நவீன கிராமங்களும், நீடித்த வளர்ச்சியும் சாத்தியமா? சீனா சோசலிச படிப்பினைகள் காட்டுவது!
இரா. சிந்தன்
(இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மந்த்லி ரிவியூ இதழில் சீன இடதுசாரி சிந்தனையாளர் லு ஜின்வு எழுதிய ‘சீன பாணி நவீனமாதல்: புரட்சியும், பாட்டாளி-விவசாயி கூட்டணியும் ‘ என்ற கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை)
அனைத்து மக்களுக்கும் மேம்பட்ட வாழ்வை உறுதி செய்வது சோசலிச கட்டமைப்புதான் என்ற போதிலும், பின் தங்கிய ஒரு நாட்டில் உற்பத்தி சக்திகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது. பின் தங்கிய நாடுகளிலேயே சோசலிச புரட்சிகள் வெற்றியடைந்துள்ள நிலையில், அங்கே உற்பத்தி சக்திகளை வளர்ப்பதன் மூலம் விவசாய உற்பத்தியையும் நவீனமாக்க வேண்டும்; தொழில்மயமான ஒரு நவீன சமுதாயமாகவும் அதை உருவாக்கிட வேண்டும். வளர்ச்சியை சாதித்த பின்னர் அதனை நீடித்து நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். நவீன வளர்ச்சியின் பலன்களை அனைவருக்கும் பொதுவான வளமாக மாற்றுவது என்ற கூடுதல் கடமையை சோசலிசம் மட்டுமே தமக்கு வகுத்துக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த திசையில் சோசலிச நாடுகளின் அனுபவங்களை படிப்பது அனைத்து உலக மக்களுக்குமே தேவையான ஒன்றாகும்.
ரஷ்ய நவீனமயமும், தகர்வும்!
ஜார் மன்னரின் ஆட்சியில் இருந்த ரஷ்யா, தம்முடைய மூலதனத் தேவைக்காக அன்னிய நாடுகளையே எதிர்பார்த்திருந்தது. ரஷ்யாவில் நடைபெற்று வந்த முக்கிய உற்பத்தி விவசாயம்தான். விவசாய விளை பொருட்கள்தான் ஏற்றுமதியும் செய்யப்பட்டன. அதனால்தான் முதல் உலகப்போர் சமயத்தில், தொழில்மய நாடாக இருந்த பிரஷ்ய-ஜெர்மனியின் தாக்குதலில் ரஷ்யா தோல்வியடைந்தது. 1917 ஆம் ஆண்டு சோவியத் புரட்சிக்கு பின்னர், உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதில் சோசலிச அரசு கவனம் செலுத்தியது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது, உலகிற்கே பாசிச அச்சுறுத்தலாக எழுந்த ஜெர்மானிய நாஜிப் படைகளை சோவியத் ரஷ்யா வீழ்த்தி முடித்தது. 2 கோடிக்கும் அதிகமான செஞ்சேனை வீரர்கள் அளப்பரிய உயிர்த்தியாகம் செய்து இந்த வெற்றியை சாதித்தார்கள். இந்த வெற்றிக்கு, சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டிருந்த தொழில்மய கட்டமைப்பும் ஒரு காரணமாகும்.
ஆயுத தொழிற்சாலைகளையும், கனரக தொழில்களையும் அடிப்படையாகக் கொண்டதொரு தொழில் அடித்தளத்தை சோசலிச ரஷ்யா மிக எளிதாக உருவாக்கிவிடவில்லை. 1929 ஆம் ஆண்டில், ஜோசப் ஸ்டாலின் ‘பெரும் மாற்றத்திற்கான ஆண்டு’ என்ற தலைப்பில் பேசிய உரையில் அதை குறிப்பிட்டார். சோசலிச ரஷ்யாவில் தொழில்களை உருவாக்கி வளர்த்தெடுப்பதற்கான நீண்ட காலக் கடன்கள் அல்லது நிதி உதவிகள் மறுக்கப்பட்டு வந்தன. இதனை சுட்டிக்காட்டிய ஸ்டாலின் , ‘முதலாளித்துவ நாடுகள் எதுவுமே நமக்கு கடனோ நிதியோ தர மறுப்பதற்கான காரணம் இதுதான். இவ்வாறான உதவிகள் இல்லாமல் நாம் மூலதனத்தை திரட்ட முடியாது. கனரக தொழில்களை வளர்த்தெடுக்க முடியாது. எனவே நாமே தன்னியல்பாக முதலாளித்துவ அமைப்பிடம் சரணடைந்துவிடுவோம் என்று நினைக்கிறார்கள்’
விவசாயத்தில் கிடைக்கும் உபரியை உறிஞ்சுவதன் மூலமே தன்னுடைய தொழில் நடவடிக்கைகளை வளர்த்தெடுக்கும் நிலையில் சோசலிச நாடுகள் விடப்பட்டன. ‘பாட்டாளி – விவசாயி கூட்டணியை’ உருவாக்கியிருந்த சோசலிச ரஷ்யா, மாபெரும் மக்கள் ஒற்றுமையின் துணையோடு இந்தப் பாதையை தேர்வு செய்தது.
இருப்பினும், 1929 ஆம் ஆண்டில் உலக பொருளாதார பெருமந்தம் தொடங்கியது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. உணவு தானிய ஏற்றுமதியையே அதிகம் நம்பியிருந்த சோவியத் ஒன்றியம், ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதன் நிலைமையை சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால், அதற்கும் தடை ஏற்படுத்தும் விதத்தில் உணவு உற்பத்தி சரிந்தது.
சோவியத் ஒன்றியத்தின் உள்நாட்டு நுகர்வுத் தேவை குறைவாக இருந்தது. எனவே, கனரக தொழில்களை வளர்ப்பதில் கவனம் குவிந்தது. மேலும், ஏகாதிபத்திய நாடுகளின் ஆயுதப் போட்டி கொடுத்த நிர்ப்பந்தத்தால், ஆயுத உற்பத்தி முக்கிய இடம் பெற்றது. இந்த வளர்ச்சிப் பாதை உலகப்போரில் சோவியத் ஒன்றியத்திற்கு கைகொடுத்தது. ஆனால், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நீடித்த வளர்ச்சி இலக்குகளில் அது நெருக்கடிகளைக் கொண்டுவந்தது.
1963இல் குருச்சேவ் நிர்வாகத்தில் உணவு தானிய உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டது. ரேசன் முறையில் மட்டுமே உணவு விநியோகம் செய்கின்ற அளவுக்கு இந்த நெருக்கடி தீவிர பாதிப்பை உருவாக்கியது. மறுபக்கம் விவசாயிகளின் வருமானம் சரிந்தது. இடுபொருள் செலவை விடவும் உற்பத்தி பொருட்களின் மதிப்பு சரிந்தது. ஆனால் தானிய கொள்முதல் அளவு அதிகரித்து வந்தது. பிரஷ்னேவ் நிர்வாகத்தில் சோவியத் ஒன்றியத்தின் விவசாய நெருக்கடி தீவிரமானது. அவர் கொள்முதல் விலையை உயர்த்தினார். விவசாய மானியங்களும், அரசு முதலீடுகளும் அதிகரித்தன. இருந்தாலும் வீழ்ச்சியை முற்றிலும் தடுக்க முடியவில்லை. இந்த வீழ்ச்சியின் விளைவுகள் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதித்தன. உணவுத் தேவைக்காக இறக்குமதி செய்ய வேண்டி வந்தது.
இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்காவில் உணவுதானிய மிகை உற்பத்தி பிரச்சனை இருந்து வந்தது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பனிப்போர் நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், அதன் உணவு தானிய தேவைகளை அமெரிக்கா தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. 1972 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் தனக்கு தேவையான 28 மில்லியன் டன் தானியங்களை வாங்குவதற்கு 860 டன் தங்கம் கையிருப்பை செலவிட்டது. இவ்வாறு அது மேற்கொண்ட இறக்குமதியில் 18 மில்லியன் டன் அமெரிக்காவில் இருந்து பெறப்பட்டது. 1981, 1982 ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் தனது பெருமளவு கோதுமைத் தேவைக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்க நேர்ந்தது. இயந்திரங்களுக்கு அடுத்தபடியாக உணவு தானியங்களே இறக்குமதி செய்யப்பட்டன.
சோவியத் ஒன்றியம், தன் வசமிருந்த அன்னியச் செலவாணியை இந்த இறக்குமதி தேவைகளுக்காகவே கூடுதலாக பயன்படுத்தியது. அதனால் மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு உதவிசெய்ய முடியவில்லை. தொழில் உற்பத்தியை விரிவாக்குவது பாதித்தது. இதனால் சந்தை விரிவாக்கமும் பாதித்தது. மக்களுக்கு தேவையான பொருட்களின் உற்பத்தி விரிவடையவில்லை என்பதால் நுகர்வு குறைந்து சேமிப்பு அதிகமானது. இது பண வீக்கம் (விலைவாசி உயர்வு) ஏற்படுத்தியது.
பனிப்போர் காலகட்ட ஏகாதிபத்திய நெருக்குதலை மீறி சோவியத் நாடு, மிகக் குறுகிய காலத்திலேயே அடுக்கடுக்கான பொருளாதாரச் சாதனைகளை செய்திருந்த போதிலும் விவசாய உற்பத்தியிலும், தொழில் உற்பத்தியிலும் நீடித்த வளர்ச்சியை தக்கவைக்க முடியாததன் விளைவாக, அமைப்பு சார் நெருக்கடி உருவானது. பின்னர் சோவியத் ஒன்றியம் சிதறுண்டு போவதில் இது பங்களித்தது.
சீன புரட்சியும், நவீனமாதலும்!
ஏகாதிபத்திய சுரண்டலாலும், காலனி ஆதிக்கத்தாலும் துவண்டுபோயிருந்த சீனாவில் 1949 ஆம் ஆண்டில் சோசலிச புரட்சி வெற்றியடைந்தது. சோவியத் ஒன்றியத்தின் தொடக்க கால அணுகுமுறைகளில் இருந்தும், அனுபவங்களில் இருந்தும் மக்கள் சீனம் தனது படிப்பினைகளை எடுத்துக் கொண்டது. மேலும், சமகாலத்தில் சோவியத் ஒன்றியம் எதிர்கொண்டு வந்த சவால்களையும் அது கவனித்தது.
சீன புரட்சிக்கு தலைமையேற்ற தோழர் மாவோ, ‘மக்களிடமிருந்து மக்களுக்கு’ (மாஸ்லைன்) என்ற அணுகுமுறையோடு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை வடிவமைத்திருந்தார். மார்க்சிய லெனினிய பார்வையிலான இந்த அணுகுமுறை, விவசாயிகளிடையே கம்யூனிஸ்ட் கட்சியை ஆழமாக வேரூன்றச் செய்தது. படிப்படியாக சிதைந்து அழிந்துகொண்டிருந்த கிராமப்புறப் பகுதிகள் ஒருங்கிணைந்தன. புரட்சியின் வலிமையாக மாறின.
பின் தங்கியிருந்த சீனாவை நவீன நாடாக கட்டமைப்பது தொடர்பான விவாதங்கள் 1954 முதல் சீன மக்கள் தேசிய காங்கிரசில் இடம்பெற்றிருந்தன. சீனாவின் முதல் பிரதமர் தோழர் சூ என் லாய், சீனாவின் தொழில்துறை, விவசாயத் துறை, போக்குவரத்து, ராணுவம் ஆகியவை நவீனமாக்கப்பட வேண்டும் என்றார். சீனாவின் தொழில்மய முயற்சிக்கு தேவையான மூலதனத்தை திரட்டிட, விவசாயத்தில் இருந்துதான் உபரியை உறிஞ்சியாக வேண்டியிருந்தது. விவசாயிகள் இவ்வாறு முழக்கமிட்டார்கள்: “உற்பத்தியில் நாட்டுக்கு தேவையானதை கொடுத்த பின்னர், கூட்டு உடமையாக வைத்துக் கொண்டது போக, மற்ற எல்லாம் நமக்கு”
மக்கள் சீனத்தின் நிலவுடைமை சோவியத் ஒன்றியத்தில் இருந்து மாறுபட்டதாகும். சோவியத் ஒன்றியத்தில் நில குத்தகை முறை நிலவியது. ஆனால் சீனாவில் நகர்ப்புற நிலம் அனைத்தும் பொதுச் சொத்துக்களாகவும், கிராமப்புற நிலம் அனைத்தும் கூட்டு உடைமையாகவும் ஆக்கப்பட்டன. ‘பாட்டாளி-விவசாயி கூட்டணி’ என்ற மார்க்சிய-லெனினிய கோட்பாட்டிலிருந்து இந்த ஏற்பாடு வளர்த்தெடுக்கப்பட்டது. சீனாவின் நகர்ப்புற நிலம் அனைத்தும் பொதுச் சொத்துக்களாக இருப்பதால், உள்ளாட்சி நிர்வாகங்கள் அதை பயன்படுத்தி நகரமயத்தை வேகப்படுத்த முடிகிறது. பொது கட்டுமானத்தை உருவாக்குவதற்கு தேவையான நிதி வளத்தை திரட்டுவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. கிராமப்புற பகுதிகளில் நிலம் கூட்டு உடமையாக இருப்பது, கிராமப்புற மக்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது. நகரங்களுக்கு வேலைக்காக இடம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் வேலை இழக்க நேர்ந்தால், கிராமப்புற பகுதிகளுக்கு திரும்பி, நிலத்தை நம்பி வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். இது மற்ற வளரும் நாடுகளில் உருவாகியுள்ள நகர்ப்புற ஏழைகளின் குடியிருப்புப் பிரச்சனை சீனாவில் வலுவடையாமல் தவிர்க்க உதவி செய்கிறது.
உலகில் மொத்தமுள்ள சாகுபடிக்கு ஏற்ற நிலப்பரப்பில் சீனாவிடம் இருப்பது 10 சதவீதத்திற்கும் குறைவாகும். ஆனால் உலக மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேருக்கு சீனா உணவளிக்க வேண்டும். எனவே, சீனா தனது கிராமப்புறங்களையும், விவசாயத்தையும் தொடர்ந்து சீர்திருத்தி அமைப்பதன் மூலம் உற்பத்தியை பெருக்குவதும், தொடர்ந்து நிலைமைகளை மேம்படுத்துவதும் அவசியமாகும். விவசாயத்திலும், தொழில் துறையிலும் சீனா தனக்கான வளர்ச்சி இலக்குகளை தீர்மானித்தது. நூற்றாண்டின் இறுதிக்குள் அந்த இலக்குகளை எட்டவேண்டும் என்றும் முடிவு செயது.
1972 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் நிக்சன் சீனாவுக்குச் சென்றார். அந்த பயணத்தில் ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம், செயற்கை இழையும், பெட்ரோலிய உரமும் இறக்குமதி செய்வதாக முடிவானது. எனவே, அதுவரை பருத்தி விளைச்சலுக்கு பயன்பட்டு வந்த நிலப்பரப்பில் ஒரு பகுதி உணவு தானிய உற்பத்திக்கு திருப்பப்பட்டது. மேலும் இருக்கும் நிலப்பரப்பிலேயே கூடுதல் விளைச்சலை மேற்கொள்ள பெட்ரோலிய உர இறக்குமதி பயன்பட்டது. 1960களிலேயே உள்நாட்டில் பெட்ரோலிய உரத் தொழிற்சாலைகளையும் சீனா ஏற்படுத்தியிருந்தது. அறிவியல் ஆராய்ச்சியில் செலுத்திய தொடர் கவனத்தின் விளைவாக, 1975 ஆம் ஆண்டில், நவீன ரக நெல் விதைகள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் அதுவரை நெல் பயிரிடாத நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்ய முடிந்தது. கிராமப்புறம், விவசாய உற்பத்தி, நிலம் பயன்பாடு பற்றி சீனாவின் கொள்கைகள் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு, தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளன.
சீர்திருத்த ஆண்டுகளில் சீனா
குறிப்பாக, சீனாவில் சந்தையை மையப்படுத்திய தீவிர சீர்திருத்தங்கள் 1978 ஆம் ஆண்டில் தொடங்கின. அப்போது கிராமப்புற சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட்டன. விவசாயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட போர்க்கால உற்பத்தி முறையை மாற்றி, பொருளாதார சாத்தியங்கள் அடிப்படையில் உற்பத்தியை தூண்டுவது என்ற விதத்தில் இந்த சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. விவசாயத் துறையின் உபரியை உறிஞ்சுவதில்லை என கட்சி முடிவு செய்ததால், விவசாய துறை மேம்பாட்டுக்கு அந்த உபரி பயன்பட்டது. தொழில் வளர்ச்சியை ஏற்றுமதி சார்ந்து வளர்த்தெடுக்கத் தீர்மானித்தனர்.
கிராமப்புற நிலம் கூட்டு உடைமையாகவே தொடர்ந்தாலும், குடும்பங்களுக்கு நிலம் மறு விநியோகம் செய்யப்பட்டது. கணக்குகள் தனித்தனியாக பராமரிக்கப்பட்டு, தனிப் பொறுப்புகள் தீர்மானிக்கப்பட்டன. லாப நட்ட கணக்கீடு இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இது மிக முக்கியமான முடிவாகும். நிலம் கூட்டு உடமை என்ற ஏற்பாடு மாற்றப்படவில்லை. அதே சமயத்தில் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தை பயன்படுத்த முடிந்தது. கூட்டுப்பண்ணையில் இருந்து யாரேனும் விலகினால், அந்த நிலம் ஊரின் கூட்டு உடைமையாகியது. அந்த நிலம் மறுவிநியோகம் செய்யப்பட்டது. எனவே நிலம் முழுமையாக பயன்படுத்தப்பட்டது. இந்த சீர்திருத்தம், சீனாவின் கிராமப்புற பகுதிகளில் வாழ்ந்த 70 கோடி மக்களின் வாழ்விலும் தாக்கம் செலுத்திய மாற்றமாக அமைந்தது. இந்த மாற்றம் உணவு உற்பத்தியை அதிகப்படுத்தியதுடன் கிராமம் – நகரம் என இரண்டுக்கும் பலனளித்தது.
இருப்பினும், ஏற்றுமதி சார்ந்த தொழில் வளர்ச்சி காரணமாக மிகை உற்பத்தி ஏற்பட்டது. அதே சமயம், கிராமப்புற விவசாய உற்பத்தி அந்த அளவுக்கு வளர்ச்சியடையவில்லை. அரசு ஆதரவும் விலக்கிக் கொள்ளப்பட்டதால் வளர்ச்சி சமச்சீரற்றதாக ஆனது. கடற்கரை நகரங்களே வளர்ந்தன. இதனால் நகரங்களை நோக்கி பல லட்சம் பேர் ஈர்க்கப்பட்டார்கள். கிராமப்புற பொருளாதாரம் திணறியது. 1984 ஆம் ஆண்டு வாக்கில் உணவு உற்பத்தி தாராளமாக இருந்தது. ஆனால் அதன் விற்பனையில் நெருக்கடி ஏற்பட்டது. விளைபொருளுக்கு விலை கிடைக்காமல், வேளாண் நிலப்பரப்பு கைவிடப்படுவது அதிகரித்தது. மாவோ காலத்தில் நிலவிய கிராமப்புற-நகர்ப்புற ஒற்றுமை உணர்வுப் பூர்வமானதாகவும், பொருளியல் அடிப்படையிலானதாகவும் இருந்தது. ஆனால் சீர்திருத்தத்தால் உருவாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரம், இரட்டை நிலையை ஏற்படுத்தியது. இந்த முரண்பாடு தொடர்ந்தால் அது சீனாவை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி உணர்ந்தது.
இந்த ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் தொழில்துறைக்கும், விவசாய துறைக்கும் இடையிலான உறவு பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றியமைத்துக் கொண்டே வந்தது. விவசாயம், கிராமப்புற பகுதிகள், விவசாயிகள் பற்றிய சீன மத்திய குழுவின் அறிக்கை [Central Documents No. 1 (zhongyang yihao wenjian)] 1982-1986 வரையில் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வந்திருப்பதில் அதை காணலாம். நிலம் 15 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. தானிய உற்பத்தியில் 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த அரசுக்கு கொடுக்க வேண்டிய கோட்டா என்ற ஏற்பாடு கைவிடப்பட்டது.
சோவியத் ஒன்றியம் தகர்வுக்குள்ளான 1990 களில் சீனாவில் தீவிர சீர்திருத்தங்கள் நடைபெற்று வந்தன. அரசு நிறுவனங்களை சீர்திருத்தி அமைத்த போது, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். பல லட்சம் விவசாயிகள் வேலை தேடி நகரங்களை நோக்கி படையெடுத்தார்கள். வணிகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் சிறு விவசாயிகள் நொடித்து போனார்கள், சமூக நெருக்கடிகளும், சூழல் சார்ந்த நெருக்கடிகளும் ஏற்பட்டன. நகரங்கள்-கிராமப்புறங்கள் இடையிலான ஏற்றத்தாழ்வுகளும், கிழக்கு-மேற்கு பிராந்தியங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளும் அதிகமாகின. மேற்கத்திய வளர்ச்சிக் கருத்தாக்கங்களைக் கொண்டு சீனாவின் தனித்துவமான சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியாது என்பதை இது நிரூபித்தது.
பெருநிறுவனங்களின் பிடியில் உணவு பாதுகாப்பு!
1990 களில் சோவியத் ஒன்றியம் சிதறுண்ட பின்னர், அமெரிக்க நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்த வளரும் நாடுகள் தங்களுடைய விவசாய சந்தைகளை திறக்கத் தொடங்கினார்கள். இதனால் அந்த நாடுகளின் விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டார்கள். நட்டமடைந்து, கடும் வறுமையை நோக்கி தள்ளப்பட்டார்கள். அதே சமயம் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட பெரும் பண்ணை முதலாளிகள் தங்கள் உற்பத்திச் சரக்குகளை கட்டுக்கடங்காமல் ஏற்றுமதி செய்து பெரும் லாபம் பார்த்தார்கள். இந்த போக்குதான் சீனாவையும் பாதித்தது. உலகின் பல நாடுகளும் உணவு தானிய தேவைக்கு முதலாளித்துவ சந்தையைத்தான் நம்பியிருக்கின்றன. இதனால் உலக உணவுச் சந்தை, நிதி மூலதனத்தின் வேட்டைக்காடாக மாறுகிறது.
உணவு உற்பத்தியில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தையும், உற்பத்தியையும் கட்டுப்படுத்துவதன் மூலம் உலக உணவு வழங்கல் சங்கிலியை கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்கா, பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் உற்பத்தியை கையில் வைத்திருப்பதுடன் உலகம் முழுவதும் உணவு தானிய கிடங்குகளையும், போக்குவரத்தையும் கட்டுப்படுத்துகின்றன. சீனாவின் உணவுச் சந்தையிலும் அவை நுழைந்திருப்பது உணவுப் பாதுகாப்புக்கும், சுயசார்புக்கும் அச்சுறுத்தலை உருவாக்கக் கூடும்.
உலக அளவில் தானிய வர்த்தகத்தின் அளவு 400 மில்லியன் டன் ஆகும். சீனாவின் ஓராண்டு தானிய தேவையோ 600 மில்லியன் டன்னுக்கும் கூடுதல். எனவே சீனா தன்னுடைய உணவுத் தேவையினை உலகச் சந்தையை நம்பி தீர்த்துக் கொள்வது சாத்தியமே இல்லை என்பதால், சீனா தனது நாட்டில் உணவுப் பொருள் விலையை குறைவாக பராமரிக்க வேண்டுமென்றால் தன்னிறைவு மிக மிக அவசியம். மேலும் தானியச் சந்தைக்கு அப்பாற்பட்டு, உணவு தானிய கிடங்குகளை பராமரிப்பதும் மிக மிக அவசியம். இதனை சோயாபீன் இறக்குமதி அனுபவத்தில் நன்கு காண முடியும்.
சோயாபீன்: சீனாவின் சறுக்கல்!
2001 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைந்த பின்னர், அமெரிக்காவில் விளைவிக்கப்பட்ட மரபணு மாற்ற பயிர்கள், காய்கறிகள் சீனச் சந்தையில் திணிக்கப்பட்டன. உதாரணமாக சோயாபீன். உலக வர்த்தக அமைப்பில் இணைவதற்கு முன் சீனா சோயா பீன் விளைச்சலில் ஒரு பகுதியை ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் 2004 ஆம் ஆண்டில் சீனா சோயாபீன் பற்றாக்குறையை எதிர்கொண்டது. சோயா மீல் மேக்கர் ஆலைகளும், சோயா எண்ணெய் ஆலைகளும் மூடப்பட்டன. உள்நாட்டு சோயா உற்பத்தி கடும் நெருக்கடியை சந்தித்தது.
இந்த நிலைமை ஏற்பட்டதற்கு காரணம் உலக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இறக்குமதிதான். உலக அளவில் விவசாய பொருட்களை வர்த்தகம் செய்யும் பெருநிறுவனங்களான ஏடிஎம், பஞ்ச், கார்கில், லூயிஸ் ட்ரெயுபஸ் ஆகியவை மரபணு மாற்ற சோயாபீன்களை சீனாவுக்கு இறக்குமதி செய்தார்கள். இது உள்நாட்டு விநியோகச் சங்கிலியை சிதைத்துப் போட்டது. அன்னிய மூலதனத்தால் ஏற்பட்ட இந்த நெருக்கடியின் காரணமாக சோயாபீன் விலை மீதான இருந்த கட்டுப்பாடு அறுபட்டது. சோயாபீன் என்பது சீனாவின் உணவுப் பாதுகாப்பில் மிகவும் பலவீனமான கண்ணி ஆகும்.
கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் சோயாபீன் தேவையில் 15 சதவீதம் மட்டுமே உள்நாட்டில் விளைகிறது. உலகம் முழுவதும் ஏற்றுமதியாகும் சோயாபீன்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக சீனாவிற்கே செல்கிறது. ( 2019 ஆம் ஆண்டில் சீனா-அமெரிக்கா இடையில் வர்த்தகப் போர் தொடங்கிய பின்னர். சீனாவின் சோயாபீன் இறக்குமதியை அமெரிக்காவில் இருந்து பிரேசிலுக்கு மாற்ற வேண்டியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது)
வளர்ச்சி: ஒரு அறிவியல் பார்வை!
2003 ஆம் ஆண்டில் சீன அதிபராக இருந்த ஹு ஜிந்தாவோ ‘வளர்ச்சி பற்றிய அறிவியல் அணுகுமுறை’ என்ற ஒரு அறிக்கையை அறிமுகம் செய்தார். சோசலிச சந்தை பொருளாதார கருத்தாக்கத்தின் பல்வேறு அம்சங்களை இந்த அறிக்கை கையாண்டது. நகர-கிராமப்புற வளர்ச்சியில் ஒத்திசைவான பார்வை, பிராந்தியங்களுக்கிடையில் ஒத்திசைவான வளர்ச்சி, சமூகங்களின் வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் ஒத்திசைவான கண்ணோட்டம், மனிதர்களின் மேம்பாட்டுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கம் கொண்ட வளர்ச்சி, உள்நாட்டு வளர்ச்சிக்கும் பொருளாதார திறப்புக்கும் இடையில் ஒத்திசைவான அணுகுமுறை ஆகிய அம்சங்களை கட்சி தீர்மானித்தது. 2007 ஆம் ஆண்டில் இந்த கருத்தாக்கம் கட்சியின் அமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
2004 ஆம் ஆண்டில், கிராமப்புற பகுதிகள் சந்திக்கும் 3 முக்கிய பிரச்சனைகளை பற்றிய ஒரு கொள்கை அறிக்கை உருவாக்கப்பட்டது. இந்த அறிக்கையில் விவசாயம், கிராமப்புற பகுதிகள், விவசாயிகள் ஆகிய மூன்று தரப்பின் பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டன. சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய முதன்மை அறிக்கை ஒவ்வொன்றிலுமே விவசாயிகளுடைய வருமானத்தை உயர்த்துவது; கிராமப்புற கட்டமைப்பையும், நீர்வளத்தையும் வலுப்படுத்துவது; கிராமப்புற பகுதியில் முதலீட்டை நீடித்து அதிகப்படுத்துவது ஆகிய அம்சங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக இந்த மூன்று அம்சங்களே கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
2005 ஆம் ஆண்டில் விவசாய வரி ஒழுங்குமுறைகள் ஒழிக்கப்பட்டது மிக முக்கியமான மைல் கல் ஆகும். சீன வரலாற்றில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த விவசாய வரிகள் நடைமுறையில் இருந்து வந்துள்ளன. 90 கோடி விவசாய குடும்பங்களின் மீதான இந்தச் சுமை முற்றாக நீக்கப்பட்டது. விவசாயிகள் மீதான பொருளாதாரச் சுமை நீக்கப்பட்டதால் கிராமப்புற மக்களின் சமூக நலன் மேம்பட்டது. இருந்தாலும் இந்த நடவடிக்கைகளால் மட்டுமே நெருக்கடி முழுமையாகத் தீரவில்லை. சீனாவின் உணவு உற்பத்தி தன்னிறைவு விகிதம் குறைந்துகொண்டுதான் இருந்தது. நிலம் கைவிடப்படுவது தொடர்ந்தது. இடம் பெயரும் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே வளர்ச்சி அணுகுமுறையில் இன்னமும் மாற்றம் தேவைப்பட்டது.
2006 ஆம் ஆண்டில் சீனா தன்னுடைய விவசாய நிலங்களை பாதுகாக்கும் திட்டம் ஒன்றை வகுத்தது. அதன்படி விவசாயத்திற்கு தகுதியான நிலப்பரப்பு 120 மில்லியன் ஹெக்டேராக தொடர வேண்டும் என முடிவு செய்தார்கள். ஆனால் நவதாராளமய ஆதரவு சிந்தனையாளர்கள் இந்த முடிவுக்கு எதிராக வாதிட்டார்கள். தொழிற்சாலைகள் அமைக்கவும், நகர்ப்புற விரிவாக்கத்திற்கும் சாதகமாக நிலக் கொள்கை அமையவேண்டும் என்றனர். இந்த வாதங்களின்படி சுமார் 10 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் விவசாயத்தில் இருந்து வேறு பயன்பாட்டிற்கு மாற்றவும் பட்டன. ஆனால், இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. கிராமப்புறங்களும், விவசாயத் துறையும் நீடித்த வளர்ச்சியை சாதிப்பது எப்படி என்பது சீனாவில் நிலவும் மிக முக்கியமான கேள்வி ஆகும். இது, சீனாவை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் தற்போதைய முயற்சிகளை எதிர்கொண்டு சோசலிசக் கட்டமைப்பை பாதுகாத்து நிற்பதுடன் நேரடியான தொடர்புடையது.
ரத்தம் செலுத்துவதும், ரத்தம் ஊறுவதும்!
சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தலைமையேற்ற பின்னர் தன்னுடைய ‘மக்களிடமிருந்து மக்களுக்கு’ (மாஸ்லைன்) என்ற அணுகுமுறையை சீன கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ளது. பாட்டாளி-விவசாயி கூட்டணி என்ற கோட்பாட்டின் அடிப்படையிலான தனது செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்தது. உடல் உழைப்புக்கும் சிந்தனை உழைப்புக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு, தொழிலுக்கும் விவசாயத்துக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு, பாட்டாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு ஆகிய மூன்று முரண்பாடுகளையும் தீர்க்க வேண்டும் என்று மாவோ காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை மீண்டும் விரைவுபடுத்தும் வகையில் செயல்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
இப்போதுள்ள ஏற்பாட்டில், நகரமயமாதல் செயல்முறைக்கு தேவையான தொழிலாளர்களை வழங்கும் களஞ்சியமாக கிராமப்புற பகுதிகள் செயல்படுகின்றன. தேவைக்கேற்ப கொடுக்கல் வாங்கல் உள்ளது. மக்கள் தொகையின் மிகப்பெரும்பான்மையோர் சிறு விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அதிலிருந்தே சீனாவின் 140 கோடி மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தியாகிறது. உணவுத் தேவைக்காக உலக சந்தையை அவர்கள் நாட வேண்டியதில்லை. எனவே, சீனாவின் சோசலிச சந்தை பொருளாதார அமைப்பின் ஒரு முக்கியமான சோசலிசக் கூறாக அதன் கிராமப்புற கூட்டு நிலவுடைமை இருந்து வருகிறது. அதே சமயம், கிராமப்புற பகுதியில் நிலவும் கூட்டுப் பொருளாதார அமைப்பின் உள்ளார்ந்த சக்தியை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். அந்த நோக்கிலேயே கடும் வறுமையை ஒழிக்க இலக்கு வைத்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக்கிட 30 லட்சம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கிராமப்புற பகுதிகளில் சென்று தங்கியிருந்து பணியாற்றி, மருத்துவர்களும், பிற துறை வல்லுநர்களும் கிராமப்புற பகுதிகளில் தங்கி உழைப்பதன் மூலம் கடும் வறுமையில் சிக்கியிருந்த பல லட்சம் மக்களை மீட்டார்கள்.
கிராமப்புறத்திற்கு வெளியில் இருந்து வளங்கள் கிராமப்புறப் பகுதியை நோக்கி திருப்பப்பட்டன. இதனால் அந்த மக்கள் வறுமையை வெற்றிகொண்டனர், தொடர் முன்னேற்றத்திற்கான சாத்தியம் உருவானது. இப்போது, அடுத்த கட்டமாக கிராமப்புறப் பகுதிகளுக்கு உயிர்ப்பூட்டும் உத்தியின் மூலம் ஒவ்வொரு கிராமப்புறத்திலும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. இலக்குவைத்த வறுமை ஒழிப்பு என்பதை வெளியிலிருந்து ரத்தம் செலுத்துவதோடு ஒப்பிட்டால், கிராமப்புற உயிர்ப்பூட்டல் என்பது உடலில் ரத்தம் ஊறுறைவதற்கான நடவடிக்கை எனலாம்.
‘கிராமப்புறமும் நகரமும் இணைந்த வளர்ச்சி’ என்ற கருத்தாக்கத்தின் மூலம் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நகரம் தனது எல்லைகளை விரித்து கிராமப்புறங்களை விழுங்கும் போக்கிற்கு மாற்றாக, இரண்டும் இணைந்தும், இயைந்தும் வளர்க்கப்பட வேண்டும். அதற்கேற்ற விதத்தில் கிராமப்புற பகுதியை மறு வரையறை செய்வதும் அவசியம். சீன அதிபர் ஜி ஜின்பிங் இதுபற்றி பேசும்போது, ‘தொழில்துறை விவசாயத்தையும், நகரங்கள் நாட்டுப்புறத்தையும் ஆதரிக்க வேண்டும்” என்றார். மேலும் அவர், ‘நகரங்கள் செழிப்பாக இருக்கும்போது கிராமப்புறங்கள் போராடிக் கொண்டிருக்குமானால், அது நமது கட்சி ஆட்சி செலுத்தும் நோக்கத்திற்கும், சமூக அடிப்படைக்கும் முரணாகும். இதுபோன்ற நவீனமயம் வெற்றிகரமாகத் தொடர வாய்ப்பில்லை. நாற்பதாண்டுகளுக்கு முன் நாம் கிராமப்புற சீர்திருத்தமும், திறந்த சந்தையும் கொண்டதொரு பாதையில் பயணிக்க தொடங்கினோம். இப்போது நாம் நம்முடைய கிராமப்புறங்களுக்கு புத்துயிரூட்டி, நகரமும்-கிராமப்புறமும் ஒருங்கே வளர்கிற நவீனமயமாதலில் புதிய கட்டத்தை எட்டிட வேண்டும்’ என்று கூறினார்.
2012 ஆம் ஆண்டில் சீனா ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்தது. அதிலிருந்து சில முக்கிய நடவடிக்கைகளை சீனா முடுக்கிவிடுகிறது. குறிப்பாக, விதைகளின் மீது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டிருக்கும் ஆதிக்கநிலையிலான கட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக, விதை உற்பத்தியை தேச பாதுகாப்போடு இணைந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக தீர்மானித்தது. குறிப்பாக, சோயாபீன் தொடர்பாக உயிரி தொழில்நுட்ப (பயோடெக்) ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டில் சீன வகைப்பட்ட நவீனமாதல் என்ற கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த கருத்தாக்கம் சீனாவின் கிராமப்புற பகுதிகளுக்கு உயிர்ப்பூட்டுவதன் மூலம் பிராந்திய வளர்ச்சி இடைவெளியை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
பொதுவான செழிப்பை எட்டுவது எப்படி?
மக்கள் சீனம் தனது கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் பொதுவான செழிப்பை எட்டவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. அதே சமயம், கிராமப்புறத்தில் மூலதனம் பாயவும், பெரு விவசாயம் வளர்த்தெடுக்கப்படவும் சீர்திருத்தங்கள் அவசியம் என்ற குரல் எழுகிறது.
சீனா தன்னுடைய கிராமப்புறங்களை மேலும் நவீனப்படுத்திட வேண்டும் என்பது சீன பொருளாதார இரட்டைச் சுழற்சியை உறுதி செய்வது என்ற இலக்குடன் தொடர்புடையதாகும். இரட்டை சுழற்சி என்றால், சீனாவின் உள்நாட்டு பொருளாதார சுழற்சியை முதன்மையாக வைத்துக் கொண்டு, ஏற்றுமதியை அடுத்த முக்கிய இடத்தில் பராமரித்தல் ஆகும். 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் சீன அரசாங்கம் இந்த பொருளாதார இரட்டை சுழற்சியை எட்ட வேண்டும் என தீர்மானித்தது. இதற்கு உள்நாட்டு கிராக்கியை அதிகப்படுத்த வேண்டும். தொழில்நுட்ப தேவைகளிலும், ஆதார வள உற்பத்தியிலும் தன்னிறைவை எட்ட வேண்டும். உலக முதலீடுகளுக்கும், உலக வர்த்தகத்திற்கும் தனது சந்தையை திறந்து வைத்தபடியே இதைச் செய்ய வேண்டும். மேலும், ஏகாதிபத்தியத்தின் புதிய பனிப்போர் நெருக்கடிகளை (வரி, தடை) எதிர்கொண்டபடியே இதைச் செய்ய வேண்டும்.
கிராமப்புற நில உடைமையை மாற்றியமைப்பதன் மூலம், மூலதனத்திற்கான வாய்ப்புகளை திறக்க வேண்டும் என்று தாராளமய சிந்தனையாளர்கள் முன்வைக்கிறார்கள். அதே சமயம் அதற்கு மாறாக, இடதுசாரி வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. கிராமப்புற நிலவுடைமை எப்போதும் போல கூட்டு உடைமையாகவே தொடர வேண்டும் என வலியுறுத்தும் இடதுசாரிப் பார்வை, நிலவுடைமை கூட்டு நிர்வாகத்தில் அடிமட்ட கட்சி அமைப்புகள் ஈடுபட வேண்டும். கிராமப்புற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு பொருளாதார திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். நிலத்தை நவீன விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்கிட ஏல முறையை பின்பற்றலாம். இந்த வழிமுறையில் சந்தை பொருளாதார வாய்ப்புகளும் பயன்படுத்திக் கொள்ளப்படும். கிராமப்புற மக்களின் உடமையும், அதிகாரமும் பாதிக்கப்படாது. சீனாவின் கிராமப்புற கட்சி அமைப்புகளும், சீனத்தின் கிராமப்புற வளர்ச்சியும் இணைந்து செயல்படும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தமான பங்கேற்பையும், தலைமை பாத்திரத்தையும் முன்வைக்கும் இந்தப் பார்வை இன்னமும் வளர்த்தெடுக்கப்படலாம்.
சீனா தன்னுடைய வளர்ச்சி அணுகுமுறையில் தொடர் போராட்டங்களை நடத்தியே இதுவரை முன்னேறி வந்துள்ளது. மார்க்சிய லெனினிய கோட்பாடுகளின் துணையோடு, சொந்த நாட்டு அனுபவங்களில் இருந்தும், மற்ற நாடுகளில் சோசலிசத்தை கட்டமைக்கும் அனுபவங்களில் இருந்தும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. விவசாயத் துறை மேம்பாடும், தொழில் துறை வளர்ச்சியும் ஒருமுறை எட்டிப் பிடித்ததும் நிறைவேறிவிடும் இலக்குகள் அல்ல. ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்துக்கும் ஏற்ப அணுகுமுறைகளை மாற்றியமைத்து, நீடித்து வளர்த்தெடுக்க வேண்டிய அம்சங்கள். அனைவருக்கும் பொதுவான செழிப்பு, ஏற்றத்தாழ்வுகளை முற்றாக நீக்கிய சமுதாயம், இயற்கையை பாதுகாத்து முன்னேறும் வளமான, அழகான நாடு ஆகிய இலக்குகளை அடையும் வரையிலும் ஏராளமான திருப்பங்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.
நீடித்த வளர்ச்சி, பொதுவான செழிப்பு என்ற பார்வையில் பார்க்கும்போது, கடந்த கால முதலாளித்துவ வளர்ச்சிக் கொள்கைகள் எல்லாமே தற்போது காலவதியாகிவிட்டன. ஏகாதிபத்திய பேரழிவு மட்டுமே முதலாளித்துவம் முன்வைக்கும் ஒரே சாத்தியமாக உள்ளது. இவ்வகையில் ஒரு முட்டுச் சந்துக்குள் வரலாற்றை நிறுத்தியுள்ளது முதலாளித்துவம். எனவே, சீனா தன்னுடைய சோசலிச இலக்குகளில் போராடி முன்னேற வேண்டும். ‘பாட்டாளி-விவசாயி ஒற்றுமை’ என்ற கருத்தாக்கத்தை பின்பற்றியபடியே தனது சவால்களை எதிர்கொண்டு முன்னேறும் இந்தப் போராட்டம், முதலாளித்துவ முட்டுச் சந்தில் இருந்து உலகை மீட்பதாக அமைந்திடும். அது உலக மக்களின் நல்வாழ்வை உறுதியளிக்கும் தீர்மானகரமான பங்களிப்பாகவும் அமைந்திடும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
