விடுதலை: காஸ்த்ரோ முன்வைத்த ஜூலை 26 இயக்கத்தின் திட்டங்கள்
சமகால உலகில் 65 ஆண்டுகளாக அமெரிக்க வல்லரசின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்து தனது சோசலிச அமைப்பை பாதுகாத்து முன்னேறி வரும் கூபப் புரட்சியின் வரலாற்றில் 1953 ஆம் ஆண்டு ஜூலை 26 என்பது மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியின் ஆதிக்கத்தில் இருந்த மக்களை விடுவிக்க போராடிக் கொண்டிருந்த கூபாவின் இளம் முற்போக்கு சக்திகளான ஜூலை 26 இயக்கத்தினர் கூபா அரசின் ராணுவ தளங்களில் முக்கியமான ஒன்றான மான்கடா முகாமின் மீது ஆயுதம் தாங்கிய தாக்குதலை மேற்கொண்டனர். அத்தாக்குதல், பாடிஸ்டாவின் படைகளால் முறியடிக்கப்பட்டது. இருதரப்பிலும் உயிர்ச்சேதம் இருந்தது, எனினும் புரட்சிகர சக்திகளால் மான்கடா தளத்தை கைப்பற்ற முடியவில்லை. போரில் பங்கேற்ற புரட்சியாளர்கள் பலர் போராட்ட களத்தில் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டனர். சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். பின்னர் மீதமிருந்தோர் மீது வழக்கு நடத்தப்பட்டு பலருக்கும் நீண்ட காலம் சிறைவாசம் உள்ளிட்டு கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று உலகம் எங்கும் சோசலிச கூபாவின் ஒப்பற்ற தலைவராக அறியப்பட்டுள்ள ஃபிடெல் காஸ்த்ரோ அந்த போராட்டத்தின் தளபதியாகப் பங்கேற்று, கைது செய்யப்பட்டு பதினைந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
காஸ்த்ரோ எப்படி ராணுவப் படைகளால் கொலை செய்யப்படாமல் தப்பினார் என்பது பற்றி சுவையான தகவல்கள் பால் ஸ்வீஸி மற்றும் ஹியூபர்மன் ஆகியோர் கூபா புரட்சி பற்றி 1960 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட புத்தகத்தில் உள்ளன. ( Paul Sweezy and Leo Huberman: Cuba, Anatomy of a Revolution, Monthly Review Press, New York). உண்மையில் காஸ்த்ரோவை கைப்பற்றி அவரை கொல்ல வேண்டும் என்பதுதான் அரசின் முடிவு. இதற்கான ஆணைகள் ஒளிந்திருந்த புரட்சி படையினரை தேட அனுப்பப்பட்ட ராணுவக் குழுக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால் என்ன நடந்தது என்றால், காஸ்த்ரோவும் அவருடன் இருந்த இரண்டு கூட்டாளிகளும் மலை அடிவாரத்தில் பெரும் களைப்பில் உறங்கி கொண்டிருந்தபோது ராணுவ வீரர்கள் அங்கே வந்தனர். அதிர்ஷ்டவசமாக, அந்தத் துருப்புகளின் தலைவனாக இருந்த பேத்ரோ சார்நா என்பவர் பல்கலை கழகத்தில் படிக்கும் பொழுது காஸ்த்ரோவை அறிந்திருந்தார். அவர் காஸ்த்ரோ மறைத்துவைத்திருந்த ஆயுதங்களை தேடுவதுபோல் பாவனை செய்து, காஸ்த்ரோவின் காதுகளில் ” நீ உன் உண்மையான பெயரை சொல்லிவிடாதே! உன்னை கொல்ல வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது” என்று கூறியதால் சாவில் இருந்து காஸ்த்ரோ அப்போது தப்பினார்.
வழக்கறிஞரான காஸ்த்ரோ, அவருக்கெதிரான வழக்கில் தானே வாதாடினார். அவரது நீண்ட வாதம் மிகச்சிறப்பானதாக இருந்தது, பகுதி பகுதியாக எழுதப்பட்ட காஸ்த்ரோவின் உரையை அவ்வப்பொழுது ரகசியமாக சிறைக்கு வெளியே கொண்டு சென்று, பின்னர் அவை தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வெளி வந்தது. இந்த நூல், நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் ஆற்றிய உரை என்ற தன்மையில் மட்டும் இல்லை. ஒரு சிறந்த வரலாற்று ஆவணமாக, ஏகாதிபத்திய அமெரிக்க வல்லரசின் ஆதரவுடன் ஆட்சி செய்துவந்த சர்வாதிகாரி பாடிஸ்டாவின் கூபாவில் அன்று இருந்த, மோசமான, மக்கள் விரோத நிலைமைகளை துல்லியமாகப் படம் பிடித்து காட்டியதுடன், கூபாவிற்கு தேவையான மாற்று எது என்பதையும் தெளிவுபடுத்தியது. விரைவிலேயே, இந்த நூல் கூபப் புரட்சியின் பிரச்சார ஆயுதமாகவும் மாறியது. ஸ்பானிஷ் மொழியில் சிறந்ததொரு இலக்கிய நூலாகவும் கருதப்படுகிறது. பல மொழிகளில் உலகெங்கும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நீதியை மறுக்கும் ஆளும் வர்க்கங்களின் நீதிமன்ற அரங்குகளில் புரட்சியாளர்கள் ஆற்றும் மனித நேயம் மிக்க, ஆழமான உரைகள் புரட்சிக்கான ஆயுதங்களாக மாறும் என்பதற்கு, கார்ல் மார்க்ஸின் மீதான கோலோன் சதிவழக்கு தொடங்கி உலகெங்கிலும் சான்றுகள் உண்டு. காலனிய இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் மீது அடுத்தடுத்து பிரிட்டிஷ் அரசால் தொடுக்கப்பட்ட சதி வழக்குகளை மிகச் சிறப்பாக நமது முன்னோடிகள் எதிர்கொண்டதைப் போலவே, தனது நீதிமன்ற உரையை புரட்சியின் ஆயுதங்களில் ஒன்றாக காஸ்த்ரோ மாற்றிக் கொண்டார்! – மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழு.
மாண்புமிகு நீதிபதிகளே!
மான்கடா படைமுகாமைக் கைப்பற்றிய உடனேயே, வானொலி மூலம் நாடு முழுவதும் எங்களால் ஒலிபரப்பப்பட இருந்த ஐந்து புரட்சிகர சட்டங்களையும் இந்தக் குற்றச்சாட்டில் சேர்த்திருக்க வேண்டும். கர்னல் காவியானோ இந்த ஆவணங்களை வேண்டுமென்றே அழித்திருக்கவும் கூடும். அவ்வாறு அவர் செய்திருந்தாலும் கூட, அவை என் நினைவில் இன்றும் பசுமையாகவே இருக்கின்றன.
முதலாவது புரட்சிகர சட்டம், நாட்டின் அதிகாரத்தை மீண்டும் மக்களிடமே ஒப்படைத்திருக்கும். 1940ஆம் ஆண்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தவோ அல்லது மாற்றவோ வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யும் வரை, அதுவே அரசின் உயர்ந்தபட்ச சட்டமென அது பிரகடனப்படுத்தியிருக்கும். அதை நடைமுறைப்படுத்தவும், அதை மீறியவர்களை தண்டிக்கவும் – இதைச் செயல்படுத்த தேர்தல் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அமைப்பும் இல்லாத நிலையில் – நமது இறையாண்மையின் இத்தகைய சூழ்நிலைக்கேற்ற ஒரு வடிவமாக, சட்டபூர்வமான அதிகாரத்தின் ஒரே ஆதாரமாக, அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றியமைப்பதைத் தவிர, அதன் உள்ளார்ந்த திறன்கள் அனைத்தையும் புரட்சிகர இயக்கம் ஏற்றுக் கொண்டிருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், சட்டமியற்றல், நிர்வாகம், நீதித்துறை அதிகாரங்களை அது தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கும்.
இதைவிடத் தெளிவாகவோ, ஊசலாட்டமின்றியோ, மலட்டுத்தனமான போலித்தனம் இன்றியோ இந்த மனப்பாங்கு இருந்துவிட முடியாது. மக்களின் விருப்பத்தையும், உண்மையான நீதியையும் திறம்பட அமலாக்கத் தேவையான அனைத்து அதிகாரங்களும், அவசியமான அனைத்தும், கிளர்ச்சி மிக்க மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசாங்கத்திடம் வழங்கப்படும். அந்தக் கணத்திலிருந்து, மார்ச் 10ஆம் தேதி முதல் அரசியல் அமைப்புக்கு எதிராகவும், அதற்கு வெளியேயும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நீதித்துறையின் அதிகாரம் செயலிழந்து விடும். குடியரசின் மிக உயர்ந்த சட்டத்தால் வழங்கப்படும் அதிகாரத்தை மீண்டும் ஒரு முறை பெறுவதற்கு முன்பு, நாங்கள் உடனடியான, முழுமையான சீர்திருத்தத்தை மேற்கொள்வோம். இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பது இல்லாமல், இந்த அமைப்பு முறையை மிகவும் கேவலமான வகையில் முடக்கிய கைகளிலேயே அதன் காவல் பொறுப்பை மீண்டும் ஒப்படைப்பதன் மூலம் சட்டரீதியான தன்மைக்குத் திரும்புவது என்பது ஒரு மோசடியாக, ஓர் ஏமாற்றாக, மற்றொரு துரோகமாகவே இருக்கும்.
இரண்டாவது புரட்சிகர சட்டம், ஐந்து கேபலேரியா (ஒரு கேபலேரியா என்பது 194.2 ஏக்கர் நிலத்திற்கு சமமானதாகும்) அல்லது அதற்குக் குறைவான நிலத்தை வைத்திருக்கும் குத்தகைதாரர், துணை குத்தகை விவசாயிகள், பங்குச் சாகுபடியாளர்கள், குடியேற்றக்காரர்கள் ஆகியோருக்கு அவர்கள் செயல்பட்டு வரும் நிலத்தின்மீது அடமானம் வைக்கமுடியாத, மாற்ற முடியாத உரிமையை வழங்கும். இந்த நிலங்களின் முன்னாள் உரிமையாளர்களுக்கு, அவர்கள் பத்து ஆண்டுகளுக்குப் பெறக்கூடிய வாடகையின் அடிப்படையில் அரசு இந்த நிலங்களுக்காக இழப்பீடு வழங்கும்.
மூன்றாவது புரட்சிகர சட்டம், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட அனைத்து பெரிய தொழில், வர்த்தக, சுரங்க நிறுவனங்களின் லாபத்தில் 30 சதவீதத்தைப் பகிர்ந்து கொள்ளும் உரிமையை தொழிலாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கும். நடைமுறைக்கு வரவிருக்கும் இதர விவசாய சட்டங்களைக் கருத்தில் கொண்டு, விவசாய நோக்கத்திற்காக மட்டுமே செயல்படும் நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
நான்காவது புரட்சிகர சட்டம், அனைத்துக் கரும்புத் தோட்ட முதலாளிகளுக்கும் சர்க்கரை உற்பத்தியில் 55 சதவீதத்தை பகிர்ந்து கொள்ளும் உரிமை வழங்கப்படும். அதைப் போன்றே, மூன்றாண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு நிலம் வைத்திருக்கும் அனைத்து சிறு குத்தகை விவசாயிகளுக்கும், குறைந்தபட்சமாக 440 டன் சர்க்கரைக்கான ஒதுக்கீட்டையும் அது வழங்கும்.
ஐந்தாவது புரட்சிகர சட்டம் என்பது, முந்தைய ஆட்சிகளின்போது மோசடி செய்தவர்களின் அனைத்து உடைமைகளையும், முறைகேடாக சம்பாதித்த ஆதாயங்களையும், அதனோடு கூடவே அவர்களின் வாரிசுகள் அனைவரின் உடைமைகளையும், முறைகேடான ஆதாயங்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடும். இதனை அமலாக்க, இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது செயல்படும் அனைத்து நிறுவனங்களின் அனைத்து ஆவணங்களையும் முழு அதிகாரம் கொண்ட சிறப்பு நீதிமன்றங்கள் பார்வையிடும். இதன் மூலம் மறைத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான நிதி குறித்து விசாரணை நடத்தவும், உண்மையில் கூப மக்களுக்குச் சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்யவும், வெளிநாட்டு அரசுகளைக் கோர முடியும். இவ்வாறு மீட்கப்பட்ட சொத்துக்களில் பாதி, தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதிகளுக்கு மானியமாக வழங்கப்படும். மீதித் தொகை மருத்துவமனைகள், ஆதரவற்றோருக்கான இல்லங்கள், அறக்கட்டளை அமைப்புகளுக்கு பயன்படுத்தப்படும்.
மேலும், நமது அமெரிக்கக் கண்டத்திலுள்ள, ஜனநாயக உணர்வு கொண்ட மக்களுடன் நெருங்கிய தோழமை பாராட்டுவதே கூபாவின் கொள்கையாக இருக்கும். நம் சகோதர நாடுகளை ஒடுக்கும் இரத்தக்களரி மிக்க, கொடுங்கோன்மை ஆட்சியால் அரசியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அனைவருக்கும் ஜோஸ் மார்த்தியின் நாட்டில் தாராளமான புகலிடமும், சகோதர உணர்வும், உணவும் கிடைக்கும். இவ்வகையில், கூபா சுதந்திரத்தின் அரணாக இருக்கவேண்டுமே தவிர, இன்று அவர்கள் அனுபவிக்கும் துன்புறுத்தல், பசி, துரோகம் என்ற கொடுங்கோன்மைச் சங்கிலியின் வெட்கப்படத்தக்க ஒரு கண்ணியாக இருக்காது.
இந்தச் சட்டங்கள் உடனடியாக அறிவிக்கப்படும். எழுச்சி முடிவுக்கு வந்தவுடன், விரிவான, தொலைநோக்கு கொண்ட ஓர் ஆய்வுக்கு முன்பாக, விவசாய சீர்திருத்தம், ஒருங்கிணைந்த கல்விச் சீர்திருத்தம், மின்சார அறக்கட்டளை, தொலைபேசி அறக்கட்டளை போன்றவற்றை தேசியமயமாக்கல், இந்த நிறுவனங்கள் வசூலித்த அடாவடியான கட்டணங்களை திருப்பித் தருதல் போன்ற தொடர்ச்சியான சட்டங்களும் அடிப்படை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கடந்த காலத்தில் வெட்கமேதுமின்றி அரசுக்குச் செலுத்தாமல் அப்பட்டமாக ஏய்க்கப்பட்ட அனைத்து வரிகளும் கருவூலத்திற்குச் செலுத்தப்பட வேண்டும்.
இந்தச் சட்டங்களும் மற்ற நடவடிக்கைகளும் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் இரண்டு இன்றியமையாத பிரிவுகளின் துல்லியமான இணைப்பின் அடிப்படையில் அமைந்திருக்கும். அவற்றில் ஒன்று, பெரிய நில எஸ்டேட்டுகளை சட்டவிரோதமான ஒன்று என அறிவித்து உத்தரவிடும். ஒவ்வொரு வகையான விவசாய நிறுவனத்திற்கும், ஒரு நபர் அல்லது நிறுவனம் வைத்திருக்கக் கூடிய அதிகபட்ச நிலப்பரப்பை அது குறிப்பதோடு, அதிகப்படியான நிலத்தை கூப நாட்டு மக்களுக்குத் திருப்பித் தரும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். மற்றொன்று, வேலைவாய்ப்பு இல்லாத அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவும், உடலுழைப்பு அல்லது அறிவுசார் உழைப்பாளர் ஒவ்வொருவருக்கும் கௌரவமான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், தன்னிடமுள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துமாறு அரசுக்கு திட்டவட்டமான முறையில் ஆணை பிறப்பிக்கும். இந்தச் சட்டங்கள் எதையும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூற முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படவுள்ள முதல் அரசு அவற்றை மதிக்க வேண்டும். இது நாட்டிற்கான தார்மீகக் கடமை என்பது மட்டுமின்றி, பல தலைமுறைகளாக மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த ஒன்றை அடையும்போது, உலகின் எந்தவொரு சக்தியாலும் அதை மீண்டும் பறிக்க முடியாது.
மக்களின் குடிமை உரிமைகளையும் அரசியல் ரீதியான ஜனநாயகத்தையும் மீட்டெடுப்பதோடு கூடவே, நிலத்திற்கான பிரச்சனை, தொழில்மயமாக்கலுக்கான பிரச்சனை, வீட்டுவசதிக்கான பிரச்சனை, வேலையின்மைப் பிரச்சனை, கல்விக்கான பிரச்சனை, மக்களின் சுகாதாரத்திற்கான பிரச்சனை ஆகிய இந்த ஆறு பிரச்சனைகளையும் உடனடியாகத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மிகவும் அவமானகரமான அரசியல் அடக்குமுறையோடு கூடவே, மேலே குறிப்பிட்ட இந்த ஆறு பிரச்சனைகள் குறித்த நாட்டின் அதிர்ச்சிகரமான, துயரகரமான நிலைமைகள் பற்றி ஏதுமறியாதவருக்கு இந்த விளக்கம் வறட்டுத்தனமான ஒன்றாகவும், வெற்று விளக்கமாகவுமே தோன்றும்.
கூபாவில் உள்ள சிறு விவசாயிகளில் 85 சதவீதம் பேர் குத்தகை செலுத்துபவர்களாக, தாங்கள் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலின் கீழ் வாழ்பவர்களாகவே இருக்கின்றனர். மிகுந்த விளைச்சல் தரும் நமது நிலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வெளிநாட்டவர்களின் கைகளில் உள்ளன. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான ஓரியண்டேயில், அமெரிக்காவின் யுனைடெட் பழக் கம்பெனி, மேற்கு இந்தியக் கம்பெனி ஆகியவற்றின் நிலங்களே நாட்டின் வடக்கு – தெற்கு கடற்கரைகளை இணைக்கின்றன. பட்டினியால் வாடும் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க, உழுவதற்கு ஒரு ஏக்கர் நிலம் கூட இல்லாத இரண்டு லட்சம் விவசாயக் குடும்பங்கள் நாட்டில் உள்ளன.
மறுபுறம், சக்திவாய்ந்த நபர்களுக்குச் சொந்தமான மூன்று லட்சம் கேபலேரியா அளவுள்ள நிலங்கள் (ஒரு கேபலேரியா என்பது 194.2 ஏக்கர் நிலத்திற்கு சமமானதாகும்) சாகுபடி செய்யப்படாமல் உள்ளன. இவை அனைத்திற்கும் மேலாக, கூபா ஒரு விவசாய நாடு எனில், அதன் மக்கள்தொகை பெருமளவில் கிராமப்புறத்திலேயே இருக்குமெனில், அதன் நகரங்கள் அனைத்தும் இந்த கிராமப்புறங்களையே சார்ந்திருக்கும் எனில், நமது நாட்டின் கிராமப்புற மக்களே நம் சுதந்திரப் போரில் வெற்றியை ஈட்டித் தந்தவர்கள் எனில், நிலத்தை நேசிக்கின்ற, அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நன்கு அறிந்த, ஆரோக்கியமான, துடிப்பான கிராமப்புற மக்களையே நம் நாட்டின் மேன்மையும் வளமும் சார்ந்துள்ளது எனில், தங்களைப் பாதுகாத்து, வழிகாட்டும் ஓர் அரசையே இந்த மக்கள் சார்ந்திருப்பார்களேயானால், தற்போதைய நிலை தொடர்ந்து நீடிப்பதை எவ்வாறு நம்மால் அனுமதிக்க முடியும்?
உணவு, மரம் வெட்டுதல், ஜவுளித் தொழில்களைத் தவிர, கூபா பிரதானமாக கச்சாப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாகத்தான் தொடர்கிறது. மிட்டாய் இறக்குமதி செய்துவிட்டு நாம் சர்க்கரையை ஏற்றுமதி செய்கிறோம். காலணிகளை இறக்குமதி செய்துவிட்டு, தோலை ஏற்றுமதி செய்கிறோம். கலப்பைகளை இறக்குமதி செய்ய இரும்பை ஏற்றுமதி செய்கிறோம். நம் நாட்டை தொழில்மயமாக்க, நம்மிடம் எஃகு தொழிற்சாலைகள், காகிதத் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள் அமைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று ஒவ்வொருவருமே ஒப்புக் கொள்கின்றனர். பாலாடைக் கட்டி, பதப்படுத்தப்பட்ட பால், மதுபானங்கள், சமையல் எண்ணெய் ஆகிய பொருட்களைப் பொறுத்தவரையில், ஐரோப்பாவிலிருந்து வரும் நாசகரமான போட்டியை எதிர்கொண்டு நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, நமது கால்நடைகள், தானிய உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்; தொழில்நுட்பத்தையும் பதப்படுத்தலையும் மேம்படுத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்கின்றனர். டின்களில் அடைக்கப்பட்ட பொருட்களைப் பொறுத்தவரையில் அமெரிக்காவுடன் நாம் போட்டியிட வேண்டியுள்ளது. அதைப் போன்றே, சுற்றுலாவும் கூட மிகப்பெரிய அளவிற்கு வருவாய்க்கான ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் தொழிலாளிகள் தங்களின் நுகத்தடியின் கீழேதான் இருக்க வேண்டும் என்று முதலாளிகள் வற்புறுத்துகின்றனர். அரசாங்கமும் கைகளைக் கட்டிக்கொண்டு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. நாட்டின் தொழில்மயமாக்கலும் என்றென்றைக்குமாகக் காத்திருக்கிறது.
இதைவிடத் தீவிரமானதாக, இன்னும் சொல்லப்போனால் மோசமானதாக, இருப்பது வீட்டுப் பிரச்சனை. கூபாவில் இரண்டு லட்சம் குடிசைகளும் சேரிகளும் உள்ளன. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலுமாக நான்கு லட்சம் குடும்பங்கள் குறைந்தபட்ச சுற்றுப்புற சுகாதார வசதிகள் ஏதுமின்றி குடிசைகளிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. நமது நகர்ப்புறங்களில் வசிக்கும் 22 லட்சம் பேர் செலுத்துகின்ற வாடகை அவர்களின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கிலிருந்து மூன்றில் ஒரு பங்கு வரை உறிஞ்சிக் கொள்கிறது. நமது கிராமப்புற, புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 28 லட்சம் பேருக்கு மின்சார வசதி என்பதே இல்லை. இங்கும் அதே நிலைமைதான் உள்ளது. வாடகையைக் குறைக்க அரசு முன்மொழிந்தால், நில உடைமையாளர்கள் அனைத்து கட்டுமானப் பணிகளையும் முடக்குவதாக அச்சுறுத்துகின்றனர். அரசு தலையிடவில்லை எனில், வீட்டு உரிமையாளருக்கு அதிக வாடகை கிடைக்கும் வரை கட்டுமானப் பணிகள் தொடரும். இல்லையெனில், இதர மக்கள் வெட்டவெளியில் வெயிலிலும் குளிரிலும் வாழ வேண்டியிருந்தாலும், அவர்கள் ஒரே ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க மாட்டார்கள். நுகர்வுப் பொருட்களின் ஏகபோகமோ இதை விட சிறப்பானதாக இல்லை. லாபம் கிடைக்கும் வரை அவர்கள் மின்சாரக் கம்பிகளை நீட்டிக் கொண்டே போகின்றனர். அதற்கு மேல் மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இருளில் வாழ வேண்டியிருந்தாலும் அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அரசும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கோ, வீடுகளோ மின்சாரமோ இருப்பதில்லை.
நான் மேலே குறிப்பிட்ட அனைத்திற்கும் முற்றிலும் பொருந்துவதாகத்தான் நமது கல்வி முறையும் இருக்கிறது. நிலத்தில் பாடுபடும் விவசாயிக்கு நிலம் சொந்தமாக இல்லாத இடத்தில், விவசாயப் பள்ளிகளுக்கு என்ன தேவை இருக்கிறது? தொழில்துறை இல்லாத இடத்தில் தொழில்நுட்ப அல்லது தொழிற்கல்விப் பள்ளிகளுக்கு என்ன தேவை இருக்கிறது? இவை எல்லாமே ஒரே வகையான, அபத்தமான தர்க்கத்தையே பின்பற்றுகின்றன. நம்மிடம் ஒன்று இல்லையெனில், மற்றொன்று இருக்க முடியாது. எந்தவொரு சிறிய ஐரோப்பிய நாட்டிலும் 200க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப, தொழிற்கல்விப் பள்ளிகள் உள்ளன. கூபாவில் இதுபோன்ற பள்ளிகள் ஆறு மட்டுமே உள்ளன. அவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கோ, அவர்களின் திறமைக்கோ வேலை இருப்பதில்லை. சிறிய கிராமப்புற வீடுகளில் செயல்படும் பள்ளிகளில், பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளில் பாதிப்பேர் வெறுங்காலுடன், அரை நிர்வாணமாக, ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் வந்து கல்வி கற்கின்றனர். பள்ளிக்குத் தேவையான பொருட்களை ஆசிரியர் அடிக்கடி தன் ஊதியத்திலிருந்தே வாங்க வேண்டியுள்ளது. இதுதான் ஒரு நாட்டை மகத்தானதொரு நாடாக ஆக்கும் வழியா?
இவ்வளவு துயரத்திலிருந்தும் ஒருவரை மரணம் மட்டுமே விடுவிக்க முடியும். எப்படியிருப்பினும், இந்த விஷயத்தில் மக்களுக்கு அகால மரணத்தை வழங்குவதில் அரசு மிகவும் உதவியாக உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளில் 90 சதவீதத்தினர் நடக்கும் தரையிலிருந்து அவர்களின் வெற்றுக் கால்களின் வழியாக ஊடுருவும் ஒட்டுண்ணிகளால் உயிரிழக்கின்றனர். ஒரு குழந்தை கடத்தப்பட்டாலோ, கொலை செய்யப்பட்டாலோ, இந்த சமூகம் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறது. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் போதிய வசதிகள் இல்லாமல், வலியால் துடிதுடித்து இறக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவது குறித்து இதே சமூகம் அலட்சியமாக இருக்கிறது. ஏற்கனவே மரணம் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளின் அப்பாவியான கண்கள், ஏதோ எல்லையற்றதொரு பொருளைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவும், மனிதர்களின் சுயநலத்தை மன்னித்துவிடும்படி கெஞ்சுவது போலவும், தன் கோபத்தை நிறுத்தி வைக்குமாறு கடவுளைக் கேட்பது போலவும் தோன்றுகிறது. குடும்பத்தின் தலைவர் ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே வேலை செய்தாரெனில், அவர் தன் குழந்தைகளுக்கு என்ன உடையையும் மருந்தையும் வாங்கிக் கொடுக்க முடியும்? இந்தக் குழந்தைகள் முப்பது வயதை எட்டும்போது வாயில் நல்லதொரு பல் கூட இல்லாமல் ரிக்கெட்ஸ் நோயுடன் வளர்வார்கள்; இதற்கிடையில் அவர்கள் ஒரு கோடி உரைகளை கேட்டிருப்பார்கள். இறுதியில் துயரத்தாலும் வஞ்சகத்தாலுமே இறந்து போவார்கள். எப்போதுமே நிரம்பி வழியும் அரசுப் பொது மருத்துவமனைகள் வலிமை வாய்ந்த அரசியல்வாதி சிபாரிசு செய்யும் நோயாளிகளை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன. அதற்குப் பிரதிபலனாக, அந்த அரசியல்வாதி அந்த துரதிர்ஷ்டசாலியின், அவரது குடும்பத்தினரின் வாக்குகளைக் கோருகிறார். அப்போதுதான், கூபா இதே நிலையிலோ அல்லது இதைவிட மோசமான நிலையிலோ என்றென்றும் நீடித்திருக்க முடியும்.
இந்தப் பின்னணியில், மே மாதம் முதல் டிசம்பர் வரை பத்து லட்சம் பேருக்கு வேலை இருப்பதில்லை என்பதை, அதுவும் மொத்தம் 55 லட்சம் மக்கள்தொகையை மட்டுமே கொண்ட கூபாவில், தலா 4 கோடி மக்கள்தொகை கொண்ட பிரான்ஸ் அல்லது இத்தாலியை விட அதிகமான வேலையற்றோர் உள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?
(1953ஆம் ஆண்டு ஃபிடெல் காஸ்த்ரோவினால் நீதிமன்றத்தில் ஆற்றப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரை 1983இல் முதல்முறையாக வீ. பா. கணேசனால் மொழிபெயர்க்கப்பட்டு‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்ற நூலாக வெளியாகி பல பதிப்புகள் கண்டது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரால் மறு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பாரதி புத்தகாலயம் மூலம் 2024 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான முதல் பதிப்பிலிருந்து சில பகுதிகள் மேலே வழங்கப்பட்டுள்ளன.)
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
