
போராட்டமே சுரண்டலை உடைத்தெறியும் கருவி!
அருண் குமார்
2026ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முக்கியமானதொரு மாதமாக அமைந்தது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியா அதன் ஜென்சீ தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்- மாணவர்களின் கண்டனப் போராட்டங்களை எதிர்கொண்டது. அதேநேரத்தில், மிகப் பழைய ஜனநாயக நாடாகத் திகழும் அமெரிக்கா தனது விடுதலையின் 250வது ஆண்டைக் கொண்டாடியது. இந்தப் போராட்டங்களும் கொண்டாட்டங்களும் ஜனநாயகத்தின் மீதான நமது கவனத்தை ஈர்த்ததோடு, இவ்விரு நாடுகளிலும் ஜனநாயகம் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதையும் எடுத்துக் காட்டின. மிக நீண்ட காலமாகவே உலகெங்கும் ஜனநாயகத்தின் பாதுகாவலன் தான்தான் என்று அமெரிக்கா கூறிக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் 250வது விடுதலைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்: “பூமியில் அமைதி மற்றும் நீதிக்கான மிகப்பெரிய சக்தியாக இந்த நாடு இருந்து வருகிறது. கடந்த நூற்றாண்டில் கொடுங்கோலர்களைத் தோற்கடித்தோம்; தீமையை அழித்தோம்; மீண்டும் மீண்டும் சுதந்திரத்தைக் காப்பாற்றினோம்.”
அமெரிக்காவின் வரலாறும் தலையீடும்
ட்ரம்ப்பின் இந்த ஒரே ஒரு அறிக்கையே தனது போர்களையும், ஆக்கிரமிப்புகளையும், கைப்பற்றல்களையும், இதர நாடுகளின் இறையாண்மை விஷயங்களில் தலையீடு செய்யும் (அமெரிக்க) ஏகாதிபத்தியத்தால் பரப்பப்படும் பொய்களுக்கான சான்றிதழ் ஆகும். ட்ரம்ப்பே ஒப்புக்கொள்வது போல, தனது வரலாற்றின் பெரும்பகுதியான காலத்தில் அமெரிக்கா பின்பற்றி வந்தது இத்தகையதொரு கொள்கையைத் தான். ஒரு சில புள்ளிவிவர இயல் நிபுணர்களின் கூற்றுப்படி, அமெரிக்காவின் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் 93 சதவீத காலத்தை போர்களை நடத்துவது, இதர நாடுகளில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவது அல்லது தனக்கு எதிரான சக்திகளை அழித்தொழிப்பது ஆகிய செயல்களில்தான் செலவழித்துள்ளது. பாலஸ்தீனத்திலோ அல்லது ஈரானிலோ நாம் இன்று காண்கின்றவை புதிதான ஒன்றல்ல. எப்போதும் செய்து வருவதைத்தான் அமெரிக்கா இப்போதும் செய்து வருகிறது. அதாவது, தனக்கு எதிராக நிற்கின்ற நாடுகளை அழிப்பது.
2026ஆம் ஆண்டில் மட்டுமே பல நாடுகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் அமெரிக்கா வெளிப்படையாகவே தலையிட்டது. அவர் ஆதரிக்கின்ற வேட்பாளர்களை தேர்ந்தெடுக்காவிட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாட்டு மக்களை ட்ரம்ப் அச்சுறுத்தினார். மறைமுகமாக செல்வாக்கு செலுத்துவது என்ற நிலையிலிருந்து, நேரடியாக வலதுசாரி வேட்பாளர்களை வெளிப்படையாகவே ஆதரிப்பது; அவர்கள் தோல்வியுற்றால் இதுவரை வழங்கப்பட்டு வந்த உதவி வெட்டிக் குறைக்கப்படும் என அச்சுறுத்துவது என்ற நிலைக்கு அமெரிக்கா நகர்ந்துள்ளது.
தேர்தல்களில் தலையீடு
கொலம்பியாவில் அதிதீவிர வலதுசாரி வேட்பாளரான அபெலார்டோ டி லா எஸ்ப்ரீலாவை ட்ரம்ப் வெளிப்படையாக ஆதரித்தார். அவரே அதிபர் தேர்தலிலும் வெற்றி பெற்றார். ஹோண்டுராஸ் அதிபர் தேர்தலிலும் ட்ரம்ப் ஆதரித்த நஸ்ரி அஸ்ஃபுராவே தேர்தலில் வெற்றி பெற்றார். அர்ஜெண்டினாவின் ஜாவியர் மிலே, சிலியின் ஜோஸ் அண்டோனியோ காஸ்ட் ஆகியோரும் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றிருந்தனர். அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்காக அமெரிக்கா பொருளாதார நெருக்குதலையும் பயன்படுத்துகிறது; அந்நாடுகளின்மீது கூடுதல் தீர்வைகள் விதிக்கப்படும் என்று அச்சுறுத்துவதோடு, சர்வதேச அளவிலான கடன்களையும் தடுத்து நிறுத்துகிறது. 2025ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கான உத்தி என்று அறிவிக்கப்பட்ட அவப்புகழ் பெற்ற மன்ரோ கோட்பாட்டின் ட்ரம்ப் துணைக்கோட்பாடு என்பது இதுதான்.
அமெரிக்காவின் இத்தகைய செயல்கள் அது தனது மறைமுகமான நடவடிக்கைகள் அல்லது ராணுவரீதியான முனைப்புகள் ஆகியவற்றைக் கைவிட்டு விட்டதாக நாம் பொருள்கொண்டு விடக் கூடாது. இத்தகையதொரு தலையீட்டினால் வெனிசுவேலா பாதிப்பிற்கு ஆளானது. அங்கு சி ஐ ஏவின் மறைமுக நடவடிக்கைகள் இப்போதும் தொடர்கின்றன. அமெரிக்காவின் ராணுவரீதியான தலையீட்டிற்கு அவர்களே அடித்தளம் இட்டனர். 2026ஆம் ஆண்டு ஜனவரியில் ‘முழுமையான உறுதிப்பாட்டு நடவடிக்கை’ என்ற பெயருடன் வெனிசுவேலாவின் மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. இதன் விளைவாக, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்திச் செல்லப்பட்டனர்.
லத்தீன் அமெரிக்காவில் வலது மாற்றம்
2000களின் தொடக்கத்தில் இப்பகுதியில் காணப்பட்ட ‘இளஞ்சிவப்பு அலை’ எனப்படும் இடதுசாரி அலைக்கு மாறாக, வலதுசாரிப் பாதையை நோக்கி நகரும் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கும் வேளையில்தான் அமெரிக்காவின் இந்த உத்தியும் அமைகிறது. உள்நாட்டுக் காரணிகள், வெளிப்புறத் தாக்கங்கள் ஆகியவற்றின் கலவையே இந்த மாற்றத்திற்குக் காரணமாக அமைகிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவும் பொருளாதார தேக்கநிலையை எதிர்கொண்டு வருகின்றன. 2025இல் இவற்றின் வளர்ச்சி விகிதம் என்பது வெறும் 1.5 சதவீதமாகவே இருந்தது. மேலும் மோசமடைந்துகொண்டே வரும் குற்றங்கள், ஊழல் மற்றும் இடதுசாரி அரசுகள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது ஆகியவை தாராளவாத சந்தைக்கான சீர்திருத்தங்களையும், ‘இரும்புக்கரம்’ கொண்ட பாதுகாப்புக் கொள்கைகளையும் வழங்குவதாக உறுதியளிக்கும் வலதுசாரி வேட்பாளர்களை நோக்கி வாக்காளர்களை திசைதிருப்பியுள்ளன. இடதுசாரிகளின் தோல்வியும், மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வரும் அதிருப்தியும் அரசியல் ஊசலாட்டத்தை வெகு இயல்பாகவே இடது மற்றும் வலதுசாரி நிலைபாடுகளுக்கு இடையே நிகழச் செய்தன.
பொலிவிய மாற்றத்தில் அமெரிக்காவின் பங்கு
இத்தகைய மாற்றத்திற்கு சக்திமிக்கதொரு வெளிப்புற உந்துசக்தியாக அமெரிக்கா செயல்படுகிறது. வலதுசாரி சக்திகளை ஆதரிப்பது, இடதுசாரி சக்திகளை எதிர்ப்பது என்ற அதன் கொள்கை இத்தகைய போக்கை தீவிரமாக ஊக்குவிக்கிறது. இடதுசாரி அரசுகளை பலவீனப்படுத்தவும், பழமைவாத மாற்று சக்திகளை ஆதரிக்கவும் தனது செல்வாக்கைப் பயன்படுத்துவதன்மூலம் அமெரிக்கா அரசியல் துருவ முனைப்பை அதிகரிப்பதோடு, இப்பகுதியானது வலதுசாரி திசையை நோக்கி நகர்வதையும் துரிதப்படுத்துகிறது.
பொலிவியாவில் தற்போது நிலவிவரும் அரசியல் நெருக்கடி இத்தகைய சூழலுக்கு ஓர் உதாரணமாகும். தற்போதைய வலதுசாரி அதிபரான ரோட்ரிகோ பாஸ் அமெரிக்காவின் நலன்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறார். இத்தகைய அரசுகள் – குறிப்பாக ஈவோ மொராலஸ் தலைமையிலான அரசுகள் – பொலிவியாவில் அறிமுகம் செய்து செயல்படுத்திய மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் அனைத்தையும் அவர் ரத்து செய்து வருகிறார்.
பொலிவிய அரசை நிலைகுலையச் செய்யவும், தன்னை கைது செய்யவும் தனது நாட்டில் சி ஐ ஏ செயல்பட்டு வருவதாகவும் ஈவோ மொராலஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். மொராலஸுக்கு எதிராக பாஸ் அரசை ஆதரிப்பதில், அமெரிக்க நாடுகளின் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அமெரிக்காவுடன் கொண்டுள்ள ‘கவலைக்குரிய வகையிலான ஒருங்கிணைப்பை’ ஆய்வாளர்களும், செய்தி ஊடகங்களும் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்பு முகமை மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதும், பொலிவிய மண்ணில் சி ஐ ஏவின் செயல்பாடுகள் குறித்த தகவல்களும் நம் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இவை வெளிநாட்டுத் தலையீடு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன.
(அமெரிக்காவின்) இத்தகைய அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க ஆதரவுடைய தலையீடுகள், இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல் ஆகியவற்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்க, பொலிவிய தொழிற்சங்கங்களும் பூர்வகுடி மக்கள் குழுக்களும் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன.
பொலிவியாவில் நடக்கும் போராட்டங்கள், மாபெரும் அரசியல் மோதலாக முற்றியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில்தான் வேர்பிடித்துள்ளன. பல்வேறு பொருளாதார அதிர்ச்சிகள், அரசின் கொள்கைகள் ஒன்றிணைந்ததன் விளைவாக, அவை நாடுதழுவிய நெருக்கடிக்குத் தூண்டப்பட்டன.
தொடர்ந்துவரும் பொருளாதார நெருக்கடி
ஒரு தலைமுறை காலத்திற்குள்ளாகவே பொலிவியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு, (ஒரு காலத்தில் நாட்டு பொருளாதாரத்தின் முக்கிய தூணாகத் திகழ்ந்த) இயற்கைவாயு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான பணவீக்கம் ஆகியவை இந்த நெருக்கடியின் முக்கிய அம்சங்களாகும்.
நீண்ட காலமாக வழங்கப்பட்டுவந்த எரிபொருள் மானியங்களைக் குறைக்க 2026 மே மாதத்தில் அதிபர் ரொட் ரிகோ பாஸ் எடுத்த முடிவே, இந்தப் பெருந்திரள் போராட்டங்களுக்கான உடனடிக் காரணமாக அமைந்தது. நிலச்சீர்திருத்தம் தொடர்பான இதேபோன்றதொரு முடிவு முன்னதாக எடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டிருந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பங்களின் வாழ்க்கைச் செலவை அதிகரித்ததோடு, பரவலான ஆத்திரத்தையும் தூண்டியது.
அதிகரித்துக் கொண்டே வந்த கோரிக்கைகள்
குறிப்பிட்ட பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களாகத் தொடங்கியவை விரைவிலேயே விரிவடைந்தன. தொழிலாளர் சங்கங்கள், பூர்வகுடி மக்கள் குழுக்கள், கோகா பயிரிடுவோர் ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பு ஒன்றுதிரண்டு, ஊதிய உயர்வு முதல் எரிபொருள் தட்டுப்பாட்டை அகற்றுவது வரையிலான கோரிக்கைகளை முன்வைத்ததோடு, இறுதியில் அதிபர் பாஸ் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தின.
இந்தப் போராட்டங்களின் முக்கியமானதோர் அம்சம் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்த சாலைமறியல் ஆகும். இது நாட்டின் நிர்வாகத் தலைநகரான லா பாஸ்-ஐ முற்றிலுமாகத் தனிமைப்படுத்தி, போக்குவரத்தை முடக்கியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அதிபர் பாஸ் நாடுதழுவிய அவசரநிலையை அறிவித்து, சாலைப் போக்குவரத்தை சீரமைக்க ராணுவத்திற்கு அதிகாரம் அளித்ததோடு, மக்களின் போராடும் உரிமையையும் கட்டுப்படுத்தினார்.
கடந்த பல தசாப்தங்களாக மொராலஸ் வழிநடத்திவந்த ‘சோஷலிசத்தை நோக்கிய இயக்கம்’ (MAS) கட்சியும், பொலிவிய தொழிலாளர் சங்கம், ‘ஒற்றுமை ஒப்பந்தக் கூட்டணி’ போன்ற அதனுடன் இணந்த சமூக அமைப்புகளும்தான் இந்த வேலைநிறுத்தங்கள், சாலைமறியல் போராட்டம் ஆகியவற்றை முன்னெடுக்கும் முக்கிய சக்திகளாக உள்ளன. பாஸ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உதவிய MASஇன் முன்னாள் ஆதரவாளர்கள் பலரும் தற்போது அவரது அரசு தங்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கருதுகின்றனர்.
பொலிவியாவில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் முக்கியமான சில அம்சங்களை சுட்டிக் காட்டுகின்றன. முதலாவதாக, இடதுசாரி சக்திகளை தோற்கடிப்பதிலும், பலவீனப்படுத்துவதிலும் அமெரிக்காவின் பங்கு; இரண்டாவதாக, அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ப தங்கள் கொள்கைகளை மாற்றி அமைத்துக் கொள்ளும் வலதுசாரி கட்சிகள் மற்றும் சக்திகளுக்கு அது அளிக்கும் ஆதரவு; இறுதியாக, அப்பகுதி முழுவதையுமே தனக்குச் சொந்தமானதாகக் கருதிக் கொண்டு அங்கு அமெரிக்காவின் அதிகாரத்தை நிலைநாட்டுதல்.
‘நெறிக்கப்படும்’ கியூபா
அமெரிக்காவிற்கு ‘நெஞ்சில் தைத்த முள்’ ஆக இருப்பது கியூபாதான். இடதுசாரி, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக அமெரிக்கா விடுத்துள்ள அச்சுறுத்தல்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இவை தீவிரமான, பலவித பரிமாணங்களைக் கொண்ட, ஒருவிதமான பதற்ற அதிகரிப்பை பிரதிபலிக்கின்றன. எனவே இதனை மிகுந்த கவலையுடன் அணுக வேண்டியுள்ளது. இந்த ஆபத்து ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று வடிவங்களில் வெளிப்படுகிறது: கியூபா மீதான நேரடி ராணுவ அச்சுறுத்தல்கள், கடுமையான பொருளாதாரப் போர் மற்றும் உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள், இடதுசாரி இயக்கங்களை இலக்காகக் கொண்ட ஆக்ரோஷமான கருத்தியல் பிரச்சாரம் ஆகியவையே அவை.
கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா நேரடி ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடும் என்ற அச்சுறுத்தல் மிகுந்த கவலைக்குரிய ஒன்றாகும். கியூபாவை ‘மிக விரைவில்’ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப் போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், ‘அடுத்து கியூபாதான்!’ என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.
கியூபாவை அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக சித்தரிக்கும் ஓர் அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டது. இது ராணுவத் தலையீட்டிற்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதற்கான திட்டமிட்டதொரு முயற்சியாகும். ஆயிரக்கணக்கான வீரர்களை உள்ளடக்கிய 101வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த, ராணுவம் தலைமையிலான வான்வழித் தாக்குதல் உள்ளிட்டு கியூபாவிற்கு எதிரான நடவடிக்கைக்கான வழிமுறைகளை அமெரிக்காவின் திட்டமிடுவோர் ஆராய்ந்து வருகின்றனர். அமெரிக்க கடற்படைக் கப்பலான யு எஸ் எஸ் நிமிட்ஸ், கரீபிய கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு, கியூபாவிற்குத் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதார நிர்ப்பந்தம் ஏற்கனவே அமலில் உள்ளது. அமெரிக்கா, கியூபாவின்மீது திறன்மிக்கதொரு எண்ணெய் முற்றுகையை விதித்துள்ளதுடன், அந்நாட்டிற்கு எரிபொருள் வழங்க முற்படும் எந்தவொரு நாட்டின்மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தி வருகிறது. இது, கடுமையான எரிசக்திப் பற்றாக்குறையையும், நாடு தழுவிய பல மின்வெட்டுக்களையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஒரு ‘போர் ஆயுதம்’ என்றும், ஓர் ‘இனப்படுகொலைக் கொள்கை’ என்றும் ஐ.நா. நிபுணர்களால் கண்டிக்கப்பட்டுள்ளன. அரசை மாற்றுவதைக் கட்டாயப்படுத்த மனிதரீதியான நெருக்கடியை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று பரவலாகக் கருதப்படுகிறது.
சோஷலிசமே ஓர் அச்சுறுத்தலாக…
இங்கே நம்மிடையே எழும் கேள்வி என்னவெனில், கியூபாவில் ஆட்சி மாற்றத்தை அமலாக்க அமெரிக்கா ஏன் இவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதுதான். அதற்கான விடை இதுதான்: கியூபாவில் நிலவும் சோஷலிச அமைப்பு ஓர் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. அந்நாடு, மார்க்சிய- லெனினியக் கொள்கையைப் பின்பற்றும் கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்படுகிறது. அச்சுறுத்தல்களையும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் எதிர்கொள்வதில் கியூபா வெளிப்படுத்தும் தன்னலமற்ற தன்மை, சர்வதேச நோக்கு, துணிவு ஆகியவற்றால் அந்தப் பகுதியில் உள்ள பல நாடுகள் மட்டுமின்றி, அப்பகுதிக்கு வெளியேயுள்ள நாடுகளும் கூட ஈர்க்கப்பட்டுள்ளன. இதுவே ட்ரம்ப் மற்றும் ஆளும் வர்க்கத்தினர் தற்போது அச்சப்படும் ‘சிவப்பு அச்சம்’ ஆக உள்ளது.
லத்தீன் அமெரிக்கப் பகுதியின் மீது கியூபா செலுத்தும் செல்வாக்கைத் தவிர, நியூயார்க் நகர மேயரான ஸோஹ்ரான் மம்தானி போன்ற அமெரிக்க ஜனநாயக சோஷலிஸ்ட் வேட்பாளர்கள் பலரின் வெற்றி, கியூபாவின் செல்வாக்கின் விளைவு என்றே பார்க்கப்படுகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை, ‘அமெரிக்க அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் ஊடுருவி’, ‘அமெரிக்க மண்ணில் இடதுசாரி பயங்கரவாதத்தை’ ஆதரித்து வரும் பல தசாப்த கால கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்துடன் கியூபாவை வெளிப்படையாக இணைக்கிறது. அமெரிக்க ஜனநாயக சோஷலிஸ்டுகள் கியூபாவின் ‘முன்னணிக் குழுக்கள்’ என்றும் அது பெயரிட்டுள்ளது.
திரித்து முன்வைக்கப்படும் கொள்கை
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘தீவிர இடதுசாரி பயங்கரவாதம்’ என தான் வகைப்படுத்தும் ஒரு விஷயத்திற்கு எதிராக ஜிஹாதி பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் அதே தீவிரத்தோடு, ட்ரம்ப் நிர்வாகம் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகளாவிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. எனவேதான் அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது கம்யூனிச கொள்கையை இழிவுபடுத்த ட்ரம்ப் தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிட்டார்.
கடந்த ஜூன் 26 அன்று நடைபெற்ற ‘நம்பிக்கை மற்றும் சுதந்திரத்திற்கான கூட்டணி கொள்கை’ மாநாட்டில் ஆற்றிய உரையில், “250 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா நிறுவப்பட்டதிலிருந்து அந்நாட்டிற்கு உருவாகியுள்ள மிகக் கடுமையான அச்சுறுத்தல் என்பது கம்யூனிசம்தான்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா விடுதலையடைந்த 250வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற ‘சல்யூட் டு அமெரிக்கா’ என்ற நிகழ்வில் சுமார் 40 நிமிடங்கள் ஆற்றிய உரையில், கம்யூனிசத்தை ‘விரைவாக அகற்றப்பட வேண்டிய ஒரு புற்றுநோய்’ என ட்ரம்ப் வர்ணித்தார். இந்த உரையில் அவர் மேலும் கூறியதாவது: “ இந்த மகத்தான ஆண்டுவிழாவை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நமது அமெரிக்க அடையாளம் மீண்டும் ஒரு தாக்குதலுக்கு ஆளாகி வருவதைக் காண்கிறோம். கம்யூனிச அச்சுறுத்தலுக்கு எதிரான பனிப்போரில் நாம் போராடி வெற்றிபெற்ற ஒரு தலைமுறை காலத்திற்குப் பிறகு, இப்போதும் நம் நாட்டில் கம்யூனிச அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. குறிப்பாக, நமது வாழ்க்கை முறைக்கும், நமது மகத்தான வெற்றிக்கும் முற்றிலும் முரணான கருத்துக்களைக் கொண்ட புதியவர்கள் நம் நாட்டிற்குள் வருவதன் மூலம் இது நிகழ்கிறது. இவை வரிகள் அல்லது விதிமுறைகள் குறித்த கருத்து வேறுபாடுகளைப் போன்ற சாதாரணமான அரசியல் கருத்துவேறுபாடுகள் அல்ல. கம்யூனிசம் என்பது அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு மரண அச்சுறுத்தல் ஆகும். முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், பேர்ல் துறைமுகத்தின் மீதான (ஜப்பானின்) தாக்குதல் அல்லது 9/11 தாக்குதல் (நியூயார்க் இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதல்) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், இதுவே நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.”
கம்யூனிசத்தைக் கடுமையாகச் சாடிய ட்ரம்ப் மேலும் இவ்வாறு கூறினார்: “இது (கம்யூனிசம்) பெருமளவிலான திருட்டு; ஒட்டுமொத்த கட்டுப்பாடு; அடுக்கடுக்கான பொய்கள்; பெருமளவிலான படுகொலைகள் ஆகியவை அடங்கிய ஒரு சித்தாந்தமாகும். ஜனநாயகத்தில் இத்தகைய கொள்கைகளுக்கு இடமளிக்கவே கூடாது. ஏனெனில், அதிகாரத்திற்கு வந்தவுடன், அது செய்யும் முதல் காரியமே அந்த ஜனநாயகத்தை அழிப்பதாகத்தான் இருக்கும். உலகின் எந்தப் பகுதியை நீங்கள் உற்று நோக்கினாலும், மற்ற நாடுகளில் கம்யூனிஸ்டுகள் செய்ததைப் போலவே இங்கும் அது அழிக்கப்படுகிறது. மிகவும் எளிமையாகச் சொல்வதெனில், வரலாற்றிலேயே மிக மோசமான மனிதர்களால் முன்வைக்கப்பட்ட, மிக மோசமான கருத்துக்களையும் அத்துமீறல்களையும் கம்யூனிசம் பிரதிபலிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் தோற்றமோ, உங்களைப் போன்ற சிறந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றின் மிகச் சிறந்த கருத்துக்களையும் மரபுகளையும் பிரதிபலிக்கிறது. நீங்கள் கார்ல் மார்க்ஸுக்கு அல்லது அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருக்கலாம். நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாகவோ அல்லது ஒரு தேச பக்தராகவோ இருக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் இவை இரண்டுமாக இருக்க முடியாது!”
அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கம்
தங்கள் சுரண்டல் ஆட்சியை அச்சுறுத்தும் ஒரு சித்தாந்தமாக கம்யூனிசத்தின் வ்லிமையை நன்கு அறிந்திருப்பதாலேயே, இன்றைய ஆளும் வர்க்கங்கள் அதைக் கண்டு பெரிதும் அஞ்சுகின்றன. கியூபா மற்றும் சீனாவின் சோஷலிச மாற்று மாதிரி உலகம் முழுவதன் கவனத்தை ஈர்த்து வருகிறது. கம்யூனிசத்தை, ‘தீய, ஜனநாயகவிரோத, அழிவுசக்தியான, மோசமான கருத்துக்களைக் கொண்ட’ ஒன்றாக அவர்கள் சித்தரித்தாலும், மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு கள நிலைமையையே உற்றுநோக்கி வருகின்றனர் என்பதையும், அனுபவித்து வருகின்றனர் என்பதையும் நன்கு அறிவார்கள்.
அமெரிக்காவினால் திணிக்கப்பட்டு வரும் அனைத்து இன்னல்களுக்குப் பிறகும் கூட, கியூபா மக்கள் சரணடையத் தயாராக இல்லை. சோஷலிசம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான நம்பிக்கையே அவர்களுக்கு வ்லிமையையும் உறுதியையும் அளிக்கிறது. 1949ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு நாட்டை வழிநடத்திவரும் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாவிட்டால், சீனாவின் இன்றைய முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமாகி இருக்காது என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது.
முதலாளித்துவ நெருக்கடியும் சோஷலிச எதிர்ப்பும்
வேறு எதையும்விட, நெருக்கடிகளின்போது ஒரு மாற்றுவழி உருவாவது குறித்து ஆளும் வர்க்கங்கள் அஞ்சுகின்றன. எனவே சோஷலிசமும் கம்யூனிசமும் அஞ்சப்பட்டு வெறுக்கப்படுகின்றன. கியூபாவின் மீதான தாக்குதலும், சீனாவை கட்டுப்படுத்தி தனிமைப்படுத்தும் முயற்சிகளும் – இவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு உத்திக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் – ஆகிய இவை அனைத்துமே இந்த அடிப்படை உண்மையிலிருந்தே தோன்றுகின்றன.
இந்திய கம்யூனிஸ்டுகளாகிய நாம், ட்ரம்ப்பின் கருத்துக்களையும், நமது பிரதமர் மற்றும் பாஜக- ஆர் எஸ் எஸ் தலைவர்களின் கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இவர்கள் அனைவருமே கம்யூனிஸ்டுகளை ‘இடதுசாரி தீவிரவாதிகள்’, ‘தேச விரோதிகள்’ என்று சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.
உலகம் முழுவதிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் ஒரே மொழியில் பேசும் சூழ்நிலையில் அதே போன்றதொரு மொழியில் – அதாவது போராட்டம் மற்றும் எதிர்ப்புணர்வு என்ற மொழியில் – நாமும் பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஆளும் வர்க்கங்கள் புரிந்துகொள்ளக் கூடிய ஒரே மொழியும் அதுதான். அவர்கள் அச்சமடையும் ஒரே மொழியும் அதுவே. கம்யூனிச தத்துவத்தால் புடம்போடப்பட்ட போராட்டமே சுரண்டலை உடைத்தெறிந்து உலகை மாற்றியமைக்கும் ஒரே கருவி ஆகும்.
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply