Category: அரசியல்
நாடாளுமன்றம் என்ற களத்தில்..
டி. கே. ரங்கராஜன் (தோழர் டி.கே. ரங்கராஜன் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த ‘தொடர் ஓட்டம்’ என்ற நூலில் இருந்து சில பகுதிகள்) நிதித்துறைக்கான குழுவும் பணமதிப்பு நீக்கமும் இந்தக் குழுவில் இருக்கும்போது பணமதிப்பு நீக்கம் பற்றிய பிரச்சனை வந்தது. இது பற்றி விவரங்களை அறிய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்களாக இருந்த ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், சக்திகாந்த தாஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் தவிர வங்கியாளர்கள் சங்க (Bankers Association) நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்தோம். எவரும் இது பற்றி தங்களுக்குத் தெரியும் என்றோ தங்களுடன் விவாதிக்கப்பட்டதாகவோ கூறவில்லை. அமைச்சர்கள் கூட தேநீர் விருந்துக்கு என்று அழைக்கப்பட்டதாகவும் அங்கே தான் பிரதமர் டிவியில் பேசப் போகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தக் குழுவில் உர்ஜித் படேலிடம் கேள்விகள் கேட்டபோது அவரைப் பேசவிடாமல் மன்மோகன் சிங் தடுத்ததோடு, கூட்டத்தையும் முடிக்கச் சொல்லிவிட்டார். குழுவின் தலைவராக இருந்த வீரப்ப மொய்லியும் அப்படியே செய்துவிட்டார். இதுதான் ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் அதிகார வர்க்கப் போக்கு என்பது. பாதுகாப்புத்துறை நாடாளுமன்றக்குழு அனுபவங்கள் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித்துறை 200 வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்திடம்தான் இருந்தது. இதற்கொரு காரணம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவோர் ஆயுதங்களை எடுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதுதான். பிரிட்டனில் இது தனியாரிடம் இருந்தது என்பதை கவனித்தால் இது புரியும். நாடு விடுதலை அடைந்தபின் பாதுகாப்புத் துறைக்கான தொழிற்சாலைகளில் 80 சதவீதம் அரசாங்கத்திடம்தான் இருந்தது. இப்போது இதில் தனியாரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு நேரடி முதலீடும் வரலாம் என்று மோடி அரசு கூறிவிட்டது. டாடா நுழைந்துவிட்டது, ரிலையன்ஸ் வந்துவிட்டது, மஹிந்திரா புகுந்திருக்கிறது, கல்யாண் குழுமம் நுழைந்திருக்கிறது, எல் அண்ட் டி வந்துவிட்டது – இவர்கள் 100 சதவீதம் முதலீடு செய்யலாம். இப்படிப்பட்ட நடவடிக்கை ஆசியா கண்டத்திலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஆயுதப் போட்டியை உருவாக்கும். இது அத்துடன் நிற்காது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி வரும்; இந்தியாவுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் போட்டி வரும். பாதுகாப்புத்துறையில் தனியார் மயம் என்பது காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கியது. ஆனால் அதனை ஓரளவு தடுத்து நிறுத்த முடிந்தது. இப்போது ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவான பிஜேபி ஆட்சி முழுபலத்துடன் இருப்பதால் எதையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக செயல்படுத்துகிறது. இதன் பொருள் என்னவென்றால் ஆயுதங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதாகும். அதாவது சமாதான சக வாழ்வு என்ற கோட்பாட்டிலிருந்து இந்தியா வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது என்பது பொருள். ஆயுதங்களின் அதிகப்படியான உற்பத்தி என்பது சந்தையைத் தேடுவதாக – அவற்றுக்கான தளங்களை அமைப்பதாக – மாறிவிடும். இது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் வலியுறுத்தியும் வருகிறோம். ஒழுங்கைக் குலைப்பதும் நியாயம்தான் ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்காக மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் உறுப்பினர் என்ற பெருமை தோழர் அனந்தன் நம்பியாருக்கு உண்டு. நம்பியார் நடந்து கொண்ட விதத்தை எஸ்.ஏ.டாங்கே கண்டித்தார். ஆனால் சுந்தரய்யா வரவேற்றார். ஒரே கட்சிதான் என்றாலும் நாடாளுமன்ற அமைப்பைப் பற்றிய இருவித அணுகுமுறை இருந்துள்ளது.
மாற்று அரசியலுக்கான மார்க்சிய உரையாடல்
என்.குணசேகரன் மறைந்த அய்ஜாஸ் அகமது அவர்கள் ஒரு தலைசிறந்த மார்க்சிய அறிஞர். இன்றைய காலச் சூழலின் சவால்களை மார்க்சிய நோக்கில் புரிந்து கொள்ளவும், போராட்ட நடைமுறைகளை அமைத்திடவும், தொடர்ந்து வழிகாட்டி வந்த மார்க்சிய ஆசிரியர். 1990ஆம் ஆண்டுகளில் மார்க்சிய ஆய்வாளர்கள் பலர் தடம் மாறி, மார்க்சியத்தின் ஜீவ நாடியான பாட்டாளி வர்க்கப் புரட்சி, சோசலிச இலக்குகளைக் கைவிட்டு மார்க்சியத்தை திரித்து வந்த நிலையில், அய்ஜாஸ் அகமது மகத்தான மார்க்சிய ஆசானாகத் திகழ்ந்தார். புரட்சிகரமான மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, கருத்துப் போராட்டத்தை அவர் நடத்தி வந்தார். 2022ஆம் ஆண்டு மறைந்த அய்ஜாஸ் அகமது ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். நவீன தாராளமயம் என்ற திருப்பத்தை அடைந்த இன்றைய முதலாளித்துவ இயக்கத்தினை மார்க்சிய வழி நின்று ஆய்வு செய்திடும் எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. அத்துடன் இன்றைய முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் வளர்ச்சி, புரட்சிகர மாற்றத்தின் திசைவழி குறித்தெல்லாம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆய்வு நெறியில் நின்று படைப்புக்களை அளித்துள்ளார். பேராசிரியர் அய்ஜாஸ் அகமது அவர்களுடன் தோழர் விஜய் பிரசாத் நடத்திய உடையாடல் “மார்க்ஸ் – புரட்சியின் அரசியல்” என்ற தலைப்பில் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. அரசியல் கையேடு மார்க்சியம் முன்னெடுக்கும் புரட்சிகர அரசியலை ஆழமாக புரிந்து கொள்ள உதவிடும் நூலாக இந்த நூல் அமைந்துள்ளது. இந்த உரையாடலில் இருவரும் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், மார்க்சின் பங்களிப்பு பற்றிய பல பரிமாணங்களை வெளிக்கொணர்கிறது. மார்க்சின் எழுத்துக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது மட்டுமல்ல; மார்க்சின் எழுத்துக்களுக்கு அடிப்படையாக இருந்த மார்க்சின் எண்ணவோட்டத்தை ஆழமாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த உரையாடல்கள் அமைந்துள்ளன. தோழர் விஜய் பிரசாத் உலக அளவில் செயல்பட்டு வரும் மார்க்சிய செயல்பாட்டாளர். மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, போராடும் உழைக்கும் வர்க்க இயக்கங்களின் தத்துவார்த்த புரிதலை மேம்படுத்தும் படைப்புக்களை விஜய் பிரசாத் அளித்து வருகிறார். அய்ஜாஸ் அவர்களின் உயரிய மார்க்சிய சிந்தனைகள் தெளிந்த நீரோட்டமாக வெளிவரும் வகையில் விஜய் பிரசாத் உரையாடலை ஒருங்கிணைக்கிறார். கனமான, தத்துவக் கட்டுரைகளை, கட்டுரை வடிவத்தில் படிக்கும்போது சிலருக்கு ஏற்படும் சோர்வு, இந்த உரையாடல் வடிவ படைப்பில், உரையாடலோடு ஒன்றிப்போகும்போது ஏற்படுவதில்லை. நூலின் முன்னுரையில் விஜய்பிரசாத் குறிப்பிடுவது போன்று, மார்க்ஸ் பொது தளத்தில் பொருளாதார அறிஞராகவே முன்னிறுத்தப்படுகிறார். மார்க்சின் பொருளாதாரம் பற்றிய பங்களிப்பு மகத்தானதுதான் என்பதில் ஐயமில்லை. உண்மையில்,மார்க்ஸ் முதலாளித்துவத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகிற நிகழ்வைப் பற்றி ஏராளமாக எழுதியுள்ளார். அவரது புரட்சிகர அரசியல் பார்வையை வெளிப்படுத்தும் மார்க்சின் எழுத்துக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் இன்று முதலாளித்துவத்தின் நேரடித் தாக்குதல் உழைக்கும் மக்கள் மீது அதிகரித்துள்ள நிலையில், வலதுசாரி அரசியலை பக்கபலமாக வைத்துக் கொண்டு, முதலாளித்துவ கருத்தியல் ஆயுதபாணியாக மாறியுள்ள நிலையில், புரட்சிகர அரசியல் இன்று
நிதித்துறை – மாநில சுயாட்சி சீர்குலைவு
அபிநவ்சூர்யா தேசிய இனங்களின் உரிமைகளை அங்கீகரித்தும், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட்ட இன்றிய ஒன்றியத்தின் ஸ்திரத்தன்மை அண்மைக் காலங்களில் கடும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. மாநில முதலமைச்சர்களும், பல எதிர்க் கட்சி தலைவர்களும் ஒன்றிய அரசிற்கு எதிராக தில்லி வீதிகளில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, கேரள அரசின் அமைச்சரவையே நேரடியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளது. இது, மோடி அரசு மாநிலங்களின் சுயாட்சி மீது தொடுத்து வரும் தீவிர தாக்குதல்களுக்கு அத்தாட்சி. எதேச்சாதிகார முறையில் செயல்படும் ஆளுநர்கள் மூலம் பல மாநிலங்களில் அரசாங்க செயல்பாடுகளை சீர்குலைத்து, மாநில அரசாங்கங்கள் கையில் உள்ள சிறிதளவு சட்டம் இயற்றும் உரிமைகளையும் பறிப்பது, புதிய கல்வி கொள்கை இயற்றுதல், மத்தியில் கூட்டுறவு அமைச்சகம் அமைத்து கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வருதல் என்பது போன்ற மாநில பட்டியலில் இருக்கும் துறைகளில் மத்திய அரசு ஊடுருவுதல் என்பது போன்ற நேரடியான தாக்குதல்கள் மூலம் மட்டுமல்லாமல், மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி விட்டு எதிர்க் கட்சி தலைவர்களை அச்சுறுத்துதல், குதிரை பேரம் மூலம் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தல் போன்ற சட்டவிரோத தாக்குதல்கள் மூலமும் மாநில அரசாங்கங்களை சீர்குலைத்து, கூட்டு ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க. அரசு. இந்த போக்கின் ஒரு பகுதியாக, மாநிலங்களின் நிதி சுயாட்சி (fiscal federalism) அடிப்படைகளை தீவிரமாக அழிக்கும் வேலைகளும் வலுப்பெற்றுள்ளன. நவ தாராளமய காலத்தில், நாட்டை மொத்தமாக கார்ப்பரேட்டுகளுக்கு விற்க ஏதுவாக, நிதி உட்பட அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிக்கும் நடவடிக்கைகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று தான் வருகிறது. ஆனால் எல்லாவற்றையும் போலவே, காங்கிரஸ் செய்து வந்த ‘நிதி சுயாட்சி’ அழிப்பையும் அதி தீவிர நிலைக்கு கொண்டு சென்றுள்ளதே பாஜக அரசின் சாதனை. நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது, இன்று ஊடகங்களில் பரவலாக உலா வரும், “கட்டும் வரி ஒவ்வொரு ரூபாய்க்கும் தமிழ்நாட்டிற்கு கிடைப்பது 30 பைசா மட்டுமே, உத்திர பிரதேசத்திற்கு 1.7 ரூபாய் கிடைக்கிறது” என்பது போன்ற குறுகிய நோக்கம் உடைய பார்வை தவறானது என்பது மட்டுமல்லாமல், ஆபத்தானதும் கூட. இது ‘சுயாட்சி’ தத்துவத்தை வெறும் ‘யாருக்கு எவ்வளவு’ என்ற பார்வைக்கு சுருக்குவதோடு மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் உள்ள தாராளமய எதேச்சதிகார போக்குகளை மறைக்கிறது. அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையும் நேர் கோடு கிடையாது. பல வரலாற்று மற்றும் சமகால காரணிகளின் விளைவாக, சில மாநிலங்கள் வேகமாக வளர்ந்ததோடு மட்டுமல்லாமல், அதிக வரி ஈட்டும் திறனும் பெற்றன. இதனால், இந்த மாநிலங்களில் இருந்து ஈட்டப்பட்ட வரியின் ஒரு பகுதி, வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு மடை மாற்றப்பட்டது. இந்த பங்கீட்டு முறை, உண்மையான கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நிகழ்ந்த வரை பிரச்சனை எழவில்லை. ஆனால் மாநில சுயாட்சி அழிக்கப்படும் பொழுதுதான், அந்த கோபம், இது போன்ற தோற்றத்தில் வெளிப்படுகிறது. மாநிலங்களின் நிதி உரிமைகளே அழிக்கப்படுவதுதான் இங்கு பிரதான பிரச்சனை என்பதை நினைவில் கொள்வது அவசியம். இவ்வாறு மத்திய மாநில அரசுகள் இடையே நிலவும் நிதி உட்பட அனைத்து உரிமைகளின் ஏற்றத்தாழ்வை நம் அரசியல் சாசனமும் அங்கீகரித்து உள்ளது. உதாரணமாக, 2021இல், மத்திய-மாநில அரசுகளின் மொத்த வருவாயில் 37 விழுக்காடு மட்டுமே மாநிலங்களால் வசூலிக்கப்பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
