இந்தியாவின் பெண்கள் இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்
சுபாஷிணி அலி
பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் என்பது இந்தியாவில் பல திருப்பங்கள் கொண்ட நீண்ட, கடினமான ஒரு போராட்டமாகவே உள்ளது. இன்றைக்கு, அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டு 70 ஆண்டுகளைக் கடந்த பிறகு, இதுவரை போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்க முயல்கிற ஒன்றாக இப்போராட்டம் மாறியுள்ளது.
தங்களது குரல்கள் அரிதாகவே செவிமடுக்கப்படுவது; பெரும்பாலும் தாங்கள் பேசுவது தடுக்கப்படுவது ஆகியவற்றால், பழங்காலம் துவங்கி நவீன காலம் வரை, நமது நாட்டில் பெண்கள் அசமத்துவத்தையும், அநீதியையும் வன்முறையையும் எதிர்கொண்டு வருகிறார்கள். சமத்துவத்திற்கான சமூக சீர்திருத்த இயக்கங்கள் வெடித்துக் கிளம்பி, வலுப்பெற்றபோதுதான் பெண்கள் தென்படுவதற்கும், அவர்களது குரல்கள் கேட்கப்படுவதற்குமான தளங்கள் உருவாகின. இத்தகைய போராட்டத்திற்கும், சாதி அடிப்படையிலான அசமத்துவத்திற்கு எதிரான இயக்கங்களுக்கும் இடையேயான வலுவான தொடர்பு குறித்து, பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து, விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாம் அனைவரும் புரிந்து கொள்வது அவசியமாகும்.
உதாரணமாக, புத்தரும், மகாவீரரும் கிபி 6ஆம் நூற்றாண்டில் பிறந்தனர். பிறப்பின் அடிப்படையிலான அசமத்துவத்தை எதிர்த்து, இவர்கள் துவக்கிய போராட்ட இயக்கங்கள், பெண்களைப் பொறுத்தவரை மிக முக்கியமானவையாகும். சாதாரண பெண்களாகவும் (ஸ்ரவிகாஸ்), துறவிகளாகவும் (சேவிகாஸ்) பெண்களது பங்களிப்பிற்கு ஜைன சமூகம் பெரும் முக்கியத்துவத்தை அளித்தது. சந்தனா எனும் பெண் துறவி 36,000 பெண் உறுப்பினர்களைக் கொண்டிருந்த துறவிகளின் குழுவிற்கு தலைமை தாங்கினார் என்பது நமக்கு கற்பனை செய்து பார்க்கவே கடினமாக உள்ளது.
அனைத்து சாதிகளைச் சார்ந்த ஆண்களும் சமத்துவத்தோடு வாழ்ந்திடக் கூடிய ‘சங்காஸ்’ எனும் அமைப்புகளை புத்தர் உருவாக்கினார். துவக்கத்தில், இவற்றில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், இதில் உள்ள நியாயமற்ற தன்மை குறித்து அவர் ஏற்றுக் கொண்டபின், பெண்களுக்காகவும் ‘சங்காஸ்’களை அவர் உருவாக்கினார். செல்வச் செழிப்புடனான வேசிகள், இதர பெண்களோடு, முன்னர் அடிமைகளாக இருந்த சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களில் புன்னா, புன்னிகா, தீண்டத்தகாதவராகக் கருதப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியான புக்குசாவைச் சார்ந்த சுனிதா, ‘தாழ்த்தப்பட்ட’ சாதிகளைச் சார்ந்த சதி, காபா, சுமங்களா, ப்ரக்ருதி மற்றும் சுபா போன்ற பல பெண்களும் இக்குழுக்களில் இணைந்தனர்.
இந்தியாவின் பல பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்கு புத்தமதம் ஒரு வலுவான சக்தியாக இருந்தது. எனினும், இதற்கெதிரான பிராமணியத்தின் எதிர்வினை வலுவாகவும் தொடர்ச்சியாகவும் இருந்தது. மறுமலர்ச்சியடைந்த பிராமணியம், சாதி அடிப்படையிலான அசமத்துவமான வர்ணாசிரம தர்மத்தையும், அதன் உள்ளார்ந்த ஆணாதிக்கத்தையும் மிகுந்த மூர்க்கத்துடன் திணித்தது. டாக்டர் அம்பேத்கர் மற்றும் ஆர்வில்லே போன்ற அறிஞர்களின் கூற்றுப்படி, பிராமணியத்திற்கும், புத்தமதத்திற்கும் இடையேயான இத்தகைய மோதல் நடைபெற்ற காலத்தில் – அதாவது 170 கிமு மற்றும் 150 கிபி – மனுஸ்மிருதி எழுதப்பட்டது. மதநூல்கள் அனைத்திலும் மிக முக்கியமான அந்தஸ்தைப் பெற்ற இந்நூல், பிறப்பு அடிப்படையிலான சாதிய அசமத்துவம், உண்மையில் அனைத்து உரிமைகளும் மறுக்கப்படும் அனைத்துப் பெண்களின் முழுமையான அசமத்துவம் என சமத்துவமின்மையின் ஒவ்வொரு வடிவத்தையும் ஆதரிக்கிறது. இந்தியப் பெண்களின் அசமத்துவ நிலையானது வர்ணாசிரம தர்மத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதற்கு உண்மையில் மனுஸ்மிருதி சான்றாகும். பிரதிலோமா எனும் கீழ்சாதிகளைச் சார்ந்த ஆண்களுடன் பெண்கள் உறவு கொள்வதைத் தடுக்க, பெண்கள் மற்றும் அவர்களது நடத்தை மீது ஆணாதிக்கக் கட்டுப்பாடு அவசியமானது. ஏனெனில், இத்தகைய உறவுகள் சாதி அமைப்பின் இருப்புக்கு உண்மையில் அச்சுறுத்தலாக இருந்திடும். எனவே, பிராமணியம் மறுமலர்ச்சியடைந்த இக்காலகட்டத்தில், மீண்டும் பெண்களது கருத்துக்கள் அரிதாகவே செவிமடுக்கப்பட்டன அல்லது பெண்கள் எந்தவிதமான செயல்பாடுகளிலும் ஈடுபடுவதை அரிதாகவே காண முடிந்தது. பத்தினித்தன்மை, அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் சரணாகதி ஆகியவை நற்பண்புகளாக அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன. மேலும், இவற்றிலிருந்து விலகினால் அதற்கு வன்முறை மற்றும் மரணம் ஆகிய தண்டனை அளிக்கப்படும்.
வரலாற்றின் மத்திய காலத்தின் துவக்கத்தில் இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியிலும், பின்னர் தென்னிந்தியாவிலும் பக்தி-சூஃபி இயக்கங்கள் தோன்றியபோதுதான், இந்நிலை மாறுகிறது. தங்களைப் படைத்தவர்களுடனான தனிநபர்களின் நேரடியான தொடர்பை இந்த இயக்கங்கள் வலியுறுத்தியதோடு, சாதிய அமைப்பையும், பிராமணர்களின் உயர்ந்த நிலையையும், அவர்கள் ஊக்குவித்த மத சடங்குகள் மற்றும் நடைமுறைகளையும் கடுமையாக எதிர்த்ததோடு, கேலியும் செய்தன. நெசவாளியான கபீர், தையல்காரரான நாம்தேவ், செருப்பு தைப்பவரான ரவிதாஸ் போன்ற உழைப்பைச் செலுத்துகிற, சுரண்டப்படுகிற சாதிகளை, வர்க்கங்களை சார்ந்தவர்கள் இந்த இயக்கங்களோடு தொடர்பு கொண்டிருந்தனர்.
மீராபாய் – துறவியான க்ஷத்திரிய இளவரசி. ரவிதாஸின் பக்தையான இவர் எதைப்பற்றியும் கவலையின்றி பாடக் கூடியவர் ஆவார்.
ரோஹிதாசிடம் குருவைக் கண்ட மீரா
அவரது காலைத் தொட்டு வணங்கி அவரது ஆசியை வேண்டினாள்
சாதி அல்லது இதர பிரிவுகளைப் பற்றி எனக்கு எதுவுமில்லை
இந்த உலகம் அதனால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்ளட்டும்
எனது உடல், எண்ணம் மற்றும் ஆன்மாவை நான் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்
நான் விலங்குகளின் தோலை உரித்து அதற்கு வண்ணம் பூசுகிறேன்
வண்ணம் பூசுவதே எனது வேலையாகும்
இந்த வண்ணம் பூசுவது எனக்கு மிகவும் பிடித்தமானது, இந்த வண்ணம் பூசுவது எனக்கு மிகவும் பிடித்தமானது
எனது ஆன்மாவை நான் அதனுள் வண்ணம் தீட்டுகிறேன்.
கர்நாடகாவிலிருந்த பசவா மற்றொரு ஆன்மீகத் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். உண்மையில் இவர் பிராமணராக இருந்தபோதும், வேலைக்காரன் மற்றும் தீண்டத்தகாத வேலைக்காரியின் மகன் என்று தன்னைப் பற்றி வர்ணித்தவர். தனது சீடராக இருந்த பிராமணரின் மகள் ‘தீண்டத்தகாத’ ஆணைத் திருமணம் செய்து கொண்டபோது அதனை இவர் முன்னின்று நடத்தி வைத்தார். இந்த ‘பிரதிலோமா’ திருமணம் மனுவாதி கோட்பாடுகளை மிக அதிர்ச்சிகரமான வகையில் உடைத்தெறிந்தது. இதன் விளைவாக பசவா மற்றும் அவரது சீடர்கள் மீது கொடூரமான வன்முறையை மன்னர் நடத்தினார். மணமகள் மற்றும் மணமகனின் தந்தையரும், மணமகனும் கைது செய்யப்பட்டு, கண்பார்வை பறிக்கப்பட்டு, யானையின் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு, உயிர் போகும் வரை இழுத்துச் செல்லப்பட்டனர். அநேகமாக, இதுவே முதலாவதாகப் பதிவு செய்யப்பட்ட “சாதி ஆணவக்’ கொலையாகும்.
பிராமணியம் வெறுத்த சமபந்தி போஜனம், சாதி மறுப்பு திருமணங்கள் மற்றும் உழைப்பின் மீது கண்ணியம் ஆகியவற்றை பசவாவும் அவரது சீடர்களும் வலியுறுத்தினர். ‘அனுபவ மண்டபங்கள்’ (அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான இடங்கள்) என்றழைக்கப்பட்ட கூட்டங்களில் எவர் வேண்டுமானாலும் விவாதிக்கலாம் என்ற அற்புதமான வழக்கத்தை அவர்கள் துவக்கினர். இவற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களில் அக்கா மகாதேவி மற்றும் முக்தனயகா என்பவை வெறும் இரண்டு பெயர்களாகும்.
பிராமணியத்திற்கும், அது பரப்பிய வர்ணாசிரம தர்மம் மற்றும் ஆணாதிக்கத்திற்கு விடப்பட்ட சவால்கள் காரணமாக வன்முறை மற்றும் கருத்தியல் ரீதியான எதிர்தாக்குதல்கள் விடுக்கப்பட்டன. உதாரணமாக, கபீரின் சமகாலத்தில் வாழ்ந்தவரான துளசிதாசர், வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாதாரண மக்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய பிரபலமான வட்டாரமொழியான அவதி மொழியில் ராமசரிதமானஸ் என்ற இதிகாசத்தை எழுதினார். அக்காலத்திலிருந்த பிராமணர்களால் இது பெருமளவில் எதிர்க்கப்பட்டது. ஆனால், அவர் பிடிவாதமாக இருந்தார். தங்களது சீடர்களிடம் உரையாற்றுவதற்கும், சமத்துவம் பற்றிய அவதூறான பேச்சிலிருந்து அவர்களை விலக்கி வைப்பதோடு, பிராமணிய சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளை கேலி செய்யவும் கபீர், ரவிதாஸ் மற்றும் இதரர்களும் பயன்படுத்திய அதே வடமொழியை துளசிதாசரும் பயன்படுத்தினார். எனவே, ராமசரிதமானஸ் அவ்வப்போது பிராமணர்களின் முக்கியத்துவத்தை மிக உயர்வாகப் புகழ்வதோடு, கீழ்சாதியைச் சார்ந்த மக்களையும் பெண்களையும் கேலி செய்கிறது. ‘ஒரு பறை, கோமாளித்தனமான முட்டாள், சூத்திரர், விலங்கு மற்றும் பெண் என அனைவரும் அடிக்கத் தகுதியானவர்கள்’ என்ற பிரபலமான வரி அதில் உள்ளது. துளசிதாசரின் ராமர், சீதாவை பெரும் கொடுமைக்கும் அநீதிக்கும் ஆளாக்குகிறார். மேலும், பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் மிகச் சிறந்த மனிதராக ராமர் புகழ்ந்துரைக்கப்படுவதால், ஆணாதிக்கத்தின் கொடூரங்களையும், அநீதிகளையும் நியாயப்படுத்துவதாகவே அவரது நடத்தை அமைந்துள்ளது.
இக்காலகட்டத்திற்குப் பிறகு விரைவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. மேலும், இது பெருமளவிலான சமூக மாற்றத்தை கொண்டு வந்தது. கல்வி நிறுவனங்கள், நவீன தொழிற்சாலைகள் மற்றும் ரயில்வே துறை ஆகியவற்றின் உருவாக்கம் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் அப்போதிருந்த பேரரசின் ஆட்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்தது. இது ஒரு தொழில்முறை வர்க்கத்தை உருவாக்கியதோடு, பெரும் எண்ணிக்கையிலான மக்களின் நவீன கருத்தோட்டங்களை வெளிப்படுத்தியது. இந்தியப் பெண்களின் தாழ்ந்த நிலைகள் உள்ளிட்டு பல துறைகளில் சீர்திருத்தங்களை பரிந்துரைத்த தனிநபர்களும், குழுக்களும் உருவாகின. ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே ஆகியோர் சீர்திருத்தத்திற்காக துவக்க காலத்தில் போராடியவர்களில் மிக முக்கியமானவர்கள் ஆவர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்ததோடு, பெண்களின் கல்விக்காகவும், குழந்தைத் திருமணம் மற்றும் சிறுவயதிலேயே கணவனை இழந்த விதவைகள், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளுக்கு எதிராகவும், அவர்கள் நடத்திய போராட்டங்கள், பிராமணியத்திற்கும், கேடு விளைவிக்கும் சாதிய அமைப்பிற்கும் எதிரான போராட்டத்தின் பகுதியாக இருந்தன. பாலியல் வன்கொடுமையை அனுபவித்து வந்த பிராமண வகுப்பைச் சார்ந்த விதவைகளின் குழந்தைகளுக்கான, ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லங்களையும், தலித் மற்றும் கீழ்சாதிகளைச் சார்ந்த குழந்தைகளுக்கான முதல் பள்ளிகளையும் இந்த வீரஞ்செறிந்த தம்பதியினர் நிறுவினர். இந்த சமயத்தில் 1901ஆம் ஆண்டில் கோலாப்பூரின் ஷாஹு மகராஜ் தனது ஆட்சியின் கீழ் உள்ள பகுதியில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி அளிக்க ஏற்பாடு செய்தார். மேலும், சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களையும் அவர் சட்டபூர்வமாக அங்கீகரித்தார். இதன் விளைவாகப் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை விவரிக்கும் புத்தகங்களை அவர்கள் எழுதினார்கள். கல்வியைப் பெறுவதற்காகப் பெண்கள் போராடினார்கள். மருத்துவர்களாகத் தேர்ச்சி பெறுவதில் வெற்றியும் பெற்றனர். நகர்ப்புற பகுதிகளில் தோன்றிய நவீன தொழில்முறை நடுத்தர வர்க்கத்தினர், சதி வழக்கம் ஒழிக்கப்படவும், பெண்களின் திருமண வயதை உயர்த்தவும், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் உரிமைக்காகவும், பெண்களுக்கான கல்வி நிறுவனங்கள் மேலும் துவக்கப்படவும் கோரிக்கைகளை முன்வைக்கத் துவங்கினர். சிறிய அளவிலான சீர்திருத்தங்களுக்கான இந்த கோரிக்கைகளும், பூலே மற்றும் ஷாஹு மஹாராஜின் நடவடிக்கைகளும் கூட, இந்திய நாகரிகத்தின் ‘பண்டைய பெருமைகளை’ மீண்டும் கொண்டு வர வேண்டும் எனப் பேசி வந்த, பிராமணியத்தின் தீவிர ஆதரவாளர்களாகவும், தீவிர மறுமலர்ச்சியாளர்களாகவும் இருந்த திலகர் போன்ற பல ‘தேசியவாதி’கள் காட்டிய கடுமையான எதிர்ப்பை நாம் கற்பனை செய்வது கடினமானதாகும். பெண்களின் உரிமைகளை நசுக்குவதும், வீட்டிற்குள்ளேயே அவர்களை முடக்கி வைப்பதும் இத்தகைய ‘பண்டைய பெருமைகளின்’ முக்கிய கூறுகளாக இருந்ததில் ஆச்சரியமில்லை.
தலித்துகள் மற்றும் பெண்களுக்காகப் போராடி வந்தவர்கள் முன்வைத்த கோரிக்கைகளான, கல்வி மற்றும் குறைந்தபட்ச மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு ஆங்கிலேய அரசிடமிருந்து கிடைத்த மிதமான ஆதரவின் காரணமாக மட்டுமே ஆங்கிலேய ஆட்சிக்கு சவால் விடுக்கப்படவில்லை. அதன் உள்ளார்ந்த சுரண்டலும், பேராசைப் பிடித்து நாடு கொள்ளையடிக்கப்பட்டதோடு, ஒட்டுமொத்த மக்களும் அடிமைப்படுத்தப்பட்டதும் தேச விடுதலைக்கான இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த இயக்கம் 1920களிலிருந்து வலுப்பெற்றது. இந்த இயக்கத்தில் பெண்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் பங்கேற்றதோடு, அளப்பரிய தைரியத்தையும், விடாமுயற்சியையும், தியாகம் செய்யும் திறனையும் வெளிப்படுத்தினர். தேச விடுதலைக்கான இயக்கத்தை தங்களது சொந்த விடுதலைக்காகவும், பாலின நிகர்நிலைக்காகவுமான போராட்ட இயக்கமாகப் பெண் தலைவர்கள் பார்த்தபோது, பல ஆண் தலைவர்கள் அவர்களது சிந்தனையில் மனுவாதிகளாக இருந்தனர். ஆச்சரியப்படத்தக்க வகையில், மதச்சார்பின்மைக்கான அவர்களது அர்ப்பணிப்பும் ஆழமற்றதாக இருந்தது. மேலும், திலகரைப் போன்று ‘பண்டைய பெருமைகளை மீட்டெடுப்பதற்கான‘ அவர்களது விருப்பம், உண்மையில் ஒரு ‘இந்து’ இந்தியாவை நிறுவுவதற்கான விருப்பமாகவே இருந்தது. சாதி வெறிக்கும், வகுப்புவாதத்திற்கும் இடையேயான வலுவான தொடர்புகள் தேசிய இயக்கத்தின் போக்கில் செல்வாக்கு செலுத்தின.
இரண்டாம் உலகப் போர் முடிவிற்கும் 1947க்கும் இடைப்பட்ட ஆண்டுகள், சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தன்மையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டன. தெலுங்கானாவில் துவங்கப்பட்ட நிலத்திற்கான ஆயுதம் தாங்கிய போராட்டம், வங்காளத்தில் நிலமற்ற, ஏழை குத்தகை விவசாயிகளின் தெபாகா போராட்டம், மகாராஷ்டிராவில் வார்லி பழங்குடியினரின் கிளர்ச்சி, திருவிதாங்கூரில் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட நிலப்பிரபுக்கள் மற்றும் முடியாட்சிக்கு எதிரான புன்னப்புரா வயலார் போராட்டம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் நடத்திய இதர பல போராட்டங்கள் போன்ற தீரம் மிக்க போராட்ட இயக்கங்களால் இத்தகைய மாற்றம் கொண்டு வரப்பட்டது. 1931ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட தனது கட்சித் திட்டத்தின் நகல் தீர்மானத்தில் முழுமையான பாலின உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்த, இந்தியாவில் வளர்ச்சி பெறத் துவங்கியிருந்த கம்யூனிஸ்ட் கட்சி, இப்போராட்டங்களில் பெரும்பாலானவற்றிற்குத் தலைமை தாங்கியது. கிராமப்புற ஏழைப் பெண்கள் இப்போராட்ட இயக்கங்களில் பெரும் எண்ணிக்கையில் இணைந்ததோடு, நிலச்சுவான்தாரர்கள் மற்றும் அவர்களது குண்டர்களின் மனிதத்தன்மையற்ற பாலியல் சுரண்டல் மற்றும் சொற்பமான கூலித் தொகைக்காக அவர்கள் செய்ய வேண்டியிருந்த இடுப்பை ஒடிக்கும் வேலை உள்ளிட்ட நிலப்பிரபுத்துவ சுரண்டலின் அனைத்து அம்சங்களை எதிர்த்துப் போராடினர். தங்களது உறுதிப்பாட்டில் அசைக்க முடியாதவர்களாக அப்பெண்கள் இருந்ததோடு, சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் மரணத்தை மிகுந்த தீரத்துடன் எதிர்கொண்டனர். பாலின அசமத்துவம், மகிழ்ச்சியற்ற திருமணங்கள், பரஸ்பர அன்பின் அடிப்படையிலான உறவுகள் மற்றும் சமுதாயத்தின் அனைத்துப் படிநிலைகளிலும் சமத்துவம் பற்றிய பிரச்சனைகள் எழுப்பப்பட்டன. மேலும், இவை குறித்த விவாதம் பெண் மற்றும் ஆண் பங்கேற்பாளர்களால் நடத்தப்பட்டன. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையும், அது ஆதரித்த நிலப்பிரபுத்துவ நிலச்சுவான்தாரர்களையும் எதிர்த்ததாக மட்டும் இப்போராட்டங்கள் இருக்கவில்லை. மாறாக, ஆண்-பெண் இருபாலினத்தவருக்கும் சுரண்டலற்ற, சமத்துவமிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கான போராட்டங்களாக இருந்தன. எனினும், இப்போராட்டங்கள் ஆங்கிலேயர்களாலும், சுதந்திர இந்தியாவில் தங்களது மேலாதிக்கத்தை நிறுவிட உறுதிபூண்டிருந்த முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பிரதிநிதிகளாலும் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. வர்க்கப் பிரச்சனைகளை தேச விடுதலைக்கான கோரிக்கையோடு இணைத்த இந்த போராட்டங்களில் பங்கேற்ற கிராமப்புற ஏழைகள், ஆலைத் தொழிலாளர்கள், பழங்குடியினத்தவர்கள் மற்றும் பெண்களின் போர்க்குணம், அவர்களை மிகவும் கவலையடையச் செய்தது. மேலும், இவர்களை நசுக்கிட உதவுவதில் அவர்களுக்கு எந்த உறுத்தலும் இருக்கவில்லை.
தன் வாழ்நாள் முழுதும் கேடு கெட்ட சாதிய அமைப்புக்கு எதிராகப் போராடிய டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் தலைமையில் அரசியல் சாசன வரைவுக் குழுவை சுதந்திர இந்தியா அமைத்தது. பெண்கள் உட்பட தனது குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை உறுதியளித்த – இந்திய அரசியல் சாசனத்தை – நமது தேசத்தின் முதலாவது விரிவான சட்டபூர்வமான ஆவணத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது தற்செயலானதொரு நிகழ்வு அல்ல.
பரம்பரைச் சொத்தில் சமஉரிமை, சாதி மறுப்பு மற்றும் வேறுபட்ட மதங்களைச் சார்ந்த சமூகத்தினரிடையேயான திருமணம் உள்ளிட்ட தன் விருப்பப்படி திருமணம் செய்து கொள்வதற்கான உரிமை மற்றும் விவாகரத்து செய்து கொள்வதற்கான உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை இந்துப் பெண்களுக்கு அளிப்பதற்கான முன்மொழிவை கொண்டிருந்த இந்து சட்ட மசோதாவையும் டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்தார். இந்து ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதை நிறுத்தவும் அது முன்மொழிந்தது. இம்மசோதாவிற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதற்கு, “சட்டத்தை உருவாக்குவது கடவுளின் அல்லது “ஸ்மிருதி‘யின் செயல் என்றும் சட்டத்தை மாற்றுவதற்கு அந்த இந்து சமூகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என இந்து சமூகம் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது. அப்படியிருக்கையில், இந்து சமுதாயத்தில் உள்ள சட்டம் தலைமுறை தலைமுறையாக அப்படியே இருந்து வந்தது. இந்த சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் சட்ட வாழ்க்கையை வடிவமைப்பதில் தனது சொந்த அதிகாரத்தையும், தனது சொந்த பொறுப்பையும் சமூகம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இத்தகையதொரு பெரிய நடவடிக்கையை இந்து சமூகம் எடுக்க முதன்முறையாக நாம் வற்புறுத்துகிறோம். இது பெரும்பான்மையானவர்களின் கருத்துக்கு ஏற்ப நாம் முடிவெடுக்கக் கூடிய கேள்வியல்ல. கடந்த காலத்தை விட்டு, எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் இடைநிலைக் கட்டத்தில் சமூகமானது இருக்கும்போது, எதிரெதிர் கருத்துக்கள் இருந்திடும் – ஒன்று கடந்த காலத்தை நோக்கி இழுப்பது, மற்றொன்று எதிர்காலத்தை நோக்கி இழுப்பது என்பதாகும். மேலும், நாம் பயன்படுத்தக் கூடிய சோதனை என்பது ஒருவரின் மனசாட்சியைப் பரிசோதிப்பது என்பதைத் தாண்டி வேறில்லை. இம்மசோதாவின் விதிகள் சமூகத்தின் மனசாட்சியுடன் முழுமையாக ஒத்துப் போகின்றன என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே, நம் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் இதை ஏற்கவில்லை என்றாலும் இத்தகையதொரு நடவடிக்கையை முன்வைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.” என அவர் பதிலளித்தார்.
ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள இந்து சமூக ஒழுங்கமைப்பிற்கு முரணாக இம்மசோதா இருப்பதாக இதனை எதிர்த்தவர்கள் கருதியதால், இம்மசோதாவை நிறைவேற்ற இயலவில்லை. இந்துக்களுக்கு திருமணம் என்பது முறித்துக் கொள்ள இயலாத புனிதமான உறவு என்றும், பெண்களுக்கு சொத்துரிமை என்பது இந்து கூட்டுக் குடும்ப முறையை அழித்துவிடும் என்றும் அவர்கள் நம்பினர். இதன் விளைவாக, இம்மசோதா “கொல்லப்பட்டது. மேலும் எந்த அழுகுரலும் இன்றி, புகழ்ந்து பாடப்படாமலும் இறந்துவிட்டது”. 1951ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த கடிதத்தில் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டதைப் போல், “(மசோதா திரும்பப் பெறப்பட்டபோது) நான் திகைத்துப் போனேன். எதுவும் சொல்ல இயலவில்லை … இந்நாட்டின் சட்டமன்றத்தால் எக்காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய சமூக சீர்திருத்த நடவடிக்கை என்பது இந்து சட்ட மசோதா ஆகும். இம்மசோதாவின் முக்கியத்துவத்தோடு, இந்திய சட்டமன்றம் கடந்த காலத்தில் நிறைவேற்றிய எந்தவொரு சட்டத்தையோ அல்லது எதிர்காலத்தில் நிறைவேற்றவுள்ள சட்டத்தையோ ஒப்பீடு செய்து பார்க்க முடியாது. இந்து சமூகத்தின் உயிர்நாடியாக உள்ள வர்க்கத்தினரிடையேயும், பாலினத்தின் இடையேயுமான சமத்துவமின்மையை தொடாமல் அப்படியே விட்டுவிட்டு, பொருளாதார பிரச்சனைகள் தொடர்பான சட்டங்களை மட்டும் நிறைவேற்றிக் கொண்டே செல்வது என்பது நமது அரசியல் சாசனத்தை கேலிக் கூத்தாக ஆக்கி, சாணக் குவியலின் மீது அரண்மனையை கட்டுகிற நடவடிக்கையாகவே இருக்கும்.
1951-52இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், இந்து சட்ட மசோதா என்பது சர்ச்சைக்குரியதொரு பிரச்சனையாக இருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் அவர்களது அரசியல் பிரிவான ஜனசங்கம், இந்து மகாசபையின் தலைவர்களும், இதர பலதரப்பைச் சார்ந்த இந்து மதத் தலைவர்களும் இதை கடுமையாக எதிர்த்தபோது, இதற்கெதிராக மத உணர்வுகளைத் தூண்டியபோது, நேரு இதை ஆதரிக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பிரதமராக ஆன பிறகு, 3 மசோதாக்களும் அவற்றின் பல அம்சங்களோடு நிறைவேறுவதை அவர் உறுதி செய்தார். அவரது கௌரவமும், நாட்டில் அவர் பெற்றிருந்த அபரிமிதமான புகழும்தான் இதை உறுதி செய்தது. வரலாற்றில் முதல் முறையாக, திருமணம் செய்து கொள்ளவும், விவாகரத்து செய்து கொள்ளவும், பரம்பரை சொத்துக்கு ஓரளவிற்கு வாரிசாவதற்கு இந்துப் பெண்களுக்கு உரிமை அளிக்கப்பட்டது. இந்து ஆண்களுக்கு பலதார திருமண முறை தடை செய்யப்பட்டது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டு நேருவின் கட்சிக்குள் இருந்த இந்து வலதுசாரி மற்றும் மனுவாதிகளின் எதிர்ப்பின் காரணமாக, பலவற்றை விட்டுக் கொடுக்க நேரு நிர்ப்பந்திக்கப்பட்டார். மேலும், நேருவும் மற்றவர்களும் எதிர்பார்த்ததை விட இம்மசோதாக்கள் மிகக் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தின. தங்களது சகோதரர்களைப் போன்றே பரம்பரை சொத்துக்களுக்கு வாரிசாக இருப்பதற்கான உரிமையை இந்துப் பெண்கள் 1996ஆம் ஆண்டில்தான் பெற முடிந்தது.
இந்தியப் பெண்களில் பெரும்பகுதியினருக்கு சில அடிப்படை உரிமைகளுக்கான சட்டங்களை இயற்றுவதற்கான இத்தகைய கடினமான போராட்டத்தில் பல முக்கியமான படிப்பினைகள் உள்ளன. பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம், சமூக நீதிக்கான சக்திகளுக்கும், அதை கடுமையாக எதிர்த்தவர்களுக்கும் இடையே நடத்தப்பட்டது. குறிப்பாக, இந்திய அரசியல் சாசனத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், மனு தர்மத்தின் அடிப்படையிலான சட்ட வரையறைகளையே தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்து மகாசபையும் 1950இல் வெளிப்படையாக அறிவித்தன. துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய கருத்தானது அரசியல் தலைமையில் இருந்த பலரால் தெரிவிக்கப்பட்டதாக மட்டும் இருக்கவில்லை. மாறாக, ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் பரவலான பிரிவினரால் தெரிவிக்கப்பட்டதாக இருந்தது.
அப்போதிலிருந்து, நிலப்பிரபுத்துவ உறவுகள் வலுவாக தொடர்ந்து நீடித்திருந்த அதே வேளையில், முதலாளித்துவத்தின் வளர்ச்சியை நாடு கண்டது. வர்க்கச் சுரண்டல், சாதிய சுரண்டலோடு ஒன்றிணைந்தது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு, நிலப்பிரபுத்துவத்தின் பலவீனமும் சாதிய அமைப்பிற்கு முடிவு கட்டும் என்று கருதப்பட்டது. ஏனெனில், சாதிய அமைப்பானது நிலப்பிரபுத்துவ மனப்பான்மையின் ஒரு பகுதி என கருதப்பட்டது. ஆனால், இது ஒரு தவறான கருத்தாக இருந்தது. உண்மையில், அனைத்து விதமான சுரண்டலையும் ஊக்குவிக்க அது இணங்குவதாக இருந்தது. மேலும், இதனை இந்து மதத்தின் ஒரு பகுதியாக கருதியதாலும், இதர மதங்களுக்கு மதம் மாறியவர்களால் வலுவாக உயர்த்திப் பிடித்ததாலும், அனைத்து சுரண்டும் வர்க்கங்களின், குழுக்களின் கைகளில் இருந்த மிக வலுவான ஆயுதமாக இது இருந்தது. தலித்துகள், குறிப்பாக தலித் பெண்கள், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த தொழிலாளர்கள், குறிப்பாகப் பெண்கள் ஆகியோரிடமிருந்து குறைந்தபட்ச செலவில் அதிபட்ச அளவிலான உழைப்பை சுரண்ட இது நிலப்பிரபுத்துவ நிலக்கிழார்களால் பயன்படுத்தப்பட்டது. மிகக் குறைவான கூலிக்கு பல்வேறு வகையான வேலைகளை செய்திட, இயல்பாகவே உழைக்கும் வர்க்கத்தின் மிகப் பெரிய பிரிவாக இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெரும் பகுதியினரை சுரண்டுவதற்கு இது முதலாளித்துவ அமைப்பால் பயன்படுத்தப்பட்டது. நவீன தாராளவாத நடைமுறையில், சாதிய அமைப்பிலிருந்து விடுதலையை பல தலித் அறிவுஜீவிகள் எதிர்பார்த்தனர். ஆனால், எல்லாவிதமான அசமத்துவங்களையும் உண்மையில் அது வலுப்படுத்தியதோடு, உழைக்கும் வர்க்கங்களின் ஒற்றுமையை சீர்குலைத்து பெருமளவிலான லாபங்களை ஈட்டவும் சாதிய அடையாளங்களை மீணடும் செயல்படுத்தியது. சமூக நலத் திட்டங்களிலிருந்து அரசு விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப தலித், பழங்குடியினத்தவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சார்ந்த பெரும்பாலும் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் ‘திட்டப் பணியாளர்கள்’ பணிநியமனம் இதற்கான உதாரணமாகும். காண்டிராக்ட்மயமாக்கலையும், வேலைகள் அவுட்சோர்சிங் செய்யப்படுவதையும் எப்போதும் அதிகரிக்கச் செய்ய நவீன தாராளவாத அமைப்பு வழிவகுத்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தின் கூறுகளை இணைப்பதில் கற்பனை செய்ய முடியாத குறைவான கூலிக்கு பெண்களும் அவர்களது ஒட்டுமொத்த குடும்பமும் ‘வீடுசார் தொழில்” மூலம் மிக நீண்ட நேரங்களுக்கு வேலை செய்கின்றனர். இதில் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்களாக மீண்டும் பெண்களே உள்ளனர்.
பாலினத்திற்குள் சாதியும் வர்க்கமும் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான உதாரணத்தை வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் (பெரும்பாலும் பெண்கள்) அவர்களது பெண் எஜமானர்களால் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதில் காண முடியும். குறைவான ஊதியம் அளிக்கப்படுவதைத் தாண்டி, அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் இடத்திற்கும், அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கும் செல்ல நீண்ட நேரத்தை பயணத்தில் செலவிடுகிறபோதும் அவர்கள் வேலை செய்யும் வீடுகளின் கட்டிடங்களில் உள்ள மின்தூக்கிளைப் பயன்படுத்த அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எண்ணற்ற படிகளை ஏறி சோர்வடைய வேண்டியுள்ளது. அல்லது வேலையாட்களுக்கென்று ‘தனியாக’ உள்ள மின்தூக்கிகளைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் சுத்தம் செய்யும் கழிப்பறையை ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. வர்க்கப் பிரச்சனைகளில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த உழைக்கும் பெண்களிடையேயும், பாலினப் பிரச்சனைகளில் அனைத்துப் பெண்களிடையேயும் ஒற்றுமையை கட்டுவதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சாதிப் பிரிவினைகளால் வலியுறுத்தப்படுகின்றன.
அரசியல் சாசனம், அதன் அனைத்து வரம்புகளோடு, தங்களது உரிமைகளுக்காகவும், நீதி வேண்டியும் பெண்களின் போராட்டங்களை விரிவுபடுத்த ஊக்குவிக்கிறது. பல லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மலிவு விலை ரேஷன் பொருட்களை உறுதி செய்யும் பொது விநியோகத் திட்டத்தை இத்தகைய போராட்ட இயக்கங்களே கொண்டு வந்தன. ஏழைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை உத்திரவாதம் செய்வதில் அவை வெற்றி பெற்றன. பாலியல் வல்லுறவு, வரதட்சணை, குடும்ப வன்முறை போன்றவற்றிற்கு எதிராக வலுவான சட்டங்கள் இயற்றப்பட அவை உதவி புரிந்தன. இருந்தபோதும், இச்சட்டங்களை பெண்கள் அணுகுவது என்பது அவர்களது ஏழ்மையாலும், அதிகாரமின்மையாலும் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. சட்டத்தை அமலாக்கும் முகமைகளிலும், அரசுகளிலும் மனுவாதி ஆணாதிக்கத்தின் வலுவான செல்வாக்கு காரணமாகவும் கட்டுப்படுத்தப்படுகிறது.
வரதட்சணை தடுப்புச் சட்டம் முழுமையாக செயலற்றுப் போயுள்ளது. பாலியல் வல்லுறவுக்கு எதிரான சட்டங்கள் திருப்தி அளிக்கும் விகிதாச்சாரத்திலான தண்டனை அளிப்பதாக இல்லை. குடும்ப வன்முறை மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு எதிரான சட்டங்களை செயல்படுத்துவதில் அரசுகள் போதுமான ஆர்வத்தை காட்டவில்லை. பெண் கருக்கலைப்பை தடுக்க நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அமலாக்கப்படுவதில்லை. அதே நேரத்தில் ‘சாதி ஆணவக்’ குற்றங்களுக்கு எதிராக சட்டம் கூட இயற்றப்படவில்லை. எனவே, பெண்களின் நிலை, அவர்களது சமூக அந்தஸ்து மற்றும் அரசியல் சாசனமும் சட்டங்களும் அவர்களுக்கு அளிக்கும் உரிமைகளை பெறுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாகவே இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் ஏற்பட்ட நிலை, பொது வாழ்வின் பல அம்சங்களின் மீது ஆணாதிக்கத்தின் ஆதிக்கத்திற்கான மிகச் சிறந்த உதாரணம் ஆகும். 20 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, தேர்வுக் குழுவில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் இதுவரை மக்களவையில் இது விவாதத்திற்கு முன்வைக்கப்படவும், நிறைவேற்றப்படவும் இல்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளிலும், 3 அடுக்கு பஞ்சாயத்து அமைப்புகளிலும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டின் காரணமாக பிரதிநிதித்துவத்தை பெற்ற பிறகு, பெண்கள் தங்களது துணிவை நிரூபித்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் தங்களது குடும்பங்களின் ஆண் உறுப்பினர்களுக்கு பதிலியாக இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தங்களது அரசியல் சாசன பொறுப்புகளை ஒட்டுமொத்தமாக மீறி, இத்தகைய நடைமுறை அரசு நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஊக்குவிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக உள்ள பல தலித் பெண்கள் கூட்டங்களுக்கு தலைமை தாங்கவோ அல்லது தேசியக் கொடியை ஏற்றவோ அனுமதிக்கப்படுவதில்லை என்பதும், பல விதங்களில் அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதும் மிகவும் வெட்கக்கேடானதாகும்.
2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களின் முடிவுகள், மத்தியிலும், பல மாநிலங்களிலும் பாஜக அரசுகள் அதிகாரத்திற்கு வந்ததைப் பார்த்தது. ஒவ்வொரு படிநிலையிலும் தனது மனுவாதி நிகழ்ச்சிநிரலை செயல்படுத்த அரசின் அனைத்து உறுப்புகளையும், அமைப்புகளையும் நேரடியாக தற்போது அதனால் பயன்படுத்த முடிகிறது. மேலும், பாலின சமத்துவம் மற்றும் பெண்ணுரிமைகள், தலித், பழங்குடியினத்தவர், சிறுபான்மையினர் மற்றும் அனைத்து உழைப்பாளி மக்களின் உரிமைகள் ஆகியவற்றின் இருப்புக்கே அது பெருத்த சவாலை விடுக்கிறது. உதாரணத்திற்கு, மோசமான திருமண உறவில் உள்ள பெண்களுக்கு சிறிதளவு நிவாரணத்தை அளித்து வந்த குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 498 ஏ மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியன மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதையும், இதற்கு முன்பிருந்ததை விட செயலற்றதாக அவை ஆக்கப்பட்டதையும் நாம் பார்த்தோம்.
கடந்த 7 ஆண்டுகளில், அனைத்து விதமான தாக்குதல்களுக்கும் தலித்துகள் அதிகளவில் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது குடியிருப்பு பகுதிகளும், கிராமங்களும் ஆயுதமேந்திய உயர்சாதி ஆண்களால் தாக்கப்படுகின்றன. வன்முறையையும், வெளியேற்றத்தையும் மலைவாழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். தலித் பெண்களும், பெண் குழந்தைகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அரசுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். பல சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறையும், அரசு நிர்வாகமும் எந்த உதவியையோ அல்லது பாதுகாப்பையோ அளிப்பதில்லை. மேலும் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2020 ஹத்ராஸ் வழக்கில் இளம் தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 உயர் சாதியினரும் அப்பாவிகள் என அழுத்தமாய் கூறியது பாஜக மாநில அரசின் மனுவாதி அணுகுமுறைக்கு ஒரு உதாரணமாகும். பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தபோது, அவளது உடல் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டு, எரிக்கப்பட்டது. இவ்வழக்கு தற்போது நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அக்குடும்பம் அச்சத்தின் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
பாலியல் பலாத்காரம் செய்தவர்களை ஆதரிக்கும் பாஜக அரசின் அணுகுமுறை உண்மையிலேயே வெட்கக்கேடானதாகும். இவர்களுக்கு வாக்குகளை சேகரிப்பவன் என்பதால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் குற்றவாளியான ராம் ரஹீமுக்கு ஹரியானா மாநில பாஜக அரசு தொடர்ந்து பரோல் வழங்கி வருகிறது. இதற்கெல்லாம் மேலாக, பில்கிஸ் பானோ வழக்கில் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை குஜராத் மாநில அரசு சிறையிலிருந்து விடுவித்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், இந்த குற்றவாளிகளை மாலைகளை அணிவித்தும், இனிப்புகளை விநியோகித்தும் விஎச்பி தொண்டர்கள் வரவேற்றனர். இவர்களது விடுதலைக்கு பரிந்துரைத்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், இவர்களை “பண்பட்ட பிராமணர்கள்” என வர்ணித்துள்ளார்.
குற்றவாளிகளின் சாதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சாதியின் அடிப்படையில் ஒரே குற்றத்திற்கு வெவ்வேறு தண்டனைகளைப் பரிந்துரைக்கும் மனுநீதியைக் கொண்டு இந்திய அரசியல் சாசனத்தை மாற்றியமைக்கும் பாஜக மற்றும் சங்பரிவாரத்தின் நோக்கத்தை இச்சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. மிகக் கொடூரமான குற்றங்களுக்கு மிகக் குறைவான தண்டனையே பிராமணர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இடஒதுக்கீட்டை ரத்து செய்வதில் அரசு பிடிவாதமாக உள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் தொடர்பான வழக்கில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பெரும்பான்மை தீர்ப்பு ஓர் கடுமையான எச்சரிக்கையாகும். பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளை ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்குவது, அரசுத் துறைகளில் வேலைகளை, அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள ‘நிரந்தர’ காலிப்பணியிடங்களை காண்டிராக்ட்மயமாக்குவது, அரசுத் துறையில் உயர் நிர்வாகப் பொறுப்புகளில் உயர்சாதியைச் சேர்ந்தவர்களுக்கான பக்கவாட்டு நுழைவுக் கொள்கை போன்றவை எல்லாம் அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்த உழைப்பாளி மக்களை மோசமாகப் பாதிக்கிறது. மேலும், கண்ணியமான வாழ்வாதாரத்தையும், கல்வியையும் அளிக்கும் இடஒதுக்கீடு அவர்களுக்கு அளிக்கும் சிறிதளவு வாய்ப்பையும் தலித்துகளிடமிருந்து பறிக்கிறது. தலித் பெண்களும், சிறுமிகளும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். 80 சதவீதப் பணிகளை செய்பவர்களாக தலித் பெண்கள் இருக்கும் தூய்மைப் பணி கூட, தற்போது அவுட்சோர்சிங் மற்றும் காண்டிராக்ட்மயமாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்யப்படுவதால், இப்பணிகள் மிகக் குறைவான கூலி தரப்படுகிற, பாதுகாப்பற்ற ஒன்றாக ஆகியுள்ளது. தலித்துகளுக்கான நலத்திட்டங்கள், கல்வி உதவி மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களுக்கான நிதியை ஒன்றிய அரசும், பல பாஜக மாநில அரசுகளும் பெருமளவில் வெட்டிச் சுருக்கியுள்ளன.
பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக மானிய விலையில் அளிக்கப்படும் ரேஷன் பொருட்களுக்கான நிதியை பாஜக அரசு தொடர்ந்து வெட்டி வருகிறது. லட்சக் கணக்கான ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு சேர்ந்து உணவுப் பொருட்களின் மீது அரசு விதித்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியால் பெண்களின் மீது தாங்கொணா சுமை ஏற்றப்பட்டுள்ளது. மேலும், பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107வது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏழ்மையின் புதிய வடிவங்கள், கடத்தல் மற்றும் பல்வேறு வகையான சுரண்டல்களுக்கு பெண்களையும், சிறுமிகளையும் ஆளாக்கி, லட்சக்கணக்கான மக்களை சமீப ஆண்டுகளில் வறுமையின் பிடியில் தள்ளியுள்ளது.
சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த பெண்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள், பாஜகவால் ஊக்குவிக்கப்படும் அநீதி, பாரபட்சம் மற்றும் வன்முறையால் கொடூரமாக குறிவைக்கப்படுகின்றனர். 2014இல் அது வெற்றி பெற்ற உடனேயே, “முத்தலாக்’ நடைமுறையை சட்டவிரோதமானதாக ஆக்கியது. இது குடும்பச் சண்டையின்போது பெண்களுக்குப் புதிய பிரச்சனைகளை உருவாக்கியது.
2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் அது வெற்றி பெற்றவுடன், அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை அம்சத்தை அப்பட்டமாக மீறி மதத்தோடு குடியுரிமையை இணைக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) பாஜக அரசு நிறைவேற்றியது. இது நாடு முழுவதும் லட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் காலவறையற்ற தர்ணாவில் அமர்ந்த, வரலாறு காணாத போராட்டங்களுக்கு வழிவகுத்தது. பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என பல ஜனநாயக அமைப்புகள் இவர்களுக்கு தங்களது ஆதரவை அளித்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ‘தேச விரோத ஜிகாத்துகள்” என ஒன்றிய அரசும், பாஜக மாநில அரசுகளும் முத்திரை குத்தின. மேலும், பல்வேறு விதமான தாக்குதல்களுக்கும், காவல்துறையின் வன்முறைகளுக்கும் ஆளாக்கின. தில்லியில், சிஏஏவுக்கு எதிரான இயக்கம் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டது. அதன் பின்னர் அக்குண்டர்கள் வெறித்தனமாகச் சென்று, வடகிழக்கு தில்லியில் பயங்கரமான கலவரத்தைத் தொடங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், சுமார் 6 இந்துக்களும் கொல்லப்பட்டனர். மேலும், நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களின் வீடுகள் பரவலாக சூறையாடப்பட்டு, எரிக்கப்பட்டன. ஆதரவற்றோர், விதவைகள், காயமடைந்த பெண்கள் மற்றும் இந்த வன்முறை சம்பவத்தில் தங்களது குழந்தைகளையும், தங்களது வீடுகளையும் இழந்த பெண்கள் ஆகியோரின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
பல இளம்பெண்கள், பெரும்பாலும் இஸ்லாமியர்கள், சிஏஏவிற்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்றதற்காகக் கைது செய்யப்பட்டனர். தேசவிரோத நடவடிக்கைகளிலும், தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். மேலும், இரண்டு இஸ்லாமிய இளம்பெண்கள் இன்னமும் சிறையில் உள்ளனர்.
ஹிஜாப் அணிந்த பெண்களின் கல்லூரிக்கு வந்து படிக்கும் உரிமையை கர்நாடகாவின் முந்தைய பாஜக அரசு தாக்கியது. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய இளம் பெண்கள் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய உச்சநீதிமன்றம் தடைவிதித்தால், பாஜக ஆளும் மற்ற மாநில அரசுகளும் அதைப் பின்பற்ற காத்துக் கொண்டுள்ளன.
இந்து கும்பல்களால், பெரும்பாலும் காவல்துறையினரின் உதவியோடும், ஊக்குவிப்போடும், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்களை இக்காலகட்டம் கண்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் கார்கோன், தில்லியின் ஜஹாங்கிர்புரி மற்றும் இதர பல இடங்களில் இது நடந்துள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள் பெருமளவில் கைது செய்யப்படாத நிலையில், நூற்றுக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள் வெவ்வேறு இடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஏழை தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பெண் உறுப்பினர்கள் மிக வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்பரிவாரத்துடன் தொடர்புடைய அமைப்புகளும், ‘புனிதர்கள்’ என்று வகைப்படுத்தப்பட்டவர்களும் தண்டனைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டு இஸ்லாமியர்களைக் கொல்லவும், இஸ்லாமியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவும் இந்துக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பொதுவெளியில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இஸ்லாமியப் பெண்கள் மீது – குறிப்பாக பத்திரிகை துறை போன்றவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக உள்ளவர்கள் மீது – ஒவ்வொரு விதமான வாய்மொழி மற்றும் உளவியல் ரீதியான வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் தளமாக சமூக வலைதளங்கள் மாறியுள்ளன. ஈவிரக்கமின்றி அவர்கள் ட்ரோல் செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்டு, அச்சுறுத்தப்படுகிறார்கள். சில தளங்களில் ‘ஏலம்’ கூட விடப்படுகிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மிகுந்த கருணையோடு நடத்தப்படுகிறார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியதோடு, பிரிவு 370ஐயும் மக்களவை ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் எனும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படைகளால் பள்ளத்தாக்கு நிரம்பி வழிந்தது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையசேவை துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரத்திற்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. சொல்லொணாத் துயரத்தையும், துன்பத்தையும், பாதுகாப்பின்மையையும், அவமானத்தையும் காஷ்மீரப் பெண்கள் அனுபவித்தனர். அதனைத் தொடர்ந்து வந்த கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அவர்களது நிலைமைகள் தாங்க இயலாதவையாக இருந்தன. இன்றைக்கும் கூட அவர்கள் துப்பாக்கிகளின் நிழலிலும், முள்கம்பிகளால் சூழப்பட்டும் வாழ்ந்து வருகின்றனர்.
பாஜக கொள்கைகளின், தாக்குதல்களின் பிரத்யேக இலக்குகளாக தலித் பெண்களும் இஸ்லாமியப் பெண்களும் இருந்தபோதிலும், மனுவாதிகளின் கொள்கைகள் பெண்கள் அனைவரையும், குறிப்பாக ஏழைகளை, மோசமாக பாதிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மனுநீதி என்பது உரிமைகள், நீதி மற்றும் சமத்துவத்தை அனைத்து பெண்களுக்கும் மறுக்கும் ஒரு நடைமுறையாகும். அவர்களது செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதோடு, அவர்களது சுதந்திரத்திற்கு, குறிப்பாக தங்களது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதற்கான அவர்களது சுதந்திரத்திற்கு, வரம்பெல்லைகளைத் திணிக்கிறது. தாழ்ந்த சாதிகளைச் சார்ந்த ஆண்களுக்கும் உயர்சாதி பெண்களுக்கும் இடையேயான ‘பிரதிலோமா’ திருமணங்களால் சாதிய அமைப்பு தகர்க்கப்படும் என்பதால் அதனை நீடித்து நிலைத்திருக்கச் செய்திட இது அவசியமாகிறது. இத்தகைய வரம்புகளை வெற்றிகரமாக சுமத்திட, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அவர்கள் பெறுவதை இது கட்டுப்படுத்துகிறது. இந்து பெண்கள் மற்றும் இஸ்லாமிய ஆண்களிடையேயான உறவை குற்றச் செயலாக ஆக்கிட மதமாற்ற தடைச் சட்டத்தையும், வேறுபட்ட மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இடையேயான திருமணங்களுக்கு எதிராகவும் கொடூரமான சட்டங்களை பாஜக ஆளும் மாநில அரசுகள் நிறைவேற்றியிருப்பது தற்செயலான நிகழ்வல்ல. இத்தகைய தம்பதிகள் காவல்துறையினரால் தொந்தரவு செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்ட பல டஜன் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. பெண்கள் தங்களது திருமண உறவை, நட்பு வட்டத்தை, சுற்றத்தாரை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை இச்சட்டங்கள் அவர்களுக்கு மறுக்கின்றன. அதே நேரத்தில், ‘சாதி ஆணவ’ குற்றங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டத்தை கொண்டு வர பாஜக அரசு மறுக்கிறது. மேலும், மிக கொடூரமான வன்செயலைக் கொண்டு இத்தகைய சாதி மறுப்பு உறவுகளை தண்டிக்க அனுமதிக்கிறது.
தங்களது உரிமைகள், வாழ்வாதாரங்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது தொடுக்கப்படும் இத்தகைய புதிய, மோசமான தாக்குதல்களைப் பற்றி பெண்கள் அதிகளவில் தெரிந்து கொண்டு வருகின்றனர். மேலும், உழைக்கும் வர்க்கத்தின், விவசாயிகளின் போராட்ட இயக்கங்களிலும், விலைவாசி உயர்வு மற்றும் அதிகரிக்கும் வன்முறை ஆகியவற்றிற்கு எதிரான பிரச்சாரங்களிலும் முன்வரிசையில் பெண்களைப் பார்க்க முடிகிறது. இருந்தபோதும், தாக்குதலின் தீவிரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஆழமான, பரவலான எதிர்ப்பை இன்னமும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. போராடி அரும்பாடுபட்டு அவர்கள் பெற்ற உரிமைகளை வழக்கொழிந்து போகச் செய்வதிலிருந்து பாதுகாத்திட, வர்க்கம், சமூகம் மற்றும் சாதிய தடைகளை கடந்து அனைத்துப் பிரிவினரின் ஒற்றுமையை கட்ட வேண்டிய தேவை இதற்கு முன்னெப்போதையும் விட தற்போது கூர்மையடைந்துள்ளது.
மனு நீதியை செயல்படுத்த பாஜகவும், சங் பரிவார் அமைப்பும் எத்தகைய முனைப்புடன் உறுதிபூண்டுள்ளன என்பது குறித்து பரவலான பிரிவைச் சார்ந்த பெண்களை புரிந்து கொள்ளச் செய்ய வேண்டிய முக்கியமானதொரு கடமையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி முன்பிருந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டுவது முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பால் சாத்தியமானது. அந்த ராமர் கோவிலுக்கான பூமி பூசை, ஆகஸ்ட் 5, 2020ல் நடைபெற்றபோது இது பெருமளவில் தெளிவாக்கப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற நிலைக்கு முற்றிலும் மாறாக பிரதமரும், உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரகர் (சத்சங்சலக்) மோகன் பகவத்தும் கலந்து கொண்டார். மனுநீதியிலிருந்து ஒரே ஒரு சுலோகத்தை மட்டும் சமஸ்கிருதத்தில் எடுத்துரைத்து ஒரு சிற்றுரையை அவர் அங்கு நிகழ்த்தினார். அந்த நாட்டில் முதலாவதாக பிறந்தவரிலிருந்து (அதாவது ஒரு பிரமாணன்), உலகில் உள்ள அனைத்து மக்களும் அவர்களது கடமைகளை முறையே கற்றுக் கொள்ளட்டும் என்பதே அந்த சுலோகத்தின் பொருளாகும்.
பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் இறுதியில் ராமர் கோவிலை கட்ட வழி வகுக்கும் பிரச்சாரமானது, இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பல்வேறு சாதிகளைச் சார்ந்த பெண்கள் என இந்து சமூகத்தின் பெரும்பகுதியினரை பாஜக மற்றும் சங் பரிவாரத்தின் பிரச்சாரங்களுக்கு ஆதரவாக வெற்றிகரமாகத் திரட்டியது. மதரீதியாக மக்களை அணி திரட்டுவதோடு, சாதிப் பிரிவுகளை அப்படியே வைத்துக் கொண்டு இந்து அடையாளத்தை ஒருங்கிணைப்பது என்ற அதன் இரட்டை இலக்குகளை முன்னெடுத்துச் சென்றது. அரசியல் அதிகாரத்தை பாஜக பெற்றிட இது உதவியது. மேலும், உழைக்கும் வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரான கொள்கைகளை செயல்படுத்தவும், ஜனநாயக மற்றும் அரசியல் சாசன அமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுக்கவும், சமூக தளத்தில் அதன் மனுவாதி நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தவும், உகந்த களத்தை உருவாக்கியது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்பின் கொள்கைகளால் மிக மோசமாக பாதிக்கப்படவுள்ளவர்களில் பெரும் பகுதியினரை அவற்றிற்கு ஆதரவாக இது திரட்டியது.
இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பெரும்பகுதியினர் பெண்கள் ஆவர். எனவே, மனுவாதி இந்து ராஷ்டிரத்தில் தங்களது நிலை எத்தகையதாக இருக்கும் என அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். எப்படிப்பட்ட உரிமைகளையும் பெற பெண்கள் தகுதியானவர்கள் அல்ல என்பதை மனுநீதி தெளிவாக்குகிறது. அவர்கள் தொடர்பான அனைத்து முடிவுகளும் ஆண்களால் – அவர்களது தந்தையர், சகோதரர்கள், கணவர்கள் மற்றும் மகன்களால் – எடுக்கப்பட வேண்டும். கண்டிப்பான கண்காணிப்பின் கீழ் பெண்கள் வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கென விதிக்கப்பட்டுள்ள கறாரான கட்டுப்பாடுகளை மீறினால் அதற்காக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆண்களுடனான அவர்களது உறவை கட்டுப்படுத்துவனவற்றை விட வேறெதுவும் அதிக முக்கியமானதல்ல. கீழ் சாதியைச் சார்ந்த ஆண்களுடனான எத்தகைய உறவும் (பிரதிலோமா) சித்திரவதை மற்றும் மரணத்தால் தண்டிக்கப்பட வேண்டும். எந்த சொத்தையும் அல்லது செல்வத்தையும் அவர்கள் கொண்டிருக்க முடியாது. மேலும், தங்களது கணவர்கள் கொலையாளிகளாக, குடிகாரர்களாக அல்லது பைத்தியக்காரர்களாக இருந்தாலும், பெண்கள் அவர்களை போற்றி வணங்க வேண்டும். அவர்கள் தங்களது கணவனை இழந்துவிட்டால், கணவனின் சிதையோடு அவர்களும் எரிந்து போக வேண்டும் அல்லது எல்லாவற்றையும் இழந்து, அவமதிப்புடனான வாழ்க்கையை வாழ வேண்டும்.
எனவே, மனுவாதி இந்து ராஷ்டிரா திணிக்கப்படுவதற்கு எதிராக அனைத்துப் பெண்களையும் ஒற்றுமைப்படுத்துவதற்கான தேவை மிக முக்கியமானதாகும்.
இத்தகைய ஒற்றுமையை கட்டுவதற்கு எதிராக பல சவால்கள் உள்ளன. நமது நாட்டில், பகுதி, மொழி, மதம், வர்க்கம் மற்றும் சாதி ஆகியவற்றால் நாம் பிரிக்கப்பட்டுள்ளோம். இவை அனைத்திலும், அநேகமாக சாதி மற்றும் மத ரீதியான பிளவு மிகவும் வலுவானவையும், அபாயகரமானவையும் ஆகும். உதாரணமாக, இன்றைக்கு பெண்கள் அனுபவித்து வரும் பல உரிமைகளுக்கு காரணமாக இருந்தவர் டாக்டர் அம்பேத்கர். பெண்களின் சம உரிமைக்கான அவரது போராட்டத்தை அவரது சக அமைச்சர்கள் தோற்கடிக்கச் செய்தனர் என்பதால் தனது மத்திய அமைச்சர் பதவியை அவர் துறந்தார் என்பதெல்லாம் உண்மையாக இருந்தாலும் கூட, அவரது நினைவை தலித் அல்லாத பெரும் பகுதி பெண்கள் போற்றுவதில்லை என்பது உண்மையாகும். பல நூறாண்டுகளுக்கு முன்பு, மீராபாய் எனும் ராஜபுதன இளவரசி, தோல் தொழிலாளியான ரவிதாஸ் தனது குரு என்றும், சாதி பற்றிய அத்தனை நம்பிக்கைகளையும் தான் கைவிட்டு விட்டதாகவும் பாடுவதில் எந்த தயக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் இன்று, டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் அவரது பங்களிப்புகளை அங்கீகரிக்க லட்சக்கணக்கான படித்த பெண்கள் தயாராக இல்லை. எனவே இயற்கையாகவே, தலித் பெண்கள் மீதான தாக்குதல்களின் போது அது தங்களைப் போன்ற பெண்களின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் என்று பெரும்பகுதி பெண்கள் எதிர்வினையாற்றுவதில்லை. அதே போன்று, இஸ்லாமியப் பெண்களை “இதரர்கள்“ என்று இந்து பெண்களின் சிந்தனையில் தற்போது ஆழமாக பதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியப் பெண்களின் மீது பல்வேறு விதமான தாக்குதல்கள் தொடுக்கப்படும்போது, அவற்றை தாங்கள் எதிர்வினையாற்ற வேண்டிய தாக்குதல்களாக இவர்கள் பார்ப்பதில்லை. தங்களது இஸ்லாமிய சகோதரிகளுக்கு உறுதுணையாகத் தாங்கள் அவர்களோடு நிற்க வேண்டும் என இவர்கள் நினைப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எந்தவொரு பெண்ணின் உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது அனைத்துப் பெண்களின் உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்ற உண்மையை இந்தியப் பெண்களில் பெரும்பகுதியினர் ஏற்றுக் கொள்வதில்லை.
சாதிப் பிரிவினைகள், வர்க்கப் பிரிவினைகள், மதரீதியான பிரிவினைகள், மொழிவாரி பிரிவினைகள் மற்றும் பகுதிவாரி பிரிவினைகள் என அனைத்தும் இந்தியப் பெண்களை பிளவுபடுத்தி வைப்பதில் தங்களது பங்கை செயல்படுத்துகின்றன. மேலும், அடையாள அரசியல் போன்ற நவீன முதலாளித்துவ காலத்து தத்துவங்கள் அவர்களது வேறுபாடுகளையும், சிதறிப்போயுள்ள அடையாளங்களை நிர்ணயித்து, அவர்களிடையே புதிய தடைகளை ஏற்படுத்தி, பெண்களின் உரிமைகளுக்கான போராட்ட இயக்கங்களை நடத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ள நேரத்தில் அவற்றை மிக சிரமமானவையாக ஆக்கிடுகிறது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வியக்கத்தக்க, பரந்த மற்றும் நீடித்த, துணிச்சலான போராட்டம் உண்மையில் அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாத்திட நடைபெற்ற போராட்டமாகும். ஆனால் அதனை அத்தகையதொரு போராட்டமாக முன்னிறுத்தாமல், இஸ்லாமியப் பெண்களின் போராட்டமாக முன்னிறுத்தப்பட்டதால், பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் அதிலிருந்து ஒதுங்கி நின்றதோடு மட்டுமின்றி, பல்வேறு விதங்களில் அதனை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டனர். இவ்வாறாக, பெண்களாக தங்களது சொந்த உரிமைகளைப் பாதுகாக்கும் மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை பாதுகாக்க கிளர்ந்தெழுந்திடத் தவறிவிட்டனர். அதே போன்று, தலித் பெண் நான்கு உயர்சாதி ஆண்களால் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹத்ராஸ் சம்பவம் போன்ற கொடூரமான சாதிய மற்றும் பாலின வன்கொடுமை வழக்கில், தனது சாதியைச் சார்ந்த குற்றம் சுமத்தப்பட்டவர்களை உத்திரப்பிரதேச முதல்வர் பாதுகாத்ததோடு, பாதிக்கப்பட்டவரை ‘பொய்யர்’ என பகிரங்கமாகக் கண்டனம் செய்தார். துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தை சாதியக் கண்ணோட்டத்துடன் பார்த்த பெரும் எண்ணிக்கையிலான பெண்களாலும் கூட இந்த அட்டூழியத்திற்கான எதிர்ப்பு பலவீனப்படுத்தப்பட்டு, முடக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் மரண வாக்குமூலத்தை அளித்திருந்தபோதும், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் மூன்று பேரை விடுவித்து பாலியல் பலாத்காரம் நடைபெறவில்லை என கீழ் நீதிமன்றம் மறுத்தபோது, அதற்கெதிரான கடுஞ்சீற்றம் மீண்டும் முடக்கப்பட்டது. தங்களது உரிமைகளையும், தங்களது பாதுகாப்பிற்காக நிறைவேற்றப்பட்ட பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான சட்டங்களையும் மீறுவதாக நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்திருப்பதாக பெண்களில் பெரும்பகுதியினர் பார்க்கவில்லை.
சுரண்டும் வர்க்கங்கள், மாநில அரசுகள் – குறிப்பாக பாஜகவால் நடத்தப்படும் மாநில அரசுகள் – மற்றும் ஒன்றிய அரசு என அனைத்தும் பெண்களை பிரித்து வைத்திட அவர்களிடையேயான சாதி மற்றும் மத வேறுபாடுகளை பயன்படுத்துகின்றன. எனவே, ஆட்சியாளர்களின், சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலையும், பெண்கள் விரோத, ஏழை மக்களுக்கு எதிரான கொள்கைகளை மாற்றத் தேவையான அளவிற்கான எதிர்ப்பியக்கங்களை கொண்டு செல்ல இயலவில்லை. பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த பெண்களை மதஉணர்வு கொண்டவர்களாக ஆக்கிடவும், அவர்களிடையே உள்ள சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்வையும், அச்ச உணர்வையும் மெல்ல மெல்ல புகட்டிடவும், தங்களது அதிகாரத்தில் உள்ள அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள். பொதுவெளியில் முன்னின்று செயல்படவும், தங்களது சுதந்திரத்தை வலியுறுத்தவும், அவர்கள் கொண்டுள்ள விருப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சங்பரிவார் அமைப்புடன் இணைக்கப்பட்ட மாதர் அமைப்புகள் பெண்களைத் திரட்டுகின்றன. இத்தகைய விருப்பங்களை சிறுபான்மையினர் மீதான உடல்ரீதியிலான தாக்குதல்கள் உள்ளிட்ட தாக்குதல்களாக கொண்டு செல்கின்றன. இவ்வாறு செய்வதில், உண்மையில் அவர்கள் மூன்று நோக்கங்களை எட்டுகின்றனர். தங்களது வீடுகளுக்குள்ளும், வெளியேயும் இந்நாட்டின் குடிமக்கள் என்ற முறையிலான தங்களது உரிமைகளுக்காக அவர்கள் போராடுவதில்லை. தங்களது குறைவான கூலி, அதிகளவிலான சுரண்டல், பொது விநியோகத் திட்டம் மற்றும் நூறு நாள் வேலைத் திட்டம் மீதான தாக்குதல்கள், தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், கொடூரமாக அதிகரித்து வரும் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டல், அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை ஆகியவற்றிற்கெதிரான எதிர்ப்பை அவர்கள் பலவீனப்படுத்துகிறார்கள். மேலும், மனுநீதியைக் கொண்டு இந்திய அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து, இந்து ராஷ்டிரத்தை நிறுவுவது என்ற தங்களது திட்டத்தின் பின்னால் இப்பெண்களை அணி திரட்டுகிறார்கள்.
பல்வேறு பிரிவைச் சார்ந்த பெண்கள், வேறுபட்ட அளவிலான சுரண்டலையும், அசமத்துவத்தையும் எதிர்கொண்டு வருகிறார்கள் என்ற உண்மையை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அது துவக்கப்பட்டது முதல் வலியுறுத்தி வருகிறது. விவசாயத் தொழிலாளர்கள், இஸ்லாமியப் பெண்கள், தலித் பெண்கள், இளம் பெண்கள், வடகிழக்குப் பகுதியைச் சார்ந்த பெண்கள், பழங்குடியினப் பெண்கள் போன்றவர்களை பாதிக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து, இப்பிரச்சனைகள் மீது ஒட்டுமொத்த ஸ்தாபனமும் ஒருங்கிணைந்தும், இதர அமைப்புகளோடு கூட்டாகவும், பிரச்சாரங்களையும், போராட்ட இயக்கங்களையும் நடத்த மாதர் சங்கம் கூறி வருகிறது. இதர அமைப்புகள் எல்லாம் ஏதேனும் ஒரு பகுதி பெண்களின் பிரச்சனைகளில் மட்டுமே ஈடுபட்டிருப்பார்கள். மாதர் சங்க கண்ணோட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் அது இணையாமல் இருக்கலாம். இருந்தபோதும், கூட்டுப் பிரச்சாரங்களிலும், போராட்ட இயக்கங்களிலும் அவர்கள் ஈர்க்கப்பட வேண்டும்.
பகுதிவாரி பிரச்சனைகளில், பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிற அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட குழு அல்லது பிரிவு மக்களின் போராட்டம் என்பது அனைத்து பிரிவுகளையும், சமூகங்களையும் சார்ந்த அனைத்துப் பெண்களின் பொறுப்பு என்ற புரிதலில் மாதர் சங்கம் உறுதியாக உள்ளது. உதாரணமாக, தீண்டாமைக் கொடுமை மற்றும் சமூக பாரபட்சம் ஆகிய பிரச்சனைகளை, சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பெண்களும் கவலை கொள்ள வேண்டிய ஒரு விஷயமாக ஆக்க வேண்டும். அதே போன்று, இஸ்லாமியப் பெண்கள் அனுபவித்து வரும் பாரபட்சம், அவர்கள் எதிர்கொண்டு வரும் தாக்குதல்கள் ஆகியவை, பாலின சமத்துவம் மற்றும் பாதுகாப்புக்காக போராடி வரும் அனைத்துப் பெண்களாலும் வலுவாக எதிர்க்கப்பட வேண்டும்.
பெண்களின் உரிமைகளுக்கான போராட்ட இயக்கங்களுக்கும், தீமை நிறைந்த சாதிய நடைமுறைக்கு எதிரான இயக்கங்களுக்கும் இடையேயான இணைப்புகள், அசமத்துவத்திற்கு எதிராகப் போராடி வரும் அனைத்துப் பெண்களாலும் வலுப்படுத்தப்பட வேண்டும். சமூகப்படிநிலையில் மேம்பட்டிருப்பதைப் போன்ற தவறான உணர்வைத் தரும் மனுவாதி சக்திகள் உண்மையில் அனைத்தும் பெண்களுக்கும் அவர்களது உரிமைகளையும், சமத்துவத்திற்கான அவர்களது கோரிக்கைகளையும் மறுக்கின்றன என்பதை அவர்கள் அடையாளம் கண்டுணர வேண்டும்.
பிரிவினை, வெறுப்புணர்வு, சகிப்பின்மை ஆகியனவற்றை ஊக்குவிப்பதோடு, அவற்றைத் தூண்டும் மனுவாதிகளை எதிர்த்துப் போராட, அரசின் கொள்கைகளாலும், சுரண்டும் வர்க்கங்களின் கொள்கைகளாலும் உருவாக்கப்பட்டு, அதிகரிக்கச் செய்யப்படும் சுரண்டலுக்கு ஆளாகும், ஒடுக்கப்பட்ட மக்களில் பெரும்பகுதியினரது துன்பங்களின் பொதுவான தன்மையை வலியுறுத்தும் பிரச்சாரங்களையும், இயக்கங்களையும் நடத்துவது அவசியமாகும். ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த அனுபவப் பகிர்வைப் புரிந்து கொள்வது என்பது அதனோடு கூடவே எதிர்ப்பின் தேவையைக் கொண்டு வருகிறது. தவறான அபிப்பிராயங்களை வலுவிழக்கச் செய்து, தடைகளை அகற்றி, ஒற்றுமையைக் கட்டியெழுப்பிடுகிற பொதுவான போராட்ட இயக்கங்களை இது ஊக்குவிக்கிறது. இன்றைக்கு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ள மனுவாதி சக்திகளையும், அவர்களது கொடூரமான தத்துவத்தையும் அகற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி இப்போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல தொடர்ச்சியான இயக்கங்களும், உறுதியான இணைப்பும் தேவைப்படுகிறது. சமத்துவத்திற்கும், பெண்களின் உரிமைகளுக்காகவும் நடத்தப்படும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல தேவையான சூழல்களையும், தேவையான கூட்டு வலிமையையும் இதுவே உருவாக்கிடும்.
மனுவாதி நீதியின் அதிகாரத்தையும், வர்க்க சுரண்டலையும் தகர்த்திடத் தேவையான ஒன்றுபட்ட சக்தியை உருவாக்குவோம்.
தமிழில்: எம். கிரிஜா
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
