
நகர்ப்புறக் கொள்கை – ஒரு விமர்சனம்
அருண் குமார்
அறிமுகம்
உலகிலேயே இரண்டாவது பெரிய நகர்ப்புற அமைப்பாக இந்தியா உள்ளது. உலகளாவிய அளவில் நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 11 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ள நகரங்களில் வாழ்கின்றனர். முழுமையான எண்ணிக்கையில் பார்க்கும்போது, இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை, அமெரிக்கா, ஜப்பான், மேற்கு ஐரோப்பா மற்றும் தென்அமெரிக்கா போன்று உலகெங்கிலும் அதிகமான அளவில் நகர்ப்புறமயமாக்கப்பட்ட நாடுகள்/பகுதிகளை விட அதிகமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் 31.1 சதவீதப் பரப்பு நகர்ப்புற மயமாக்கப்பட்டுள்ளது. 2018-க்கும் 2050-க்கும் இடையில் சுமார் 41.6 கோடி மக்கள் நகர்ப்புற குடியிருப்பாளர்களாகச் சேர்வார்கள் என்பதால், 2050-க்குள் நாட்டின் 50 சதவீதப் பரப்பு நகர்ப்புறமயமாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நகர்ப்புறமயமாக்கலின் அளவு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகிறது. நகர்ப்புற மக்கள் தொகையில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கேரளா ஆகிய 10 மாநிலங்களில் வாழ்கின்றனர். கோவா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகியவை 40 சதவீதத்திற்கும் அதிகமான நகர்ப்புறமயமாக்கலை எட்டியுள்ளன. அதே சமயம் பீகார், ஒடிசா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் ஆகியவை (தேசிய சராசரியை விட) குறைந்த அளவில் தொடர்ந்து நீடிக்கின்றன.
இந்தியாவில் உள்ள 7,933 நகர்ப்புற அமைப்புகளில், 1,772 நகராட்சிகள், 2,023 நகர பஞ்சாயத்துகள், 149 மாநகராட்சிகள் மற்றும் 97 இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்பு வாரியங்கள் (கண்டோன்மெண்ட் போர்டுகள்) உள்ளன. மீதமுள்ளவை – கிட்டத்தட்ட அதில் பாதியளவு – மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உரிய நகரங்கள் (Census Towns) ஆகும். 2001-2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு இடையே நகரங்களின் எண்ணிக்கை 1,362-லிருந்து 3,892 என கணிசமாக அதிகரித்தது; இது நகர்ப்புற மக்கள் தொகையின் நிகர அதிகரிப்பில் 30 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்களித்தது. தமிழ்நாட்டில், மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நகரங்கள் 111-லிருந்து 376 ஆக அதிகரித்தன. இந்த சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள்தான், விரைவான வளர்ச்சி, தவறான கொள்கைகள் மற்றும் போதிய திட்டமிடல்இன்மை போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த நகர்ப்புற மக்கள்தொகையில் 17.3 சதவீதம் பேர் குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். மேலும், இந்த குடிசைப் பகுதியிலுள்ள மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் ஆறு மாநிலங்களில் குவிந்துள்ளனர்: மகாராஷ்டிரா (18.1 சதவீதம்), ஆந்திரப் பிரதேசம் (15.6 சதவீதம்), மேற்கு வங்கம் (9.8 சதவீதம்), உத்தரப் பிரதேசம் (9.5 சதவீதம்), தமிழ்நாடு (8.9 சதவீதம்) மற்றும் மத்தியப் பிரதேசம் (8.7 சதவீதம்).
அதிகாரப் பரவலாக்கம் – பெயரளவில் மட்டுமே; உணர்வில் அல்ல
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட 74வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம், வளர்ச்சிக்கான திட்டமிடல் பொறுப்புகளைப் பரவலாக்குவது என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், அதிகாரங்களைப் பரவலாக்குவதில் மாநில அரசுகளின் உறுதிப்பாடும் முன்முயற்சிகளும், பல்வேறு மாநிலங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க அளவிற்கு வேறுபடுகின்றன.
74வது சட்டத்திருத்தம், எழுத்துப்பூர்வமாக அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்டு வந்துள்ளது. ஆனால் உணர்வில் அல்ல. கேரளாவில் மட்டுமே மக்கள் திட்டமிடல் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்; உள்ளாட்சி அமைப்புகளுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இடதுசாரி தலைமையிலான அரசாங்கங்கள் மட்டுமே அரசியலமைப்புத் திருத்தங்களை நேர்மையாகச் செயல்படுத்தி, அடிமட்ட அளவில் உள்ள மக்களை வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தி வந்தன. அதன்படி, மாநில வரவு செலவுத் திட்டங்களில் தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. மற்ற மாநிலங்களில் இது உறுதி செய்யப்படவில்லை.
நடப்பு மற்றும் முதலீட்டுச் செலவுகளை எதிர்கொள்வதற்கான வளங்களைத் திரட்டும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம், இந்த அமைப்புகளின் பொருளாதார அடித்தளம் மற்றும் வளங்களைத் திரட்டும் திறன், மறுபுறம் அவற்றின் தேவைகள் ஆகியவற்றை ஆராயாமல் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (ULBs) வரையறுக்கப்பட்ட அல்லது நிதி மற்றும் நிதியியல் சுயாட்சி இல்லாததால், அரசு மானியங்களைச் சார்ந்திருப்பது அதிகரித்து வருகிறது (2007-08-இல் 44 சதவீதத்திலிருந்து 2017-18-இல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் வருவாய் பங்கில் 51 சதவீதம்). வளர்ந்து வரும் மக்கள் தொகையின் தேவைகளை நிறைவேற்ற, நகர்ப்புற இந்தியாவில் முதலீடு செய்ய கிட்டத்தட்ட $840 பில்லியன் தேவைப்படும் என்றும், ஆண்டுதோறும் $55 பில்லியன் தேவைப்படும் என்றும் உலக வங்கி மதிப்பிடுகிறது.
இத்தகைய பரவலாக்கப்பட்ட நிர்வாக சகாப்தத்தில், மத்திய அல்லது மாநில அரசுகளின் உதவிகள் குறைந்து வருவதால், சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள், குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களில் உள்ளவை, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை சேவைகளை மேம்படுத்துவதற்கு எந்த முதலீட்டையும் செய்ய முடியவில்லை. அரசாங்க ஆதரவை விலக்கிக் கொள்வது; அவற்றை, நிதி சார்ந்த கடுமையான விதிமுறைகளுடன் கூடிய சந்தைக்கடன்களைச் சார்ந்து இருக்கச் செய்வது ஆகியவை, பிராந்தியங்களிலும் நகர்ப்புற மையங்களிலும் சமத்துவமின்மை போன்ற கடுமையான பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது.
நிதிப் பற்றாக்குறையை சரி செய்வதற்காக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs), உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சிக்கான துறை (DFID) போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்க உந்தித் தள்ளப்படுகின்றன. ஒன்பதாவது (1997-2002) மற்றும் பத்தாவது திட்டங்களின்போது (2002-07) நகர்ப்புறத் துறையில் வெளிநாட்டு உதவி என்பது ஒரு முக்கிய அம்சமாக மாறியது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) போன்ற பலதரப்பு கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பல இருதரப்பு நிறுவனங்கள் இதில் முக்கியப் பங்கு வகித்தன. இங்கும் பெருநகரங்கள் மற்றும் இதர முதல் நிலை நகரங்களுக்கு ஆதரவாகவே இத்தகைய உந்துதல் இருந்தது. இந்த நிறுவனங்கள் முன்வந்து வழங்கிய கடன் நிதிகளும் கூட உள்ளார்ந்த நிபந்தனைகளுடன் வருகின்றன.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் ஒரு தீவிரமான மாற்றத்தைக் கண்டன. அவை, சர்வதேச நிதி நிறுவனங்களால் விதிக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் பிரதிபலிக்கின்றன – இது தாராளமயமாக்கலுக்கு மாறிச் செல்வதைக் குறிக்கும் ஓர் அறிகுறியே ஆகும். இதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்ற 11வது ஐந்தாண்டு திட்டம் (2007-12) ‘நகர்ப்புற உள்கட்டமைப்பு மீது தற்போது இருக்கும் பொதுத்துறை ஏகபோகத்தை அகற்றி, தனியார் துறை முதலீடு செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்’ என்று முன்மொழிந்தது.
இதன் விளைவாக, நகர்ப்புற ஊராட்சி அமைப்புகள், சேவைகளைப் பயன்படுத்துவதற்கான பயனர் கட்டணங்களை மக்கள்மீது விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயின. இந்தச் செயல்பாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பலவும் 1990களில் இருந்து ‘நகராட்சிப் பத்திரங்களை’யே நம்பியிருக்கத் தொடங்கின. அரசின் உறுதிமொழியுடன் 1990களில் வெளியிடப்பட்ட கடன் பத்திரங்களின் மூலம் நிதி திரட்டிய முதல் நகராட்சியாக பெங்களூர் நகராட்சி இருந்தது. அகமதாபாத் நகராட்சி அதைத் தொடர்ந்து வந்தது. அது, 2002ஆம் ஆண்டில், கடனுக்கான அரசு உறுதிமொழி ஏதுமின்றியே, நகராட்சிக் கடன் பத்திரங்களை வெளியிட்டது. இவ்வகையில் நகராட்சிகள் பத்திரங்களின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டும் பணி வேகமெடுத்துள்ளது. இப்போது, ஒரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சொந்தமாக ஆதார வளங்களை திரட்டத் தவறினால், பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து நிதிதிரட்ட கூட்டாக கடன் பத்திரங்களை வெளியிடலாம் என மத்திய அரசு பரிந்துரைக்கிறது. தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் ஏற்கனவே நிதிதிரட்டுவதற்கென நகராட்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அளவில் ‘வலுவான நிதி மற்றும் நிர்வாக’ பொறியமைவின் அடிப்படையில் மட்டுமே நகராட்சிகள் பத்திரங்களை வழங்க முடியும். நகராட்சி பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட, அவை நிதிரீதியாக வலுவாக இருப்பதற்கென, அவற்றின் உண்மையான செலவுகளை மீட்டெடுக்க, சேவைகளுக்கான பொருளாதார ரீதியான விலை பரிந்துரைக்கப்படுகிறது.
தேசிய நகர்ப்புறக் கொள்கை 2020
பாஜக தலைமையிலான அரசாங்கம் 2020-இல் அதன் நகர்ப்புறக் கொள்கையை (தேசிய நகர்ப்புறக் கொள்கை கட்டமைப்பு, NUPF) அறிவித்தது. இது நமது நாட்டை $5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைய உதவும் என்று கருதப்படுகிறது. அதன் தொலைநோக்குப் பார்வையின்படி, உற்பத்தி மையங்கள், பிராந்திய வளர்ச்சி மையங்கள், போக்குவரத்து மையங்கள் அல்லது துறைமுகங்கள், சுற்றுலாத் தலங்கள், தலைநகரங்கள், பொருளாதார மண்டலங்கள் அல்லது நிதி, கல்வி, தகவல் தொழில்நுட்ப மையமாக வளர்ந்த நகர்ப்புறப் பகுதிகள் அத்தகைய மாற்றத்திற்கு வழிவகுக்கப் போகின்றன.
தேசிய நகர்ப்புறக் கொள்கை கட்டமைப்பு (NUPF), நகர்ப்புறக் கொள்கையில் ஒரு முன்மாதிரியான மாற்றம் இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது – அதாவது, ‘தற்போதைய திட்ட அடிப்படையிலான நிதியுதவியிலிருந்து முடிவுகளை அளவிடும் விளைவு அடிப்படையிலான அமைப்புக்கு’ மாற வேண்டும். இந்த கொள்கையின் அடிப்படையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வளங்கள் வழங்கப்படும் என்றும் அது அறிவிக்கிறது. ஒரு மாநிலத்தின் நகர்ப்புற மக்கள் தொகை மற்றும் அதன் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், மாநிலத்தின் தனிநபர் வருமானம் அல்லது ‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான ஈடுபாட்டிலிருந்து எழும் வேறு ஏதேனும் சூத்திரம்’ ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட ஒரு புதிய ‘சூத்திரம்’ ஒரு மாநிலத்திற்கான ஒதுக்கீட்டிற்கு அடிப்படையாக அமையும்.
நகர்ப்புறமயமாக்கப்படும் நாட்டிற்குத் தேவையான அனைத்து முதலீடுகளுக்கும் மத்திய அரசால் நிதியளிக்க முடியாது என்பதால், அது ‘சுய-நிதியளிக்கப்பட்ட நகர்ப்புற வளர்ச்சியை’ ஊக்குவிக்கும் என்று மத்திய அரசு மேலும் வெளிப்படையாக அறிவித்தது. இந்த நோக்கத்திற்காக, ‘அதிகமாகத் திரட்டுங்கள், அதிகமாகப் பெறுங்கள்’ (Raise More, Gain More) என்ற முழக்கத்தின் கீழ் வணிக நிதியுதவியை ஊக்குவிக்கும் என்று அது அறிவிக்கிறது. அத்தகைய சுய-நிதியுதவியை ‘ஊக்குவிக்க’, நிதிச் செலவைக் குறைக்க, கடன் சந்தையில் தலையிடுவதன் மூலம் அல்லது வட்டி மானியங்கள் மற்றும் பகுதியளவிலான கடன் உத்தரவாதங்கள் மூலம் கடன் பெறுவதற்கான அணுகலை மேம்படுத்த உதவுவதன் மூலம், ‘வணிகரீதியான நிதியுதவியைப் பெறும் மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு கூடுதல் சலுகைகளை’ வழங்குவதாக அரசாங்கம் உறுதியளிக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான பொதுச் சொத்துக்களை விற்பதன் மூலம், அல்லது குறைந்தபட்சம் அவற்றை தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம், வருவாயை ஈட்ட முடியும் என்று தேசிய நகர்ப்புறக் கொள்கை கட்டமைப்பு (NUPF) கூறுகிறது. பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு முறை, மதிப்புப் பிடிப்பு நிதி (Value Capture Finance – VCF) முறையாகும். இது மாற்றுக் கட்டணங்கள், மேம்பாட்டுக் கட்டணங்கள், தாக்கக் கட்டணங்கள் மற்றும் வளர்ச்சிக் கட்டணங்கள் மூலம் செய்யப்படுகிறது. இவை அனைத்திற்கும் நகர்ப்புறத் திட்டமிடலை ஒழுங்குபடுத்துவதும், வலுவான தரவைப் பராமரிப்பதும் தேவைப்படுகிறது.
முதல் முறையாக, நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் நிதியுதவி ஆகியவை ஒன்றுக்கொன்று இணக்கமாக உள்ளன. இதனால் மக்களுக்குக் கிடைக்கும் ‘விளைவுகள்’ மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான மைய அளவுகோலாக மாறுகின்றன. இந்தச் செயல்பாட்டிற்கு விளைவுகளைத் துல்லியமாக அளவிடுவது அவசியமானதால், ‘தரவு உந்துதல் அடிப்படையிலான நிர்வாகம்’ (data-driven governance) என்று அழைக்கப்படுவதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இந்தக் கொள்கையின் கீழ், நகரத்தில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களின் தரவு, வழங்கப்படும் சேவைகள் போன்றவை சேகரிக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
இந்தத் தரவைப் பயன்படுத்தி, நகரத்தில் உள்ள அனைத்து குடிமக்களின் பதிவேட்டையும், அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளையும் பராமரிக்கவும், அதற்கேற்ப வரிகள் மற்றும் பயனர் கட்டணங்களை விதிக்கவும் ஆன செயல்பாட்டை நகரங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று அரசாங்கம் விரும்புகிறது. ‘சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிதியை திரட்டிக்கொள்ளும்’ நகரமாக மாறுவதற்கு இது மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. வள ஆதாரங்களை திரட்டுவதன் விளைவே குறிப்பிட்ட ஒரு நகரத்திற்கு எவ்வளவு தொகை ஒதுக்குவது என்பதை தீர்மானிப்பதாக இருப்பதோடு, அதன் ‘கடன் பெறுவதற்கான தகுதி’யையும் தீர்மானிக்க உதவுகிறது. இவ்வாறுதான் அரசாங்கத்தின் முக்கியமான தொலைநோக்கான ‘அறிவார்ந்த நகர்’ திட்டம் ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருவருக்கொருவரை போட்டியிட வைக்கிறது.
செயல்பாடுகளின் விளைவை நிதியுதவியோடு இணைப்பதன் மூலம், நிதியை அணுகுவதற்காக நகரங்களும் மாநில அரசுகளும் ஒன்றோடு ஒன்று எதிர்த்துப் போட்டியிடும் நிலைக்கு மத்திய அரசு ஆட்படுத்துகிறது. எதிர்பார்க்கப்படும் விளைவுகள் அல்லது நகரங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நிதி ஒதுக்கப்படும் என்பதை 2023 ஜூனில் மத்திய அரசு வெளியிட்ட உத்தரவு விரிவாக எடுத்துக் கூறுகிறது.
நகர்ப்புறத் திட்டமிடலுக்கு முக்கியத்துவம்
நமது நாட்டில் உள்ள நகர்ப்புறக் குடியிருப்புகளில் 65 சதவீதம் ஒருங்கிணைந்த திட்ட வரைவினை (மாஸ்டர் பிளான்) வைத்திருக்கவில்லை என்று அரசாங்கம் சுட்டிக் காட்டுகிறது. அனைத்து மட்டங்களிலும் தனியார் துறையை ஈடுபடுத்துவதற்காக, அனைத்து நகர்ப்புற மையங்களுக்கும் ஒரு மாஸ்டர் பிளானை உருவாக்குவது மிகுந்த முக்கியத்துவமுள்ளதாக மாறியது. நிதி ஆயோக் 2021-இல் ‘இந்தியாவில் நகர்ப்புறத் திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்’ குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து, அரசாங்கத்தால் மற்றொரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. மேலும் அந்தக் குழு ஏப்ரல் 2023-இல் ‘அமிர்த காலத்திற்கான பாதைகள்’ என்ற தலைப்பில் 84 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதில் விரிவான பரிந்துரைகள் இருந்தன. இந்த இரண்டு அறிக்கைகளுமே தனியார் துறையுடன் வலுவான கூட்டாண்மையையும், நகர்ப்புறத் திட்டமிடலின் அடிப்படைகளில் தீவிரமான சீர்திருத்தத்தையும் ஆதரிக்கின்றன. ஜே.என்.என்.யு.ஆர்.எம் (JNNURM), அறிவார்ந்த நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி), அம்ருத் (AMRUT) போன்ற முந்தைய அனைத்துத் திட்டங்களின் கருத்துகளையும் ஒருங்கிணைத்து, நகரங்கள் திட்டமிடப்படும் விதத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை இந்தக் குழு கோருகிறது.
நகர்ப்புறத் திட்டமிடல் துறையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற அகில இந்திய அளவிலான ஒரு சேவையை உருவாக்குவது; பிரதமரைத் தலைவராகக் கொண்டு தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் நகர்ப்புறத் திட்டமிடல் ஆணையத்தை அமைப்பது; மாநிலங்கள் மற்றும் நகரங்களில் தகுதிவாய்ந்த நகர்ப்புறத் திட்டமிடுபவர்களை நியமிப்பதற்கு மத்திய அரசின் ஆதரவை வழங்குவது; மாநிலத்தின் நகரங்களுக்கான திட்டமிடல் குறித்த சட்டங்களை நவீனமயமாக்குவது ஆகியவற்றை இது பரிந்துரைத்தது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அனைத்து நகரங்களிலும் பொருளாதார மேம்பாட்டுக் கவுன்சில்களையும், பத்து லட்சத்திற்குக் குறைவான மக்கள் தொகை கொண்ட அனைத்து நகரங்களிலும் மாவட்ட பொருளாதார மேம்பாட்டுக் கவுன்சில்களையும் அமைக்க வேண்டுமென்று இந்தக் குழு கூறியுள்ளது. நகர்ப்புற திட்டமிடல் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர, இதற்குத் தேவையான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஓரளவிற்கு நிதி ஒதுக்கீட்டைக் குறிப்பிடும் வகையில் 11 விரிவான பரிந்துரைகளையும் அது வழங்கியுள்ளது. அவற்றில் 10 பரிந்துரைகள் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் மாநில அளவிலான ஆட்சேர்ப்பு விதிகளை நவீனப்படுத்துதல்; மாநில அளவிலான நகர திட்ட திட்டமிடல் சட்டங்களை நவீன மயமாக்குதல்; தேசிய அளவிலான நகர்ப்புற ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான நிதி; நகர்ப்புற திட்டமிடலுக்கான அகில இந்திய சேவைக்கான மசோதாவைக் கொண்டுவருவது ஆகியவை அடங்கும். இவற்றில் ஓர் இடைக்கால பரிந்துரை என்பது, மத்திய அரசு அளவில் நகர்ப்புற திட்டமிடலுக்கென நிறுவன ரீதியான ஒழுங்குபடுத்தலாகும். மத்திய, மாநில, மாவட்ட நிர்வாகங்களில் உள்ள 50,000 அலுவலர்களை உள்ளடக்கிய அளவில் கட்டமைக்கப்பட்ட தேசிய நகர்ப்புற நோக்கநிலைக்கான திட்டத்தை பிரதமர் தொடங்க வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்திருந்தது. அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் கீழ்மட்டத்தில் 2,000 நகர்ப்புற திட்டமிடுவோரையும், இடைமட்டத்தில் 850 பேரையும், உயர்மட்டத்தில் 350 பல்துறை நிபுணர்களையும் நியமிக்கும் வகையில், மாநிலங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்தது. நகர்ப்புற திட்டமிடுவோர், வடிவமைப்பாளர்கள் ஆகிய பணிகளில் வேலை வகைப்பாடு(கேடர்), ஆட்சேர்ப்பு, சேவை விதிகள் ஆகியவற்றை நவீனப்படுத்த, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் இந்தக் குழு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தன்னிடமுள்ள நிதி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மேற்கண்ட சீர்திருத்தங்களைச் செயல்படுத்துமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக இருந்த ஒவ்வொரு நகர்ப்புற மையம் அல்லது நகரம்/ஊரின் பன்முகத்தன்மையும் தனித்தன்மையும் இப்போது இழக்கப்படுகிறது. ஒரு மையப்படுத்தப்பட்ட, சீரான வளர்ச்சிக்கான முன்மாதிரி அவற்றின்மீது திணிக்கப்படுகிறது. ஒரு நகரம் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும்; நிலம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும்; குடிசைப் பகுதிகள் எவ்வாறு மேம்படுத்தப்பட வேண்டும்; வீடுகள் கட்டப்பட வேண்டும்; சாலைகள் அமைக்கப்பட வேண்டும்; குடிநீர் மற்றும் சுகாதாரம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும்; எந்தப் போக்குவரத்து முறையைப் பயன்படுத்த வேண்டும் போன்றவற்றை மத்திய அரசு ஆணையிடுவதால், பன்முகத்தன்மைக்கு பதிலாக ஒரே மாதிரியான தன்மைக்கு மாற்றப்படுகிறது. இந்த அப்பட்டமான மையப்படுத்தலானது அதன் தாராளமய நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதை எளிதாக்குகிறது.
இவற்றுக்குத் திட்டமிடுபவராக யாரை நியமிக்க வேண்டும் என்பதற்கு உத்தரவிடுவதன் மூலம், ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்கள், ‘தனியார் நிபுணத்துவத்தை’ பயன்படுத்த அரசாங்கம் பரிந்துரைக்கிறது. தனியார் நில மேம்பாட்டாளர்கள், கட்டிட நிறுவனங்கள் ஆகியவற்றுக்காகப் பணிபுரியும் நபர்களை திட்டமிடுபவர்களாக நியமிக்க இது மறைமுகமானதொரு பரிந்துரையாகும். தனியார் கட்டிட நிறுவனங்கள்/மேம்பாட்டாளர்கள் ஆகியோருக்கு வசதி செய்துதரும் வகையில் நகரங்களை வடிவமைக்கவே இத்தகைய ஒட்டுமொத்த மாற்றமும் முன்வைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற திட்டமிடல் குறித்த முழுமையானதொரு கண்ணோட்டத்தைக் கொண்ட, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் வரையறுக்கப்பட்ட ஒட்டுமொத்த விதிமுறைகளை தனியார் கட்டிட நிறுவனங்கள் உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் (தனியார் கட்டிட நிறுவனங்கள்) தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப ஒரு நகரத்தின் வளர்ச்சியை வடிவமைப்பார்கள். தங்கள் நகரத்தின் மீதான மக்களின் கூட்டான உரிமையை அவர்களிடமிருந்து பறித்து, தனியார் கட்டிட நிறுவனர்களிடம் இத்திட்டம் ஒப்படைக்கிறது.
நகர்ப்புற திட்டமிடல் அல்லது நகரத்தின் வளர்ச்சியை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது. இதற்காகத் திட்டமிடுபவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தொடர்ச்சியான வழிகாட்டுதல்களில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் மாநில அரசுகளும் நகர்ப்புறங்களுக்கான கொள்கை, நிலப் பயன்பாட்டுக்கான கொள்கை, கட்டிடங்களைக் கட்டுவதற்கான துணைவிதிகள் போன்றவற்றை பணமாக்குவதற்குத் தகுந்த ஒரு நிலமாக மாற்றவே அது விரும்புகிறது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய பணமாக்கல் வழிமுறை, நிலத்தைப் பணமாக்குவதற்கான கொள்கை ஆகியவற்றுக்கான விரிவானதொரு கொள்கையாக முன்னெடுத்துச் செல்வதாகவே இந்த முயற்சி உள்ளது. இது வழங்குகின்ற மிக எளிமையான வழிகாட்டுதல் என்னவெனில், முடிந்தவரை நிலத்தை (அரசின் கைகளிலிருந்து) விடுவித்து, அதை ஒன்றுதிரட்டி, தனியார் நிறுவனங்களின் கைகளில், அதன் வளர்ச்சிக்காக என்ற பெயரில் ஒப்படைப்பது என்பதே ஆகும். நகர்ப்புற மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புற விரிவாக்கம் என்ற போர்வையில் இது செய்யப்பட வேண்டும்.
நவதாராளவாதத்தின் தற்போதுள்ள கட்டத்தில், நிலம் என்பது மிகவும் மதிப்புமிக்கதொரு சொத்தாகும். மேலும் நிலத்தை மையமாகக் கொண்ட அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் பெரும் செல்வத்தை உருவாக்குவதற்கான சில வழிகளாகவே கருதப்படுகின்றன. நிச்சயமற்ற இந்தக் காலத்தில் ரியல் எஸ்டேட், ஊகவணிகம், கட்டிடம், வாடகைக்கான இடங்கள் ஆகிய அனைத்தும் முக்கிய வருமான ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. வளர்ச்சி என்ற பெயரால் நிலத்தை எவ்வாறு தனியார் பயன்பாட்டிற்குக் கையகப்படுத்தலாம் என்பதற்கு அகமதாபாத் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட சபர்மதி ஆற்றங்கரை திட்டம் (2003) மிகச் சிறந்ததொரு உதாரணமாகும். இந்த ஆற்றங்கரை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கிட்டத்தட்ட 74 சதவீதம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகையான ஒதுக்கீட்டைத்தான் நாடு முழுவதும் அமலாக்க மத்திய அரசு முயல்கிறது.
குடிசைப்பகுதிகளை உள்ளார்ந்த வகையில் மேம்படுத்துவது என்ற பெயரில், செங்குத்தான வளர்ச்சிக்கான யோசனையை கருத்தில் கொண்டு ஒரு திட்டத்தை உருவாக்க அரசாங்கம் விரும்புகிறது. அதாவது, அங்கிருக்கும் குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டித் தருவது. குடிசைப் பகுதிகளின் தற்போதைய கிடைமட்டப் பரவல் அகற்றப்பட்டு, பரந்து விரிந்த நிலங்கள் விடுவிக்கப்படும். இந்த நிலம் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடிசைப்பகுதி மக்களுக்காக பல அடுக்குமாடி வீடுகளைக் கட்டித்தரும் பணியில் அந்தத் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும். குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கு இந்தத் தனியார் நிறுவனங்களிடம் ‘போதுமான மூலதனம்’ இல்லாத நிலையில், அவர்களிடம் ஒப்புவிக்கப்பட்ட நிலத்தை பணமாக்கவும், அதிலிருந்து திரட்டப்பட்ட வளங்களிலிருந்து குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு குடிசைப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்டித்தர போதுமான (நிதி)வளங்களைத் திரட்ட முடியவில்லை என்று அவர்கள் கூறினால் என்ன நடக்கும் என்பதை நம்மால் மிக எளிதாகவே யூகிக்க முடியும்.
தனியார் கட்டுமான நிறுவனங்கள் தங்களுக்குக் கைமாற்றப்பட்ட நிலத்தைப் பணமாக்குவதற்கு ஏதுவாக, கட்டிட விதிகளில் மாற்றத்தையும் இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. காலியாக விடப்பட வேண்டிய பகுதி, அடிமனையை பயன்படுத்தும் அளவு, அனுமதிக்கப்பட்ட கட்டிடத்தின் உயரம், அடிமனை – அதன்மீதான கட்டிடம் ஆகியவற்றுக்கான அட்டவணை (எஃப் எஸ் ஐ) ஆகிய அனைத்துமே இவர்களின் நலன்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும். தனியார் கட்டுமான நிறுவனங்கள் எவ்வாறு இத்தகைய ஊக்கத் தொகைகளை பெறுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள கொரோனா பரவல் காலத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றான மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் (ஏ.ஆர்.எச்.சி) திட்டத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமான ஒன்றாக இருக்கலாம்.
இந்த மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்படும். இதற்காக அவர்களுக்கு கீழ்கண்ட பல சலுகைகளும் விலக்குகளும் வழங்கப்பட்டுள்ளன: “இந்தச் செயல்பாட்டின் மூலம் பெறப்படும் லாபத்திற்கு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு; வீட்டு வசதி நிதிநிறுவனங்கள் மற்றும் வணிக வங்கிகளின் முன்னுரிமைத் துறை மூலமான மலிவு வீட்டு வசதி நிதியத்தின் கீழ் சலுகை சாளரத்தின் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் திட்ட நிதி/கடன்வசதி; அனுமதி வழங்கப்பட்ட மாற்றங்களைப் பயன்படுத்தவும், தேவைப்படுமெனில், அடிமனை – அதன்மீதான கட்டிடம் ஆகியவற்றுக்கான அட்டவணை (எஃப்.எஸ்.ஐ)/அடிமனைக்கும் தளங்களுக்கும் இடையிலான விகிதம் ஆகியவற்றை 50 சதவீதம் கூடுதலாகப் பயன்படுத்தல்; ஒற்றைச் சாளர முறை மூலம் இத்திட்டங்களுக்கு சட்டப்பூர்வ ஒப்புதல் (30 நாட்களுக்குள்); திட்ட இடம் வரையிலான உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் மற்றும் குடியிருப்பு சொத்துகளுக்கு இணையான வகையில் நகராட்சிக் கட்டணம் ஆகியவை.” தற்போதுள்ள வழிகாட்டுதல்களின் மூலம் கவர்ந்திழுக்கப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும் இதேபோன்ற சலுகைகள் வழங்கப்படும்.
வாடகை வீடுகளுக்கான சந்தையை சிறு தனியார் உரிமையாளர்களின் கைகளில் இருந்து கைப்பற்றி, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றுவதையே இந்த மலிவு விலை வாடகை வீட்டு வளாகங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஏற்பாடு தனியார் வீடு கட்டுவதற்காக மானியம் அளிப்பதை விட, அதிக வருவாய் சேமிப்பைக் கொண்டதாக இருப்பதால், வாடகைதாரர்களுக்கு அரசாங்கத்தின் பங்கு என்பது அதிகபட்சமாக ‘வவுச்சர்களை’ வழங்குவதாக மட்டுமே இருக்கும். இத்தகைய வளாகங்களை ஊக்குவிக்க அரசாங்கம் விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிப்பதில் அக்கறை கொண்ட ஒரே திட்டமாக இருந்தது 2013இல் தொடங்கப்பட்ட தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகும். இது, நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வறுமை, வாழ்க்கை பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம் லாபகரமான சுயவேலைவாய்ப்பு, திறமையான ஊதிய வேலைவாய்ப்புகளை அணுகுவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டமாகும். நகர்ப்புற தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரக் கவலைகளையும் இது நிறைவு செய்கிறது. இத்திட்டம் இந்தியாவில் 790 நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மிகமுக்கியமாக, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாடு அரசுக்கு இல்லை என்பதோடு போதிய நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.
முடிவுரை
நகரமயமாக்கல் கொள்கைகள் எப்போதுமே ஆளும் வர்க்கங்களின், குறிப்பாக முதலாளி வர்க்கத்தின், நலன்களுக்கு சேவை செய்யவே உள்ளன. நகரங்களின் திட்டமிடல், வடிவமைப்பு ஆகியவை அவர்களின் தேவைக்கு ஏற்பவே செய்யப்பட்டன. முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் நெருக்கடிகளோடு கூடவே, நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதியை உருவாக்குகின்ற நகர்ப்புறங்களின் நிர்வாகம் இவ்வாறு மாற்றப்படுகிறது. நிலத்தைப் பணமாக்குதல், பொது இடங்களை தனியார் நிலங்களாக மாற்றுதல், குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளுக்கு கட்டணங்களை விதித்தல் ஆகியவை மேலும் வேகமான அளவில் முன்னுரிமை பெற்றுள்ளன. எத்தகைய அதிகாரப் பரவலாக்கம் முன்மொழியப்பட்டாலும்கூட, நிதி அல்லது நிர்வாக அதிகாரங்கள் மீதான அரசின் கட்டுப்பாடு இன்னும் அகலவில்லை. அரசாங்கத்தின் உயர்மட்டங்கள் – அதாவது மத்திய அரசு, மாநில அரசுகள் (இப்போது அதிகமான அளவில் மத்திய அரசு) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மீது தொடர்ந்து பெரும் கட்டுப்பாட்டை செலுத்தி வருகின்றன. பொதுச்சொத்துக்களை தனியார் மயமாக்குவதென்பது வேகமெடுத்துள்ளது. நம் நாட்டில் பரவலாக உள்ள ஏற்றத்தாழ்வுகளின் அளவின் நேரடி முன்மாதிரிகளாக நகரங்கள் மாறியுள்ளன. இத்தகைய சூழலில், நம் நாட்டில் நகரமயமாக்கல் தொடர்பான மாறிவரும் கொள்கைகளை நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்வது மட்டுமின்றி, மக்களுக்கு அது குறித்துப் பயிற்றுவிக்கவும், எதிர்ப்பு உணர்வுடன் அவர்களை அணிதிரட்டவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply