மேலைநாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணியாத தெற்குலகம்
விஜய் பிரசாத்
உக்ரைன் போருக்கு உடனடியாக ஒரு சுமுகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. நமீபியாவின் பிரதமர் சாரா கூகான்ஜெல்வா அமாதிலா, ஒருபடி மேலே போய், ஆயுதங்களுக்கென செலவழிக்கப்படும் மிகக் கணிசமான நிதி, உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டச் செய்யும் வகையில் மடைமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஒட்டுமொத்த உலகின் நன்மையையும் கணக்கில் கொண்டு எழுப்பப்படுகிற இத்தகைய குரல்களை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மிகுந்த ஆணவத்தோடு அலட்சியம் செய்து வருகின்றன.
அண்மையில், கடந்த பிப்ரவரி 2023இல், இந்தியாவின் பெங்களூரு மாநகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் சிறப்புக் கூட்டத்திற்கு அமெரிக்கா தனது ஒற்றை நிகழ்ச்சி நிரலுடன் வந்து சேர்ந்தது. அமெரிக்க நிதியமைச்சர் திரு. ஜானெட் யெல்லன், பெங்களூரு உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஜி-20 நாடுகள் அனைத்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அமெரிக்காவைப் பின்பற்றி அனைத்து நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் எடுத்த எடுப்பிலேயே வலியுறுத்தினார். ஆனால் ஜி-20 குழுமத்தின் தலைமைப் பொறுப்பைத் தற்போது வகித்து வரும் இந்தியா, அமெரிக்காவின் மேற்கூறிய விருப்பத்தை நிறைவேற்றும் மனநிலையில் இல்லை என்பது தெளிவாகப் புலப்பட்டது. பெங்களூருவில் கூடியுள்ள ஜி-20 உச்சி மாநாடு, ஒரு அரசியல் கூட்டம் அல்ல என்றும், பொருளாதார அம்சங்களை விவாதிக்கவே இந்த நிகழ்வு நடைபெறுகிறது என்பதையும் இந்திய அதிகாரிகள் தெளிவுபட எடுத்துரைத்தனர். மேலும், உக்ரைன் மீதான ரஷ்ய நடவடிக்கையை ‘போர்’ என்று குறிப்பிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய தரப்பினர், இதை ஒரு ‘நெருக்கடி‘ என்றும், உலகம் எதிர்நோக்கியுள்ள ‘சவால்‘ என்றும் குறிப்பிடவே விழைந்தனர். இந்தப் பின்னணியில், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ரஷ்யா மீது கண்டனம் தெரிவிக்காத தீர்மான வாசகங்களைத் தாங்கள் ஏற்கவியலாது என்று கூறி நிராகரித்து விட்டன.
மேற்குலகின் அழுத்தம்
இந்தோனேஷியாவில் சென்ற 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டிலும் கிட்டத்தட்ட இதே சூழலே நிலவியது. ரஷ்யாவைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்கிற மேலை நாடுகளின் கடுமையான அழுத்தமும், வற்புறுத்தல்களும் அப்போதும் எடுபடவில்லை. பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா முதலான வளரும் நாடுகள், ‘ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி ஒதுக்கிவைப்பதானது‘ ஒட்டுமொத்த உலகுக்கும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும் என்கிற நடைமுறைக் கண்ணோட்டத்திலிருந்து இப்பிரச்சனையை அணுகியதால், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்குக் கிஞ்சிற்றும் வளைந்து கொடுக்கவில்லை.
ஜி-20 நாடுகளின் அடுத்த இரண்டு உச்சி மாநாடு அமர்வுகளும் முறையே 2024இல் பிரேசில் நாட்டிலும், 2025இல் தென் ஆப்பிரிக்காவிலும் நடைபெறவுள்ளன. இந்தச் சூழலில், உலக அரசியல் அரங்கில் ஜி-20 என்னும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மேடையைத் தங்களது எண்ணப் போக்கிற்கு இணங்க எளிதாக நகர்த்திச் செல்ல இயலாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் மேலை நாடுகள் உள்ளன.
குறைந்துபோன நம்பகத்தன்மை
பெரும்பாலான ஜி-20 நாடுகளின் தலைவர்கள், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் ஜெர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற, சர்வதேச அளவில் நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை விவாதிக்கும் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, அங்கிருந்து நேரடியாக பெங்களூரு வந்திருந்தனர். மூனிச் மாநாட்டின் முதல் நாளன்று உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், “புவிக்கோளத்தின் தென் பகுதியிலுள்ள நாடுகளில் நம் மீதான நம்பகத் தன்மை வெகுவாகக் குறைந்துபோய் விட்டதை எண்ணி” தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறினார். அவர் ‘நம் மீதான‘ என்று குறிப்பிட்டது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளைத்தான் என்பது தெளிவு.
மேலை நாடுகள் மீதான ‘நம்பகத் தன்மை‘ கணிசமாகக் குறைந்துபோய் விட்டதை எவ்வாறு அளவிடுவது? என்னும் கேள்வி இத்தருணத்தில் இயல்பாகவே எழுகிறது. புவியின் தெற்குப் பகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு சில நாடுகள், ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் மேலை நாடுகளின் நடவடிக்கைகளில் தங்களையும் இணைத்துக் கொள்ளும் எண்ணத்தில் உள்ளன. ஐ.நா. அவையில் இப்பிரச்சனை குறித்த வாக்கெடுப்புகளிலும் கலந்துகொண்டு, மேலை நாடுகளுடன் கைகோர்க்கவும் அவை தயாராகவுள்ளன. ரஷ்யாவைக் கண்டிக்க முன்வராத ஏனைய நாடுகளையும் ‘மேலை நாடுகளின் எதிரி‘ என்று உடனே முத்திரை குத்திவிட முடியாது. இந்திய அரசு உள்பட, பெரும்பாலான இந்த நாடுகள், அன்றாடம் தாங்கள் சந்தித்து வருகிற நடைமுறைச் சூழல்களிலிருந்து இப்பிரச்னையைக் கையாண்டு வருகின்றன. தள்ளுபடி விலையில் ரஷ்யாவிலிருந்து சப்ளை செய்யப்படும் எண்ணெய் இந்நாடுகளின் இறக்குமதியில் பெரும் பங்கை வகித்து வருகிறது. மேலும், அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக ரஷ்யாவின் இலாபம் கொழிக்கும் எண்ணெய்வளத் துறையிலிருந்து வெளியேறிவரும் மேலைநாட்டு நிறுவனங்கள், தங்கள் சொத்துக்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்திடும் சூழலையும் இந்நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
புறந்தள்ளப்படும் நெருக்கடி
மேலைநாடுகள் தரும் அழுத்தங்களால் ஏற்படுகிற விரக்தி ஒருபுறம், ரஷ்யாவுடன் சீரான உறவைப் பேணுவதால் கிட்டும் பொருளாதார வாய்ப்புகள் மறுபுறம் என்றிருக்கும் இன்றைய யதார்த்தச் சூழலிலேயே, ஆப்பிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுடனான உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு வாஷிங்டன் தரும் நெருக்கடியைப் புறந்தள்ளி, அலட்சியம் செய்து வருகின்றன. தங்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் தென்திசை நாடுகள் மேற்கொள்ளும் சுயேச்சையான அணுகுமுறையும், அவை பகிரங்கமாக வெளிப்படுத்திவரும் எதிர்ப்பு மனநிலையுமே, மேலைநாடுகளின் நம்பகத்தன்மை குறைந்து, தான் ‘அதிர்ச்சி‘ அடைந்ததாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உரத்த குரலில் புலம்புவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியன்று மூனிச் பாதுகாப்பு மாநாடு வளாகத்தில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்த மூன்று தலைவர்கள் பங்கேற்ற குழு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் மற்றும் கருத்துப் பரிமாற்றத்தின் மையப்புள்ளியாக உக்ரைன் போர் இடம்பெற்றது. போர்ச்சூழல் குறித்து தாங்கள் கவலை கொண்டிருப்பதையும், ரஷ்யாவுடனான உறவை முறித்துக் கொள்ளுமாறு தாங்கள் தொடர்ச்சியாக நிர்ப்பந்திக்கப்படுவதையும் அவர்கள் மூவரும் விரிவாக எடுத்துரைத்தனர். அன்று மாலை உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த பிரேசில் நாட்டின் வெளியுறவு அமைச்சர் மௌரோ விய்யிரா, அதோடு சேர்த்து, இந்த மோதலோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடைய எல்லா நாடுகளும் உடனடி தீர்வுக்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். போரைப் பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிற நிலைமை நீடிக்கலாகாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை
ரஷ்யாவுடனான போரை நீண்ட காலத்திற்கு நீடிக்கச் செய்து நடத்திக் கொண்டே இருக்கும் வகையில் உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் கணிசமான பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கின்றன. நிலைமை கைமீறிப் போவதற்குள் இதற்கொரு முடிவு அவசியம் காணப்பட வேண்டும். மார்ச் 2022இல் போர் நிறுத்தத்திற்கான ஒரு இடைக்கால ஒப்பந்தம் உருவாவதற்கான வாய்ப்பு தென்பட்டது. அது செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே தடைக்கற்களை உருவாக்கிய மேற்கு நாடுகள், அதையடுத்து ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே பேச்சுவார்த்தைக்கான கதவுகளை முற்றிலுமாக மூடச்செய்து தொடர்ந்து முட்டுக்கட்டை எழுப்பி வருகின்றன.
மேற்குலக நாடுகளின் பல அரசியல்வாதிகள் ‘முடிவில்லாத போர்‘ என்று மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருப்பதும், இந்நாடுகள் உக்ரைனுக்குத் தொடர்ச்சியாக ஆயுதங்கள் வழங்கி வருவதுமான பின்னணியில் ரஷ்யா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அணு ஆயுத தயாரிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக 1991ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உருவான சூநற ளுகூஹசுகூ கூசநயவல உடன்படிக்கையிலிருந்து தான் விலகிக் கொள்வதாக கடந்த 21 பிப்ரவரி 2023இல் ரஷ்யா அறிவித்தது, ஏற்கனவே அமெரிக்கா, 1972இல் அன்றைய சோவியத் யூனியனுடன் தான் ஏற்படுத்திக் கொண்ட கண்டம்தாவு ஏவுகணை தடுப்பு ஒப்பந்தத்தை (ஹவேi க்ஷயடடளைவiஉ ஆளைளடைந கூசநயவல) 2002ஆம் ஆண்டிலேய தன்னிச்சையாக ரத்து செய்து வெளியேறிவிட்டது. இதேபோன்று, அமெரிக்காவும், அன்றைய சோவியத் யூனியனும் இணைந்து உருவான ‘அணுக்கருவிசை பயன்பாட்டு ஒப்பந்தத்தையும் ‘ 2019ஆம் வருடம் அமெரிக்கா திரும்பப்பெற்றுக் கொண்டது. இதன் காரணமாக, அணு ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் கூடிய நடவடிக்கைகள் முழுவதுமாகக் கைவிடப்பட்டுள்ள சூழலே தற்போது நிலவுகிறது.
உக்ரைன் நெருக்கடிக்கு ‘உடனடித் தீர்வு ஏற்பட வழிகாண வேண்டும்‘ என்று பிரேசில் வெளியுறவு அமைச்சர் விய்யிரா வெளியிட்ட கருத்து, வளரும் நாடுகள் மத்தியில் முக்கியத்துவத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ‘முடிவில்லாத போர்‘ என்கிற கருத்தாக்கம் எந்தவிதத்திலும் புவிக்கோளத்திற்குப் பயன்தரப் போவதில்லை என்பதே ஒட்டுமொத்த வளரும் நாடுகளின் எண்ணப்போக்காக உள்ளது. “ஒரு போரின் வெற்றி தோல்வி பற்றியோ, இலாப நட்டம் பற்றியோ நாம் வீணாக விவாதித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை; நாம் அனைவருமே தோல்வியாளர்கள்தான். இறுதியில் நமது மனிதகுலம்தான் மோசமான பின்விளைவுகளைச் சந்தித்து, அனைத்தையும் இழந்து நிற்கும்” என்று மேலே குறிப்பிட்ட மூனிச் குழு விவாதத்தில் கொலம்பியாவின் துணை ஜனாதிபதி ஃபிரான்சியா மார்குயிஸ் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
நமீபியாவின் துணிவுமிக்க குரல்
மூனிச் மாநாட்டின் மிகவும் வலிமையானதொன்றாக நமீபியாவின் பெண் பிரதமர் சாரா கூகான்ஜெல்வா அமாதிலா அவர்களின் கருத்துரை இடம்பெற்றது. “உக்ரைன் நெருக்கடிக்கு அமைதியான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை நோக்கியே எங்களது நகர்வுகள் உறுதிபட அமைந்திருக்கும். மிகக் கணிசமாக ஆயுதங்களுக்குச் செலவிடுவது, மக்களைக் கொன்று குவிப்பது, மனிதர்களிடையே வெறுப்புணர்வையும், பகைமையையும் ஊட்டி வளர்ப்பது போன்ற அம்சங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, பூமிப்பந்தின் எல்லா வளங்களும், ஒட்டுமொத்த உலகின் அனைத்துப் பகுதிகளிலும் விரவிக்கிடக்கும் மக்கள் திரளின் முன்னேற்றத்திற்கும், வாழ்நிலை உயர்வுக்கும் பொருத்தமான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் எங்களது முழுக்கவனமும் இருந்துவரும்” என அமாதிலா தனது கருத்துரையில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்.
உக்ரைன் பிரச்னை குறித்த ஐ.நா. அவையின் வாக்கெடுப்பில் நமீபியா பங்கேற்காமல் அதைப் புறக்கணித்ததற்கான காரணத்தை பிரதமர் அமாதிலா அவர்களிடம் வினவியபொழுது அவர், “எங்கள் கவனம் நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதில் உள்ளது; யார் மீது பழி சுமத்தலாம் என்பதில் அல்ல. ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பதற்கென செலவிடப்படும் பணம், அதற்கு நேர் மாறாக, உக்ரைனில், ஆப்பிரிக்காவில், ஆசியாவில், இன்ன பிற பகுதிகளில், ஏன் ஐரோப்பாவிலேயே கூட, பல்வேறு இன்னல்களையும், இடர்களையும் அனுபவித்து வரும் மக்களின் துயர் துடைத்து அவர்களை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்வதற்கு, அவர்தம் உண்மையான வளர்ச்சிக்குப் பயன்படும் வண்ணம் சிறப்பான வகையில் செலவிடப்படுவதே நன்று” என தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்திட, 1955ஆம் வருடத்திய பாண்டுங் மாநாட்டில் வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடியொற்றி, சீனா முன்வைத்துள்ள திட்ட வரைபடம், இவ்வாறு தென்திசை நாடுகளின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.
ஐரோப்பாவின் குரல்
ஆனால் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களோ, நமீபிய பிரதமர் அமாதிலா போன்றவர்களின் அக்கறை நிறைந்த உரைகளை கிஞ்சிற்றும் செவிமடுக்காது, கேளாக் காதினராகவே இருந்து வருகின்றனர். ஐரோப்பிய யூனியனின் அயலுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான உயர்நிலைப் பிரதிநிதியான ஜோசப் போரெல், சென்ற அக்டோபர் 2022இல், தனக்குத்தானே குழிபறித்துக் கொள்ளும் விதமாகக் கூறிய இழிவான ஒரு கருத்து, கடும் விமர்சனத்துக்கு ஆளானது. “ஐரோப்பா ஒரு அழகான பூந்தோட்டம்; பூமியின் ஏனைய பகுதியோ வெறும் காடு; காடுகள் பூந்தோட்டத்தைத் தாக்கி அழிக்க முற்படலாம்… ஆகவே ஐரோப்பியர்கள், பிற நாட்டினரிடமிருந்து எதிர்ப்புகள் எழாத வண்ணம் சாமர்த்தியமாக அவர்களுடன் உறவாட வேண்டும்; இல்லாவிடின், ஐரோப்பா நீங்கலான ஏனைய உலகம் நம் மீது தாக்குதல் தொடுக்கக் கூடும்” என்பது சர்ச்சைக்கு வழிவகுத்த ஜோசப் போரெல்லின் கருத்து.
அக்டோபர் 2022இல் அவ்வாறு பேசிய ஸ்பெயின் நாட்டவரான போரெல், சமீபத்தில், பிப்ரவரி 2023இல் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில், தனது குரலை மாற்றிக்கொண்டு, பிற நாடுகள் குறித்தான தனது கருத்தை வேறொரு கோணத்தில் முன்வைத்தார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் உணர்வுகளோடு தானும் ஒத்திசைவு கொண்டிருப்பதாகக் கூறிய போரெல், தென்திசை நாடுகளுடனான ஐரோப்பாவின் நல்லுறவைப் ‘பாதுகாப்பதும்‘, நம்பிக்கை மற்றும் நல்லெண்ண அடிப்படையில் ‘பரஸ்பர ஒத்துழைப்பை மறு கட்டுமானம் செய்வதும்‘ அவசியம் என்ற மேக்ரானின் கருத்தைத் தானும் பகிர்ந்து கொள்வதாகவும் தற்போது தெரிவித்துள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று வரும்போது, ஐரோப்பிய நாடுகள் இரட்டை நிலை எடுப்பதாக, தெற்கு நாடுகள் குற்றச்சாட்டு முன்வைப்பதைச் சுட்டிக் காட்டிய போரெல், அத்தகைய கருத்தோட்டம் அகற்றப்படும் வகையில் ஐரோப்பாவின் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாடுகளுக்கிடையே முறிவுகள்
மேலைநாடுகளைச் சேர்ந்த முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் வணிகக் குழுமங்களின் சமீபத்திய பல அறிக்கைகள், போரெல் தெரிவித்துள்ள கவலை தோய்ந்த அக்கறையை அப்படியே எடுத்துரைக்கின்றன. உலகின் முன்னணி நிதி மேலாண்மை மற்றும் ஆலோசனை நிறுவனங்களுள் ஒன்றான பிளாக்ராக்-இன் குறிப்புரை “போட்டி மனப்பான்மை மற்றும் மோதல் போக்குடன் அணிசேர்ந்துள்ள நாடுகளால் சிதைத்து துண்டாடப்பட்டுள்ள ஒரு உலகத்துக்குள் நாம் நுழைந்துகொண்டு இருக்கிறோம்” என்று இன்றைய சூழலை விவரிக்கிறது. மற்றொரு முன்னணி நிறுவனமான கிரெடிட் சூசே, “உலக அரங்கில் நாடுகளிடையே மிகவும் ஆழமான, நீடித்து நிலைபெற்றுவிட்ட முறிவுகளும், முரண்பாடுகளும் பெருமளவில் மேலெழுந்து வந்து தலைகாட்டத் துவங்கியுள்ளன” என்று தனது மதிப்பீட்டைத் தெரிவித்துள்ளது.
நாடுகளிடையே நிலவும் இத்தகு முறிவுகள் பற்றிய தனது ஆய்வுகளையும், கணிப்புகளையும் மிகவும் துல்லியமாக விரிவான முறையில் பின்வருமாறு விளக்கியுள்ளது கிரெடிட் சூசே நிறுவனம்: “பூமிப்பந்தின் மேற்குப்பகுதியிலுள்ள வளர்ந்த நாடுகள் மற்றும் அவற்றின் கூட்டாளிகள், அடிப்படைத் திறன்வாய்ந்த நலன்களைப் பேணுவதில், கீழை நாடுகளிடமிருந்து (சீனா, ரஷ்யா மற்றும் அதன் கூட்டாளிகள்) வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டன. அதே வேளையில், புவியின் தெற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தென் திசை நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் ஏனைய வளரும் நாடுகள், தங்களின் பிரத்யேக நலன்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தங்களது அணி சேர்க்கையை மறுசீரமைப்பு செய்து வருகின்றன“ என கிரெடிட் சூசே நிறுவனம் விவரித்துள்ளது.
தென்திசை நாடுகளான இந்த வளரும் நாடுகள் புதிய மறுசீரமைப்பின் வாயிலாகப் புத்துணர்வு பெற்றுத் திகழ்கின்றன. அதன் வெளிப்பாடாகவே, “வாஷிங்டனிலிருந்து வரும் நெருக்குதல்களுக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் நாங்கள் அஞ்சிடோம்; அடிபணிய மாட்டோம்”என்பதை ஓங்கி ஒலித்துள்ளன.
தமிழில்: கடம்பவன மன்னன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
