
ஏகாதிபத்திய அணுகுண்டு
ஹிரோஷிமா தினம் – ஆகஸ்ட் 6, 1945
அபிநவ் சூர்யா
இரண்டாம் உலகப்போரில் முதலில் பாசிச ஜெர்மனியும் இத்தாலியும் சரணடைந்த பின்னர், ஜப்பானை வீழ்த்த சோவியத் ராணுவம் சீனாவின் மன்ச்சூரியா பகுதிக்குள் படையெடுத்தபோதே ஜப்பான் விரைவில் சரணடையும் என்பது உறுதியானது. ஆனால் ஜப்பானை சரணடைய வைப்பதாகக் காரணம் கூறி, உலகையே அதிர வைக்கும் வகையில், மனித வரலாற்றின் முதல் முறையாக அமெரிக்கா அணு குண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் வீசியது. அமெரிக்காவின் நோக்கம் ஜப்பானை வீழ்த்துவது அல்ல – 2 கோடி பேரை இழந்த சீன மக்களும், கம்யூனிஸ்டுகளும் அதை ஏற்கனவே செய்துவிட்டனர். அமெரிக்காவின் ஒரே நோக்கம், அதுவரை வரலாற்றில் காணாத பேரழிவு ஆயுதம் தம்மிடம் இருப்பதைக் காட்டி, சோவியத் ஒன்றியம் மற்றும் இதர வளரும் நாடுகளை ஏகாதிபத்திய கட்டளைகளுக்கு அடிபணிய வைப்பது தான்.
உலகப்போருக்கு பின், அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து அணு ஆயுதங்கள் கொண்டு சோவியத் ஒன்றியத்தை முற்றிலுமாக அழிக்க திட்டமிட்டனர். ஆனால் 1949இல் தோழர் ஸ்டாலின் தலைமையில் சோவியத் ஒன்றியம் தனது அணு ஆயுத சோதனையை நிகழ்த்தி, இத்திட்டத்தை முறியடித்தது. அதன் பின் 1954இல் இந்தியா, இனி அணு ஆயுத சோதனைகளே இருக்கக் கூடாது என்று முன்மொழிந்ததை சோவியத் ஒன்றியம் ஆதரித்தது – அமெரிக்கா பதிலளிக்கவில்லை. பின் ஒவ்வொரு முறையும் உலகளவில் அணு ஆயுத ஆபத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து சிதைத்து வந்துள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம்தான்.
சோவியத் ஒன்றியம் கலைந்த பின்னர், மேலும் வலுவுற்ற அமெரிக்க ஏகாதிபத்தியம், அனைத்து வளரும் நாடுகளையும் அணு ஆயுதங்கள் பெறுவதை தடுக்க மட்டுமே முயற்சி செய்கிறது – ஆனால் தன் வசம் உள்ள அணு ஆயுதங்களை கைவிட மறுக்கிறது. இன்று ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உள்ள ஐந்து நிரந்தர நாடுகளில், சீனா மட்டுமே தன் வசம் உள்ள அணு ஆயுதங்களை பிற அணு ஆயுதம் உள்ள நாடுகள் மீது முதலில் பயன்படுத்த மாட்டோம் என்றும், அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் மீது எப்போதும் பயன்படுத்தவே மாட்டோம் என்றும் கொள்கையாக அறிவித்துள்ளது – இதர நாடுகள் அப்படி அறிவிக்கவில்லை.
இன்றும் கூட ஈரான் தாக்கப்படுவதற்கு காரணம், அது அணு ஆயுதம் உருவாக்குவதாக பயம் காட்டி, மேற்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உள்ள ஒரே பெரும் எதிரியை அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணி அழிக்கப் பார்க்கிறது. இந்த ஆபத்தின் காரணத்தால்தான் அணுஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து வட கொரியா 2003இல் விலகி, அணு ஆயுதங்களை உருவாக்கியது. இன்று அமெரிக்கா தன் அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கு பதிலாக, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளைக் காரணம் காட்டி தன் அணுஆயுதக் கிடங்கை புதுப்பிக்கிறது. ஏகாதிபத்திய போரின் ஆபத்தை கூட்டுகிறது!
ஜப்பானின் இரண்டாம் உலகப்போர் குற்றங்கள் மன்னிக்க முடியாதவை. ஆனால் அன்று ஜப்பான் மீது விழுந்தது, இன்றுவரை நம்மையெல்லாம் அச்சுறுத்தும் ஏகாதிபத்திய குண்டு!
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply