இந்திய சமுதாய அமைப்பும் வரலாறும் ஒரு மார்க்சிய கண்ணோட்டம்
மத்திய கட்சி கல்வி குறிப்பு
அமர் பரூக்கி
முன்னுரை
உற்பத்தி முறைகளின் வரிசையின் அடிப்படையில் வரலாற்றைப் பார்க்க மார்க்ஸ் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு முன் இந்தியாவில் ஒரு தனித்துவமான ஆசிய உற்பத்தி முறை நிலவியதாக மார்க்சும், எங்கெல்சும் புரிந்து கொண்டதால், இந்திய வரலாற்றைப் படிப்பதற்கு மார்க்சிய வழிமுறையை பயன்படுத்துவது ஒரு பிரச்சனையாக இருந்தது நமக்குத் தெரியும். இந்தப் பிரச்சனைக்குப் பிறகு திரும்புவோம். கடந்த ஐம்பது வருடங்களாக இந்திய வரலாற்றை ஆய்வு செய்துள்ள முன்னணி மார்க்சிஸ்டுகள் ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தைக் கைவிட வேண்டும் அல்லது கணிசமாக மாற்ற வேண்டும் என்பதில் பொதுவாக உடன்பட்டுள்ளனர் என்பதைச் சொன்னாலே இங்கே போதுமானது.
இந்தியாவின் வரலாற்று அனுபவத்தை ஒரு பரந்த தளத்தில் வைக்கும் வகையில், நவீன காலத்திற்கு முந்தைய உலகின் சில சமூக அமைப்புகளைப் பற்றிய சுருக்கமான ஆய்வுடன் தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும். உலக வரலாற்றின் அடிப்படையில் வர்க்க சமுதாயத்தின் தோற்றம் மற்றும் ஆரம்பகால அரசு உருவாக்கம் ஆகியவை, கிமு 3000-இல் ஈராக்கின் தெற்கு மண்டலப் பகுதியில் தோன்றிய ஆரம்பகால நாகரிகமான சுமேரிய நாகரிகத்தில், அசாதாரண விரிவான தன்மையுடன் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. மேற்கு ஆசியாவில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், உணவு சேகரிப்பு மற்றும் வேட்டையாடும் சமூகத்திலிருந்து (பாலியோலிதிக்; மெசோலிதிக்) ஆரம்பகால உணவு உற்பத்தி செய்யும் சமூகத்திற்கு (நியோலிதிக்) மாறுவது, நதிகள் அல்லாத விளிம்பு வாழ்விடங்களில்தான் ஏற்பட்டது என்பதைக் குறிக்கின்றன. நாம் ஆரம்பத்தில் கருதியது போல வளமான நதிப் பள்ளத்தாக்குகளில் அல்ல. முக்கியமான மண்டலம் பாலஸ்தீனத்தின் சாக்கடல் பகுதி: ஜோர்டான் பள்ளத்தாக்கு; சிரியா; வடக்கு ஈராக்; மற்றும் வடமேற்கு ஈரானின் சில பகுதிகள். முதல் புதிய கற்காலக் குடியேற்றங்கள் கி.மு. 9000-க்கு முந்தையவை. கி.மு. 6000 வாக்கில் உணவு உற்பத்தி (விவசாயம் மற்றும் விலங்குகளின் வளர்ப்பு இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது) வடக்கு ஈராக் முழுவதும் பரவலாகிவிட்டது. அடுத்த 3000 ஆண்டுகளில் தெற்கு ஈராக்கில் ஆளும் வர்க்கங்கள் உற்பத்தியின் உபரியை பறிக்கும் அடிப்படையில் வர்க்க சமூகமும் பெரிய அளவுக்கு உபரி உற்பத்தியும் உருவாவதற்கான வரலாற்று சூழல்கள் வளர்ந்தன.
சுமார் கி.மு. 3000 ஆண்டு வாக்கில், உருவான சுமேரிய நாகரிகம் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருந்தது: விரிவான நகரமயமாக்கல்; எழுத்து; சக்கரத்தின் பயன்பாடு; செயற்கை நீர்ப்பாசனம்; அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சக்திவாய்ந்த மதத் தலைமை; வெண்கலத்தின்உபயோகம்; ஆணாதிக்கம்; மற்றும் அடிமைத்தனம்.
உபரி உற்பத்திக்கான சமூக மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், பெரிய அளவில் படை திரட்டும் திறன் மற்றும் அரசியல்-சட்ட நிறுவனங்கள் மூலம் ஒரு பெரும் மனிதக் குழுவை நீண்டகாலத்திற்குத் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்தல் ஆகிய அம்சங்கள் பண்டைய மெசபடோமியா, எகிப்து, அனடோலியா போன்ற நாடுகளில் அடிமை உழைப்பை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய சமூக அமைப்புகளை உருவாக்கியது. அடிமைத்தனத்தைத் தவிர, இந்த சமூகங்கள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் மூலம் பல்வேறு அளவுகளில் சுதந்திரத்தை மறுத்தன. இருப்பினும், இந்த சமூகங்களில் விவசாய உற்பத்தியானது, பரந்த அளவில் அடிமைத் தொழிலாளர்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இது சற்றே பின்னதாக, பண்டைய கிரேக்க-ரோமானிய உலகில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். கிமு 800 முதல் கிரேக்கத்தில் விவசாய உற்பத்தி, கைவினைப் பொருள் உற்பத்தி மற்றும் சுரங்கத்தில் அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. பண்டைய புராதன காலத்தின் தொடக்கத்தில், சுமார் கிமு 500-இல், அடிமை உற்பத்தி முறை கிரேக்கத்தின் பெரும்பகுதியில் நன்கு வேரூன்றியது. புராதன காலத்தில் அடிமைகளல்லாத விவசாயிகளிடமிருந்து பல வழிகளில் உபரி உற்பத்தியானது பறிக்கப்பட்டது. எனினும் மிக முக்கிய வடிவத்திலான சுரண்டல் (உபரியை பறித்தல்) அடிமை உழைப்பை சுரண்டுவதன் மூலமே நிகழ்ந்தது. (தயவுசெய்து பிரிவு III ஐப் பார்க்கவும்.) அதைத் தொடர்ந்து, ரோமானியப் பேரரசின் மேற்குப் பகுதிகளில், கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை, அடிமை முறை அதன் உச்சத்தை எட்டியது. வேறு எந்த சமூகத்திலும் காணமுடியாத அளவில், இந்த காலகட்டத்தில் பண்டைய ரோமின் ஆளும் வர்க்கம் அதன் செல்வத்தை அடிமை உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் பெற்றது.
ஐந்தாம்-ஆறாம் நூற்றாண்டுகளில் இந்த உற்பத்தி முறையின் வீழ்ச்சிக்குப் பல காரணிகள் இருந்தன; உதாரணமாக, அடிமை வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு மற்றும் ஜெர்மானிய குடியேற்றங்களால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, கி.பி மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து அடிமை உற்பத்தி முறையில் நெருக்கடி ஏற்பட்டது. அடுத்த நூற்றாண்டுகளில் புதிய உற்பத்தி உறவுகள் உருவாகத் தொடங்கின. குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் (ஏனெனில், அங்குதான் அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி மிகவும் விரிவானதாகவும். பேரரசின் பிற பகுதிகளை விட நெருக்கடி மிகவும் கடுமையானதாகவும் இருந்தது) அடிமை முறையிலிருந்து serfdom எனப்படும் பண்ணை அடிமைமுறைக்கு (அரை நிலப்பிரபுத்துவம்) மாறுவதற்கு வழிவகுத்தது. மேற்கு ஐரோப்பாவில் பத்தாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை முழு வீச்சில் நிலைபெற இது அடிப்படையாக இருந்தது.
அரை நிலப்பிரபுத்துவம் என்பது தனக்கு தரப்பட்ட சிறு நிலத்தில் விவசாயி தானும் தனது குடும்ப உறுப்பினர்களுடனும் உழைப்பை செலுத்தி பயிர் விளைவிக்கிறார். அதே சமயத்தில் அந்த சிறு நிலம் தரப்பட்டதற்கு ஈடாக தனது உழைப்பின் ஒரு பகுதியை நிலப்பிரபுவின் நிலத்தில் ஊதியமின்றி செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறார். இந்த உழைப்பாளி அடிமை அல்ல; அதே சமயத்தில் தனது முழு உழைப்புக்கு சொந்தக்காரரும் அல்ல. இவ்வுழைப்பின் மூலம் பெறப்பட்ட (மற்றும் மத்திமக்காலம் வரை தொடர்ந்த) அடிமை உழைப்பு உட்பட உழைப்பின் பிற வடிவங்களும் இணைந்து உபரி, நிலப்பிரபுக்களுக்கு ஆயுதமேந்தியவர்களைப் பராமரிப்பதற்கான ஆதாரங்களை வழங்கியது. அவர்கள் நிலப்பிரபுத்துவ உறவுகள் மூலம் அரசியல், இராணுவ அமைப்பில் படிநிலையில் வைக்கப்பட்டனர். பதினான்காம் நூற்றாண்டிலிருந்து உருவான விவசாயிகளின் எதிர்ப்பு அடிமை முறையின் வீழ்ச்சிக்கும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிக்கும் வழி வகுத்தது.
இந்தியாவின் நவீன காலத்துக்கு முந்தைய சூழலை பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்துகொள்ளுதல் பற்றிய விவாதங்களின் பின்னணியில், அடிமைத்தனம் மற்றும் ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தின் அம்சங்கள், முறையே பண்டையகால கிரேக்க-ரோமானிய மற்றும் இடைக்கால ஐரோப்பாவின் குறிப்பிட்ட வரலாற்றுப் பாதைகளின் விளைவாகும் என்பதையும், அதை அப்படியே இந்தியாவுக்கு பொருத்தக் கூடாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
II. இந்திய சமுதாய அமைப்புகளின் சுருக்கமான வரலாறு:
மார்க்சும் ஏங்கெல்சும், இந்தியாவின் காலனித்துவத்திற்கு முந்தைய சமூக உருவாக்கத்தை ‘ஆசிய தன்மை’ என்று வகைபடுத்தி அதன் வரலாற்றை வேறுபடுத்திய அம்சங்களை .(முக்கியமாக) ஐரோப்பிய சமூகங்களில் இருந்து வேறுபட்ட அம்சங்களை மார்க்சிய வரலாற்றியல் முறைக்கு சில சிரமங்களை முன்வைத்தது. ஒருபோதும் போதுமான அளவு மார்க்ஸால் விவரிக்கப்படாத ஆசிய உற்பத்தி முறை, உற்பத்தியின் அலகுகளான, வேறுபடுத்திக் காட்டப்படாத கிராம சமூகங்களின் இருப்பு மூலம் குறிக்கப்படுகிறது. கிராம சமூகத்தால் உற்பத்தி செய்யப்படும் மொத்த உபரியும் ஒரு சர்வாதிகார அரசால் கையகப்படுத்தப்படுகிறது. நிலத்தின் உரிமை ஆட்சியாளரிடம் உள்ளது: சொத்தில் தனிப்பட்ட உரிமைகள், மற்றும் வர்க்க வேறுபாடு, கிட்டத்தட்ட இல்லை. மார்க்ஸின் கூற்றுப்படி இந்தியாவில் வம்ச அரசியல் மாற்றங்கள் மேல்மட்டத்தில் மட்டுமே நிகழ, கிராம சமூகங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மாறாமல் நிலைத்திருந்தன. கிராம சமூகத்தைப் பற்றிய அவரது கருத்துகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உருவாகி, பின்னர் மாற்றம் பெறுகிறது. அதன்படி பின்னர் கிராம சமூகத்தை அவர் பல உள்முரண்களைக் கொண்ட மிகவும் சிக்கலான சமூக அமைப்பு எனக் குறிப்பிட்டார். ஆங்கிலேய ஆட்சி, மக்களுக்கு மிகப்பெரிய துன்பத்தை ஏற்படுத்தி இந்த சமூக உருவாக்கத்தை அழித்து, ஒரு மீட்டுருவாக்கம் செய்தது.
இந்திய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து வெளியான மார்க்சிய அறிஞர்களின் தொடர்ச்சியான எழுத்துகள், இந்தக் கருத்தை விமர்சித்து, அதை நிராகரிப்பதற்காக உறுதியான முறையில் வாதிட்டன. டி.டி கோசாம்பி, ஆர்.எஸ். சர்மா மற்றும் இர்ஃபான் ஹபீப் ஆகியோர் இதில் பணியாற்றிய முன்னோடிகளாவர்.
முதன்முதலில், 1956-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கோசாம்பியின் இந்திய வரலாற்றின் ஓர் அறிமுகம் என்பது அடித்தளமாகும். இதைத் தொடர்ந்து ஷர்மாவின் பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் (1958); ஹபீப்பின் முகலாய இந்தியாவின் விவசாய அமைப்பு (1963) மற்றும் ஷர்மாவின் இந்திய நிலப்பிரபுத்துவம் (1965) ஆகிய படைப்புகள் அனைத்தும் சேர்ந்து, இந்தியாவின் கடந்த காலத்தை-குறிப்பாக காலனித்துவத்திற்கு முந்தைய கடந்த காலத்தைப் பற்றி, தாக்கத்தை ஏற்படுத்திய சமீபத்திய ஆய்வுகளை உள்ளடக்கி, கடுமையான வரலாற்று ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் புரிந்து கொள்ள உதவின.
ஒட்டுமொத்தமாக இந்த எழுத்துகள், வெவ்வேறு நிலையிலுள்ள வர்க்க மோதல்கள் மூலம் காலம் செல்லச் செல்ல மாறிவரும் உற்பத்திமுறைகளின் வரிசைமுறை, மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் உபரி வடிவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், உலகின் மற்ற பகுதிகளிலுள்ள சமூகங்களைப் போலவே, இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றையும் அர்த்தமுள்ள முறையில் ஆய்வு செய்ய முடியும் என்று காட்டின.
மேலும், ஆதிப் பொதுவுடமை-அடிமை முறை – நிலப்பிரபுத்துவம் – முதலாளித்துவம் ஆகியவற்றின் வரிசை இந்திய சமூகத்தில் அப்படியே நகலெடுத்தது போல நிகழவில்லை என்றாலும், பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அப்படி உலகம் முழுவதற்கும் பொதுவான ஒரே மாதிரியான தன்மை அவசியமும் இல்லை. இந்திய சமூக அமைப்புகளில் அடிமைத்தனம் மற்றும் நிலப்பிரபுத்துவம் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி உறவுகள் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. இவை துணைக்கண்டத்தின் வரலாற்று நிலைமைகளின் கீழ் உருவானவை என்பதில் சந்தேகமில்லை. இதன் தனித்துவம் காரணமாக, சில மார்க்சிய அறிஞர்களுக்கு, ‘அடிமைத்துவம்’ அல்லது நிலப்பிரபுத்துவம் போன்ற சொற்களைப் பயன்படுத்துவது சில நேரங்களில் கடினமாக உள்ளது. இவை நிச்சயமாக மார்க்சிய வரலாற்றியலுக்குள் நடந்துவரும் விவாதங்களுக்கான விசயங்கள் மட்டுமே.
இந்திய துணைக்கண்டத்தில் வேளாண்மை -சிந்து சமவெளி நாகரீகம்
இந்திய துணைக்கண்டத்தில் வேட்டையாடுதலிலும், உணவு சேகரித்தலிலும் இருந்து உணவினை உற்பத்தி செய்யும் நடைமுறைக்கு மாறியது கி.மு. 7000 ஆண்டுவாக்கில் நடந்தது. உணவு உற்பத்தி செய்யப்பட்டதற்காக முதல் ஆதாரம் இன்றைய பலுசிஸ்தானில் அமைந்துள்ள மெஹர்கர் என்ற இடத்தில் கிடைத்தது. பின்னர் உழவு பரவியதன் மூலம் பலுசிஸ்தானிலிருந்து சிந்து சமவெளி வரையிலான மண்டலத்தில் அடுத்த நான்காயிரம் ஆண்டுகளில் பல புதிய கற்கால நாகரிகங்கள் உருவாகின. சிந்து சமவெளியில் மேம்பட்ட புதிய கற்கால நாகரிகங்கள் சுமார் கிமு 3200 காலகட்டத்தில் வளர்ந்தன. அவற்றில் மிக முக்கியமானது மிகவும் விரிவான கோட் டிஜி கலாச்சாரம் ஆகும் (கிமு 3200-2600). உழவின் வளர்ச்சியும் கலப்பை பயன்படுத்தியதும், தாமிர உலோக பயன்பாடு தொடங்கியதும் இணைந்து கோட் டிஜி குடியேற்றங்களில் (அளவுமாற்றத்திற்கும், முரண்களின் வளர்ச்சிக்கும் காரணமாகிய) உபரி உற்பத்திக்கான (பொருளியல்) சூழலை உருவாக்கியது.
ஹரப்பா நாகரிகம் கிமு 2600 ஆண்டில் தோன்றியது. கிமு 2500 வாக்கில் முதிர்ந்த கட்டத்தை அடைந்தது. இந்த முதிர்ந்த கட்டம் கிமு 2000 வரை நீடித்தது. ஹரப்பா நாகரிகத்தின் உருவாக்கம் இன்னும் தெளிவாகவில்லை. தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், இப்பகுதியில் நிலவிய இதற்கு முந்தைய கலாச்சாரங்கள் எதுவும், இந்நாகரிகத்தின் தோற்றத்திற்கு நேரடியாக வழிவகுத்ததாகக் கருத முடியாது. அதே நேரத்தில், நாகரிகம் தோன்றுவதற்கான பொருளாதார-சமூக புறச்சூழல்கள் நிச்சயமாக கிமு 2600-க்கு முந்தைய நூற்றாண்டுகளில் சிந்து சமவெளியில் இருந்துள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஹரப்பா நாகரிகம் (அல்லது சிந்து சமவெளி நாகரிகம்) ஒரு செழுமையான நகர்ப்புற சமூகமாக இருந்தது. கி.மு.2600 காலகட்டத்தில் அதுவொரு ஒரு புரட்சிகர சமூக பரிணாமமே என்றால் மிகை அல்ல. பெரிய, நன்கு அமைக்கப்பட்ட நகரங்கள் மிகவும் பரந்த பகுதியில் (இன்றைய வட – மேற்கு எல்லைப்புற மாகாணம், சிந்து, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு உத்தரபிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியது) வளர்ந்தன. இவை வியக்கத்தக்க வகையில் ஒரே மாதிரியான மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன. மேட்டுக்குடி வர்க்கங்களின் செல்வச் செழிப்பானது, உழவின் வழியாக அபகரிக்கப்பட்ட உபரியே என்பதை தொல்லியல் தளங்களில் இருந்து கிடைக்கும் சான்றுகள் காட்டுகின்றன. வணிக வரிகளும் இதில் ஒரு பகுதியாக இருக்கக்கூடும். நகர்ப்புற குடியிருப்புகளில் குறிப்பிடத்தகுந்ததாக உள்ள சீரான கட்டமைப்பு, போரில் ஈட்டிய வெற்றியின் மூலம் திணிக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டின் விளைவாக இருக்கலாம். எனவே நாம் அதனை ‘சிந்து பேரரசு’ என்று குறிப்பிடலாம். எப்படியாயினும், நிச்சயமாக மிகப் பெரிய ஹரப்பா நாகரிக மண்டலம் இருந்தது.
இது ஒரு எழுத்தறிவு பெற்ற சமூகமாக இருந்தபோதிலும், இந்த எழுத்து வடிவத்தினை இதுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் காரணமாக ஹரப்பா நாகரிகத்தின் அரசியல் வரலாற்றை மீட்டமைக்க முடியவில்லை. ஹரப்பா முத்திரைகளில் உள்ள அடையாளங்கள் உண்மையில் முழு வளர்ச்சியடைந்த எழுத்துருவை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்ற கருத்தும் உள்ளது: ஓர் இடத்தில் சராசரியாக 5 குறியீடுகள் மட்டுமே கிடைத்துள்ளன. எனவே சரியான எழுத்துருவைத் தீர்மானிக்க அது மட்டும் போதுமானதாக இல்லை. கிமு 2000 மற்றும் 1900-க்கு இடையில் ஹரப்பா நாகரிகம் திடீரென முடிந்து போயுள்ளது. இந்த நாகரிகத்தின் முடிவுக்கு வழிவகுத்த காரணங்கள் பற்றி வரலாற்று ஆய்வாளர்களால் பல ஊகங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னமும் நியாயமான திட்டவட்டமான பதிலைப் பெற முடியவில்லை.
இயற்கை வளங்களை அதிகமாகச் சுரண்டியதால், சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுத்தது என்ற கருதுகோள், கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். பகைவர் ஊடுருவல்களுக்கான சான்றுகளும் உள்ளன. அவை முன்பு ஆரியப் படையெடுப்புகளுடன் தொடர்பு படுத்தப்பட்டன. ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. கி.மு. 1900க்குப் பிறகு ஹரப்பா நாகரிகத்தின் நகரங்கள், எழுத்துகள் மற்றும் முக்கிய அம்சங்கள் மறைந்துவிட்டன. பல நூற்றாண்டுகள் கடந்தும் நகர்ப்புற மையங்கள் மீண்டும் தோன்றவில்லை. சொல்லப்போனால் கிமு மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் மீண்டும் எழுத்துகள் தோன்றின.
ஆரியர் குடியேற்றம்
ஹரப்பா நாகரீகம் முடிவிற்கு வந்த காலகட்டத்தில், மேற்கிலிருந்து (ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான்) ஆரியக் குடியேற்றங்கள் வேகம் பெற்றன. மேலும் சுமார் கிமு 1500 வாக்கில் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் ஆரியக் குடியேற்றம் ஒரு புதிய மேய்ச்சல் பொருளாதாரத்தை உருவாக்கியது. இங்கு ‘ஆரியர்’ என குறிப்பிடுவது இந்தோ-ஆரிய மொழிகளில் ஒன்றைப் பேசும் ஒரு மொழியியல் குழுவைக் குறிக்கிறது. எனவே, இது ஒரு இனத்தைக் குறிப்பதல்ல. இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் இந்தோ-ஈரானிய மொழியின் ஒரு பகுதியாகும். மேலும் அது பெரிய இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினைச் சேர்ந்தது.
இந்த புதிய மேய்ச்சல் சமுதாயத்துடைய, தொடக்க வேதகாலத்தின் உருவாக்கம் பற்றிய ஆதாரங்கள் தொல்லியல் வழியாகவும், ரிக் வேதத்தில் இருந்தும் கிடைக்கின்றன. (ரிக் வேதம் கிமு 1500 மற்றும் 1000 க்கு இடையில் இயற்றப்பட்டது). இது முழுக்க முழுக்க ஊரக சமுதாயமாக இருந்தது. முக்கியமாகக் கால்நடை வளர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வேதப் பொருளாதாரத்தை முற்றிலும் கால்நடை சார்ந்ததாகக் முந்தைய ஆய்வுகள் காட்டியிருந்தாலும், தொல்பொருள் சான்றுகள் மற்றும் ரிக் வேதத்தின் சான்றுகள், வேத கால ஆரம்பத்தில் விவசாய உற்பத்தியும் சிறு பங்கைக் கொண்டிருந்ததாகக் காட்டுகிறது. மேலும், ஆரியர்கள் வளர்ப்புக் குதிரையை அவர்களுடன் கொண்டு வந்தனர். வேதத்திற்கு முந்தைய காலத்தில் இங்கு (குதிரை இருந்ததற்கான) எந்த ஆதாரமும் இல்லை.
வேத காலத்தின் மேய்ச்சல் மற்றும் விவசாயப் பொருளாதாரம், வட மற்றும் வடமேற்கு இந்தியாவில் அதன் சொந்த தனித்தன்மைகளுடன், உணவு சேகரிப்பு-வேட்டையாடுதல் மற்றும் உணவு உற்பத்தி ஆகியவற்றை தனித்தனியாகவோ அல்லது கலவையாகவோ கொண்ட வாழ்வாதாரங்களோடு வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் மற்ற பகுதிகளிலும் இத்தகைய சமுதாயங்கள் உருவாகி வளர்ச்சியடைந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
புதிய கற்கால நாகரிகமும், பின்னர் அது வளர்ச்சியடைந்து உலோக பயன்பாட்டிற்கு மாறியதுமான காலவரிசையானது மத்திய இந்தியப் பகுதிகளிலும், தென்னிந்திய, கிழக்கிந்திய மற்றும் வடகிழக்கிந்தியப் பகுதிகளிலும் வெவ்வேறாக உள்ளது. உதாரணமாக, மணிப்பூர்-நாப்ச்சிக்கில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கற்காலக் குடியிருப்பின் காலம் சுமார் கிமு 1700 ஆகும். புதிய கற்காலக் கருவிகள் மேகாலயா (செல்பல்கிரி), அஸ்ஸாம் (சருதாரு) மற்றும் நாகாலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் போதுமான அளவு அகழ்வோ, ஆராய்ச்சியோ அப்பகுதிகளில் செய்யப்படவில்லை. இந்திய துணைக்கண்டத்தின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றிய சிறந்த மற்றும் விரிவான புரிதலுக்கு இத்தகைய தளங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வட இந்தியாவின் வரலாற்றை ஆராய்வதிலேயே அதிக கவனம் குவிக்கப்படுவதால், இந்தப் பகுதிகளில் வரலாற்று ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடோ அரசின் ஆதரவோ இல்லை.
ஆதாரங்களை திரிக்கும் சூழ்ச்சிகள்
ரிக் வேதத்தில் குதிரை பற்றிய தொடர்ச்சியான குறிப்புகள் உள்ளன. இது, வேதகால-சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களின் தனித்துவமாகும். ஹரப்பா நாகரிகத்தில் குதிரைகள் பயன்பாட்டிற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஹரப்பா காலத்திற்கு பிறகே குதிரைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன (குதிரைகள் பற்றிய பதிவுகள் வேத காலக் குறிப்புகளிலும், தொல்லியல் பதிவுகளிலும் கிடைக்கின்றன). ‘ஹரப்பா நாகரிகத்தை’ ‘வேத ஆரியத்துடன் ஒப்பிட முயல்பவர்களுக்கு இது பெரும் தடையாக இருக்கிறது. எனவே ஹரப்பா காலத்தில் குதிரை இருந்ததற்கான ஆதாரங்களை ‘உற்பத்தி’ செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆச்சரியமில்லை.
என்.எஸ். ராஜாராம் எழுதிய த டெசிஃபர்ட் சிந்து ஸ்கிரிப்ட் (2000) இதை அழுத்தமாகக் கூறியது. ஹரப்பாவில் கிடைத்தவை முழு அளவிலான எழுத்துரு என்றாலும், அவை இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை. ஆனால் அந்தப் புத்தகத்தில் ஹரப்பா முத்திரையில் குதிரையின் சித்தரிப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டது ஒரு பொய் என நிரூபிக்கப்பட்டது. அந்த உருவம் ‘கணினியால் மேம்படுத்தப்பட்ட படம்’ என்பதை ராஜாராம் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. கணிதத்தில் பயிற்சி பெற்ற ராஜாராம், தனது தொழில் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பொறியாளராக அமெரிக்காவில் உள்ள நாசாவில் பணிபுரிந்ததாகக் கூறுகிறார்.
இந்தியா தொடர்பான வரலாற்றின் உண்மைத் தன்மை மீதான தாக்குதலுக்கான தூண்டுதலின் பெரும்பகுதி வரலாற்றாசிரியர்கள் அல்லாதவர்களிடமிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அதிக புத்திசாலித்தனம் தேவையில்லை. இவர்கள் பொதுவாக இயற்கை அறிவியல் அல்லது கணிதத்தில் பயிற்சிபெற்று அமெரிக்காவில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களாவர். இந்தத் தாக்குதலானது மேற்குலகில் வாழும் இந்தியர்களில் ஒரு பகுதியினரால் முன்னகர்த்தப்படுகிறது. மேலும் இந்துத்துவா அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் அவர்களின் தொடர்பு சங் பரிவாருக்கு மதிப்புமிக்கது. ஏனெனில், இத்துறையில் சிறப்புக் கல்வி பெறாத வட்டங்களில், குறிப்பாக நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினரிடையே, இதற்கு கிடைக்கும் நம்பகத்தன்மை வரலாற்றின் மீதான இந்தத் தாக்குதலுக்கு சாத்தியத்தை அளிக்கிறது.
அடிமைகளும், வர்ண முறையும்
ஹரப்பா காலத்தின் எருதுகளால் இழுக்கப்பட்ட தேர்களுக்குப் பதிலாக, வேத கால தொடக்கத்தில் குதிரைகளால் இழுக்கப்பட்ட ரதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் பல ஆரிய மற்றும் ஆரியரல்லாத பிரிவினர் வேதகால சமூகத்திற்கு அடிபணிய வேண்டிய சூழல் உருவாகியிருக்கலாம். ரிக் வேதத்தில் ஒருபுறம் ஆரியப் பழங்குடியினர் தங்களுக்குள்ளேயும், மறுபுறம் தசாயுக்கள் மற்றும் தாசர்களுக்கும் இடையிலான மோதல்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. தாசர்கள் (மற்றும் தசாயுக்கள் கூட) ஆரியர்களாக இருந்திருக்கலாம் (அதாவது இந்தோ- ஆரிய மொழிகள் பேச்சுவழக்கை கொண்டவர்கள் ஆனால் வேத-சமஸ்கிருதம் பேசும் மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்). இவர்கள் ஒருவேளை முந்தைய மனித இடப்பெயர்வு அலைகளின் பகுதியாக இருக்கலாம். ஆரியர்கள், ஒரே மொழியியல் குழுவாக, வேறுபாடற்றவர்களாக இருந்தார்கள் என கருதப்படக்கூடாது.
தாசர்களுக்கு எதிரான குறைந்த விரோதப் போக்கைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது (தசாயுக்களின் படுகொலை பற்றிய குறிப்புகள் அதிகம் உள்ளன; ஆனால் தாசர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து அதிகம் காணப்படவில்லை). தாசர்கள் மொழியியல் ரீதியாக வேத-சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கக்கூடும். இருப்பினும் பெரும்பாலும் இது யூகமே. இறுதியில் வேத-சமஸ்கிருதம் பேசும் ஆரிய மொழி மற்றும் இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்தும் குழுக்களாக நிலைபெற்றன. தசாயுக்கள்-தாசர்கள் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு ஆரம்பகால வேத காலத்தின் முடிவில், அடிபணிந்த தசாயுக்கள் மற்றும் தாசர்கள் ‘சூத்திரர்’ பிரிவில் ஒன்றாக இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ரிக்வேதத்தில் (ரிக்வேதத்தின் பத்தாம் புத்தகத்தின் புருஷ சூக்தத்தில் – இது ரிக்வேதத்தின் சமீபத்திய பகுதியாகும்: மேலும் வேத காலத்தின் பிற்பகுதிக்கு நெருக்கமாக இயற்றப்பட்டிருக்கலாம்) சூத்ரா என்ற சொல் ஒருமுறை மட்டுமே வந்துள்ளது என்றபோதிலும், அதன் உட்பொருளிலும், அதற்குப் பிந்தைய காலகட்டத்தின் சான்றுகள் மூலமாகவும், ஆரம்பகால வேத காலத்தின் முடிவில் வர்ணப் படிநிலைக்கு அடித்தளமிடப்பட்டது தெரிகிறது. சூத்திரர்களில் ஒரு பகுதியினர் அடிமைப்படுத்தப்பட்டு வேத- சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களை விடத் தாழ்ந்தவர்களாக மாற்றப்பட்டனர். (அடிமைக்கு பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்றான தாசா, அடிமைப்படுத்தப்பட்ட தாசா மக்களிடமிருந்து பெறப்பட்டது என்பதைக் கவனியுங்கள்). அவர்கள் மீது உழைப்பு திணிக்கப்பட்டது. உரிமைகள் இல்லை.
அடிமைத்தனத்தைப் பற்றிய ஆரம்பக் குறிப்புகள் பெண் அடிமைகளைக் குறிப்பிடுகின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும். போர்கள் மற்றும் வெற்றியின் செயல்பாட்டில், பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் அதே வேளையில், தோற்கடிக்கப்பட்ட குழுக்களின் ஆண்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். வேத-ஆரிய குடியேற்றம் விரிவடைந்ததால், ஆரிய இனத்துக்குள் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் அதிகரித்தன. இதன் விளைவாக வேத-சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களில் ஒரு பகுதியினரும், ஏனைய ஆரிய பிரிவினரும் சூத்திரர்களாக கீழ் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். அதே போல வேத – ஆரிய பிரிவினர் தமது ஆதிக்கத்தை விரிவடையச்செய்த பொழுது வேறு சில இனங்களும் அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டு சூத்திரர்களாக கீழ்படிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். இந்த வளர்ச்சிகள் அடுத்த கட்டத்தில், வேத காலத்தின் பிற்பகுதியில் (கி.மு. 1000-700) மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த கட்டத்தில் வேத-ஆரிய குடியேற்ற மண்டலம் கிழக்கு நோக்கி, கங்கைப் பகுதியை நோக்கி நகர்ந்தது. மிகவும் வளமான இந்தப் பகுதியில் குடியேறுவதற்கு அடர்ந்த காடுகளை அழிக்க வேண்டியிருந்தது. இரும்பு உலோகம் (கி.மு. 1000 முதல்) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இது எளிதாக்கப்பட்டிருக்கும். இருப்பினும் வேத காலத்தின் பிற்பகுதியில்தான் இரும்பின் பயன்பாடு பரவலாகியது. கிழக்கு நோக்கிய நகர்வு தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைந்தது. உதாரணமாக கைப்பிடியுடன் கூடிய கோடரி மற்றும் இரும்புக் கலப்பையின் அறிமுகம், ஒரு பெரிய உபரி உற்பத்திக்கான பொருள் நிலைமைகளை உருவாக்கியது. இது வர்க்க வேறுபாட்டை விரைவுபடுத்தியது. இது வர்ண அமைப்பின் கடுமையான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர படிநிலையில் பிரதிபலித்தது. பிராமணர்களும் க்ஷத்ரியர்களும், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களிடமிருந்து வேறுபடுத்திக் கொண்டு தமக்கு மட்டுமே உரித்தான சிறப்பு சலுகைகளை கோரினர். பெருகிய வேற்றுமைகளால் சூத்திரர்கள் சொத்துகள் ஏதுமற்ற ஓர் அடிமை வகுப்பாக மாறினார்கள்.
சூத்திரர்களின் நிலை (ஓரளவிற்கு வைசியர்களின் நிலையும்) தொடர்ந்து கீழ் படி நிலைக்கு தள்ளப்பட்ட வரலாற்றுப் போக்கு வேதத்திற்குப் பிந்தைய காலத்திலும் தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில்தான், சூத்திரர்கள், வைசியர்கள் மற்றும் ‘பஞ்சமர்’ குழுக்களின் உழைப்பில் வாழ்ந்த கடுமையான படிநிலையாக்கம் செய்யப்பட்ட வர்க்க சமூகம் உருவானது. இந்த காலகட்டத்தில், வர்ணப் படிநிலையில் பார்ப்பனீய மேலாதிக்கம், கணிசமான உயர்ந்து, கீழ் வர்ணங்களின் ஒடுக்குமுறையை சட்டப்பூர்வமாக்க முயன்றது. சூத்திரர்கள் பொதுவாக சொத்து இல்லாதவர்கள். மேலும் விவசாயத் தொழிலாளிகளாக (கர்மகார,கம்மகார என்றால் கூலித் தொழிலாளியாக) அல்லது கைவினைஞர்களாக வேலை செய்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் அடிமைகளாக இருந்தபோதிலும், அடிமை உழைப்பு விவசாய உற்பத்திக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை.
கிமு 600 முதல் சூத்திரர்கள் தூய்மையற்றவர்கள் என்ற கருத்து (மதச் சடங்குகளில் பங்கேற்கத் தகுதியற்றவர்கள் என்ற பொருளில்) உருவானது. அதே சமயம், சூத்திரர்களை விடவும் ஒடுக்கப்பட்ட வர்ண அமைப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக – அஸ்பிரிஷ்யராகக் கருதப்பட்ட – பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட குழுக்களும் இக்காலத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டன. (எ.கா.: சண்டாளர்கள்).
உபரிமதிப்பும் சூத்திரர்களும்
ஆதிக்கம் செலுத்தும் வர்ணங்களின் செல்வப்பெருக்கு எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் முக்கியமாக சூத்திரர்களிடமிருந்தும் (உழைப்பு வடிவில்: சில சமயங்களில் அடிமை உழைப்பு) மற்றும் வைசியர்களிடமிருந்தும் (வரி வடிவில்) உபரியைப் பெறுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
உழவர்களின் பெரும்பகுதி வைசியர்களாவர் (இந்த கட்டத்தில் இந்த வர்ணத்திற்கு வணிகம் ஒரு இரண்டாம் நிலைத் தொழிலாக மட்டுமே இருந்தது). இதை ‘சூத்திர-வைசிய சமூக உருவாக்கம்’ (மாற்று சொற்றொடர் இல்லாததால்) என்று குறிப்பிடுவது தவறாகாது. இந்த நிலைமை கிட்டத்தட்ட பண்டைய காலத்தின் இறுதி வரை தொடர்ந்தது. இந்த உற்பத்தி முறையின் வெற்றியை, அதன் உபரிகளைப் பெற்று செழித்த மௌரியப் பேரரசின் எழுச்சியில் காணலாம்.
ஒரு பெரிய அதிகாரம்மிக்க சக்திவாய்ந்த அரசின் தோற்றம். துணைக்கண்டத்தில் இதுவரை கண்டிராத அளவில் நிலப்பரப்பின் விரிவாக்கம், பரந்த ராணுவம். விவசாயத்தின் விரிவாக்கம், வர்த்தக வளர்ச்சி போன்றவை மௌரியர் காலத்தில் சாத்தியமானது. இந்த கட்டமைப்புகள் அனைத்தும் சூத்திரர்கள், வைசியர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட உபரி மதிப்பு மூலமே சாத்தியமானது.
அர்த்த சாஸ்திரம் சொல்லும் விதத்தில் சூத்திரர்கள் மற்றும் வைசியர்களிடமிருந்து சுரண்டிப் பெற்ற உபரிகளை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம், கி.மு. 350-இல் வளர்ந்த சமூக உருவாக்கத்தை கெட்டிப்படுத்துவதிலும். மேலும் விரிவுபடுத்துவதிலும் மௌரிய அரசு முக்கியப் பங்கு வகித்தது. இந்த நோக்கத்திற்காக, அரசு தன் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில், முக்கியமாக சூத்திர தொழிலாளர்களை உள்ளடக்கிய அடிமை முறையின் அடிப்படையில் விவசாய உற்பத்தியில் நேரடிப் பங்கேற்பையும் செயல்படுத்தியது.
கிமு 500 முதல் தோன்றிய பௌத்தம், சமணம் மற்றும் பிற மத அமைப்புகள், பார்ப்பனீயத்திற்கு ஒரு சவாலாக இருந்தது. ஆனால் அவை வர்ண அமைப்புச் சித்தாந்தத்தை அல்லது நடைமுறையை தீவிரமாக விமர்சனத்திற்கு உட்படுத்தவில்லை. புத்தர் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை விமர்சித்தார்; இருந்தபோதிலும், பௌத்த மத சித்தாந்தம் பின்னர் உருவானபோது, கீழ் சாதியினரை ஒதுக்கிவைத்தல், ஒடுக்குதல் பற்றி அழுத்தமாக விமர்சனம் செய்வதைவிட, விலங்குகளைப் பலியிடுதல், பிராமண ஆதிக்கத்தை எதிர்ப்பது போன்ற நடைமுறைகள் மீதே கவனம் செலுத்தியது.
வரலாற்றின் சரியான கால வரிசை
இந்தியாவின் வரலாற்றை காலவரிசைப் படுத்தும்போது அதனை பழங்காலம், இடைக்காலம் மற்றும் நவீன காலம் என வரிசைப்படுத்தும் மரபு காலனிய வரலாற்றியல் எழுத்துகளில் தொடங்கி அண்மைக்காலம் வரையில் தொடர்வதை காண முடிகிறது. காலனிய வரலாற்றியல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ஆங்கிலேயருக்கு முந்தைய காலகட்டத்தின் இந்திய வரலாற்றை மத அடையாளத்தின் அடிப்படையில் இந்து மற்றும் முஸ்லீம்களின் காலங்களாகப் பிரித்தது.
கிபி 1206-க்கு முந்தைய மொத்த காலமும் (1206 டெல்லி சுல்தான்கள் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தைக் குறிப்பிடுவது). அல்லது கிபி 1000க்கு முந்திய காலம் (இது கஜினி முகம்மதுவின் படையெடுப்புகளைக் குறிக்கிறது) இந்திய வரலாற்றின் ‘இந்துக் காலம்’ என்று முத்திரை குத்தப்பட்டது.
கிபி 1000. கஜினி முகம்மதுவின் படையெடுப்பு அல்லது டெல்லி சுல்தான்கள் ஆட்சிக்காலத்தின் தொடக்கமான கிபி 1206 முதல், பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்திய வரலாற்றின் காலம் ‘முஸ்லிம் காலம்’ என்று பரவலாகக் குறிப்பிடப்பட்டது.
கிழக்கிந்திய கம்பெனி வங்காளத்தைக் கைப்பற்றியது ஆங்கிலேயர் காலத்தின் தொடக்கமாகக் கருதப்பட்டது. இந்த கால வரிசையானது ஜேம்ஸ் மில் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. அவருடைய இந்திய வரலாறு பற்றிய படைப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் இந்த விஷயத்தில் மிகவும் அதிகாரப்பூர்வமான காலனிய வரலாற்றியல் எழுத்தாக இருந்ததால், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜேம்ஸ் மில், கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரி ஆவார்: 1819 முதல் இங்கிலாந்தில் அதற்கு சேவையாற்றி வந்தார் (அவர் இந்தியாவிற்கு வரவே இல்லை). செல்வாக்கு மிக்க தாக்கம் செலுத்திய அவருடைய ‘பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு’ என்ற நூல் 1817-18 காலத்தில் வெளியானது. (முதல் பதிப்பு, லண்டன், 3 தொகுதிகள்). அதில் அவர் பிரிட்டிஷ் ஆட்சியின் அறிவாற்றல் மற்றும் மேன்மை பற்றி பல கருத்துகளை முன்வைத்தார். பின்தங்கியதாக சித்தரிக்கப்பட்ட இந்திய சமூகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது பிரிட்டனின் வரலாற்றுப் பொறுப்பு என்றார்.
இந்திய சமூகம் மாற்றத்துக்கு உட்படவேயில்லை என்றும், ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவுக்கு உண்மையில் ஒரு வரலாறு இல்லை; குறிப்பிடத்தக்க சாதனைகள் எதுவும் இல்லை என்றும் வலியுறுத்தினார். ஜேம்ஸ் மில் மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தியது பயன்பாட்டு கருத்தியல் போக்கு ஆகும். இந்தியாவின் பண்டைய கடந்த காலத்தின் மீது சில அபிமானங்களைக் கொண்டிருந்த வில்லியம் ஜோன்ஸ் போன்ற பிரிட்டிஷ் அறிஞர்கள், பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி காலாண்டிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் காலாண்டிலும் வளர்ந்த ஆங்கிலேய கீழைத்தேய தத்துவ (ஓரியண்டலிஸ்ட்) கற்றலின் தனித்துவமான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட புனித நூல்களில் முக்கிய கவனம் செலுத்திய கீழைத்தேய தத்துவக் கருத்தியல் தாக்கம் காரணமாக, இந்தியாவின் பண்டைய கடந்த காலத்தின் மீது இவர்கள் உயர்வான எண்ணம் கொண்டிருந்தனர்.
1784-இல் நிறுவப்பட்ட ஏசியாட்டிக் சொசைட்டி (கல்கத்தா), மற்றும் 1800-இல் நிறுவப்பட்ட ஃபோர்ட் வில்லியம் கல்லூரி (கல்கத்தா) போன்ற நிறுவனங்களின் மூலம் கீழைத்தேய தத்துவப் புலமை வளர்க்கப்பட்டது. மேலும் இந்த நூல்களைப் புரிந்துகொள்வதற்கு, தங்களுடன் பணிபுரிந்த உள்ளூர் பண்டிதர்களின் விளக்கங்களை பெரிதும் நம்பியவர்கள், ‘இந்துக் காலத்தின்’ இந்தியா முழுவதுமாக நாகரீகமற்றதாக இல்லை என்பதைத் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டனர். ஆயினும்கூட அது தேக்கமடைந்து முன்னேற முடியாததாக இருந்தது. மேலும், “இந்துக் காலத்தின்” சிறு சாதனைகள் முஸ்லீம் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டுவிட்டன. இறுதியில் இந்திய சமுதாயத்தை மீட்டு, முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர்கள் ஆங்கிலேயர்கள். இந்த யோசனைகள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வகுப்புவாத வரலாற்றாய்வுக்கான முக்கிய கூறுகளை வழங்குவதாகும். இதனால் ‘பண்டைய இந்தியா என்பது ‘இந்து நாகரிகத்துடன்’ சமப்படுத்தப்பட்டது; மற்றும் ‘இடைக்கால இந்தியா’ என்பது முஸ்லீம்களின் வெற்றியின் காலமாகவும், இந்தியாவை முஸ்லீம்களுக்கு அடிபணியச் செய்ததாகவும், இருண்ட சகாப்தமாகவும் முன்வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி பற்றி எந்த விமர்சனமும் இல்லை.
இஸ்லாமிய படையெடுப்பாளர்கள்/ ஆட்சியாளர்கள் மற்றும் இந்துக்கள் (மற்றும் முகலாயர்களின் சூழலில், சீக்கியர்களும்) இடையே மோதல்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டன. இந்தக் கதையில் காலனித்துவ எதிர்ப்புக்கு இடமில்லை. இந்தக் கருத்துகள் வகுப்புவாத வரலாற்றியலில் முதன்மைப்படுத்தப்படுகின்றன. அத்தகைய கால வரிசைப்படுத்துதலின் மற்றொரு முக்கிய பிரச்சனை என்னவென்றால், முழு துணைக்கண்டத்திற்கும் ஒரே மாதிரியான காலவரையறை மற்றும் காலவரிசைக் கட்டமைப்பை வரையறுத்துள்ளது.
- இந்து இந்தியா அல்லது பண்டைய இந்தியா (கி.பி. 1000 / கி.பி. 1206 வரை வரலாற்றுக்கு முந்தைய காலம்); முஸ்லீம் இந்தியா அல்லது இடைக்கால இந்தியா (1000/1206 முதல் 1707-அவுரங்கசீப் இறந்த ஆண்டு): மற்றும் பிரிட்டிஷ் இந்தியா அல்லது நவீன இந்தியா (1707-1947).
- மிக சமீபத்திய பாடத்திட்டங்களில், புத்தகங்களில், பண்டைய இந்தியா (வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் கி.பி 750 வரை): இடைக்கால இந்தியா (750 முதல் 1750 வரை); மற்றும் நவீன இந்தியா (1750-1947) என்று காலகட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. கி.பி 750 இன் முக்கியத்துவம் என்னவென்றால், இது குறிப்பாக தீபகற்ப இந்தியாவில், பிராந்திய (ரீஜனல்) அரசியல்களின் தோற்றத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, மேலும், இன்னும் பழைய புரிதலான அரேபியா சிந்துவை வெற்றி கொண்டது (712). மற்றும் வடமேற்கு இந்தியாவில் இஸ்லாமியர்களின் நுழைவு ஆகியவை முந்தைய சகாப்தம் முடிவுறுவதைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த காலகட்டத்தின் மாற்றியமைக்கப்பட்ட பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வரிசைப்படுத்தல், பண்டைய இந்தியா (வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் கிபி 600 வரை); முன் இடைக்கால இந்தியா (600 முதல் 1200 வரை); இடைக்கால இந்தியா (1200 முதல் 1750 வரை) மற்றும் நவீன இந்தியா (1750 முதல் 1947 வரை). 600 முதல், ராஷ்ட்ரகுடாக்கள், சாளுக்கியர்கள், பாலர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், சேரர்கள் மற்றும் சோழர்கள் போன்ற பல பிராந்திய அரசியல்கள் உருவாயின. அவர்களின் தோற்றம் உள்ளூர் மற்றும் பிராந்திய மட்டங்களில் ஏற்பட்ட வளர்ச்சியின் வெளிப்பாடாக இருந்தது. அந்தந்த அரசியல் அமைப்புகளின் அரசியல் கட்டமைப்புகள், கலாச்சாரம், மொழி, மத நடைமுறைகள், கருத்துகள், கலை மற்றும் கட்டிடக்கலை பாணிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட பிராந்திய பண்புகளை பெற்றிருந்தன.
சில மார்க்சிய அறிஞர்கள் நிலப்பிரபுத்துவத்தின் கூறுகளை 600ஆம் ஆண்டிலிருந்து பார்க்கின்றனர். இடைக்கால இந்தியா என்பது டெல்லி சுல்தான்களின் காலம் (1200 முதல் 1520கள் வரை) மற்றும் முகலாய இந்தியா (1520கள் முதல் 1750 வரை) என இரண்டு வெவ்வேறு துணைக் காலங்களாகப் பிரிக்கப்படுகிறது. பெரும்பாலான பாரம்பரிய பாடத்திட்டங்கள் வம்ச மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் அவை முக்கியமாக வட இந்திய சமவெளிகளின் வளர்ச்சியை மையமாகக் கொண்டுள்ளன.
இந்த அணுகுமுறையில் கங்கை யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி, இந்திய துணைக்கண்டத்தின் மையமாக உள்ளது என்று ஒரு அனுமானம் உள்ளது. எனவே இப்பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தென்னிந்தியாவின் பல பகுதிகளின் சமூக அமைப்புகளும் துணைக்கண்டத்தின் வடகிழக்கு பகுதிகளும் தனித்துவமான வரலாற்றுப் பாதையைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஹரப்பா நாகரீகம் பற்றிய விவாதங்கள் இந்தப் பகுதிகளுக்குப் பொருந்தாது. மேலும், இந்த அனைத்து காலவரிசைத் திட்டங்களிலும் பழங்குடிகள் ஏறக்குறைய விலக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பெரிய இடைவெளியாகும். குறிப்பாக காலனித்துவ காலத்திற்கு முந்தைய சூழலில், துணைக் கண்டத்தின் பல பகுதிகளில், குறிப்பாக மத்திய இந்தியாவில், இந்த சமூகங்கள் வசித்து வந்தன. கெடுவாய்ப்பாக இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பற்றாக்குறையால் இந்த இடைவெளியை உடனடியாக நிரப்புவது அவ்வளவு எளிதானதல்ல. இருந்தபோதிலும், இந்திய வரலாறு குறித்த எந்தவொரு விவாதமும் இந்தப் பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நிலவுடைமை சமுதாயம் – மேலிருந்து உருவாக்கம் !
குப்தர்கள் காலத்தின் முடிவில் குறிப்பிடத்தக்க பொருளாதார, அரசியல் மாற்றங்கள் உருவாகின (குப்தர் வம்சம் கி.பி. 300 மற்றும் 550 க்கு இடையில் ஆட்சி செய்தது). குப்தப் பேரரசின் முக்கிய பகுதி மேற்கு கங்கை சமவெளியாக இருந்தது. ஆனால் அதன் அரசியல் மேலாண்மை இந்திய துணைக்கண்டத்தின் பகுதிகளுக்கு விரிவடைந்தது. 600 முதல், ராஷ்டிரகூடர்கள்(ராஷ்ட்ராகுடாக்கள்), சாளுக்கியர்கள், பாலர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், சேரர்கள் மற்றும் சோழர்கள் போன்ற பல பிராந்திய அரசுகள் உருவாகின.
பெரும் குப்தர்களுக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்ட இரண்டு முக்கிய வளர்ச்சி போக்குகள் (இனிமேல் காலகட்டம் என்பது கி.பி. மட்டுமே வேறுவிதமாகக் குறிப்பிடாத வரை): i) நகர்ப்புற மையங்களின் வீழ்ச்சி: மற்றும் ii) பணப் பற்றாக்குறை. இந்த காலகட்டம் பற்றிய சமீபத்திய எழுத்துகள் பல இந்த வளர்ச்சிப்போக்குகள் பற்றிய ஆதாரங்களை மறுக்கின்றன; மேலும், நகர்ப்புற மையங்கள் வீழ்ச்சியடையவில்லை என வாதிடுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனுடன் தொடர்புடைய மற்றொரு வளர்ச்சிப்போக்கு, அரசினால் நிலம் வழங்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகரித்தது.
இது குப்தர்கள் காலத்தின் பிற்பகுதியில் முக்கியத்துவம் பெற்று குப்தர்களுக்குப் பிந்தைய காலத்தில் மிகவும் பரவலாகியது. நிலம் மற்றவர்களுக்கு அளிக்கப்பட்டபோது – பல்வேறு நிபந்தனைகளை உள்ளடக்கியிருந்தது. நில உரிமையாளருக்கு, இந்த கால கட்டத்தில் முடியாட்சிக்கு, நிலம் பெற்றவர்கள் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். மறுபுறத்தில் நிலம் பெற்றவர்கள் பிறருக்கு நிலத்தை அளித்து அதன் மூலம் உழைப்பு சேவை அல்லது குத்தகை மூலமாக உபரியை பெற்றனர். இந்த பிரிவு நிலப்பிரபுக்களாக உருவாயினர். இந்த வகை நில உடமையாளர்கள் நிதி, நீதித்துறை மற்றும் இராணுவ அதிகாரங்களையும் பெற்றனர்.
ஆர்.எஸ்.சர்மா, குப்தர்களுக்குப் பிந்தைய காலத்தில் (இடைக்காலத்தின் ஆரம்ப காலம்) தோன்றிய சமூக உருவாக்கத்தை ‘நிலப்பிரபுத்துவம்’ என்று வகைப்படுத்தினார். இது கோசாம்பியின் “மேலிருந்து நிலப்பிரபுத்துவம்’ என்ற கருதுகோளுக்கு நெருங்கி வருகிறது. இதில் அரசின் மானியங்கள் (நிபந்தனைகளுடன் கூடிய நில விநியோக ஏற்பாடு) நிலப்பிரபுத்துவத்திற்கு வழிவகுத்தன. இத்தகைய மானியங்களை அதிகமாகப் பெற்றவர்கள் பிராமணப் புரோகிதர்கள். இந்த மானியங்களின் நோக்கம் கருத்தியல் ரீதியானதும், விவசாயப் பரப்பின் விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டதுமாகும். இருப்பினும் இது, ‘கீழிருந்து நிலப்பிரபுத்துவம்’ என்ற விதத்தில் கிராமப்புற சமூகத்தில் நிலவும் வேறுபாட்டின் காரணமாக நிலப்பிரபுக்கள் தோன்றிய சாத்தியங்களை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை.
நில மானியங்கள் இடைக்கால ஐரோப்பாவின் ஃபீஃப் முறையை ஒத்ததாக உள்ளன (fif – அடிமை தன் உழைப்புக்கு ஈடாக நில உடமையாளரிடமிருந்து உயிர்வாழத் தேவையான வருவாயைப் பெறுதல்). ஆனால் இந்த நிலப்பிரபுத்துவ அரை அடிமைத்தனம் இங்கு பரவலாகக் காணப்படவில்லை. குப்தர்கள் ஆட்சிக் காலத்தின் முடிவில் சூத்திரர்கள் தங்களுடைய அடிமை நிலையினை (பெரும்பாலும் சூத்திர எதிர்ப்பின் மூலம்) இழந்து, வைசியர்களுடன் சேர்ந்து, கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளின் பெரிய கூட்டத்தின் ஒரு பகுதியாக மாறியதாகக் கருதப்படுகிறது.
சாதிய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உயர்ந்த நிலையிலிருந்த நிலப்பிரபுக்களால் உபரி கையகப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் எண்டோகாமஸ் (ஒரு சாதிக்குள்ளேயே பெண் கொடுத்து- எடுத்துப் புழங்கக்கூடிய) சாதிகள் (தளர்வாக ‘உப-சாதி’ என்று மொழிபெயர்க்கப்பட்டது) என்ற கருத்து உருவாகி, பார்ப்பனிய சமூக அமைப்பின் முக்கிய அலகாக சாதி நிறுவப்பட்டது. குப்தர்களுக்குப் பிந்தைய காலத்தில் சாதிகள் பெருகி, வர்ண அமைப்பு நேரடியான செயல்பாட்டுத் தன்மையை இழந்தது. இப்போது வர்ணமானது அகில இந்திய அளவில் சாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் ஒரு கோட்பாடு மட்டுமே. உப-சாதி முறை, அன்றாட வாழ்வில் சமூக மற்றும் பொருளாதாரப் படிநிலையை நிர்ணயித்தது.
குப்தர்களுக்குப் பிந்தைய காலத்தில் உருவான ‘நிலப்பிரபுத்துவ’ சமூக உருவாக்கம் (அல்லது நிலப்பிரபுத்துவப் போக்குகளுடன் கூடிய சமூக உருவாக்கம்) ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகள் (600-1200) தொடர்ந்தது. அப்போது அது வட இந்தியாவிலிருந்து துணைக் கண்டத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தென்னிந்தியப் பகுதிகளின் நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சியில் பிராமணர்களுக்கு (பிரம்மதேயம்) குறிப்பாக சோழர்களின் ஆட்சியின்கீழ் (பத்து முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டுகள்) வழங்கப்பட்ட நில மானியங்கள் முக்கிய பங்கு வகித்தன.
நிலவுடைமை நிலைபெற்றது
பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து வட இந்தியாவில் துருக்கிய அரசியல் மேலாதிக்கம் நிறுவப்பட்டது. விளைச்சலிலிருந்து அரசின் பங்கை வசூலிக்கும் உரிமையுடைய பிரதேசங்ககளை ஒதுக்கீடு செய்யும் “இக்தாஸ்” எனப்படும் முறை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறை பெரும்பாலும் ஒரு இராணுவ தன்மை கொண்ட சில கடமைகளையும் கொண்டிருந்தது. முதலில் இக்தாக்கள் மாற்றத்தக்க உரிமைகளாக இருந்தபோதிலும், பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகமது பின் துக்ளக்கின் (1325-1351) வாரிசான ஃபிரோஸ் ஷா துக்ளக்கின் (1351-88) ஆட்சியில் நில உரிமை பரம்பரையாகக் கைமாறியது. இது நிலப்பிரபுத்துவம் நிலைபெற உதவியது.
தில்லி சுல்தான்களின் ஆட்சியின் கீழ். முஸ்லிம் சமூகமும் சாதி அமைப்பின் பல அம்சங்களை ஏற்றுக்கொண்டதைத் தவிர, தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் உப-சாதிகளின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்தக் காலகட்டத்தில் பரவலான, புதிய அளவிலான கைவினைத் தொழில்நுட்பங்கள் இருந்தன. கோசாம்பி, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பரப்புவதற்கும். ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கும் முன்பு வழக்கத்தில் விரவியிருந்த முறைகளை அடித்து நொறுக்கியுள்ளனர் என்று கூறுகிறார். புதிய தொழில்நுட்ப சாதனங்கள் பாரசீக சக்கரத்தின் (13-14 ஆம் நூற்றாண்டுகள்) இறுதி வடிவமான வலது-கோண நெம்புகோல்களை உள்ளடக்கியது. புதிய கைவினைப்பொருட்கள் புதிய தொழில் குழுக்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தன. அவை காலப்போக்கில் சாதிகளாக மாறின.
மேலும், துருக்கிய மேட்டுக்குடி அமைப்பு பெரும்பாலும் விவசாய உற்பத்தியில் நேரடி ஈடுபாடு இல்லாத, நகர்ப்புற அடிப்படையிலானது. எனவே, இந்தியாவில் இது நகரமயமாக்கலின் புதிய கட்டத்திற்குத் தூண்டுகோலாக விளங்கியது. மேலும், தென்னிந்தியாவில் அமைந்திருந்த மற்றொரு நிலப்பிரபுத்துவ அரசான விஜயநகரப் பேரரசின் (பதினான்கு முதல் பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை) தோற்றம் மிக முக்கியமான வளர்ச்சியாகும். விஜயநகரப் பேரரசில் பணமயமாக்கப்பட்ட பொருளாதாரம், நகரமயமாக்கல் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை நாம் காண்கிறோம். இது நிலப்பிரபுத்துவம் முழு வீச்சில் வளர்வதைத் தடுத்திருக்கும்.
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில், முகலாயர்களின் வருகையினால், குறிப்பாக அக்பர் (1556- 1605) ஆட்சியில், ஒரு மையப்படுத்தப்பட்ட புதிய உயர் அரசு உருவானது. (அக்காலத்தின் பொருளியல் நிலைமைகளின் அடிப்படையில் நவீனத்திற்கு முந்தைய அரசாக அதன் மையப்படுத்தல் ஒரு எல்லைக்குட்பட்டிருந்தது). இது ஒரு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட திறமையான வருவாய்த் திரட்டல் முறையை உருவாக்குவதன் மூலம், குறிப்பாக முக்கிய ஆட்சிப் பகுதிகளில், உபரியைக் கையகப்படுத்தும் செயலை நெறிப்படுத்தியது. இர்ஃபான் ஹபீப்பைப் பொறுத்தவரை. முகலாய சமூக உருவாக்கம் மார்க்ஸ் குறிப்பிடும் ஆசிய முறைக்கு நெருக்கமாக உள்ளது. ஏனெனில் உபரியின் பெரும்பகுதி அரசு மற்றும் உயர் வர்க்க பிரபுக்களால் கையகப்படுத்தப்பட்டது. இது வரி-வாடகை எனப்பட்டது (கிட்டத்தட்ட அனைத்து உபரி- உழைப்பும், உழைப்பின் ஒரு பகுதி மட்டும் அல்ல, வாடகை என்ற பெயரில், அரசால் வரியாக விதிக்கப்பட்டது). இந்த வரிவிதிப்பு, அதன் உச்சக்கட்டத்தில், ஜமீன்தார்களுக்கு (நிலத்தில் உயர்ந்த உரிமைகளைப் பாரம்பரியமாக வைத்திருப்பவர்கள்) மிகக் குறைந்த உபரியையே விட்டுக் கொடுத்ததால், விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் உயிர்வாழத் தேவையானது மட்டுமே எஞ்சியது. இது முகலாயர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும் பிராந்திய விரிவாக்கத்திற்கும் ஒரு பெரிய இராணுவத்தை பராமரிக்கவும் உதவியது.
பேரரசரும் பிரபுக்களும் விவசாய உபரிகளுக்காக ஜமீன்தார்களுடன் போட்டியிட்டனர். பிரபுக்கள் எனப்படும் மன்சப்தார்களுக்கு (அரசாங்கத்தின் உயர் பதவியில் இருப்பவர்கள் அல்லது பேரரசின் அதிகாரப் படிநிலையில் உயர்நிலையில் இருப்பவர்கள்) பொதுவாக ஊதியம் பணத்திற்கு பதிலாக நிலவரியை வசூல் செய்யும் உரிமையாக வழங்கப்பட்டது. இந்தப் பணிகள் பொதுவாக ஜாகிர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன (எனவே ஜாகிர்களை வைத்திருப்பவர்கள் ஜாகிர்தார்கள் என்று அழைக்கப்பட்டனர்). ஜாகீர்தார்களுக்கு அந்தந்த ஜாகீர்களில் மாநிலத்தின் பங்கு ஒதுக்கப்பட்டது. ஜாகிர் முறைக்கு ஜாகிர்தார், மன்சப்தார் மேற்கொள்ள வேண்டிய இராணுவப் பொறுப்புகள் உட்பட சுல்தான் காலத்தின் இத்தாவுடன் சில ஒற்றுமைகள் இருந்தன.
முகலாய அரசு உபரியின் பெரும் பகுதியை நில வரியாகக் கையகப்படுத்தியதன் மூலம் அதை கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு மடைமாற்றியது. முகலாயர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வருவாயை முறையாகப் பதிவு செய்ய முற்பட்டதில், ஜமீன்தார்கள் மற்றும் இடைத்தரகர்களின் அதிகாரத்தையும், தன்னிச்சையான அபகரிப்புகளையும் ஓரளவு குறைக்க முடிந்தது. விவசாயிகள் சில சமயங்களில் அரசுக்கும் ஜமீன்தார்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தி கூட்டு சேர்ந்து தங்கள் நிலையை மேம்படுத்திக் கொள்ள முயன்றனர். எவ்வாறாயினும், பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இல்லாத சூழ்நிலையில் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் மீதான சுரண்டல் தீவிரமடைந்ததையே காட்டுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரரசின் வீழ்ச்சிக்கு இதுவே அடிப்படைக் காரணமாக அமைந்தது.
காலனித்துவ மற்றும் வகுப்புவாத வரலாற்றியல் மற்றும் கல்விப் பாடத்திட்டங்கள், முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு அவுரங்கசீப்பின் (ஆட்சிக்காலம், 1658-1707) ‘மதக் கொள்கைகள்’ மற்றும் ‘மத வெறியே பிரத்தியேகமான காரணம் என்று கூறுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இடைக்கால சமூக உருவாக்கம் அல்லது முகலாய சமூக உருவாக்கத்தின் நெருக்கடியின் வெளிப்பாடாக இருந்த விவசாய நெருக்கடி பரவலான விவசாயிகளின் எதிர்ப்பைத் தோற்றுவித்தது. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஜாட்கள், சீக்கியர்கள் மற்றும் மராட்டியர்களின் கிளர்ச்சிகளில் இந்த எதிர்ப்பு அதன் மிக முக்கிய கட்டத்தை எட்டியது. முகலாயப் பொருளாதாரம் பற்றிய இர்பான் ஹபீப் அவர்களின் ஆய்விலிருந்து மேற்கூறிய பெரும்பாலான விவாதங்கள் பெறப்பட்டன. அவர் முகலாயப் பேரரசின் சமூக உருவாக்கத்தை ‘நிலப்பிரபுத்துவம்’ என்று வகைப்படுத்தத் தயங்குகிறார்; உண்மையில் அவர் முகலாயர் காலத்தின் சமூக உருவாக்கத்தை ‘ஆசிய முறை’ என்று அழைக்கப்படும் மார்க்ஸின் புரிதலுக்கு மிகவும் நெருக்கமானதாகக் கருதுகிறார்.
முதலாளித்துவ முறை
ஏன் இந்திய சமூகம் முதலாளித்துவ முறைக்கு பரிணமிக்கவில்லை? முகலாய வீழ்ச்சி மற்றும் காலனி ஆதிக்கம்: முகலாயப் பேரரசின் வீழ்ச்சி ஐரோப்பிய காலனித்துவ எழுச்சி இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெற்றது. இந்த சமூக அமைப்பை அதன் போக்கில் இயங்க அனுமதித்திருந்தால் என்னவாக மாற்றமடைந்திருக்கும்? (அதாவது, காலனித்துவம் தலையிடாமல் இருந்திருந்தால்) அது முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தனவா? என்ற கேள்வி எழுகிறது. காலனித்துவ காலத்திற்கு முந்தைய சமூக அமைப்பின் இறுதிக் கட்டத்தில் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன என்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். மேலும் முகலாயப் பொருளாதாரம் அதிக அளவில் பணமயமாக்கப்பட்ட பொருளாதாரமாகவே இருந்தது. நில வரியின் பெரும்பகுதியைப் பணமாகவே வசூலித்ததன் மூலம் இது மேலும் வலுப்பெற்றது (இதுதவிர, வரி பொருளாகக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும், பணமாக மாற்றிக் கொள்ளப்பட்டது).
அப்படியானால், முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு மாறுவதற்கு இன்றியமையாததாகக் கருதப்படும் சில கூறுகளை, காலனித்துவ காலத்திற்கு முந்தைய சமூக அமைப்பின் இறுதிக் கட்டம் கொண்டிருந்தது எனில், இந்தியாவில் அத்தகைய மாற்றம் ஏற்படுவதைத் தடுத்தது எது? வரலாற்று வளர்ச்சியின் ஒரு முக்கியமான தருணத்தில் உபரியின் பெரும்பகுதி கொள்ளை அடிக்கப்பட்டு காலனித்துவத்திற்கு காணிக்கையாக தரப்பட்டதே மாற்றத்தைத் தடுத்தது என்பது சாத்தியக்கூறான விளக்கமாகும்.
ஆனால் ஹபீப் 1971-இல் வெளியிடப்பட்ட ‘முகலாய இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சியின் சாத்தியக்கூறுகள்’ பற்றிய முக்கியமான கட்டுரையில் மிகவும் ஆழமான ஒரு வாதத்தை முன்வைத்துள்ளார். [இர்பான் ஹபீப், ‘முகலாய இந்தியாவின் பொருளாதாரத்தில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான சாத்தியங்கள், விசாரணை, புதிய வரிசை, III, எண்.3, 1971, பக் 1-56)]. பொருட்களின் உற்பத்தி மற்றும் பணப்பரிமாற்றம் ஆகியவை முகலாய பிரபுக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்குள் மட்டுமே பெருமளவில் நடைபெற்ற சூழ்நிலையே இருந்தது என்பதை ஹபீப்பின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியது. வணிகர்களும் வங்கியாளர்களும் இந்த வர்க்கத்தினருடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டு, இவர்களைச் சார்ந்தே இருந்தனர். இந்த நிலைமை சமூக மாற்றத்திற்கான கிரியாவூக்கிகளின் செயல்பாட்டினை கடுமையாக பாதித்தது. கூடுதலாக, முகலாயப் பேரரசின் வீழ்ச்சியானது பொருளாதார நடவடிக்கைகளில் தமக்கான சொந்த அடித்தளமற்றிருந்த வணிக வர்க்கத்தை மேலும் பலவீனப்படுத்தியது. ஹபீப், பின்னர் எழுதிய மற்றொரு கட்டுரையில் ‘நிலப்பிரபுத்துவத்திற்குப் பிந்தைய ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு……. ‘ நகர்ப்புற கைவினைப் பொருட்களுக்கான சந்தையின் மாறுபட்ட தன்மையில் இருந்தது எனக் கூறுகிறார். ஐரோப்பாவில் இப்பொருட்களுக்கான சந்தை, கிராமப்புற உயர் வர்க்கத்தினர் மற்றும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரை உள்ளடக்கியது. ஆனால் இந்தியாவிலோ அது பிரபுக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியாவில், காலனித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பின் இறுதிக் கட்டத்தில், ஐரோப்பாவில் மாறிய அதே முறையில் முதலாளித்துவத்திற்கு மாறுவதைத் தடுக்கும் உள்ளார்ந்த காரணிகள் இருந்தன.
இதுவரை வெளியானவற்றில் ஒரு உடைப்பை ஏற்படுத்தியது, சமீபத்தில் வெளியான கென்னத் பொமரான்ஸ் எழுதிய ‘தி கிரேட் டைவர்ஜென்ஸ்: சீனா, ஐரோப்பா மற்றும் நவீன உலகப் பொருளாதாரத்தை உருவாக்குதல்” (2000) ஆகும். அவர் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் முன்னேறிய பொருளாதாரங்களுக்கிடையே குறிப்பிடத்தக்க எந்த வேறுபாடுகளும் இல்லை; ஐரோப்பாவின் முதலாளித்துவ வளர்ச்சி விதிவிலக்கானதல்ல என ஏற்கத்தக்க வகையில் உறுதியான முறையில் வாதிட்டார். குறைந்தது, 18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்நிலைதான். முக்கியமாக சீனாவில், குறிப்பாக யாங்சே டெல்டாவில் அவர் கவனம் செலுத்தினார். அங்கு நிலவிய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில், தொழிலாளர் உற்பத்தித்திறன், தனிநபர் வருமானம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை இங்கிலாந்தின் அதே மட்டத்தில் இருந்தன. அமெரிக்கா, இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்ததால், நிலம் மற்றும் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க இங்கிலாந்தினால் முடிந்தது; மேலும், அதிக அளவில் நிலக்கரி கிடைத்ததால், எரிபொருள் தேவைக்காக மரத்திற்கு பதிலாக நிலக்கரிக்கு மாறுவதற்கு வழிவகுத்தது; இது தொழில்மயமாக்கலுக்கு மிக முக்கிய காரணியாக அமைந்தது. பின்னர் இதைப்போலவே, இந்தியாவிற்கும் ஐரோப்பாவின் முன்னேறிய பகுதிகளுக்குமான ஒற்றுமைகளை, பிற அறிஞர்கள் சுட்டிக்காட்டினர். அதாவது, மேற்கு ஐரோப்பாவை தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதமுடியாது.
திரிக்கப்பட்ட பார்வைகள்
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியானது பிராந்திய அரசியல் அமைப்புகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியது என்று திரிக்கப்பட்ட சில கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது. 18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பத்தாண்டுகளில் முகலாயர்களின் அதிகாரம் பலவீனமடைந்தடன் காரணமாக பேரரசின் கருவூலத்திற்குச் சென்ற உபரியின் அளவு குறைந்தது என்கிறது இந்தக் கண்ணோட்டம்.
(வங்காளப் பகுதிகளில் இருந்த தக்காண ஆளுநர்கள் போன்ற மாகாண அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டது, 1739-இல் ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷாவின் படையெடுப்பினால் விளைந்த பேரழிவு, மற்றும் 1740-களின் பிற்பகுதியிலிருந்து ஆப்கானிய ஆட்சியாளர் அஹ்மத் ஷா அபாதலியின் பல இராணுவப் படையெடுப்புகள் ஆகியவற்றின் காரணமாக இந்தப் பலவீனம் துரிதப்படுத்தப்பட்டது).
இது அப்பகுதியின் உயரடுக்கிலிருந்தவர்கள் செல்வத்தைக் குவிக்க உதவியது. அதே நேரத்தில் ஐரோப்பிய நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் மாகாணங்கள் சுபாஸ் மற்றும் உள்ளூர் மட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தூண்டுதலாக இருந்தன. இவ்வாறு பிராந்திய செழிப்புக்கு காரணமாக முகலாயப் பேரரசின் வீழ்ச்சி அமைந்தது. குறைந்தபட்சம் 18-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை செல்வச் செழிப்புக்கு ஒரு நேர்மறையான காரணியாக ஐரோப்பிய நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் கருதப்படுகின்றன. இது வகுப்புவாத வரலாற்றியலில், முகலாயப் பேரரசின் வீழ்ச்சியை முன்வைக்கும் விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட புரிதலாகும்.
முகலாய ஆட்சிக்கு (“இஸ்லாமிய மத ஆட்சி’ என்ற ஒப்பீடு) எதிரான ஜாட்கள். மராட்டியர்கள், ராஜபுத்திரர்கள் போன்றவர்களின் எழுச்சிகள் அல்லது சீக்கியர்களின் எழுச்சி, ‘தேசிய எழுச்சிகளாக கருத்தாக்கம் செய்யப்பட்டு, கற்கால மத சமூகங்களைப் போல, உள்ளார்ந்து இயல்பிலேயே முஸ்லிம்களுக்கு விரோதமாக இருந்த கூர்மையான மத மோதலாகப் பார்க்கப்பட்டது.
அறிவுஜீவிகள் கூறுவதைப்போல், ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகளாலும், முகலாயப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பிராந்திய பொருளாதாரங்களின் எழுச்சியிலிருந்தும் 18-ஆம் நூற்றாண்டு இந்தியாவில் நடவடிக்கைகள் ஒரு தூண்டுதலைப் பெற்றன என்று நாம் எடுத்துக் கொண்டாலும் கூட, காலனித்துவத்தின் தாக்கத்தை வரலாற்று ரீதியாக நாம் இன்னும் ஆழமாக அணுக வேண்டும். முகலாயர் வீழ்ச்சியின் நீண்டகால விளைவுகளை குறைத்து மதிப்பிடும் போக்கும் இன்னும் கூடுதலாக, இந்தக் காலகட்டத்தில் காலனித்துவ தலையீட்டின் முக்கியத்துவத்தை மேலும் குறைத்து மதிப்பிடும் போக்கும் திரித்துப் பேசும் அறிஞர்களிடையே அதிகமாக உள்ளது. திரித்து பேசுவோரில் முக்கியமான பல அறிஞர்கள், முகலாய காலம் குறித்த மார்க்சியப் பார்வையை, ‘அலிகார் பள்ளி’ என்று முத்திரை குத்தி விமர்சித்தனர் (குறிப்பாக பேராசிரியர் இர்பான் ஹபீப் அலிகார் பல்கலைக்கழகத்தில் முன்னணி வரலாற்றாசிரியராக இருந்தார்).
18–ஆம் நூற்றாண்டின் தனித்துவம் முகலாயர்களின் வீழ்ச்சி மற்றும் காலனித்துவத்தின் எழுச்சி ஆகிய இரண்டிலும் உள்ளது. முகலாயப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பிராந்திய மற்றும் உள்ளூர் உயரடுக்கினர் செழிப்புற்றதைக் கொண்டாட ஒருவர் விரும்பினாலும், இந்த இரண்டு வளர்ச்சிகளும் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அவர்களின் வளர்ச்சி சிதைந்தது என்பதே உண்மை. மிக முக்கியமாக, கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ வலிமையை நீண்ட காலத்திற்கு எதிர்த்து நிற்க, பிராந்திய / மாகாண/ உள்ளூர் உயரடுக்குகளுக்கு பலம் இல்லை. இது, 18–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனித்துவ எழுச்சியை எளிதாக்கியது.
காலனி ஆதிக்க காலம்
ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதற்கு ஒரு நீண்ட முன்வரலாறு உண்டு. இந்தியத் துணைக்கண்டத்தில் 16–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே காலனித்துவ தலையீடு இருந்துவருகிறது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் கரீபியன் கடலுக்கு (1492) வந்ததானது. இறுதியில் அமெரிக்க கண்டத்தை காலனியமயமாக்க உதவியதைப் போலவே, வாஸ்கோடகாமா போர்ச்சுகலிலிருந்து இந்தியாவிற்கு வந்த பயணம். (1497-98) ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளை அடிமைப்படுத்த வழிவகுத்தது. இது வரலாற்று செயல்முறைகளில் ஒரு இயக்கத்தைக் குறிக்கிறது. சுமார் கி.பி.1500 முதல், ஸ்பெயின், போர்ச்சுகல், நெதர்லாந்து (ஹாலந்து), இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியவை ஐரோப்பிய நாடுகள் அல்லாத சமூகங்களை காலனியமயப்படுத்துவதில் ஈடுபட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகளாக இருந்தன.
16- ஆம் நூற்றாண்டிலிருந்து 18–ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இரண்டு நூற்றாண்டுகளில் இச்சமூகங்களின் பிராந்திய அரசியல் வலிமை மற்றும் சுதந்திரம் பாதிக்கப்பட்டது. டச்சு கிழக்கிந்திய கம்பெனி போன்ற ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் (அவர்களுக்கு முன் போர்த்துகீசியர்கள்) ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த பெரிய அளவில் வன்முறையில் ஈடுபட்டன. மிகக் குறைந்த விலையில் (அல்லது பணம் தராமல் பொருட்களை வாங்குவதற்கும். ஆசிய கடல்வழி வர்த்தகத்தின் பாரம்பரிய வணிக வலைப்பின்னல்களை சீர்குலைப்பதற்கும் அவர்கள் தங்களின் உயர்ந்த ஆயுத பலத்தைப் பயன்படுத்தினர். அவர்களின் கப்பல்கள் வணிகக் கப்பல்கள் மட்டுமல்ல; துப்பாக்கிகள் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் கொடிய திறன் கொண்ட பல்வேறு வகையான போர்க்கருவிகளைக் கொண்டிருந்த ஆயுதமேந்திய கடற்படைக் கப்பல்களாகும்.
18–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்தும் பிரான்சும் பெரும் காலனித்துவ சக்திகளாக உருவெடுத்தன. ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் 1600-ஆம் ஆண்டிலும், பிரெஞ்சு நிறுவனம் 1664-ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்டிருந்தபோதிலும், 17–ஆம் நூற்றாண்டின் இறுதியில், டச்சு கிழக்கிந்திய நிறுவனம் வீழ்ச்சியடைந்த பிறகே, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு நிறுவனங்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் காலூன்றின. 18–ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், இரு நிறுவனங்களுக்கிடையேயான மோதலின் முக்கிய களமாக தென்னிந்தியா மாறியது. இது, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் இடையே காலனிகளுக்கான நீண்ட போராட்டத்தின் ஒரு பகுதியாகும். நூற்றாண்டு முழுவதும் இருவரும் மேலாதிக்கத்திற்கான உலகளாவிய போட்டிகளில் ஈடுபட்டு ‘நெப்போலியன் போர்’களில் உச்சக்கட்டத்தை அடைந்தனர். நெப்போலியனின் தோல்வியுடன், அடுத்த 100 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தின் மேலாதிக்கம் உறுதி செய்யப்பட்டது.
1815-லிருந்து முதல் உலகப் போர் வெடிக்கும் வரை முதலாளித்துவப் பொருளாதாரத்தில் சர்வதேச அளவில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயக் கடற்படையை எதிர்க்க யாரும் இல்லாததால், ஒரு பரந்த காலனித்துவ சாம்ராஜ்யத்தை கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அதற்கு சாத்தியமாயிற்று. அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தில் இங்கிலாந்தின் பங்கேற்பு (ஆப்பிரிக்காவில் கைப்பற்றப்பட்ட அடிமைகள் கரும்பு, புகையிலை மற்றும் பருத்தித் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அட்லாண்டிக் வழியாக அமெரிக்கக் கண்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன் பொருளாதாரத்திற்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித் தந்தது. 19-ஆம் நூற்றாண்டில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அதிக நிலப்பரப்பை இங்கிலாந்து தன் ஆட்சியின் கீழ்க் கொண்டிருந்தது. ஆயினும், இந்தியா அதன் காலனித்துவப் பேரரசின் மிக முக்கியமான அங்கமாக இருந்தது.
முதலாளித்துவ பிரிட்டன் நிலப்பிரபுத்துவ இந்தியாவை அடிமைப்படுத்தியது எப்படி? இங்கிலாந்தை உலகின் தலைசிறந்த காலனித்துவ சக்தியாக இறுதியாக மாற்றியது அதன் பொருளாதாரமே. 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து செய்யப்பட்ட தொழில்மயமாக்கல் காரணமாக இங்கிலாந்து உலகிலேயே மிகவும் வளர்ந்த பொருளாதாரமாக மாறியது. இங்கிலாந்தில் தொழில் புரட்சியின் முதல் கட்டம் (1760-80) வேகமெடுத்ததும், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வங்காளத்தை (மேலும் பீகார் மற்றும் ஒரிசாவின் சில பகுதிகளையும்) கைப்பற்றியதும் ஒரே காலக்கட்டத்தில்தான் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. பிளாசி போர் (1757), அதைத் தொடர்ந்த பக்சார் போர் (1764) ஆகியவை ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் அதிக நிலப்பரப்பைத் தன் ஆளுமையின் கீழ் கொண்டிருந்த பெரும் சக்தியாக மாற்றியது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியர்கள் வங்காளத்தை நேரடியாகக் கொள்ளையடித்தது மட்டுமல்லாது, அந்நிறுவனம் இப்போது இங்கிலாந்தின் தொழிற்சந்தைக்கு பருத்தித் துணி போன்ற பொருட்களை விலை கொடுத்து வாங்கத் தேவையான விலைமதிப்பற்ற உலோகங்களை அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வராமல், கிழக்கிந்தியாவின் வரி வருவாயைப் பயன்படுத்தி வாங்கலாம். இவ்வாறாக, இந்தியாவிலிருந்து வளங்கள் இடையறாது சுரண்டப்பட்டு இங்கிலாந்திற்கு காணிக்கையாக்கப்படுவது நடைமுறைக்கு வந்தது.
கிழக்கிந்திய கம்பெனியின் வங்காளம் மற்றும் பீகார் (1757) வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த 100 ஆண்டுகளுக்கு மேல், பர்மா (மியான்மர் உட்பட, இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் அடிபணியச் செய்யும் வேலைகள் நடைபெற்றன. அதிக இரத்தம் சிந்தப்பட்டு, வன்முறை மூலமாகவே இந்த வெற்றியை சாத்தியமாக்க முடிந்தது என்பது வெள்ளிடை மலை. இந்தியத் துணைக்கண்டத்தில் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நிலப்பரப்பை அதிகரிக்க, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நம்மீது போர்கள் சுமத்தப்பட்டன: 1799 வரை நீடித்த நான்கு கடுமையான மைசூர் போர்கள், 1818 வரை மராட்டியர்களுக்கு எதிரான மூன்று பெரிய போர்கள் (இதில் இரண்டாம் ஆங்கில-மராத்தா போர் (1802-05] அதிக இரத்தம் சிந்தப்பட்ட ஆங்கிலேயர்களுக்கு அதிக இழப்பை ஏற்படுத்திய மிகவும் கடினமான போராகும்); நேபாளப் போர் (1814-16); ஆங்கிலேயர்கள் கிட்டத்தட்ட தோற்கும் நிலைக்குச் சென்று பின் மீண்ட முதல் பர்மா போர் (1824-26). இப்போர்கள் துணைக்கண்டத்தினுடைய வடகிழக்கின் பெரும்பகுதியை காலனித்துவ ஆட்சியின்கீழ் கொண்டு வந்தது: 1839-49க்கு இடையில் சிந்து, பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பஞ்சாபில் நடந்த தொடர்ச்சியான போர்கள் வடமேற்கு இந்தியாவைக் கைப்பற்ற வழிவகுத்தன.
19-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் நடந்த முதல் ஆப்கானிஸ்தான் போர் (1839 – 42), ஆங்கிலேய காலனித்துவம் சந்தித்த மிகப்பெரிய இராணுவப் பேரழிவில் முடிவடைந்தது. அவர்களின் பின்னணிப் படை முழுவதும் அழிக்கப்பட்டது. முதல் பஞ்சாப் போர் (1845-46) மற்றும் இரண்டாம் பஞ்சாப் போர் (1848-49) ஆகியவையும் தேவையில்லாமல் (மற்ற எல்லாப் போர்களையும் போலவே) அப்பகுதி மக்கள் மீது திணிக்கப்பட்ட மிகக் கடுமையான யுத்தங்களாகும். இதன் மூலம், மிகப்பெரிய லாகூர் பேரரசு (அப்பேரரசை உருவாக்கிய ரஞ்சித் சிங் 1839–இல் காலமானார்) காலனியாதிக்கத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டது. 1852-இல் நடந்த இரண்டாவது பர்மா போர் 1857–ஆம் ஆண்டின் எழுச்சிக்கு முந்தைய பெரிய போர்களில் இறுதிப் போராக இருந்தது. இதன்மூலம் ஆங்கிலேய அரசு, தெற்கு பர்மாவைக் கைப்பற்றியது. 1885-ஆம் ஆண்டின் மூன்றாவது பர்மா போருக்குப் பிறகு அவா இராச்சியத்தின் பகுதிகள், அதாவது வடக்கு பர்மா அல்லது மேல் பர்மா வெல்லப்பட்டது. மேலும் அதன் கடைசி அரசர் சிறைபிடிக்கப்பட்டு ரத்னகிரிக்கு நாடு கடத்தப்பட்டார். இவ்வாறு 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை காலனி ஆதிக்கப் போர்கள் தொடர்ந்ததைக் காணலாம்.
காலனிய கால நிலவுடைமை
பிரிட்டிஷ் ஆட்சி கட்டமைத்த நிலப்பிரபுத்துவம் கைப்பற்றப்பட்ட பகுதிகளின் செல்வத்தைச் சுரண்டி இங்கிலாந்துக்கு மாற்ற இந்தப் பிராந்திய விரிவாக்கம் உதவியது. காலனித்துவ ஆட்சி, உற்பத்தியாளர்களையும் விவசாயப் பொருளாதாரத்தையும் அழித்தது. நிலவரிவிதிப்பு முறை காரணமாக நில உறவுகள் முழுமையான மாற்றத்திற்கு உள்ளாகின.
வங்காளத்தின் வெற்றியானது நிலையான வரிவிதிப்பு முறைக்கு வழிவகுத்தது. அதே சமயம், மதராஸ் மற்றும் பம்பாய் மாகாணங்களில் ரயத்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வடக்கில் மஹல்வாரி முறையும். மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் மால்குசாரி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலத் தீர்வைகளோடு, வசூல் செய்யும் அடிப்படை முறைகளும் மாற்றம் பெற்றன. பாரம்பரியமாக மிராசுதாரர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள் அல்லது தாலுக்தாரர்களால் நிர்ணயம் செய்யப்பட்டுவந்த முறை மாற்றப்பட்டு, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளால் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. குறிப்பாக, நிலையான வரிவிதிப்புப் பகுதிகளில் வரி செலுத்தத் தவறியவர்களின் நிலங்களை புதிய நில உரிமையாளர்களுக்கு ஏலம் விடுவதற்கான விதிகளை ஆங்கிலேயர்கள் அறிவித்தனர்.
இதன் பொருள், பாரம்பரிய நில உரிமையாளர்கள் தங்கள் சொந்த நிலங்களை ஆள்வதிலிருந்து, நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு, மக்களிடமிருந்து கம்பெனிக்காக வரியை வசூலிப்பவர்களாக மட்டுமோ அல்லது விவசாயம் செய்பவர்களாக மட்டுமோ மாற்றப்பட்டனர். 1793–ஆம் ஆண்டு வங்காளம் மற்றும் பீகாரில் நிலையான தீர்வை முறை ஏற்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பின் கீழ், உற்பத்தியில் ஆள்பவரின் பங்கு மிக அதிக விகிதத்தில் – அதாவது உற்பத்தியில் 10/11 பங்கு என்று – நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டது.
அதே நேரத்தில், ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு இந்தியாவில் தனியார் நிலவுடைமையாளர்கள் என எவரும் இல்லை என்ற அனுமானத்தின் அடிப்படையில், இங்கிலாந்தில் நிலவும் வகையிலான நிலவுடமையாளர்களாக, பெரிய நிலப்பிரபுக்கள், ஜமீன்தாரர்கள் மற்றும் வரி வசூலிப்பவர்களை அரசு அங்கீகரித்தது. இந்த நிலப்பிரபுக்கள், பரம்பரை உரிமையாளராக ஆக்கப்பட்டதோடு, அரசாங்கத்திற்கு வருமானத்தை முறையாக செலுத்துவதற்கு பொறுப்பாகவும் இருந்தனர். உழவர்கள் அல்லது ரயத்துகள் தங்கள் பாரம்பரிய அந்தஸ்தை இழந்து, பெரும்பாலும் உரிமையாளர்களின் விருப்பத்துக்கேற்ப குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர்.
19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் ரயத்வாரி முறையை அறிமுகப்படுத்தினர் (முதலில் மதராஸ், பின்னர் பம்பாய் மாகாணங்களில்). ரயத்வாரி முறையின் கீழ், பெரிய விவசாயிகள் வரி செலுத்துவதற்கு பொறுப்பாக்கப்பட்டு உரிமையாளராக அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் கொள்கையை உருவாக்கிய காலனித்துவ அதிகாரிகளின் புரிதல் என்னவென்றால், தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் கிராமப்புற சமுதாயத்தில் பெரிய நிலவுடமையாளர்கள் இல்லை என்பதாகும். ரயத்வாரி தீர்வை நிலையானது அல்ல; ஒவ்வொரு 20 முதல் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் தீர்வை திருத்தப்படும்போது விகிதங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டன. மேலும் நிலத்தின் மீதான உரிமைகள் பற்றிய சரியான பதிவுகள் -இல்லாததால், விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்களில் பல வகையினர் தங்கள் பாரம்பரிய உரிமைகளை இழந்தனர் ஏனெனில் நிலவுடமையாளர்களாக ஆதிக்கம் செலுத்திய பெரிய விவசாயிகள் (உ-ம் உயர்சாதியினர். உண்மையில் உழுது பயிரிடுபவர்களாக இருக்கவில்லை.
வட இந்தியாவிலும் (அவாத் மற்றும் கங்கை யமுனைக்கு இடைப்பட்ட பகுதிகள்) மற்றும் மத்திய இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட மஹல்வாரி வரி வசூல் முறையின்படி நில உரிமையாளர்கள், மிகப் பெரிய நிலவுடமையாளர்களாகவோ அல்லது விவசாயிகள் அல்லது குத்தகைதாரர்களிடமிருந்து வரி வசூல் செய்து அதை அரசுக்கு செலுத்தக்கூடிய, பல கிராமங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரிய குடும்பங்களின் தலைவர்களாகவோ இருக்கவேண்டும். நிலையான வரிவிதிப்பு முறை, வாரணாசி மாவட்டம், ஒரிசா மற்றும் மதராஸ் மாகாணத்தின் வடக்கு பகுதிகள் சிலவற்றிற்கும் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உணவுப் பயிரிலிருந்து பணப்பயிர்களுக்கு பணமாக காலனித்துவ தலையீட்டின் மற்றொரு பொருளாதார விளைவு விவசாயத்தின் கட்டாய வணிகமயமாக்கலாகும். அதிகரிக்கப்பட்ட வரியை, அதிலும் செலுத்தவேண்டியிருந்ததால், விவசாயிகள் அவுரி (இண்டிகோ), பருத்தி மற்றும் அபின் போன்ற பணப் பயிர்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவுரி சாகுபடியானது இங்கிலாந்து துணிச் சந்தையின் தேவை மற்றும் பணப்பரிவர்த்தனை ஆகியவற்றால் தீர்மானிக்கப்பட்டது. (கால்வாய்கள் அமைத்தல் மற்றும் இதர நீர்ப்பாசனப் பணிகளுக்கென அரசால் அடிக்கடி தனியாக வரி விதிக்கப்படுவது கூடுதல் சுமையாகும்).
22 ஆண்டுகளாக (1780 முதல் 1802 வரை) கிழக்கிந்திய கம்பெனி நேரடியாக அவுரித் தொழிற்சாலைகளை ஊக்குவித்து, உலகின் முன்னணி அவுரி உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை வைத்தது. அவுரி பயிரிடுதல் தனியார் கைகளில் இருந்தபோதிலும், கிழக்கிந்தியக் கம்பெனி அவுரி பயிரிடும் நிலவுடமையாளர்களைப் பல்வேறு வழிகளில் ஊக்குவித்தது மட்டுமல்லாது, உணவுப் பயிர்களுக்குப் பதிலாக அவுரியைப் பயிரிடும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட தங்கள் நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு எதிராக, சட்ட மற்றும் நிர்வாகப் பாதுகாப்பையும் வழங்கியது. நிலங்களை நிர்வகிப்பதில் எழக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்கவும், தங்கள் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் உள்ளூர் ஜமீன்தார்களின் ஆதரவோடு, பல பொருளாதார மற்றும் பொருளாதாரம் அல்லாத சித்திரவதை உட்பட்ட அடக்குமுறைகள் நிலவுரிமையாளர்களால் வழக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
அவுரி மீதான விவசாயிகளின் அதிருப்தி மூன்று காரணங்களால் ஏற்பட்டது.
- அவுரிக்கு சரியான விலை – இல்லாமை:
- உணவுப் பயிர்கள் பயிரிடப்பட வேண்டிய அதே பருவத்தில் அவுரியும் பயிரிடப்பட்டதால் லாபம் ஈட்ட முடியவில்லை;
- அவுரியால் மண் வளம் இழந்தது.
இண்டிகோ கமிஷன் (1860) அந்த நேரத்தில் ஒரு வருடத்திற்கு இரண்டு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் மதிப்பிற்கு இருந்த அவுரி வர்த்தகத்தின் முக்கியத்துவத்தையும், ஐரோப்பிய அவுரி உற்பத்தியாளர்கள் பெரிய அமைப்பாக இருப்பதன் அரசியல் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக்காட்டியது. ஆங்கிலேய ஆட்சியில் சுரண்டல் தீவிரமடைந்ததை அவுரி உற்பத்தி எடுத்துக்காட்டுகிறது. சில பொருட்களில் காலனித்துவ அரசின் ஏகபோகம், குறிப்பாக உப்பு மற்றும் அபின் ஆகியவற்றில், சுரண்டலுக்கான இன்னுமொரு வழியாக இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியினர் உப்பு மற்றும் அபின் வர்த்தகத்திற்கு முகவர்களை நியமித்து, இப்பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகம் சட்டவிரோதமானது என்று விதிமுறைகளை இயற்றினர். உப்பு உற்பத்திக்கு வரி விதித்து, தாங்கள் குத்தகை முறையில் நியமித்த முகவர்களிடமிருந்து மட்டுமே உப்பு வாங்க முடியும் என்பதை உறுதி செய்தனர். சாதாரண விவசாயிகள் அதிக விலை கொடுத்து முகவர்களிடம் உப்பு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தியா, சீனா மற்றும் இங்கிலாந்து இடையேயான முக்கோண வர்த்தகத்தில் அபின் ஒரு முக்கிய பண்டமாக இருந்தது. பீகார் மற்றும் இன்றைய உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட அபின், சீனாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. அபின் சீனாவில் தடைசெய்யப்பட்ட பொருளாகும். எனவே அங்கு அபின் வர்த்தகம் சட்டவிரோதமானது. கடத்தப்பட்ட அபின் மூலம் கிடைக்கும் லாபம் இங்கிலாந்திற்கான தேயிலை கொள்முதல் செய்யப் பயன்படுத்தப்பட்டது. இது இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு செல்வத்தை அனுப்புவதற்கான ஒரு முக்கிய வழியாக மாறியது. 18–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, காலனித்துவ அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெற்ற விவசாயிகள் மட்டுமே அபின் உற்பத்தி செய்ய முடியும். மொத்த விளைச்சலும் அரசாங்க முகவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் வழங்கப்படும் விலை பொதுவாக உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் அதனை விளைவிக்க விரும்பவில்லை என்றபோதிலும், அவர்கள் அபின் பயிரிட நிர்பந்திக்கப்பட்டனர்.
முதல் சுதந்திர போர்
1857-ஆம் ஆண்டின் எழுச்சியானது, 19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக மிகவும் பரவலான மற்றும் வன்முறையான போராட்டமாக இருந்தது என்பது பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய இந்த எழுச்சி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.
1857-ஆம் ஆண்டு எழுச்சியானது. இந்தியா முழுவதும் நிலவிய, நீண்ட பாரம்பரியமுடைய காலனித்துவ எதிர்ப்பின் ஒரு பகுதியாகும். மேலும் காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தில் அது ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்பட வேண்டும். 1857-இன் நிகழ்வுகள் ஆழமான விவாதத்திற்கு உட்பட்டவையாக இருந்தன. இந்த மாபெரும் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முயல்பவர்களுக்கும், ஏகாதிபத்திய அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் இந்த எழுச்சியின் வரலாற்று முக்கியத்துவத்தை ஒரு புகழ்பெற்ற அத்தியாயமாக எடுத்துரைப்பவர்களுக்கும் இடையே இந்த தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்த மகத்தான எழுச்சி குறித்து பரவலாக வெளியான, குறிப்பாக வெற்றி பெற்ற ஆங்கிலேயர்களின் கண்ணோட்டத்திலிருந்து வெளியான பிரசுரங்களின் உள்ளடக்கமே தாக்கம் செலுத்தியது. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை, இந்திய நிலப்பரப்பில அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் தரப்பு நியாயங்கள் எதுவுமே பொதுத்தளத்தில் வெளியாகவில்லை. நியூயார்க் டெய்லி ட்ரிப்யூனில் வெளியிடப்பட்ட மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் எழுதிய எழுச்சி பற்றிய தொடர் கட்டுரைகள் மட்டுமே ஒரு குறிப்பிடத்தக்க சமகால விதிவிலக்காக விளங்கின.
மார்க்சும் ஏங்கெல்சும் காலனித்துவ எதிர்ப்பில் இராணுவ ரீதியிலான முயற்சிகளை உற்றுக் கவனித்து, அவற்றைத் தங்கள் கட்டுரைகளில் விரிவாகப் பதிவு செய்தனர். இந்த எழுச்சி, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியைத் தூக்கியெறிவதற்கு அல்லது குறைந்தபட்சம், அதன் வலுவைக் குறைப்பதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை, 1858-ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை அவர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் தொடர்ச்சியாகக் காணப்பட்ட பரவலான வெகுமக்கள் எதிர்ப்பு. 1857-இல் காலனித்துவத்திற்கு எதிரான பெரும் எழுச்சியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. கிராமப்புறங்களில் இந்த எதிர்ப்பு, காலனித்துவ அரசால் ஆதரிக்கப்பட்ட ஆதிக்க நிலவுடைமையாளர்களின் அடக்குமுறைக்கு எதிரான வடிவத்தை எடுத்தது. இந்த மோதல்களில் அரசு எப்பொழுதுமே நிலப்பிரபுக்களின் சார்பாக தலையிட முனைந்தது. பழங்குடி சமூகங்களின் பெரிய அளவிலான இடப்பெயர்ச்சி, இந்த மக்களுக்கும் அரசாங்கத்தின் அடக்குமுறை இயந்திரத்திற்கும் இடையே வன்முறையான மோதல்களை ஏற்படுத்தியது. 1857க்கு முன்பு விவசாய கிளர்ச்சிகள் 1857 எழுச்சிக்கு முன்னதாக 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் விவசாய எதிர்ப்பு எழுச்சி அலை இருந்தது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டவேண்டும்.
இந்த எழுச்சிகளுக்கான காரணம் கிழக்கிந்திய கம்பெனியால் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் தன்மையை எதிர்த்த போராட்டமாகும். பேரரசின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, காலனித்துவ ஆட்சியின் முதல் நூற்றாண்டில் அப்போது நிலவிய நிலப்பிரபுத்துவ முறையை மறுசீரமைக்க கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம் முயற்சி செய்தது. இம்முயற்சி பாரம்பரிய நில உரிமையாளர்கள், உழுது பயிரிடுபவர்கள் மற்றும் குத்தகைதாரர்களான விவசாயிகள் மத்தியிலும், அத்துடன் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளை நம்பியிருந்த கால்நடை வளர்ப்போர். பழங்குடியினர் மற்றும் நிலமற்ற தொழிலாளர்கள் போன்ற பிற குழுக்களிடையேயும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. பொதுவாக, 1757 – 1857-க்கு இடைப்பட்ட காலத்தில், குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு காலனிய நிர்வாக முறைகள் எதிர்ப்புக்கு வழிவகுத்தன. இவைகளில் மிக முக்கியமானது இந்தக் காலகட்டம் முழுவதிலும் காலனித்துவக் கொள்கைகள் அனைத்தையும் கட்டமைத்த நிலத்தீர்வை முறையாகும். இதன் விளைவாக அதிகாரம் இழந்த ஜமீன்தார்களின் ஒரு அதிருப்தி வகுப்பு உருவாகியது. அவர்கள் அந்தக் காலக்கட்டத்தின் பல எதிர்ப்புப் போராட்டங்களுக்கு, தாங்கள் நேரடியாகவோ அல்லது தங்கள் படைகள் மூலமாகவோ தலைமை தாங்கினர்.
காலனித்துவ நடவடிக்கைகளால் தங்கள் அதிகாரங்களை இழந்த பாரம்பரியத் தலைவர்கள் மற்றும் வரி வசூல் செய்பவர்களின் கிளர்ச்சிகளில் தலையாயதாக, தமிழ்நாட்டின் பாளையக்காரர்களின் கிளர்ச்சியைக் கூறலாம். பாளையக்காரர்களின் எதிர்ப்பு மைசூரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆங்கிலேயர்கள் 1799 – 1805-க்கு இடையில், மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டின் வலிமை வாய்ந்த உள்ளூர்த் தலைவர்களான பாளையக்காரர்களின் எதிர்ப்பை நசுக்க தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. காலனித்துவ ஆட்சிக்கு அடிபணிய ஏராளமான பாளையக்காரர்கள் மறுத்துவிட்டனர். எனவே, அவர்களுக்கு எதிராக, நான்காவது மைசூர் போருக்குப் பிறகு உடனடியாக ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை தேவைப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் எதிரிகளான பாளையக்காரர்களின் தலைவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் கட்டபொம்மன் ஆவார். சிறிது கூட சமரசம் செய்யாமல் ஆங்கிலேயர்களுடன் வலுவாக மோதினார். முக்கியமாக, முதல் பாளையக்காரப் போர் (1799) கட்டபொம்மனுக்கு எதிராக, திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்டது. சுமார் 1805 வரை தொடர்ந்த இரண்டாவது பாளையக்காரப் போர். இறுதியில், மற்ற ஆங்கிலேய எதிர்ப்பு பாளையக்காரர்களை அடக்கியது.
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி முழுமையாக நிறுவப்பட்டது. 1817-இல் குர்தா மன்னரின் தளபதியான ஐக்பந்துவின் கீழ் ஒரிசாவில் பைக்குகளின் (உழவர் படை) கிளர்ச்சி; குமாவுன் மற்றும் கர்வால் தாலுக்தார் பிஜய் சிங்கின் கீழ் குஜ்ஜார்களின் எழுச்சி (1824) மற்றும் ஒரிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் கும்சூர் ஜமீன்தார்களின் கிளர்ச்சி (1835 முதல் 37 வரை) ஆகியவை, அந்தக் காலகட்டத்தில் பாரம்பரிய நிலப்பிரபுத்துவ உயரடுக்கினரிடையே நிலவிய பொதுவான அதிருப்தியை எடுத்துக்காட்டுகிறது.
ஆரம்பகால காலனித்துவ ஊடுருவல் காரணமாக பாரம்பரிய உயரடுக்க பெரிய விவசாயிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் தங்கள் அதிகாரத்தையும் சலுகைகளையும் இழந்திருந்தாலும், இந்த நடவடிக்கைகள் சாதாரண சிறு விவசாயிகள் மீது பேரழிவான தாக்கத்தை ஏற்படுத்தியது. வரி வருவாய் நிர்ணயம் செய்வதில் நேரடி காலனித்துவக் கட்டுப்பாட்டின் காரணமாக விவசாயிகள் எந்தவித நிவாரணமும் இல்லாமல் மேலும் மேலும் அதிக வரிகளை செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலனித்துவ ஆட்சிக்கு அடிபணிந்து, அதன் முகவர்களாக மாறிய நில உரிமையாளர்கள், வரி வசூலிக்க கடுமையான காலக்கெடுவை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கூடுதலாக அவர்கள் தங்கள் சொந்த லாபத்திற்காகவும் விவசாயிகள் மீது கூடுதல் உழைப்பையும் வரியையும் சுமத்தினர். இதனால் விவசாயிகள் இரட்டிப்பு சுரண்டலுக்கு ஆளாகினர். மேலும் விவசாயிகள் வரி செலுத்த முடியாதபோது நில உரிமையாளர்களுடனான பாரம்பரிய உறவு முறையில் வாய்தா கேட்க இயலாமல் போனது. இது ஆங்கிலேயர்களால் நில உரிமை வழங்கப்பட்ட பாரம்பரிய ஆட்சியாளர்கள் உட்பட்ட நிலவுடமையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை கூர்மையாக்கியது. மற்றொரு மட்டத்தில், நிலவுடமையாளர்கள் மற்றும் வட்டிக்குக் கடன் வழங்குபவர்கள் ஆகியோர் அடங்கிய புதிய வர்க்கத்தால் விவசாயிகள் சுரண்டப்படுவதும் அவர்களின் கடன்சுமை அதிகரித்து வருவதும், விவசாய எழுச்சிகளில் தெளிவாகப் பிரதிபலித்தது.
கிழக்கு வங்காளத்தில் சந்நியாசி கிளர்ச்சிகள் (1763 -1800), சோட்டா நாக்பூரில் கோல் கிளர்ச்சி (1831-32), சந்தால் கிளர்ச்சி (1855-56) ஆகியவை, காலனிய ஆட்சியின் கீழ் தங்களை வலுப்படுத்திக் கொண்ட மகாஜன்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு எதிராக நடத்தப்பட்டன. இதேபோல் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மலபாரில் நடந்த மாப்பிள்ளா கிளர்ச்சிகள் ஜமீன்தார்களுக்கு எதிராக இருந்தன. இந்தக் கிளர்ச்சிகளில் பெரும்பாலானவை ஜமீன்தார்களின் சொத்துக்கள் மற்றும் கடன் கொடுப்பவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து வரி வசூலிப்பவர்களின் சொத்துக்களைத் தாக்கும் உத்தியைப் பின்பற்றின. இந்தப் பொருளில், சமூகத்தின் இப்பிரிவுகள் காலனித்துவ அடக்குமுறைக் கொள்கைகளை அமல்படுத்துபவர்களாக உறுதியாக அடையாளம் காணப்பட்டன.
விவசாய இயக்கங்களின் இந்த காலனித்துவ எதிர்ப்புப் போக்கு சில்ஹெட்டில் (1829-31), கிராமத் தலைவரான லால்ஜாய் படேலின் எதிர்ப்பு (மால்வா. 1831) மற்றும் கஞ்சத்தில் கோண்ட் கிளர்ச்சி (1846) ஆகியவற்றில் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. சொத்து உரிமைகள் தீர்வை, சொத்து உரிமைகள் மற்றும் அது தொடர்பான சட்டங்கள் ஒப்பந்தங்கள் ஆகியவை 1857-க்கு முந்தைய கிளர்ச்சிகளுக்கான அடிப்படையாக அமைந்த அதே வேளையில், அவுரி வளர்ப்புப் பகுதிகளில் பணப்பயிர்களின் அறிமுகம் மற்றும் ஐரோப்பியத் பயிர்களை (அவுரி / காபி / தேயிலை போன்ற) நிறுவுவதன் மூலம் விவசாயத்தை வணிகமயமாக்கியதும் முக்கியமான காரணிகளாகும். உணவு பயிரிடும் நிலங்களில் அவுரியை வளர்க்க மறுத்ததன் மூலமும் வரி செலுத்த மறுப்பதன் மூலமும் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த பல எழுச்சிகள், பிரிட்டஷாரின் இண்டிகோ பயிர் திணிப்பு முயற்சிகளை எதிர்த்தே நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு இந்தியாவில் முதல் அவுரிக் கிளர்ச்சி’, 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிஸ்வநாத் சர்தாரின் தலைமையில் தொடங்கியது. இவர் ‘நீல்குதிஸ்’களைக் (அவுரி வீடுகள்) கொள்ளையடித்தது முக்கிய நிகழ்வு. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, சரண், திர்ஹட் முங்கர், பாகல்பூர் மற்றும் புருளியா விவசாயிகள் அவுரி பயிரிட மறுத்ததால், பிரச்சனையின் முதல் அறிகுறிகள் மீண்டும் தோன்றின. மதுபானி உட்பிரிவில் அவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி அவுரி நட மறுத்தனர். அவுரி தோட்டக்காரர்கள் மற்றும் ஜமீன்தார்களுக்கு எதிரான முஸ்லீம் மற்றும் இந்து மதங்களை சார்ந்த ஒடுக்கப்பட்ட சாதி விவசாயிகளின் மற்றொரு பெரிய கிளர்ச்சி, வங்காளத்தின் 24 பர்கானாக்களில் (1831) விவசாயத் தலைவரான டிட்டு மிர் தலைமையில் நடைபெற்றது.
காலனித்துவமும் பழைய சமுதாயமும்
1960-களின் அறிஞர்கள், ஆரம்பகால விவசாய இயக்கங்களில் சிலவற்றை மறுகட்டமைப்பு என வகைப்படுத்தியுள்ளனர். அவை மத அடையாளங்கள் கீழ், பழைய மத அடையாளங்களை மீட்டெடுக்கும் ஒருங்கிணைந்த உள்ளூர்த் தலைமை மீது நம்பிக்கை வைத்திருந்தன. எனவே, டிட்டு மிரின் இயக்கம், சந்நியாசி மற்றும் மாப்பிள்ளைக் கிளர்ச்சி போன்ற இயக்கங்களில் மதவாத மற்றும் வகுப்புவாத அடிப்படை மேலோங்கியிருந்ததாகக் கருதினர். எனினும், விவசாயிகளின் அதிருப்தியின் தன்மை மற்றும் இந்த இயக்கங்களை வழிநடத்திய அரசியல் தத்துவங்கள் பற்றிய புரிதல் இல்லாததாலேயே இவ்வாறு கருத இடமேற்பட்டது. நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 1857 எழுச்சி வரை இந்த விவசாயக் கிளர்ச்சிகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவின என்பது மட்டுமல்லாது, பெரும்பாலும் காலனித்துவம் தன் காலடிகளைப் பதித்த இடங்களுக்கெல்லாம் விரிவடைந்தது. இது காலனித்துவம் எங்கெல்லாம் ஊடுருவி தன் அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்றதோ, அத்தனை இடங்களிலும் எதிர்ப்பை சந்தித்தது என்பதைக் காட்டுகிறது. வங்காளத்தில் 5, பீகாரில் 3, அசாமில் 3 மற்றும் மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 15 பெரிய கிளர்ச்சிகளை நாம் அடையாளம் காணலாம். இதன் பொருள், தன் தலையீடுகள் மூலம் வர்க்க அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முயன்ற காலனித்துவத்தின் வெற்றிக்கு, அதற்கு முந்தைய சமூகம் மிகப் பெரிய சவாலாக விளங்கியது என்பதே.
இந்த சக்திகளின் உறவு மாற்றம் சில நேரங்களில் (எப்போதும் அல்ல), மத அடையாளங்களை மீட்டெடுப்பது என்பது முன்னுக்கு கொண்டுவந்தது. அதாவது. காலனித்துவ எதிர்ப்பு என்பது இந்த இயக்கங்களின் பொதுவான பண்பாக இருந்தபோதிலும், மத அடையாளங்களை மீட்டெடுப்பது என்பது இந்த இயக்கங்களுக்குள்ளே இருந்த சக்திகள் பரஸ்பரம் தங்களுக்குள் கொண்டிருந்த உறவின் அடிப்படையிலேயே அமைந்தது. இருப்பினும், இரண்டாவது படிநிலையில், இந்த இயக்கங்களுள் பல, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பின் தொடக்கநிலைப் பண்புகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன; மேலும் அவை அரசியல் அணிதிரட்டலுக்கும் தங்கள் இலக்குகளை தெளிவாக எடுத்துச் செல்லவும் மதத்தைப் பயன்படுத்தின. உதாரணமாக, விவசாயத்திற்குத் திரும்பிய சந்நியாசிகள் மற்றும் ஃபக்கீர்களில் (முஸ்லிம் சந்நியாசிகள்) பலர் காலனித்துவ சுரண்டலுக்கு பலியான விவசாயிகளாக இருந்தனர். மேலும், நாட்டின் பல பகுதிகளிலும், முஸ்லிம் விவசாயிகளுக்கும் இந்து நிலப்பிரபுக்களுக்கும் இடையிலான வர்க்க மோதல்கள் 19-ஆம் நூற்றாண்டின் போராட்டங்களின் தன்மையை வரையறுத்தது. அங்கு மதம் அவர்களுக்கு தார்மீக வலிமையையும், அவர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்த வலுவான மொழியையும் வழங்கியது. கூடுதலாக, இந்த இயக்கங்களில் சில பழைய விழுமியங்களை மீட்டெடுக்கும் வழியாகவும் மதத்தைப் பயன்படுத்தியதால், அவர்கள் தங்கள் சொந்த அரசியலை வெளிப்படுத்த இயலாமல் போனது. குறிப்பாக, இது விவசாயிகள், பாரம்பரிய உயர் வர்க்கத்தினரால் வழிநடத்தப்பட்ட இடங்களில் இது வெளிப்படுகிறது.
காலனி ஆட்சியும் சீர்திருத்தங்களும்
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலனிய ஆதரவு சித்தாந்தவாதிகளில் ஒரு பகுதியினர் காலனி ஆட்சி முன்னேற்றத்திற்கு அடிப்படை என நியாயப்படுத்த முயன்றனர். பேரரசு, ஒரு உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நவீன மேற்கத்திய நாகரிகத்தின் சாதனைகளை இந்தியாவிற்கு கொண்டு செல்வதே ஆங்கிலேய ஆட்சியின் நோக்கம் என்றனர். ஜேம்ஸ் மில், இந்த கருத்துகளை விதைப்பதில் முதன்மையானவராக இருந்தார். எதிர்மறை தாக்கத்தை உருவாக்கிய அவரது நூலான பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு என்ற நூலில், ஆங்கிலேய ஆட்சியில் இந்தியா அறிவில் மேம்பட்டது. மேன்மையுற்றது. எனவே பேரரசு தார்மீக முறையில் சிறந்ததாக இருந்தது என்றும், இந்திய சமுதாயம் பின் தங்கிய நிலையில் இருந்தது, அதை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது ஆங்கிலேயர்களின் வரலாற்றுப் பொறுப்பு எனவும் பல கருத்துகளை முன்வைத்தார்.
காலனி அரசு பொதுவாக மதம் மற்றும் பழக்கவழக்கங்கள் தொடர்பான விஷயங்களில் நேரடியாக தலையிடுவதைத் தவிர்த்தாலும், அவ்வப்போது சில பிரச்சினைகளில் தலையிடத்தான் செய்தது. 18-ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் இது போன்ற ஒரு பிரச்சினை உடன்கட்டை ஏறும் சதி குறித்தானது. 1798-இல் கல்கத்தா நகரில் ‘சதி’ சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது. வங்காள மாகாணத்தில், நடத்தப்பட்ட ‘சதி’களின் எண்ணிக்கையை அரசு கணக்கெடுத்தது. அதன் விளைவாக, பொதுமக்களின் கவனம் அதன் மீது ஈர்க்கப்பட்டது. ஆங்கிலேயப் பேரரசு மக்களை நாகரீகப்படுத்தும் பணியில் உறுதியாக இருந்தது என்ற கருத்தியலுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வந்தநேரத்தில் ‘சதி’ கீழை நாடுகளின் பின்தங்கிய நிலைக்கு ஒரு தெளிவான உதாரணமாகவும், ஆங்கிலேய ஆட்சியை நியாயப்படுத்தியும் சித்தரிக்கப்பட்டது.
இதன் பின்னணியில்தான் அறிவுஜீவிகளின் குழுக்கள் மதம் மற்றும் சமூகப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை முன்னெடுக்கத் தலைப்பட்டனர். காலனித்துவ ஆட்சி பற்றிய அவர்களது கருத்துகள், சீர்திருத்தங்களை ஆதரித்த அதே நேரத்தில் காலனித்துவ ஆட்சியின் மற்ற பல அம்சங்களை விமர்சித்தும் வெளிப்பட்டன். 19-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்திய சமூக கையில் சீர்திருத்தவாதி ராஜா ராம்மோகன் ராய் ஆவார். வசதியான குடும்பத்தில் பிறந்த அவர், பன்மொழிப் புலமை பெற்றிருந்தார். அவருக்கு ஆங்கிலம் தவிர சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் அரபு மொழிகள் தெரியும். பல விஷயங்களையும் ஆழமாகக் கற்ற ராம்மோகன் ராய், அக்காலத்தின் மற்ற பல அறிவுஜீவிகளையும் சமூக சீர்திருத்தவாதிகளையும் போல, ஒரு சிறந்த அறிஞராக இருந்தார். 1828-ஆம் ஆண்டில், ராய் குடும்பம் பிரம்ம சமாஜத்தை ஆரம்பித்தது.
மத மரபுகளை கடுமையாக விமர்சித்த ராம்மோகன் ராய் ‘இந்தியாவின் பழைய மற்றும் புதிய மரபுகளுக்கு இடையே பாலமாகச் செயல்பட்ட அரிய மனிதராக’ போற்றப்படுகிறார். ராஜா ராம்மோகன் ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் இப்பிரச்சினையைக் எடுத்தபோதுதான், சதி பழக்கத்தைத் தடை செய்வதற்கான சட்டத்தை இயற்ற பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் மீது வலுவான அழுத்தம் கொடுக்கப்பட்டது. காலனித்துவ நிர்வாகிகளிடையே சதியைத் தடை செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற ஒருமித்த கருத்து உருவானது. மதம் மற்றும் சமூகப் பழக்கவழக்கம் தொடர்பான விஷயங்களில் தலையிடுவதில்லை என்ற பொது விதிக்கு இது விலக்காக இருந்தது. இந்தியாவில் விதவைகளின் நிலையும், சீர்திருத்தவாதிகளுக்கு கவலைக்குரிய விஷயமாக இருந்தது. வங்காளத்தில், விதவைகளின் (அவர்களில் பலர் குழந்தை விதவைகள்) அவல நிலையை மாற்ற, ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சீரிய முயற்சியெடுத்தார்.
ராஜா ராம்மோகன் ராய் மற்றும் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் இருவரும் கல்வி தரும் முயற்சிகளிலும் (வித்யாசாகர் குறிப்பாக பெண்களின் கல்விக்காக) ஈடுபட்டனர். 19-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் காலனித்துவ அதிகாரிகளிடையே கல்வி என்பது நிறைய விவாதத்திற்கு உட்பட்டது. 1813-ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம், அதன் நடவடிக்கைகள் வெறும் அடையாளபூர்வமாக இருந்தபோதிலும், இந்திய குடிமக்களுக்கு கல்வி கற்பிப்பதில் காலனித்துவ அரசின் முதல் முயற்சியைக் குறித்தது. இருப்பினும் சமூக சீர்திருத்தவாதிகளுக்கு இது முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயமாக இருந்தது. ராஜா ராம்மோகன் ராய் மற்றும் வங்காளத்தின் பல இந்தியக் கல்வியாளர்களால், மேற்கத்திய பாணியிலான ஆங்கில மொழிக் கல்வியே மிகவும் பொருத்தமானதாகக் கருதப்பட்டது. 1817-ஆம் ஆண்டு கல்கத்தாவில் இந்தக் கல்வியை வழங்குவதற்கான ஒரு கல்வி நிறுவனம் (இந்துக் கல்லூரி) நிறுவப்பட்டது. இது இந்திய மாணவர்களை வெகுவாகக் கவர்ந்த ஒரு வெற்றிகரமான முயற்சியாகும். இந்துக் கல்லூரி முக்கியமாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கடிகாரத் தயாரிப்பாளரும் கல்வியாளருமான டேவிட் ஹேரின் முயற்சியால் நிறுவப்பட்டது. இந்துக் கல்லூரி ஒரு துடிப்பான அறிவுசார் கலாச்சாரத்தின் மையமாக மாறியது. இது பரந்த நோக்கு, அனைத்தையும் குறித்த கேள்விகளை எழுப்பி விடைதேடுதல் மற்றும் மேற்கத்திய நாகரிகத்தின் மிகவும் முற்போக்கான சாதனைகளைப் போற்றுதல் ஆகியவற்றிற்கான இடமாக அறியப்பட்டது. இந்தக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தைக் கற்பித்த, அனைவரையும் ஈர்த்த, கவிஞரும் அறிஞருமான ஹென்றி லூயிஸ் விவியன் டெரோசியோ இந்தக் கலாச்சாரத்தின் மிகச்சிறந்த பிரதிநிதியாக இருந்தார். உண்மையில் அவர் இப்பண்புகளை தனது எழுத்துக்கள் மற்றும் பேச்சுகள் மூலம் தீவிரமாக வடிவமைத்தார். இந்துக் கல்லூரியில் பயின்ற மைக்கேல் மதுசூதன் தத் என்பவரால் டெரோசியோவின் அறிவுசார் மரபு முன்னோக்கிச் எடுத்துச் செல்லப்பட்டது. அவர், வங்காளி மொழியின் இலக்கிய மரபை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
ஜோதிராவ் பூலே (1827 – 1891 வரை) ஒரு மகாராஷ்டிர சமூகப் புரட்சியாளர் ஆவார். அவர் ஆதிக்கத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு சமூக-கலாச்சார பகுப்பாய்வு முறையை முன்வைத்தார். சமத்துவம், நீதி மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப பலமுனைப் போராட்டத்தை அவர் முன்னெடுத்தார். அனைத்து மட்டங்களிலும் உள்ள பெண்கள் மற்றும் உழைக்கும் மக்களின் சாதிகள் அடிமை நிலையிலேயே உள்ளதை வெளிக்கொணர்ந்த அவர், தங்கள் அடிமைத்தனத்தை ஒப்புக்கொள்ளாதவர்கள் ஒருபோதும் சுதந்திரமாக இருக்க முடியாது என்று வலியுறுத்தினார். வெகுஜனக் கல்வியை தனது இயக்கத்தின் மையப் புள்ளியாக மாற்றினார். மதம், சாதி, அரசியல், கல்வி, மொழி, இலக்கியம். வரலாறு, புராணம். பாலினப் பிரச்சினை, வெகுஜன வறுமை, விவசாயத்தின் நிலை மற்றும் விவசாயிகளின் பலம் என சமூகம் எதிர்கொள்ளும் கிட்டத்தட்ட அனைத்து முக்கியமான கேள்விகளையும் அவர் புரிந்து கொண்டார். 19-ஆம் நூற்றாண்டின் மற்ற எந்தத் தலைவரையும் விட இந்திய சமூகம் குறித்த அவரது கவலைகளும் கருத்துகளும் பரந்ததாகவும் ஆழமாகவும் இருந்தன.
தமிழில்: சோபனா, சேலம்
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

“ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தைக் கைவிட வேண்டும் அல்லது கணிசமாக மாற்ற
வேண்டும் என்பதில் பொதுவாக உடன்பட்டுள்ளனர் என்பதைச் சொன்னாலே இங்கே
போதுமானது.”
இந்த பாடக் குறிப்பால் குழப்பமே மிஞ்சும் ! ஆசிய உற்பத்திமுறை பற்றி
மார்க்ஸ் என்ன எழுதியிருக்கிறார் என்பதை சொல்லாமல் அது தப்பு என்று
மொட்டையாக கூறுவது சரிதனா? அவர்காலத்தில் அவருக்கு கிடைத்த தகவலை வைத்து அவர்
ஆசிய உற்பத்தி முறை வேறுபட்டது என்ற முடிவிற்கு வந்து அதன் கூறுகளை மதிப்
பீடு செய்வதில் தவறிவிடுகிறார். கொடூரமான மாற்றத்தை விரும்பாத சமூக
கட்டமைப்பு என்ற முடிவிற்கு வருகிறார் இது தவறான மதிப்பீடு என்று இந்திய
மார்க்சிஸ்ட்டுகள் குறிப்பிடுகினறனர்.
பழைய குலத் தொழில் உற்பத்திமுறையின் கூறுகளில் உள்ள முரன்பாடுகள் நவீன
பணமைய முதலாளித்துவ உற்பத்திமுறையின் கூறுகளாக மொகலாயர்களின் ஆட்சி
காலத்தலேயே உருவானதை சுட்டிக் காட்டுகின்றனர்.
தங்கம் வெள்ளியை புனித உலோகமாக கருதுவது என்ற தனித்துவ தன்மைபற்றி மார்க்ஸ்
அறிய வாய்பில்லை. 20ம் நூற்றாண்டு துவக்கத்தில்தான அகழ்வராய்சிசி முறை அறிமுக
மாகிறது கல்வெட்டுகள் எழுத்துக்கள் தவிற புதியரக தடையங்கள் கிடைத்தன.
குலத்தொழில் வர்ணாஸ்ர தர்ம ம் – தெய்வ நம்பிக்கை முதலாளித்துவ சுரண்டலுக்கு
இன்றும் எவ்வாறு உதவுகிறது என்பதை தெளிவுபடுத்த
வேண்டுமே தவிற வேண்டாத தகவல்களை கூறி குழப்பக் கூடாது.