
கட்சி அமைப்பு பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கு அடித்தளமாக அமைந்த நூல்!
செவ்வியல் நூல்: என்ன செய்ய வேண்டும்?
பிரகாஷ் காரத்
லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூல், காலங்கள் பல கடந்தும் தனது பொருத்தப்பாட்டைத் தொடர்ந்து பேணுகிறது. புரட்சிக்கான ஒரு கட்சியையும், அதன் அமைப்புக்கான கட்டமைப்பையும் பற்றிய கருத்தாக்கத்திற்கு லெனின் செய்த பங்களிப்பை, அது உருவான சூழலில் இருந்துதான் பார்க்க வேண்டும். புரட்சிகர எழுச்சியை வளர்த்தெடுக்கும் நடைமுறை அனுபவத்திலிருந்துதான் லெனின் தனது ‘ஸ்தாபனக் கோட்பாட்டை’ உருவாக்கினார். கட்சி அமைப்பு என்பது லெனினுக்கு ஒரு கருத்தியல் சிக்கலோ அல்லது உத்திச் சிக்கலோ அல்ல; அவர் புரட்சிகர தத்துவத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகவே கட்சி அமைப்பைக் கருதினார். ‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற தனது சிறு நூலில், “புரட்சிகர கோட்பாடு இல்லாமல், புரட்சிகர எழுச்சி ஏற்பட முடியாது” என்று லெனின் வலியுறுத்தினார். புரட்சிகர கோட்பாட்டை புரட்சிகர எழுச்சியாக மாற்றுவதற்கு, பொருத்தமான கட்சி அமைப்பால் மட்டுமே முடியும் என்று இந்த நூலில் அவர் விரிவாக விளக்கினார்.
புரட்சிக் கோட்பாட்டை நடைமுறையில் நிறைவேற்றக்கூடிய ஒரு புரட்சிக் கட்சியைக் கட்டியெழுப்பும் போராட்டத்தின் சூழலோடு சேர்த்தே இந்த நூலைப் புரிந்துகொள்ள முடியும். இது 1901 ஆம் ஆண்டின் முடிவில் எழுதப்பட்டு 1902 இல் வெளியிடப்பட்டது. அப்போது லெனின் ‘இஸ்க்ரா’ (Iskra) என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்தார். ரஷ்ய ஜார் மன்னனின் ஆட்சியால் நாடுகடத்தப்பட்டவர்கள், ஐரோப்பாவில் பல மையங்களில் இருந்து கொண்டு அந்தப் பத்திரிகையை வெளியிட்டார்கள். அந்தக் காலத்தில் ரஷ்ய சமூக ஜனநாயக இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் இஸ்க்ரா ஆசிரியர் குழுவில் இருந்தனர்.
லெனின், பிளெகானோவ், மார்ட்டோவ், போத்ரெசோவ், அக்சல்ரோட், வெராசாசுலிச் ஆகியோர் ஆசிரியர் குழுவில் செயல்பட்டனர். ரஷ்யா முழுமைக்குமான ஒரு சமூக ஜனநாயகக் கட்சியை உருவாக்கும் போராட்டத்திற்கு ‘இஸ்க்ரா’ இதழ் ஒரு மேடையாக இருந்தது. பல்வேறு குழுக்கள், சங்க அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ரஷ்ய நாட்டில் சமூக ஜனநாயக இயக்கமாகச் செயல்பட்டு வந்தன. அவை சிதறடிக்கப்பட்ட நிலையிலும், பல அமைப்புகள் குறுகிய எல்லைக்குள் நிறுத்தப்பட்ட சூழலிலும்தான் இஸ்க்ரா இதழ் உருவாக்கப்பட்டது.
ரஷ்யாவில் சமூக ஜனநாயக இயக்கத்திலும், மற்ற நாடுகளில் செயல்பட்ட அமைப்புகளிலும் ‘பொருளாதாரவாதிகள்’ இருந்தார்கள். அந்த ‘பொருளாதாரவாதிகள்’ தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டமே முதன்மையானது என்று கூறியதுடன், அதுவே அரசியல் இயக்கம் மற்றும் அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக இருக்க வேண்டும் என்று கருதினார்கள். இதற்கு எதிராகவே, லெனின் தனது ‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற நூலை எழுதினார்.
இந்த நூலில் காணப்படும் தர்க்க வாதங்கள், ஒரு கட்சிக்கான அடிப்படையை வழங்குகின்றன. தொழிலாளி வர்க்கம், தனது வர்க்க அரசியல் உணர்வை எப்படி அடைய முடியும்; புரட்சிக்கான கட்சி என்பது எப்படி தொழிலாளி வர்க்கத்தில் உள்ள முன்னணிப் பிரிவைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று லெனின் விவரிக்கிறார். ‘ஜனநாயக மத்தியத்துவம்’ (democratic centralism) என்ற கட்சி அமைப்புக் கோட்பாட்டையும் இந்த நூல் உருவாக்கத் தொடங்குகிறது. லெனின் எழுதி 1904 இல் வெளியிடப்பட்ட ‘ஓரடி முன்னால், ஈரடி பின்னால்’ (“One Step Forward, Two Steps Back”) என்ற நூலில் இந்தக் கோட்பாடு மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தன்னெழுச்சியும், உணர்வும்
தன்னெழுச்சியான போராட்டங்களை நம்பியிருப்பதாகப் பொருளாதாரவாதம் அமைகிறது; இந்த வாதத்தைத் தாக்குவதன் மூலம் லெனின் தனது நூலைத் தொடங்குகிறார். தொழிற்சங்கங்கள் நடத்தும் பொருளாதாரப் போராட்டம் தொழிலாளர்களின் மீது நடக்கும் துன்புறுத்தலுக்கும், பணி நிலைமைகளுக்கும் எதிராக எழுகின்ற அடிப்படையான எதிர்வினையிலிருந்து தோன்றுகின்றன. இத்தகைய தன்னிச்சையான போராட்டங்களால் தொழிற்சங்க உணர்வை மட்டுமே வளர்க்க முடியும். “பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சியை மட்டும் பயன்படுத்தும்போது அதனால் தொழிற்சங்க உணர்வை மட்டுமே வளர்க்க முடியும் என்பதை அனைத்து நாட்டு அனுபவங்களும் காட்டுகின்றன” என்கிறார் லெனின். மேலும் அவர், “தன்னெழுச்சி உணர்வை அதன் சாரத்தில் பார்க்கும்போது, அது (வர்க்க) உணர்வின் கருவே அன்றி வேறில்லை என்று அறியலாம்” என்று கூறுகிறார்.
தன்னெழுச்சிப் போராட்டங்களை லெனின் குறைத்துப் பார்க்கவில்லை; ஆனால் அத்தகைய தன்னெழுச்சி நடவடிக்கைகளுக்குள்ள வரம்புகளைச் சுட்டிக்காட்டினார். “புரட்சியாளர்கள் ஒரு வலுவான அமைப்பை ஏற்படுத்திப் போராட்டங்களை வழிநடத்தாத வரை, பாட்டாளிகளின் தன்னெழுச்சியான போராட்டம், மெய்யான வர்க்கப் போராட்டமாக ஆவதில்லை” என்கிறார்.
வர்க்க உணர்வு அல்லது சோசலிச உணர்வானது ‘வெளியில் இருந்து’ மட்டுமே உருவாக்கப்படுகிறது என்ற வாதத்தின் மூலம் லெனின் மற்றொரு கருத்தை முன்வைக்கிறார். அதாவது, “பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க அரசியல் உணர்வை வெளியிலிருந்து மட்டுமே ஊட்ட முடியும். அதாவது பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டத்திற்கு வெளியே இருந்து, உழைப்பாளருக்கும் வேலை வழங்குனருக்கும் இடைப்பட்ட உறவின் எல்லைக்கு வெளியிலிருந்து மட்டுமே உருவாக்கிட முடியும். இந்த அறிவைப் பெறக்கூடிய ஒரே தளம் என்பது அனைத்து வர்க்கங்களும் அனைத்து சமூகப் படிநிலைகளும் அரசோடும், அரசாங்கத்தோடும் கொண்டுள்ள உறவுகளின் தளமே ஆகும். இதுவே அனைத்து வர்க்கங்களுக்கிடையிலான பரஸ்பர உறவுகளின் தளமும் ஆகும்.”
வர்க்க உணர்வை ‘வெளியிலிருந்து’ மட்டுமே கொண்டுவர முடியும் என்ற இந்த விளக்கம், பாட்டாளி வர்க்கத்தின் சுய விடுதலையைப் பற்றிய மார்க்சின் கருத்தோடு முரண்பட்டதாக அமைகிறது என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால், பாட்டாளி வர்க்கத்தினரிடையே (வர்க்க, சோசலிச) உணர்வு எப்படி உருவாகி வளர்கிறது என்பதைப் பற்றிய லெனினின் புரிதலானது, பாட்டாளி வர்க்கத்தின் தன்மையையும், உள் அடுக்குகளையும் பற்றிய ஆழமான புரிதலை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். மேலும் இது மார்க்சின் சுய விடுதலைக் கருத்திலிருந்து முரண்பட்டதாக இல்லை.
தொழிற்சங்கப் போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உணர்வை வளர்த்துக் கொள்வதில், வெவ்வேறு அடுக்கு நிலைகள், வெவ்வேறு உற்பத்தி நிலைகள் மற்றும் வருமான வேறுபாடுகள் ஆகியவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, லெனின் சுட்டிக்காட்டியது போலவே, வர்க்க அரசியல் உணர்வைப் பாட்டாளிகள் தங்கள் அரசியல் உணர்வை தொழிலாளர்-முதலாளி இடைப்பட்ட உறவுகளின் வரம்புக்கு வெளியிலிருந்து மட்டுமே கொண்டுவர முடியும். இங்கேதான், கோட்பாட்டில் முன்னேறிய ஒரு அமைப்பின் தேவை எழுகிறது. ‘வெளியிலிருந்து’ வரும் ஊடகம் என்பது, மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியே. இதுவே பாட்டாளிகளிடையே வர்க்க உணர்வை உருவாக்கிடும்.
மத்தியப்படுத்துதல்
“என்ன செய்ய வேண்டும்?” நூல் ரஷ்யாவில் உள்ள அமைப்பின் ‘மூலநிலைத் தன்மையை’ (primitiveness) பற்றி விவாதிக்கிறது. அங்கு சமூக ஜனநாயக அனுபவச் சங்கங்களும், தலைமறைவாக இயங்கும் குழுக்களும் மட்டுமே இருந்தன. தொழிற்சங்கங்களும் கூட மற்ற தொழிற்சங்கங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் உள்ளூர் அளவில் வேலை செய்து வந்தன. எனவே, இஸ்க்ரா பத்திரிக்கையின் முக்கிய நோக்கமும், அதன் வலுவான முன்னெடுப்பாளரான லெனினுக்கும் இருந்த முக்கியக் கடமை, ரஷ்யா முழுமைக்குமான ஒரு கட்சியை உருவாக்குவதே ஆகும். அது ஒரு மத்தியப்படுத்தப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும் என்பதும் அன்றைய தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தத் தலைவர்கள் பின்னர் மென்ஷிவிக் பிரிவினராக ஆனார்கள். ஒரு மத்தியப்படுத்தப்பட்ட கட்சியின் தேவையை லெனின் வரையறுத்ததற்கான காரணம், பாதுகாப்பில்லாத சூழலும் அடக்குமுறை நிலைமைகளும் மட்டுமல்ல; மத்தியப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட அரசியலை அடிப்படையாகப் பெற்றதொரு கட்சியை உறுதி செய்வதே அதன் நோக்கமாக இருந்தது.
அரசியல் கட்சி அமைப்பு மத்தியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, ரஷ்ய நாடு முழுமைக்குமான ஒரு செய்தித்தாளின் தேவையை அவர் வலியுறுத்தினார். உள்ளூர் பத்திரிக்கைகள் மட்டும் போதாது என்று அவர் கூறினார். தனது நூலில் எழுதியுள்ள பல கருத்துக்களை, மே 1901 இஸ்க்ரா பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையிலேயே சுட்டிக்காட்டியுள்ளார். “எங்கிருந்து தொடங்குவது?” என்ற அந்தக் கட்டுரையில் அவர், “ஒரு பத்திரிக்கை என்பது கூட்டுப் பிரச்சாரகராகவும், கூட்டான தூண்டுதல்காரராகவும் மட்டும் அல்ல, அதுவொரு கூட்டு அமைப்பாளரும் ஆகும்” என்று லெனின் எழுதினார். இந்தச் சுருக்கமான விவரிப்பை அவர் ‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற நூலிலும் மீண்டும் கூறினார். 1903 ஆம் ஆண்டில் நடந்த ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மாநாட்டில், இஸ்க்ரா அதிகாரப்பூர்வ ஏடாகியது.
மத்தியப்படுத்துதல் என்ற இலக்கை அது முன்னெடுத்தது. அனைத்து மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரங்களையும் கொண்ட அரசை எதிர்கொள்ள அவ்வாறு இருப்பது முன் தேவையாகும். ‘என்ன செய்ய வேண்டும்?’ நூலில் வலியுறுத்தப்பட்ட ‘மத்தியப்படுத்தல்’ கோட்பாடுதான், ரஷ்ய, ஐரோப்பிய சோசலிச ஜனநாயகத் தலைவர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. மத்தியப்படுத்தும் லெனினின் நோக்கம், கட்சிக்குள் ஜனநாயகச் செயல்பாட்டை முடக்கிவிடும் என்று அந்த விமர்சகர்கள் கூறினார்கள். ஆனால் இந்த விமர்சனம், தவறான இலக்கை நோக்கியதாகும். லெனினியம் முன்வைக்கும் மத்தியப்படுத்தல் என்பது ஜனநாயகத்திலிருந்து துண்டிக்கப்பட்டது அல்ல; மேலும் மத்தியப்படுத்துவதின் நோக்கம், அதிகாரங்கள் அனைத்தையும் குவித்துக்கொள்ளும் நோக்கம் கொண்டதும் அல்ல. மத்தியப்படுத்தப்பட்ட அரசியல் உத்திக்காகவும், ஒருங்கிணைந்த அரசியல் பாதையை உறுதி செய்யவுமே அது முன்வைக்கப்பட்டது.
‘என்ன செய்ய வேண்டும்?’ நூலில் வரையறுக்கப்படும் மத்தியப்படுத்தல் வடிவமானது, அந்தக் காலத்தில் நிலவிய தலைமறைவு செயல்முறையாலும், அரசியல் செயல்பாடுகளின் மீதான அடக்குமுறை நிலைமைகளாலும் தீர்மானிக்கப்பட்டது. சூழ்நிலை மாறுகிறபோது, இந்த வடிவமும் மாறக்கூடும். அதன் சாராம்சமான உள்ளடக்கம் என்பது, ஒருங்கிணைந்த அரசியல் தலைமையோடு, மேலிருந்து கீழாக ஒரு கட்சியைக் கட்டமைப்பது எப்படி என்பதுதான். ஜார் ஆட்சியின் கீழ் கடுமையான அடக்குமுறையைச் சந்திக்கும் காலத்தில், கட்சிக்குள் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதிலும், அனைத்து நிலைகளிலும் தேர்தல் மூலம் கமிட்டிகளை அமைக்கவும் முடியாமல் இருந்ததாலேயே, தனது நூலில் லெனின் மத்தியப்படுத்தல் கோட்பாட்டைக் கூடுதலாக வலியுறுத்தினார். 1905 புரட்சிப் பெருவெழுச்சிக்குப் பிறகு இது மாறியது; பின்னர் திறந்த செயல்பாட்டுக்கான நிலைமைகள் உருவாகின.
முன்னணிப்படை
பாட்டாளி வர்க்கத்தின் கட்சியாக அமைந்த சமூக ஜனநாயகக் கட்சியானது, பாட்டாளிகளின் உணர்வு, அர்ப்பணிப்பு அளவைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அனைவரையும் உள்ளடக்கிச் செல்லும் ஒரு அமைப்பாக இருக்க முடியாது என்று லெனின் வலியுறுத்தினார். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் பிரிவைக் கொண்டதொரு கட்சி என்ற கருத்தையே ‘முன்னணிப்படை’ என்று அவர் முன்வைத்தார். இவ்வாறு அவர் சொல்வது, மிகவும் உணர்வுள்ள, போராட்ட மனப்பாங்கு கொண்ட தொழிலாளர்களைக் கட்சி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுப்பதைக் குறிக்கிறது. அந்த உறுப்பினர்கள், வலைப்பின்னலாக இணைந்த பல்வேறு அமைப்புகளின் வழியே தொழிலாளர்களிடமும், வெகுமக்களிடமும் பணியாற்றுவார்கள்.
அவர், கட்சி அமைப்பானது தொழில்முறைப் புரட்சியாளர்களுடையதாக இருக்க வேண்டுமென்றார். “புரட்சிகர செயல்பாட்டையே தங்கள் முதன்மைப் பணியாகக் கொண்டவர்களை உள்ளடக்கியதாக, ஒரு புரட்சிகரக் கட்சி அமைப்பு அமைந்திட வேண்டும்” என்று கூறினார்.
தொழில்முறைப் புரட்சியாளர்களைக் கொண்ட முன்னணிப்படையாக இருக்க வேண்டும் என்ற லெனினின் வலியுறுத்தல், அன்றைய நிலைமையின் அவசரத் தேவையிலிருந்து எழுந்தது ஆகும். 1905ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சிப் பேரெழுச்சிக்குப் பின்னர், போராட்ட மனப்பாங்குள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்கும் மாபெரும் சாத்தியத்தை லெனின் உணர்ந்தார். சமூக-ஜனநாயக உணர்வு கொண்ட தொழிலாளர்கள், அந்தப் புரட்சிப் பேரெழுச்சியில் உருவாகி வளர்ந்ததை அவர் கவனித்தார். அதன் பின்னர் உருவான போல்ஷ்விக் கட்சி, பல்வேறு நிலைகளில் தொழில்முறைப் புரட்சியாளர்களையும், முழுநேர ஊழியராக அல்லாத பாட்டாளி வர்க்க உறுப்பினர்களையும் கொண்டதாக அமைந்திருந்தது.
முன்னணிப்படை என்ற கருத்தாக்கத்தின் பொருள், பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பிரிவினரைக் கொண்ட அமைப்பாகக் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஆனால் முன்னணிப் போராளியின் பங்களிப்பை, முன்னேறிய கோட்பாட்டைக் கொண்டு வழிநடத்தும் ஒரு கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும்’ என லெனின் தெளிவாகக் கூறினார்.
கம்யூனிஸ்ட் அறிக்கை நூலில், கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதிவாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்” என்ற வரையறுப்பு முன்வைக்கப்படுகிறது.
லெனின் முன்வைக்கும் முன்னணிப்படை என்ற கருத்து, கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இந்த வரையறுப்பிலிருந்து எழுவதே ஆகும். முன்னணிப்படை என்பதில் இருவிதமான அணுகுமுறைகள் உள்ளன. முதலில், கட்சி அமைப்பானது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வுபெற்றவர்களைக் கொண்டதாக அமைய வேண்டும். அதே சமயம், இந்த முன்னணிப்படையே பாட்டாளி வர்க்கத்திற்கும், அடக்கப்பட்ட அனைத்து சமூகப் பிரிவினருக்கும் ஆதரவாகப் பேசவும், செயல்படவும் வேண்டும்.
பல்வேறு அடுக்குகளாகப் பிரிந்துள்ள பாட்டாளி வர்க்கப் பிரிவுகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்குப் பாட்டாளி வர்க்க உணர்வை ஊட்டுவதாக அந்த முன்னணிப்படை மட்டுமே அமைந்திட முடியும். அதுமட்டுமல்லாது, புரட்சிகர எழுச்சியில் மற்ற ஆதரவு வர்க்கங்களையும், மக்கள் பிரிவினரையும் இணைத்திடவும், அந்தப் பிரிவுகளில் இருந்து முன்னேறிய பகுதியினரையும் கட்சியில் இணைத்திடவும் முன்னணிப்படையாக ஒரு கட்சி அமைவது அவசியமாகும்.
லெனின் முன்வைக்கும் கோட்பாட்டின்படி, அரசியல் உணர்வுக்கும், கட்சி அமைப்புக்கும் இடையில் இயங்கியல் உறவு உள்ளது. எந்த வர்க்கம் பாதிக்கப்பட்டாலும், எல்லாவிதமான சட்டவிரோத ஒடுக்குமுறைகள், வன்முறைகள், தவறான போக்குகள் நடந்தாலும், அவற்றை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் நின்றிடப் பயிற்சியளிக்க வேண்டும். அதுவே பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வுக்கான தேவை. அடக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் எதிராகப் போராடுவதற்கு முன்னணிப்படையாக அமைவது அவசியமாகும்.
முன்னணிப்படை என்பது, தொழிற்சங்கங்களும், வேறு பல அமைப்புகளும் கொண்ட வலைப்பின்னலின் மூலம் தொழிலாளர்கள் – விவசாயிகளுடன் பிணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு
‘என்ன செய்ய வேண்டும்?’ நூலின் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால், இந்த நூல் ஒரு புரட்சிகர சமூக ஜனநாயகக் கட்சியை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தின் மிக முக்கியக் கட்டத்தில் வெளியானது. இந்த நூலில் லெனின் முன்வைத்த தர்க்க வாதங்களில் இருந்து, புரட்சிகர எழுச்சியை வழிநடத்த உகந்த ஒரு அமைப்பிற்கான கோட்பாட்டு அடிப்படையும், அத்தகைய அமைப்பிற்கான வரையறுப்புகளும் உருவாகின.
1907 நவம்பர் மாதத்தில், அதுவரை லெனின் எழுதியவை ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டன. ‘பன்னிரண்டு ஆண்டுகள்’ என்ற அந்தத் தொகுப்பிற்கு லெனின் எழுதிய முன்னுரையில் ‘என்ன செய்ய வேண்டும்?’ நூலைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். “‘என்ன செய்ய வேண்டும்?’ நூலை இப்போது விமர்சிப்போர் செய்கிற அடிப்படையான தவறு, அந்த நூல் எழுதப்பட்டது நமது கட்சியின் ஒரு குறிப்பிட்ட காலத்தில், இன்றிலிருந்து பார்க்கும்போது பல ஆண்டுகள் முன்பே முடிந்துவிட்ட, வளர்ச்சிக் காலத்தின் வரலாற்றுச் சூழலுடன் தொடர்புபடுத்திப் பார்க்காமலே இந்தப் பிரசுரத்தை மதிப்பிடுவதாகும்” என்று அவர் கூறினார்.
இதன் மூலம் லெனின் கூற விரும்பியது என்னவென்றால், கட்சி ஸ்தாபனத்திற்காகப் பரிந்துரைத்த சில வழிமுறைகள், அக்காலத்தின் (1901-02) குறிப்பான நிலைமைகளால் தீர்மானிக்கப்பட்டன என்பதைத்தான். எடுத்துக்காட்டாக, மத்தியப்படுத்தல் கட்டமைப்பானது, அன்றைய ஜார் ஆட்சியின் சர்வாதிகாரத் தாக்குதல்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டது. 1905 புரட்சிக்குப் பிறகு மத்தியப்படுத்தல் வடிவம் மாறியது. முன்பு, மத்தியக் குழுவே, அடுத்தடுத்த நிலையில் உள்ள அனைத்துக் கட்சிக் குழுக்கள் தொடர்பான அதிகாரங்களையும் கொண்டிருந்தது. 1905 காலத்திற்குப் பிறகு, லெனின் அனைத்துக் குழுக்களுக்கும் தேர்தல் என்ற கோட்பாட்டை வலியுறுத்தினார். மத்தியக் குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன; அதே நேரத்தில் கீழ்நிலையில் உள்ள குழுக்களுக்கு அதிக அளவு சுயாட்சி வழங்கப்பட்டது.
ஜனநாயக மத்தியத்துவம் என்பது லெனினிய ஸ்தாபனக் கோட்பாட்டின் சாராம்சமாகும். ஒரு புரட்சிக் கட்சியானது, அது செயல்படும் குறிப்பிட்ட நிலைமைகளில், மத்தியப்படுத்தல் மற்றும் ஜனநாயகத்தின் சரியான கலவையைப் பயன்படுத்த வேண்டும்.
புரட்சிகர எழுச்சியை உருவாக்கி, வளர்த்தெடுக்கக் கூடிய ஒரு அமைப்பைக் கட்டியெழுப்புவதே கட்சி பற்றிய லெனின் கருத்து ஆகும். இதற்காக, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் பிரிவுகளைக் கட்சிக்குள் ஈர்த்து, அவர்களை அரசியல் அடிப்படையில் உணர்வூட்டப்பட்ட முன்னணிப்படையாக அமைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இத்தகைய அமைப்புதான் வர்க்கப் போராட்டத்தின் மூலமும், எழுச்சி நடவடிக்கைகளின் மூலமும் வலுப்படுத்தப்பட்டு, முழுமையாகச் சட்டப்பூர்வ நிலைமையிலும், அரைச் சட்டப்பூர்வமான அல்லது முற்றிலும் சட்டவிரோதமான நிலைமைகளில் செயல்படும் திறன் கொண்டதாக இருக்கும். வர்க்க அரசியலின் அவசரத் தேவைகளுக்கும், சுற்றுப்புற நிலைமைகளுக்கும் ஏற்ப போராட்ட வடிவங்களை மாற்றுகிற ஒரு அமைப்புதான் தேவையாகிறது. இதற்குக் கட்சி மத்தியப்படுத்தலுடன் இயங்க வேண்டும். மார்க்சியத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சிக்கு ‘ஜனநாயக மத்தியத்துவம்’ என்பதே சிறந்த அமைப்புக் கோட்பாடு ஆகும். வர்க்கப் போராட்டம் என்பது ஒரு கூட்டுச் செயல்முறை. ஜனநாயக மத்தியத்துவம் என்பது முடிவுகளைக் கூட்டாக மேற்கொள்வதையும், செயல்பாடுகளைக் கூட்டாக முன்னெடுப்பதையும் ஊக்குவிக்கிறது. சிந்தனையில் சுதந்திரத்தையும், செயல்பாட்டில் ஒற்றுமையையும் இது ஏற்படுத்துகிறது.
‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற நூலின் முக்கியத்துவம் என்னவென்றால், ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டுப் பரிமாணத்தின் தொடக்கமாக அது அமைந்தது. லெனினிய கட்சி அமைப்புக் கோட்பாட்டுக்கு அடித்தளமாக அமைந்தது.
“அதிகாரத்திற்கான போராட்டத்தில், தொழிலாளர்களுக்கு அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் இல்லை” என்று லெனின் கூறியபோது, அவர் புரட்சிகர எழுச்சிகளின் மத்தியில் இருந்தார் (“ஓரடி முன்னால், ஈரடி பின்னால்”). அவ்வாறான ஒரு அமைப்பினைக் கட்டியமைக்கும் போராட்டத்திற்கான மிகவும் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் தொடக்கமாக அமைந்தது ‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற நூல். உலகின் அனைத்துப் புரட்சியாளர்களுக்கும் அந்த நூல் காலங்கள் கடந்தும் தனது பொருத்தப்பாட்டைப் பேணுவதற்கான காரணமும் அதுவே.
தமிழில்: இரா. சிந்தன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply