
குறிவைக்கும் அமெரிக்கா, என்ன நடக்கிறது கியூபாவில்? (1926 – 2026 )
ஃபிடெல் காஸ்த்ரோ நூற்றாண்டு: (1926-2026)
வீ. பா. கணேசன்
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒரு விஷயத்தை நம்மால் துல்லியமாகக் கவனிக்க முடிந்துள்ளது. உலகத்தையே தன் காலடி கீழ் மண்ணாகக் கருதும் அமெரிக்க ஏகாதிபத்தியம், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, எவ்வித சர்வதேச நெறிமுறைக்கும் அடங்காமல் தனது மேலாதிக்க விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய முயற்சிகளில் முதலாவதாக, ஜனவரி 3 அன்று நள்ளிரவில் அமெரிக்க ராணுவத்தின் ஒரு படைப்பிரிவினர் வெனிசுவேலா நாட்டின் தலைநகர் காரகாஸில் வந்திறங்கி, அந்நாட்டின் அதிபர் மடுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரெஸ்-ஐயும் கைது செய்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றனர். அதிபரின் பாதுகாப்புப் படையில் இருந்த 35 கியூப ராணுவ வீரர்கள் இந்தத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் மடுரோவும் அவரது மனைவியும் நியூயார்க் நகரில் சிறைவைக்கப்பட்டனர். ஜனவரி 5ஆம் நாளன்று நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டபோது, தான் குற்றவாளி அல்ல என்று மடுரோ அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்தார். மேலும், ஒரு நாட்டின் அதிபரான தன்னை பன்னாட்டு விதிமுறைகளை மீறி கடத்தி வந்திருப்பதாக அமெரிக்க அரசின் மீதும் அவர் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவிற்குள் வந்திறங்கும் போதைப் பொருட்கள் கடத்தலில் மடுரோவிற்குப் பங்குண்டு என்று குற்றம் சாட்டி வருவதோடு, இதைத் தடுக்கும் முயற்சி என்ற பெயரில் வெனிசுவேலா கடற்பகுதியில் தனது கடற்படையை உலவ விட்டு வந்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்
அடுத்ததாக, அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை கைவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஈரானுடன் ஒருபுறத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டேயிருந்த அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தது. இதில் அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் கொமேனி உள்ளிட்ட பல தலைவர்கள் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி, நாட்டின் ஒரு மூலையில் இருந்த ஒரு பள்ளியின் மீது ஏவுகணையை வீசி, அங்கிருந்த சுமார் 200 குழந்தைகளையும் ஆசிரியர்களையும் கொன்றழித்தது. சுமார் நூறு நாட்களுக்கும் மேலாக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் போர் புரிந்த போதிலும் வெற்றி கிடைக்காமல் அதனுடன் பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சமீபத்தில் ஈரான் முன்வைத்த நிபந்தனைகள் பலவற்றையும் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தும் இட்டுள்ளது அமெரிக்கா.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தத் தோல்வியை உலக மக்களின் கவனத்தில் இருந்து மறைக்கும் வகையில் அமெரிக்க அதிபரும் அவரது வெளியுறவுச் செயலாளரும் கியூபாவின் முன்னாள் அதிபரும் கியூபப் புரட்சியின் நாயகர்களில் முன்னோடியுமான ரால் காஸ்த்ரோவின்மீது தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளனர். இதற்கு, 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்வை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கியூப எதிர்ப்புப் பிரச்சாரம்
கியூபாவின் எல்லைக்கு மிக அருகாமையிலுள்ள அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்திலிருந்து கொண்டு, அங்குள்ள கியூப குடியேறிகள் மேற்கொண்டு வரும் கியூப அரசு எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 1996ஆம் ஆண்டில் கியூபாவில் பிரசுரங்களை வீசி எறிவதற்கென கியூபாவின் வான் எல்லையில் அத்துமீறிப் பறந்த இரு விமானங்களை கியூப ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இத்தகைய வான்வழி அத்துமீறல்கள் குறித்து அமெரிக்க அரசிடம் பல முறை புகார் செய்தபோதும், எவ்வித தடுப்பு நடவடிக்கையும் அமெரிக்க அரசு எடுக்காத நிலையில்தான், இந்த விமானங்களை கியூப அரசு சுட்டு வீழ்த்தியது. அப்போது கியூப ராணுவ அமைச்சராக ரால் காஸ்த்ரோ இருந்தபோதிலும், இதற்கான பொறுப்பை தானே ஏற்பதாக அன்றைக்கு அதிபராக இருந்த ஃபிடெல் காஸ்த்ரோ அறிவித்தார். இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க குடிமக்கள் நான்கு பேரை கொன்றதாக ரால் காஸ்த்ரோ மீது ஒரு குற்றச்சாட்டு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, அதன்மீது மேல்நடவடிக்கை எடுக்கும் முகமாகவே அமெரிக்க ஏகாதிபத்தியம் இதில் இறங்கியுள்ளது. இதை எதிர்த்து கியூப மக்கள் ரால் காஸ்த்ரோவிற்கு ஆதரவாக வீதிகளில் அணிதிரண்டு வருகின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த இரட்டை நிலைப்பாடும் அதன் தன்னம்பிக்கையும் நம்மை திகைக்க வைக்கும் ஒன்றே ஆகும்.
1976ஆம் ஆண்டில் கியூப விமான சேவை எண் 455 என்ற விமானத்தின் மீது அமெரிக்கா குண்டுவீசி 73 பேரைக் கொன்றது. உயிரிழந்த இந்த விமானப் பயணிகளில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கியூபாவின் சார்பாகப் பங்கேற்றுத் திரும்பிய கத்திச் சண்டை விளையாட்டு வீரர்களும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலில் பங்கேற்ற ஆர்லண்டோ போஷ், லூயிஸ் பொசாடா காரிலஸ் ஆகியோர் உள்ளிட்ட தீவிரவாதிகள் மியாமி நகரில் அமெரிக்க அரசின் பாதுகாப்புடன் சுகமாக வாழ்ந்து வந்தனர் என்பதும் மற்றொரு உண்மையாகும். அதைப்பற்றியெல்லாம் வாய்திறக்காமல், கியூபாவின் வான் எல்லையில் அத்துமீறிப்பறந்த இரு விமானங்களை சுட்டுவீழ்த்திய நிகழ்வை அமெரிக்கா இப்போது கையில் எடுத்துள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
யார் இந்த ரால் காஸ்த்ரோ?
1959ஆம் ஆண்டு ஜனவரி முதல்நாள் கொடுங்கோலன் பாடிஸ்டாவின் பிடியிலிருந்து கியூபாவை விடுவித்த கியூபப் புரட்சியின் நாயகரான ஃபிடெல் காஸ்த்ரோவின் இளைய சகோதரர்தான் ரால் காஸ்த்ரோ. 1953ஆம் ஆண்டில் ஜூலை 26 புரட்சிகர இளைஞர் இயக்கத்தை ஃபிடெல் தொடங்கியபோது, கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் அப்போது இருந்த ரால் காஸ்த்ரோவும் அந்த இயக்கத்தில் இணைந்தார். இந்த இயக்கம் மான்கடா ராணுவப் படைத்தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தபோது அதில் ஒரு பிரிவிற்குப் பொறுப்பாளராக இருந்தவர் ரால் காஸ்த்ரோ. பின்பு அந்த முயற்சி தோல்வியுற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஸ்த்ரோ சகோதரர்கள் மக்களின் எழுச்சியின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.
கியூபாவை கொடுங்கோலன் பாடிஸ்டாவிடமிருந்து விடுவிக்க மீண்டும் முயற்சி மேற்கொண்ட ஜூலை 26 இயக்கத்தினர் காஸ்த்ரோ சகோதரர்கள் தலைமையில் மெக்சிகோவிற்கு சென்றபோது, அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த புரட்சியாளரான சே குவேராவை ஃபிடலுக்கு அறிமுகம் செய்தது ஏற்கனவே மார்க்சிய சிந்தனைப் பிடிப்பில் இருந்த ரால் காஸ்த்ரோ தான். 1959 புரட்சிக்குப் பிறகு பாடிஸ்டாவின் ஆதிக்கத்தில் நீண்டநாள் இருந்த கியூப ராணுவத்தை தூய்மைப்படுத்தி, புரட்சிகர ராணுவப் படைப்பிரிவை உருவாக்கியவர். பின்னர் கியூபாவின் பாதுகாப்பு அமைச்சராகவும், அதிபராகவும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராகவும் செயல்பட்டவர்.
தற்போது 95 வயதை நிறைவு செய்திருக்கும் ரால் காஸ்த்ரோ, அமெரிக்கா கடந்த 67 ஆண்டுகளாக பொருளாதார தடைகளை கியூபாவின் மீது விதித்து வந்தபோதிலும், ஒரு முன்னணி தலைவராக, அந்நாட்டுடன் வலுவான உறவுகளை மீட்டெடுக்க, அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் இணைந்து செயல்பட்டவர்.
சுமார் ஒரு கோடி மக்களை மட்டுமே கொண்ட கியூபா ஒரு சின்னஞ்சிறிய தீவு. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டு வரும் கடும் பற்றாக்குறைகள் கணிசமான அளவிலான மக்களை அந்நாட்டை விட்டு வெளியேறச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கியூபாவிடம் அணு ஆயுதம் ஏதுமில்லை. அதன் ராணுவ பலமும் கூட அமெரிக்காவின் மிகப்பெரும் வலிமையை எதிர்கொள்ளும் வகையிலானது அல்ல. எந்தவகையிலும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் தரும் நாடல்ல. நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுரத் தாக்குதலின்போது கூட ஃபிடெல் காஸ்த்ரோ அமெரிக்க மக்களின் நலனுக்கே குரல் கொடுத்தார். இத்தகையதொரு பின்னணியில், கியூபாவின் மீது அமெரிக்கா தனது மூர்க்கத்தனமான பார்வையை செலுத்தியுள்ளதை, அமெரிக்காவின் அரசியல் மற்றும் புவிசார் யுத்ததந்திர அடிப்படையிலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
கடுமையான பொருளாதார, எரிசக்தி நெருக்கடிகளுக்கு இடையிலும் கியூப மக்கள் தங்கள் தன்மானத்தை இழந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடிபணிய மாட்டோம் என்று உறுதியோடு நிற்பதையே ரால் காஸ்த்ரோவிற்கு ஆதரவான மக்கள் பேரணிகள் எடுத்துக் காட்டுகின்றன.
நெருக்கடியில் கியூபா
ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியிலிருந்தும் சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்தும் கியூபாவை விடுவித்த ஜூலை 26 இயக்கத்தின் வழிகாட்டி ஃபிடல் காஸ்த்ரோவின் நூற்றாண்டில் அந்நாடு இதுவரை கண்டிராத கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உண்மையான மக்கள் விடுதலையின் மீது நாட்டம் கொண்ட உலக மக்கள் அனைவருமே இன்று கியூப மக்களின் பக்கம் அணிதிரண்டு தங்கள் ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கியூப மக்கள் இன்று எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்திற்கும் மூலகாரணமாய் திகழ்வது வட அமெரிக்க ஏகாதிபத்தியமே ஆகும். கியூபா அப்படி என்ன தவறு செய்து விட்டது? காஸ்த்ரோ அப்படியென்ன தவறு செய்து விட்டார்? எம் நாட்டின் இறையாண்மையை எவருக்கும் அடகு வைக்க மாட்டோம் என்ற கியூப மக்களின், காஸ்த்ரோவின் மன உறுதியே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிச்சலுக்குக் காரணமாய்த் திகழ்கிறது.
1895ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்திலிருந்து கியூபா விடுதலை பெறுவதற்காக நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் வெற்றி பெறவிருந்த தருணத்தில் வட அமெரிக்கா மூக்கை நுழைத்து தன் அடிவருடிகளை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி, கியூப நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரண்டிக் கொழுத்து வந்தது. அந்நாட்டின் ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக இருந்து மக்களை அடக்கியொடுக்கி வந்த தருணத்தில்தான் பாடிஸ்டாவின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து ஃபிடெல் காஸ்த்ரோ முன்னெடுத்த சட்டபூர்வமான நடவடிக்கைகள் தோல்வியுற்றதை அடுத்து, கூபாவின் இளைஞர்கள் அவரது தலைமையில் ஜூலை 26 இயக்கத்தைத் தொடங்கி ஆயுதம் ஏந்தத் தொடங்கினர். இந்த இளைஞர்களின் எழுச்சிமிக்க மான்கடா படைத்தளத்தின் மீதான தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. இந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் பாடிஸ்டா அரசால் படுகொலை செய்யப்பட்டனர். காஸ்த்ரோ சகோதரர்கள் உள்ளிட்டு மீதமிருந்தோர் நீண்ட சிறைவாசத்திற்கு ஆட்படுத்தப்பட்டனர்.
எனினும் மக்களின் தொடர்ந்த வற்புறுத்தலின் விளைவாக இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாகவே ஜூலை 26 இயக்கத்தின் வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு ஜூலை 26 இயக்கத்தினர் மெக்சிகோவிற்குச் சென்று, அங்கே அர்ஜெண்டினாவைச் சேர்ந்த புரட்சியாளரான சே குவேராவை சந்தித்து கெரில்லா பயிற்சி பெற்று சுமார் 80 வீரர்களுடன் கியூபாவிற்கு வந்திறங்கி ஒருபுறம் கொடுங்கோலன் பாடிஸ்டாவின் படைகளுக்கு எதிரான கெரில்லா போர், மறுபுறம் கிராமப்புற, நகர்ப்புற மக்களை அணிதிரட்டும் பணி எனச் செயல்பட்டு 1959 ஜனவரி முதல் நாள் ஹவானாவின் வீதிகளில் பீடுநடை போட்டனர் என்பதும் வரலாறு.
நிறைவேறிய வாக்குறுதிகள்
மான்கடா ராணுவ முகாம் மீதான தாக்குதலை அடுத்து, 1953ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று நீதிமன்றத்தின் முன்பு நிகழ்த்திய ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்!’ என்ற புகழ்பெற்ற வாதுரையில் புரட்சி அரசாங்கம் மக்களின் அத்தியாவசிய தேவைகளான நிலம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எவ்வாறு நிறைவேற்றும் என்பதை ஃபிடல் காஸ்த்ரோ விரிவாக விளக்கிக் கூறியிருந்தார்.
அதன்படியே இரண்டே ஆண்டுகளில் புரட்சி அரசு நாட்டின் நிலம் அனைத்தையும் அரசுடைமை ஆக்கியதோடு, ஏற்கனவே கல்வி கற்ற மாணவர்களும், இளைஞர்களும் கல்வியறிவு அற்ற மக்களுக்கு கல்வி புகட்டி, நாட்டினை 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற நாடாக மாற்றியது. இன்றளவும் கல்வியறிவு பெறாதோர் கணிசமாக உள்ள வட அமெரிக்கா இந்த மாற்றங்கள் தன் மக்களை எழுச்சியுறச் செய்து விடுமோ என்று அஞ்சி பன்றி முனை தாக்குதல் என்று கூறப்படும் கூலிப்படைத் தாக்குதலை ஏற்பாடு செய்து அதிலும் தோல்வியையே தழுவியது. இதைத் தொடர்ந்தே கியூபாவை அழித்தொழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அதன்மீது பொருளாதார ரீதியான தடைகளை தொடர்ந்து விதித்து வந்துள்ளது.
கியூப நாட்டின் வரலாறு இதுவரை கண்டிராத வகையில் அந்நாட்டு மக்களிடையே விடுதலை உணர்வையும், சுய நிர்ணயம் மீதான பற்றுறுதியையும் ஆழமாக விதைத்து விட்ட காஸ்த்ரோ உயிரோடு இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிச்செயல்கள் எதுவும் பயனளிக்காது என்று உணர்ந்த அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி. ஐ. ஏ. ஃபிடெல் காஸ்த்ரோவை கொல்வதற்கென 663 முறை பல்வேறு வகைகளில் முயற்சி செய்து தோல்வி அடைந்தது என்பதும் நாம் கண்ட வரலாறாகும்.
1960ஆம் ஆண்டிற்குப் பிறகு சோஷலிச முகாமுடன் தன்னை இணைத்துக் கொண்ட கியூபா, சோவியத் யூனியன் அதுவரை மேற்கொண்டுவந்த பொருளாதார நடவடிக்கைகளையே பின்பற்றியது. எனினும் அதிலுள்ள அபாயத்தை முன் உணர்ந்த கியூபா, 1983ஆம் ஆண்டு முதல் சுமார் 3 ஆண்டுகள் நடைபெற்ற நெறிப்படுத்தும் இயக்கம் ஒன்றின் மூலம் பல்வேறு துறைகளிலும் தன்னிறைவு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது; அதில் கணிசமான வெற்றியையும் பெற்றது.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும், வெனிசுவேலாவின் சாவேஸின் திடீர் மரணத்திற்குப் பிறகும் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு ஆளான போதிலும், கியூபா ஒருபோதும் தனது சர்வதேச உணர்வை கைவிட்டதே இல்லை. சமீபத்தில் வெடித்தெழுந்த கொரோனா பெருந்தொற்றின்போது சீனாவுடன் இணைந்து அதற்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை உலகெங்கும் காப்பாற்றியது கியூபா. அதுமட்டுமல்ல. உலகின் பல நாடுகளும் திகைப்பில் ஆழ்ந்திருந்த நிலையில், கியூபா மருத்துவர்கள் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள நாடுகளுக்குச் சென்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார்கள் என்பதும் அனைவரும் அறிந்த உண்மையாகும்.
ஒப்பிலா போராளியான சே குவேரா கனவு கண்ட மருத்துவ சர்வதேசியம் சற்றும் பின்னடையாது கடந்த 60 ஆண்டுகளாக பல இடையூறுகளையும் கடந்து இன்று கியூபாவில் தழைத்தோங்கி வளர்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக வர்த்தக- பொருளாதார தடைகளினால் கியூபாவின் கழுத்தை நெறித்துவரும் வட அமெரிக்க அரசு, கியூபாவிடமிருந்து மருந்துகளை வாங்குவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொரோனா பெருந்தொற்றில் சாகும்படி கைவிட்டது என்பதையும் எவரும் மறுக்கவியலாது.
இன்றளவும் சற்றும் மனம் தளராமல் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைவர்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல்களை நேருக்கு நேராக எதிர்கொண்டு கியூபாவின் இறையாண்மையை பாதுகாத்து வருகின்றனர் எனில், அதற்கான அடிப்படை அந்நாட்டு மக்களின் நெஞ்சுரமும் ஒற்றுமையுமே ஆகும். கியூபாவின் ஒப்பற்ற விடுதலை வீரரான ஹோசே மார்த்தியின் சிந்தனைகளை முன்னிறுத்திய ஃபிடெல் காஸ்த்ரோவின் வீரம் செறிந்த நினைவுகள் மக்கள் மத்தியில் நீடிக்கும் வரையில், கியூபாவின் மீதான அமெரிக்காவின் வெஞ்சினம் மிக்க ஏவுகணைகள் கவைக்குதவாத அம்புகளாய் சரிந்து வீழப் போவது உறுதி! அதன் முன்னோட்டத்தைத்தான் நாம் சமீபத்தில் ஈரானில் பார்த்தோம். அவ்வகையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியை மீண்டும் மீண்டும் வீழ்ச்சியடையச் செய்வதற்கு இப்போது நூற்றாண்டைக் காணும் ஃபிடெல் காஸ்த்ரோவின் நினைவே போதுமானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply