தோழர் சி.எஸ். – ஒரு வரலாற்று பெட்டகம்
கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர் – சிபிஐ(எம்)
“ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சி.சுந்தரம் ஐயரின் மகன், சுமார் 30-40 வயது மதிக்கத்தக்கவர், உயரம் 5 அடி 7 அங்குலம், ஒல்லியான உடல்வாகு, கோதுமை வண்ணம், படிய சீவிய தலை” – ‘சுப்ரமணியம் மற்றும் பி.ராமமூர்த்தி, எஸ்.மோகன் குமாரமங்கலம், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரை ராஜதுரோக குற்றத்தின் கீழ் கைது செய்ய உதவியாகத் தகவல் தருபவருக்கு ரூ.100 சன்மானம் தரப்படும்” என பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தித்தாளில் இப்படி ஓர் விளம்பரத்தை அளித்திருந்தது.
தனது தகப்பனாரின் விருப்பப்படி தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள், ஒரு ஐ.சி.எஸ் அதிகாரியாகி தனிப்பட்ட அளவில் நிறைய வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ‘தீவிரவாதி’ என்று முத்திரை குத்தப்பட்ட கம்யூனிஸ்ட் போராளியாகத்தான் தன்னை வரித்துக்கொண்டார் சி.எஸ். அன்றைக்குப் பெரும்பாலான கம்யூனிஸ்ட் தலைவர்கள் இப்படியான அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை வாழ்ந்துதான், பாட்டாளி வர்க்கம் சுரண்டலில் இருந்து விடுதலை பெற வேண்டும்; உண்மையான ஜனநாயகத்தை இந்தியாவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காகப் பணியாற்றி இருக்கிறார்கள். சலுகைகள், வசதிவாய்ப்புகள் பெற்ற சூழலில் பிறந்தாலும், இறுதிவரை பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகப் பணியாற்றி, மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்தார்கள்.
இத்தகைய பெருமைமிகு வாழ்க்கைக்கு சொந்தக்காரரான தோழர் சி.எஸ்.சுப்பிரமணியனுக்கு நூற்றாண்டு விழா மற்றும் சிறப்பு மலர் வெளியிடுவது மிகுந்த பாராட்டுக்குரியது, பெருமைக்குரியது.
தோழர் சி.எஸ்.சுப்ரமணியம் – தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அடித்தளம் இட்ட முன்னோடிகளில் ஒருவர். நூறாண்டுகள் வாழ்ந்து இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இறுதிவரை மிகப்பெரும் பங்காற்றிய மாமனிதர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரசியல், ஸ்தாபனப் பணிகளைத் தாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்று வரைவியலுக்கு மிக முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்; மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றாசிரியராகத் திகழ்ந்து பொக்கிஷமான கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்று நூல்களைப் படைத்திருக்கிறார். ஒரு பன்முக ஆளுமையாக இருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றியவர்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தில் தஞ்சை மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியாற்றியவர் திரு. சி.சுந்தரம் ஐயர். . இவரது மகனாக பிறந்த தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் அவர்களுக்கு உயர் கல்வி, உயர் வேலைவாய்ப்பு பெறக்கூடிய அளவிற்கு சமூகப் பொருளாதாரப் பின்புலம் கொண்ட சூழல் இருந்தது. தனது மகன் சுப்ரமணியம் ஒரு இந்திய குடிமைப் பணி அதிகாரியாக வேண்டும் என்று அவருடைய தந்தை ஆசைப்பட்டார். எனவே, மிகச் சிறந்த உயர்கல்வி வாய்ப்புகளை அவர் சி.எஸ் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, தோழர் சி.எஸ், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு படிப்பில் சேர்ந்திருக்கிறார்.
இங்கிலாந்தில் படித்த காலத்தில் சி.எஸ் அவர்களுக்கு மார்க்சியம் அறிமுகமாகிறது. கம்யூனிஸ்ட் மாணவர்கள் தொடங்கியிருந்த அக்டோபர் கிளப் என்ற அமைப்பில் 1930இல் இணைந்து உறுப்பினராக செயல்பட்டுள்ளார். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிராகப் பூர்வ பத்திரிகையான ‘டெய்லி ஒர்க்கர்’ இதழில் பணியாற்றி, உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார். ‘தனது மகன் இந்திய குடிமைப்பணி அலுவலராகும் தகுதியோடு திரும்பி வருவான்’ என்று தோழர் சி.எஸ் அவர்களின் தந்தை எதிர்பார்த்துக் காத்திருக்கையில், தோழர் சி.எஸ் அவர்களோ இந்தியாவின் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் போராளியாக செயல்படும் திறன்களைப் பெற்று தாய்நாட்டிற்குத் திரும்பினார். இந்தியாவில், தமிழகத்தில், கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்ட வேண்டும்; இந்திய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளில் தீவிரமாக இருந்தார்.
பாகிஸ்தானில் பிறந்து, போல்ஷிவிக் கட்சியுடனும், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கமான கோமின்ட்டனுடன் இணைந்து பணியாற்றியவரும், தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்க்க விதை போட்டவருமான தோழர் அமிர் ஹைதர் கான் அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டும் பணியில் தன்னையும் இணைத்துக்கொண்டார். கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு, வரிசையாக கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக சதிவழக்குகளைப் புனைந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒழித்துக்கட்ட முயன்ற காலம் அது. கம்யூனிஸ்ட்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். தலைமறைவாக செயல்பட்டுத்தான் இயக்கத்தை வளர்க்க வேண்டும். கல்லில் நார் உரிப்பது போன்ற கடுமையான பணி. ஆனால், மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் தோழர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், பி.சுந்தரய்யா, பி.சீனிவாசராவ் போன்றவர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தெடுக்கும் பணியில் ஈடுபட்டார் தோழர் சி.எஸ். 1936இல் சென்னையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையின் உறுப்பினரானார்.
தலைமறைவு காலத்தில் மிகவும் நுட்பமாகவும், திறமையாகவும் பணியாற்றும் சாதுர்யம் தோழர் சி.எஸ் அவர்களுக்கு இருந்திருக்கிறது. 1940இல் கட்சி வேலைகளுக்காக தஞ்சை, திருச்சி பகுதிகளுக்குச் சென்றுவிட்டு சென்னை மாநில மையத்திற்குத் திரும்பியபோது, தோழர்கள் பி.ஆர் மற்றும் சிலருடன் தோழர் சி.எஸ் கைதானார். 1941ஆம் ஆண்டில் தோழர்கள் பி.ஆர், சி.எஸ், மோகன் குமாரமங்கலம், கேரளீயன், ஹனுமந்தராவ் உள்ளிட்ட தோழர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு சென்னை சதிவழக்கை தொடுத்து சிறையிலடைத்து கொடுமைப்படுத்தியது. இச்சிறைக் கொடுமையினை துச்சமென எதிர்கொண்டார் தோழர் சி.எஸ்.
தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையில் முதல் செயலாளராக தோழர் சி.எஸ் செயல்பட்டிருக்கிறார். இந்தக் குழு 1936-1939 வரையில் சென்னையில் நடைபெற்ற காலனி ஆதிக்கத்திற்கு எதிரான தொழிலாளர்கள், மாணவர் எழுச்சிப் போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தி இருக்கிறது. செய்நேர்த்தி கொண்டவரான தோழர் சி.எஸ் ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பவராக இருந்திருக்கிறார். 1942ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பிறகு நடைபெற்ற மத்திய கமிட்டியின் பிளீனத்தில் தோழர்கள் பி.ஆர், பி.எஸ்.ஆருடன் கலந்துகொண்டிருக்கிறார்.
சுதந்திரத்திற்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சி குறித்த தன்னுடைய வரலாற்று எழுத்துகளின் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்று வரைவியலுக்கு மிகப் பெரும் பங்களிப்பை ஆற்றி இருக்கிறார். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டான தோழர் சிங்காரவேலு பற்றி தோழர் கே. முருகேசனுடன் இணைந்து இவர் இயற்றிய ஆய்வு நூல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சி குறித்த வரலாற்றில் முக்கிய ஆவணம். ஒரு தலைசிறந்த முன்னோடி கம்யூனிஸ்டின் வாழ்க்கை வரலாற்றை மிகவிரிவான முறையில் முதல்முறையாக உலகிற்கு வழங்கிய ஆவணம் இது.
“1917-25 வரை தமிழ்ப் பத்திரிகைகளில் லெனினினைப் பற்றி வெளியான கருத்துகளைத் தேடி எடுப்பதில் நாங்கள் சில தகவல்களைச் சேகரித்தோம். அப்போது நாங்கள் பார்த்த இதழ்களில் அந்நாட்களில் சிங்காரவேலுவின் பணிகளைப் பற்றிய செய்திகள் பலவற்றைக் காண முடிந்தது. தென்னிந்தியாவில் கம்யூனிசத்தைப் பரப்பிய முன்னோடி என்பதைப் பற்றி, நாங்கள் அறிந்ததைத் தவிர, அவரது தொண்டைப் பற்றி மேலும் பல விஷயங்கள் இருந்தன என்பதைக் கண்டோம். சற்று தீவிரமாக முயன்றால், சிங்காரவேலுவைப் பற்றி ஏற்கனவே வெளிவந்திருந்த ஒரு சில கட்டுரைகளில் உள்ளவற்றைவிட விரிவான விவரங்களைக் கொண்ட ஒரு சிறு படைப்பை வெளியிடலாம் என்று எங்களுக்குத் தோன்றியது.” என்று இந்த ஆய்வுநூலை உருவாக்கத் தொடங்கிய செயல் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த வரிகள், எத்தகைய பிரம்மாண்ட வரலாற்று ஆய்வுப் பணியினை இருவரும் மேற்கொண்டு, இந்நூலை படைத்தார்கள் என்று நமக்கு உணர்த்துகிறது.
பல்வேறு ஆவணங்களைத் தேடி எடுத்து, சரிபார்த்து, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டு பல பேரைப் பேட்டி கண்டு அந்த நூலை இருவரும் படைத்திருக்கிறார்கள். அந்நூலின் அடிக்குறிப்புகளே எவ்வளவு பெரிய மலையளவு வேலையை இவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும். உதாரணத்திற்கு தோழர் சிங்காரவேலர் 1902ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றிருக்கிறார். இந்தப் பயணம் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பதை ஆய்வு செய்வதற்கு அவருடைய குடும்ப உறுப்பினர்கள் வைத்திருக்கும் கடிதப் போக்குவரத்து ஆதாரங்கள் உள்ளிட்டு பல அம்சங்களையும் ஆராய்ந்திருக்கிறார்கள்.
‘சிங்காரவேலு-தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்று நூலுக்கு இவர்கள் இட்ட தலைப்பே, இன்றைக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள்ளும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வெளியேயும் தோழர் சிங்காரவேலுதான் தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் என்ற உண்மை வரலாற்றை ஆழமாகப் பதிவு செய்தது.
அடுத்ததாக, தோழர் லெனினைச் சந்தித்த குழுவில் இடம்பெற்ற தென்னிந்தியரும், 1920ஆம் ஆண்டில் எம்.என்.ராயால் தாஷ்கண்டில் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையின் உறுப்பினராகவும் இருந்த எம்.பி.டி ஆச்சார்யாவின் வாழ்க்கை பற்றி விரிவாக ஆய்வு செய்து, இவர் கொண்டுவந்த MPT Acharya, His life and Times என்கிற நூல் மிக முக்கியமானது. இந்த நூல் வெளியிடப்பட்ட ஆண்டு 1995. அப்போது தோழர் சி.எஸ் அவர்களுக்கு வயது 85. இன்றைக்கு இருப்பதுபோல உலக அளவிலான இணையம், கணினி தொழில்நுட்பம் இல்லாத காலம். தனது கடுமையான உழைப்பால் ஆய்வுகளை மேற்கொண்டு இந்த வாழ்க்கை வரலாற்று நூலை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நமது கட்சியின் வளர்ச்சி- Our Party’s Growth in Tamilnadu என்ற தலைப்பில் தோழர் சி.எஸ் இயற்றி, 1998ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸில் வெளியிடப்பட்ட நூல், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைப் பற்றி சுருக்கமாக, ஆனால், ஆழமாக விவரிக்கும்.
கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை, கம்யூனிஸ்ட்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எப்படி நேர்த்தியாகப் படைக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக தோழர் சி.எஸ் அவர்களின் ஆய்வுகள் திகழ்கின்றன. அவர் படைத்த ஆய்வு நூல்கள் வரலாற்றுப் பொக்கிஷங்கள்.
தனது சொந்த வாழ்க்கையில் பிறரின் உதவிகளை எதிர்பார்க்காமல் வாழ்ந்திருக்கிறார் சி.எஸ். வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த தனது மனைவி சுகுணாபாய் அவர்களைக் கண்ணின் மணி போலக் கவனித்துக்கொண்டு, தனது உடைகளை தானே துவைத்துக்கொள்வது, தன் உணவைத் தானே தயாரித்துக்கொள்வது என ஒரு கம்யூனிஸ்ட் வாழ்க்கையை இறுதிநாள் வரை வாழ்ந்திருக்கிறார்.
தனது அறிவாற்றல் முழுவதையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி, தொடக்கப்புள்ளியில் இருந்து ஸ்தாபனத்தை வளர்த்து, மிகப்பெரும் வரலாற்றுப் படைப்புகளை இயக்கத்திற்கும், சமூகத்திற்கும் வழங்கியவர். ‘நான் செய்தது ஒன்றும் பெரிய காரியமல்ல; என்னைப் பற்றிச் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை’ – என்ற தன்னடக்கத்தோடு இறுதிவரை வாழ்ந்திருக்கிறார். பல வரலாற்று ஆவணங்களை படைத்த தோழர் சி.எஸ். அவர்கள் தனது உயிர் இருக்கும் வரை தனது வரலாற்றை பதிவு செய்ய மறுத்துவிட்டார் என்பதுதான் தோழர் சி.எஸ் அவர்களின் அடையாளம். தோழர் சி.எஸ் சுப்ரமணியம் அவர்களின் நூறாண்டு கால வாழ்க்கை கம்யூனிஸ்ட்கள் எப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள் என்பதை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் பாடம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
