இந்தியாவுக்கான மாற்றுப் பாதைக்கு வழிகாட்டும் ஆவணங்கள்
மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் முக்கிய ஆவணங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
தற்போது மத்தியகுழு இரண்டு நகல் ஆவணங்களை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதத்திற்காக சுற்றுக்கு விட்டுள்ளது .
ஒன்று, கடந்த 24 வது மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி அமலாக்கம் குறித்த பரிசீலனை அறிக்கை ; மற்றொரு ஆவணம், எதிர் வரும் ஆண்டுகளுக்கான அரசியல் நிலைப்பாட்டை உள்ளடக்கிய நகல் அரசியல் தீர்மானம்.
கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு முக்கிய வழிகாட்டியாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நடைமுறை உத்தி பரிசீலனை அறிக்கை (நகல்)அமைந்துள்ளது. அறிக்கையின் இறுதி பகுதியில் பரிசீலனையின் முடிவுகளாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் இங்கே தரப்பட்டுள்ளது.
நகல அரசியல் தீர்மானம் சர்வதேச தேசிய நிலைமைகளை ஆய்வு செய்கிறது. கடந்த மாநாடுகளைப் போன்றே இடது ஒற்றுமையும் இடது ஜனநாயக அணியும் அமைக்க வேண்டிய அவசியத்தை இந்த ஆவணம் வலுவாக வலியுறுத்துகிறது இடது ஜனநாயக அணி பற்றிய அணிக்கான திட்டம் நகல் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது இடது ஜனநாயக திட்டம் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது
- ஆசிரியர் குழு.
அரசியல் நடைமுறை உத்தி பரிசீலனையில் இருந்து
73. அரசியல் நடைமுறை உத்தி குறித்த பரிசீலனையிலிருந்து பெறப்படும் முடிவுகள் கீழ்க்கண்டவையாகும்:
i) அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன தளங்களில் கட்சியின் சுயேச்சையான பாத்திரத்தையும், செயல்பாடுகளையும் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். தேர்தலுக்கான உடன்பாடு அல்லது கூட்டணி என்ற பெயரில் நமது சுயேச்சையான அடையாளத்தை மழுங்கச் செய்வதோ அல்லது நமது சுயேச்சையான செயல்பாடுகளை குறைப்பதோ கூடாது.
ii) இதர இடதுசாரி கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அவர்களுடனான ஒன்றுபட்ட நடவடிக்கைகளும் மேடைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
iii) ஒவ்வொரு மாநிலத்திலும் இடதுசாரி ஜனநாயக சக்திகளை ஓரணியில் அணிதிரட்டுவதற்கான முயற்சிகளை தொடர வேண்டும். இதன் ஒரு தொடக்கமாக, அனைத்து இடதுசாரி வெகுஜன அமைப்புகளையும், மாநில, தேசிய அளவில் ஒரு கூட்டு மேடையில் கொண்டுவர வேண்டும்.
iஎ) தத்துவார்த்த, அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் ஆர் எஸ் எஸ்/ இந்துத்துவா சக்திகளின் செயல்பாடுகளை எதிர்த்த நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அதே போன்று, அவர்களின் சாதி/ உட்சாதி ஊடுருவலை எதிர்த்த அணிதிரட்டலிலும் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும்.
எ) கிராமப்புற பணக்காரர்களின் கூட்டணிக்கு எதிராக, கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டுவதற்கு உறுதியான நடைமுறை உத்திகளையும் முழக்கங்களையும் வகுப்பதன் மூலம் அவர்களுக்கு எதிரான போராட்டங்களை வளர்த்தெடுக்க முடியும். மாநிலக் குழுக்கள் இதற்கென ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
எi) நீடித்த உள்ளூர் போராட்டங்களுக்கான பிரச்சனைகளை அடையாளம் கண்டு கையிலெடுக்க உள்ளூர் கிளைகளுக்கும் கட்சிக் கிளைகளுக்கும் மாநிலக்குழுக்களும் மாவட்டக் குழுக்களும் உதவி செய்ய வேண்டும். உள்ளூர் மேலாதிக்க சக்திகளின் நலன்கள் குறித்த வர்க்க ரீதியான அணுகுமுறையே மேலோங்க வேண்டும்.
எii) நவீன உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களையும், முக்கிய துறைகளின் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவது; அணிதிரட்டப்பட்ட துறையில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
எiii) அகில இந்திய அளவில், மாநில அளவில் விடுக்கப்படும் அரசியல் பிரச்சார அறைகூவல்களின்போது, வீடு வீடாகப் பிரச்சாரங்கள், சிறு சிறு குழுக்கூட்டங்கள் மூலம் மக்களை சென்றடைவதே நமது முக்கிய முயற்சியாக இருக்க வேண்டும்.
iஒ) சாதிய அடிப்படையிலான, பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறை போன்ற சமூகப் பிரச்சனைகளை நேரடியாகக் கையிலெடுப்பதில் கட்சி அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பணியை பொதுவான கட்சி மேடையுடனும், வர்க்க அடிப்படையிலான நமது இயக்கங்களுடனும் ஒருங்கிணைக்க வேண்டும். பெண்களின் உரிமைகள் குறித்தான விஷயங்களை கட்சியே நேரடியாகக் கையிலெடுத்துப் போராட வேண்டும்.
ஒ) பழங்குடி இனத்தவர் கணிசமான வாழும் மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட பழங்குடிப்பகுதிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
ஒi) இளைஞர்கள் – மாணவர்களுக்குத் தொடர்புடைய வகையில் அவர்களின் பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவை குறித்து குறிப்பிட்ட வகையிலான கொள்கை நிலைப்பாடுகள், அரசியல் நிலைப்பாடுகளை வடிவமைக்க வேண்டும்.
ஒii) ‘நமது அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ‘சோஷலிசத்தை’ ஒரு ‘மாற்றாக’ முன்னெடுக்க வேண்டும்.
ஒiii) எதேச்சாதிகார – இந்துத்துவ – கார்ப்பரேட் அபாயத்திற்கு எதிராக மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளின் விரிவான அணிதிரட்டலை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
ஒஎi) தேர்தல்களில் நாம் தொடர்ந்து இந்தியா அணியுடன் இணைந்து செயல்படுவதோடு, நாடாளுமன்றத்திலும், பாஜக – ஆர் எஸ் எஸ் வகுப்புவாத நிகழ்ச்சிநிரலுக்கு எதிரான பொதுவான பிரச்சனைகளிலும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். பொருளாதார கொள்கை குறித்த நிலைப்பாடுகளில், இந்துத்துவ வகுப்புவாத பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சி சமரசம் செய்து கொள்ளும்போது அதனிடமிருந்து நம்மை தனித்துக் காட்டிக் கொள்ள வேண்டும்.
ஒஎ) அனைத்து மட்டங்களிலும் கட்சித் தலைமையின் வேலைப் பாணியில் திரளான மக்களை கவர்ந்திழுக்கும் வழி பின்பற்றப்பட வேண்டும்.
24வது கட்சி காங்கிரஸ் வரைவு தீர்மானத்திலிருந்து
இடது ஒற்றுமை
2.82 மக்களவைத் தேர்தலில் பரந்த ஒற்றுமையை உருவாக்குவதில் மும்முரமாக இருந்ததால், இந்த காலகட்டத்தில் ஒன்றுபட்ட இடதுசாரி நடவடிக்கைகளில் ஒரு மந்தநிலை ஏற்பட்டது. காசாவில் இஸ்ரேல்முன்னெடுத்த ஆக்கிரமிப்புப் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்க இடதுசாரிக் கட்சிகள் இரண்டு முறை கூட்டாக அறைகூவல் விடுத்தன. இடதுசாரிகளின் மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்துவதற்கு இடதுசாரிகளின் ஒற்றுமையும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு ஒரு புதிய உந்துதலும் தேவை. தேசிய அரசியலில் இடதுசாரிகளின் தலையீட்டை அதிகரிக்பது மோடி அரசாங்கத்தின் தீயபிளவுவாதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை வலுப்பெறச் செய்யும்.
இடது ஜனநாயக மாற்று
2.83 முப்பதாண்டுகளுக்கும் மேலாக மத்தியில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட நவதாராளமய, பெருமுதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சார்பு கொள்கைகளும், கடந்த பத்தாண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட அபாயகரமான கார்ப்பரேட்-வகுப்புவாத-எதேச்சதிகார வலதுசாரி திருப்பத்திற்கு பின்னரும், தற்போதைய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ முறைமைக்கு ஒரே உண்மையான மாற்று இடது -ஜனநாயக மாற்றுதான் என்பது தெளிவாகியுள்ளது. தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள், நடுத்தர வர்க்கம், அறிவுஜீவிகளின் நலன்களை பாதுகாக்கக் கூடிய இடது ஜனநாயக முன்னணியை உருவாக்க சி.பி.ஐ(எம்) பாடுபடும். மாற்றுக் கொள்கைகளுக்கான தொடர்ச்சியான வெகுஜன,வர்க்கப் போராட்டங்கள் மூலம் ஒரு வலுவான இடது ஜனநாயக முன்னணி உருவாவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
2.84 இடது ஜனநாயக வேலைத்திட்டம் பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்:
1. அரசியலைமைப்பின்படியான ஜனநாயகம், மதச்சார்பின்மை கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள். இதற்காக:
*• மதமும், அரசியலும் கலக்காமல் இருப்பதை அரசியல் சாசன ரீதியாக உறுதி செய்தல்.
*• ஜனநாயக உரிமைகளை, குடிமைச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் அனைத்து அம்சங்களையும், சட்டங்களையும் நீக்குதல்.
•* மத்திய-மாநில உறவுகளை மறுசீரமைத்தல், வலுவான வகையில் ஜனநாயகத்தை பரவலாக்கல்.
2. தற்சார்பும், மக்கள் சார்பும் கொண்ட வளர்ச்சிப் பாதை:
*• சர்வதேச நிதி மூலதனத்தின் ஓட்டத்தைகடும்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல்; சுரங்கங்கள், இயற்கை எண்ணெய் வளங்களை தேசியமயமாக்குதல்; திட்டமிட்ட, சமச்சீரான வளர்ச்சியை எட்டுதல்.
•* பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்; ஏகபோகங்களைக் கட்டுப்படுத்துதல், பொதுத் துறையின் மேம்பாடு; செல்வ வளங்களை மறுபங்கீடு செய்யும் வகையில் நிதிக்கொள்கை, வரிக் கொள்கைகள்.
*• முழுமையான நிலச்சீர்திருத்தமும், விவசாய உறவுகளில் ஜனநாயக மாற்றமும்; அனைத்து பயிர்களுக்கும் லாபகரமான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும்; விவசாயிகளை கடனிலிருந்து விடுவிப்பது; விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியம், சமூகப் பாதுகாப்பு தொடர்பான மத்திய சட்டம்; கூட்டுறவுப் பண்ணை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் வழியாக கூட்டுத் தலையீட்டின் அடிப்படையில் விவசாயத்தை மேம்படுத்துதல்.
3. உழைக்கும் மக்களின் உரிமைகள்:
•* வாழ்வுரிமை, வருமானமிகு வேலைவாய்ப்பு, நியாயமான கூலி, வீட்டுவசதி மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான உரிமை; இரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கங்களை அங்கீகரித்தல்; நிர்வாகத்தில் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் வழங்குதல், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்தல்,.
•* உணவு உள்ளிட்டு அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கான பொது விநியோக முறையை பரவலாக்கி விரிவுபடுத்துதல்.
•* அனைவருக்குமான முதியோர் ஓய்வூதியம்.
4. கல்வி மற்றும் கலாச்சாரம்:
•* கல்வி உரிமையை உறுதி செய்தல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்குதல்; பொதுக் கல்வி முறையை விரிவுபடுத்தி வலுப்படுத்த வேண்டும்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி (ஐ.சி.டி.எஸ்) அனைவருக்கும் விரிவு செய்தல்.
*• அரசு நிதியுதவியுடன் அனைவருக்கும் பொது சுகாதார ஏற்பாடு; அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்
•* மதச்சார்பற்ற,ஜனநாயக பண்பாட்டை ஊக்குவித்தல்; அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம்.
5. சமூக நீதி:
•* சாதிய அமைப்பையும், அனைத்து சாதிய ஒடுக்குமுறைகளையும் ஒழிக்க வேண்டும்; தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல்.
•* அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை; சம வேலைக்கு சம ஊதியம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள்.
•* மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல்.
6. தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் சுற்றுச்சூழல்:
•* உயர்மட்ட ஊழலை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள்; தேர்தல் சீர்திருத்தங்கள், பகுதி பட்டியல் முறையுடன் கூடிய விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்துதல்.
•* சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நச்சு வாயுக்களின் உமிழ்வைக் குறைத்தல்; புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல்; அனைவருக்கும் ஆற்றல்சமத்துவத்தை (நநேசபல நளூரயடவைல) உறுதிசெய்தல்.
7. வெளியுறவுக் கொள்கை:
*• ஏகாதிபத்திய மேலாதிக்க எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட சுயேட்சையானவெளியுறவுக் கொள்கை; அமெரிக்காவுடனான அனைத்து ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் திரும்பப் பெறுதல்.
அரசியல் நிலைப்பாடு
2.85 சுமார் பதினொரு ஆண்டு கால மோடி ஆட்சியின் விளைவாக நவ பாசிச குணாம்சங்களுடன் வலதுசாரி, வகுப்புவாத, எதேச்சதிகார சக்திகள் ஒருங்கிணைந்துள்ளன. இந்துத்துவா சக்திகளும், பெரு முதலாளிகளும் அமைத்துள்ள கூட்டணியை மோடி அரசு பிரதிநிதித்துவப்படுகிறது. எனவே, பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் அதற்கு அடித்தளமிடும் இந்துத்துவ-கார்ப்பரேட் பிணைப்பை எதிர்த்துப் தோற்கடிப்பதே முதன்மைப் பணியாகும்.
2.86 பாஜகவையும், இந்துத்துவ சக்திகளையும் தனிமைப்படுத்தி தோற்கடிப்பதற்கு, இந்துத்துவ சித்தாந்தத்திற்கும், வகுப்புவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கும் எதிராக தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படுகிறது. இந்துத்துவ வகுப்புவாதத்திற்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பரந்த அளவில் அணிதிரட்டிட கட்சி பாடுபட வேண்டும்.
2.87 இந்துத்துவாமற்றும்நவதாராளமயஆட்சிக்குஎதிரானபோராட்டங்கள்வெற்றியடைய, சி.பி.ஐ(எம்) மற்றும் இடதுசாரிகளின் சொந்த வலிமை அதிகரிக்க வேண்டும். மேலும், இந்துத்துவ வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும், நவதாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைப்பதும் அவசியம்.
2.88 உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலை தீவிரமாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை நிலைமைகளையும் மோசமாக பாதித்திருக்கும் கார்ப்பரேட் ஆதரவு, நவதாராளமய கொள்கைகளுக்கு எதிரானவர்க்க, வெகுஜன போராட்டங்களை நடத்துவதன் மூலமாக மோடி அரசாங்கத்திற்கும், பாஜகவுக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கள்ளக்கூட்டு முதலாளித்துவம், தேச சொத்து கொள்ளை, பெருமளவில் தனியார்மயமாக்கல் ஆகியவற்றை கட்சி முன்னின்று எதிர்க்க வேண்டும்.
2.89 நாடாளுமன்றத்திற்குள் “இந்தியா” அணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஒத்துழைக்கும். நாடாளுமன்றத்திற்கு வெளியே ஏற்புடைய பிரச்சினைகளின் மீதான போராட்டங்களுக்கும் கட்சி ஒத்துழைக்கும். ஜனநாயகத்திற்கு எதிரான எதேச்சதிகார தாக்குதல்கள், கருத்து வேறுபாடுகளை ஒடுக்க கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துதல், அரசியலமைப்பையும், அரசின் நிறுவனங்களையும் சீர்குலைக்கும் முயற்சிகள் ஆகியவற்றிற்கு எதிராக கட்சி அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடனும் கைகோர்க்கும்.
2.90 பாஜகவை உறுதியாக எதிர்க்கும் பிராந்திய கட்சிகளுடன் சி.பி.ஐ(எம்) ஒத்துழைக்கும். அத்தகைய பிராந்தியக் கட்சிகள் தலைமையேற்கும் மாநில அரசாங்கங்களின் மக்களுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு கொள்கையையும் கட்சி ஆதரிக்கும், ஆனால் உழைக்கும் மக்களை மோசமாக பாதிக்கும் கொள்கைகளுக்கு எதிராக போராட மக்களை அணிதிரட்டும்.
2.91 வர்க்க, வெகுஜன அமைப்புகளின் ஒன்றுபட்ட மேடைகளையும், ஒன்றுபட்ட நடவடிக்கைகளையும் கட்சி ஆதரிக்கும். முதலாளித்துவ கட்சிகளின் செல்வாக்கில் உள்ள வெகுமக்களை ஒன்றுபட்ட போராட்டங்களில் ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அது மேற்கொள்ள வேண்டும்.
2.92 கட்சியின் சொந்த வலிமை அதிகரிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் அதே நேராத்தில், இடதுசாரி ஒற்றுமையைப் புதுப்பிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் முயற்சிகள் இருக்க வேண்டும். இடதுசாரிகளின் ஒன்றுபட்டபிரச்சாரங்களும், போராட்டங்களும் இடதுசாரிகளின் மாற்றுக் கொள்கைகளை முன்னிலைப்படுத்த வேண்டும். வெகுஜன அமைப்புகள், சமூக இயக்கங்கள் உட்பட அனைத்து இடதுசாரி ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டி ஒரு இடதுசாரி ஜனநாயக தளத்தையும் திட்டத்தையும் உருவாக்க சி.பி.ஐ(எம்) பணியாற்ற வேண்டும்.
2.93 பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அதிகபட்சமாக குவிக்கும்வகையில் மேற்கண்ட அரசியல் நிலைப்பாட்டின்படி பொருத்தமான தேர்தல் உத்திகளை மேற்கொள்ளலாம்.
கடமைகள்
2.94
(1) நவ-தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளையும், இந்துத்துவ வகுப்புவாதத்தையும், ஜனநாயகத்தின் மீதான எதேச்சதிகாரத் தாக்குதல்களையும் எதிர்த்து, பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் கட்சி முடுக்கிவிட வேண்டும்.
(2) வாழ்வாதாரப் பிரச்சினைகள், நிலம், உணவு, ஊதியம், வீட்டு மனைகள், சமூகப் பாதுகாப்பு நன்மைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த கிராமப்புற ஏழைகள், தொழிலாளி வர்க்கம்,நகர்ப்புற ஏழைகளின் போராட்டங்களை வளர்த்தெடுக்கவும், தீவிரப்படுத்தவும் வேண்டும்.
(3) இந்துத்துவ வகுப்புவாதத்திற்கு எதிரான அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் விரிவான ஒற்றுமைக்காக கட்சி பாடுபட வேண்டும்.
(4) ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள், குடியுரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக கட்சி தொடர்ந்து முன் நிற்க வேண்டும். கருத்து வேறுபாடுகளையும், எதிர்ப்பையும் ஒடுக்கும்நடவடிக்கைகளுக்கும், மத்திய முகமைகளை தவறாகப் பயன்படுத்துவதற்கும், அரசியலமைப்பு நிறுவனங்களை சீர்குலைப்பதற்கும், எதேச்திகார தாக்குதல்களுக்கும் எதிரான பரந்த ஒற்றுமையை ஏற்படுத்திட கட்சி ஒத்துழைக்க வேண்டும்.
(5) அனைத்து வகையான சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் பாகுபாடுகளுக்கும் எதிரான போராட்டத்தை செயலூக்கத்துடன் கட்சி முன்னெடுக்க வேண்டும். பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள், மத சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக கட்சி முன்னின்று போராட வேண்டும். பழங்குடியினர் பகுதிகளில் பணியாற்றுவதில் கட்சி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
(6) இந்திய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை உயர்த்தவும், மோடி அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கைக்கும், அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டணிக்கும் எதிராக வெகுமக்களின் கருத்தை ஒருங்கமைக்கவும் கட்சி பணியாற்ற வேண்டும்.
(7) மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கூட்டாட்சி கோட்பாட்டுக்காகவும் நிற்கும் சக்திகளை திரட்டுவதில் கட்சி ஈடுபட வேண்டும். கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும். மக்கள் சார்பு கொள்கைகளை செயல்படுத்துவதற்கான அதன் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்.
(8) இடதுஜனநாயகதிட்டத்தைமுன்வைத்து,இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவதற்கு கட்சி உழைக்க வேண்டும். இந்தப் பிரச்சாரம் ‘சோசலிசம்மட்டுமேமாற்று’ – இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப சோசலிசம் என்றபிரச்சாரத்துடன்இணைக்கப்பட வேண்டும்.
எழுவோம், சவால்களை முறியடிப்போம் !
2.95 மேற்கண்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கு, கட்சியின் சொந்த பலத்தை பெருமளவில் வளர்ப்பது முற்றிலும் தேவையானதாகும்.
• அரசியல், சித்தாந்த, பண்பாடு மற்றும் அமைப்பு ரீதியாக, ஆர்.எஸ்.எஸ்-பாஜகவை கட்சி எதிர்கொள்ள வேண்டும்.
• நவ-தாராளமய அமைப்பின் கீழ் நடைபெறும் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், கிராமப்புற தொழிலாளர்கள் என உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவினரின் போராட்டத்தை கட்சி உறுதியோடு முன்னெடுக்க வேண்டும்.
• உண்மையான மாற்றினை மக்கள் முன் வைக்க கட்சி அனைத்து இடதுசாரி ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும்.
2.96 ஒட்டுமொத்த கட்சியும் இந்தத் தீர்மானத்தின் அரசியல், சித்தாந்த சாரத்தை இந்திய மக்களிடம் எடுத்துச் சென்றிடுவோம்! மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றிய ஒரு ஸ்தாபனமாக ஒரு வலுவான அகில இந்திய கட்சியைக் கட்டியெழுப்பிடும் இலக்கை நோக்கி முன்னேறுவோம்! கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெருமைமிகு மரபுகளின் அடிப்படையில் எதிர்வரும் சவால்களை முறியடிக்க நிச்சயமாக வீறுகொண்டு எழுவோம்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
