கூட்டாட்சியை நோக்கி வலுக்கும் குரல்கள்
வீ. பா. கணேசன்
கூட்டாட்சி என்ற கருத்தாக்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஏப்ரல் மாதமானது மிக முக்கியமான பல முன்னெடுப்புகளை நமக்கு உணர்த்துவதாக அமைந்திருந்தது.
நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவு இந்தியா என்ற ஒரு நாட்டை அறிமுகம் செய்கையில், “பாரத் எனப்படும் நமது இந்திய நாடானது மாநிலங்களின் ஓர் ஒன்றியம் ஆகும்” என்றே குறிப்பிடுகிறது. அதன்படி மாநிலங்களுக்கெனவும் ஒன்றிய அரசுக்கெனவும் பொறுப்புகளின் தனித்தனிப் பட்டியலும், இந்த இரண்டு அமைப்புகளுமே கையாளத்தக்க பொறுப்புகளின் பொதுவான பட்டியலும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி மாநிலங்களின் கடமைகளை நிறைவேற்ற அவற்றுக்குப் போதிய நிதியாதாரங்களை வழங்குவதற்கான நிதிக்குழு குறித்த பிரிவும் அதில் அடங்கியுள்ளது.
எனினும் மாநிலங்களுக்கென தனியாக போதிய நிதியாதாரங்கள் எதுவும் கிடையாது. அத்தகைய நிதியாதாரங்களை திரட்டுவதற்கான உரிமையும் அவற்றுக்கில்லை. மாநிலங்களே தனியாக வரிகளை திரட்டிக் கொள்ள முடியாது. பயனுள்ள நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அவற்றால் கடன்கள் மூலம் திரட்டிக் கொள்ளவும் முடியாது. வளர்ச்சித் திட்டங்களுக்காக பட்ஜெட்டுக்கு வெளியேயான நிதியாதார அமைப்புகளை ஒரு மாநில அரசால் உருவாக்கிக் கொள்ள முடியாது என்பதோடு, திரட்டப்படக் கூடிய கடன் அளவு அதிகபட்சமாக 3 சதவீத நிதிப்பற்றாக்குறை அளவிற்கே இருக்க வேண்டும் என்பதாகவே மாநிலங்களுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒன்றிய அரசுக்கு இத்தகைய நிதிவரம்பு ஏதுமில்லை.
அரசியல் அமைப்புச் சட்டப்படி, மாநிலங்களுக்கு (நிதிக் குழுவின் மூலமாக) ஒன்றிய அரசு வழங்குகிற நிதியும் வெகுவாகக் குறைந்து கொண்டே வந்துள்ளது. நிதிக் குழுவின் பரிந்துரைகளில் மாநிலத்தின் பங்கு, உதாரணமாக, கேரளாவிற்கு 10-வது நிதிக்குழுவின்போது இருந்த 3.88 சதவீதத்திலிருந்து 15-வது நிதிக்குழுவின்போது 1.93 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி இழப்பீட்டை ரத்து செய்தல், வருவாய் பற்றாக்குறை மானியங்களை நிறுத்துதல், இயற்கைப் பேரிடர்களுக்கான உதவிகளை மறுத்தல், மத்திய அரசின் திட்டங்களை எவ்விதக் கலந்துரையாடலுமின்றி வலுக்கட்டாயமாக மாநிலங்களின் மீது திணித்து, அவற்றுக்கான நிதிச்சுமையில் பெரும்பகுதியை மாநிலங்களே சுமக்கும் வகையில் மடைமாற்றுதல் போன்றவாறு மாநிலங்களின் மீது ஒன்றிய அரசின் பாகுபாடான செயல்பாடுகள் 2014ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய நரேந்திர மோடியின் ஒன்றிய அரசுகளின் மூலம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
அதிலும் குறிப்பாக, 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு, மாநிலங்கள் ஒன்றிய அரசை இரந்துண்ணும் நிலைக்குக் கிட்டத்தட்ட ஆளாகியுள்ளன. மாநிலங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதியும் கூட மிகவும் பாகுபாடான வகையிலேயே பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அன்றாடம் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆட்பட்டுள்ளன. அதுவும்போக, இந்த மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்படும் ஒன்றிய அரசின் முகவர்கள் மாநில அரசை நிலைகுலைக்கும்படியான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு, மாநிலங்களை ஆளும் கட்சிகளுக்கு மாநில மக்களிடையே வெறுப்பு உருவாகும் வகையில், சட்டையில் புகுந்து கொண்ட பிள்ளைப்பூச்சிகளாக, தாம் பதவியேற்கும்போது உறுதியளித்த அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு நேர் விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்டிஷ் காலனியாட்சியின் எச்ச சொச்சமான ஆளுநர் பதவி, இன்று ஒன்றிய அரசின் கைப்பாவையாக இருந்து, அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே ஆட்டங்காண வைக்கின்றது.
கேரள, தமிழ்நாடு ஆளுநர்களின் (இதில் புதுச்சேரி-தெலுங்கானா ஆளுநர்கள் விதிவிலக்கல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்) மாநில விரோத நடவடிக்கைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்ட வகையில் மாநிலங்களில் உள்ள உயர்கல்வி அமைப்புகளை சீர்குலைக்கும் ஆளுநர்களின் நடவடிக்கைகளை எதிர்த்தும், மாநில சட்டமன்றங்களின் அதிகார வரம்பை சற்றும் சட்டை செய்யாத போக்கினை எதிர்த்தும், மாநில சட்டமன்றங்களில் ஆளுநர்கள் (ஆண்டுக்கு ஒரு முறை) ஆற்ற வேண்டிய உரையைக் கூட முழுமையாகச் செய்யாமல் வெளிநடப்பு செய்து, மாநில மக்களின் விருப்பத்தை அவமதிக்கும் போக்கினை எதிர்த்தும், மக்களின் நலனைக் கருதி சட்டமன்றங்கள் நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகளுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் அளித்து, அவற்றை சட்டங்களாக மாற்ற மனமின்றி, கிடப்பில் போட்டு வைக்கும் ஆளுநர்களின் அணுகுமுறையை எதிர்த்தும், மாநில அரசுகள் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பல்வேறு முறையீடுகள் உச்ச நீதிமன்றத்தில் இவ்வாறு தேங்கிக் கிடக்கின்றன.
இத்தகையதொரு பின்னணியில்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டையொட்டி, 2025 ஏப்ரல் 3 அன்று “கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை” என்ற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கருத்தரங்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக உயர்கல்வி அமைச்சர் திரு. எம்.சி. சுதாகர் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
ஒன்றிய பாஜக அரசு கூட்டாட்சிக் கோட்பாட்டைச் சிதைக்கும் வகையில் மாநிலங்களுக்கு உரிய வரிப்பகிர்வை வழங்க மறுப்பது, குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களின் மீது புதிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மறைமுகமாக இந்தியையும் திணிப்பதோடு, பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியை வழங்குவோம் என்று மிரட்டுவதையும், அதேபோல மக்கள்தொகை கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்த மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் தன்னிச்சையாக தொகுதி மறுவரையறை என்ற வஞ்சகத்தைத் தென்மாநிலங்களுக்கு எதிராக அரங்கேற்றுவதையும் இத்தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக இவை அனைத்தையும் ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியதோடு, ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து, கூட்டாட்சிக் கோட்பாட்டை நாட்டில் நிலைநிறுத்துவோம் என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர். இதற்காக மக்களை அணிதிரட்டி ஒன்றிய அரசை அம்பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதோடு, அரசியல் அமைப்புச் சட்ட ரீதியாக அனைத்து வகையான போராட்டங்களையும் மேற்கொள்வோம் என்றும் அவர்கள் சூளுரைத்தனர்.
அதற்கு அடுத்த வாரத்தில், ஏப்ரல் 8ஆம் தேதியன்று ஜே.பி. பார்டிவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் ஓர் அமர்வு, தமிழ்நாடு அரசு, மாநில ஆளுநர் மீது தொடுத்திருந்த ஒரு வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியது. இதன்படி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின்படி தமக்கு முன் வைக்கப்படும் சட்ட முன்வடிவுகளை ஆளுநர் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தெளிவாகக் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், எந்தவொரு சட்ட முன்வடிவையும் செல்லாததாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தது. அதே போன்று, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 201வது பிரிவின்படி, குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களால் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் சட்ட முன்வடிவுகளுக்கு குறிப்பிட்ட காலவரம்பிற்குள் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அளிக்க இயலவில்லை எனில், 143வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோர வேண்டும் என்று தெரிவித்தது. அதைப் போலவே, தமிழ்நாடு மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய பின்பும் ஆளுநரின் ஒப்புதல் இன்றி கடந்த பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த 10 சட்ட முன்வடிவுகள் அனைத்தும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவு உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியிருந்த சிறப்பு அதிகாரத்தின்படி, சட்டமாக நிறைவேறியதாகக் கருதப்படும் என்றும் இந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்தச் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்த அவசியத்தையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரையில் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தனர்.
“இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நடைபெற்ற நிகழ்வுகளிலிருந்து ஆளுநரின் தரப்பில் இருந்து வெளிப்பட்ட ஆளுநரின் நடத்தை நம்பகத்தன்மை அற்றது என்பது தெளிவாக வெளியானது. இந்த நீதிமன்றம் (முன்பு ஆளுநருக்கு) வழங்கிய தீர்ப்புகள், வழிகாட்டுதல்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் மரியாதையையும் காட்டுவதில் ஆளுநர் தவறியதை எடுத்துக் கூறும் தெளிவான எடுத்துக் காட்டுகளும் உள்ளன. இத்தகையதொரு சூழ்நிலையில், இந்தத் தீர்ப்பில் நாங்கள் முன்வைத்த கருத்துரைகளுக்கு ஏற்ப, இந்த சட்ட முன்வடிவுகளை முடித்து வைக்குமாறு உத்தரவிட்டு, ஆளுநருக்கு இந்த விஷயத்தை மீண்டும் திருப்பி அனுப்புவதற்குத் தேவையான நம்பிக்கை எங்களுக்கு எழவில்லை என்றே குறிப்பிட வேண்டியுள்ளது.”
ஒன்றிய அரசின் ஏவலாளர்களாகச் செயல்பட்டு வரும் ஆளுநர்களின் செயல்பாடு குறித்த உச்சநீதிமன்றத்தின் இத்தகைய விமர்சனமும், அவர்களுக்குள்ள அரசியல் அமைப்புச் சட்ட வரம்பு குறித்த விளக்கமும் ஆளும் பாஜகவை ஆட்டம் காணச் செய்தது. ஆளும் கட்சி எம்.பி.க்களின் வரைமுறையற்ற விமர்சனத்திற்கு (இது குறித்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது) மேலும் ஊக்கம் தரும் வகையில் துணைக் குடியரசுத் தலைவரான ஜக்தீப் தன்கர் தனது அரசியல் அமைப்புச்சட்டரீதியான பதவியின் நாகரீகத்தையும் மீறி, “நீதிபதிகள் சட்டத்தை இயற்றுகின்றனர்; நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்; எல்லாவற்றுக்கும் மேலான ‘நாடாளுமன்ற’மாக அவர்கள் தங்களை எண்ணிக் கொண்டு நடந்து கொள்கிறார்கள்” என்று கருத்துத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி அரசுகளின் மீதான பாகுபாட்டிற்கு எதிராகவே மாநில அரசுகள் நீதிமன்றத்தின் படியேறுகின்றன. நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, அங்கு கிடைக்கும் இத்தகைய தீர்ப்பையும் கூட, அரசியல் அமைப்புச் சட்டத்தின் அங்கங்களாகத் திகழும் நாடாளுமன்றம், நிர்வாக இயந்திரம், நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இடையிலான மோதலாக உருமாற்றிவிட ஆளும் பாஜக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
இத்தகையதொரு பின்னணியில், 2025 ஏப்ரல் 15 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் மேனாள் இ.ஆ.ப. அதிகாரியான கே. அசோக் வரதன் ஷெட்டி மற்றும் பொருளாதாரப் பேராசிரியர் மு. நாகநாதன் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். “இந்தக் குழு மாநில – ஒன்றிய அரசுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான வழிவகைகளை எடுத்துக் கூறும். மேலும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாநில அரசுகளின் பட்டியலில் இருந்து (மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் பொதுவான) பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டப்படியான வகையில் அவற்றை மீண்டும் மாநிலங்களின் பட்டியலுக்கே கொண்டுவருவதற்கான வழிவகைகளை எடுத்துக் கூறும்.” என்று இதுதொடர்பான அறிவிப்பு தெரிவிக்கிறது.
1967ஆம் ஆண்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் தோற்கடிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளின் தலைமையிலான அரசுகள் பொறுப்பேற்றன. அப்போதிலிருந்தே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அச்சுறுத்துவதற்கான ஓர் ஆயுதமாக ஆளுநர் பதவி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 1969ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதியான பி.வி. ராஜமன்னார் அவர்கள் தலைமையில் மத்திய -மாநில உறவுகள் குறித்த பரிந்துரைப்பதற்கென ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கையும் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. மாநில அரசை கலந்தாலோசித்து ஆளுநரை நியமிப்பது உள்ளிட்ட இதன் பரிந்துரைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து 1983இல் மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையேயான உறவுகள் குறித்து ஆய்வு செய்யவும், அரசியல் அமைப்புச் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு அதில் தேவையான மாற்றங்களை பரிந்துரைக்கவும் என நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. ஆளுநர்களின் நியமனம், செயல்பாடுகள் குறித்த இக்குழுவின் பரிந்துரைகள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தற்போது நியமித்துள்ள நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் அரசின் முன் வைக்கப்பட்ட பின்பு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்தாலும் அவை கையிலெடுக்கப்பட்டு, கூட்டாட்சியின் மாண்புகளை நிலைநிறுத்துவதாக மாற வேண்டும் என்பதே ஜனநாயக எண்ணம் கொண்டோரின் அவா ஆகும்.
‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதையாக அனைத்து வகையான அதிகாரங்களும் தன் வசமே இருக்க வேண்டும் என்ற பேராசை உணர்வோடு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சியை நடத்தும் பாஜகவின் ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பலவீனப்படுத்தி அவற்றைத் தன் வசமாக்கிக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவே ஆளுநர்களை இவ்வாறு ஆட்டிப் படைத்து வருகிறது. இத்தருணத்தில், உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தலையீடும் அறிவுரையும் ஆட்சியாளர்களைக் கோபமுறச் செய்துள்ளது என்பதையே நீதிபதிகளின் மீதான அவர்களின் தாக்குதல்களில் இருந்து தெரியவருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்றமாகத் திகழும் அலகாபாத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவரான நீதியரசர் கோவிந்த் மாத்தூர் அவர்கள், உச்சநீதிமன்றத்தின் மீதும், நீதிபதிகளின் மீதும் இவ்வாறு தொடுக்கப்படும் அவதூறுத் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் “தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தன் அதிகார வரம்பை மீறிவிட்டது என்ற விமர்சனம் முற்றிலும் தவறானது; தேவையற்றது என்பது மட்டுமின்றி, விஷமத்தனமானது என்றும் கூறலாம்” என்று குறிப்பிட்டுள்ளது ஆட்சியாளர்களின் பதற்றத்தையே எடுத்துக் காட்டுகிறது.
மத்திய அரசால் வசூலிக்கப்படும் செஸ், சர்சார்ஜ், ரிசர்வ் வங்கி உள்ளிட்டு மத்திய நிறுவனங்களின் லாபப் பங்கு ஆகிய அனைத்து வகையான வரிவருவாய்களையும் உள்ளடக்கி அதில் ஐம்பது சதவீதத்திற்குக் குறையாத வகையில் மாநிலங்களுக்குப் பகிர்ந்து வழங்கப்படுவதன் மூலமே, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற உதவியாக இருக்கும். இத்திசைவழியில் செயல்படுவதற்கான உந்துதலைத் தருவதாக நீதியரசர் குரியன் ஜோசப் குழுவின் பரிந்துரைகள் விளங்கும் என்றும், ஒன்றிய அரசு பாகுபாடற்ற வகையில் செயல்பட முன்வரும் என்றும், இதை உறுதிப்படுத்துவதில் உச்சநீதிமன்றம் உரிய பங்கு வகிக்கும் என்றும் ஜனநாயக எண்ணங்கொண்டோர் விரும்புகின்றனர் என்பதையும் இங்கு வலியுறுத்திக் கூற வே
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
