சீனாவின் “இரண்டு அமர்வுகள்” 2025 – சோசலிச ஜனநாயகத்தின் வெளிப்பாடு
அபிநவ் சூர்யா
அண்மையில் சீன அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் “இரண்டு அமர்வுகள்” என்ற நிகழ்வு நடந்து முடிந்தது. இது “இரண்டு அமர்வுகள்” என்று அழைக்கப்படுவதற்கு காரணம், சீனாவின் தேசிய மக்கள் மன்றமும் (NPC), சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மன்றமும் (CPPCC) ஒரே நேரத்தில் அமர்வுகளை நடத்துவதுதான். தேசிய மக்கள் மன்றம்தான் சீனாவின் உச்சபட்ச அரசு அமைப்பாகும். கிராமங்கள் முதல் மாகாணங்கள் வரை மக்களாலும், மக்களின் பிரதிநிதிகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 3,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டு, நாடு மற்றும் மக்கள் வாழ்வின் வளர்ச்சி சார்ந்த அனைத்து முடிவுகளை மேற்கொண்டு, சட்டங்களை இயற்றுவர். இந்த அமர்வு, ஆண்டுக்கு ஒரு முறை (பெரும்பாலும் மார்ச்-ஏப்ரல் காலத்தில்) நிகழும். இந்த ஆண்டு மார்ச் 5-11 தேதிகளில் நடைபெற்றது.
இந்த அமர்வில், சீன அரசாங்கத்தின் தலைமை, நாட்டின் தற்போதைய நிலையை விவரித்து, முன்னேற்றத்திற்கான முன்மொழிவுகளை மேற்கொள்வர். விவாதங்களுக்கு பிறகு, இவை நிறைவேற்றப்படும். இந்த மன்றத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேராதவர்களும் அடக்கம் (சுமார் மூன்றில் ஒரு பங்கு). இந்த கூட்டங்களில் பெரும்பாலும் முன்வைக்கப்படும் எந்த மசோதாக்களும் நிராகரிக்கப்படுவதில்லை. ஒற்றுமையே வெளிப்படும். இதனாலேயே இந்த அமர்வுகள் வெறும் “ரப்பர் ஸ்டாம்ப்” போன்றவை எனவும், “சர்வாதிகாரத்தின்” வெளிப்பாடு எனவும், மேற்கத்திய நாடுகள் சாடுவது வழக்கம். ஆனால் இது பொய் பிரச்சாரம். இவ்வாறு ஒற்றுமை வெளிப்படுவதற்கு காரணம், இங்கு முன் வைக்கப்படும் மசோதாக்கள் அதற்கு முந்தைய ஓராண்டு முழுதும் மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு, ஆலோசனைகள் பெறப்பட்டு, வேற்றுமைகள் களையப்பட்டு, ஒருமித்த கருத்து உருவாக்கப்படுவதுதான்.
இங்குதான் CPPCC-இன் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இது வெறும் “ஆலோசனை” குழு, அதிகாரம் இல்லை என மேற்கத்திய அறிஞர்கள் கூறுவார்கள். ஆனால் மக்களுக்கான ஜனநாயக முறையில் இதன் முக்கியத்துவம் அவர்களுக்கு விளங்காது. கிராமங்கள் முதல் தேசிய அளவு வரை, ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள இது போன்ற கலந்தாய்வு மன்றங்களில், பல்வேறு குழுக்களின் பிரதிநிதிகள், புரட்சியின் பொழுது விடுதலைக்கு போராடிய எட்டு கட்சிகளின் தலைவர்கள், மத-இன சிறுபான்மை இனத்தவரின் பிரதிநிதிகள், வர்க்க-வெகுஜன-மாதர் அமைப்புகளின் தலைவர்கள், புலம்பெயர் தொழிலாளிகள் பிரதிநிதிகள், அறிஞர்கள் என பல்வேறு தரப்பினரின் பிரதிநிதிகள் அடங்குவர்.தேசிய அளவிலான CPPCC-இல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,100 பேர் பங்கேற்பார்கள். இந்த கலந்தாய்வு மன்றங்களில் மசோதாக்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு, அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்ட பின்னரே, இது தேசிய மக்கள் மன்றம் முன்பு சமர்பிக்கப்படும். இதனால்தான் மசோதாக்கள் நிராகரிக்கப்படுவது அரிது. இப்படி கலந்தாய்வுகள் மூலமே நிறைவேற்றப்படுவதால், சட்டங்களை அமலாக்குவதும் எளிதாக, துரிதமாக, வலுவாக நிகழும்.
இவ்வாறு தேர்தல் ஜனநாயகம் (NPC) மற்றும் கலந்தாய்வு ஜனநாயகம் (CPPCC), இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட்டு, ஒன்றின் குறைபாடுகளை மற்றொன்று நீக்கி, திறம்பட வேலை செய்கின்றன. மக்கள் திரட்டப்பட்டு, அவர்களின் கருத்துகள் உள்வாங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தலைமை வழி நடுத்தும் உண்மையான பூரண மக்கள் ஜனானநாயகத்தை மக்கள் சீனம் பின்பற்றுகிறது.
இந்த ஆண்டின் முக்கிய கொள்கைகள்
புரட்சிக்கு பின், மாவோ காலத்தில் சீனா ஒரு பின்தங்கிய வேளாண் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து, திட்டமிட்ட வளர்ச்சி மூலம் ஒரு நவீன உற்பத்தி சார்ந்த பொருளாதாரமாக உயர்ந்தது. ஆனால் மாறி வந்த உலக சூழலில், அடுத்த கட்ட வளர்ச்சி அடைய திட்டமிட்ட பொருளாதாரம் மட்டும் போதாது என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து கொண்டது. உற்பத்தி சக்திகளை வளர்க்கும் வகையில் உற்பத்தி உறவுகளை மாற்ற, திட்டமிடலோடு சந்தை சக்திகளையும் பயன்படுத்த முடிவு செய்து, “சீர்திருத்தங்கள் மற்றும் பன்னாட்டு பொருளாதாரத்தில் கூடுதல் பங்கேற்றல்” (Reforms and “Opening-Up”) முறையை அமலாக்கியது. இது அமலாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இக்காலத்தில் சீன பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டு, மக்கள் வாழ்வு மேம்பட்டது.
இந்த சூழலில், 2025-ஆம் ஆண்டின் இரண்டு அமர்வுகள் முக்கியத்துவம் பெறுகிறது. ட்ரம்ப் தலைமையில் அமைந்த அமெரிக்க அரசு, தன் ஏகாதிபத்திய சுரண்டல்களுக்காக, உலகின் பல நாடுகள் மீதும் வர்த்தக வரி விதித்து, பன்னாட்டு பொருளாதார பங்கேற்பில் கடும் சிக்கல்களை உருவாக்கி உள்ளது. இதை கணக்கில் கொண்டு, சீன பொருளாதாரத்தை முன்னேற்ற முக்கிய கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
சீன பொருளாதாரத்திற்கான வளர்ச்சி விகித குறிக்கோளை 5%-ஆக நிர்ணயித்துள்ளது. சீன பிரதமர் லீ சியாங்க் அரசாங்க வேலை அறிக்கையை சமர்பித்து உரையாற்றுகையில், பன்னாட்டு சூழலின் சவால்கள் பற்றியும், மாகாண அரசாங்கங்களின் கடன், வேலைவாய்ப்பு போன்ற உள்நாட்டு பிரச்சனைகள் பற்றியும் விவரித்தார். முக்கியமாக, உள்நாட்டு நுகர்வை அதிகரித்து, தொழிற்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் உயர்தர வளர்ச்சி அடைவதே பிரதான கொள்கையாக விவரித்தார்.
தொழிற்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்த வரையில், பொதுத்துறை நிறுவனங்கள் – பொதுத்துறை கல்வி அமைப்புகள் மற்றும் தனியார் துறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தி, தனியார் துறையில் பயனுள்ள முதலீடுகளை ஊக்குவிப்பது தான் சீனாவின் முக்கிய கொள்கையாக இருந்துள்ளது. அரசு சார் ஆய்வு மையங்கள் மற்றும் ஹுவாவே போன்ற தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களின் ஆய்வுகள் தனியார் துறைகளையும் வழி நடத்தி, உலகளாவிய ஆய்வு பணிகளில் சீனாவை இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதன் அங்கமாகவே “இரண்டு அமர்வுகள்” கூட்டத்திற்கு இரண்டு வாரங்கள் முன்பு அதிபர் ஷி ஜின் பிங்க் பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
உள்ளூர் கிராக்கியை ஊக்குவிக்க, கல்வி மற்றும் சுகாதாரத்தில் கூடுதல் முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்களுடன் நேரடியாக பிணைப்பில் உள்ள மாகாண அரசாங்கங்கள் மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களுடனான நிதிப் பகிர்வை விரிவுபடுத்தி, அந்த அரசாங்கங்களின் கடன் சுமையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. “நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்த வேண்டும்” என்ற நவதாராளமய கொள்கைகளை புறந்தள்ளி, மத்திய-மாகாண அரசுகளின் நிதிப் பற்றாக்குறை-ஜி.டி.பி விகிதத்தை 7.7%-லிருந்து, 9% வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டுமானங்கள் மேம்பாட்டு, கிராக்கி உயர்ந்து, சர்வதேச சூழலின் காரணத்தால் மந்த நிலை ஏற்படாமல் தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உற்பத்தி சக்திகள் வளர்ச்சி
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முதன்மை உற்பத்தி சக்தியாகவும், மக்கள் திறமையை முதன்மை வளமாகவும், புதிய கண்டுபிடிப்புகளை வளர்ச்சியின் முதன்மை தூண்டுகோலாகவும் கருத வேண்டும் என்பதே சீனாவின் கொள்கை. இதன் ஒரு முக்கிய அம்சமாக 2015-இல் துவங்கப்பட்டதுதான் “மேக் இன் சைனா” (Make in China – MIC) திட்டம். சீனா எப்போதுமே “உலகின் உற்பத்தி ஆலை” என குறிப்பிடப்பட்டாலும், அது முன்பு பெரும்பாலும் உற்பத்தியின் அடிமட்ட நிலைகளிலேயே நிலவி வந்தது. நவீன அறிவியல் தொழிற்நுட்பம் மற்றும் உற்பத்தி அனைத்தும் மேலை நாடுகள் கையில் இருந்தது. MIC2025 திட்டத்தின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் ரோபோடிக்ஸ், வான்வெளி (aerospace) போன்ற முக்கியமான துறைகளில் 70% பிரதான உற்பத்தி உள்நாட்டில் நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற முக்கிய குறிக்கோள்கள் விவரிக்கப்பட்டன. அந்த திட்டம் இந்த ஆண்டு நிறைவுக்கு வர உள்ள நிலையில், அதன் சாதனைகள் ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பிடப்பட்ட 200-க்கும் அதிகமான குறிக்கோள்களில் 86 சதவீதத்தை சீனா எட்டிவிட்டது. இன்று அதிவேக ரயில்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஆற்றல் தொழிற்நுட்பம் ஆகியவற்றில் சீனாவுக்கு நிகரே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. ரோபோடிக்ஸ், வான்வெளி, விண்வெளி, மருந்துகள், மருத்துவ கருவிகள் போன்ற துறைகளில் மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு விட்டன.
எனினும் சில மிக முக்கிய துறைகளில் சீனா முன்னேற வேண்டி உள்ளது. குறிப்பாக, குறைகடத்தி “சிப்”கள் (Semiconductor chips) உற்பத்தியில், தைவானின் TSMC நிறுவனத்திற்கு நிகராக 5nm மற்றும் 3nm சிப்கள் உருவாக்குவதில் சீனா பின்தங்கி உள்ளது. இதற்கான தொழிற்நுட்பங்கள் மேலை நாடுகளிடம் உள்ளது. சீனாவிற்கு கொடுக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதை உள்நாட்டிலேயே செய்து முடிப்பதில் சீனா பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இதை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்ற அனைத்து உதவிகளும் புரிய சீன அரசு ஆர்வமாக உள்ளது.
மேலும் சில ஆண்டுகளாகவே, புதிய தரத்திலான உற்பத்தி சக்திகளை வளர்ப்பதில் அதிபர் ஷி ஜின் பிங்க் முனைப்பு காட்டி வருகிறார். இதன் அங்கமாகவே செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் இன்று சீனா அசாதாரண சாதனைகளை புரிந்து வருகிறது. “டீப்சீக்”-கை தொடர்ந்து, “பைடு”, “ஆன்ட் குரூப்” என அனைத்து முன்னணி நிறுவனங்களும், அமெரிக்க நிறுவனங்களின் AI மாடல்களை விட சிறந்த மாடல்களை உருவாக்கி வருகின்றனர். இந்த வளர்ச்சிக்கு சீன தன்மையிலான சோசலிச முறை முக்கிய காரணம். உதாரணமாக, “டீப்சீக்”-கை உருவாக்கிய நிறுவனம், பொதுத்துறை கல்வி நிறுவனமான ஜெஜியாங்க் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்துதான் அதன் ஆய்வை நடத்தியது. பொதுத்துறை மூலம் முதலாளித்துவ சந்தையை ஒழுங்குபடுத்தி, அது வெறும் லாப நோக்கில் இல்லாமல், மக்களுக்கு பயன்படச் செய்வதன் பல்லாயிரக்கணக்கான உதாரணங்களில் ஒன்று தான் “டீப்சீக்”.
இவ்வாறு AI வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, அதை பொருளாதார மற்றும் உற்பத்தி வளர்ச்சியுடன் பிணைப்பதற்கான பாதையை வகுத்துள்ளது இந்த ஆண்டின் இரண்டு அமர்வுகள் கூட்டம். ஆனால் இப்படிப்பட்ட AI தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு அதிக மின்சார ஆற்றல் தேவைப்படுவதையும், அதனால் கால நிலை மாற்றம் சார் பிரச்சனைகள் எழுவதையும் சீனா கணக்கில் கொள்கிறது. இதனால் “பசுமை நவீனத்துவம்” என்பதற்கு முக்கியத்துவம் அளித்து, சுற்றுச்சூழல் பாதுகாக்கும் தொழிற்நுட்ப வளர்ச்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரதான துறைகளில் உற்பத்தியை உள்நாட்டில் வளர்த்தெடுப்பது என்பது சீனாவின் இறையாண்மையுடன் தொடர்புடையது. இதனால் தான் மிக நீண்ட கால கடன்கள் அடிப்படையில் இதற்கு 180 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் (குறிப்பாக நிதித் துறையில்) “பொதுத்துறை” பிரதானமாக விளங்கும் சீனா போன்ற சோசலிச அமைப்பில்தான் இப்படிப்பட்ட நீண்ட கால நோக்கிலான வளர்ச்சி சாத்தியம்.
மேலும் தன் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை உலக நாடுகளுடனும் பகிர முன்னெடுப்புகள் தீவிரம் அடைகின்றன. சீனாவின் புகழ் பெற்ற பெல்ட் & ரோட் (BRI) திட்டம் சென்ற ஆண்டுடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்தது. இதன் அடுத்த கட்டமாக, BRI மூலம் வெறும் கட்டுமானங்களை முன்னெடுக்காமல், அடுத்த கட்டமாக உயர்தர வளர்ச்சியில் முனைப்பு காட்ட CPPCC அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக, சீனாவின் ரயில் இணைப்பு தரங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டம் வகுத்துள்ளது.
உற்பத்தி உறவுகள்
உற்பத்தி சக்திகள் வளர்ச்சியின் பயன் அனைவரையும் சென்று சேரும் வகையில் உற்பத்தி உறவுகள் இல்லையென்றால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி குன்றிப் போகும். ஆக, உற்பத்தி உறவுகளை மேம்படுத்துவதில் இரண்டு அமர்வுகள் மிகவும் கவனம் செலுத்தியது.
“சீனா பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அதீத சேமிப்பு மற்றும் முதலீடுகள் கொண்டு வெறும் உற்பத்தி திறன்களை மட்டும் வளர்த்துக் கொண்டே போகிறது. இதை தளர்த்தி, நுகர்வு சார் வளர்ச்சி இல்லையென்றால், பொருளாதாரம் வீழும்” என்று எல்லா ஆண்டும் முதலாளித்துவ அறிஞர்கள் சொல்லி வருவார்கள். ஆனால் அவர்களின் நோக்கம், சீனாவின் பொதுத்துறையை அழித்து, ஏகாதிபத்திய சுரண்டலுக்கு வழிவகை செய்வதுதான். இவர்கள் சொல்வது போல, உள்நாட்டு நுகர்வை விட, ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி என்பது சீனாவில் சுமார் 2005 வரை நிலவியது எனலாம். தொழிலாளர்களின் ஊதியம் உயர, ஏற்றுமதி சார்பு அதிரடியாக குறைந்து, உள்நாட்டு நுகர்வு பன்மடங்கு கூடியது. இன்று உள்நாட்டு சந்தையை நம்பி தான் சீனாவில் நவீன உற்பத்தி நடக்கிறது.
இன்றைய நிலையற்ற சர்வதேச சூழலில், உள்நாட்டு நுகர்வை மேலும் வலுப்படுத்த, இந்த ஆண்டின் இரண்டு அமர்வுகளில் தொழிற்நுட்பத்துடன் சேர்ந்து மக்கள் நல்வாழ்வும் முக்கியத்துவம் பெற்றது. ஏற்றுமதியுடன் சேர்ந்து உள்நாட்டு பொருளாதாரத்தை வளர்த்து, வெளிநாட்டு முதலீடு சார்பை குறைப்பது கவனம் பெற்றது. “முன்னாளில் அதிவேக வளர்ச்சியில் கவனம் செலுத்திய சீனா, இன்று உயர்தர வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது” என்றார் பிரதம சியாங்க். “பொருளாதாரத்தை பெரிதாக்குவதோடு, அதன் பலன் நியாயமாக அனைவருக்கும் சென்று சேர வேண்டும்” என்பதே இதன் பொருள்.இதற்கு உதவும் விதமாக, நுகர்வு பண்டங்களின் விலையை கட்டுக்குள் வைக்க, அதன் உற்பத்தி மேம்பாட்டிற்காக, மிக நீண்ட கால கடன் அடிப்படையில் 40 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைன் பயிற்சி மையங்களுக்கு 2021இல் சீனா கடும் கட்டுப்பாடுகள் விதித்ததை அறிவோம். இதோடு சேர்த்து, இன்று பொதுத்துறை கல்வி மற்றும் சுகாதார செலவினங்களை உயர்த்துவது மூலம், மக்களின் கையிருப்பு வருமானத்தை உயர்த்தி கிராக்கியை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக உற்பத்தி உறவுகளில் பல காலமாக சீனாவிற்கு இருந்து வந்துள்ள சவால், ஊரக பகுதி மேம்பாடு. அதிவேக வளர்ச்சியில் நாற்பது ஆண்டுகள் முனைப்பு காட்டுகையில், ஊரக-நகர்ப்புற ஏற்றத்தாழ்வு கூர்மை அடைந்தது. விகிதாச்சார அளவில் வேளாண்மைக்கான அரசு ஆதரவு குறைந்ததும், உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்ததும், சிறு விவசாயிகள் மீது தாக்கத்தை உண்டாக்கி, தொழிலாளர்-விவசாயி வர்க்கங்களின் ஒற்றுமைக்கே ஆபத்தை விளைவித்தது. இதை உணர்ந்த கட்சி, முக்கிய நடவடிக்கைகள் எடுத்தது. முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோ தலைமையிலான அரசு, 2004இல் “மூன்று ஊரக பிரச்சனைகள்” (வேளாண் உற்பத்தி திறன், விவசாயிகள் வருமானம், ஊரக-நகர்ப்புற விரிசல்) ஆகியவற்றை தீர்க்க முக்கிய கவனம் செலுத்தியது. 2008 உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிக்கு பின், சீன பொருளாதார புத்துயிர்ப்பு ஊரக பகுதி புத்துயிர்ப்பு மூலம் நடந்தது. இந்த பிரதான முரண்பாடு 2017-இல் நடைபெற்ற 19-வது கட்சி மாநாட்டில் முக்கிய விவாதப் பொருளாகி, சோசலிச பாதையை நோக்கிய தொழிலாளர்-விவசாய ஒற்றுமையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. முக்கிய முன்னெடுப்புகள் நிகழ்ந்தன. அரசு ஊரக வாழ்வாதாரம், போக்குவரத்து, தொலைதொடர்பு கட்டுமானங்களை அதிவேகமாக வளர்த்ததன் விளைவாக, ஊரக மக்களின் சொத்து மதிப்பு பத்து மடங்கு உயர்ந்தது. 99% கிராமங்களில் மின்சாரம், குடிநீர், அதிவேக இணையம், சமையல் எரிவாயு வசதிகள் அனைத்தும் உள்ளன. முக்கியமாக, வறுமையை முற்றிலும் ஒழிக்கும் திட்டத்தில் 30 லட்சம் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ஊரக பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தங்கி, பிரச்சனைகளை கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை உருவாக்கினர். இதனால் 2021-இல் கடுமையான வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டதை சீனா அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, ஊரக புத்துயிர்ப்பு திட்டங்களின் அங்கமாக, தானியம் மற்றும் காய்கறி உற்பத்தியில் முழு சுயசார்பை வலியுறுத்தி வருகிறார் ஷி ஜின் பிங். 2022இல் பெரும் அளவிலான நிலங்கள் “நிரந்தர விளைச்சல்” நிலங்களாக அறிவிக்கப்பட்டது. வேளாண்மையில் அறிவியல் வளர்ச்சி பாய்ச்சல் வேகத்தில் நிகழ்கிறது. இந்த ஆண்டு மக்கள் மீண்டும் வறுமைக்குள் செல்லாமல் தடுப்பது, ஊரக தொழில்துறை வளர்ச்சி மற்றும் ஊரக கட்டடத் துறை மேம்பாடு கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் ஊரகப் பகுதிகளில் அடிமட்ட அளவில் கட்சி அமைப்புகளை கட்டி அமைத்து, ஊரக உள்ளாட்சி அமைப்பை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அடுத்து, உற்பத்தி உறவுகளில் அண்மை காலங்களில் எழுந்துள்ள முக்கிய சவால், வீட்டு வசதி. இது அண்மையில் ஏற்பட்ட “ரியல் எஸ்டேட்” நெருக்கடி உடன் தொடர்புடையது. 1980-களுக்கு முன் மக்களுக்கான வீட்டு வசதி வழங்கல் பொறுப்பு முற்றிலும் அரசு கட்டுப்பாட்டில் இருந்தது. அதி தீவிர நகரமயமாக்கல் மத்தியில், மக்களுக்கு வீடுகள் உறுதி செய்ய, தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் லாப நோக்கிலான தனியார் நிறுவனங்களின் ஊடுருவாலால், ஊக வணிகம் உயர்ந்தது – வீடுகளை மக்கள் வெறும் ஒரு “முதலீடாக” வாங்கி, பின் விலை உயர்ந்ததும் விற்பது. “ரியல் எஸ்டேட்” தான் சீனாவில் ஏற்றத்தாழ்வுகளுக்கான முக்கிய காரணியாக உருவெடுத்தது. இதனால் உற்பத்தி சார் துறைகளில் முதலீடுகள் குறைந்தது. இதை உணர்ந்த அரசு, 2019-இல் ரியல் எஸ்டேட் துறை மீது பல கட்டுப்பாடுகள் விதித்தது. ஊக வணிகம் முடக்கப்பட்டதால், எவர்கிரான்டே என்ற ஒரு மாபெரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் திவால் ஆனது. வீடுகள் விலை குறைய, மக்களின் முதலீடு மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பொருளாதாரத்தில் கிராக்கி பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த பிரச்சனையை சமாளிக்க முதலாளித்துவ நாடுகள் உடனே கார்ப்பரேட்டுகளுக்கு உதவி புரிவார்கள். சீனா, மாறாக, பொதுத்துறை நிறுவனங்களை உள்ளே கொண்டு வந்தது. கடந்து ஆண்டு மட்டும் தேசிய அளவில் கட்டட கட்டுமானங்களுக்கு விற்கப்பட்ட நிலங்களில் 80% பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது. முன்னர் தனியார் வீடு விற்பனையாளர்களின் ஆதிக்கம் 65% சதவீதமாக இருந்தது, 2024-இல் 30% சதவீதமாக குறைந்துள்ளது. திவாலாகும் நிலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்கள் எடுத்து நடத்துகின்றன. தனியார் வசம் உள்ள வீட்டுமனை நிலங்களின் எண்ணிக்கை 2018-இல் இருந்ததை விட குறைந்த அளவை எட்டியுள்ளது. இந்த ஆண்டு பொதுத்துறை வங்கிகள் மூலமான நீண்ட கால கடன்கள் என்ற வகையில் மாகாண அரசாங்கங்களுக்கு 600 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்டுமானங்களை மேம்படுத்தி, விற்காத வீடுகளை வாங்கி, அதை குறைந்த விலை வீட்டு வசதிக்காக மக்களுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு சார் பொதுத்துறை நிறுவனங்கள் ஆதிக்கம் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் மீண்டும் இயல்பு நிலை கொண்டு வர நடவடிக்கைகள் தீவிரம் அடைகின்றன.
சோசலிசம் நோக்கிய பயணம்
இவ்வாறு 75 ஆண்டுகளுக்கு மேலான புரட்சிகர ஆட்சியில், திட்டமிட்ட வளர்ச்சி, பொதுத்துறைகளின் தலைமை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களுடனான உயிர்ப்பு மிக்க பிணைப்பு ஆகியவற்றை பயன்படுத்தி, உற்பத்தி சக்திகளை வளர்த்து, உற்பத்தி உறவுகளில் எழும் முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டு, சோசலிச வளர்ந்த சமுதாயம் நோக்கி நடை போடுகிறது சீனா. ஷி ஜின் பிங் கூறியது போல, “சீன தன்மைகள் கொண்ட சோசலிசம்” என்பது சோசலிசம் தான்; வேறொன்றும் இல்லை.
புதிதாக வளரும் நாடுகள், தங்களின் இறையாண்மையை பாதுகாத்து, அதே வேளையில் தங்களின் பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்வையும் வளர்க்க “சீன தன்மைகள் கொண்ட சோசலிசம்” என்பது ஒரு முக்கிய மாற்றுப் பாதையாக விளங்குகிறது. இது அளவு ரீதியாகவும், தன்மை ரீதியாகவும், அதன் மேன்மை நிலையை உணர்த்துகிறது – அளவு ரீதியாக மிக அதிக அளவிலான மக்கள் நவீன சோசலிச சமூகத்தில் வாழ்வது; தன்மை ரீதியாக இது ஏகாதிபத்திய நாடுகள் சுரண்டி கொழுத்தது போல அல்லாமல், அனைவருக்குமான வளர்ச்சியாக உள்ளது. ஷி ஜின் பிங் சொல்வது போல, “சோசலிசம் இறக்கவில்லை. அது தழைக்கிறது. சீனாவின் வெற்றியே இதற்கு ஆதாரம்”. சீனாவின் உச்சபட்ச ஜனநாயக நடவடிக்கையான இந்த ஆண்டின் “இரண்டு அமர்வுகள்” நிகழ்வு இதை நமக்கு மீண்டும் உணர்த்தி உள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
