
தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கியத்துவம்
உ. வாசுகி
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசுவதற்கு முன், தேர்தல் பற்றிய கம்யூனிஸ்டுகளின் நிலைபாட்டை நினைவுபடுத்திக் கொள்வது அவசியம்.
மார்க்ஸ், எங்கல்ஸ் காலத்தில் இருவித கருத்துக்கள் நிலவின. நாடாளுமன்ற பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பதன் மூலம், தொழிலாளி வர்க்கத்துக்கு சோஷலிசத்தைக் கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஒரு நிலைபாடு. இது அமைதியான முறையில் முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறிச் செல்வதை முன்வைக்கிறது. தேர்தல், அதனுடன் இணைந்த பணி மற்றும் பிரச்சாரத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்து, களப்போராட்டத்தைக் குறை மதிப்பீடு செய்கிறது. இது ஒரு சீர்திருத்தவாதக் கண்ணோட்டம்.
அதே சமயம், மார்க்சிய மூலவர்கள் மார்க்ஸ், எங்கல்ஸ் உள்ளிட்டோர், பின்னர் லெனின், ரோசா லக்சம்பர்க் போன்றோர், வர்க்கப் போராட்டங்களின் மூலம் முதலாளித்துவ அமைப்பு முறையைத் தகர்த்து, முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதன் மூலமே சமூக மாற்றம் சாத்தியம், அரசு அதிகாரத்தைத் தொழிலாளி வர்க்கம் கைப்பற்ற வேண்டும்; புதிய அரசு எந்திரத்தை உருவாக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
அதேநேரத்தில், தேர்தல்களைக் குறிப்பிட்ட சூழலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். எந்த வர்க்கம் எதிரியோ அதனை அனைத்து தளங்களிலும் எதிர்க்க வேண்டும்; தேர்தலிலும் கூட, எதிரி வர்க்கம் வெற்றிபெற்று தம் வலிமையை உறுதி செய்ய முயலும்போது, தொழிலாளி வர்க்கக் கட்சி, தம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; வெற்றி பெற முடியாவிட்டாலும், பிரச்சாரத்தின் மூலம் வர்க்க அரசியலை மக்கள் முன் வைக்க வேண்டும்; வெற்றி பெற்றால், புரட்சிகர அரசியலை பலப்படுத்த நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட்டனர். அதேசமயத்தில், நாடாளுமன்ற பொறுப்பு, அரசு பதவிகள் போன்றவை கட்சியின் புரட்சிகர குணாம்சத்தை அரித்து விடக் கூடாது என்றும் எச்சரித்தனர்.
தேர்தல் குறித்த சிபிஎம் நிலைபாடு:
மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் 5.21, 5.22, 5.23 பத்திகளில், தேர்தல் குறித்த நிலைபாடு விளக்கப்படுகிறது.
நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகளை, மக்கள் நலன்களைப் பாதுகாக்கும் கருவிகளாகப் பயன்படுத்த முடியும், அதேசமயம் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் சுரண்டும் வர்க்கங்களிடம் இருந்தே வரும், நவீன தாராளமய காலகட்டம், குறிப்பாக சர்வதேச நிதி மூலதன வளர்ச்சியின் அழுத்தம், இந்தத் திசை நோக்கி நிகழ்ச்சிப் போக்குகளைத் தள்ளுகிறது, இவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பாதுகாப்பது அவசியம் என்பதே கட்சித் திட்டத்தின் சாராம்சம்.
5.21 “தேர்தல்களில் பணத்தின் மிகப்பெரும் ஆதிக்கம், அரசியல் கிரிமினல்மயமாதல், வாக்குச்சாவடி கைப்பற்றல் போன்றவை நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புக்கு ஏற்படும் கடும் அச்சுறுத்தல்களாகும்.
5.22 இருப்பினும், பொதுவான வயது வந்தோர் வாக்குரிமையும், நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும், மக்கள் நலன்களைப் பாதுகாக்கும் போராட்டத்திலும், ஜனநாயகத்திற்கான போராட்டத்திலும் கருவிகளாகப் பயன்பட முடியும். உள்நாட்டு அவசரநிலை போன்ற நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல்கள் ஏற்பட்டபோது, மக்கள் அத்தகைய அதிகாரவாத நடவடிக்கைகளை எதிர்த்துள்ளனர். முதலாளித்துவ வர்க்கத்தின் வர்க்க ஆட்சியாக இருந்தாலும், இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற முறை மக்களுக்கான ஒரு முன்னேற்றத்தை உள்ளடக்கியது. இது அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வாய்ப்புக்களையும், ஒரு கட்டம் வரை அரசின் செயல்பாடுகளில் தலையிடவும், ஜனநாயகம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்களை ஒன்றுதிரட்டவும் சாத்தியமாக்குகிறது.
5.23 நாடாளுமன்ற முறைக்கும் ஜனநாயகத்திற்கும் உள்ள அச்சுறுத்தல் உழைக்கும் மக்களிடமிருந்தோ அல்லது அவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடமிருந்தோ வருவதில்லை. சுரண்டும் வர்க்கங்களிடமிருந்துதான் இந்த அச்சுறுத்தல் வருகிறது. அவர்கள்தான் நாடாளுமன்ற முறையை தங்கள் குறுகிய நலன்களைப் பாதுகாப்பதற்கான கருவியாக மாற்றி, அதைத் தகர்த்தெறிகிறார்கள். மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நாடாளுமன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தத் தொடங்கி, பெருமுதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் செல்வாக்கிலிருந்து விலகிச் செல்லும்போது, மத்திய அரசாங்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைப் பலமுறை கலைத்தது போல, இந்த வர்க்கங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மிதித்துத் துவம்சம் செய்யத் தயங்குவதில்லை.
மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் காணப்பட்ட அரை-பாசிச பயங்கரவாதம் மற்றும் அங்கு நிகழ்ந்த அனைத்து அரசியலமைப்பு விதிகளின் வெளிப்படையான மீறல்கள், ஆளும் வர்க்கங்கள் எந்த கேடுகெட்ட அளவிற்குச் செல்லக்கூடும் என்பதற்கு வெளிச்சமிடும் எடுத்துக்காட்டுகளாகும். அதிபர் ஆட்சி முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை சிதைக்க வேண்டும் என்றும் பேசப்படுவது, தாராளமய காலத்திலும், சர்வதேச நிதி மூலதனத்தின் அதிகரித்த அழுத்தத்திலும் வளர்ந்துள்ள அதிகாரவாத அறிகுறிகளே ஆகும். இத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து மக்களின் நலனுக்காக நாடாளுமன்ற மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதும், அவற்றை நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளுடன் (extra parliamentary) திறமையாக இணைத்துப் பயன்படுத்துவதும் மிக முக்கியமானதாகும்.”
சிபிஎம் திட்டம் கூறுகிறது – வலுவான, வெகுஜன, புரட்சிகர இயக்கத்தை வளர்ப்பதன் மூலமும், நாடாளுமன்ற மற்றும் நாடாளுமன்றம் அல்லாத போராட்ட வடிவங்களை இணைப்பதன் மூலமும், பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடித்து, தொழிலாளி வர்க்கமும் அதன் கூட்டாளிகளும் அமைதியான வழிகளின் மூலம் இந்த மாற்றங்களைக் கொண்டுவர தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள்.
எனினும், ஆளும் வர்க்கங்கள் தங்கள் அதிகாரத்தைத் தாமாக முன்வந்து விட்டுக்கொடுப்பதில்லை என்பதையும் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் விருப்பத்தை மீற முயல்கின்றனர்; அதை சட்டமீறல் மற்றும் வன்முறையின் மூலம் மாற்ற முயல்கின்றனர். எனவே, புரட்சிகர சக்திகள் விழிப்புடன் இருப்பதும், நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா சூழ்நிலைகளையும், எந்தத் திருப்பங்களையும், மாற்றங்களையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில், தங்கள் பணியைக் கூர்மைப்படுத்துவதும் அவசியம் என்று குறிப்பிடுகிறது. பொருத்தமான சூழலில் அரசாங்கத்தில் பங்கு பெறுவதையும் குறிப்பிடுகிறது.
தற்போதைய நிலைமையில் முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதோடு, இந்தியாவில் புரட்சிகர மாற்றம் வந்து, அரசு அமையும்போது, ஜனநாயகத்தின் உயர்ந்த வடிவமான மக்கள் ஜனநாயகத்தை அது உறுதி செய்யும் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
எனவே, தேர்தல்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற பின்னணியில், அவற்றின் ஜனநாயகத் தன்மையை, தேர்தல் நேர்மையாக நடப்பதை, உறுதிப்படுத்த வேண்டும். இன்றைய தேர்தல் களம் அந்நிலையில் இல்லை. தேர்தல் ஆணையத்தை ஆர் எஸ் எஸ், பாஜக ஊடுருவி செயல்படுகிறது. எனவே தேர்தல் சீர்திருத்தங்கள் முன்னெப்போதையும் விட தற்போது அவசியமாகிறது.
தேர்தல் சீர்திருத்த கமிட்டிகள்:
சுதந்திர இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்க பல கமிட்டிகள் உருவாக்கப்பட்டன. பல்வந்த் ராய் மேத்தா கமிட்டி (1955), தார்க்குண்டே கமிட்டி (1974), கோஸ்வாமி கமிட்டி (1990), வோரா கமிட்டி (1993), இந்திரஜித் குப்தா கமிட்டி (1998), சட்டக் கமிஷன் பரிந்துரைகள் (1999), அரசமைப்புச் சட்ட செயல்பாட்டைப் பரிசீலிக்கும் தேசிய கமிட்டி (2001) போன்றவற்றைக் கூறலாம்.
அடிப்படையில் நியாயமான சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்; அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஆடுகளம் என்பது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.
இன்றைக்கு நடைமுறையில் உள்ள பல தேர்தல் விதிகளுக்கான தொடக்கப் புள்ளி மேற்கூறிய கமிட்டிகளின் பரிந்துரைகளில் அடங்கியிருந்தது. தேர்தல் நடத்தை விதிகளுக்கான பரிந்துரைகள் இப்படிப்பட்ட கமிட்டிகளால்தான் அளிக்கப்பட்டன. உதாரணமாக, தேர்தல் அறிவிப்புக்குப் பின், ஏற்கனவே உள்ள அரசாங்கம் காபந்து அரசாங்கம் போலத்தான் செயல்பட வேண்டும்; புதிய கொள்கைகள், திட்டங்கள், வாக்குறுதிகள் எதையும் அறிவிக்க கூடாது; அமைச்சர்கள் தேர்தல் நேரத்தில் அரசு செலவில் பயணிக்கக் கூடாது என்பன தார்க்குண்டே கமிட்டியின் முக்கியமான பரிந்துரைகளாகும்.
தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் குறித்து கோஸ்வாமி கமிட்டி பரிந்துரைத்தது – எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி இவர்களுடன் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் இந்த நியமனத்தை செய்ய வேண்டும். மீதமுள்ள இரண்டு உறுப்பினர்களை தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், தலைமை தேர்தல் அதிகாரியுடன் கலந்து பேசி நியமனம் செய்ய வேண்டும். வேட்பாளர் மற்றும் வாக்காளர் வயது வரம்பு குறைக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் தகுதி இழப்பை, அவைத்தலைவர் தீர்மானிக்கக் கூடாது; தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் இதனை செய்ய வேண்டும். ஒட்டுமொத்த தேர்தல் செலவுகளை அரசு செய்ய வேண்டும் என்பதற்கான பூர்வாங்க யோசனைகளும் சொல்லப்பட்டன. EVM குறித்த யோசனைகளும் கோஸ்வாமி கமிட்டியால் முன்வைக்கப்பட்டன.
1993இல் மும்பையில் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது வலைப்பின்னலால் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. அக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட வோரா கமிட்டி, தேர்தல் கிரிமினல்மயமாவது பற்றியும், குறிப்பாக அரசியல்வாதிகள் – கிரிமினல்கள் – அதிகார வர்க்கத்தினரின் கூட்டணி உருவாவது பற்றியும் கவலை தெரிவித்தது. ஆனாலும் மூன்றே மாத காலத்தில் அவசரமாகக் கமிட்டி கொடுத்த அறிக்கை முழுமையாக வெளியிடப்படவில்லை. இணைப்புகள் இல்லாமல், அறிக்கை மட்டும் 1995இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த வழக்கில், வேட்பாளர்கள் தங்களது கிரிமினல் பின்னணி குறித்த தகவல்களைப் படிவத்தில் அளிப்பதும், ஊடகங்களில் வெளியிடுவதும் தேவை என நீதிமன்றம் கூறியது.
இந்திரஜித் குப்தா கமிட்டி, தேர்தலில் ஆள்பலம், பணபலம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து கூடுதலாகப் பேசியது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் தேர்தல் செலவுகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது முக்கியமான பரிந்துரையாக வைக்கப்பட்டது.
சட்டக் கமிஷன், தேர்தல் செலவுகளுக்கு உச்சவரம்பு, தேர்தல் குற்றங்களுக்கு தண்டனை, நீதிமன்ற வழக்குகள் விரைவாகக் கையாளப்படுவது, வெவ்வேறு கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகே வாக்கு எண்ணிக்கையைத் துவங்குவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் முறையாக நடைமுறைப்படுத்துவது போன்ற பரிந்துரைகளை அளித்தது.
பரிந்துரைகளில் சில அமல்படுத்தப்படுவதும், மற்றவை பரிந்துரைகளாகவே தொடர்வதும் நடந்தது. சாதிகளாக வாக்குகள் அணி திரட்டப்படுவது, பெரும் பணம் செலவிடப்படுவது, கார்ப்பரேட் நன்கொடைகளை அதிகரிக்க சட்டத் திருத்தம் கொண்டு வருவது, தேர்தல் பத்திரத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது, அரசியல் கிரிமினல் மயமாக்கப்படுவது, கோடீஸ்வரர்கள், கார்ப்பரேட் பிரதிநிதிகள் நேரடியாக தேர்தலில் நின்று வெற்றி பெறுவது, மதத்தின் பேரால் மக்களைப் பிரித்து, வெறுப்பு அரசியலை முன்னெடுத்து, தேர்தல் ஆதாயம் அடைவது போன்ற ஜனநாயக விரோதப் போக்குகள் வலுவடைந்து வந்தன. மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, பிரதானமான பெரிய முதலாளித்துவ கட்சிகள் இடையே மட்டுமே போட்டி என்பதாக தேர்தல் ஜனநாயகம் சுருக்கப்பட்டது. இத்தகைய நிலைமையை ஊக்கப்படுத்தியதில் கார்ப்பரேட் ஊடகங்களுக்குப் பெரும் பங்குண்டு. ஒரே ஓட்டு அதிகம் பெற்றாலும் அவரே ஜெயித்தவராக மாறும் தேர்தல் முறை (FPTP – first past the post) அனைத்து வாக்குகளுக்கும் உரிய மதிப்பை அளிப்பதில்லை.
இச்சூழலில் தேர்தல் சீர்திருத்தத்துக்கான தேவை முன்னெப்போதையும் விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போது மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் முக்கிய பரிந்துரைகள்:
சமீபத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் எம் ஏ பேபி அவர்கள் தலைமையில் சிபிஎம் தூதுக்குழு ஒன்று தேர்தல் ஆணையத்தை நேரில் சந்தித்து தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த ஒரு விரிவான குறிப்பை அளித்தது.
விகிதாச்சார பிரதிநிதித்துவம்:
ஜெயிக்கும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்; வெற்றி வாய்ப்பு இல்லாத கட்சிக்கு அளிக்கும் வாக்கு வீணாகி விடும் என்ற மன உணர்வு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. 1893இல் எங்கல்ஸ், ஒரு அமெரிக்க நண்பருக்கு எழுதிய கடிதத்தில், இதனைக் குறிப்பிட்டு விமர்சிக்கிறார்.
அனைத்து வாக்குகளும் மதிக்கப்படும் நிலை, விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் உருவாகும். இந்தியாவில் இதன் அவசியம் அதிகம். சில சமயம் இரு வேறு கட்சிகளுக்கு இடையே அல்லது கூட்டணிகளுக்கு இடையே வாக்கு சதவீதத்தில் பெரிதும் வித்தியாசம் இல்லாத போதும், பெறுகிற தொகுதிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது. உதாரணமாக 2014இல் பாஜக 31 சதவிகிதம் வாக்குகளை மட்டுமே பெற்ற போதிலும், மொத்த தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 19.3 சதவீதம் வாக்குகளைப் பெற்று 44 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2024இல் பாஜக 35.56 வாக்கு சதவீதத்துடன் 240 தொகுதிகளை அடைந்தது. காங்கிரஸ் 2014 இல் பெற்றதை விட வெறும் 1.89 வாக்கு சதவீதம் அதிகம் பெற்றது, ஆனால் அதிகரித்த தொகுதிகளோ 55. மாநில தேர்தல்களிலும் இந்தப் போக்கைக் காண முடியும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரசும் கிட்டத்தட்ட சம அளவு வாக்கு சதவீதம் பெற்றாலும், காங்கிரசுக்கு 6 தொகுதிகள் கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒன்றுகூட கிடைக்கவில்லை. சிறிய கட்சிகள் மாநிலம் முழுவதும் பரந்த அளவில் வாக்குகளை வைத்திருந்தாலும், ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாத சூழல் நீடிக்கிறது.
உலக அளவில் சுமார் 130 நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமலில் உள்ளது. அப்போதுதான் வாக்காளர்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குக்குமான மதிப்பு கணக்கில் கொள்ளப்படும். சட்டக் கமிஷன், தனது ஒரு பரிந்துரையில், தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகளிலும் தற்போது உள்ள தேர்தல் முறையே தொடரலாம். கூடுதலாக, அதில் 25 சதவிகித இடங்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்தலாம் எனக் கூறியுள்ளது. அதை முயற்சித்துப் பார்க்கலாம். நடைமுறையில் என்ன சிக்கல்கள் வருகின்றன என்று பார்த்து சரிசெய்யலாம்.
பணபலத்தைக் கட்டுப்படுத்துவது:
தேர்தலில் பிரம்மாண்டமாக அதிகரித்து வருகிற பணபலத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பணபலம் இருந்தால், அது அரசியல் ஆதாயமாக மாறுகிறது. இதனால் கட்சிகளுக்கு இடையே ஆடுகள சமநிலை (level playing field) மட்டுமல்ல; தேர்தல் ஜனநாயகமே பாதிக்கப்படுகிறது. ADR அமைப்பின் ஆய்வு ஒன்று, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று குறிப்பிடுகிறது. இவர்கள்தான் கொள்கைகளை உருவாக்குவார்கள்; தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பார்கள் என்பது பிரச்சனைகளை உருவாக்கும். தேர்தல் ஒரு ஜனநாயக நடவடிக்கை என்பது மாறி, ஒரு வணிக நடவடிக்கையாகிக் கொண்டிருக்கிறது. வாக்குகளை விலைக்கு வாங்குவது உட்பட பல்வேறு அம்சங்களுக்கு தாராளமாக செலவு செய்யப்படுகிறது.
தேர்தல் செலவுகளுக்கான நிதியை உருவாக்கி, அரசே (state funding) ஏற்றுக் கொள்வது என்பது நடைமுறைக்கு வர வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரும் நன்கொடை அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, மாறாக அந்த நன்கொடையை மேற்கூறிய அரசு நிதிக்கு அளிக்க வேண்டும் என்பது சிபிஎம்மால் வலியுறுத்தப்படுகிறது. தேர்தல் பத்திர நன்கொடையில் பெருமளவு பாஜகவுக்கே சென்றது. ஏற்கனவே சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு, கொடுப்பவர் விவரம் தேவையில்லை; கார்ப்பரேட் நன்கொடைக்கு உச்சவரம்பு இல்லை என்பது போன்ற சூழல் உருவாக்கப்பட்டது. இது பரஸ்பர கைம்மாறுக்கு இட்டுச் செல்கிறது. தகுதியில்லை என்றாலும், விதிகளை வளைத்து ஒப்பந்தங்கள் கொடுக்கப் படுகின்றன. மத்திய முகமைகளைப் பயன்படுத்தியும் கார்ப்பரேட் நன்கொடை பெறப்படுகிறது. அரசியல் முடிவுகளில் கார்ப்பரேட்டுகள் செல்வாக்கு செலுத்தும் நிலை ஏற்படுகிறது. எனவே, தேர்தல் செலவுக்கான ஒரு நிதி உருவாக்கப்பட வேண்டும் என்பது அவசியமானது.
அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் செலவுகளுக்கான உச்சவரம்பை விதிக்காமல், வேட்பாளர்களுக்கு மட்டும் விதிப்பது பொருளற்றது. எனவே அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் உச்சவரம்பு விதிக்கப்பட வேண்டும் என்பது நமது மிக முக்கியமான பரிந்துரை.
வெறுப்பு அரசியல் பேச்சுகள், குற்றங்களைத் தடுக்க தனி சட்டம் இயற்றுவது, தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவது, EVM குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அதன் செயல்பாட்டுக் கோர்வையை மாற்றி அமைப்பது. (முதலில் வாக்குப்பதிவு இயந்திரம், இரண்டாவதாக, பதிவான தகவல், வாக்கு எண்ணிக்கை இயந்திரத்துக்கு செல்வது, கடைசியாக நாம் வாக்களித்த விவரம் ரசீதாக வெளிப்படுவது (VVPAT) என சிபிஎம் வற்புறுத்துகிறது.
உள்ளிருந்து கைப்பற்றுவது:
மோடியின் பத்தாண்டு கால ஆட்சியின் நடவடிக்கைகள், நவ பாசிச போக்குகளை வெளிப்படுத்துகின்றன என சிபிஎம்-இன் 24வது கட்சி காங்கிரஸ் அரசியல் தீர்மானம் கூறுகிறது. 20ஆம் நூற்றாண்டு பாசிசத்தின் சில கூறுகள் இப்போதும் இருந்தாலும், சில வேறுபாடுகளும் உள்ளன. குறிப்பாக கடந்த பாசிச ஆட்சிகள் தேர்தலில் வென்று அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டின. ஆனால் தற்போது உலக அளவில் நவ பாசிச சக்திகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தக்க வைத்து அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றன.
மார்க்சிய சிந்தனையாளர் அய்ஜாஸ் அகமது, இதனை உள்ளிருந்து கைப்பற்றுவது என்கிறார். உதாரணமாக, நாடாளுமன்றம் செயல்படும்; ஆனால் மரபுகள் மீறப்படும்; பிரதமர் அவைக்கு அதிகம் வரமாட்டார்; விவாதங்கள் தடுக்கப்படும். அதேபோல், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கிய பகுதி தேர்தல் ஜனநாயகமாகும். அதனை முறையாக நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆணையம் இருக்கும்; ஆனால் பாகுபாடற்ற அதன் செயல்பாடு கேள்விக்கு உள்ளாகும்.
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் கிட்டத்தட்ட வாக்காளர்களை தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வைக்கிறது. இந்த முறைதான் அனைத்துத் தேர்தல்களுக்கும் பொருந்தும் என ஆணையம் அறிவித்துள்ளது. குடியுரிமையைத் தீர்மானிப்பது தேர்தல் ஆணைய அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. ஆனால் இன்று கிட்டத்தட்ட அதுதான் நிலை. அனைவருக்கும் வாக்குரிமை என்கிற பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக்கம் திட்டமிட்டுச் சிதைக்கப்படுகிறது.
2003 வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்களுக்குப் பிரச்சனை இல்லை. மற்ற அனைவரும் தேர்தல் ஆணையம் குறிப்பிடும் 11 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு உட்பட பல ஆதாரங்களும் இந்தப் பட்டியலில் இல்லை. பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், மெட்ரிகுலேஷன் சர்டிபிகேட், பொதுத்துறை ஊழியர் அடையாள அட்டை உட்பட பதினோரு ஆவணங்கள் இதற்கென கூறப்பட்டுள்ளன. மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையோர் வைத்திருக்கும் அடையாள அட்டைகள் செல்லுபடி ஆகாது என்று கூறுவது, கணிசமானவர்களை, குறிப்பாக பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து வெளியேற்றும் ஏற்பாடு. முதல் கட்டத்திலேயே சுமார் 65 லட்சம் வாக்காளர்கள், பட்டியலிலிருந்து அகற்றப்பட்டு வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளனர். அதாவது, பாஜகவின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் கருவியாக தேர்தல் ஆணையம் மாற்றப்பட்டுள்ளது. இது மிக மிக ஆபத்தானது. உச்ச நீதிமன்றம் கூட இதற்குத் தடை விதிக்க முன்வரவில்லை.
அசாம், ஹரியானா, ஒடிசா, டெல்லி, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கின்ற வங்காள மொழி பேசுவோர், குறிப்பாகத் தொழிலாளிகள், பங்களாதேஷிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் பங்களாதேஷ் எல்லைக்குள் தள்ளிவிடப்படுகின்றனர். இவ்வாறு பல்வேறு விதங்களில் வாக்குரிமையே ஒழிக்கப்படுகிறது.
கார்ப்பரேட் ஆதரவு மற்றும் வகுப்புவாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதோடு, தீவிர எதேச்சாதிகார பாதையைக் கைக்கொண்டு, அரசமைப்பு சட்டப்படியான நிறுவனங்களைக் கைப்பற்றி, பாசிச போக்குகளைப் பிரதிபலிக்கும் அரசு, நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் தேர்தல் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் சூழலில், தேர்தல் சீர்திருத்த முயற்சிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் உள்ளது என்பதை நம்மால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
