
சீனாவில் வறுமை ஒழிப்பு
சுசரிதா சின்ஹா முகர்ஜி
நூல் அறிமுகம்: Poverty Reduction in China: Achievements, Experience and International Cooperation , ஸ்பிரிங்கர், பக்கங்கள் 243.
1978இல் வளர்ந்துவரும் ஒரு ஏழை நாடாக இருந்த சீனா, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில்) அடிப்படையில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது வியக்கத்தக்கது ஆகும். மேலும், சீனாவில் நிலவும் வறுமையை ஆச்சர்யமூட்டும் அளவிற்கு குறைத்திருப்பது (1981இல் 87.78 கோடி ஏழைகள் என்ற எண்ணிக்கையிலிருந்து 2016 இல் 73 லட்சமாக குறைந்தது) சீன நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மிகவும் பாராட்டத்தக்க சாதனையாக இருக்கக்கூடும்.
சீனாவில் ஒட்டுமொத்த ஏழைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பெரும் சரிவும், “தீவிர வறுமை நிலைமை” (உலக வங்கி கணக்கீட்டின்படி [2022] ஒரு நாளைக்கு 2.15 அமெரிக்க டாலருக்கும் குறைந்த வருமானத்தில் வாழும் மக்கள் தொகை) மொத்தமாக குறைக்கப்பட்டது. நாட்டில் வாழ்க்கை தர உயர்வுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், உலகளாவிய வறுமையின் பரவலையும் அது குறைத்துள்ளது.
சீனா: வறுமை ஒழிப்புக்கு ஆதாரம்
ஹௌகாய் வெய், லெய் வாங் ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த நூல், சீனாவின் வறுமை ஒழிப்பு உத்திகள், அனுபவங்கள் பற்றிய நுட்பமான செய்திகளை வழங்குகிறது. வறுமையை ஒழிக்க விரும்பும் பிற வளரும் நாடுகளுக்கு இந்த புத்தகம் ஒரு வழித்தடத்தை வழங்குகிறது. எனவே, ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்களுக்கு இது ஒரு மதிப்புமிக்க ஆதாரமாகும்.
புத்தகத்தின் பல்வேறு அத்தியாயங்கள், வறுமை ஒழிப்பு உத்திகளின் குறிப்பிட்ட பரிமாணங்கள் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. 1978க்கு முன்னர் அதிக எண்ணிக்கையிலான மக்கள், முழுமையான வறுமையில் வாடிய நாடாக இருந்து, வளரும் உலகிற்கு வறுமை ஒழிப்பில் ஒரு முன்மாதிரியாக மாறியிருக்கும் சீனாவின் திட்டமிட்ட, இலக்குசார் முயற்சிகளை இவை எடுத்துக் காட்டுகின்றன.
வறுமை ஒழிப்புக்கான அரசு தலைமையிலான முயற்சிகள், விரிவானதாகவும் பலதரப்பட்டதாகவும் இருந்தன. வளர்ச்சியை முதன்மையாகக் கொண்டு, வளம் கசிந்து கீழே பாயும் (trickle down) என்ற அணுகுமுறையை நம்பாமல், சீனா முன்னெடுத்திருக்கும் முயற்சிகளும், அடைந்திருக்கும் வெற்றிகளும் கவனமான திட்டமிடலை பிரதிபலிக்கின்றன. இந்தத் திட்டம், அரசியல் உறுதிப்பாடு, தலைமைத்துவம் கொண்டு வழிநடத்தப்பட்டது. உள்ளூர் அரசியல் பணியாளர்கள், சமூக சக்திகளின் உதவியுடன் திரட்டப்பட்ட வளங்கள், திட்டமிட்ட விதத்தில் இலக்குடன் இணைக்கப்பட்டன.
உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் மற்றும் உலக, உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் விரிவான உதவியும், குறிப்பாக ஆரம்ப கட்டங்களில், அதற்குரிய பங்கை வகித்தாலும், அரசாங்கம் மேற்கொண்ட திட்டமிடலும், வள விநியோகமும் இந்த மாற்றச் செயல்பாட்டில் முக்கிய இடம் வகித்தன.
இந்த புத்தகம், கிராமப்புற ஏழைகளின் திறன்களை விரிவுபடுத்துவதற்கு, அரசாங்கம் ஏற்படுத்தும் நிர்வாக மாற்றங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு மாதிரியை நம்பாமல், மக்களுக்கு பாரம்பரிய மற்றும் புதிய வாழ்வாதார வழிகளை உருவாக்குவதன் மூலம், வறுமையின் தீய சுழற்சியை உடைக்க உதவுகிற, அரசாங்கத்தின் அனைத்து வகையிலுமான அணுகுமுறையை எடுத்துக் காட்டுகிறது. பலதரப்பட்ட வறுமை ஒழிப்பு முயற்சிகளை செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் படிப்படியான அணுகுமுறை குறிப்பிடத்தக்கது ஆகும். இந்தச் செயல்முறை கடுமையான ஏழ்மையில் இருப்போரை அடையாளம் கண்டு பதிவு செய்வதில் தொடங்கியது. தரவுகளைப் பயன்படுத்தி கொள்கைகளை மதிப்பீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு கட்டங்களாக இந்த உத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
புத்தகத்தின் பகுதிகள்:
புத்தகத்தில் 11 அத்தியாயங்கள் உள்ளன. அவற்றை தோராயமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றும் சீனாவின் வறுமை ஒழிப்பு அனுபவத்தின் ஒரு தனிப் பரிமாணத்தில் கவனம் செலுத்துகின்றன. இந்த நூல் ஆசிரியர்கள் வெய், வு, டான் ஆகியோரின் சீனாவின் வறுமை ஒழிப்பு உத்திகள் பற்றிய அத்தியாயத்துடன் தொடங்குகிறது. இது 1978-2012 வரை கிராமப்புறங்களில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள், இலக்கு வைக்கப்பட்ட முதலீடுகளில் கவனம் செலுத்தியது. குடும்ப ஒப்பந்த பொறுப்பு அமைப்பு மூலம், விவசாய உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், 1978க்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய கம்யூன்களின் கட்டுப்பாட்டிற்கு பதிலாக, விவசாய பொருட்களுக்கு விலைகளை அறிமுகப்படுத்துதல் போன்ற மாற்றங்களுடன், கிராமப்புறங்களில் போக்குவரத்து, கல்வி போன்ற உள்கட்டமைப்பு முதலீடுகளும் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில், வறுமையில் உள்ளவர்களை அடையாளம் கண்டு பதிவு செய்வதன் மூலமும், நியமிக்கப்பட்ட பணிக்குழுக்களின் உதவியுடன் ஏழைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமும், முழுமையான வறுமையை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
குவோ, யாங் எழுதிய அத்தியாயங்கள் 2, 3 ஆகியவை, கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றுவதற்கு அவசியமான திறன்களை வளர்ப்பதற்காக, உற்பத்தி, வேலைவாய்ப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட வறுமை ஒழிப்பு உத்திகளில் கவனம் செலுத்துகின்றன. மின்சாரம், சாலைகள், நீர்ப்பாசன சேவைகள், இணைய சேவைகள் போன்ற வடிவங்களில் மறைமுக ஆதரவு வழங்கப்பட்டது. மேலும் நேரடி ஆதரவு மானியக் கடன்கள், தற்போதுள்ள விவசாய நிறுவனங்களுக்கு முன்னுரிமை கட்டணங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டது.
இவை கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளையும், சுற்றுலா, மின் வணிகம் போன்ற புதிய தொழில்களை உருவாக்க தொழில்முனைவோருக்கு ஊக்கத்தொகைகளையும் வழங்கின. இது தொடர்ச்சியான வேலைவாய்ப்பு ஓட்டத்தை உருவாக்கியது. இந்த நடவடிக்கைகள், திறன் மேம்பாட்டிற்கான வளங்களால் பூர்த்தி செய்யப்பட்டன. அதாவது தொழில் பயிற்சி வழங்குதல், தொழிலாளர் விநியோகத்தை தேவைக்கு ஏற்ப பொருத்துதல், தொழிலாளர்களை இடம்பெயரச் செய்வதற்கான ஆதரவு, பின்தங்கிய பகுதிகளில் வேலைகளை உருவாக்குவதற்காக தொழில்முனைவோருக்கு மொத்த மானியங்கள் வழங்குதல் ஆகியவை இத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.
அடுத்த இரண்டு அத்தியாயங்களில், ஆசிரியர்கள் ஏழைகளிடையே பணியாற்றி மனித வளமாக உருவாக்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்த முயற்சிகளில் கவனம் செலுத்துகின்றனர். இது அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பயன்படுத்த உதவுகிறது. கிராமப்புற ஏழைகளுக்கு அடிப்படை சுகாதார காப்பீடு; கிளினிக்குகள், மருத்துவமனைகள் கட்டுதல்; தாய் – சேய் உடல்நலம், ஊட்டச்சத்து உதவி, உத்தரவாத திட்டங்கள் உட்பட, பொது சுகாதார நடவடிக்கைகளை பரப்புதல்; நீர் வழங்கல், சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் நோயைத் தடுப்பது உள்ளிட்ட அரசாங்கத்தின் இலக்கு வைக்கப்பட்ட கொள்கைகளை லி, பாய் ஆகியோர் விவாதிக்கின்றனர்.
கல்வியில்
டான், செங், கல்வித் திறன்களை வளர்ப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளை விவாதிக்கின்றனர். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் கல்வி வாய்ப்புகளை உருவாக்குதல், கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்வி அணுகலுக்கான இலக்கு வைக்கப்பட்ட மானியங்களை வழங்குதல் மூலம், ஏழைகள் சுயசார்பு நிலைக்கு வழிநடத்தி கொண்டுவரப்பட்டனர். இளைஞர்கள், நடுத்தர வயதினரிடையே எழுத்தறிவின்மை ஒழிப்பு, சேர்க்கை விகிதங்கள், பள்ளிப் படிப்பில் பெரும் விரிவாக்கம் போன்ற சாதனைகள், பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும், ஆசிரியர்களுக்கு ஆதரவு, இடைநிற்றலுக்கு ஆளாகக்கூடிய குடும்பங்களுக்கு நிதி உதவி, பதிவு செய்யப்பட்ட ஏழைகளுக்கு பாலர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை அனைத்து மட்டங்களிலும் இலவச கல்வி அணுகல் மூலம் இது சாத்தியமானது. இவை தொழில் கல்வி மூலம் பூர்த்தி செய்யப்பட்டன. இந்த இரண்டு பகுதிகளிலும், சுகாதாரம், கல்வி, உள்ளூர் சவால்களை எதிர்கொள்வதற்கான உள்ளூர் இலக்குகளை நிர்ணயிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு பணி வழங்கப்பட்டது.
வறுமை ஒழிப்புக்கான இத்தகைய அணுகுமுறைகள் மனித வளத்தை உருவாக்குவதிலும், வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை வழங்குவதிலும், மிகவும் நிலையானதாகக் கருதப்பட்டாலும், அடுத்த சில அத்தியாயங்கள் சீனாவின் பாரம்பரிய வறுமை ஒழிப்பு உத்திகளைத் தாண்டி, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு போன்ற நவீன சவால்களை அங்கீகரித்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துக் காட்டுகின்றன. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட சீனா, பொருளாதார வளர்ச்சி செயல்பாட்டினை ஒப்பீட்டளவில் தாமதமாகவே தொடங்கியது. வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு தொழில்துறையை மட்டுமே நம்பியிருக்க முடியாது. எனவே கூடுதல் உத்திகள் தேவைப்பட்டன.
இயற்கை வளங்களின் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பேரழிவுகள், கடுமையான பருவநிலை நெருக்கடி, நோய் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசித்த ஏழைகளை இடமாற்றம் செய்வதற்கான சீனாவின் முயற்சிகளை அத்தியாயம் 6 இல், வாங் விவாதிக்கிறார். மீள்குடியேற்ற முயற்சிகள் பிராந்திய புவியியல் மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டன. அதேநேரத்தில் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் சாத்தியமான வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளையும் மனதில் கொண்டு திட்டமிடப்பட்டிருந்தன. வாழ்வாதார மேம்பாடு, குடியேற்றத்திற்கு மிகவும் உகந்த பகுதிகளுக்கு தனிநபர்களை இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மத்திய அரசாங்கத்தின் வளங்களால் ஆதரிக்கப்பட்டன. மேலும் உள்ளூர் அரசாங்கங்கள் உத்திகளை செயல்படுத்துவதற்குப் பொறுப்பேற்றன.
அத்தியாயம் 7இல் ஜாங்கின் கட்டுரை, “சுற்றுச்சூழல் மேம்பாடு” மூலம் சீனாவின் வறுமை ஒழிப்பு முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது. இதில் ஒருபுறம், வளங்களை பயன்படுத்துவதன் எதிர்மறையான விளைவுகளால் பாதிக்கப்பட்ட ஏழை சமூகங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. மறுபுறம், ஏழைகள் தங்கள் வளர்ச்சிக்கான நிலையான வழிமுறைகளை உருவாக்கவும், சுற்றுச்சூழலுக்கு ஆதரவான திட்டங்களில் ஈடுபடவும், உதவும் கொள்கைகள் இருந்தன. இந்த ஒட்டுமொத்த கொள்கையில், சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் கரிம விவசாயத்தை ஆதரிப்பதற்கான முயற்சிகள் அடங்கும்.
புத்தகத்தின் கடைசி ஆறு அத்தியாயங்கள் சர்வதேச சமூகத்திற்கும், சீனாவின் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கும் இடையிலான தொடர்புகளில் கவனம் செலுத்துகின்றன. அத்தியாயம் 8, ஐ.நா., உலக வங்கி, சர்வதேச என்.ஜி.ஓ. நிறுவனங்கள் போன்ற அமைப்புகளின் பங்கு, வளங்கள், உத்திகள் வழங்குவதை ஆவணப்படுத்துகிறது. அத்தியாயம் 10 குறிப்பாக உலக வங்கியின் நிதி உதவி, ஒத்துழைப்பு, ஆராய்ச்சி, நிபுணத்துவத்தைப் பகிர்வதன் மூலம், சீனாவின் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு அளித்த பங்களிப்புகளில் கவனம் செலுத்துகிறது. சீனா தனது எல்லைகளுக்குள் வறுமையை வெற்றிகரமாக நிவர்த்தி செய்துள்ளதால், அதன் வறுமை ஒழிப்பு உத்திகள், வளர்ச்சி மூலம் உருவாக்கப்பட்ட வாய்ப்புகள், வளர்ந்து வரும் நிதி வளங்கள் ஆகியவை பிற வளரும் நாடுகளில் வறுமை ஒழிப்பிற்கு உதவியுள்ளன.
அத்தியாயம் 9, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளரும் நாடுகளுக்கு, வறுமை ஒழிப்பு முயற்சிகளில் சீனா அளித்த உதவிகளை விவாதிக்கிறது. இந்த முயற்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஆப்பிரிக்காவுடனான கூட்டு ஆகும். இதில் உதவி மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஆதரவு, தொழில்நுட்பம், மனித வள மேம்பாட்டைப் பகிர்ந்துகொள்வது, சீனாவுடனான வர்த்தகத்தை எளிதாக்குவதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
அத்தியாயம் 12இல், என்காவெனி, ஆப்பிரிக்காவில் வறுமையை நிவர்த்தி செய்வதற்கான சீனா, ஆப்பிரிக்கா இடையேயான ஒத்துழைப்பு முயற்சிகளை, சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு மன்றம் (FOCAC) மூலம் விவாதிக்கிறார். இது உலகில் அதிக எண்ணிக்கையிலான ஏழை மக்களைக் கொண்ட கண்டமாகும். சீனா வழங்கிய ஆதரவில், நேரடி வெளிநாட்டு முதலீடு, உதவி, வங்கி கடன்கள் ஆகியவை உள்கட்டமைப்பு மேம்பாடு, உணவு பாதுகாப்பை எளிதாக்குவதற்கும், ஆப்பிரிக்க மாணவர்கள் சீனாவில் படிப்பதற்காக கல்வி வாய்ப்புகளை வழங்குவது மற்றும் சீனாவுடைய உத்திகள், அனுபவங்களைப் பகிர்தலும் அடங்கும். இந்த முயற்சிகள் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டுக்கு வழிவகுத்தன. இது வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இயற்கை வளங்களை அணுக சீனாவுக்கு உதவியது. அதேநேரத்தில், வர்த்தக தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளின் திறன்களை விரிவாக்கி, மேம்படுத்தியது.
அத்தியாயம் 11இல் ஹாரோ ஸ்லை மற்றும் கனோசா ஆகியோர், பணி, கொள்கைகளின் ஒப்பீட்டு மதிப்பீட்டில் ஈடுபடுவதன் மூலம், லத்தீன் அமெரிக்க நாடுகள் சீனாவின் அனுபவங்களிலிருந்து எவ்வாறு கற்றுக்கொள்ளலாம் என விவாதிக்கின்றனர். திட்டமிடப்பட்ட விவசாய பொருளாதாரத்திலிருந்து, சந்தை சார்ந்த தொழில் தலைமையிலான பொருளாதாரத்திற்கு சீனாவின் படிப்படியான மாற்றம், தீவிர வறுமையை ஒழிப்பதில் அதன் வெற்றியின் முக்கியமான தூண்களில் ஒன்றாகும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். வறுமை, லத்தீன் அமெரிக்காவில் பரவலாக நிலவும் பிரச்சனையாகும்.
இறுதியாக, அத்தியாயம் 13இல், பந்தமித், ஃபாங், சீனா, மற்றும் ஆசியான் நாடுகளிடையிலான (ASEAN) ஒத்துழைப்பின் பரஸ்பர நன்மைகளை விவாதிக்கின்றனர். இதில், கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் போன்ற ஏழை ASEAN உறுப்பு நாடுகளுக்கு, சீனா வறுமை ஒழிப்பிற்கான ஒரு முன்மாதிரியாக உள்ளது. அதேநேரத்தில், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பெரிய ASEAN பொருளாதாரங்களிலிருந்து மதிப்புமிக்க பாடங்களையும் கற்றுக் கொள்கிறது.
இந்த தொகுதியின் மையமாக இல்லாத, ஆனால் வறுமை குறைப்பு பிரச்சினைக்கு பொருத்தமான, தொடர்புடைய சில சிக்கல்கள் குறித்த தரமான ஆராய்ச்சி இந்த நூலில் இடம்பெற்றிருக்கலாம். குறிப்பாக, இடம்பெயர்வு, கிராமப்புற-நகர்ப்புற ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றை பேசியிருக்கலாம். இந்த புத்தகத்தில் உள்ள பகுப்பாய்வு, வறுமை ஒழிப்பின் பாலின பரிமாணங்கள் குறித்த விவாதத்தை மேற்கொண்டிருந்தால் இன்னும் பயனளிப்பதாக அமைந்திருக்கும். தொழிலாளர் சந்தையிலும், பிற துறைகளிலும், பாலின வேறுபாடுகள் குறித்த பிரச்சினைகளைக் கையாள்வது, நாட்டில் கடும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சீனாவின் பெரும் இயக்கத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருந்திருக்கும்.
சுருக்கமாக, சீனாவின் வறுமை ஒழிப்பு உத்திகள், முயற்சிகளின் விளைவுகள் குறித்த விரிவான, முழுமையான பதிவுகளைக் கொண்டிருப்பதால், இந்த நூல் நிச்சயம் ஆழ்ந்து வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.
(கட்டுரையாளர் பேராசிரியர், செயின்ட் பெனடிக்ட் கல்லூரி, செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம்)
ஆசிரியர்குழு குறிப்பு: இக்கட்டுரையை தமிழாக்கம் செய்து மார்க்சிஸ்ட் இதழில் வெளியிட அனுமதி அளித்த கட்டுரையின் ஆசிரியர் சுசரிதா சின்ஹா முகர்ஜி அவர்களுக்கும், Review of Agrarian Studies ஆசிரியருக்கும் எமது நன்றி.
தமிழில்: இரா. சிந்தன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply