
ஏகாதிபத்தியத்தின் இன்றைய கட்டத்தைப் புரிந்து கொள்வது
பிரகாஷ் காரத்
சமீப காலமாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கீழ் அமெரிக்காவின் அப்பட்டமான ராணுவ ஆக்கிரமிப்பை நாம் கண்டு வருகிறோம். வெனிசுலா மீதான தாக்குதல், அந்நாட்டின் அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்காவிற்குக் கடத்தப்படுவதற்கு வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து வருகிறது. இந்தத் தாக்குதல்களின் முதல் அலை, அயதுல்லா கமேனியும் இன்னபிற ராணுவத் தலைவர்களும் கொல்லப்படுவதற்கு வழிவகுத்தது. எண்ணெய் முற்றுகையை கூபாவின் மீது முழுமையாகத் திணித்தபிறகு, கூபாவைக் கைப்பற்றப் போவதாகவும் ட் ரம்ப் அச்சுற்றுத்தி வருகிறார். இவை அனைத்திற்கும் முன்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, அமெரிக்காவின் முழு ஆதரவுடன், காசா பகுதியின் மீது இனப்படுகொலைப் போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அங்கு போர் நிறுத்தம் என்பது இருந்தபோதிலும், இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன.
ஏகாதிபத்திய சக்திகள் நிர்ணயித்த விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு என்பதையே தலைகீழாக்கி, அதை மீறும்படியான, இந்த வன்முறையை மேற்கொள்ளும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் சற்றும் பொறுப்பற்ற தன்மையிலான இந்தக் கட்டத்தை நாம் எவ்வாறு காண்பது?
ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் தற்போதைய வடிவத்தைப் புரிந்துகொள்ள, கடந்த சில தசாப்தங்களில் ஏகாதிபத்தியம் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். ஓர் அமைப்பு என்ற வகையில், ஏகாதிபத்தியம் இயல்பாகவே ஆக்கிரமிப்பு, சூறையாடல் தன்மை கொண்டதாகும். இதற்குக் காரணம், முதலீடு செய்வதற்கும், லாபம் ஈட்டுவதற்குமாக தொடர்ந்து புதிய பகுதிகள்,வளங்கள், சந்தைகளை ஊடுருவிக் கைப்பற்ற நிதிமூலதனம் முயல்கிறது. ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் ஏகபோக காலகட்டம் என்ற லெனினின் வரையறை ஆகும். ஏகாதிபத்தியம், புதிய சந்தைகள், வளங்கள் மற்றும் மூலதனத்தை ஏற்றுமதி செய்வதற்கான வழிவகைகளைக் கண்டுபிடிப்பதற்கான முதலாளித்துவ சக்திகளின் தேவைகளால் உந்தப்படுகிறது. இது மோதல்களுக்கும் உலகளாவிய சுரண்டலுக்கும் இட்டுச் செல்கிறது என்று லெனின் வாதிட்டார்.
ஏகாதிபத்தியத்தின் புதிய அம்சம்: சர்வதேச நிதிமூலதனம்
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏகாதிபத்தியம் எவ்வாறு மாறியது; புதிய் அம்சங்கள் எவ்வாறு வளர்ந்தன என்பதை நாம் பார்க்க வேண்டும். அந்த மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்கான திறவுகோல் நிதிமூலதனத்தின் இயல்புதான். வங்கி மூலதனம், தொழில்துறை மூலதனம் ஆகியவற்றின் இணைப்பால் நிதிமூலதனம் உருவாக்கப்படுவது குறித்து லெனின் பேசினார். அதாவது, ஏகபோகத்திற்கு முந்தைய கட்டத்தில், தொழில்துறை மூலதனத்திற்கும், வங்கி மூலதனத்திற்கும் இடையே தெளிவான ஒரு இடைவெளி இருந்தது.
ஏகபோகக் கட்டத்தில், இந்த இரண்டு மூலதனங்களின் இணைப்பு, நிதிமூலதனம் தோன்றுவதற்கு இட்டுச் சென்றது. அதுவே மூலதனத்தின் மேலாதிக்க வடிவமாகவும் மாறியது. இந்த நிதிமூலதனம் என்பது மூலதனத்தைப் பெருமளவில் குவிப்பதைக் குறிக்கிறது. மூலதனக் குவிப்பானது ஜெர்மன் நிதிமூலதனம், பிரிட்டிஷ் நிதிமூலதனம், அமெரிக்க நிதிமூலதனம் போன்றவை வளர்ச்சியடைய வழிவகுத்தது. தமது மூலதனத்தை புதிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், இந்தக் காலனிகளின் வளங்களைச் சுரண்டுவதற்கும் ஆன அவற்றின் போட்டி, மோதல் ஆகியவற்றினால் இந்த நிதிமூலதனங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.
இந்த முரண்பாடுதான் இரண்டு உலகப்பெரும்போர்களுக்கு வழிவகுத்த, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான உள்முரண்பாடுகளின் மையமாக இருந்தது. இருப்பினும், இரண்டாம் உலகப்பெரும்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், இந்த ஏகாதிபத்திய உள்முரண்பாடு போருக்கோ, மோதலுக்கோ ஒரு காரணமாக இருப்பதை நிறுத்திக் கொண்டன. ஏனெனில், முதலாவதாக, சோவியத் யூனியனின், சோஷலிசத்தின் அச்சுறுத்தல் ஏகாதிபத்திய நாடுகளின் தொகுப்பில் ஓரளவிற்கான ஒற்றுமையை உருவாக்கியது. அமெரிக்கா, இந்த ஏகாதிபத்திய தொகுப்பின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக ஆனது. அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் நிதிமூலதன நலன்களும் அரசியல்ரீதியாக உயிர்வாழ, ஓரளவிலான ஒத்துழைப்பு, மோதல்களைத் தணிப்பது ஆகியவை அவசியமாக இருந்தது.
இரண்டாவதாக, நிதிமூலதனத்திற்குள்ளேயே ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஒவ்வொரு நாட்டிலும் நிதிமூலதனம் பெருமளவில் குவிந்து மையப்படுத்தப்பட்டதால், தேசிய நிதிமூலதனம் மட்டுமே உள்நாட்டில் முதலீடு செய்வது என்பது சாத்தியமற்றதாகியது; வெளி முதலீடுகளை விரிவுபடுத்த மற்ற முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் நிதிமூலதனங்களின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. அனைத்து தேசிய நிதிமூலதனங்களும் மையப்படுத்தப்பட்டு, ஒரு பெரிய தொகுப்பாக இணைந்து, சர்வதேச அளவில் இயங்கும் மூலதனமாக செயல்பட்டன. இதுவே சர்வதேச நிதிமூலதனம் (IFC) என்று அழைக்கப்படுகிறது.
நிதிமூலதனத்தின் குவிப்பும் மையப்படுத்தலும் சர்வதேச நிதிமூலதனமாக மாறியதானது ஏகாதிபத்தியத்தின் கட்டமைப்பிலும் செயல்பாட்டிலும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தியது. முதலாவதாக, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் இப்போது சர்வதேச நிதிமூலதனத்தால் ஒன்றிணைக்கப்பட்டு, லாபத்தை அதிகரிக்க, உலகின் வளங்களையும் சந்தைகளையும் கூட்டாகச் சுரண்டுகின்றன. ஒன்றுக்கொன்று முரண்படும் அல்லது மோதும் தேசிய நிதிமூலதனங்கள் இல்லாததால், இது அதன் பொதுநலனாக ஆகிறது. எனவே ஏகாதிபத்திய உள்முரண்பாடு இந்த சக்திகளுக்கு இடையேயான போராக வெளிப்படுவது நின்றுபோனது.
அணு ஆயுதங்களின் இருப்பினால், ஏகாதிபத்திய முகாமிற்கும் சோஷலிச முகாமிற்கும் இடையே போருக்கான ஆபத்து நனவாக முடியவில்லை. இந்த முகாம்களுக்கு இடையேயான இந்த மோதல் பனிப்போர் என அறியப்பட்டது. அதாவது இரண்டு முகாம்களுக்கு இடையே நேரடி ஆயுத மோதல்களோ, விரோதங்களோ இல்லை; ஆனால், வேறு வழிகளில், தங்கள் அரசியல், சித்தாந்த, பொருளாதார போரை அவை நடத்திக் கொண்டிருந்தன. ஏகாதிபத்தியத்தால் மூன்றாம் உலகில் போர்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஏகாதிபத்திய உலகமயமாக்கலும் சர்வதேச நிதிமூலதனமும்
1991இல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதுடன் பனிப்போர் கட்டம் முடிவுக்கு வந்தது. சர்வதேச நிதிமூலதனம் 1980களில் ஒரு சக்தியாக உருவெடுத்தது. அது உலகமயமாக்கல் என அறியப்படுவதற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது. இது உண்மையில், ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான உலகமயமாக்கல், சர்வதேச நிதிமூலதனம் உலகெங்கும் சுதந்திரமாக நகர, உலகின் எந்த மூலையிலும் தன் மூலதனத்தை நிலைநிறுத்த, எந்த பங்கு அல்லது நிதி சந்தையிலும் நுழைய, விரைவாக லாபம் ஈட்ட, விரைவான லாபத்தின் தேவைக்கு ஏற்ப மூலதனத்தை வேறொரு இடத்திற்கு மாற்ற விரும்பியது.
ஊகத்தன்மை கொண்ட இந்த மூலதனத்தின் இயல்பு, விரைவான மூலதன ஓட்டங்கள், தேசிய எல்லைகளையும் வரம்புகளையும் உடைப்பதற்குத் தேவைப்பட்டது. மேலும் சர்வதேச நிதிமூலதனத்தின் ஆதிக்கம் காரணமாக உலகமயமாக்கல் நவதாராளவாதத்தின் சகாப்தத்தையும் கொண்டுவந்தது. நவதாராளவாதக் கொள்கைகள், 1980களில் அமெரிக்காவில் அதிபர் ரொனால்ட் ரீகன், பிரிட்டனில் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோரின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டன.
எனவே, சர்வதேச நிதிமூலதனத்தின் ஆதிக்கம், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் செயல்பாடு, இந்த முழு கட்டமைப்பையும் அமெரிக்கா தலைமையேற்று நடத்துவது ஆகியவை சோவியத் யூனியன் வீழ்ந்தபோது மிகப்பெரும் வெற்றியை ஈட்டியது. சர்வதேச நிதிமூலதனம் சோவியத் யூனியனின் முன்னாள் குடியரசுகளையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தன் வலைக்குள் கொண்டுவந்தது.
அமெரிக்க மேலாதிக்கமும் ராணுவத் தலையீடுகளும்
1990களில் அறியப்பட்டபடி, ஒரே வல்லரசாக அமெரிக்கா இருந்த ஒருமுனைப்பட்ட உலகம் உருவானது. ஏகாதிபத்தியம் மற்றும் நிதிமூலதனத்தின் வெற்றி இறுதியான ஒன்றாகத் தோன்றியது. இக்காலகட்டமானது நிதிசார்ந்த உலகமயமாக்கல், நவதாராளவாத முதலாளித்துவ ஒழுங்கை திணிப்பது ஆகியவற்றின்மூலம் சமகால ஏகாதிபத்தியம் குறிக்கப்பட்டது. மேலும், இது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் காலகட்டத்தையும் கொண்டுவந்தது. இக்காலகட்டத்தில், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய கூட்டணி தொடர்ச்சியான தலையீடுகளை நடத்தியது. முதலில் யுகோஸ்லோவியா உடைத்து நொறுக்கப்பட்டு, செர்பியா மீது அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிபர் புஷ்ஷின் கீழ் ஈராக்கின் மீது அப்பட்டமான ஆக்கிரமிப்பும் நடந்தது. அதைத் தொடர்ந்து லிபியாவிலும் சிரியாவிலும் ராணுவத் தலையீடுகள் நடந்தன. இந்த அனைத்து ராணுவத் தலையீடுகளுமே அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, அந்தப் பகுதியின் முகவராக இருந்த அவற்றைக் கட்டுப்படுத்த முயன்ற இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் அரசாங்கங்களை அகற்றுவதாகவே இருந்தன.
எனவே சர்வதேச நிதிமூலதன சகாப்தத்திலோ அல்லது பனிப்போரின் முடிவிலோ போர் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கருதுவதற்கில்லை. இரண்டாம் உலகப்பெரும்போருக்குப் பிந்தைய காலகட்டம் முழுவதும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய ஒழுங்கு மீண்டும் மீண்டும் ராணுவ ரீதியாகத் தலையிட்ட போர்களும் ராணுவத் தலையீடுகளும் லத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் தொடர்ந்தன. எனவே ஏகாதிபத்திய உள்முரண்பாடுகளால் உருவாகும் போர்களுக்குப் பதிலாக, இன்று ஏகாதிபத்தியம் தன் முன்னாள் காலனிகளுக்கு எதிராகவோ அல்லது -இப்போது குளோபல் சவுத் என்று அழைக்கப்படும் – மூன்றாம் உலகைச் சேர்ந்த நாடுகளுக்கு எதிராகவோ, போர்களை நடத்துகிறது. அமெரிக்காவால் நேரடியாகவோ அல்லது இஸ்ரேல் போன்ற அதன் முகவர்கள் மூலமாகவோ தலையீடுகள் தொடர்கின்றன. எனவே, ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு இயல்பு இன்னும் தொடர்கிறது; ஏனெனில், ஏகாதிபத்தியம் என்பதே கொள்ளையிடும் ஒரு அமைப்பே ஆகும்.
இரட்டை முறைகள்: பொருளாதாரமும் ராணுவமும்
21ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் இரண்டு வகையான அழுத்தங்களைப் பயன்படுத்துவதைக் காணலாம். ஒன்று பொருளாதாரத் தடைகள் மற்றும் பொருளாதார ரீதியான போர். மற்றொன்று, நேரடி ராணுவத் தலையீடுகள். பிந்தைய நடவடிக்கைகளுக்காக, உலகெங்கும் ராணுவத் தளங்கள் மற்றும் நிறுவனங்களின் சங்கிலியை அமெரிக்கா பராமரிக்கிறது. உலகின் 80 நாடுகளில் இத்தகைய தளங்கள் உள்ளன. இந்தத் தளங்களில் சுமார் 1,70,000 முதல் 2,50,000 வரையிலான ராணுவ, பொது பணியாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கத்திய சக்திகளின் நேட்டோ கூட்டணியும் இத்தகைய ராணுவத் தலையீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது ஆயுதம் பொருளாதார அழுத்தம் மற்றும் போர் ஆகும். அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் தங்களின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்ற, அல்லது அமெரிக்காவின் கட்டளைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்றன. அத்தகைய நாடுகள் மீது பல்வேறு வகையான தடைகள் விதிக்கப்படுகின்றன. அவை பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களாகவோ அலல்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளாகவோ அறிவிக்கப்படுகின்றன. இன்றும்கூட, அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் விதித்த தடைகளின்கீழ் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிக முக்கியமானது நீண்டகாலமாகவே இத்தகைய தடைகளுக்கு உட்பட்டிருக்கும் கூபா, வெனிசுலா, ஈரான், வடகொரியா, ரஷ்யா, பெலாரஸ் மற்றும் பல நாடுகளின் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார சீர்குலைவு மூலம் ஆட்சி மாற்றத்திற்கு முயற்சிக்கப்படலாம். அவை வெற்றி பெறாவிட்டால், ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்காகப் பயன்படுத்தியதைப் போல், சிக்கலான நேரங்களில் ராணுவ முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே உலகமயமாக்கலின் கீழ் ஏகாதிபத்தியத்தின் இந்த அம்சம் கவனிக்காமல் விடுபடக் கூடாது. இந்த உலகமயமாக்கல் முகமூடியின்கீழ், நவதாராளவாத ஆட்சியை மறுக்கும் அல்லது சர்வதேச நிதிமூலதனத்தின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து, இதிலிருந்து மாறுபட்ட பாதையில் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய ஒழுங்கின் தாக்குதலுக்கு ஆளாகிறது என்பதை நாம் காண்கிறோம்.
சமகால ஏகாதிபத்தியத்தின் அம்சங்களைப் புரிந்துகொள்வது அவசியம். சர்வதேச நிதிமூலதனத்தின் ஆதிக்கம், முதலாளித்துவ உலகம் முழுவதும் நவதாராளவாத ஒழுங்கின் பரவல், குளோபல் சவுத்தின் மீது தொடரும் சுரண்டல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். நவகாலனித்துவ ஒழுங்கு ‘பறிமுதல் மூலம் பொருள்குவிப்பை’ பின்தொடர்கிறது. பொதுவளங்களை தனியார் மயமாக்குகிறது; வளரும் நாடுகளின் இயற்கை வளங்களை கைப்பற்றுகிறது; அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் காப்புரிமைகளை கட்டுப்படுத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஏகபோகமாக்கி அதன்மூலம் லாபம் ஈட்டுகிறது. நமது 18வது கட்சிக் காங்கிரஸ் இதை ‘கையகப்படுத்தல்மூலம் பொருள்குவிப்பு’ என்று விவரித்தது.
சமகால ஏகாதிபத்தியத்தின் புதிய அம்சங்களில் ஒன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது எவ்வாறு புதியதொரு கட்டத்திற்கு வழிவகுத்தது என்பதாகும். சைபர்நெட்டிக் புரட்சி, டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்றவை அமெரிக்காவில் ஒரு சில ஏகபோக தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் ஏழு தொழில்நுட்ப, சிப் மற்றும் சமூக ஊடக நிறுவனங்கள் உள்ளன. எனவே அமெரிக்கா, முதலாளித்துவ, ஏகாதிபத்திய முறையின் மீதான தன் ஆதிக்கத்தை அனைத்துத் துறைகளிலும், பொருளாதாரம் மற்றும் சமூகத்திலும், தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாட்டின் மூலம் பராமரிக்க முயற்சிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின்மீதான தனது ஏகபோகம் அல்லது தலைமையை தக்கவைக்கவும், மற்றவர்களை – குறிப்பாக சீனாவை – இந்தத் தொழில்நுட்பத்திலிருந்து பயன்பெறுவதை தடுக்கவும் மறுக்கவும் அமெரிக்கா முயற்சிக்கிறது. ஏனெனில், சீனா இப்போது அமெரிக்காவின் இந்த முன்னணி நிலைக்குச் சவால் விடும் மிகப்பெரும் பொருளாதார சக்தியாக மாறியுள்ளது.
தற்போதைய சூழல்
இது தற்போதைய சூழலுக்கு நம்மைக் கொண்டுவருகிறது. ட்ரம்பின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தற்போதைய பொறுப்பற்ற ராணுவ ஆக்கிரமிப்பு மூன்று காரணிகளின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். முதலாவதாக, 2008 உலகளாவிய நிதி நெருக்கடியுடன் தொடங்கிய நவதாராளவாத நெருக்கடி. ஏகாதிபத்திய நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் இந்த நெருக்கடிக்கு எந்தத் தீர்வையும் காண முடியவில்லை. இரண்டாவதாக, அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கு மற்றும் பொருளாதார வலிமையின் நீண்டகால வீழ்ச்சி. மூன்றாவதாக, சீனாவின் எழுச்சியும் அதன் பொருளாதார வலிமையும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ட்ரம்ப் அதிபராவதற்கு முன்பே, அவருக்கு முந்தைய அமெரிக்க அதிபர்கள் சீனாவினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலின் மீது கவனம் செலுத்தி, சீனாவை கட்டுப்படுத்தவும், தடுக்கமுடியாத ஒரு பொருளாதார சக்தியாக அதை மாற்றக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் வளங்களை மறுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும், இவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சீனாவின் வளர்ச்சியையும் அதன் ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தத் தவறிவிட்டன.
இரண்டாவதாக, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான நாடுகள், அரசாங்கங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தத்தை பயன்படுத்துவது அதிபர் ஒபாமாவின் நாட்களிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை பைடன் மற்றும் ட்ரம்ப்பால் தொடரப்படடது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டிற்கும் எதிரான, மேற்கு ஆசியா பகுதியின் முக்கிய சக்தியான ஈரான் இதில் ஒரு முக்கிய இலக்காக இருந்தது.
சரிவடையும் மேலாதிக்கத்தைப் பராமரிக்கும் பொறுப்பற்ற நடவடிக்கைகள்
மிக முக்கியமாக, அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் தங்களது பொருளாதார வலிமையையும் ஆதிக்கத்தையும் மீட்டெடுக்க வழிகளைத் தேடி வந்தன. இந்தப் பின்னணியில் ட்ரம்ப் ஜனவரி 2025இல் பதவியேற்றார். முதலில் அமெரிக்கா என்ற முழக்கத்தை செயல்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் நட்புநாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிரான அழுத்தமிக்க வரிகளின் அமலாக்கம், அமெரிக்காவின் உற்பத்தித் துறையில் மூலதனம் முதலீடு செய்யுமாறு அவற்றை வற்புறுத்துவது ஆகியவற்றின்மூலம் அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். மேற்கத்திய அரைக்கோளம் என்று அழைக்கப்படும் லத்தீன் அமெரிக்கா பகுதியை அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் இருப்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் – மன்றோ கோட்பாட்டிற்கு புத்துயிர் ஊட்டுவது – தென் அமெரிக்கா முழுவதிலும் வலதுசாரி ஆட்சிகளை நிறுவுவதற்கான முயற்சிகள், வெனிசுலாவின் மிகப்பெரும் எண்ணெய் வளங்களைக் கட்டுப்படுத்துவது போன்ற பொருளாதார பரிமாணமும் இதில் அடங்கியுள்ளது.
அதிபர் ட்ரம்ப், அவரது முன்னோடிகளோடு ஒப்பிடும்போது, வெனிசுலா சம்பவத்தில் காணப்பட்டதுபோல், ராணுவ நடவடிக்கையை நாட அதிக வாய்ப்புள்ளவராக இருக்கிறார். கடந்த ஜூன் 2025இல் இஸ்ரேலிய தாக்குதலுடன் இணைந்த வகையில் ஈரானின் மூன்று அணு தளங்களை அவர் குண்டுவீசித் தாக்கினார். இப்போது இஸ்ரேலிய தூண்டுதலால் ஈரான் மீது ஆக்கிரமிப்பைத் தொடங்கியுள்ளார்.
ஈராக் விஷயத்தில் புஷ் செய்தது போல, ஐக்கியநாடுகள் சபையில் தனது தலையீட்டிற்கான நியாயத்தை முன்வைப்பது குறித்து ட்ரம்ப் சற்றும் கவலைப்படவில்லை. இந்த ராணுவ நடவடிக்கைக்கு காங்கிரஸிடம் அங்கீகாரம் கோரவும் இல்லை. இவை அனைத்துமே எந்த நெறிமுறையையும் வரம்புகளையும் அங்கீகரிக்காத, ஒரு அடாவடி ஏகாதிபத்தியத்தின் வடிவமாகவே அது தோன்றுகிறது. அமெரிக்காவின் பொருளாதார வலிமையும் அரசியல் செல்வாகும் குறைந்தபோதிலும், பலமுனை உலகம் வளர்ந்துவந்த போதிலும், அது உலகில் மிகவும் வலிமையான ராணுவ சக்தியாகவே தொடர்கிறது. இந்த ராணுவ சக்தியை, தன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விவேகமின்றிப் பயன்படுத்துவது, உண்மையில் ஒரு நிர்ப்பந்தத்தின் அறிகுறியே ஆகும். வரம்பற்ற ஏகாதிபத்தியம் என்ற சொல்லைப் பொறுத்தவரை, கடந்த ஒரு தசாப்தத்தில் வெளிப்பட்ட அமெரிக்க மேலாதிக்கத்தை பராமரிக்க, சீனாவை எதிர்கொள்ள, விரோதமான ஆட்சிகளாகக் கருதப்படும் நாடுகளுக்கு எதிராகத் தலையிட வடிவமைக்கப்பட்ட புதிய ஆக்கிரமிப்பு ஏகாதிபத்திய வடிவத்தை கட்டமைக்க அது முயற்சி செய்கிறது. எனினும் இது ஒரு விளக்கமே ஆகும். ஏகாதிபத்தியத்தின் புதியதொரு கட்டத்தை வரையறுப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஈரான் மீதான போர் தனது மேலாதிக்கத்தைப் பராமரிக்கும் ஒரு வழிமுறையாக ராணுவ சக்தியைப் பயன்படுத்துவதன் வரம்புகளை எடுத்துக் காட்டுகிறது. இதற்கு ஈரானின் எதிர்ப்பும் அது மேற்கொண்டுவரும் சமச்சீரற்ற போரும் அந்தப் பகுதியிலும் உலகிலும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு நீடித்த விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதில் ஐயமேதுமில்லை.
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply