வர்க்க பிரச்சனைகளை விவாதிக்கும் கட்சி மாநாடுகள்..
எஸ். கண்ணன்
கம்யூனிசம் என்றால் என்ன?
பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கமாகும்.
பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?
பாட்டாளிவர்க்கம் என்பது, முற்றாக தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த ஒரு மூலதனத்திடமிருந்தும், லாபம் பெற்றுக் கொள்ளாத வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பம், துன்பம், வாழ்வு மற்றும் சாவு என அனைத்தும் உழைப்பு மீதே சார்ந்திருக்கின்றன. இதன் காரணமாக மாறிக் கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும், உழைப்பு சார்ந்திருக்கிறது. ஒரு வரியில் சொல்வது என்றால், பாட்டாளி வர்க்கம் என்பது 19வது நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது.
பிரெடெரிக் ஏங்கெல்ஸ், கம்யூனிச கோட்பாடுகள் எனும் நூலில்
1847இல் கம்யூனிஸ்ட் லீக்கிற்கான கொள்கை மற்றும் கோட்பாடுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டபோது, கம்யூனிச கோட்பாடுகள் எனும் குறிப்பு தேவைப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் இவ்வாறான மதிப்பீடுகள் பாட்டாளி வர்க்கம் குறித்து செய்ய வேண்டிய தேவையையும் இந்த குறிப்பு உணர்த்துகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) குறிப்பிடுவது:
மதிப்பீடுகளை சரியாக செய்வது என்பது, அந்த குறிப்பிட்ட காலத்தில் நிலவும் சூழலை ஆய்வு செய்வதன் மூலம்தான் சாத்தியமாகும். கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் அமைப்பு மாநாடுகள், சமூகத்தின் கொடூர சுரண்டலுக்கு எதிராக, ஆளாகிவரும் பெரும்பான்மை மக்களை அணி திரட்டுவதை நோக்கமாக வைத்து மாநாடுகளை நடத்துகிறது. பிரதிநிதிகளை, அந்த கண்ணோட்டத்தில் பங்கெடுக்க வைக்க, மாநாட்டு அறிக்கைகளையும் தயாரிக்கிறது. அது கட்சியின் திட்டம் முன்வைக்கும், மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை நோக்கி பயணிப்பதாக இருந்தாலும், 10வது அகில இந்திய மாநாட்டில் இருந்து, நடைமுறை உத்தியை தீர்மானிக்கும் முறை, இடது ஜனநாயக அணி மூலம் கட்டமைக்க முடிவானது. தொடர்ந்து அடுத்தடுத்து, ஒரு மாநாட்டிற்கும், அடுத்து வரும் மாநாட்டிற்கும் இடையில் தீர்மானிக்கும் நடைமுறை உத்தி மூலம் பாட்டாளிகளை திரட்டவும், ஆளும் வர்க்கத்தை எதிர்க்கும் போராட்டத்தை முன்னெடுக்கவும், இடது ஜனநாயக அணியை கட்டமைக்கவும் முயற்சித்து வருகிறது.
உத்தியை தீர்மானிப்பதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவின் சமூக, அரசியல், பொருளாதார நிகழ்வுகளையும், குறிப்பாக உழைக்கும் மக்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளையும், கணக்கில் கொள்கிறது. 1992ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற, 14வது அகில இந்திய மாநாட்டின் போது, விவாதிக்கப்பட்ட தத்துவார்த்த பிரச்சனைகள், குறித்த விவாதம், முக்கியமானதாகும். ஏனென்றால், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முன்வைத்த முன்மாதிரியான சமூகம், சோவியத் யூனியன் பின்னடைவை சந்தித்த பின்னணியில், அந்த மாநாடு நடைபெற்றது. நம்பிக்கையற்ற நிலையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாறுபட்ட கோணத்தில், நிலைமையை சரியாக மதிப்பீடு செய்தது.
”சோவியத் யூனியன் என்ற நாடு, உலகம் முழுவதும் உழைக்கும் மக்களிடையே, சமூக, அரசியல், பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலாளித்துவம் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக, நலத்திட்டங்களை அமல்படுத்தியதன் மூலமாகவும், அதற்குமுன், மறுத்துவந்த உரிமைகளை எல்லாம், தொழிலாளி வர்க்கத்திற்கு மனமுவந்து அளித்ததன் மூலமும், சோசலிசத்தின் சவால்களை சமாளித்தது. மூலதனத்தின் ஆட்சியை உயிரோடு வைத்து இருப்பதற்காக, முதலாளித்துவம் தனது லாபத்தில் சிறு பகுதியைப் பகிர்ந்தளிக்கும் கட்டாயம் உருவானது” எனக் குறிப்பிட்டது. இதன் பொருள் என்னவென்றால், சோசலிச சமூக அமைப்பின் இருப்பு, முதலாளித்துவ சமூகத்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் கூட்டுபேர சக்தியை உத்தரவாதம் செய்தது என்பதாகும். சோசலிச சமூகம் பின்னடைவை சந்திக்கும்போது, முதலாளித்துவத்தின் லாப வேட்கையும், தொழிலாளர் மீதான சுரண்டலும் அதிகரிப்பதுடன், தொழிலாளி வர்க்க ஒற்றுமையையும் பாதிக்கிறது. சமூகத்தின் வர்க்க பலாபலன்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு சாதகமாக இல்லாமல் போனது.
சோசலிச சமூகத்தின் பின்னடைவும், நிதி மூலதனத்தின் மேலாதிக்கமும் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள். ஆனால், திட்டமிட்டு முதலாளித்துவ வளர்ச்சிக்காக நடந்தது. நிதி மூலதனத்தின் மேலாதிக்கம், தொழிலாளி வர்க்கத்திடையே, இன, மொழி, மத மற்றும் சாதி அடிப்படையிலான அரசியலை வளர்க்க உதவியது. இந்தியாவில், ஒரு பக்கம் மத அடிப்படையிலான வகுப்புவாத அரசியலும், மற்றொரு புறம் சாதி அடிப்படையிலான அரசியலும் 1995க்குப் பின் வலுவடைந்துள்ளதை காண முடிகிறது. ஒப்பீட்டு அளவில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் குறைந்திருந்தாலும், வர்க்க ரீதியிலான போராட்டங்கள், நிதி மூலதனத்திற்கும், நவீன தாராளமய கொள்கைக்கும் ஆதரவான அரசு கொள்கைகளை அம்பலப்படுத்தி வரும் போராட்டங்களை முன்னெடுப்பதைக் காணமுடியும்.
மூன்று ஆய்வுகளும் அடுத்த கட்டமும்:
மார்க்சிஸ்ட் கட்சி, 2015 டிசம்பர் 27-31தேதிகளில் கொல்கத்தாவில் நடத்திய, சிறப்பு மாநாட்டிற்கு முன்னதாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சில வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்கம் கிராமப்புறம் மற்றும் விவசாயிகளிடம், தொழிலாளர்களிடம், நகர்புறம் மற்றும் நடுத்தர மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை ஆய்வு அடிப்படையில் உழைக்கும் மக்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
எல்லாக் காலத்திலும் நிலம் மிக முக்கிய மூலதனமாக இருந்துவருகிறது. இது நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ, விவசாய வர்க்க அதிகாரத்தின் அடித்தளமாக இருக்கிறது. இன்று அந்த வர்க்கத்தின் செல்வாக்கிற்கு நிலம் மட்டுமே மூதலதனமல்ல; ஏராளமான நிலப்பிரபுக்கள் மற்றும் பெரு முதலாளித்துவ விவசாயிகள், செல்வம் கொழிக்கும் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குடும்பங்கள் பஞ்சாயத்து துவங்கி நாடாளுமன்றம் வரை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டு, அரசின் செல்வாக்கையும் பயன்படுத்துகின்றனர். கல்வித்துறையில் உள்ள வாய்ப்பை பயன்படுத்தி, அதிகார வர்க்கமாகவும் உள்ளனர். காவல் துறை, சட்டம், நிர்வாகம் ஆகியவற்றில் இதை காண முடிகிறது. இதன் மூலம், கூலி, வாடகை, வட்டி, வர்த்தகம், ஆகியவற்றின் மூலம், உபரியைப் பெற முடிகிறது. இந்த பிரிவினர் சமூக ஆதிக்க சக்தியினராகவும் உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
பல்வேறு வகையில் செல்வம் குவிப்பது போல், தொழிலாளர்கள் விவசாய கூலிகளாக மட்டும் இருப்பதில்லை, பல்வேறு தொழில்களைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர். ஒரு வேலையும் நிரந்தர வருவாய் தரக் கூடியதாக இல்லை. கிராமத்தில் விவசாய வேலை, விவசாயம் அல்லாத வேலை என பிரித்துப் பார்க்கும் நிலை இல்லை. அதேபோல் பெண்கள் வேலைவாய்ப்பும் மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. எந்த வேலை செய்தாலும், வேலை செய்யும் நாள்கள் குறைந்து வருவது கவலை அளிக்க கூடியதாக உள்ளது.
ஐந்து பேர் கொண்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பம், நாள் ஒன்றுக்கு ஒரு டாலர் (ரூ 84) வருவாய் ஈட்டுவதை உத்தரவாதம் செய்யவேண்டும் என்றால், வருடத்திற்கு 600 நாள்கள் வேலை செய்யவேண்டும். ஆனால், ஒரு வருடம் என்பது 365 நாட்களை மட்டுமே உள்ளடக்கியது. அந்த அளவிற்கு கொடுமையான வாழ்க்கை நிலை கிராமங்களில் இருப்பதாக அறிய முடிகிறது. இவை உ.பி, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் காணக்கிடைக்கும் உண்மை. தமிழ்நாட்டில், 5 பேர் கொண்ட குடும்பம், 5 பேரும் வருவாய் ஈட்டினால் ஓரளவு வாழ முடியும். இவை கூறும் உண்மை, உழைப்பிற்கு தேவையான ஊதியம் கிடைப்பதில்லை. குடும்பத்திற்கு தேவையான குறைந்த பட்ச வருவாயை எல்லோரும் சேர்ந்து ஈட்ட வேண்டி உள்ளது என்பதாகும்.
கிராமப்புறத் தொழிலாளர்களில் 90 சதம் பேர், மூன்று வித தாக்கங்களுக்கு ஆளாகின்றனர். ஒன்று விவசாய கூலி வேலை, இரண்டு விவசாயம் அல்லாத ஏதாவது ஒரு வேலை, மூன்று கிராமப்புற செல்வாக்கு செலுத்தும் ஆதிக்க நபர் வழங்கிய கூலிக்கு உள்ளாகிறார். எனவே, இந்த பாட்டாளி வர்க்கம், தனக்கான நியாயமான கூலியை பெற முரண்பட வேண்டியுள்ளது. நியாயமான கூலியை வழங்க மறுக்கும் நபர் ஒருவரல்ல; பலராக உள்ளனர். அப்படியானால் இந்த முரண்பாடு நியாயமான கூலியை வழங்காத நபர்கள் மற்றும் அதைத் தீர்மானிக்காத அரசு என்ற பிரிவுக்கும், நியாயமான வேலை நாள்களையும் கூலியையும் பெற முடியாத கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும் ஆனதாக உள்ளது. எனவே கிராமப்புற தொழிலாளர்கள் சங்கமாக ஒன்று சேர வேண்டிய அவசியம் உள்ளது.
தொழிலாளி வர்க்கம்:
கார்ல் மார்க்ஸ் ஜெர்மானிய தொழிலாளர்களின் கூலி விகிதம் எப்படி தீர்மானிக்கப் படுகிறது என்பதை 1847- 48 காலத்தில் ஆய்வு செய்துள்ளார். அவர் எழுதிவைத்த குறிப்புகளை பயன்படுத்தி சிறு நூலாக எங்கெல்ஸ் 1890களில் வெளியிடுகிறார். அது கூலி – உழைப்பு – மூலதனம் என பெயரிடப்பட்டுள்ளது. உழைப்பு சக்தியை விற்பதற்கு உரிய கூலி, நியாயமாக தீர்மானிக்கப்படவில்லை என்பதுதான் மார்க்ஸ் முன்வைக்கும் வாதம். நெசவு, சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு பட்டறைத் தொழில்களில் இந்த நிலையை கண்டுள்ளார். நிலத்திலானாலும், பஞ்சாலையில் ஆனாலும், ஒரு தொழிலாளி பொருளை மட்டும் உற்பத்தி செய்வதில்லை. மூலதனத்தையும் உற்பத்தி செய்கிறார் எனக் கூறுகிறார் மார்க்ஸ்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை, எப்படி கபளீகரம் செய்தது? என்பதை, ரஜினி பாமி தத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ விவரிக்கிறது. “இங்கிலாந்தில் இருந்து வந்த ஆலை, ஜவுளி தறிகாரர்களை நாசம் செய்தது. பஞ்சாலைகளில் தயார் செய்த முறுக்கு நூல் இந்தியாவில் இருந்த நூல் நூற்பவர்களை நாசம் செய்தது. 1818இல் இருந்து 1836க்குள் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியான பஞ்சு நூல் – முறுக்கு நூல் 5200 மடங்கு அளவு அதிகரித்தது. சில்க் ஆடைகள், கம்பளித் துணிகள், இரும்பு மண் பாத்திரங்கள், கண்ணாடி, காகிதம் என எல்லாவற்றிலும் இது போன்று பல மடங்கு அதிகரித்து, இந்திய கைத்தொழில்கள் நாசத்தை சந்தித்தன”, எனக் கூறுகிறார். மூலதனம் வர்த்தக சந்தையை கைப்பற்றும்போது, எப்படி, தொழில் மற்றும் அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்ற முடியும், என்பதற்கான உதாரணமாக இதைக் காணலாம்.
இப்போது நாம் நவீன தாராளமய கொள்கை, நவ காலனியாதிக்கம் கொண்டதாக உள்ளதை குறித்து விவாதிக்கிறோம். உலகளாவிய மறுபங்கீடு செய்யப்பட்ட உற்பத்தி, வளரும் நாடுகளில் விரிவுபடுத்தப்படுவதும், சுரண்டல் அதிகரித்தலும், காணக்கூடியதாக உள்ளது. இந்தியாவிலும் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையான வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும், அரசின் பொதுச் சொத்துக்களை, தனியார் ஆக்கிரமிப்பு செய்வது, அதற்கு பணமயமாக்கல் போன்ற பெயர்களை வைத்து கொள்ளை அடிப்பது, நவீன தாராளமய கொள்கைகளின் வெளிப்பாடாக உள்ளது. இன்று உற்பத்தி துறை மட்டுமல்லாமல், சேவைத் துறையிலும் தனியார் நிறுவனங்கள் கோலோச்சுகின்றன. தகவல் தொழில் நுட்பம், ஊடகம், காப்பீடு, வங்கி, சில்லரை வர்த்தகம், மருத்துவம், போக்குவரத்து போன்ற சேவை நிறுவனங்கள் என அனைத்தும், கார்ப்பரேட் கைவசம் குவிந்துள்ளன. இந்த சூழ்நிலையில் சிறு, குறு நிறுவன உடைமையாளர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
மற்றொருபுறம், தொழிலாளர்கள் எண்ணிக்கை, அமைப்பு சார்ந்த தொழில்களை விடவும் அமைப்புசாரா தொழில்களில் உள்ள தொழிலாளர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் இரண்டிலும், நிரந்தர தொழிலாளர்களை விடவும், காண்ட்ராக்ட், பயிற்சி போன்ற பெயர்களில், நிரந்தரம் செய்யப்படாமலேயே, நீண்டகாலம் வேலை செய்யும் நிலையை தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்குகின்றனர். மற்றொரு புறம் மிக அதிகமான வேலையின்மை இக்காலத்தில் உருவாகியுள்ளது. இவை எல்லாம் சேர்ந்து, கூலியை கட்டுப்படுத்துகிறது. அமைப்பாக ஒன்றுசேரும் நிலையை வேலைபறிப்பு அபாயம் காரணமாக தடுக்கிறது. இது கொள்ளை லாபம் மற்றும் மூலதனக் குவிப்புக்கு பேருதவியாக உள்ளது.
எனவே, நவீன பாட்டாளி வர்க்கம் உருவாகும் நிலையில், முரண்பாடு தொழிலாளி மற்றும் முதலாளிக்கு இடையில் அதிகரித்துள்ளது. இந்த முரண்பாட்டை கூர்மைப்படுத்த வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்டுகளுக்கு உள்ளது. ஆய்வின் நிறைவாக, மேற்படித் தொழிலாளர்களை அணி திரட்டிட சிறப்பு கவனம் செலுத்துவது. தொழிலாளி வர்க்கத்திடம் கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்தும் போராட்டங்கள், கூட்டு தொழிற்சங்க இயக்கங்கள் ஆகியவற்றை உறுதி செய்வது. தொழிலாளி விவசாயி கூட்டு போராட்டங்களை நடத்துவது. வேலை செய்யும் இடங்களில் மட்டுமல்லாது, வீடு, கல்வி, உடல்நலம், பொதுவசதி ஆகியவற்றிற்கான கூட்டான போராட்டங்களை தீவிரப்படுத்துவது என வழி காட்டியுள்ளது.
நகர்புறம் மற்றும் நடுத்தர வர்க்கம்:
நகர்மயமாதல் இந்தியாவில் அதிகரிக்கிறது. தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. 48.5 சதமான மக்கள் தமிழ்நாட்டில் நகரங்களில் வசிக்கின்றனர். இளைஞர்களின் வாழ்வியல், வருவாய் பற்றாக்குறை, சமூக ஒடுக்குமுறை, செல்வந்தர்கள், பணக்கார விவசாய வீட்டு பிள்ளைகளின் கல்விக்காக, விவசாய தொழிலாளர் விவசாய வேலை கிராமங்களில் இல்லாதது போன்ற காரணங்களால், நகரங்களை நோக்கி கிராம மக்கள் இடம் பெயர்கின்றனர்.
நகர மேம்பாட்டிற்காக அதிக நிதி என்பது ஒரு புறம், மறுபுறம் பயனாளிகள் கட்டணம், மான்யங்கள் கடனாக மாறுதல், முகவரி மாற்றங்கள் என்று பல பெயர்களில், சாதாரண மக்கள் மீது சுமை ஏற்றப்படுகிறது. இவை அனைத்தும் வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படுகிறது. குடிசைகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், நகருக்கு வெளியே ஏழை மக்கள் அனுப்பப்படும் நிலை அதிகரிக்கிறது.
அதேபோல், நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்க மக்கள், முதலாளித்துவ மற்றும் தாராளமய கொள்கைத் தாக்கம் காரணமாக, அதிகமான பாகுபாடுகளை கொண்டதாக மாறியுள்ளது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து உருவான பாரம்பரிய நடுத்தர வர்க்கத்தினர் ஒருபக்கம் இருந்தாலும், புதிய நடுத்தர வர்க்க ஊழியர்கள் உருவாவதும் அதிகரிக்கிறது. தகவல் தொழில்நுட்பம் துவங்கி, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் வரை ஏராளமான சேவை நிறுவனங்களிலிருந்து வளர்கின்றனர். இது முதலாளித்துவத்தின் கண்டுபிடிப்பு, வளர்ச்சி என்ற மாய வலைக்குள் பெருமளவில் சிக்கி கொள்ளும் சமூக பிரிவினராக உள்ளனர். எனவே, இவர்கள் தொழிற்சங்கங்களின்பால் ஈர்க்கப்படுவதும், சங்கம் அமைக்கும் தேவையை உணருவதுமே பெரும் சவாலாக உள்ளது.
மற்றொருபுறம், உயர் கல்வி மற்றும் வேலைக்கான பயிற்சி மையங்கள் அதிகரிப்பதும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயும், புதிய பிரிவினர் உருவாக காரணமாக உள்ளனர். இவர்களும் தங்களுக்கான வாய்ப்பை முதலாளித்துவ வளர்ச்சி வழங்கி உள்ளதாகவே நினைக்கின்றனர். இவை வேலைவாய்ப்பு என்றாலும், அடிப்படை தேவைக்காக, நிதிமூலதனத்தின் ஆதிக்கம், கடன் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்திள்ளது. ஒவ்வொரு நகர்ப்புற வீட்டிலும் இ.எம்.ஐ கடன் தவணை முக்கிய பிரச்சனையாக உள்ளது. வாகனங்களின் பெருக்கம், பெட்ரோல், டீசல் தேவை, இதர நுகர்பொருள் கலாச்சாரம், பிராண்ட் சார்ந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்தும் அந்தஸ்து சார்ந்த பிரச்சனை, அதன் விலை உயர்வு ஆகிய ஒவ்வொன்றும் இளைஞர்களையும், புதிய நடுத்தர வர்க்கத்தினரையும் விரட்டிக் கொண்டே இருக்கிறது.
பெண் உழைப்பாளர்களும் மேற்படி நிலையில் சரிபாதியாக உள்ளனர். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்து வருகிறது. உழைப்பு படையில் சரிபாதியான பெண்கள், சமூகத்தின் பெண் சார்ந்த விழுமியங்களில் இருந்து இன்னும் விடுதலைபெற முடியவில்லை. இது பெண்கள் அமைப்பாக திரளுவதற்கும், செயல்பாட்டிற்கும் தடையாக உள்ளது. முதலாளித்துவ வளர்ச்சியில், நிலப்பிரபுத்துவ விழுமியங்களின் தாக்கம், பெண்களுக்கு கூடுதல் சவாலாக உள்ளது.
மேற்படி பிரச்சனைகளை எதிர்கொள்ள, பல அமைப்புகள் இணைந்த சமூக குழுக்களின் செயல்பாடு அவசியம். குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டு செயல்பாடு அவசியம். நகரமயமாதல் காரணமாக, சுகாதார வசதிகள், குடிநீர் பிரச்சனை, நிலத்தடி நீர், அண்மை காலங்களில் மழை, வெள்ளப் பாதிப்புகள் என ஏராளமான பிரச்சனைகளுக்கு தனி நபராக முகம் கொடுக்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். இதை அமைப்புகள் எதிர்கொள்ள முடியும்.
டில்லி முற்றுகையும் – தொழிலாளர் வேலை நிறுத்தங்களும்:
முதலாளித்துவத்தின் தாராளமய காலம், உழைக்கும் வர்க்கத்திற்கு பெரும் சவாலை உருவாக்கி இருந்தாலும், நாசிக் துவங்கி மும்பை வரை, பல்லாயிரம் விவசாயிகள் மேற்கொண்ட நடைபயணம், வட இந்திய விவசாயிகளை, டில்லி முற்றுகையை நோக்கி அழைத்து சென்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தலைமை தாங்கும் விவசாய சங்கங்களுக்கு முக்கியப் பங்குண்டு. தாராளமய கொள்கைக்கு தூணாக விளங்கும் மூன்று வேளாண் சட்ட திருத்தங்கள், மேற்குறிப்பிட்ட போராட்டங்களால், திரும்பப்பெறப்பட்டது முக்கியமானதாகும்.
பாஜக 2014இல் மோடி தலைமையில் ஆட்சியை பிடித்த காலம் துவங்கி, தொழிற்சங்க அமைப்புகள் தனியாகவும், கூட்டாகவும், மத்திய சங்கங்களுடன் இணைந்தும், 7 அகில இந்திய வேலை நிறுத்தங்களை நடத்தி உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துள்ளனர். வேலைநிறுத்தங்களில் பங்கெடுக்கும், தொழிற்சங்கங்களின் அரசியல் தலைமை, நவீன தாராளமயமாக்கலை ஆதரிக்க கூடியதாக இருப்பதால், கொள்கை மாற்றங்கள் வரவில்லை. ஐ.மு.கூ அரசு காங்கிரஸ் தலைமையில் இருந்தபோது, பாஜகவின் தொழிற்சங்க அமைப்பான பி.எம்.எஸ் வேலை நிறுத்தங்களில் பங்கெடுத்து, நவீன தாராளமய கொள்கையை எதிர்த்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பின் அது போராட்டங்களில் பங்கெடுப்பதில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ள தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தங்களில் முன்னணியில் நிற்கின்றனர். நவீன தாராளமய கொள்கைகளின் விளைவாக உள்ள, விலைவாசி உயர்வு, குறைந்த பட்ச கூலி உயர்வின்மை, சட்டங்கள் திருத்தப் படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பிரச்சனை தீரவில்லை. ஏனெனில், கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கையும், பிரச்சாரமும் போதாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இதற்கு மாறாக, போராடி என்ன செய்ய எனக் கருதினால், விரக்தி மேலோங்கும். அதைத்தான் முதலாளித்துவம் விரும்புகிறது.
முதலாளித்துவத்தின் விருப்பத்தில் கொள்ளி வைப்பதை கொள்கையாக கொண்டுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது 24வது அகில இந்திய மாநாட்டிற்கு முந்தைய பணிகளான, கிளை மாநாடுகள் துவங்கி, மாநில மாநாடு வரையான விவாதங்களில், இந்த நவீன தாராளமய கொள்கைகளின் உள்ளூர் மட்ட தாக்கத்தை விவாதிப்பதும், கட்சி உறுப்பினர்களை, உள்ளூர் முதல் உலக பிரச்சனைகள் வரை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
