
மார்க்சியமும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
உ. வாசுகி
(சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இ எம் எஸ் ஸ்மிருதி நிகழ்வில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ. வாசுகி ஆற்றிய உரையின் சில பகுதிகளை, கேள்வி – பதில் வடிவில் வழங்கியுள்ளோம். – ஆசிரியர் குழு)
தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றிய மார்க்சிய பார்வை என்ன?
அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் எந்தவொரு வளர்ச்சிக்கும் முக்கியமானவை. இவை மாறுவதும், வளர்வதும், வலுப்பெறுவதும் தொடர்ச்சியான செயல்முறை. இவை உற்பத்தி சக்திகளின் ஒரு பகுதி ஆகும்.
தொழில்நுட்பமே, அதனளவில் முதலாளித்துவத் தன்மை கொண்டதோ அல்லது சோசலிஸ்ட் தன்மை கொண்டதோ அல்ல. கணினிகள் என்றால் முதலாளித்துவம், செயற்கை நுண்ணறிவு என்பது சோசலிஸ்ட் என்று யாராவது சொல்ல முடியுமா? அவற்றை யார் உடமையாக வைத்துள்ளார்கள்? யார் கட்டுப்படுத்துகிறார்கள்? யார் பயனடைகிறார்கள்? என்பதைப் பொறுத்தே, அதற்கான பதில்கள் அமையும். எனவே, தொழில்நுட்பமானது, அது செயல்படும் சமூக அமைப்பைப் பொறுத்து வர்க்கத் தன்மையைக் கொண்டுள்ளது.
எந்தவொரு சமூகத்திற்கும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அவசியம். இது வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் விதி.
ஒரு சோசலிச சமூகத்தில், உற்பத்தி சாதனங்கள் மக்களுக்கே சொந்தமானவை. அதாவது, சோசலிச அரசுக்கு சொந்தமானவை. இரண்டாவதாக, அதன் நன்மைகள் அல்லது லாபம் மக்களுக்குச் செல்கிறது. இது ஒரு குறிப்பிட்ட தனிநபர் அல்லது பெருநிறுவனத்தின் கையகப்படுத்துதலுக்கானது அல்ல. எனவே, சோஷலிச அமைப்பில் நிலைமை மிகவும் வித்தியாசமானது.
முதலாளித்துவ சமூகத்தில், முழு அமைப்பும் கார்ப்பரேட்டுகளின் தேவைகளுக்கு சேவை செய்யும்போது, தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவுகள் வேறுபட்டவையாக அமைகின்றன. நாம் அதை சமாளிக்க வேண்டும். தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வாய்ப்பை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
மார்க்ஸ், லெனின் போன்ற முன்னோடிகள் தொழில்நுட்பத்தின் இரட்டை பாத்திரத்தைப் பற்றி பேசியுள்ளனர்; எழுதியுள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின் கீழ் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் கருவி, அதுவே சோசலிசத்தின் கீழ் விடுதலைக்கான சாத்தியக்கூறு என மார்க்ஸ் கூறுகிறார். தொழில்நுட்பம் நடுநிலையானது அல்ல. அது சமூக அமைப்பைப் பொறுத்து, வர்க்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
லெனினும், தொழில்நுட்பத்தின் வேறுபட்ட பாத்திரத்தைப் பற்றி பேசுகிறார். ஏகாதிபத்தியம் தொழில்நுட்பத்தை ஆயுதமாக்குகிறது. புதிய நுட்பங்களை, காப்புரிமைகளை வாங்கிக் குவிப்பதன் மூலம், தொழில்நுட்ப மேலாதிக்கத்தை உருவாக்கி, ஏகபோக மூலதனத்தை வலுப்படுத்த உதவுகிறது என்று விளக்குகிறார்.
அக்காலகட்டத்தில், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு வரை யூகிக்க முடியாதிருக்கலாம். ஆனால் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கை சரியாக கணித்து, இயந்திரமயம், தொழில் நுட்ப வளர்ச்சியை முதலாளித்துவம் எவ்வாறு பயன்படுத்தி, உற்பத்தி சக்திகளை வளர்த்து, உற்பத்தி திறனை அதிகரித்து, தொழிலாளர்களை வெளியேற்றும் என்பதை விளக்கியுள்ளார்.
1848 கம்யூனிஸ்ட் அறிக்கை “உற்பத்தி சாதனங்களைத் தொடர்ந்து புரட்சிகரமாக்காமல் முதலாளித்துவ வர்க்கம் இருக்க முடியாது; அதன் மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றுடன் சமுதாயத்தின் முழுத் தொடர்புகளையும் மாற்றி விடுகிறது” என்ற சாராம்சத்தை முன்வைக்கிறது. இயந்திர வளர்ச்சி மற்றும் அதன் தாக்கம் குறித்த அவர்களது கண்ணோட்டம் இன்றைய நிலைமைக்கும் பொருந்துகிறது.
முதலாளித்துவ சமுதாயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் போக்கு எப்படி அமைகிறது?
பொதுவாக ஒருவர் தொழில்நுட்பம் தொழிலாளர்களின் சுமையைக் குறைக்கும் என்று நினைப்பார். ஆனால் முதலாளித்துவ சமூகத்தில், சுமை குறைக்கப்படாது; மாறாக, அது அதிகரிக்கும். முதலாளித்துவம், சுரண்டலை ஆழப்படுத்த தொழில்நுட்பத்தை ஓர் ஆயுதமாக்குகிறது. அது தொழிலாளர்களை ஒருபோதும் விடுவிக்காது. அது சுரண்டலை மறுவடிவமைக்கிறது.
முதலாளித்துவம், மனிதர்களின் தேவைகளுக்காக அல்ல; லாபத்திற்காக தொழில்நுட்பத்தை வளர்க்கிறது. உற்பத்தி செலவைக் குறைக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், அதிகபட்ச உபரி மதிப்பைப் பிரித்தெடுக்கவும், அதன் மூலம் லாபத்தைப் பெருக்கவும் அவர்கள் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கிறார்கள்.
மார்க்சியம், தொழிலாளர்களின் உபரி உழைப்பு உருவாக்கும் உபரி மதிப்பு முதலாளிகளின் லாபமாக மாறுவதைக் குறிப்பிடுகிறது. தொழிலாளி தன் கூலிக்கு ஈடான உழைப்புக்கு மேல் அளிக்கும் உழைப்பை உபரி என்கிறோம். குறிப்பிட்ட வேலை நேரத்தில் சாதாரணமாக நடக்கும் உற்பத்தியை விட, செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு, அதே வேலைநேரத்தில் கூடுதல் உற்பத்திக்கு வழி வகுக்கிறது. இதன்மூலம், தொழிலாளிக்கு அவரது கூலிக்கு ஈடான உழைப்பு விரைவில் முடிந்து விடுகிறது. அதற்கும் மேலான அதிகமான நேரம் உபரி உழைப்பாகிறது. இது லாபத்தை அதிகரிக்கும்.
மேலும் அல்காரிதம் மூலம் தொழிலாளிகளின் வேலை வேகமாக்கப்படுகிறது. அதீத வேலைப்பளு திணிக்கப்படுகிறது. இது தீவிரப்படுத்தப்படும் உழைப்பாகும் (intensified labour). இதுவும் லாபத்தை அதிகரிக்கும். இது பீஸ் ரேட் முறையை விட மோசம். பீஸ் ரேட்டில் எண்ணிக்கைக்கு ஏற்பவாவது கூலி கிடைக்கும். ஆனால் மேற்கண்ட முறையில் கூடுதல் வேலை நிர்ணயிக்கப்பட்ட வேலையாக மாறுகிறது. ஆனால் ஊதியம் ஒன்று தான்.
வேலை இழப்பினால் வேலையற்றோர் பட்டாளம் அதிகரிக்கும். இது ஊதிய மட்டத்தைக் குறைவாக வைத்திருக்க உதவும். லாப அதிகரிப்புக்கு இதுவும் ஒரு வழி.
சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் எதிர்மறை விளைவுகள் சிலவற்றைப் பார்ப்போம். உதாரணமாக, செயலி சார் வேலையின் பரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கிக் எகானமி என்று அழைக்கப்படும் இத்துறை நிலையாக வளர்ந்துகொண்டிருக்கிறது. ஜொமேட்டோ, பிக் பாஸ்கெட், அமேசான், ஃபிளிப்கார்ட், ஊபர், ஓலா போன்றவை. இது மிகவும் சுரண்டல் தன்மை வாய்ந்தது.
நாம் ஜொமேட்டோ மூலம் ஆர்டர் செய்கிறோம். அந்த இருசக்கர வாகனங்கள் மிகவும் அதிவேகமாக ஓட்டப்படுகின்றன. அவர்கள் தங்கள் ஓட்டுநர் திறமையைக் காட்ட விரும்புவதால் அல்ல; மாறாக 30 நிமிடங்களில் இலக்கை அடைய வேண்டும். இல்லையென்றால் ஒரு தொகை வெட்டப்படும். பிக் பாஸ்கெட் ஊழியர்கள் 18 நிமிடங்களில் டெலிவரி செய்ய வேண்டும். அவர்கள் ஆன்லைனில் கறாராகக் கண்காணிக்கப்படுகிறார்கள். சூப்பர்வைசர் நேரடியாக அங்கு இருக்க வேண்டும் என்பதில்லை. ரிமோட் கண்காணிப்புதான். ஒரு மணி நேரத்தில் இத்தனை டெலிவரி எனக் கூடுதல் பணி சுமையைத் தீர்மானித்து, கண்காணித்து, கட்டாயமாக செய்ய வைக்கின்றனர். ஒரு கோப்பை தேநீர் அருந்தக் கூட நேரம் கொடுக்கப்படாது. அமேசான் கிடங்குகள் இதற்கு ஓர் உதாரணம்.
இவர்கள் ஒன்றுகூடுவது மிக அரிது. அவரவர் மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டே பணிகள் செய்கிறார்கள். கூட்டுபேர உரிமை கடினம். ஊதியமோ இதர சலுகைகளோ யாருக்கு எவ்வளவு கிடைக்கிறது, எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை இருக்காது. எனவே உழைப்பு சுரண்டலுக்கு இவர்கள் கூடுதல் இலக்காகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறபோது அவை பாதிப்பை அதிகப்படுத்துமே?
நமது 24வது கட்சி காங்கிரஸ் அரசியல் தீர்மானம், இயந்திரங்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இதுவரை இருந்துவந்த பணிகளைச் செய்யக் கூடிய அளவுக்கான திறன்களை AI கொண்டுள்ளது என்ற அம்சத்தைக் குறிப்பிடுகிறது. அதே சமயம் மனிதர்களுக்கே உரித்தான அறிவாற்றல் திறன்சார் செயல்பாட்டை (cognitive function) இதனால் முழுமையாக செய்யமுடியாது. மனித அறிவாற்றலை அது பெற்றிருக்கவில்லை என்பதுடன், அதை எட்டுவதற்கான வாய்ப்பும் இப்போதைக்கு இல்லை என்பதையும் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
தற்போது ஒயிட் காலர் அறிவுத் தொழிலாளர்களால் (மூளை உழைப்பு) ஏற்கனவே செய்யப்பட்டு வந்த பணிகளை AI செய்யத் துவங்கியுள்ளது. இந்தியாவில், இது உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி, போக்குவரத்து, டிராஃபிக், சுகாதாரம், நிதி சேவைகள், கல்வி, நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், AI இராணுவமயமாக்கவும் படுகிறது. ஆட்டோமேட்டட் போர், இலக்கு அடையாளம் காணுதல் போன்றவை காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் நடத்தப்பட்டது. அமெரிக்காவால் வழங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சார் ஆட்டோமேட்டட் ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் மேம்படுத்தப்பட்ட போரை நடத்தியது என்ற பரவலான தகவல்கள் உள்ளன. சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக AI பயன்படுத்துகிறோம் என இஸ்ரேல் கூறினாலும், பச்சிளம் குழந்தை உட்பட பாலஸ்தீனியர் அனைவரும் எதிரிகள் என்பதே இஸ்ரேலின் நிலைபாடு. 2023 அக்டோபர் 7க்குப் பின் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் 94% சாதாரண மக்கள் என்ற உண்மை, இஸ்ரேலின் போலி வாதங்களை நொறுக்குகிறது. இரானில் ராணுவ உயர் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் போன்றோர் இருக்கும் குடியிருப்பு, அதற்குள் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற உணர்திறனோடு கூடிய ஆயுதத் தாக்குதலை நடத்தியது.
தொழிலாளர்கள் மீதான பாதிப்பைப் பொறுத்தவரை, கூடுதல் உழைப்பு சுரண்டல் என்பதோடு, வேலை இழப்புக்கான அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும்; பணியிட மறுசீரமைப்பு நடைபெறும். சீர்திருத்தம், மறுசீரமைப்பு போன்றவை கருத்தியல் அடிப்படையில் பழிவாங்கும் நடவடிக்கையே. AI தொழில்நுட்பம் தொழிலாளர் சந்தையில் குறிப்பிடத்தக்க சீர்குலைவைக் கொண்டுவரும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது, 300 மில்லியன் முழுநேர தொழிலாளர்களை அது பாதிக்கும். உலகளவில் 1/5 வேலைகள், AI ஆட்டோமேஷன் அபாயத்திற்கு உட்பட்டுள்ளன.
அடுத்து, நுகர்வோரைப் பொறுத்தவரை, நமது விருப்பங்கள், தேர்வுகள் உள்ளிட்ட அந்தரங்கத் தரவுகள் வணிகமாக்கப்படுகின்றன. இது கண்காணிப்பு முதலாளித்துவம் (surveillance capitalism) என அழைக்கப்படுகிறது. இது நமது தேர்வு குறித்த அணுகுமுறையை லாபம் கிடைப்பதற்காக மாற்றி அமைக்கிறது. நமது விருப்பம், தேர்வு இயல்பானதாக இல்லாமல் மறைமுகமாகத் திணிக்கப்படுகிறது. அரசியல் ரீதியாக மூளை சலவை செய்யவும் இது பயன்படும்.
சாதிய, மதவெறி கட்டமைப்பை நியாயப்படுத்தும் போலியான புகைப்படங்கள், வதந்திகள் கட்டமைப்பு, பேசாததைப் பேசியது போல் காட்டுவது போன்ற ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் கூடுதல் ‘உண்மைத்தன்மை’ புனைந்து வெளிவரும். இவ்வாறு பாதகமான விளைவுகளுக்கு வாய்ப்புள்ளது.
நவீன தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் புதிய சூழலை எப்படி எதிர்கொள்வது?
நாம் இந்த வளர்ச்சி போக்குகளை ஆழமாக ஆய்வு செய்து, அவற்றின் தாக்கத்தை உறுதியாக மதிப்பிட வேண்டும். அந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் பொருத்தமான கோரிக்கைகளை எழுப்ப வேண்டும். தொழிலாளர் வேலை பாதுகாப்பு, மாற்று வேலைகள், உழைப்பின் கண்ணியம் செயல்படுத்தல், AI பயன்பாட்டிற்கான ஒழுங்குமுறை மற்றும் சட்டங்கள், அல்காரிதம் மற்றும் தரவுகளில் வெளிப்படைத்தன்மை, பெண்கள் மற்றும் சமூக விளிம்புநிலை மக்களுக்கு எதிரான உள்ளீடுகளில் மாற்றம் போன்றவை வேண்டும். சமூக தேவைகள் இணைக்கப்பட வேண்டும். AI சார்ந்த போர் மூலம் நடக்கும் போர்க்குற்றங்களைத் தடுக்க புதிய சர்வதேச சட்டக் கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும். சிஐடியு ஜெனரல் கவுன்சில் ஒரு நல்ல முன்முயற்சியை எடுத்துள்ளது. அவர்கள் AI மற்றும் அதன் தாக்கம் குறித்த ஒரு தொடக்கநிலை விவாதத்தை நடத்தியுள்ளனர். அத்தகைய முயற்சிகள் மேலும் தொடர வேண்டும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply