
அதி-ஏகாதிபத்திய காலத்தில் ஆப்பிரிக்க ஒற்றுமை எனும் நீண்ட கால வழிகாட்டி
விஜய் பிரசாத் & மிக்கேலா எர்ஸ்காக்
1963 ஜனவரியில், அடிஸ் அபாபாவில் (ஏத்தியோபியா தலைநகர்) ஆப்பிரிக்கத் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய கானாவின் முதல் ஜனாதிபதி குவாமே ந்க்ரூமா, ஆப்பிரிக்க கண்டம் ஒற்றுமையுடன் இல்லாவிட்டால் அரசியல் சுதந்திரம் பலவீனமாகவே இருக்கும் என்று எச்சரித்தார். ஆப்பிரிக்காவின் புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் காலனித்துவ ஆட்சியின் கொடிகளை இறக்கின; ஆனால் ஆதிக்கத்தின் கட்டமைப்புகள் அப்படியே இருந்தன. வெளிநாட்டு நிறுவனங்கள் கனிம வளங்களைக் கட்டுப்படுத்தின, சர்வதேச நிதி நிறுவனங்கள் பொருளாதாரக் கொள்கையை வடிவமைத்தன, முன்னாள் காலனித்துவ சக்திகள் இராணுவ செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டன. சுதந்திரம் என்பது இறையாண்மை மற்றும் கண்ணியத்திற்கான நீண்ட போராட்டத்தின் முதல் படி மட்டுமே என்று ந்க்ரூமா வாதிட்டார்.
ஆறு தசாப்தங்களுக்கு பின்னும், அவரது எச்சரிக்கை ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் எதிரொலிக்கிறது. காலனித்துவ நிர்வாகங்கள் அகற்றப்பட்டதால் ஏகாதிபத்திய சக்தியின் வடிவங்கள் வழிமுறைகள் மாறிவிட்டன. ஆயினும்கூட, கடன் ஆட்சிகள், சமமற்ற வர்த்தக கட்டமைப்புகள், இராணுவ கூட்டாண்மைகள், வெளிநாட்டு இராணுவ தளங்கள் மற்றும் கையளவு நாடுகள் மற்றும் நிறுவனங்களில் தொழில்நுட்ப மற்றும் நிதி சக்திகளின் குவிப்பு மூலம் செல்வச் சுரண்டல் தொடர்கிறது. ஏகாதிபத்திய பேரரசின் சொல்லாடல், ‘நாகரிகம்’ என்பதிலிருந்து ‘வளர்ச்சி’ என்றும், காலனித்துவ நிர்வாகத்திலிருந்து பாதுகாப்பு ஒத்துழைப்பு என்றும், “பாதுகாப்பின் கீழ் உள்ள பிரதேசங்கள்” என்பதிலிருந்து “பாதுகாப்பு கூட்டாண்மைகள்” என்றும் மாறிவிட்டது. ஆனால் பல கோடி ஆப்பிரிக்கர்களுக்கு, அன்றாட நிதர்சன அனுபவங்கள் மாறாமல் உள்ளது: அநேக செல்வம் ஆப்பிரிக்கா கண்டத்தை விட்டு வெளியேறுகிறது, அதே நேரத்தில் வறுமை, வாழ்வாதார பாதுகாப்பின்மை மற்றும் வளர்ச்சியின்மை நீடிக்கிறது.
இந்த பின்னணியில், ஆப்பிரிக்க ஒற்றுமை (பான்-ஆப்பிரிக்கனிசம்) ஒரு வரலாற்று நினைவாக மட்டுமல்ல, ஒரு அரசியல் தேவையாக மீண்டும் எழுந்துள்ளது. ஆப்பிரிக்கா முழுவதும், ஒரு புதிய தலைமுறை பழைய கேள்விகளை மீண்டும் கேட்கிறது. அரசியல் இறையாண்மையை பொருளாதார இறையாண்மையாக எவ்வாறு மாற்றுவது? கண்டத்தின் வளங்களை அதன் மக்களின் நலனுக்காக எவ்வாறு பயன்படுத்துவது? இன்றும் அதிகாரத்தின் ஆழமான ஏற்றத்தாழ்வுகளால் கட்டமைக்கப்பட்ட உலகில் ஆப்பிரிக்கா எவ்வாறு ஒரே குரலில் பேச முடியும்? இந்த கேள்விகள் பான்-ஆப்பிரிக்க சிந்தனையின் சமகால மறுமலர்ச்சியின் மையத்தில் உள்ளன.
ந்க்ரூமாவும் பான்-ஆப்பிரிக்க பார்வையும்
பான்-ஆப்பிரிக்கனிசம், அடிமைத்தனம், காலனித்துவம் மற்றும் இன ஆதிக்கத்திற்கு எதிரான நீண்ட போராட்டத்திலிருந்து உருவானது. மேற்கு இந்தியா தீவுகள், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிலேயே கூட, ஆப்பிரிக்கர்களின் மீதான ஒடுக்குமுறை என்பது உள்ளூர் காரணங்களால் மட்டும் அல்ல;அது உலகளாவிய முன்னேற்றங்களுடன் தொடர்புடையது என்பதைப் புரிந்துகொண்ட மக்களிடையே பான்-ஆப்பிரிக்கனிசம் பிறந்தது. இந்த இயக்கம் சுரண்டலின் உலகளாவிய அமைப்பை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஒரு அரசியல் மற்றும் அறிவுசார் சமூகத்தை உருவாக்க முயன்றது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பான்-ஆப்பிரிக்கனிசம், ஆப்பிரிக்க விடுதலை இயக்கங்களில் அதன் மிக சக்திவாய்ந்த அரசியல் வெளிப்பாட்டைக் கண்டது. குவாமே ந்க்ரூமா, பாட்ரிஸ் லுமும்பா, அஹ்மத் பென் பெல்லா, ஜூலியஸ் நைரேரே மற்றும் அமில்கார் கப்ரா போன்ற தலைவர்கள், காலனித்துவம் என்பது தனிப்பட்ட ஆக்கிரமிப்புகளின் தொகுப்பாக இல்லாமல் ஒரு அமைப்பாக செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டனர்.
ந்க்ரூமாவை பொறுத்தவரை, ஒற்றுமை இல்லாத சுதந்திரம் ஒரு ஆபத்தான மாயை. அவரது பகுப்பாய்வில், காலனித்துவ எல்லைகள், இந்தக் கண்டத்தை டஜன் கணக்கான, ஒப்பீட்டளவில் பலவீனமான நாடுகளாகப் பிரித்தன, அதே நேரத்தில் உலக முதலாளித்துவத்தின் முக்கிய மையங்கள் கண்டத்திலும் மற்றும் சர்வதேச அளவிலும் செயல்பட்டன. பிளவுபட்ட ஆப்பிரிக்கா வெளிச் சூட்சமங்களின் ஆபத்திலேயே இருக்கும். மாறாக, ஒரு ஐக்கிய ஆப்பிரிக்கா அதன் மகத்தான இயற்கை வளங்கள், உற்பத்தித் திறன்கள் மற்றும் மனித திறமைகளை கூட்டு வளர்ச்சிக்கு அணிதிரட்ட முடியும்.
இந்த பார்வை ந்க்ரூமாவின் கண்ட அரசியல் ஒன்றியத்திற்கான அழைப்பில் அதன் உச்ச வெளிப்பாட்டை அடைந்தது. அவர் பொது அமைப்புகள், ஒருங்கிணைந்த திட்டமிடல், பகிரப்பட்ட தொழில்துறை உத்திகள் மற்றும் கூட்டு பாதுகாப்பு வழிமுறைகளை ஆதரித்தார். பல ஆப்பிரிக்கத் தலைவர்கள் ஒத்துழைப்பை ஆதரித்தாலும், தேசிய இறையாண்மையின் அம்சங்களை கண்டத்தின் அமைப்புகளுக்கு விட்டுக்கொடுக்க சிலர் மட்டுமே தயாராக இருந்தனர். இதன் விளைவாக ஒரு சமரசம் உருவானது – ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு உருவானது. இது ஒரு முக்கியமான சாதனையாகும் – ஆனால் ந்க்ரூமாவின் லட்சியங்களை அது எட்டவில்லை.
தயக்கத்தின் விளைவுகள் அடுத்த தசாப்தங்களில் வெளிப்பட்டன. 1980களின் கடன் நெருக்கடி ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை சர்வதேச நாணய நிதியம் (IMF) தலைமையிலான “சீர்திருத்த” திட்டங்களின் பலத்தின் கீழ் கொண்டு வந்தது. பொதுத்துறை அமைப்புகள் பலவீனமடைந்தன, அரசு தலைமையிலான வளர்ச்சித் திட்டங்கள் கலைக்கப்பட்டன, மூலோபாய தொழில்கள் தனியார்மயமாக்கப்பட்டன, மற்றும் விவசாய அமைப்புகள் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பிற்கு பதிலாக ஏற்றுமதி சந்தைகளுக்கு சேவை செய்தன. அரசியல் விடுதலையின் வாக்குறுதி பொருளாதார சார்புநிலையின் யதார்த்தத்தை எதிர்கொண்டது. அந்த சகாப்தமே, ந்க்ரூமா அழைத்தது போல, நவீன காலனித்துவம் என்று வரையறுக்கும்படியாக மாறியது.
புதிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மனநிலை
சமீபத்திய ஆண்டுகளில், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் முன்னேற்றம் உருவாகியுள்ளது. வெளிநாட்டு இராணுவ செல்வாக்கு குறித்த மக்கள் அதிருப்தி தீவிரமடைந்துள்ளது -குறிப்பாக சஹேல் பிராந்தியத்தில். சஹேல் அரசுகளுக்கான கூட்டணியைச் சேர்ந்த மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் போன்ற நாடுகள் வெளிநாட்டு இராணுவ இருப்புக்கு எதிராக வெகுஜன மக்கள் ஆர்ப்பாட்டங்களைக் கண்டன. முன்னாள் காலனித்துவ சக்திகள் மற்றும் அவற்றின் கூட்டாளிகளுடனான பல கால பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பற்றி போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பல ஆண்டுகளாக இராணுவ கூட்டாண்மைகள் இருந்தபோதிலும், பாதுகாப்பின்மை குறைவதற்கு பதிலாக ஆழமடைந்துள்ளது. ஆயுதம் தாங்கிய குழுக்கள் தொடர்ந்து செயல்படுகின்றன, பொருளாதார நிலைமைகள் கடினமாகவே உள்ளன, மற்றும் பொது அதிருப்தி வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிகளின் முக்கியத்துவம் குறிப்பிட்ட அரசாங்கங்கள் அல்லது இராணுவ மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது. அவற்றின் மையத்தில் ஒரு பரந்துபட்ட அரசியல் உணர்வு உள்ளது: இறையாண்மைக்கான கோரிக்கை.
சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக வெளிநாட்டுப் படைகள் ஆப்பிரிக்க மண்ணில் ஏன் இருக்கின்றன என்று பல சாதாரண குடிமக்கள் அதிகளவில் கேட்கிறார்கள். முக்கிய முடிவுகள் ஏன் பெரும்பாலும் ஆப்பிரிக்காவிற்கு வெளியே எடுக்கப்படுகின்றன? யுரேனியம், தங்கம், எண்ணெய் மற்றும் விவசாயத் திறன் நிரம்பியுள்ள நாடுகள் ஏன் கடுமையான வளர்ச்சி சவால்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றன? எனவே இறையாண்மை என்பது அரசியலில் முக்கிய பேசுபொருளாக திரும்பியுள்ளது. இந்த உணர்வு சஹேல் பகுதியில் மட்டும் முடிந்துவிடவில்லை. கண்டம் முழுவதும், வெளிநாட்டு இராணுவ தளங்கள், கடன் சார்பு, வளச் சுரண்டல் மற்றும் சமமற்ற பொருளாதார உறவுகள் குறித்த விவாதங்கள் அதிக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கென்யாவில், வெளிநாட்டு செல்வாக்கு குறித்த விவாதங்கள் பெரும்பாலும் கடன், உள்கட்டமைப்பு நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கை குறித்த விவாதங்கள் மூலம் எழுகின்றன. தெற்கு ஆப்பிரிக்காவில், காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாற்று நினைவுகள் சமகால அரசியல் விவாதத்தை தொடர்ந்து வடிவமைக்கின்றன. வட ஆப்பிரிக்காவில், பொருளாதார சார்பு குறித்த கேள்விகள் வளர்ச்சி குறித்த விவாதங்களுக்கு மையமாகவே உள்ளன. குறிப்பிட்ட சூழல்கள் வேறுபடுகின்றன, ஆனால் அவற்றின் வழியாக ஒரு பொதுவான பிணைப்பு உருவாகிறது.
நிரந்தர சார்புநிலை மூலம் வளர்ச்சி அடைய முடியும் என்ற கருத்தை பல ஆப்பிரிக்கர்கள் அதிகளவில் நிராகரிக்கிறார்கள். அவர்கள் படிநிலை அல்லாமல் சமத்துவத்தின் அடிப்படையிலான உறவுகளைத் தேடுகிறார்கள். மேலும் அவர்கள் அடிபணிதல் இல்லாமல் ஒத்துழைப்பைத் தேடுகிறார்கள். இது அந்நிய நாடுகளுக்கு எதிரான விரோதப் போக்கைக் குறிக்கவில்லை. மாறாக, ஆப்பிரிக்கா தனது சொந்த முன்னுரிமைகளைத் தீர்மானிக்க வேண்டும் என்ற வளர்ந்து வரும் வலியுறுத்தலை இது பிரதிபலிக்கிறது. அவர்களின் கோரிக்கை தனிமைப்படுத்துதல் அல்ல – அது கண்ணியம்.
இன வெறுப்பு: பான்-ஆப்பிரிக்கனிசத்திற்கு எதிரானது
ஆயினும்கூட, ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வின் இந்த மறுமலர்ச்சி ஆபத்துகளைக் கொண்டுள்ளது. காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறு எதிர்ப்பு வெவ்வேறு திசைகளில் நகர முடியும் என்பதைக் காட்டுகிறது. ஒரு பாதை ஒற்றுமை மற்றும் விடுதலைக்கு இட்டுச் செல்கிறது, மற்றொன்று பிரிவினை மற்றும் வெறுப்புக்கு இட்டுச் செல்கிறது. பான்-ஆப்பிரிக்கனிசம் எப்போதும் ஆதிக்க அமைப்புகளுக்கு எதிரான எதிர்ப்பிற்கும் மக்களுடனான விரோதத்திற்கும் இடையில் வேறுபடுத்திப் பார்த்துள்ளது. இந்த வேறுபாடு முக்கியமானது.
நவீன வரலாறு முழுவதும், பொருளாதார நெருக்கடி காலங்கள் பெரும்பாலும் இன வெறுப்பு எதிர்வினைகளை உருவாக்கியுள்ளன. புலம்பெயர்ந்தோர், தாங்கள் உருவாக்காத பிரச்சனைகளுக்கு பலிகடா ஆகிறார்கள் – அண்டை நாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்கள் வேலையின்மைக்கு குற்றம் சாட்டப்படுகிறார்கள், மற்றும் அகதிகள் சமூக விரக்தியின் இலக்குகளாக மாறுகிறார்கள். அரசியல் ஆதிக்கவாதிகள் சில சமயங்களில் இந்த கதைகளை ஊக்குவிக்கின்றனர். ஏனெனில் அவை ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டலின் ஆழமான மூலங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புகின்றன. இத்தகைய போக்குகள் உலகம் முழுவதும் அவ்வப்போது எழுகின்றன – ஆப்பிரிக்காவிலும் கூட.
ஆனால் இன வெறுப்பு பான்-ஆப்பிரிக்கனிசத்தின் கொள்கைகளுக்கு அடிப்படையாகவே முரணானது. பான்-ஆப்பிரிக்கனிசம், அடிமைத்தனம், காலனித்துவம், இன முதலாளித்துவம் மற்றும் அவற்றிற்கெதிரான எதிர்ப்பு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட பொதுவான வரலாறுகளை ஆப்பிரிக்கர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற அங்கீகாரத்துடன் தொடங்குகிறது. இது செயற்கையான பிளவுகளை வலுப்படுத்துவதற்கு பதிலாக அவற்றை கடக்க முயல்கிறது. காலனித்துவ ஆட்சி பெரும்பாலும் இனப் பிளவு, பிராந்தியப் பிரிவினை மற்றும் சமூக வேறுபாடுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நம்பியிருந்தது. பான்-ஆப்பிரிக்கனிசம் அந்த பிளவுகளை களையவே உருவானது. ஒரு ஆப்பிரிக்கத் தொழிலாளி உலகளாவிய சுரண்டல் அமைப்புகளால் உருவாக்கப்பட்ட நிலைமைகளுக்கு மற்றொரு ஆப்பிரிக்கத் தொழிலாளியைக் குற்றம் சாட்டும்போது, ஒற்றுமையின் தர்க்கம் பிளவுபடுத்துதலின் தர்க்கத்தால் மாற்றப்படுகிறது. அதனால்தான் பான்-ஆப்பிரிக்க சிந்தனையாளர்கள் தேசிய, இன, மொழி மற்றும் மத எல்லைகள் கடந்த ஒற்றுமையை தொடர்ந்து வலியுறுத்தினர். எதிரி ஒருபோதும் புலம்பெயர்ந்தவர் அல்ல, அது சுரண்டல் மற்றும் ஆதிக்கம். மனிதர்களையும் இயற்கை வளங்களையும் மூலதன குவிப்புக்கான கருவிகளாக மாற்றிய அமைப்புதான் எதிரி. இப்போது தென்னாப்பிரிக்காவில் நடப்பது போல, பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி கோபத்தை செலுத்தும் ஒரு அரசியல், ஏகாதிபத்திய சக்தி வரலாற்று ரீதியாக வளர்த்த அதே பிளவுகளை மீண்டும் உருவாக்குகிறது.
பான்-ஆப்பிரிக்கனிசத்தின் சாரம்
அப்படியானால், இன்று பான்-ஆப்பிரிக்கனிசத்தின் நீடித்த பொருள் என்ன? அதன் அடிப்படையில், பான்-ஆப்பிரிக்கனிசம் ஒரு முழக்கமோ அல்ல, ஒரு தந்திர கட்டமைப்போ அல்ல. இது வரலாற்று அனுபவத்தில் வேரூன்றிய மனித விடுதலைக்கான ஒரு கோட்பாடு. இது ஒரு எளிய அனுபவத்திலிருந்து தொடங்குகிறது: ஆப்பிரிக்காவின் சவால்களை தேசிய எல்லைகளுக்குள் மட்டும் புரிந்து கொள்ள முடியாது. வளச் சுரண்டல், மூலதனத்தின் இயக்கம், இராணுவ கூட்டணிகளின் செயல்பாடு, கடனின் இயக்கவியல் மற்றும் உலக வர்த்தகத்தின் கட்டமைப்புகள் அனைத்தும் தனிப்பட்ட நாடுகளின் எல்லைகளுக்கு அப்பால் செயல்படுகின்றன. எனவே எதிர்வினையும் விரிவானதாக இருக்க வேண்டும். பான்-ஆப்பிரிக்கனிசம் தொழில்துறை வளர்ச்சி, அறிவியல் ஆராய்ச்சி, உணவு இறையாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கண்டம் முழுவதுமான ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுகிறது. ஆப்பிரிக்காவின் மகத்தான செல்வம் தொலைதூர நிதி மையங்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்கு முன் அதன் மக்களின் தேவைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.
பான்-ஆப்பிரிக்கனிசம் ஒரு கலாச்சார திட்டமும் கூட. பல நூற்றாண்டுகால இன ஆதிக்கத்திற்குப் பிறகு வரலாற்று நம்பிக்கையை மீட்டெடுக்க இது முயல்கிறது. ஆப்பிரிக்காவை சார்பு நிலை கொண்டதாக, குறைபாடுடையதாக அல்லது வெளிப்புற வழிகாட்டுதல் தேவைப்படும் ஒன்றாக சித்தரிக்கும் கதைகளை இது எதிர்க்கிறது. ஆப்பிரிக்க கண்டம் அறிவுசார் மரபுகள், அரசியல் அனுபவங்கள் மற்றும் தன் சொந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் திறன் கொண்ட சமூக திறன்களைக் கொண்டுள்ளது என்று இது உறுதிப்படுத்துகிறது. கானாவின் சோசலிஸ்ட் இயக்கத்தின் க்வேசி பிராட் ஜூனியர் (Kwesi Pratt Jr) சமீபத்தில் தனது சக்திவாய்ந்த புத்தகமான ‘Reparations’ (இழப்பீடு) (இன்கானி புக்ஸ், 2026) இல் வெளிப்படுத்திய இழப்பீட்டுக் கோட்பாடு, பல நூற்றாண்டுகளாக திருடப்பட்ட ஆப்பிரிக்க வளங்கள் பற்றி மட்டுமல்ல, திருடப்பட்ட ஆப்பிரிக்க மனிதநேயம் மீதான கோரிக்கையாகும்.
பான்-ஆப்பிரிக்கனிசம் இறையாண்மையை ஒரு கற்பனையான சட்டக் கொள்கையாக அல்லாமல், ஒரு பொருளியல் நிலையாகப் புரிந்துகொள்கிறது. ஒரு நாடு தனது மக்களுக்கு உணவளிக்க முடியாவிட்டால், தனது குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க முடியாவிட்டால், தனது வளங்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அல்லது தனது வளர்ச்சி முன்னுரிமைகளைத் தீர்மானிக்க முடியாவிட்டால், அது உண்மையாகவே இறையாண்மை கொண்டதல்ல. பொருளாதார மாற்றம் இல்லாத அரசியல் சுதந்திரம் முழுமையற்றதாகவே இருக்கும். இந்த புரிதல் ந்க்ரூமாவின் காலத்தில் இருந்ததைப் போலவே இன்றும் பொருத்தமானது.
சமகால உலகம் ஆழமான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. பழைய அதிகார மையங்கள் புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. புதிய பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகள் உருவாகி வருகின்றன. பனிப்போர் பிந்தைய காலத்தின் தென்பட்ட நிலைத்தன்மை மறைகின்றன. இந்த சூழலில், ஆப்பிரிக்கா ஒரு முக்கிய புள்ளியில் நிற்கிறது. ஒரு பாதை, புது வகையான பிளவுபடுத்துதல், தீவிரமடைந்த போட்டி மற்றும் தொடர்ச்சியான சார்புநிலைக்கு இட்டுச் செல்கிறது. மற்றொன்று, ஒத்துழைப்பு, இறையாண்மை மற்றும் கூட்டு வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. பான்-ஆப்பிரிக்கனிசம் இரண்டாவது பாதையின் லட்சிய வெளிப்பாடாகவே உள்ளது. இது கடந்த காலத்திற்கான ஏக்கம் அல்ல, எதிர்காலத்திற்கான ஒரு வழிகாட்டி. ந்க்ரூமா தலைமுறையை உயிர்ப்பித்த மையக் கேள்வி ஒருபோதும் மறைந்துவிடாததால் இது நீடிக்கிறது: ஆப்பிரிக்காவின் மகத்தான செல்வம், படைப்பாற்றல் மற்றும் உழைப்பு மற்றவர்களின் செழுமைக்காக அல்லாமல், அதன் சொந்த மக்களின் செழிப்புக்காக எவ்வாறு அணிதிரட்டப்பட முடியும்? அந்தக் கேள்விக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை. ஒற்றுமை மூலம் மட்டுமே அதற்கு பதிலளிக்க முடியும் என்று பான்-ஆப்பிரிக்கனிசத்தின் வரலாறு அறிவுறுத்துகிறது.
தமிழில் : அபிநவ் சூர்யா
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply