விடுதலைப் போரில் தமிழக வணிகர்கள்
பேரா. கா. அ. மணிக்குமார்
ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்க நிலைக்குக் காலனி ஆதிக்கச் சுரண்டல் கொள்கையே காரணம் என்பதை முதலில் சுட்டிக்காட்டியவர்கள் தாதாபாய் நௌரோஜி, ரொமேஷ் சந்திர தத், எம்.ஜி.ரானடே, கோபாலகிருஷ்ண கோகலே போன்ற அறிஞர்களே. இந்தியத் தொழில் அழிவிற்கு அந்நியர் ஆட்சிதான் காரணம் என்பதை அவர்கள் ஆதாரங்களுடன் நிறுவிக்காட்டினர். நாட்டின் பொருளாதாரச் சீரழிவிற்கு ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியை இணைத்துப் பார்க்கக் கூடிய பார்வை இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை காணப்படவில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, அதன் மூலம் சலுகைகள் பெறவே அவர்கள் விரும்பினர். ஆனால். பரவி வந்த மேற்கத்தியக் கல்விமுறையினாலும், வளர்ந்து வந்த இந்திய தேசியத்தாலும் உருவான புதிய கருத்தோட்டம் ஆங்கிலேயர் ஆட்சியின் சுரண்டல் தன்மையை இந்நடுத்தர வர்க்கத்தினர் விரைவில் புரிந்துகொள்ள உதவியது. அதன்பின் அவர்கள் தங்கள் வர்க்க நலனுக்கு எதிரான ஏகாதிபத்தியக் கொள்கைகளை எதிர்க்கத் தொடங்கினர். காலப்போக்கில் இந்திய தேசியக் காங்கிரஸோடு இணைந்து அந்நியராட்சியை அகற்றுவதற்கான போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டம் சட்டதிட்டத்திற்கு உட்பட்டதாக இருந்ததெனினும், இந்திய தேசியக் காங்கிரசின் கரங்களை வலுப்படுத்துவதாகவே அமைந்தது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், சென்னை மாகாணம், இதர மாகாணங்களோடு ஒப்பிடும்போது, தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிக் காணப்பட்டது. எவ்விதத் தாதுவளமும் இல்லாத சூழ்நிலையில் பெரும் தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பில்லாதிருந்தது. ஜின்னிங் மில், ஆயில் மில், அரிசி மில் போன்றவையே பெருமையாகச் சொல்லப்பட்ட தொழிற்சாலைகளாயிருந்தன. எண்ணெய் வித்துகள், பதனிடப்பட்ட தோல் மற்றும் பருத்தி போன்ற கச்சாப்பொருள்களுக்கு உலகளாவிய சந்தை இருந்ததால் அவை அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டன. ஜவுளி ஆலைகள் ஓரளவிற்குப் பரவலாகக் காணப்பட்டாலும் (பெரும்பாலானவ ஐரோப்பியர்களுக்குச் சொந்தமானவை) மற்ற மாகாணங்களில் இருந்ததைவிட அவையும் இங்கு குறைவாகவே இருந்தன. 1909ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட புள்ளியியல் விவரப்படி ஜவுளி ஆலைகள் பம்பாயில் 538, மத்திய மாகாணங்களில் 459, வங்காளத்தில் 297, ஐக்கிய மாகாணங்களில் 203 என இருந்தபொழுது சென்னை மாகாணத்தில் அவை 82 மட்டுமே இருந்தன. மேலே சொன்ன ஜவுளித் தொழிலில் மட்டுமின்றித் தோட்டத்தொழில், ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரம், வங்கித் தொழில் போன்றவற்றிலும் ஐரோப்பியர்களே ஆதிக்கம் செலுத்தியதால், இந்தியர்கள் தொழில் துறைகளுக்குள் நுழைவது இயலாததாயிருந்தது. உள்நாட்டுத் தொழில்வளர்ச்சி இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மட்டுமின்றி ஏற்றுமதி-
இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஐரோப்பியர் நலனையும் பாதிக்கும் எனக் காலனி அரசு கருதியதால் தொழில் முன்னேற்ற முயற்சிகளைச் சிறிதும் அனுமதிக்கவில்லை. சென்னை மாகாணத்தின் ஆளுநர் பென்ட்லாந்து பிரபு 1917இல் மாண்டேகுவிடம் கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தைகள் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கக் கொள்கையைத் தெளிவாக உணர்த்துகின்றன. நாம் இம்மக்களுடன் அரசியல் பேசக் கூடாது. ஆனால் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும்; அவர்களை அரசியலில் உற்சாகப்படுத்த வேண்டும். சமூகச் சீர்திருத்தம், தொழில் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி பற்றி அவர்களிடம் கலந்துரையாடல் வேண்டும். ஆனால் அது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.
சென்னையில் ஐரோப்பிய வர்த்தகர்களும், தொழில் அதிபர்களும் தங்கள் நலனை பாதுகாக்கச் சென்னை வர்த்தக சபையை (Madras Chamber of Commerce) 1836ஆம் ஆண்டே நிறுவியிருந்தனர். 1919 வரை இதில் இந்தியர் எவரும் உறுப்பினராக அனுமதிக்கப்படவில்லை. 1919இல் உறுப்பினரான முதல் இந்தியர் சர். அண்ணாமலை செட்டியார் ஆவார். சென்னை சட்டமன்றத்தில் தேசியவாதிகள் தொழில்வளர்ச்சி நடவடிக்கை எடுக்குமாறு அரசை நிர்ப்பந்தப்படுத்திய போதெல்லாம் அதற்கு எதிராக வாதிடுவதையும் அறிக்கை விடுவதையுமே இது வாடிக்கையாகக் கொண்டிருந்தது.
இச்சென்னை வர்த்தக சபை, ஐரோப்பிய வர்த்தகர்களின் எதிர்மாறான போக்கைத் தடுக்கவும், இந்திய வர்த்தகர்களின் நலனைப் பாதுகாக்கவும் ஓர் அமைப்பு தேவைப்பட்டபோதும், அதற்கான முயற்சிகள் வெகுகாலம் எடுக்கப்படவில்லை. 1906இல் உருவான இந்தியச் சுதேசி இயக்கம் இந்நிலை மாற உதவியது. சுதேசி முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கவும், இந்திய வர்த்தகர்களின் நலனைப் பாதுகாக்கவும், பம்பாயில் இந்திய (Indian Merchant Chamber) வர்த்தக சபை 1907இல் நிறுவப்பட்டது. அதைப் பின்பற்றி 1909இல் தென் இந்திய வர்த்தக (Southern India Chamber of Commerce) சபை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அது 1910ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஜின்னிங் பேக்டரி, எண்ணெய் வித்து, தோல், பருத்தி போன்ற கச்சாப்பொருள் வியாபாரிகள், கைத்தறி நெசவு ஆலை உரிமையாளர்கள், வட்டிக் கடைக்காரர்கள் இதில் உறுப்பினராயினர். இந்திய ஜவுளி ஆலை அதிபர்கள் இதில் இணையவில்லை. அவர்கள் தென் இந்திய ஜவுளி ஆலை உரிமையாளர் சங்கத்தை அதே ஆண்டு தனியாக நிறுவினர்.
தென் இந்திய வர்த்தக சபையின் நிறுவனத் தலைவர் பி.தியாகராய செட்டியார். அவர் நீதிக்கட்சி ஸ்தாபகர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமானவராகக் கருதப்பட்டாலும், வர்த்தக – தொழில் விவகாரங்களில் அரசுடன் முரண்பாடு கொண்டவராகவும், தென் இந்திய வர்த்தக சபையைத் தலைமைப் பொறுப்பேற்று நிர்வகித்த 12 ஆண்டுகளிலும் ஆங்கிலேய அரசின் வர்த்தகக் கொள்கையை விமர்சித்தது மட்டுமின்றி ஒரு மாற்றுக் கொள்கையைப் பரிந்துரைத்தவராகவும் விளங்கினார். சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தமையால் அவர் தலைமை ஏற்று நடத்திய வர்த்தக சபைக்கு ஓர் அந்தஸ்தையும் வழங்கினார். தென் இந்திய வர்த்தக சபை தோற்றுவிக்கப்படும் முன்பு தேசியவாதிகளே மாகாணத்தில் நவீனத் தொழிற்சாலைகள் வளர்வதற்கு அரசு திட்டமிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தனர். தொழில் தொடங்கும் முயற்சிக்கு அரசு ஆதரவு தராததாலும், அதற்கு ஐரோப்பிய வணிகர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு இருந்ததாலும், பணம் படைத்த இந்தியர்கூட தொழில்துறையில் நுழைவதற்கு அஞ்சினர். எனவே அரசே முதலீடு செய்து சில அடிப்படைத் தொழில்களைத் தொடங்க வேண்டும் என தேசியவாதிகள் சட்டமன்றத்தில் வாதாடினர். தேவையான தொழில்நுட்பக்கல்வி அறிவை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்கவும் அவர்கள் அரசை வற்புறுத்தினர். 1895ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று ஏ.சபாபதி முதலியார் இக்கருத்தை வலியுறுத்திச் சட்டமன்றத்தில் பேசியபோது ஆளுநர் கொடுத்த பதில்: தொழிற்சாலைகள் வருவதற்குள் தொழில்நுட்பக்கல்வி பற்றிப் பேசுவது அபத்தம் (absurd). இருப்பினும் தேசியவாதிகள் பிரச்சினையை விடுவதாக இல்லை. 1903ஆம்ஆண்டு ஜூன் 13ஆம் நாள் பி. ரத்னசபாபதி முதலியார் நிதி அறிக்கையின்மீது பேசும்பொழுது “இந்தியா ஒரு முழுமையான விவசாய நாடாக மாறிவருவதால் மக்கள் வறுமையில் வாடுவதாகவும், அதற்கு ஒரே தீர்வு,நாடு தொழில் மயமாதலே” எனவும் கருத்துத் தெரிவித்தார். தொழில்கள் துவங்குவதற்கு அரசின் நிதி உதவி இல்லாமல் பொருளாதார மேம்பாட்டை நாடு அடைய முடியாது எனவும் எடுத்துரைத்தார். இவ்வாறு தேசியவாதிகள் சட்டமன்றத்தில் தொடர்ந்து வாதாடியதன் பயன் தொழில்துறை ஒன்று 1905இல் அரசால் ஏற்படுத்தப்பட்டது. மாகாணத்தில் இருந்த தொழில் நிறுவனங்கள் பற்றி கணக்கெடுக்கவும், புதுத்தொழில்கள் துவங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயவும் இத்தொழில் துறையை அரசு உருவாக்கியது. இதன் தலைவராக 1906இல் ஆல்பிரட் சேட்டர்டன் என்பவர் நியமிக்கப்பட்டார். அரசின் நிதி உதவியுடன் முன்னோடித் தொழில்கள் தொடங்கிடும் திட்டம் ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்திய பெருமை இவரைச் சாரும். இவர் நிறுவிய அலுமினியத்
தொழிற்சாலை, குரோம் தோல் பதனிடும் தொழிற்சாலை இலாபகரமாகச்
செயல்பட்டன. சேட்டர்டனின் முயற்சியின் தொடர் நடவடிக்கையாக 1908ஆம் ஆண்டு உதகமண்டலத்தில் ஒரு தொழில்வளர்ச்சி மாநாட்டை அரசே நடத்தியது. மாகாணத்தின் தொழில் வளர்ச்சிக்கு அரசு காட்டும் ஆர்வத்தைக் கண்டு பொறுக்காத சென்னை வர்த்தக சபை, இம்மாநாட்டில் அரசு அதிகாரிகளின் போக்கைக் கடுமையாகச் சாடியது- தொழில் வளர்ச்சியில் அரசு பங்கேற்பதுபோல் அனைத்து நடவடிக்கைகளும் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியது. குறிப்பாக அரசின் தோல் பதனிடும் தொழிற்சாலை பற்றி சிம்சன் பேசினார்: தோல் பதனிடும் ஆலையை நிறுவியதன் மூலம் அரசு ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகளுடன் போட்டியிட முனைகிறது. சென்னையில் இல்லாவிட்டாலும் போட்டி கான்பூரில் நடைபெறும். தோல் பதனிடும் முறையை முன்னேற்ற விரும்பினால் அதிகாரிகளின் முயற்சியைச் சோதனைச் சாலையில் ஆராய்ச்சி நடத்துவதற்கும், தொழில்நுட்பப் பயிற்சி வழங்குவதற்கும் பயன்படுத்தலாம். சென்னை வர்த்தக சபையின் எதிர்ப்பையும் மீறி ஒரு புதிய தொழில் வளர்ச்சித் திட்டத்திற்கான தீர்மானம் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், எதிர்ப்பை சென்னை வர்த்தக சபை காலனி அரசுச் செயலர் மார்லிக்கு உடனடியாகத் தெரியப்படுத்தியது. மார்லி ஐரோப்பிய வர்த்தகர்களின் நலனுக்கு ஆதரவாக நிலை எடுத்தது மட்டுமின்றி, புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த தொழில்துறையை மூடுமாறும் உத்தரவிட்டார். அதன்படி 1911 ஜனவரி 1 முதல் தொழில்துறை மூடப்பட்டது. இவ்விவகாரம் சென்னைச் சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. காலனி அரசுச் செயலரின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரும் ஒரு தீர்மானத்தை வி.சேசகிரி ஐயர் முன் மொழிந்தார். பி. தியாகராய செட்டியார் அதை வழிமொழிந்தார். ஐரோப்பிய வணிகர்களைச் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய மூவர் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதிகாரிகள் நடுநிலை வகித்ததால் இத்தீர்மானம் நிறைவேறியது. எனினும் காலனி அரசுச் செயலரின் முடிவில் மாற்றம் ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு உலகப்போர் துவங்கியது. இந்தியர்களின் ஆதரவு ஆங்கிலேயர் அரசுக்குத் தேவைப்பட்டது. இச்சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்த விரும்பிய பி. தியாகராய செட்டியார் 10 ஆவது அகில இந்தியத் தொழில் மாநாட்டைச் சென்னையில் நடத்தும் பொறுப்பைத் தென் இந்திய வர்த்தக சபை ஏற்றிடச் செய்தார். மாநாடு 1914 டிசம்பர் 26 அன்று நடைபெற்றது. தியாகராய செட்டியார் தனது வரவேற்புரையில் இங்கிலாந்தின் போர் முயற்சிக்கு இந்தியர்கள் காட்டிவரும் ஆதரவைச் சுட்டிக்காட்டி, அதற்குக் கைமாறாக, மூடப்பட்ட தொழில்துறையை மீண்டும் சென்னையில் துவக்க வேண்டும் என வேண்டினார். இம்மாநாட்டிற்குமுன் சட்டமன்றத்திலும் இதுபற்றி கே.ஆர்.வி. கிருஷ்ணராவ் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்திருந்தது. எனவே வேறுவழியின்றி மீண்டும் தொழிற்துறையை ஏற்படுத்தச் சென்னை மாகாண அரசிற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், உற்பத்தியாளர்களுக்குத் தேவையான விவரங்களைச் சேகரித்து விநியோகிக்கும் பணியை மட்டும் இத்துறை செய்ய வேண்டும் எனப் பணிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து நாட்டின் தொழில் வளர்ச்சி பற்றி அறிவதற்காகத் தென் இந்தியாவிற்கு வருகை புரிந்த இந்தியத் தொழில் வளர்ச்சிக் குழு (Indian Industrial Commission), மாகாணத்தில் தொழில் வளர்ச்சிக்கான அனுகூலங்கள் பற்றிச் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தது. இதன் எதிரொலியாக மீண்டும் சட்டமன்றத்தில் தொழில் வளர்ச்சிக்கான அரசு நடவடிக்கையைப் பற்றி சே.ராம அய்யங்கார் தீர்மானம் கொண்டு வந்தபோது அரசு எவ்விதத் தொழிற்கொள்கையும் கடைப்பிடிக்க முடியாது என அரசின் சார்பாகத் திட்டவட்டமாகக் கூறப்பட்டது. அன்று நிலவிய மாகாண நிலை குறித்து இந்தியத் தொழில்வளர்ச்சிக்குழு (1916-18) கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டது. அரைகுறைத் தொழில் நுட்பக்கல்வி, தொழில் தொடர்பான விவரங்களைச் சேகரித்து வழங்குதல் போன்றவையே அரசின் நடவடிக்கைகளாக இருந்தன. இதர நடவடிக்கைகள் எல்லாம் தனிப்பட்ட சில அதிகாரிகள் எடுத்த முயற்சியினாலேயே அன்றி அரசின் பொதுவான கொள்கையினால் அல்ல.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குமேல் சட்டமன்றத்தில் வாதாடியும், வர்த்தக சபைகளின் மூலம் விண்ணப்பங்கள் கொடுத்தும் எவ்வித பலனும் கிட்டாத சூழ்நிலையில், இந்தியர்கள் அரசியல் அதிகாரத்தை முழுமையாகப் பெறும் நாளே பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் நாள் என்ற முடிவுக்குத் தேசியவாதிகள் வந்தனர். எனவே அடுத்த தடவை அவர்கள் சட்டமன்றத்தில் பேசும்பொழுது அரசின் தொழில் கொள்கை பற்றி விவாதிக்கவில்லை. மாறாக, தொழிற்கொள்கை பற்றி முடிவு எடுக்கும் அதிகாரத்தைப் புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்திய அமைச்சர்களுக்கு வழங்கிடக் கோரிக்கை விடுத்தனர். 1916க்குப் பிறகு தொடர்ந்து நிகழ்ந்த பல தேசிய இயக்கங்கள் குறிப்பாக தன்னாட்சி இயக்கம் (Home Rule Movement) அந்திய ஆட்சியரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தின. பெரு வணிகர்களும், தொழிலதிபர்களும் காங்கிரஸ் இயக்கங்களில் சேருவதைத் தடுப்பதற்கான யுக்திகளைக் கையாள அரசு முடிவு செய்தது. இதன் விளைவாக மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் மாகாணங்களில் அறிமுகம் செய்யப்பட்ட இரட்டை ஆட்சியில் தொழில்துறை அமைச்சகத்தை ஒரு சில இந்தியர்களிடம் ஒப்படைக்க வகை செய்யும் திருத்தம் புதிய அரசியல் அமைப்பில் கொண்டுவரப்பட்டது. புதிய அரசியல் அமைப்பு முறைக்குக் காங்கிரஸ் ஒத்துழைப்புத் தர மறுத்ததால் சென்னையில் நீதிக்கட்சியின் துணையுடன் அது செயல்படுத்தப்பட்டது. நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான கே.வி.ரெட்டி நாயுடுவிடம் வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில் தொழிற்துறை ஒப்படைக்கப்பட்டது.
முதலாளித்துவ வர்க்கத்தைத் தன் பக்கம் இழுக்க அரசு எடுத்த மற்றொரு நடவடிக்கை, 1921 மார்ச் மாதம் நிதி விவகாரங்களில் இந்திய அரசுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்படும் என்ற காலனி அரசுச் செயலரின் அறிவிப்பாகும். இவ்வறிவிப்பைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நிதிக்குழு (Fiscal Commission) ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிதிக்குழு குறிப்பிட்ட சில தொழில்களுக்குப் பாதுகாப்பளிக்கும் கொள்கையைப் பரிந்துரை செய்தது. அதன்படி 1963ஆம் ஆண்டு எஃகு, பருத்தித்துணி, பட்டு நூல், மிளகு, சர்க்கரை, வெள்ளி நூல் மற்றும் ஒயர், மாக்னீசியம் குளோரைடு, கனரக வேதிப் பொருட்கள் மற்றும் தீப்பெட்டி போன்ற 9 தொழில்களுக்கு முழுப்பாதுகாப்பு வழங்கிட அரசு முடிவு செய்தது. அரசின் இம்முடிவு காகிதத்தில் இருந்ததே தவிர நடைமுறைக்கு முழுமையாக வரவில்லை என்பதை பின்னால் நடந்த நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன. சென்னையில் இரட்டை ஆட்சியில் இந்தியர் ஒருவரிடம் தொழில்துறை ஒப்படைக்கப்பட்டதால் வர்த்தகச் சமுதாயத்தின் மத்தியில் ஏராளமான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டன. 1921இல் சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நீதிக்கட்சி அமைச்சரவை அதுவரை சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எழுப்பப்பட்டு வந்த தொழில் வளர்ச்சிக்கான அரசு நிதி உதவி என்ற பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றது. உடனடியாக மசோதா ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி இயந்திரம் வாங்குவதற்கும், பின்தங்கிய பகுதிகளில் துவக்கப்படும் சில தொழில்களுக்கு நிலம் மற்றும் கச்சாப் பொருள்கள் வாங்குவதற்கும் அரசின் நிதி உதவி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. அரசின் நிதிமசோதாவில் செய்யப்படும்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் ஐரோப்பிய வர்த்தகர்களின் பிரதிநிதியான ஏ.எம். மாக்டோகல் என்பவர். மற்றபடி அது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலையும் பெற்று 1923இல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின்கீழ் தொழில் அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை மிகக் குறைவாக இருந்ததால், இச்சட்டத்தின் மூலம் மிகப்பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. 1935 வரை அரசின் நிதி உதவி கேட்டு மொத்தம் 80 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 18 விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்பட்டன. மொத்தம் கடனாக ரூ.8.8 லட்சம் வழங்கப்பட்டது. அரசின் தொழில் வளர்ச்சிக்கான நிதி உதவித் திட்டம் எத்தகைய தாக்கத்தையும் பெரிய அளவில் ஏற்படுத்தவில்லை என்பதை இரட்டை ஆட்சி தொடங்கி ஏழு ஆண்டுகள் கழித்து தொழில் வளர்ச்சி பற்றி மதிப்பீடு செய்த வளர்ச்சித்துறைத் துணை இயக்குநர் அறிக்கையில் இருந்து நாம் அறிய முடிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்கு இத்துறை செய்த சாதனை எனக் குறிப்பிட வேண்டுமென்றால் சோப்புத் தயாரிப்பு, மை உற்பத்தி ஆகிய இரண்டை மட்டுமே குறிப்பிடலாம். கோந்து தயாரிக்கவும், பழங்களைப் பதப்படுத்தவும் செய்த பரிசோதனைகள் தோல்வியடைந்தன. இத்துறை மாகாணத்தில் பெருந்தொழிற்சாலை அமைத்திடவோ அல்லது இருக்கின்ற தொழில்களை விரிவுபடுத்தவோ உதவவில்லை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. மகாத்மா காந்தி தேசிய அரசியலில் நுழைந்தபிறகு காங்கிரசுக்கும், வணிகர்களுக்கும் இடையிலான தொடர்பு மேலும் வலுவடைந்தது. காந்தி முதலாளித்துவ வர்க்கத்தை இந்திய தேசியப் போராட்டத்தில் இணைக்கத் தனிக் கவனம் செலுத்தினார். அவர் திலகர் – சுயராஜ்ய நிதிக்குப் பணம் திரட்ட ஜி.டி.பிர்லா. தக்கூர்தாஸ் போன்றோரைப் பயன்படுத்தினார். சுதந்திரத்தின் பொருள் என்ற அவரது கருத்துக் கோவையில் இரு கருத்துகள்: ஒன்று, இந்திய ஜவுளி ஆலைகளுக்கு வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாப்பு, மற்றொன்று, ரூபாயின் மதிப்பைக் குறைத்தல். இந்திய வர்த்தகர்கள் பல ஆண்டுகளாக நடத்திய பிரச்சாரங்களும், தேசியவாதிகளுடன் அவர்கள் ஏற்படுத்திய தொடர்புகளும் தேசிய அளவிலான ஓர் அமைப்பைத் தங்களுக்கு என உருவாக்கிக்கொள்ள
முடிந்தது. ஐரோப்பிய வர்த்தகர்களுக்கான தேசிய அமைப்பான இந்தியா-சிலோன் வர்த்தக சபைகளின் Associate Chamber of Commerce of India and Ceylon-ASSOCHEM 1920இல் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஏழாண்டுகள் கழித்து 1927இல் இந்திய வர்த்தகர்கள் இந்திய வர்த்தக-தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பை (Federation of Chambers of Commerce and Industry – FICCI) ஏற்படுத்தினர் இந்திய வர்த்தக -தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைமையோடு தென் இந்திய வர்த்தக சபை நெருக்கமான உறவை வைத்திருந்தது. கூட்டமைப்பின் முதல் வருடாந்திரக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது மட்டுமின்றி, அதை முன் நின்று நடத்தியவர்கள் தென் இந்திய வர்த்தக சபையினர். மேலும் தென் இந்திய வர்த்தக சபையின் முக்கியத் தலைவர்களான ஜமால் முகமது சேட்டும், ராஜா சர்.முத்தையா செட்டியாரும் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள். தென் இந்திய வர்த்தக சபையின் நிலை பல பிரச்சினைகளில் 1927க்குப்பின் தேசிய வாதிகளின் கருத்துக்களையும் இந்திய வர்த்தக-தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் நிலையையும் ஒட்டியே அமைந்தது. ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்கு எதிராக அது எடுத்த பல நிலைப்பாடுகள் அதன் அந்தஸ்தை மேலும் உயர்த்தின. எனவே 1928இல் சைமன் குழு வருகையின்போது உறுப்பினர் எண்ணிக்கை 424 ஆக உயர்ந்திருந்தது. இந்தியாவில் பொறுப்புள்ள மக்கள் அரசை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஆங்கிலேய அரசு, லிபரல் கட்சி உறுப்பினர் ஜான் சைமன் தலைமையில் ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க 1927 அக்டோபர் மாதம் முடிவு செய்தது. இந்தியர் எவரும் இக்குழுவில் இடம் பெறாததால் காங்கிரஸ் சைமன் குழுவைப் புறக்கணிப்பது என முடிவு செய்தது. நீதிக் கட்சி சைமன் குழுவைச் சந்தித்து உரையாடுவது என முடிவு செய்தது. ஆனால் தென் இந்திய வர்த்தக சபை காங்கிரஸின் நிலையை ஆதரித்தது. சென்னைக்கு 1929 பிப்ரவரி 18 அன்று சைமன் குழு வருகை தந்தது. சென்னை மாகாண அரசு அதற்கு முன்தினமே பல காங்கிரஸ் தலைவர்களைக் கைது சய்தது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் சென்னையில் தடை செய்யப்பட்டன. இருப்பினும் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது.
தென் இந்திய வர்த்தக சபை அரசின் நடவடிக்கையைக் கண்டித்துத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அத்தீர்மானத்தின் சாராம்சம்: அரசு கையாண்ட குறுகிய கண்ணோட்டம் கொண்ட அடக்குமுறைக் கொள்கை, மாகாணமெங்கிலும் காவலரின் அராஜகம் மற்றும் பத்திரிகைத் தணிக்கை அவசரச் சட்டம் ஆகியவற்றை இச்சபை எதிர்க்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் அதிருப்தியுற்ற மக்களை அமைதிப்படுத்த உதவாது; மாறாக, நிலையை மோசமாக்கும். மக்களின் நியாயமான விழைவுகளை நிறைவேற்றுவதும், பொருளாதார இன்னல்களுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களைவதுமே சரியான அணுகுமுறை ஆகும்.
தென் இந்திய வர்த்தக சபையின் மேற்கூறிய தீர்மானத்தை ஐரோப்பியரின் சென்னை வர்த்தக சபையின் தீர்மானத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது தென் இந்திய வர்த்தக சபையின் நாட்டுப்பற்று நமக்கு தெளிவாகப் புரிகிறது. சைமன் குழு வருகை அன்று நடைபெற்ற கடை அடைப்பைக் கண்டித்துச் சென்னை வர்த்தக சபை தீர்மானம் நிறைவேற்றியது. அதன் சாராம்சம் என்னவென்றால், கடை அடைப்பு பல பகுதிகளில் கலவரங்களை ஏற்படுத்தியதாகவும், அதனால் தனியார் சொத்துக்கும் உயிருக்கும் பேரிழப்பு ஏற்பட்டதாகவும், அதற்கான நஷ்ட ஈட்டை அரசு வழங்க வேண்டும் என்பதாகும். மேலும் இம்மாதிரியான சட்டம் – ஒழுங்குச் சீர்குலைவுகள் நடைபெறாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. 1929இல் பொருளாதாரப் பெருமந்தம் உலகெங்கும் வணிகர்களை வெகுவாகப் பாதித்தது. தேசிய அரசுகள் பெருமந்தத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால், இந்தியாவில் இருந்த ஏகாதிபத்திய அரசு மக்களுக்குச் சாதகமான நடவடிக்கை ஏதும் எடுக்க முன் வரவில்லை. எனவே ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வர்த்தகர்களிடம் 1930களில் மேலும் வளர்ந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை எந்த அளவிற்கு முதலாளி வர்க்கம் உணர்ந்திருந்தது என்பதை இந்திய வர்த்தக சபையின் தலைவர் டேவிட் எஸ்.இருளாக்கர் இலண்டனில் ஆற்றிய உரையிலிருந்து அறியலாம். நாட்டின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அரசு காட்டும் பொறுப்பற்ற மெத்தனப்போக்கு சர்வதேசப் பொருளாதாரச் சீரழிவின் பின்னணியில் நிலைமையை மோசமாக்கி இதுவரை சாதுவாக, பொறுமையான, அல்லல்பட்டுக்கொண்டிருந்த மக்களை நேரடி நடவடிக்கைகளில் இறங்க வைத்திருப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது? இந்த இழிநிலைக்குத் தீர்வு தேசியக் கண்ணோட்டம் கொண்ட, அந்நிய நலன்களுக்கு அடிமைப்படாத, மக்களுக்குப் பொறுப்புள்ள ஓர் அரசிடம் இருந்துதான் கிடைக்கும். மற்றொரு சந்தர்ப்பத்தில் ஜி.டி.பிர்லா இந்திய வர்த்தகத் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் நிலையை விளக்கிப் பேசியபோது வர்த்தர்களின் நிலை குறிந்தது ஒளிவு மறைவின்றித் தெரிவித்தார்: நம் நாட்டில் தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில் அரசை எங்களுடைய கருத்துக்கு மாற்றுவது என்பது முடியாத காரியம்…
ஒரே தீர்வு.. இந்திய வணிகர்கள் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடுபவர்களின் கரங்களை வலுப்படுத்துவதில்தான் உள்ளது. 1930 ஏப்ரல் மாதம் இந்திய தேசியக் காங்கிரஸ் அந்நிய நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் இயக்கத்தை அறிவித்தது. தென் இந்திய வர்த்தக சபை இவ்வியக்கத்தில் முழுமையாக ஈடுபட்டது. பருத்தி உற்பத்திப் பொருள் வியாபாரிகள் சங்கத்திற்கு ஒரு சுற்றறிக்கை மூலம் வெளிநாட்டுத் துணிகளை வாங்குவதையும் விற்பதையும் குறைத்து உள்நாட்டுத் துணி விற்பனையை ஊக்குவிக்குமாறு வேண்டியது. பம்பாய் ஆலை அதிபர்கள்
சங்கத்திற்குச் சென்னையில் பருத்தி உற்பத்திப் பொருட்கள் சந்தை நிலவரம் குறித்து இரு வாரங்களுக்கு ஒருமுறை தகவல் கொடுத்து இந்தியர் ஆலைகளில் தயாரிக்கப்பட்ட ஜவுளி விற்பனையை அதிகரிக்குமாறு வேண்டியது. அந்நிய நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் இயக்கம் உள்நாட்டு வர்த்தகத்தையும் தொழில்களையும் பயன்பெறச் செய்தது. அதே நேரத்தில் ஐரோப்பிய வியாபாரிகளை வெகுவாகப் பாதித்தது.
சென்னை வர்த்தக சபையின் தலைவர் மாகாண அரசின் தலைமைச் செயலருக்கு இது குறித்து எழுதிய கடிதத்தில் இருந்து இதை உணர முடிகிறது. எதிர்காலத்தில் காந்தியுடன் ஏற்படும் எந்த உடன்பாட்டிற்கும் அந்நியப்பொருள் புறக்கணிக்கும் இயக்கத்தைக் கைவிடுவதை ஒரு நிபந்தனையாக்க வேண்டும் என்ற கருத்தை மாகாண அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என அக்கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தப்படி சட்டமறுப்பு இயக்கத்தோடு அந்நியப்பொருள் புறக்கணிப்பு இயக்கமும் விலக்கிச் கொள்ளப்பட்டாலும் அப்போது உருவாக்கப்பட்டிருந்த சுதேசி ஆர்வம் மாகாணத்தின் தொழில்கள் வளர்வதற்கு, குறிப்பாக ஜவுளித் தொழில் பெருகுவதற்கு வழிவகுத்தது. மாகாணம் முழுமைக்கும் 1929இல் 19 நூற்கும் நெசவு ஆலைகள் இருந்தன. ஆனால் 1937இல் அது 47 ஆலைகளாக உயர்ந்தன; கோயம்புத்துர் பகுதிகளில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஆலைகள் தோன்றின. இந்த ஆண்டுகளில் கிராமப்புறங்களில் எண்ணெய் ஆலைகள், அரிசி ஆலைகள் மற்றும் விசைப்பம்பு உற்பத்தி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் தோன்றின. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நிலவிய அரசியல் சூழல் காரணமாக அங்கு முதலீடு செய்திருந்த பணத்தைத் திரும்பப் பெற்றுத் தாயகத்தின் தொழில் வளர்ச்சிக்கு நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரிதும் உதவினர்.
அந்நியப் பொருள் புறக்கணிப்பு இயக்கத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் வட்டமேஜை மாநாட்டையும் புறக்கணிக்க முடிவு செய்தது. காங்கிரஸ் எடுத்த முடிவை ஆதரித்து இந்திய வர்த்தகத் தொழில் நிறுவனக் கூட்டமைப்பும் வட்ட மேஜை மாநாட்டில் வர்த்தக சபைகளின் உறுப்பினர்கள் பிரதிநிதிகளாகவோ அல்லது தனிநபர்களாகவோ கலந்துகொள்வது இல்லை என முடிவு செய்தது. இம்முடிவைத் தென் இந்திய வர்த்தக சபை ஆதரித்தது மட்டுமின்றி, அதை அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக் கூட்டமைப்பின் முடிவை அமல்படுத்த ஒத்துழைப்பு தருமாறு வேண்டியது.
பொருளாதாரப் பெருமந்தத்தினால் அரசுக்கு ஏற்பட்ட வருமானப் பற்றாக்குறையை ஈடுகட்ட காலனி அரசு 1931ஆம் ஆண்டு நிதி அறிக்கை சமர்ப்பித்தபோது விதித்த வரிகள் மட்டுமின்றி, மற்றொரு துணைப் பண மசோதா மூலமாகவும், வருமான வரி, தபால் வரி, விற்பனை வரி மற்றும் சுங்க வரி ஆகியவற்றை உயர்த்தியது. தென் இந்திய வர்த்தக சபை இவ்வரிச் சுமையைக் கடுமையாக எதிர்த்தது. ஒரு தீர்மானத்தில் அது தனது அதிருப்தியை அரசுக்குத் தெரிவித்தது மட்டுமின்றி, நாட்டின் வர்த்தகம் தொழில் மீண்டும் சீரடைய இவ்வரி தடையாக அமையும் என்ற கருத்தையும் தெரிவித்தது.
பொருளாதாரச் சீரழிவில் இருந்த இங்கிலாந்தைக் காக்க ஆங்கிலேய அரசு 1931 செப்டம்பரில் கோல்டு ஸ்டாண்டர்டு திட்டத்தைக் கைவிட்டது. அதைத்தொடர்ந்து அன்றிருந்த நாணய விகிதத்தின் அடிப்படையில் ரூபாயை ஸ்டெர்லிங்குடன் இணைத்தது, 1927ஆம் ஆண்டு நாணய விகிதத்தை நிர்ணயிக்கும் பொழுது ரூபாய் அதிகமாக மதிப்பிடப்பட்டிருந்தது. 1 ரூபாய்க்கு 1 ஷில்லிங் 4 பென்ஸ் என நிர்ணயிக்க வேண்டிய நாணய விகிதத்தை 1 ஷில்லிங் 6 பென்ஸ் என அரசு நிர்ணயித்திருந்தது. இங்கிலாந்து கோல்டு ஸ்டாண்டர்டு திட்டத்தைக் கைவிட்டதால் இந்தியாவில் ஆங்கிலேயர் மூலதனம் பாதிக்கப்படக்கூடாது ன்பதற்காகவே அதிகமாக மதிப்பிடப்பட்டிருந்த நாணய விகிதத்தில் ரூபாய் ஸ்டெர்லிங்குடன் இணைக்கப்பட்டது எனத் தேசியவாதிகள் குற்றம் சாட்டினர். செயற்கையாக ரூபாயின் மதிப்பை உயர்த்தியதால் இறக்குமதிப் பொருள்கள் விலை குறையவும் ஏற்றுமதிப் பொருள்கள் விலை உயரவும் செய்யும் என்றும், இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும் தென் இந்திய வர்த்தக சபை வாதிட்டது. அதன் தலைவர் ஜமால் முகமது சேட் அரசின் நாணய மாற்றுக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்துப் பல பத்திரிகைகளில் எழுதினார். அவர் எழுதியவை பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தது.
பம்பாயில் இந்திய வர்த்தகர் சபை ரூபாயின் மதிப்பை அரசு குறைத்திடத் தேவையான மக்கள் ஆதரவைத் திரட்டிட இந்திய நாணயச் சங்கம் அமைத்தனர். தென் இந்திய வர்த்தக சபை ஒரு நாணயச் சங்கத்தைச் சென்னையில் ஏற்படுத்தியது. 1933 நவம்பரில் அரசின் நாணய மாற்றுக் கொள்கையைக் கண்டித்திட ஓர் அரங்கக் கூட்டத்தை கோகலே அரங்கில் நடத்தினர். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னையைச் சார்ந்த அனந்தசயனம் அய்யங்கார் மத்திய சட்டசபையில் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தை 1935 அக்டோபர் 8ஆம் நாள் கொண்டுவந்தார்.
நீண்ட விவாதத்திற்குப் பிறகு தீர்மானம் வாக்குக்கு விடப்பட்டது. தீர்மானத்தை எதிர்த்தும் ஆதரித்தும் தலா 52 வாக்குகள் விழுந்ததால் சபாநாயகர் சர்.அப்துர் ரஹீம் தனது வாக்கை அரசுக்குச் சாதகமாக அளித்துத் தீர்மானத்தைத் தோற்கடித்தார். தீர்மானம் தோற்றாலும் காங்கிரசுக்கும் வணிகர் சங்கங்களுக்கும் இடையே ஆன உறவு மேலும் வலுப்பெற்றது.
1932ஆம் ஆண்டு கனடாவில் ஒட்டாவா நகரில் பிரிட்டிஷ் பேரரசு மாநாடு நடைபெற்றது. ஏகாதிபத்தியப் பொருளாதார மாநாடு என அது அழைக்கப்பட்டது. இம்மாநாட்டின் மூலம் ஏராளமான சலுகைகளை இந்திய வணிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மாநாட்டின் முடிவுகள் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தன. காலனி நாடுகளுக்குச் சலுகைகள் வழங்குவதற்குப் பதிலாக, தன் நாட்டின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்கும் வர்த்தக உடன்பாடு ஒன்றை அம்மாநாட்டில் பிரிட்டன் செய்துகொண்டது. ஒப்பந்தத்தின்படி பிரிட்டிஷ் பேரரசைச் சாராத நாடுகளில் உற்பத்திப் பொருட்களைவிட இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கும் பொருள்களுக்கு முன்னுரிமை வழங்கிட இந்தியப் பிரதிநிதிகள் ஒப்புக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஒட்டாவா ஒப்பந்தம் தராசை இந்தியாவிற்கு எதிராகச் சாய்த்துவிட்டது என்றும், இதனால் இந்தியா என்றென்றும் இங்கிலாந்தைச் சார்ந்திருக்கும் இயலாமை நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தென் இந்திய வர்த்தக சபை குறை கூறியது.
இந்திய சட்டசபையின் ஒப்புதல் ஒட்டாவா ஒப்பந்தத்திற்குத் தேவைப்படவில்லை. எனினும் அதை நிராகரிக்கும் தீர்மானம் 1935 ஜனவரி 29 அன்று 8 வாக்குகள் வித்தியாசத்தில் (66-58) நிறைவேறியது. சட்டசபையின் இந்நடவடிக்கை ஒட்டாவா ஒப்பந்தத்தைச் செல்லாதவாறு செய்ய முடியாவிட்டாலும், அரசின் ஏகாதிபத்திய குணாதிசயங்களைப் பொதுமக்களுக்குப் படம் பிடித்துக் காட்ட உதவியது. வர்த்தகப் பொருள்களுக்கு ரயில் கட்டணத்தைக் குறைத்தல், ஜவுளித் தொழிலை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாத்தல், கச்சாத் தோலுக்கும் எண்ணெய் வித்துக்களுக்கும் ஏற்றுமதி வரி விதித்தல், தீப்பெட்டி மீதான விற்பனை வரியை ரத்து செய்தல் போன்ற பல கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி, தென் இந்திய வர்த்தக சபை இக்கால கட்டத்தில் போராடி வந்தது. வியாபாரத்தில் ஒரு வருடம் ஏற்பட்ட நஷ்டத்தைப் பின்வரும் வருடங்களில் கிடைக்கும் இலாபங்களில் கழித்து வருமான வரியைக் கணக்கிடும் முறையை இங்கிலாந்தில் உள்ளதுபோல் இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தென் இந்திய வர்த்தக சபை வேண்டியது. அரசு மேற்கூறிய கோரிக்கைகளை நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறி ஏற்க மறுத்தது. எனினும் தென் இந்திய வர்த்தக சபையின் சார்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வணிகர்களுக்காக குரல் கொடுத்து வந்தனர். எனவே காங்கிரசுக்கும் தென் இந்திய வர்த்தக சபைக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது.
1930களில் பொருளாதாரப் பெருமந்தத்தின் பின்னணியில் மாகாண அரசு பல விசாரணைக் குழுக்களை அமைத்தது. ஐரோப்பியரின் சென்னை வர்த்தக சபைக்கு அவற்றில் எல்லாம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. ஆனால் தென் இந்திய வர்த்தக சபைப் பிரதிநிதிகள் எந்த ஒரு முக்கியமான விசாரணைக் குழுவிலும் அங்கம் வகிக்கவில்லை. இதற்குக் காரணம் நிதி மற்றும் வர்த்தகக் கொள்கைகளில் காங்கிரசும் தென் இந்திய வர்த்தக சபையும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்ததாக அரசு கருதியதே. 1937-இல் நடைபெற்ற மாகாண சட்டசபைத் தேர்தலில் இந்திய வணிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான முடிவுகளைக் கூர்ந்து நோக்கும்பொழுது வர்த்தகர்கள் காங்கிரஸின் வெற்றிக்குப் பாடுபட்டதை அறிய முடிகிறது. குறிப்பாக, தென் இந்திய வர்த்தக சபைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி வெற்றி பெற்றார்.
1937-39 ஆண்டுகளில் காங்கிரஸ் இராஜாஜி தலைமையில் சென்னையில் ஆட்சி செய்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வருமுன் தொழிலாளர்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தது. எனவே தமிழகத்தில் மில் அதிபர்கள் காங்கிரஸை முழு மனதுடன் ஆதரிக்கவில்லை. 1937 தேர்தலின்போது ஜவுளி ஆலை அதிபர்கள் சங்கம் நீதிக்கட்சிக்குத் தன் ஆதரவை நல்கியது. ஆனால் ஆட்சியைக் கைப்பற்றியபின் காங்கிரஸ் முற்றிலும் மாறுபட்ட போக்கினைக் கடைப்பிடித்தது. பின்னி நிர்வாகத்திற்கும் சென்னை தொழிலாளர் சங்கத்திற்கும் இடையிலான போராட்டம் எப்போதுமே இந்திய தேசியத்திற்கும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குமான மோதலாகவே காங்கிரஸால் கருதப்பட்டு வந்தது. ஆனால் 1937 அக்டோபர் 2ஆம் நாள் பின்னி ஆலையில் தொழிலாளர் போராட்டம் வெடித்தபோது, மாகாணத்தின் முதலமைச்சர் பின்னி தொழிலாளர் பிரச்சினையில் தலையிட மறுத்தது மட்டுமின்றி, தொழில் உறவு விவகாரங்களில் தொழிற்சங்கமோ அல்லது அரசோ தலையிடுவதைவிடத் தொழிலாளர்களும் ஆலை அதிபர்களும் பேசி உடன்பாட்டுக்கு வருவதையே அரசு விரும்புகிறது என அறிக்கை வெளியிட்டார். பல ஆண்டுகள் தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றியவரும் மாகாணத்தின் தொழிலாளர் அமைச்சருமான வி.வி.கிரி.
மூலதனம் உழைப்பு இரண்டிற்கும் இடையில் நடுநிலையைக் கடைப்பிடிக்க
அரசு விரும்புவதாகக் கூறினார்.
காங்கிரஸ் கடைப்பிடித்த தொழிலாளர் கொள்கை முதலாளி வர்க்கத்துக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது. மேலும் அது மாகாணத்தில் தொழில் வளர்ச்சிக்குச் சாதகமாகவும் அமைந்தது. 1938ஆம் ஆண்டு மட்டும் சென்னை மாகாணத்தில் 202 புதிய தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டன. நாட்டைத் தொழில் மயமாக்குவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேச காங்கிரஸ் ஆண்ட மாகாணங்களின் தொழிலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் முதலில் சந்தித்தனர். பின்னர் 1938 மே மாதம் காங்கிரஸ் முதன் மந்திரிகள் சந்தித்தார்கள். அதன் விளைவாகத் தேசியத் திட்டக்குழு ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைக்கப்பட்டது. இத்தருவாயில் ஆங்கிலேயர் காங்கிரஸ் அரசைக் கலந்து ஆலோசிக்காமல் இந்தியாவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தியதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலகினர். எனினும் போர்க்கால நிலைமைகள் தொழில்கள் விரிவடைவதற்கு வழிவகுத்தன. தென் இந்திய வர்த்தக சபையின் தலைவர் எம்.சி.டி.எம். சிதம்பரம் செட்டியார் போர் மூலம் ஏற்பட்டிருக்கும் அனுகூலத்தைப் பயன்படுத்துமாறு வர்த்தக நிறுவனங்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
தென் இந்திய வர்த்தக சபையின் வருடாந்திர அறிக்கையில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்: போரின் மற்றொரு பக்கம் அதன் ஆக்க சக்தியாகும். இந்தியா தனது சொந்த வணிகத் தளத்தைக் கட்டுவதற்கும், புதிய பல தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கும், இதுவே தக்க தருணம். எனவே வரும் ஆண்டுகளில் பொருளாதாரத் துறையில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் பெரும் பொறுப்பு வியாபாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உள்ளது.
போர் நடைபெற்றபோது ஜவுளி வியாபாரம் இலாபகரமாகத் தென் இந்தியாவில் நடந்தது. வெளிநாட்டு இறக்குமதியை முற்றிலும் தவிர்க்கும் அளவிற்கு ஜவுளித் தொழில் வளர்ந்தது மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, மலேயா, கிழக்கு ஆப்பிரிக்கா, ஈராக், ஈரான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளின் சந்தையையும் தென் இந்திய ஜவுளி வர்த்தகர்கள் கைப்பற்றினர். போர்க்கால நடவடிக்கைகள் புதிய பல தொழில்கள் வளர்வதற்கு உதவின. ஓடு உற்பத்தி, மரம் அறுத்தல், பெட்டி செய்தல், மெழுகுவர்த்தி உற்பத்தி போன்றவை இலாபகரமான முயற்சிகளாகக் கருதப்பட்டன. ஓர் ஐரோப்பியப் போரை இந்தியாவின் மீது திணித்ததற்காக நாடே ஆத்திரப்பட்டபொழுது தென் இந்திய வர்த்தக சபை இந்தியாவின் போர் முயற்சியை முழுமையாக ஆதரிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆர்வத்தில் இங்கிலாந்திலிருந்து வர இருந்த சர். ஸ்ட்ராபோர்டு கிரிப்ஸ் தூதுக் குழுவையும் வரவேற்றது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, கிரிப்ஸ் தூதுக்குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
சென்னையில் ஜப்பானியர்களிடமிருந்து வந்த நேரடி இராணுவ அச்சுறுத்தல் அதன் அரசியல் நிலையிலும் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது. வங்காள விரிகுடாவில் ஜப்பானியர்கள் தங்களுடைய மேலாண்மையை உணர்த்தும் முகமாக விசாகப்பட்டினத்தையும் காக்கிநாடாவையும் தாக்கினர். இலங்கையின் மீது குண்டு வீசப்பட்டது. இதன் எதிரொலியாக 1942 ஏப்ரல் 12ஆம் நாள் பீதியுற்ற மக்களைச் சென்னையிலிருந்து வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டது. ராஜாஜியும் காமராஜரும் சென்னையில் சுற்றுப்பயணம் செய்து மக்களை அமைதியாக இருக்கும்படி வேண்டினர். இச்சூழ்நிலையைச் சமாளிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவி ஏற்க வேண்டும் எனவும், முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் எனவும், சட்டசபையில் இராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
அகில இந்தியக் காங்கிரஸ் சென்னை மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் பாகிஸ்தான் பற்றிய கருத்தை நிராகரித்தபோதிலும் ஜப்பானியர்கள் ஆங்கிலேயருக்கு ஏற்படுத்திய நெருக்கடியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள முடிவு செய்தது. எனவே கிரிப்ஸ் தூதுக்குழு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஒரு வெகுஜனப் போராட்டத்திற்கான அறைகூவலை விடுமாறு பம்பாயில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி காந்தியை வேண்டியது. அதைத் தொடர்ந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தீவிரமாக நடந்தபோதிலும், அடக்குமுறையைக் கையாண்டு செப்டம்பர் இறுதிக்குள் ஆங்கிலேய அரசு போராட்டத்தை ஒடுக்கியது. போர்க்காலச் சூழ்நிலை ஆரம்பத்தில் வணிகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் சாதகமாக இருந்தபோதிலும் காலப்போக்கில் பல இன்னல்களை ஏற்படுத்தியது. போரினால் புதிய இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து தருவிக்க முடியவில்லை. இதனால் தொழில் விருத்தியோ, புதிய தொழில் துவங்கவோ சாத்தியமில்லாது போயிற்று. 1943 ஆகஸ்ட் மாதம் வங்காளத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சம் சென்னைக்குப் பரவக்கூடிய அபாயம் இருந்ததால், மாகாண அரசு மொத்த வியாபாரத்தைத் தடை செய்து உணவு தானியங்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தியது. பதுக்கலையும் கொள்ளை இலாபத்தையும் தடுக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அரசின் வரிக்கொள்கை, குறிப்பாக விற்பனை வரி அதிகரிப்பு வணிகர்களைக் கடுமையாகப் பாதித்தது. வர்த்தகர்கள் மீது அரசு அதிகாரிகளின் கெடுபிடி பற்றிய குற்றச்சாட்டுகள் மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் தென் இந்திய வர்த்தக சபைக்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தன.
காலனி அரசின் நடவடிக்கைகள் வணிகர்களை மீண்டும் தேசியவாதிகள் பக்கம் சாயக் கட்டாயப்படுத்தியது. நம்பாமை. சந்தேகம், நிலையற்றதன்மை கலந்த சூழல், வியாபாரம், தொழில் அபிவிருத்திக்கு உகந்ததாக இருக்க முடியாது என்றும் மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு தேசிய அரசு அமைகின்ற அன்றுதான் வணிகம், வர்த்தகம், தொழில் ஆகிய துறைகளில் உண்மையான முன்னேற்றம் ஏற்படும் எனவும் வணிகர்களும் தொழிலதிபர்களும் முடிவுக்கு வந்தனர். இரண்டாம் உலகப்போர் மற்றோர் பாடத்தையும் வணிகர்களுக்குப் புகட்டியிருந்தது. சில இன்றியமையாத வேதிப் பொருள்கள், இயந்திரங்கள் போன்றவை இறக்குமதி செய்யப்பட வேண்டியிருந்ததால் இறக்குமதியை அறவே ஒழிக்க முடியாது என்பதே அது. எனவே 1944இல் தயாரிக்கப்பட்ட பம்பாய்த் திட்டம் இறக்குமதி, ஏற்றுமதி இரண்டையும் வற்புறுத்தும் திட்டமாக உருப்பெற்றது. ஆயினும் இத்திட்டத்தை சுதந்திர இந்தியாவில்தான் அமல்படுத்த முடியுமெனத் திடமாக நம்பியதால் ஆழ்ந்த கவலையுடனும் அக்கறையுடனும் அதிகாரத்தை விரைவில் இந்திய கைக்கு மாற்றும் திட்டத்திற்கான ஆதரவைத் திரட்டுவதில் முழு மூச்சாக வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் ஈடுபட்டனர். முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்று இந்திய சுதந்திரத்தைத் துரிதப்படுத்த முயன்ற இராஜாஜி, தமிழக வணிகர் மற்றும் தொழிலதிபர்களின் உணர்வுகளையே பிரதிபலித்தார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
