பிரான்சில் இடதுசாரிகளின் புதிய பாப்புலர் முன்னணி
சூசன் ராம்
பாசிச தீவிர வலதுசாரிகளை தடுத்து நிறுத்திட பிரெஞ்சு நாட்டின் இடதுசாரிகள் ஒன்றுபட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பிரெஞ்சு அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊடகங்கள், வாக்கெடுப்பு அமைப்புகள், அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் பாசிச, தீவிர வலதுசாரியான, மரைன் லு பென் தலைமையிலான தேசிய அணிதான் (National Rally: RN) அதிக இடங்களை வெல்லுமென்று கூறினர். ஆனால், அவற்றுக்கு மாறாக, இடதுசாரிகளின் கூட்டணியான புதிய பாப்புலர் முன்னணியே (New Popular Front), பாராளுமன்றத் தொகுதிகளில் (தேசிய சட்டசபை) அதிகமான இடங்களை வென்றுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், திடீரென பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்தே, இடதுசாரிகளின் கூட்டணியான புதிய பாப்புலர் முன்னணியின் மிகப்பெரிய அளவிலான இந்த வெற்றிக்கதை உருவானது. 577 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில், மொத்தம் 186 இடங்களைப் பெற்று, இடதுசாரிகளின் கூட்டணி தனது தெளிவான வெற்றியை பதித்துள்ளது. மேலும், 300 இடங்களை பெறுவார்கள் என்று கூறப்பட், லு பென்னின் பாசிஸ்டுகள் 143 இடங்களை மட்டுமே பெற்று, மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கான முக்கியக் காரணமாகவும் இடதுசாரிகள் விளங்கினர் என்பதும் சாத்தியமே. மக்ரோனின் தீவிர மைய குழுமம் ('ஒன்றிணைதல்') 166 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், 65 இடங்கள் பல்வேறு மைய வலதுசாரிக் கட்சிகளுக்குப் சென்றுள்ளன. அவர்களில் சிலர், ஒரு காலத்தில் குடியரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்களாவர்.
இத்தேர்தலில் 66 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. 1981க்குப் பிறகு பிரெஞ்சு சட்டமன்றத் தேர்தல்களின் இரண்டாவது சுற்றுக்கான அதிகபட்ச வாக்கு சதவீதமாக இது உள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இப்போது தேர்தல் நடப்பதற்கான காரணம் என்ன?
பொதுவாக பிரான்சில், ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் அடுத்தடுத்து நடைபெறுவது வழக்கம். ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடைபெறும். ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டவுடன், அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில், பாராளுமன்றத்தின் பெரும்பான்மை அடிப்படையில், ஜனாதிபதி உடனடியாக வேலைகளை துவக்கும் வகையில், பிரதம மந்திரி தலைமையில் ஐந்தாண்டுகளுக்கான அரசாங்கத்தை அமைக்க முடியும். இது நடக்கத் தவறினால், கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ளது போல், தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒரு முரண்பட்ட அரசியல் நிலைபாட்டுடன் கூடிய பிரதமருடன் போராடுதலைக் கொண்ட ‘இணை வாழ்வை’ மேற்கொள்ளவேண்டிவரும்.
எலிசி அரண்மனையில் மக்ரோனின் ஆட்சி நிலைத்திருந்தது. 2017 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அவர் பெரும்பான்மையான இடங்களை வென்று தனது பிடியை நிலைநிறுத்தினார். ஆனால், 2022 இல் அவரது செல்வாக்கு சற்று சரிந்தது. அதேநேரம், மரீன் லு பென்னுடன் நேருக்கு நேர் மோதிய இரண்டாவது சுற்றின் அடிப்படையில் அவர் ஜனாதிபதி பதவியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டார். இதற்கு இடதுசாரிகளின் ஆதரவு அவருக்கு உதவியது. ஆனால், அதையடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மக்ரோன் தனது ஒட்டுமொத்த பெரும்பான்மையை இழந்தார். மேலும், ஒரு சங்கடமான புதிய அரசியல் யதார்த்தத்தையும் அவர் எதிர்கொண்டார். 1. தொங்கு பாராளுமன்றம், 2. ஒரு சிறுபான்மை அரசாங்கம், 3. அச்சுறுத்தும் வகையிலான தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சி (2017 இல் 8 இடங்கள், அதுவே 2022 இல் 89 இடங்கள்), 4. புதிய கம்யூனிஸ்ட், தீவிர இடது மற்றும் சுற்றுச்சூழல்வாதிகள் NUPES (Nouvelle Union Populaire Ecologique et Sociale) என்ற பதாகையின் கீழ் ஒன்றுபட்டனர்.
மக்ரோனின் பொறுப்பற்ற சூதாட்டம்
அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் (ஜூன் 2024 தொடக்கத்தில்) பிரெஞ்சு தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்கு மக்ரோன் தலைமை தாங்கினார். இதன் விளைவாக, 37 சதவீதத்திற்குமேல் வாக்குகளை பெற்று அதிக எண்ணிக்கையிலான இடங்களை பெறும் அளவிற்கு தேசிய அணி முன்னேறியது. இதை, தனக்கெதிரான மிகப்பெரும் சவாலாக மக்ரோன் கருதினார். அதற்கெதிரான தனது தாக்குதலை தொடுக்கும் வகையில்தான், ஜூன் 9 அன்று பிரெஞ்சு தொலைக்காட்சிக்கு அவர் சென்றார்.
எந்தக் கணக்கீட்டின்படி பார்த்தாலும், பெரும்பாலான மக்களுக்கு மோசமான தவறுகளை விளைவிக்கக்கூடிய சூதாட்டமாகவே, மக்ரோனின் செயல் அமைந்திருந்தது. இடதுசாரிகளின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கூறுவதெனில், இதைவிட அதீத ஆபத்தை விளைவிக்கும் பொறுப்பற்ற செயலாக வேறு எதுவும் இருந்திருக்க முடியாது. இடது எம்.பி. க்ளெமென்ஸ் குட்டே அமெரிக்க வெளியீடான ஜெகோபியன் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியது போல்,
"இந்த நேரத்தில் தேசிய சட்டமன்றத்தை கலைப்பது என்ற ஜனாதிபதியின் முடிவானது, தேசிய அணியின் வெற்றிக்கான படிக்கல் என உறுதிப்படுத்துவதாகும். தங்களுக்கு சாதகமான ஊடக சக்தியோடு தீவிர மையவாதத்தால் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள தீவிர வலதுசாரிகளுக்கு, இப்போது இருப்பதைப் போன்று, அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு நெருக்கமான வாய்ப்பு இருந்ததேயில்லை.
மிகப்பெரிய நிலைப்பாட்டின் உச்சத்தை அடைந்ததுபோல், பிரெஞ்சு குடியரசின் மாண்புகளை பாதுகாக்கும் அவதாரமாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு, மரைன் லு பென்னுக்கு எதிராக மக்ரோன் வெளிப்படையாக பிரச்சாரத்தை முன்னறிவித்தார். இதிலிருந்து, அவர் வெற்றியடைந்து, புத்துயிர் பெற்று, தனது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தின் எஞ்சிய ஆண்டுகளில் தைரியமாக முன்னேற முடியும் என்று மக்ரோன் யூகித்தார்.
இச்சூழ்நிலையில், பிரெஞ்சு இடதுசாரிகளால் அவர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க முடியாது என்றுதான் அனைவரும் கருதினர். குறிப்பாக, இறுக்கமான தேர்தல் காலக்கெடுவின் மூலம் முந்தைய NUPES கூட்டணியை சிதைக்கலாம் என்று மக்ரோன் கருதியிருக்கக்கூடும்.
இடதுசாரிகளின் ஒருங்கிணைவு
ஆனால், ஜூன் 13 ஆம் தேதியே பிரான்சின் நான்கு முன்னணி இடதுசாரி சக்திகளும் ஒருங்கிணைந்து தங்களுடைய தாக்குதலை துவங்கினர். அதாவது, வருகின்ற தேர்தல்களில் லு பென்னின் தேசிய அணியை வீழ்த்தும் வகையில், ஒரு புதிய மக்கள் முன்னணியை அவர்கள் உருவாக்கினர். இந்த முன்னணியில் La France Insoumise (France Unboed: LFI), Parti Communiste (PCF), Parti Socialiste (PS) மற்றும் Les Écologistes-Les Verts (EELV) ஆகிய இடதுசாரி கட்சிகள் இருந்ததன. ஜூன் 30இல் அன்று நடைபெறவுள்ள முதல் சுற்று தேர்தலில், பிரான்சின் 577 தொகுதிகளிலும் தங்களுடைய கூட்டணியின் சார்பில் பொது வேட்பாளர்களை போட்டியிட வைப்பது என்ற திட்டத்தை அவை வகுத்தன.
ஜூன் 14 அன்று, நான்கு அமைப்புகளின் தலைவர்களும் கூட்டணியின் கொள்கைத் திட்டத்தை உருவாக்கக் கூடினர். 150 திட்டங்களை உள்ளடக்கிய "சட்டமன்ற ஒப்பந்தமும்” அரசாங்கத்திற்கான நிகழ்ச்சி நிரலும் மூன்று கட்ட கொள்கை அமலாக்க அட்டவணையையும் அதில் இருந்தது. இக்கூட்டணி வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தவுடன், குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக உயர்த்தும். மக்ரோனின் ஆட்சிகாலத்தில் ஓய்வு பெறும் வயதை 64 ஆக உயர்த்தும் வகையில் கொண்டுவரப்பட்ட 2023 ஓய்வூதிய 'சீர்திருத்தம்’ கைவிடப்பட்டு, ஓய்வுபெறும் வயது 60 ஆக மாற்றப்படும். பொது சேவைகளில் முதலீடு செய்யப்படும். பெரிய செல்வத்தின் மீதான செல்வ வரியை மீட்டெடுத்தல் மற்றும் "சூழலியல் திட்டங்கள்" உருவாக்கப்படும்.
புதிய ஒருங்கினைப்பு என்பது கட்சிகளுக்கிடையிலான ஓர் உடன்படிக்கை என்பதாக மட்டுமல்லாமல், சமூக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுவாக சிவில் சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருப்பது என்பதும் தெளிவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், ஜூன் 14 அன்று நடைபெற்ற கூட்டத்தில், பிரான்சின் போராட்டகுணம்மிக்க ஐந்து மத்திய தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய கூட்டமைப்பான Générale du Travail ஐச் சேர்ந்த தொழிற்சங்க பிரதிநிதி உரையாற்றினார். பாரிஸ் புறநகரில் இருந்த ஸ்டெல்லண்டிஸ் ஆட்டோமொபைல் தொழிற்சாலை சமீபத்தில் மூடப்பட்டது. அதன் விளைவாய் வேலையிழந்த தொழிலாளிகள் புதிய கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர். மாறிவரும் சமூகத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இடதுசாரிகளின் கூட்டணி உருவாகியுள்ள திட்டம் உள்ளதாக கிரீன்பீஸ் பிரான்சினுடைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பாசிச வளர்ச்சிப்போக்கிற்கு எதிரான இத்தாக்குதலை மிகக் குறுகிய காலத்தில் வளர்த்தெடுத்ததற்கு பின்னால் மிகப்பெரிய உந்து சக்தியாக La France Insoumise (LFI) இருந்தது என்பதில் சந்தேகமில்லை. 2016 இல் உருவாக்கப்பட்ட இடதுசாரிகளின் ஒருங்கிணைப்பிற்கு பின்னணியாக தெளிவான பார்வை கொண்ட இவ்வமைப்பின் ஜீன்-லூக் மெலன்சோன் தான் இருந்தார். இது இடதுசாரிகளின் கூட்டணிக்கு மிகப்பெரிய சக்தியாக இருப்பதுடன், புதிய பாராளுமன்றத்தில் இவர்களுக்கு 78 பிரதிநிதிகள் உள்ளனர். மேலே குறிப்பிட்ட திட்டத்திற்கான துவக்கப்புள்ளியாகவும் இது விளங்கியது. ஒரு பொதுவான திட்டத்தை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை சாதூரியமாக கையாள்வதிலும் இது முக்கிய பங்கையாற்றியுள்ளது. ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, இந்த முன்னணியிலேயே அரசியல் ரீதியாக குறைந்த பலத்தைக்கொண்ட சோசலிஸ்ட் கட்சிக்கு குறிப்பிடத்தக்க முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக, சோசலிஸ்ட் கட்சியில் செல்வாக்கற்றுள்ள பிரமுகர்களை அம்பலப்படுத்தவும் உதவியது. அவர்களில் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டே, பிளம் தொகுதியில் போட்டியிடுவதற்கு விரைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாசிச சக்திகளுக்கு எதிரான இடதுசாரிகளின் கூட்டணியை உருவாக்கும்போது, அரசியல் எதிரிகளாலும் முக்கிய ஊடகங்களாலும் அதன் மீது தொடுக்கப்பட்ட பெரும் தாக்குதல்களின் மூர்க்கத்தனத்தை விளக்கிடும் விதமாக LFI இன் பங்கு முக்கியமானதாக அமைந்திருந்தது. தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் தனிப்பட்ட முறையில் இலக்காக்கப்பட்டு மெலன் சோன் விமர்சிக்கப்பட்டார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாள்தோறும் ஊடகங்களில் ஒளிபரப்பினர். ஜூன் 30 அன்று நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவிற்குப் பிறகு, இத்தாக்குதல்கள் தீவிரமடைந்தன. அதிலிருந்து இடதுசாரிகளின் அணி 28 சதவீத வாக்குகளுடன் (தேசிய அணியின் 33 சதவீதத்திற்கு எதிராக) இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இது இடதுசாரிகளின் அணியின் இரண்டாவது சுற்று வெற்றிக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்தது. பிரான்சின் தேர்தல் விதிமுறையின்படி 12.5 சதவீத வாக்குகளை தாண்டிய அனைத்து முதல் சுற்று வேட்பாளர்களும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற தகுதியுடையவர்களாவர். முதல் சுற்று முடிவுகள் வெளியான உடனேயே தேசிய அணிக்கு எதிராக இரண்டாவது இடத்தைப் பிடிக்கத் தவறிய அனைத்து LFI வேட்பாளர்களையும் வலுவான குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக நிற்குமாறு மெலன் சோன் அறிவுறுத்தினார். அதாவது, முக்கோணப்போட்டியை தவிர்த்து மக்ரோனின் அணியை வீழ்த்துவதற்கான வழிகாட்டுதலாகும் இது. மேலும், மிக குறுகிய இடைவெளியை நிரப்பினால் பாசிசத்தை வீழ்த்த வாய்ப்பிருக்கும் பட்சத்தில் இடதுசாரிகளின் அணிக்கு வாக்களிக்காமல் பாசிசத்தை வீழ்த்த தங்களின் கட்சியினர் வாக்களிக்க வேண்டும் என வழிகாட்டினார். கருத்துக் கணிப்பு அமைப்பான IPSOS இன் அடுத்தடுத்த பகுப்பாய்வு தெளிவுபடுத்தியது போல், பல்லாயிரக்கணக்கான LFI-ஆதரவு வாக்காளர்கள் மேற்கண்ட வழிகாட்டுதலுக்கு உட்பட்டு வாக்களித்ததின் விளைவாகத்தான், லு பென்னின் தோல்வி உறுதிசெய்யப்பட்டது. மேலும், மக்ரோனின் அணியும் இரண்டாவது நிலைக்குத் தள்ளப்பட்டது.
இரு முனைகளில் சண்டை
உலகையே அதிரவைத்துள்ள இந்த தேர்தல் முடிவுகளின்படி இடதுசாரிகளின் அணி, இப்போது இரண்டு வேறுபட்ட, அதேநேரம் ஒன்றோடொன்று தொடர்புடைய முனைகளில் நின்று போராடுகிறது. இவ்வெற்றியின் பலனை அடைவது என்பது தொடர்ச்சியான போராட்டத்தோடு சம்மந்தப்பட்டதாக உள்ளது. இந்நிலையில்தான், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும், பிரதமரை முன்மொழிவதற்கும் ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. பிரச்சினை என்னவெனில், மக்ரோனின் அரசாங்கமும் நாட்டின் அரசியல் ஸ்தாபனமும் யதார்த்த நிலையை தீவிரமாக மறுக்கும் வகையில் நடந்துகொள்கின்றன. எதுவும் மாறாதது போலவும், இடதுசாரி கூட்டணி ஒரு இடத்தைக்கூட வெல்லாதது போலவும், தந்திரங்கள் அல்லாத புதிய அரசியல் நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டிய அவசியமில்லை என்பது போலவும், ஒரு இணையான வேறொரு பிரபஞ்சத்தில் இருப்பதுபோல், அவர்கள் நடந்து கொள்கிறனர். 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவருவதால் நிலையான மற்றும் தொடர்ச்சியான ஆட்சி அதிகாரத்தால் மட்டுமே மேல்மட்ட அளவிளான ‘பாதுகாப்பு’ சவால்களை எதிர்கொள்ளமுடியும் என்பதுபோன்ற அம்சங்களை எழுப்புகின்றனர். இவைகளை முன்னிறுத்தி தனது சொந்த பிரதம மந்திரியான கேப்ரியல் அட்டால் வழங்கிய ராஜினாமாவை மக்ரோன் ஒதுக்கித் தள்ளியுள்ளார்.
இதற்கிடையில், பலவீனமான இணைப்புகளை கண்டறிந்து குதிரை பேரம் பேசவது, வேலைநிறுத்தங்களை உருவாக்குவது போன்றவைகளை மேற்கொண்டு இடதுசாரிகளின் அணியை சிதைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மற்ற அணிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் வலதுசாரிகள் நடத்துகின்ற உல்லாச, ஆடம்பர கூட்டங்கள் குறித்தும் ஊடகங்களில் செய்திகள் கசிந்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதில் லு பென்னுடன் கூட்டணிக்காக ஏற்கனவே முன்வைக்கப்பட்ட சம்பவங்களும் அடங்கும்.
இடதுசாரிகளின் இரண்டாவது போர்க் கொடி அந்த அணிக்கு உள்ளேயே உள்ளது. அதுகுறித்து யாருக்கும் பெரிய ஆச்சரியம் கிடையாதுதான். அதாவது, சோஷலிஸ்ட் கட்சி வெற்றிபெற்றுள்ள 65 சட்டமன்ற இடங்களும் இடதுசாரி முன்னணியின் ஐக்கியமான செயல்பாட்டிலிருந்து பெறப்பட்டதே. பிரதம மந்திரி வேட்பாளரை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசரத் தேவையால் இந்த ஒற்றுமை தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பல விவாதங்களுக்குப் பிறகு, இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கருக்குக் கிழக்கே அமைந்துள்ள பிரெஞ்சு ஆட்சியின் கீழ் உள்ள ரீயூனியன் தீவின் பிராந்திய கவுன்சிலில் பணிபுரியும் தலைவர் ஹுகெட் பெல்லோவின் வடிவத்தில் ஒருமித்த வேட்பாளர் தோன்றினார். முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் ரீயூனியன் உறுப்பினராக இருந்தவர், அரசியல் ரீதியாக அனுபவம் வாய்ந்தவர், பெல்லோ இனவெறிக்கு எதிரானவர், பெண்ணியவாதி மற்றும் பாலஸ்தீனத்தின் ஆதரவாளர் மற்றும் 2012 இல் இடதுசாரிமறு ஒருங்கிணைவு கட்சியின் (Communist Party of Réunion) நிறுவனர் ஆவார். இப்போது தனது எழுபதுகளில், அவர் பிரெஞ்சு இடது மற்றும் மையத்தில் கணிசமான மரியாதை உடையவர். ஆனால் சோலிஸ்ட் கட்சி இவரை பிரதமராக ஏற்க மறுக்கிறது. இதன்பொருட்டு இடது அணிசேர்க்கையைவிட்டு விட்டு வெளியேறியுள்ளது. இதைத் தொடர்ந்து ஹுகெட் பெல்லோவின் பிரதமர் என்கிற முன்மொழிவை நிராகரித்துள்ளார்.
இதற்கிடையில், பிரான்சின் அரசியல் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. அதாவது, அரசியல் ரீதியாக பலவீனமான ஜனாதிபதி தற்போது ஒரு சிதைந்த சமுதாயத்திற்கு தலைமை தாங்குகிறார். அதன் பாராளுமன்றம், இப்போது நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் தனித்துவமான மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது. இடதுசாரிகள் துருவ நிலையில் அதிக இடங்களை பெற்றிருந்தாலும், எந்த ஒரு பிரிவினரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில், இடதுசாரிகளின் தலைமையில் தொங்கு நாடாளுமன்றம் என்கிற நிலை உருவாகியுள்ளது.
இந்த வரிசையில் இடதுசாரிகளின் அணி உருவாக்கியுள்ள திட்டத்தை முன்னோக்கிச் செலுத்துவதே இப்போதுள்ள ஒரே வழி என்று தொடர்ந்து முன்வைப்பதன் மூலம், பிரெஞ்சு இடதுசாரிகளின் தீவிரமான, மாற்றத்திற்கு அவசியமான, கொள்கை ரீதியான, நம்பகமான மற்றும் பயனுள்ள சக்தியாக La France Insoumise தன்னை உறுதிப்படுத்துகிறது. இடதுசாரிகளின் அணியான பாப்புலர் ஃப்ரண்டைப் பாதுகாப்பதற்கும், கட்டியெழுப்புவதற்கும், உள்ளூர் அளவிலான குழுக்கள் ஏற்கனவே உருவாகி வருவது (தெற்கு நகரமான மார்செயில்ஸில் முதலாவது) நிலைமையின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. போராட்டத்தை புதிய திசை வழியில் கொண்டு செல்ல மக்கள் தயாராக உள்ளனர்.
தமிழில்: ச. லெனின்
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
