
பொருளாதார நோபல் 2025 – விமர்சனப் பார்வை
அபிநவ் சூர்யா
2025-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு அங்கமாக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது – ஜோயல் மோகிர், ஃபிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட்.
பலரும் விமர்சித்துள்ளது போல, இந்த பரிசு இது நாள் வரை பெரும்பாலும் முதலாளித்துவ-ஏகாதிபத்திய வர்க்கங்களின் நலனுக்கு ஆதரவான கோட்பாடுகளை முன் வைக்கும் அறிஞர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2008-ம் ஆண்டின் உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார சரிவுக்கு பின்னர், நவதாராளமய கொள்கைகள் மீதான நம்பகத்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால், நவதாராளமயத்தின் அடிப்படையான நவீன செவ்வியல் (Neo-classical) பொருளாதார கோட்பாடுகளில் இருந்து சற்றே விலகி நின்று வாதங்களை வைக்கும் அறிஞர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
எனினும் இவர்களும் பல்வேறு வழிகளில் நிலவி வரும் முதலாளித்துவ சுரண்டல் முறையை பாதுகாக்கும் கொள்கைகளை முன் வைப்பவர்களே ஆகும். இந்த வரையறையில்தான் இந்த ஆண்டிற்கான வெற்றியாளர்களும் அடங்குவர்.
2025 பொருளாதார நோபல்
இந்த ஆண்டு வென்றவர்களுக்கு எவ்வாறு புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளது என்பதை விளக்கியதற்காக பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜோயல் மோகிர் வரலாற்று ஆய்வாளர். குறிப்பாக ஏன் தொழிற் புரட்சிக்கு பின்னர் தான் உலகளவில் பொருளாதார வளர்ச்சி அதிவேகமாக நிகழ்ந்தது என்பதற்கு விளக்கம் அளித்தார். அவர் கோட்பாட்டின்படி, தொழிற் புரட்சிக்கு முன்னரும் முக்கிய கண்டுபிடிப்புகள் இருந்துள்ளன (உதாரணமாக சீனாவின் காகிதம், அச்சு, இந்தியர்-அரபியர்களின் கணிதம்); ஆனால் அவற்றை நடைமுறையில் பொருளாதார வளர்ச்சியை நோக்கி செயல்படுத்தும் ஞானம் இல்லை என்கிறார். தொழிற் புரட்சி காலத்தில் இங்கிலாந்தில் கண்டுபிடிப்புகளை சந்தையில் விற்கத்தக்க பண்டங்களாக மாற்றும் பொறியியலாளர்கள் இருந்ததே அதன் வெற்றிக்கு காரணம் என்கிறார்.
அகியோன் மற்றும் ஹோவிட் கணிதம் சார் பொருளாதாரத்தில் தேர்ந்தவர்கள். அவர்களின் ஆய்விற்கான அடிப்படை கோட்பாட்டை வழங்கியது 1930-களில் துவங்கி தலை சிறந்து விளங்கிய ஆஸ்த்ரிய பொருளாதார அறிஞர் ஜோசப் ஷும்பீட்டர். அவரின் “உருவாக்கும் அழிவு” (Creative Destruction) என்ற கோட்பாட்டை கணித முறைகளை பயன்படுத்தி நிறுவியதே இந்த ஆய்வாளர்களின் பங்களிப்பு.
இவர்கள் ஏன் நவீன செவ்வியல் பொருளாதார கோட்பாட்டிற்கு மாறுபட்டவர்களாக கருதப்படுகின்றனர்? வழக்கமாக, நவதாராளவாதிகள் முதலாளித்துவத்தில் நெருக்கடிகளே ஏற்பட வாய்ப்பில்லை என வாதிடுவர். அப்படி நெருக்கடி/வீழ்ச்சி ஏற்பட்டால், அதற்கு வெளியிலிருந்து யாரோ செய்த தவறு அல்லது ஏற்பட்ட ஏதோ ஒரு அழுத்தம் (உதாரணமாக, கோவிட் தொற்று) தான் காரணம் என வாதிடுவர். ஆனால் “உருவாக்கும் அழிவு” கோட்பாட்டின்படி, இப்படிப்பட்ட நெருக்கடிகளும் பொருளாதார வீழ்ச்சியும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அம்சமாக கருதப்படுகிறது. முதலாளித்துவத்தில் கண்டுபிடிப்பாளர்கள் (entrepreneurs) உற்பத்தியை புதிய, மேம்பட்ட வழியில் மேற்கொள்ளும் கண்டுபிடிப்புகளை முன்னுக்கு கொண்டு வருவார்கள்; அந்த கண்டுபிடிப்புகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள உற்பத்தி முறையுடன் மோதலுக்கு வரும். இதனால் நெருக்கடி/வீழ்ச்சி உண்டாகும்; இந்த நெருக்கடியிலிருந்து முன்னேறி செல்லும் பொழுதுதான் பழைய வழிமுறைகள் அழிந்து, புதிய மேம்பட்ட வழிமுறைகள் அமலுக்கு வரும் – இதுவே “உருவாக்கும் அழிவு” கோட்பாட்டின் சாரம். இதன்படி நெருக்கடி/வீழ்ச்சி என்பது முதலாளித்துவ வளர்ச்சிக்கே அவசியமான ஒன்று என வாதிடப்படுகிறது.
“முதலாளித்துவத்தில் நெருக்கடி இன்றியமையாதது” என்பதைக் கேட்கும் பொழுது ஒரு புரட்சிகர கோட்பாடு போல தோன்றும். ஆனால் இறுதியில் இது முதலாளித்துவ சுரண்டலை நியாயப்படுத்தும் கோட்பாடே ஆகும்.
ஷும்பீட்டர் & மார்க்ஸ்
இந்த கோட்பாடுகளின் தந்தையாக கருதப்படும் ஜோசப் ஷும்பீட்டர், ஒரு காலத்தில் தன்னை காரல் மார்க்ஸின் ஒரு மாணவனாகவே கருதினார். சொல்லப்போனால் “தொடர் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி” என்ற தன் கோட்பாட்டிற்கு முன்னோடியே மார்க்ஸ் தான் எனவும் அவர் குறிப்பிடுகிறார். நிலப்பிரபுத்துவ முறையில் நிலவிய பண்டைய, பலவீனமான உற்பத்தி வழிமுறைகளை ஈவிரக்கமின்றி அழித்தொழித்து, பொருளாதார செயல்முறையில் ஒரு புரட்சியை உண்டாக்கி, தொடர்ந்து அறிவியல் மூலம் உற்பத்தி சக்திகளை நவீனமயமாக்கியது முதலாளி வர்க்கம்தான் என்பதை மார்க்ஸ்தான் முதலில் கண்டறிந்ததாக ஷும்பீட்டர் போற்றினார்.
ஆனால் அவர் மார்க்சிடம் இருந்து வேறுபடும் முக்கிய புள்ளி – மார்க்ஸின் உழைப்பு மதிப்பு கோட்பாட்டை அவர் ஏற்கவில்லை. ஷும்பீட்டரை பொறுத்த வரையில் “சுரண்டல்” என்ற ஒன்று கிடையாது. ஷும்பீட்டரின் பார்வையில், முதலாளித்துவத்தில் “லாபம்” என்பதன் ஆதாரமே கண்டுபிடிப்புகள் தான். கண்டுபிடிப்பாளர்கள் நிலவி வரும் உற்பத்தி முறைக்கு எதிராக துணிந்து புதிய கண்டுபிடிப்புகளை முன்னுக்கு கொண்டு வருவதற்கான சன்மானம் தான் லாபம் என்கிறார். இந்த கண்டுபிடிப்பாளர்கள் தலைமையில் ஏற்படும் நெருக்கடி-வளர்ச்சி கலந்த முன்னேற்றமே தொடர் முதலாளித்துவ குவியலுக்கே ஆதாரம் ஆகும் என்கிறார்.
மார்க்ஸை ஏற்றுக்கொள்வது போல துவங்கி, ஆனால் மார்க்ஸின் கோட்பாட்டில் இருந்து முற்றிலும் தலைகீழான கோட்பாட்டை முன்வைத்ததே ஷும்பீட்டரின் சாமர்த்தியம். மார்க்சிய கோட்பாட்டின்படி, சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ முறையின் தோல்வியின் அடையாளமே நெருக்கடி என்பதாகும். ஆனால் ஷும்பீட்டரின் கோட்பாட்டின்படி, நெருக்கடி தான் அதன் வெற்றி – அதுவே பண்டைய உற்பத்தி சக்திகளை அழித்து, புதிய உற்பத்தி சக்திகள் முன்னுக்கு வருவதற்கான காரணி என வாதிடுகிறார். மார்க்ஸ் & ஷும்பீட்டர், இருவருமே முதலாளித்துவத்தில் தொடர் தொழிற்நுட்ப வளர்ச்சி நெருக்கடிக்கு இட்டுச் செல்கிறது என்பதை முன் வைக்கின்றனர். ஆனால் மார்க்சியத்தில், சமூகத்தில் உற்பத்தி சக்திகளின் அதிவேக வளர்ச்சி, முதலாளித்துவத்தின் சுரண்டல் அடிப்படையிலான தனியுடைமை மூலதன குவியல் என்ற குறுகிய நோக்கத்துடன் முரண்படுவதால், அது நெருக்கடிக்கு வழி வகுக்கிறது என விளக்கப்படுகிறது. ஆனால் ஷும்பீட்டரோ, இந்த நெருக்கடி தான் முதலாளித்துவ மூலதன குவியலுக்கே ஆதாரம் என வாதிடுகிறார்.
ஆக, மார்க்ஸை சாதுர்யமாக கையாண்டு, இறுதியில், மார்க்சியத்திற்கு எதிரான நிலைபாட்டிற்கு வந்ததால்தான், முதலாளித்துவ அறிஞர்களின் செல்லப் பிள்ளையாக திகழ்கிறார் ஷும்பீட்டர். உதாரணமாக, முதலாளித்துவத்தில் நீடித்த வளர்ச்சிக்கு ஷும்பீட்டர் முன்வைக்கும் தீர்வு என்பது, பழைய உற்பத்தி முறைகளை அழித்தொழிக்க முன்னுக்கு வரும் கண்டுபிடிப்பாளர்களுக்கு, அந்த பழைய முறைகளால் ஏற்படும் எதிர்ப்புக்களை மட்டுப்படுத்திக் கொடுப்பதே ஆகும். ஷும்பீட்டரை பொறுத்த வரை, இவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் செயல்படுவது தான் முதலாளித்துவத்தின் பண்பு; அந்த முதலாளித்துவ பண்பிற்கு எதிராக, அரசு உள்ளே நுழைந்து செயல்பட்டால் தான் வளர்ச்சி தடைபடும் என்கிறார் – இது தானே நவதாராளமய நிபுணர்களின் வாதமும்? “சந்தையை சீர்குலைக்கும் வகையில் சேமநல நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக் கூடாது” என்று தானே அவர்களும் சொல்கின்றனர்!
ஷும்பீட்டர் – விமர்சனம்
ஷும்பீட்டர் போன்றவர்கள், மார்க்ஸ் சொல்வது போலவே, முதலாளித்துவத்தில் தொழிற்நுட்ப முன்னேற்றத்தின் இன்றியமையாத அம்சத்தை பற்றியும், அது இயல்பாகவே நெருக்கடிக்கு இட்டுச் செல்வது பற்றியும் பேசுகிறார்கள். ஆனால் இறுதியில் அவர்கள் நேர் எதிரான நிலைபாட்டிற்கு வர என்ன காரணம்? அவர்கள் ஒரு முக்கியமான அம்சத்தை மறப்பது (மறைப்பது) தான் – “உற்பத்தி உறவுகள்”. இவர்கள் அனைவருமே உற்பத்தி சக்திகளில் ஏற்படும் வளர்ச்சி பற்றி மட்டுமே கவனிக்கின்றனர். அந்த உற்பத்தி சக்திகளில் தொடர்ந்த முன்னேற்றம் பற்றியே ஆய்வு செய்கின்றனர். ஆனால் இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தனிமையில் ஏற்படுவதில்லை. உற்பத்தி சக்திகள் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளுடன் (இன்றைக்கு அது முதலாளித்துவ கூலி உழைப்பு) தொடர்பில் இருக்கின்றன.
முதலாளித்துவத்தில் மூலதனங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் மூலதன-உழைப்பு முரண்பாடு காரணமாகத்தான் முதலாளி வர்க்கம் தொடர்ந்து உற்பத்தி சக்திகளை புரட்சிகரமாக புதுப்பிக்க முயற்சி செய்து கொண்டே வருகிறது. ஆனால் அப்படி செய்யும் பொழுது, பல்வேறு தொழிலாளர்களை பணியிலிருந்து விலக்குகிறது. தன் சுரண்டலின் ஆதாரமான உயிருள்ள தொழிலாளியை நீக்குவதால், லாபமும் உபரியும் சரியத் துவங்குகிறது. ஆக, கூலி உழைப்பு மூலமான சுரண்டல் அடிப்படையிலான உற்பத்தி உறவானது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் மோதல் நிலைக்கு வருகிறது. நெருக்கடி பொருளாதாரத்தை சூழ்கிறது. இதுவே மார்க்சிய புரிதல்.
இதை மறுக்கும் ஷும்பீட்டர் போன்ற முதலாளித்துவ அறிஞர்கள், உற்பத்தி சக்திகள் வளர்ச்சியை உறுதி செய்தால் அனைத்தும் தடையின்றி முன்னேறும் என வாதிடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், மக்கள் தாங்கள் சுரண்டப்படுவதாக உணர்வதே இல்லை எனவும், அறிவு ஜீவிகள்தான் மக்கள் சுரண்டப்படுவதாக போதிப்பதாகவும், இந்த முதலாளித்தவத்திற்கு எதிரான சிந்தனைதான் “கண்டுபிடிப்புகள்” மூலமான வளர்ச்சிக்கு தடைகளை உருவாக்குவதாகவும் வாதிட்டார் ஷும்பீட்டர். பொருளியல் சூழலின் இயக்கத்தை புரிந்து கொண்டு, அதன் உள்ளார்ந்த செயல்பாடுகளின் காரணமாக உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் ஏற்படும் தடைகளை கண்டறியும் மார்க்சிய அறிவியல் கோட்பாட்டிற்கும், சுரண்டப்படும் மக்கள் மீதே பழியைப் போடும் ஷும்பீட்டர் போன்றவர்களின் கோட்பாட்டிற்கும் இதுதான் வித்தியாசம்.
ஷும்பீட்டர், கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படும் முதலாளித்துவ வளர்ச்சி, 50 ஆண்டுகளில் உலக வறுமையை ஒழித்துவிடும் என 1950ல் வாதிட்டார் – 2000ம் ஆண்டில் உலக வங்கி கணக்குபடியே மூன்றில் ஒருவர் வறுமையில் வாடி வந்தனர். மேலும் இந்த கண்டுபிடிப்புகள் மூலமான வளர்ச்சியை சாத்தியமாக்க, கார்ப்பரேட் கம்பெனிகள் நிர்வாகிக்கப்படும் வழிகள் குறித்து பல்வேறு பரிந்துரைகளை முன் வைத்தார் – அதாவது மூலதனங்களுக்கு இடையிலும், மூலதன-உழைப்புக்கு இடையிலான மோதல்களை மட்டுப்படுத்தும் உத்திகள். இறுதியில் “சோசலிசமே” வழி எனவும் வாதிட்டார் – ஆனால் இவர் சொல்லும் “சோசலிசம்” என்பது உழைக்கும் வர்க்க ஜனநாயக அரசு கிடையாது; மாறாக, கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்பதை நோக்கிய வழிமுறைகளை சமூகமாக நிர்வகிப்பதன் மூலம் முதலாளித்துவ தனிச்சொத்து குவியலை உறுதி செய்வது ஆகும். ஆக, உழைக்கும் வர்க்கம் உற்பத்தி முறையை கையிலெடுப்பதை தடுக்க, அவர்கள் மொழியிலேயே முதலாளித்துவ தீர்வுகளை முன் வைத்ததே ஷும்பீட்டரின் சாதனை.
இக்கால ஷும்பீட்டரியன்ஸ்
இன்று நோபல் பரிசு வென்றவர்களும் ஷும்பீட்டர் கோட்பாட்டின் அடிப்படையிலான ஆய்வாளர்களே. முதலில் ஜோயல் மோகிர் அவர்களின் ஆய்வை பார்த்தால், தொழிற் புரட்சியின் மகத்துவத்தை குறித்து பேசும் அவர், அதற்கும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கும், அக்காலத்தில் உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் பேசுவதே இல்லை. ஞானத்தை அமலாக்கும் “திறந்த” சமூகம் இருந்ததால்தான் மேற்கத்திய நாடுகள் வளர்ச்சி அடைந்தனவாம் – அதாவது முதலாளித்துவ-ஏகாதிபத்திய சுரண்டலுக்கு வரலாற்றில் பங்கே இல்லை!
ஃபிலிப் அகியோன் இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாகரோனின் நம்பகமான பொருளாதார ஆலோசகர். “கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சி” என்ற பெயரில் நவதாராளமய கொள்கைகளை முன் நிறுத்துபவர். இளம் வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்த இவர், இன்று “முதலாளித்துவத்தை தூக்கி எறிவது சாத்தியமில்லை. அதற்கு மனித முகம் கொடுக்க முயற்சிப்போம்” என்று வாதிடுகிறார். ஆனால் அந்த மனித முகத்தை காட்டும் கொள்கைகளையும் எதிர்க்கிறார். செல்வந்தர்கள் மீது வெறும் 2% செல்வ வரி விதிக்கும் முன்மொழிவை எதிர்க்கிறார் – ஏனென்றால் அது, அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்வதை தடுக்குமாம். ஓய்வு வயதை குறைப்பதை எதிர்க்கிறார், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விலை கட்டுப்பாடுகளை எதிர்க்கிறார். கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற பெயரில், ஏகபோக அசுரனாக வலம் வரும் ஏஐ மற்றும் தொழிற்நுட்ப நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் கொடுக்க வேண்டும் என வாதிடுகிறார்.
ஆனால் இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் கொடுத்த பின்னரும், 2008க்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி சக்தியும் (Productivity) அதிகரிக்கவில்லை; உழைக்கும் மக்களின் சராசரி உண்மை ஊதியமும் அதிகரிக்கவில்லையே! என கேட்டால், அதற்கு பதில் இல்லை. சந்தைகளில் மேலும் தாராளமய கொள்கைகளை அமலாக்குவதே தீர்வு என்கிறார். இதனால் ஏற்றத்தாழ்வு கூடினால், அது வளர்ச்சிக்காக நாம் செய்யும் தியாகம் என வாதிடுகிறார்.
இவ்வாறாக, “அறிவியல் வளர்ச்சி” என்ற போர்வையில் நவதாராளமய சுரண்டலின் மாற்று முகமாக செயல்படுவதே இன்றைய “ஷும்பீட்டரியன்ஸ்”-சின் பணி.
இறுதியாக
முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் கண்டுபிடிப்புகள் இன்றியமையாதவை. ஆனால் அவை மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்கு பதிலாக, முதலாளித்துவத்தின் கீழ் பெரு நிறுவனங்களின் லாபத்தை கூட்டவே செயல்படுகிறது என்பது நாம் கண் எதிரே பார்க்கும் நிதர்சனம். இன்றைய நவீன கண்டுபிடிப்புகளான செயற்கை நுண்ணறிவு (AI) போன்றவைக்கு மனித வாழ்வை எளிதாக்கும் பிரம்மாண்ட சக்தி உள்ள போதிலும், அவை உழைக்கும் மக்கள் மத்தியில் வேலையின்மையைக் கூட்டி, தொழிலாளர்களை மேலும் பிழிந்தெடுக்கவே வழிவகை செய்கின்றன. தொழிலாளர்களின் வேலை நேரத்தை கூட்ட வேண்டும் என்ற நாராயண மூர்த்திகள், ஸ்ரீதர் வேம்புக்களின் வாக்குமூலத்தில் இருந்தும், இன்று டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் நிகழ்த்தி வரும் பெருமளவிலான பணி நீக்கத்திலிருந்தும் நாம் நேரடியாக இதை அனுபவிக்கிறோம்.
“இயந்திரங்கள் என்பது உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் மிக வலிமையான சாதனமாக இருந்தால் – அதாவது, ஒரு பொருளை உற்பத்தி செய்யத் தேவையான வேலை நேரத்தைச் சுருக்குவதற்கான வழியாக இருந்தால் – அது மூலதனத்தின் கைகளில் .. .. மனித இயல்பு நிர்ணயித்த எல்லைகளை மீறி, வேலை நாளை நீட்டிக்கும் மிக வலிமையான சாதனமாக மாறுகிறது” என்றார் மார்க்ஸ். இவ்வாறு அறிவியல் வளர்ச்சியின் மீது முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி, சீரான, நிலையான, அனைவருக்கும் பயனாகும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை சாத்தியமாக்கும் சோசலிச சமூகத்தை அடைய நமக்கு உதவுவது மார்க்சிய கோட்பாடு மட்டுமே. ஷும்பீட்டரியன் கோட்பாடு என்பது அறிவியல் கண்டுபிடிப்புகளை கொண்டு சுரண்டலை தீவிரப்படுத்தும், நவதாராளமய கொள்கைகளின் மற்றொரு அவதாரம் மட்டுமே!
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply