
இலத்தீன் அமெரிக்காவில் ஒலிக்கும் முழக்கம்! : “ஏகாதிபத்தியம் தோற்பது நிச்சயம்!!”
என். குணசேகரன்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்காவால் கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதை மருந்துக் கடத்தல் காரணமாக இத்தகைய ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக உலகத்தை நம்ப வைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் வரலாற்றை அறிந்தவர்கள் இந்தக் கட்டுக் கதைகளை நம்ப மாட்டார்கள்.
பல நூற்றாண்டுக்காலமாக ஒடுக்குமுறை அங்கு நிகழ்ந்து வருகிறது. வழிமுறைகள் மாறியிருக்கலாம்; அடிமைத்தனமும் காலனித்துவமும், ஏகாதிபத்திய சுரண்டலும் தொடர்கின்றன. இதையே அமெரிக்காவின் வெனிசுலா நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவின் வரலாற்றை அறிவது, தற்போது டிரம்ப் மேற்கொண்டு வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை முழுமையாக புரிந்து கொள்ள உதவிடும்.
1966-இல் கியூபாவில் நடந்த ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மக்களின் ஒற்றுமை மாநாடு (First Tri-continental Conference) நடைபெற்றது. இந்த மூன்று கண்டங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் ஃபிடல் காஸ்ட்ரோ உரையாற்றினார். நிறைவாக, அவருக்கே உரிய தனித்தன்மையோடு, இடி போன்று அவர் முழங்கினார்:“ஏகாதிபத்தியம் தோற்பது நிச்சயம்!”
மூன்று கண்டங்களின் (Tri-continental) பல நூற்றாண்டுக்கால அடிமைத்தனத்திற்கும், சுரண்டலுக்கும் ஆளான மக்களின் குரலாக ஃபிடல் குரல் ஒலித்தது. இன்றுவரை அந்த முழக்கம் ஏற்படுத்திய தாக்கம் அகலவில்லை. மக்களின் உறுதி மிக்க போராட்டங்களும், தியாகங்களும் தொடர்கின்றன.
மானுடம் அடிமைப்பட்டுக் கிடந்த துயர வரலாறுதான் காலனிய, ஏகாதிபத்திய சகாப்தம். கடுமையான பொருளாதார சுரண்டல், படுகொலைகள், வன்முறை வெறியாட்டங்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்கள் நிறைந்த இரத்தக் கறை படிந்த வரலாறு அது. அதிகாரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இடையிலான இடைவிடாத போராட்டமாக அந்த வரலாறு திகழ்கிறது.
குறிப்பாக, ஆசியா,ஆப்பிரிக்கா இலத்தீன் அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்கள், இந்த துயர வரலாற்றின் மையங்களாக இருந்தன. ஏகாதிபத்தியத்தின் அழிப்பு மற்றும் கொடூரமான சுரண்டலின் பரிசோதனைக் கூடங்களாக இவை இருந்தன. இதில், இலத்தீன் அமெரிக்கா ரத்தக்கறைகளாலும், துரோகங்களாலும், வீரம் செறிந்த போராட்டங்களாலும் செதுக்கப்பட்ட ஒரு தனித்துவமிக்க வரலாறு கொண்டது.
காலனிய ஆட்சி- வலிமிகுந்த வரலாற்றுத் தடங்கள்
22 நாடுகளும் 65 கோடி மக்களும் கொண்ட இலத்தீன் அமெரிக்கா, உலக லித்தியத்தில் மூன்றில் இரண்டு பங்கு கொண்டது; அத்துடன், வளமான அமேசான் காடுகள், எண்ணெய் வளம், விவசாய, கனிம வளங்கள் கொண்ட பூமி. இவை, இந்த நாடுகளின் பெருமைக்குரிய வளங்கள் என்றாலும், அவையே ஏகாதிபத்தியம் வேட்டையாடுவதற்கான காரணங்களாகவும் அமைந்தன.
இலத்தீன் அமெரிக்காவின் அடிமை வாழ்வு, 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளிலிருந்து நுழைந்த ஐரோப்பியர்களின் வருகையோடு தொடங்கியது. அவர்கள் நாடுகளை காலனிகளாக அடிமைப்படுத்தினர்; 16-19ஆம் நூற்றாண்டுகளில் தொடர்ச்சியாக அவற்றின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அது மட்டுமல்லாது, இந்த நாடுகளின் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தனர். அங்கு பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பழங்குடி நாகரிகங்களை ஆதிக்க நாடுகள் கொடூரமாக அழித்தன.
ஆஸ்டெக் (Aztec) மற்றும் இன்கா (Inca) போன்ற முன்னேறிய நாகரிகங்கள் கொண்ட பூர்வீகக் குடிகள், ஐரோப்பிய துப்பாக்கிகளாலும், அவர்கள் கொண்டு வந்த பெரியம்மை, தட்டம்மை, சிறுநீரகக் காய்ச்சல் போன்ற நோய்களாலும் அழிக்கக்கப்பட்டன. பழங்குடி மக்களிடையே இருந்த உள்நாட்டுப் பிளவுகளைப் பயன்படுத்தி, பழங்குடிகளை ஆதிக்க நாட்டுப் படைகள் வீழ்த்தினர்.
மெக்ஸிகோவின் ஆஸ்டெக் மக்களை 1521இல் அழித்தனர்; பெரு நாட்டில் இருந்த இன்கா பேரரசை 1533இல் வீழ்த்தினர். போர்த்துகீசியர்கள் உள்நாட்டுப் பிளவுகளைப் பயன்படுத்தி, பிரேசிலில் பல இனக்குழுக்களை முழுமையாக அழித்தனர். இதுபோன்ற அழிப்பு நடவடிக்கைகளால் மக்கள்தொகை சுமார் 90% குறைந்தது. 1520களில் குவத்தெமாலாவில் 20 இலட்சம் அளவில் இருந்த மக்கள் தொகை, 1620களில் 1.3 லட்சமாக குறைந்தது. ஐரோப்பியர்களுக்கு உழைத்திட உழைப்பாளர்களை அனுப்பி வைத்தனர். மதமாற்றம் செய்து அவர்களின் கலாச்சாரத்தை அழித்தனர்.
இலத்தீன் அமெரிக்க மண்ணையே அவர்கள் வெறும் சுரங்கமாக மாற்றினர். அங்கு வெட்டியெடுக்கப்பட்ட தங்கம்,வெள்ளி ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டது; ஆப்பிரிக்கர்கள் மற்றும் பழங்குடிகளை அடிமைகளாக்கி, சுரங்கங்கள், பண்ணைகளை இயக்கினர். பழங்குடிகளை துன்புறுத்தி, கட்டாய வேலை செய்ய வைத்தனர். இதனால் லட்சக்கணக்கானோர் இறந்தனர்.
உலகின் மிகப்பெரிய வெள்ளி ஆதாரமாக இருந்த பொலிவியாவின் போதோஷி சுரங்கத்திலிருந்து 1545-1800-இல் 45,000 டன் வெள்ளி ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டது; கொலம்பியாவின் முவிசா, பெருவின் சிபா பள்ளத்தாக்குகளில் இருந்து பிரம்மாண்டமான அளவு தங்கம் எடுக்கப்பட்டது. இதிலும் இலட்சக்கணக்கான பழங்குடிகள் உழைப்பில் இறந்தனர்.
பழங்குடி மக்கள் அழிக்கப்பட்ட நிலையில், அடிமைகளை வெளியிலிருந்து கொண்டு வந்தனர். அடிமை வணிகம் முக்கிய வணிகமாக இயங்கியது: போர்ச்சுகீசியர்களும், ஸ்பானிஷ்காரர்களும் அடிமை வணிகத்திற்கென்று அட்லாண்டிக் அடிமை வாணிக மையத்தையே அமைத்தனர். போர்ச்சுகீசியர்கள்தான் இதில் முன்னோடி. இங்கிலாந்தும் பின்னர் இதில் இணைந்தது.
ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பேரை 1500-1860 ஆண்டுகளில் அடிமைகளாக அமெரிக்காவிற்கு அனுப்பினர். போர்த்துகீசியர்கள், பிரேசிலுக்கு கரும்புப் பண்ணைகளில் பணியாற்ற 40 இலட்சம் அடிமைகளை கொண்டுவந்தனர். கரீபியன் நாடுகளில் வெள்ளி சுரங்கங்களில் 5 இலட்சம் அடிமைகள் கொண்டு வரப்பட்டனர். ஆதிக்க நாடுகளின் மூலதனப் பெருக்கத்திற்கு அடிமைகளின் வேர்வையும் இரத்தமும் உரமாகப் பயன்பட்டன. ஐரோப்பிய தொழில்வளர்ச்சி செழித்து ஓங்கிட, காலனியாதிக்க சுரண்டல் மிக முக்கிய அடிப்படையாக இருந்தது.
இதன் மற்றொரு விளைவு, இலத்தீன் அமெரிக்கா மிக மோசமான வறுமையில் மூழ்கியது. சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்தது. சமூகத்தில் மேல் தளத்தில் ஐரோப்பியர்கள், அடிமட்டத்தில் பழங்குடிகள், ஆப்பிரிக்கர்கள் என்கிற நிலை ஏற்பட்டது. அடித்தட்டு மக்களுக்கு உரிமைகள், வேலை, கல்வி மறுக்கப்பட்டது. மேல்தளத்தில் இருப்பவர்கள், மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டி ஏற்றம் பெற்று வந்தனர். இந்த நிலை, 1810களில் பெரும் சுதந்திரப் போராட்டங்களுக்கு இட்டுச் சென்றது.
இலத்தீன் அமெரிக்காவில் அடிமைகள் எண்ணற்ற கிளர்ச்சிகளை நடத்தினர், 1791-1804 ஹைதி (Haiti) புரட்சி பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்தை வீழ்த்தி இறையாண்மை கொண்ட சுதந்திர அரசை நிறுவியது. அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஹைதி புரட்சி, உலகத் தாக்கத்தை ஏற்படுத்தியது.’ “ஹைதி மக்கள் ஆதிகாலத்து காட்டுமிராண்டிகள்” என்றார் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட். ‘கறுப்பர்களால் தங்களுக்கென்று ஒரு ஆட்சியை நடத்த முடியாது; அவர்கள் அடிமைகளாக இருப்பதற்கே தகுதியானவர்கள்’ என்பது போன்ற மேற்கத்திய கருத்துக்களைத் தகர்த்து ஒரு புதிய பாதையை ஹைதி புரட்சி உருவாக்கியது.
அமெரிக்காவின் நவீன காலனியாதிக்கம்
ஐரோப்பிய ஆதிக்கம் குறைந்தபோது, அந்த இடத்தைப் அமெரிக்க ஏகாதிபத்தியம் பிடித்துக் கொண்டது.1823-இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் மன்றோ “மன்றோ கோட்பாடு” (Monroe Doctrine) என்று அழைக்கப்படும் ஒரு கோட்பாட்டை அறிவித்தார். இரு அமெரிக்கக் கண்டங்களிலும் அமெரிக்காவிற்கு சிறப்பு உரிமைகள் உள்ளன என்பது இந்த கோட்பாட்டின் அடிப்படை. மன்றோ கோட்பாடு “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே” என்று முழங்கியது. ஆனால் நடைமுறையில் அது “இலத்தீன் அமெரிக்கா அமெரிக்காவிற்கே (USA)” என்பதாக மாறியது.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கும் எந்த ஒரு நாட்டையும் கட்டாயப்படுத்தி, பலவந்தமாக ஆக்கிரமிக்கும் உரிமை அமெரிக்காவிற்கு உண்டு என்று மன்றோ கோட்பாடு அறிவிக்கிறது. 1860-களிலும், பின்பு 1960-களிலும் இந்தக் கொள்கை அடிப்படையில் வரலாறு காணாத அநீதிகள் நிகழ்த்தப்பட்டன.
19-ஆம் நூற்றாண்டில் இராணுவ ரீதியிலான போர்கள், ஆக்கிரமிப்புக்கள் போன்ற பழைய காலனி நடைமுறைகளுக்கு மாறாக, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டன. ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ப, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சந்தைகளைச் சார்ந்து இருக்குமாறு உள்ளூர் பொருளாதாரம் மாற்றியமைக்கப்பட்டது. இலத்தீன் அமெரிக்காவின் வளமான ‘கௌனோ’ (இயற்கை உரம்) முதல் கனிமங்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் வரை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நலன்களுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால் உள்ளூர் மக்களுக்குக் கிடைக்கும் பலன் குறைந்தது. இது கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் மக்களின் வாழ்வாதார வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.
பொருளாதார சுரண்டலுக்கு வெனிசுலாவையே ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.1928ஆம் ஆண்டில் வெனிசுலா உலகின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி நாடாக ஆனது. ஆனால் இந்த ஏற்றுமதியின் பலனை அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கவில்லை. மாறாக, அமெரிக்கக் கம்பெனிகள் பெரும் லாபம் குவித்தன. இந்த நிலை 2003 வரை தொடர்ந்தது. மிக அதிக அளவில் வளங்களைக் கொண்ட இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகள், அந்நிய நாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் செல்வத்தை குவித்தன. ஆனால் உள்நாட்டு மக்கள் மிக மோசமான வறுமையில் வாழ்ந்தனர்.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதாரச் சுரண்டலுக்கு யுனைடெட் புரூட் கம்பெனி (United Fruit Company) ஒரு உதாரணம்.1899இல் உருவான இந்த அமெரிக்க நிறுவனம், மத்திய அமெரிக்காவில் வாழைப்பழ தோட்டங்கள், ரயில்வேக்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை தனது ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. கொஸ்டாரிக்கா, குவத்தமாலா, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் அரசியலையும் அந்த நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அபகரிப்புக்கள் வழியாக 1900இல் 2,12,000 ஏக்கர் நிலம் வைத்திருந்த இந்த நிறுவனம்,1954இல் 6,03,000 ஏக்கராக அதனை விரிவுபடுத்திக் கொண்டது. நில மோசடிகள், அரசுகளை பணத்தால் விலைக்கு வாங்குவது, அமெரிக்க அரசின் சி.ஐ .ஏ (CIA)-வுடன் இணைந்து அரசுகளைக் கவிப்பது என்பதெல்லாம் இந்த நிறுவனத்தின் இயல்பான நடவடிக்கைகள். வாழைப்பழ ஏற்றுமதியை மட்டும் சார்ந்து, உள்ளூர் பொருளாதாரம் இயக்கப்பட்டது. இதனால் வாழ்வதாரங்களுக்கு வேறு வழியற்ற நிலையில் ஏழ்மை தண்டவமாடியது.
அமெரிக்க நலன்களைப் புறக்கணித்து, தாங்கள் நாட்டு நலன்களை மையமாகக் கொண்டு செயல்பட்ட அரசுகள் குறிவைக்கப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை சிஐஏ (CIA) சதித்திட்டங்களை தீட்டி அகற்றியது. ஆட்சிக் கவிழ்ப்புக்கள் இடையறாது அரங்கேறின. 1973-இல் சிலி நாட்டில் மக்கள் தலைவர் சால்வடார் அலெண்டே படுகொலை செய்யப்பட்டார், பினோசெட் என்ற அமெரிக்க கைக்கூலியின் ராணுவ சர்வாதிகார ஆட்சி திணிக்கப்பட்டது. இதுபோன்ற அமெரிக்காவின் வன்முறை வெறியாட்டங்கள் குவாத்தமாலா, நிகராகுவா, பனாமா போன்ற பல நாடுகளில் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கில் இடதுசாரி சிந்தனையாளர்கள், தொழிற்சங்கவாதிகள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர்.
மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமான எதிர்வினையாக இலத்தீன் அமெரிக்கக் கண்டம் முழுவதும் எழுந்தன. 1990-களின் இறுதியில், பொலிவியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, உலக வங்கியின் கடன் பெறுவதற்கான நிபந்தனை அடிப்படையில், அந்நாட்டின் பெரிய நகரமான கொச்சபம்பா நகரின் தண்ணீர் விநியோகம் தனியார்மயமானது.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘பெக்டல்’ நிறுவனத்தின் துணை நிறுவனம் தண்ணீரை விநியோகிக்கும் 40 ஆண்டுக்கால உரிமத்தைப் பெற்றது. ஒப்பந்தம் கையெழுத்தான ஒரு சில வாரங்களிலேயே, தண்ணீர் கட்டணம் சுமார் 35% முதல் 200% வரை உயர்த்தப்பட்டது. வறுமையில் வாடிய மக்கள், மாத வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தண்ணீருக்கே செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதை விட ஒரு கொடுமை, மக்கள் சேமிக்கும் மழைநீரைப் பயன்படுத்துவதற்கும் கட்டணம் விதிக்கப்பட்டது. அது வணிக நலனை பாதிக்குமாம்! ஏகாதிபத்திய ஆணவத்துடன் “வானத்தில் இருந்து விழும் தண்ணீரும் எங்களுக்கே சொந்தம்” என்று அந்த நிறுவனம் பேசியது. ‘இயற்கையின் கொடை விற்பனைக்கு அல்ல’ என்ற முழக்கத்தோடு இலட்சக்கணக்கான மக்களின் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது. இடைவிடாத மக்கள் போராட்டத்தால் பெக்டல் நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது. தண்ணீர் மீண்டும் பொதுச் சொத்தாக அறிவிக்கப்பட்டது.
நிலத்துக்கான ஏராளமான போராட்டங்களும் நடந்தன. பிரேசிலில்நடந்த போராட்டத்தால்தான் லூலா டா சில்வா தலைமையில் இடதுசாரி ஆட்சியே அமைந்தது. சுமார் 3.7 லட்சம் குடும்பங்களுக்கு 1.8 கோடி ஏக்கர் நிலம் பெற்றுத் தரப்பட்டது.
மார்க்ஸின் பார்வை
மார்க்ஸ் “மூலதனம்” நூலில் குறிப்பிடுகிற ஆதி மூலதனத் திரட்டலுக்கு இலத்தீன் அமெரிக்கா களமாக இருந்து வந்துள்ளது. வழக்கமான உழைப்புச் சுரண்டலுடன், அரசு மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலத்தைப் பறிப்பதையும், மக்களை உடைமை ஏதுமற்ற தொழிலாளர்களாக மாற்றுவதையும் காலனியாதிக்க அரசுகள் முழுமூச்சாக மேற்கொண்டன.
சுதந்திரமான விவசாயிகளை நிலத்திலிருந்தும் அவர்களது உற்பத்தி சாதனங்களில் இருந்தும் பிரித்து, நிலமற்ற கூலிகளாக மாற்றிய கொடூரம் லத்தீன் அமெரிக்காவின் அனைத்து நாடுகளிலும் நடந்தது. இது, மார்க்ஸ் சொன்னது போல், இந்த உடைமை பறிப்பு, இரத்த வேட்டையாலும், அழிப்பு நடவடிக்கைகளாலும் நடந்தது. ஐரோப்பாவின் செழிப்புக்கு ஆப்பிரிக்காவின் அடிமை வணிகம், ஆசியாவின் நறுமணப் பொருட்கள் வர்த்தகம், அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் தங்கமும்தான் முக்கிய காரணம் என்பது மார்க்ஸ் கூற்று.
ஐரோப்பியர்களுக்குப் பிறகு அமெரிக்க ஆதிக்கம் அமெரிக்காவில் ஏற்பட்டபோது, ஏகாதிபத்திய சுரண்டல் தீவிரமானது. ஏகாதிபத்திய யுகத்தில் மூலதன ஏற்றுமதி நிகழும் என்றார் லெனின். அமெரிக்க நாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் மூலதன ஏற்றுமதி செய்து, தொழிற்சாலைகளை நிறுவி, மலிவான உழைப்பையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் கொழித்தனர். அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தின. இராணுவ தலையீடுகள் மூலம் நாடுகளை ஒடுக்கின. இவ்வாறு நவீன காலனி ஆதிக்கத்தை அமெரிக்கா கையாண்டது.
இடதுசாரி,முற்போக்கு அரசுகளின் அலை
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பொருளாதார தேசிய உணர்வுகள் அதிகரிக்கத் துவங்கின.1917-இல் சோசலிச சோவியத் யூனியன் உருவான பிறகு, இந்த உணர்வுகள், இடதுசாரி இயக்கங்கள், போராட்டங்கள் வழியாக வெளிப்பட்டன. கியூபாவின் விடுதலையும் சோசலிச விடுதலைக்கான வலுவான உந்துதலை அமெரிக்க மக்களிடம் ஏற்படுத்தியது.
20 ஆண்டுகளுக்கு முன் இடதுசாரி, முற்போக்கு அரசுகளின் அலை எனப்படும் எழுச்சி (Pink Tide) (2018-2022) நிகழ்ந்தது. இந்த அலை 1999-இல் வெனிசுலாவில் ஹியூகோ சாவேஸின் வெற்றியுடன் தொடங்கியது. அடுத்தடுத்து பல இடதுசாரி அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் நலன் காக்கும் அரசுகளாக செயல்பட்டன. பிரேசிலில் ஜனாதிபதி லூலா தலைமையிலான இடதுசாரி ஆட்சி சுமார் 2 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டுள்ளது. பொலிவியாவில் மொரால்ஸ் ஆட்சி, வறுமையை 50% குறைத்தது. அர்ஜென்டினா ஆட்சி ஐ.எம்.எப்-தலையீட்டை நிராகரித்து, தங்கள் சொந்த ஆதாரங்களைப் பயன்படுத்தி, வறுமை – வேலையின்மையை 50% குறைத்தது. எகுவடார் ஆட்சி சமூக நலத் திட்டங்களுக்கான நிதியை இரட்டிப்பாக்கியது.
பிரேசில், மெக்சிகோ, உருகுவே, கொலம்பியா போன்ற நாடுகளில் இடதுசாரி ஆட்சிகள் இன்றும் தொடர்கின்றன. எனினும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும் உள்நாட்டு வலதுசாரிககளைத் தூண்டி விடும் நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.
இடதுசாரி, முற்போக்கு அரசுகளின் அலை எனப்படும் எழுச்சி தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி குறைவு, புலம்பெயர்வு, அமரிக்காவின் பொருளாதார தடைகள் போன்ற பிரச்சனைகளால் ஒரு பகுதி மக்கள் வலதுசாரி, பிற்போக்கு சக்திகளுக்கு இரையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏகாதிபத்தியவாதிகள் இதை நன்கு பயன்படுத்தி வருகின்றனர். 2025-இல் சிலி, எக்வடார், பொலிவியா போன்ற நாடுகளில் நடந்த தேர்தல்களில் வலதுசாரிகள் வெற்றி பெறுள்ளனர்.
வீரம் செறிந்த வரலாறு முன்னேறும்
எவ்வளவு கடுமையான ஒடுக்குமுறை இருந்தாலும், அவற்றைத் தீரமாக எதிர்கொண்டு, எண்ணற்ற போராட்டங்களை நடத்துவதே இலத்தீன் அமெரிக்க மண்ணின் வீரம் செறிந்த வரலாறு. ஐரோப்பியர்களிடமிருந்து விடுதலை பெறப் போராடிய சிமோன் பொலிவர், சான் மார்ட்டின் போன்ற தலைவர்கள் தலைமையிலான போராட்டங்கள் பிற்காலத்தில் இடதுசாரி எழுச்சிகளை வலுப்படுத்தின.
விரிந்த பரந்த மக்கள் ஒற்றுமையே ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ளும் வலுவான ஆயுதம் என்ற முதன்மையான பாடத்தை இந்த வரலாறு உணர்த்துகிறது. ஒற்றுமையின்மைதான் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது. வலதுசாரி சக்திகளை ஊக்கப்படுத்தி, பெரும் நிதியை அவர்களுக்கு அளித்து, இடதுசாரி அரசுகளை வீழ்த்தவும், இடதுசாரி அரசுகளுக்கு அவதூறு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. இடதுசாரி அமைப்புகளின் உருக்கு போன்ற ஒற்றுமையே எதிரியின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்கும்.
வரையறுக்கப்பட்ட, இடதுசாரி மாற்றுக்களின் அடிப்படையில் மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும். நவதாராளமய நெருக்கடி சூழலில், ஏகாதிபத்தியம் புதிய வடிவங்களை எடுத்துள்ளது. சர்வதேச நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி (World Bank) அறிவுரைகளை நிராகரித்து, சுய சார்பு பாதையில் செல்ல வேண்டும். இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படாமல், மக்களுக்கே சொந்தம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
பொலிவியாவின் தண்ணீர் போர் (Water War), நிலமற்ற விவசாயிகளின் போராட்டம் போன்ற வர்க்கப் போராட்டங்களே மாற்றத்தை சாதிக்கும் என்பதில் உறுதிப்பாடு வேண்டும். வெனிசுலா, பொலிவியா, பிரேசில் போன்ற நாடுகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இடதுசாரி எழுச்சிகள் நீடிக்க வேண்டுமெனில், இலத்தீன் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் ஒருமைப்பாடு காண வேண்டும்.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒருமைப்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும். பிரிக்ஸ் போன்ற பிராந்தியக் கூட்டமைப்புகளும் தெற்குலக நாடுகளின் ஒற்றுமையும் பலப்படுத்தப்பட வேண்டும்.
ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் சே குவாரா தலைமையில் வெற்றி பெற்ற கியூபப் புரட்சி, சோசலிச அரசை உருவாக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்தது. கல்வி, மருத்துவம் மற்றும் சமத்துவத்தில் கியூபா இன்றும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இன்றுள்ள கடுமையான சூழலிலும் சோசலிசம் காக்க மக்கள் உறுதிபூண்டுள்ளனர். சோசலிச இலட்சியம் இலத்தீன் அமெரிக்க மக்களின் தொலைநோக்கு இலட்சியப் பார்வையாக நிலைத்திருக்க வேண்டும். கியூபப் புரட்சி உணர்த்தும் படிப்பினையும் .
ஏகாதிபத்தியம் என்பது நிலங்கள், வளங்கள் ஆக்கிரமிப்பு மட்டுமல்ல; அது ஒரு பண்பாட்டுச் சிதைப்பு; அரசியல் பொருளாதார இறையாண்மையையும், மனித மாண்புகளையும் நசுக்கும் வன்முறை அமைப்பு. இது தகர்க்கப்பட வேண்டும். “ஏகாதிபத்தியம் தோற்பது நிச்சயம் ” என்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் முழக்கம், அரசியல் முழக்கம் மட்டுமல்ல; அது பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்தக் குமுறலின் எதிரொலி. இந்த வலுவான நம்பிக்கை அடித்தளத்துடன் இலத்தீன் அமெரிக்க மக்களின் வீரம் செறிந்த வரலாறு முன்னேறும்!
You may also like
1 comment
Leave a ReplyCancel reply
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

உலகம் முழுவதும் வெகுண்டெழும் தகவல் தொழில்நுட்பம் புதிய தலைமுறைகளின் சிந்தனை மாற்றத்திற்கு வழிவகுத்தது காஸ்ட்ரோ அவர்களின் கூற்றை முன்னெடுக்கும்..