சிந்து சமவெளி: நிலைநாட்டப்பட்ட உண்மைகளும் கருதுகோள்களும்
அன்வர் உசேன்
ஹரப்பா நாகரிகம் எனவும் சிந்து சமவெளி நாகரிகம் எனவும் அழைக்கப்படும் ஒரு சிறந்த நாகரிகம் இருந்ததற்கான அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி சர் ஜான் மார்ஷல் எனும் பிரிட்டிஷ் ஆய்வாளர் “The Illustrated London News” எனும் பத்திரிக்கையில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். அவரது அறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. அதுவரை இந்திய நாகரிகத்தின் தொடக்கம் வேத காலம்தான் என கருதப்பட்ட நிலையில், வேத காலத்துக்கும் முன்னர் ஒரு நாகரிகம், அதுவும் சிறந்த நகர நாகரிகம் இருந்தது என்பது, இந்தியாவின் பண்டைய வரலாறு பற்றிய புரிதலை தலைகீழாக புரட்டிப்போட்டதெனில் மிகையல்ல. மார்ஷலின் அறிக்கை, இந்திய சமூக உருவாக்கத்தை, வரலாற்றியல் பொருள் முதல்வாத கோணத்திலிருந்து புரிந்து கொள்ள, மிகப்பெரும் கருவியாக அமைந்தது. மார்ஷலின் அறிக்கையில் வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படை இல்லை. எனினும், மார்க்சிய பார்வையில் இந்திய வரலாற்றை அறிய அது மிகவும் பயன்பட்டது.
சிந்து நாகரிகத்தின் திராவிட தொடர்பு குறித்து
ஜான் மார்ஷலுக்கு சிலை வைப்பது என தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த பெருமை ஜான் மார்ஷலுக்கு மட்டுமே சொந்தமல்ல. தயாராம் சஹானி/ ஆர்.டி.பானர்ஜி எனும் இரு இந்திய ஆய்வாளர்களுக்கும் இதில் மிகப்பெரிய பங்கு உண்டு. உண்மையில், பானர்ஜிதான் முதன் முதலில் மொகஞ்சதோரோவை கண்டுபிடித்தார். அது குறித்து ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட பானர்ஜி முயன்றதாகவும், ஆனால் மார்ஷல் அதனை தடுத்துவிட்டார் எனவும், சில தகவல்கள் உள்ளன. (டைம்ஸ் ஆஃப் இண்டியா/12.06.2017). இதன் உண்மைத்தன்மை எதுவாக இருந்தாலும், இந்திய ஆய்வாளர்களின் பங்களிப்பும் இதில் உள்ளது.
ஜான் மார்ஷலுக்கு சிலை வைப்பதன் நோக்கம் என்ன என்பதும் கவனிக்க வேண்டியதே. மார்ஷல், சிந்து நாகரிகம் ஆரிய அல்லது வேத நாகரிகம் அல்ல என அழுத்தமாக கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால், சிந்து நாகரிகத்தை திராவிட நாகரிகம் என அவர் சொன்னதற்காக சிலை எனில், அது பொருத்தமானதுதானா என்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில், ஜான் மார்ஷல் சிந்து நாகரிகத்தின் திராவிட தொடர்பு குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறார்:
“அவர்கள் (சிந்து சமவெளி மக்கள்) கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்திருந்தாலும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்திருந்தாலும், இன்றைய நம்முடைய நிச்சயமற்ற தரவுகள் அடிப்படையில், அவர்களை திராவிடர்கள் என அடையாளம் காண முனைவது மிகவும் அடிப்படையற்ற தன்மையாகவே இருக்கும் என்பது தெளிவு………….” (பக்:110/Sir John Marshal/ Mohenjo-Daro and the Indus Civilisation/1931 வெளியீடு.) ஜான் மார்ஷல் சிந்து நாகரிக மக்களை திராவிடர்கள் என அடையாளம் காணவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சிந்து சமவெளி நாகரிகம் எனில், ஹரப்பாவும் மொகஞ்சதோராவும் மட்டுமே என ஒரு புரிதல் உள்ளது. ஹரப்பா/ மொகஞ்சதோரா மட்டுமின்றி, கோட் டிஜி/ சானு தாரோ (நான்கும் பாகிஸ்தானில் உள்ளன) / லோதல் (குஜராத்)/ காலிபங்கன் (ராஜஸ்தான்)/ பனாவாலி (ஹரியானா)/ தொலாவிரா (குஜராத்)/ராகிகாரி (ஹரியானா) என பல இடங்களில் சிந்து சமவெளி நாகரிகத்துக்கான தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இன்னும் கூட சில இடங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
சிந்து நாகரிகத்தின் சிறப்பம்சங்கள்
இந்த தொல்லியல் ஆய்வில் கிடைத்த ஏராளமான பொருட்கள் மற்றும் தரவுகள் அடிப்படையில், சில முக்கிய முடிவுகளை ஆய்வாளர்கள் கட்டமைத்தனர். அவற்றில் சில:
- ஹரப்பா நாகரிகம் வளமான நகர நாகரிகமாக இருந்தது. ஹரப்பா நாகரிகம் மறைந்த பின்னர், மீண்டும் நகர நாகரிகம் உருவாக 600 ஆண்டுகள் ஆயின.
- நகரங்களின் தெருக்களும், வீடுகளும், மிகவும் நேர்த்தியாக, சீரான முறையில் கட்டப்பட்டிருந்தன.
- பெரும் கட்டிடங்கள் இல்லை.
- கட்டிடங்களுக்கு, சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
- தெருக்களில் எங்கும் ஆக்கிரமிப்புகள் இருக்கவில்லை.
- கழிவு நீர் வெளியேற்றுவதற்கான முறைகள் சிறப்பாக அமைந்திருந்தன.
- நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு நீர் சேமிக்கப்பட்டது.
- நிலத்தடி நீரை பயன்படுத்த, கிணறுகள் வெட்டப்பட்டன.
- சமகால மெசபடோமியா மற்றும் எகிப்து நாகரிகங்களைவிட முன்னேற்றம் கொண்டிருந்தன.
- பெரு மதம் அல்லது பெரிய கோவில்கள் இல்லை. எனினும் ஒரு வடிவத்திலான மதம் அல்லது ஆன்மீக நடைமுறைகள் இருந்தன.
- மெசபடோமியா போன்ற இடங்களுடன் வர்த்தகம் நடைபெற்றது.
- துல்லியமான எடைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சில எடைக்கற்கள் மிகச்சிறிய அளவில் இருந்தன. மிகவும் மதிப்பு வாய்ந்ததாக கருதப்பட்ட சில உலோகங்களின் எடைக்கு இவை பயன்படுத்தப்பட்டன.
சிந்து நாகரிகத்தில் ஏற்றத்தாழ்வுகள்
சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்பம்சங்களை முன்வைக்கும்போது, அதன் வர்க்க பேதங்கள் குறித்துத் தவிர்ப்பது, ஒரு அணுகுமுறையாக உள்ளது. வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில், இந்திய சமூக அமைப்பின் உருவாக்கத்தை ஆய்வு செய்யும்பொழுது, சிந்து சமவெளி நாகரிகம், ஆதிப்பொதுவுடமை சமூகத்தின் ஒரு கட்டம் என்பதற்கு எவ்வித தரவுகளும் இல்லை. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல்வேறு சான்றுகள், அது ஒரு வர்க்க சமூகம் என்பதையே நிலை நிறுத்துகின்றன. சிந்து சமவெளி சமூகம், விவசாயிகள்/ உணவு சேகரிக்கும் நாடோடிகள்/அடிமைகள்/ நகர்ப்புற ஏழைகள்/ கை விஞைனர்கள்/ வணிகர்கள்/ மத குருமார்கள்/ ஆளும் வர்க்கங்கள் என, ஆழமான, வர்க்க பேதம் உள்ள, சமூகமாக இருந்தது. குறிப்பாக, சிந்து நாகரிகத்தில் அடிமைகள் இருந்தனர் என குறிப்பிடுகிறார் மார்க்சிய பேராசிரியர் இர்ஃபான் ஹபீப். மெசபடோமியாவுடன் அடிமைகள் வியாபாரம் நடந்துள்ளது. உயிரற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது போல, மனிதர்கள் அடிமைகள் வடிவில் விற்கப்பட்டுள்ளனர். இது, சிந்து சமவெளியில் நிலவிய கூர்மையான வர்க்க பேதத்தை வெளிப்படுத்துகிறது. (Irfan Habib/ Indus Civilization/Peoples’ History Part 2)
ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தும் இன்னொரு சான்று, வீடுகளின் அமைப்பு. பெரும்பாலான வீடுகள், ஒன்று அல்லது இரண்டு அறைகளை கொண்டிருந்தன. ஆனால் ஒருசில வீடுகள் மட்டும், 6 முதல் 12 அறைகளை கொண்டிருந்தன. சிறிய வீடுகள், உழைப்பாளிகள் வாழ்ந்ததாகவும், பெரிய வீடுகள், அரசு அதிகாரிகள் அல்லது பெரும் வணிகர்கள் வாழ்ந்ததாகவும் இருந்திருக்கலாம்.
அடுத்து கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம், நகரங்கள் எப்படி பராமரிக்கப்பட்டன என்பது. அதற்கான வருவாய் எங்கிருந்து வந்தது? சிந்து நாகரிகத்தில் வருவாய்க்கு இரு வாய்ப்புகள்தான் இருந்தன. 1. வணிகம். 2. விவசாயம். கிராமப்புறங்களில் விவசாய உற்பத்தியிலிருந்து உபரி உற்பத்தி பறிக்கப்பட்டது. நகரங்களில், ஏராளமான பெரிய தானிய களஞ்சியங்கள் இருந்தன என்பது அகழவராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் உழைப்பில் உருவான உபரியை, வரி எனும் பெயரில் தானியங்கள் வடிவில் பெறப்பட்டு, நகரங்கள் பராமரிக்கப்பட பயன்பட்டுள்ளது.
சுமார் 7 லட்சம் சதுர மைல் அளவுக்கு பரந்து விரிந்த சிந்து சமவெளியில், அனைத்து பகுதிகளிலும், அனேகமாக வீடுகள்/ தெருக்கள்/ எடைக்கற்கள்/ எழுத்துக்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. அனைத்து இடங்களிலும் மக்கள் தானாகவே இப்படி ஒழுங்கமைப்பை வடிவமைக்க வாய்ப்பு இல்லை. ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு இயந்திரம் இல்லாமல், இந்த ஒழுங்கமைப்பு சாத்தியமில்லை. ஆனால், இந்த அரசு இயந்திரத்தின் கட்டமைப்பு என்ன? அது எப்படி செயல்பட்டது? இந்த கேள்விகளுக்கு பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை. எனினும், எப்பொழுது அரசு எனும் அமைப்பு உருவானதோ, அப்பொழுதே வர்க்க பேதங்களும் உருவாகியிருக்க வேண்டும். வர்க்க பேதங்கள் இல்லாமல், அரசு அமைப்பு உருவாக வாய்ப்பில்லை.
சிந்து நாகரிகத்தின் மூதாதை நாகரிகங்கள்
சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு வர்ணாசிரமம் காரணியாக இருக்கவில்லை. ஏனெனில், சிந்து நாகரிகத்துக்கு பின்பு உருவான ஆரிய நாகரிகத்தில்தான், உபரி உற்பத்தியை பறிக்கவும், அதனை நியாயப்படுத்தவும் வர்ணாசிரமம் உருவானது. சிந்து சமவெளியில், வர்ணாசிரமம் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இல்லை. பெரு மதங்கள் அல்லது பெருங்கோவில்கள் இல்லை என்றாலும், அரசு அதிகாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வைக்க, ஒரு வடிவத்திலான மதம் அல்லது ஆன்மீகம் காரணியாக இருந்திருக்கக்கூடும்.
இத்தகைய ஏற்றத்தாழ்வுகளும் படிநிலைகளும் கொண்ட ஒரு சமூக அமைப்பாகவே சிந்து நாகரிகம் இருந்திருக்க முடியும். சமூக அமைப்புகளின் உருவாக்கத்தில், அதன் பரிணாம நகர்வுகளில், இது தவிர்க்க இயலாத ஒன்று. இதில் அதிர்ச்சி அடையவோ அல்லது ஆச்சர்யப்படவோ எதுவுமில்லை. ஏனெனில், சிந்து நாகரிகத்தின் மூதாதை நாகரிகங்கள் மேய்ச்சல் சமூகமாகவும் வேட்டை சமூகமாகவும் இருந்துள்ளன. கோட் டிஜி நாகரிகம்/ சோதி சிஸ்வால் நாகரிகம்/அம்ரி நால் நாகரிகம்/ ஹெல்மண்ட் நாகரிகம் இவையெல்லாம், ஹரப்பா நாகரிகத்துக்கு முன்பாக அதே பகுதிகளில் இருந்துள்ளன. வேட்டை சமூகமாகவும், பின்பு மேய்ச்சல் சமூகமாகவும், பின்பு விவசாய சமூகமாகவும் இந்த நாகரிகங்கள் பரிணமித்துள்ளன. சிந்து நாகரிகத்தின் மூதாதை நாகரிகங்களிலேயே நகர அமைப்புகள் இருந்துள்ளன. ஆனால், அவை சிறிய அளவில் இருந்துள்ளன. இந்த நாகரிகங்களின் ஒட்டு மொத்த பரிணாம நிகழ்வாகவே ஹரப்பா/ மொகஞ்சோதரா நாகரிகம் உருவாகியுள்ளது. இயற்கையிலேயே ஹரப்பா/ மொகஞ்சோதரா நாகரிகம் வளர்ச்சி அடைந்ததாகவும், சிறந்த நாகரிகமாகவும் பரிணமித்தது. அதன் இன்னொரு பிரிக்க முடியாத பகுதியாக, சமூக ஏற்றத்தாழ்வுகளும் உருவாயின. இந்த இரு முரண்பட்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சங் பரிவாரத்தின் திசை திருப்பல்கள்– குதிரையும் சரஸ்வதி நதியும்
சிந்து சமவெளி நாகரிகம் குறித்து மார்ஷலின் ஆய்வறிக்கை 1924ஆம் ஆண்டு வெளியிடப்பட்டபோதே பழமைவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஏனெனில், அதுவரை இந்திய நாகரிகம், வேத காலத்திலிருந்துதான் தொடங்கியது எனவும், ஆரியர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடி மக்கள் எனவும், பொதுவான கருத்து நிலவியது. அந்த கருத்தாக்கம் மீது இந்த அறிக்கை பெரும் இடியை இறக்கியது. உதாரணத்துக்கு, 1903ஆம் ஆண்டே, அதாவது ஜான் மார்ஷல் ஆய்வறிக்கைக்கு முன்பே, திலகர் ரிக் வேதத்தின் காலம் கி.மு. 4500 என வாதிட்டார். ஆரியர்களின் பூர்வீகம் நார்டிக் பகுதிகள் என்று கூறிய திலகர், ஆரியர்கள் அங்கிருந்து புலம்பெயர்ந்து, ஒரு பிரிவினர் ஐரோப்பாவுக்கும், இன்னொரு பிரிவினர் இந்தியாவுக்கும் வந்தனர் என முன்வைத்தார். ஐரோப்பா சென்ற ஆரியர்கள் காட்டுமிராண்டிகளாக மாறிவிட்டனர் எனவும், இந்தியா வந்த ஆரியர்கள் பண்டிதர்களாக மாறி, தமது கோட்பாடுகளை இங்குள்ள மக்களை ஏற்றுக்கொள்ள வைத்தனர் எனவும் கூறினார். ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோமா என சிலர் மறுப்பு தெரிவித்தபோது, வடதுருவமே அப்பொழுது இந்தியாவின் ஒரு பகுதிதான் எனவும், எனவே ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல எனவும், திலகர் ஆதரவாளர்கள் ஒரு பெரிய போடு போட்டனர். (Romila Thapar/ Which of us are Aryans?)
திலகர் முன்வைத்த ரிக் வேதம் சிந்து நாகரிகத்துக்கும் முந்தையது எனும் வாதம், மீண்டும் சங் பரிவார ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகம் வேத நாகரிகம்தான் என நிலைநாட்ட, இன்றளவும் சங் பரிவாரத்தினர் முயல்கின்றனர். பல்வேறு கோணங்களில் இந்த முயற்சிகள் செய்யப்படுகின்றன. அதில் முக்கியமானது குதிரை! சிந்து சமவெளியில் எங்குமே குதிரை இருந்ததற்கான ஆதாரம் இல்லை. ஆனால், ஆரியர்களின் முக்கிய விலங்குகளில் குதிரைக்கு சிறப்பான இடம் உண்டு. இந்தியாவில் குதிரையை அறிமுகப்படுத்தியது ஆரியர்கள்தான்! போர்க்காலங்களில் குதிரை ரதங்கள் மூலம்தான், ஆரியர்கள் தமது எதிரிகளை சுலபமாக வீழ்த்தினர். ரிக் வேதத்தில் “அஸ்வ” (குதிரை) எனும் வார்த்தை 215 இடங்களில் குறிப்பிடப்படுகிறது. கோமாதா கூட 172 இடங்களில்தான் வருகிறது. (R.S. Sharma/ India’s Ancient Past). சிந்து சமவெளியில் குதிரை இருந்தது என்பதை நிலைநாட்டினால், அது ஆரிய நாகரிகம் என்பதையும் நிலைநாட்ட முடியும் என கணக்கு போட்டனர். அதற்காக நாசாவில் பணியாற்றிய ஒரு விஞ்ஞானியை பயன்படுத்தி ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டனர். எனினும், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. எந்த ஆய்வாளரும் இந்த கருத்தை ஏற்க தயாராக இல்லை.
சங் பரிவாரத்தின் அடுத்த முயற்சி, சிந்து நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என நிலைநாட்டும் முயற்சியாகும். சங் பரிவாரம் முன்வைக்கும் சரஸ்வதி நதி, ஒரு சிறிய ஆறாகவே இருந்துள்ளது. அதில் அனைத்து காலங்களிலும் நீர் இருந்தது இல்லை. சிந்து சமவெளியின் ஒரு பகுதி சரஸ்வதி நதியின் அருகில் இருந்தாலும், சிந்து அளவுக்கு சரஸ்வதி பெரிய ஆறு இல்லை. மேலும், சரஸ்வதி ஆறு நாளடைவில் மறைந்துவிட்டது. பின்னர் ஹக்ரா-காகர் நதிதான் சரஸ்வதி நதி என சங் பரிவாரத்தினர் நிலைநாட்ட முயல்கின்றனர். ஹக்ரா-காகர் நதியின் ஒரு துணை நதிதான் சரஸ்வதி நதி. மேலும் ஹக்ரா- காகர்தான் சரஸ்வதி நதி என வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும், சிந்து சமவெளி நாகரிகத்தின் பெரும்பாலான குடியிருப்புகள் இந்த ஆற்றின் அருகே அல்ல; அதனைவிட்டு தள்ளிய பகுதிகளில்தான் இருந்தன என்பதையே தொல்லியல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. எனவே இதனை சிந்து-சரஸ்வதி நாகரிகம் என அழைப்பதில் எவ்வித நியாமும் இல்லை. அதற்கான வலுவான ஆதாரங்களும் இல்லை. (Amar Farooqi/ Social Formations in India). சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து-சரஸ்வதி நாகரிகம் என பெயர் மாற்றி, அதனை NCERT புத்தகங்களில் இடம்பெற செய்கின்றனர். இதன் மூலம், மாணவர்களின் சிந்தனையில் இந்த பொய்யை இடம் பெறச்செய்வது அவர்களது திட்டம். மாணவர்கள் மட்டுமல்லாது, சமூகத்தின் அனைத்து தளங்களிலும் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களின் நாகரிகம் என்பதை முன்னெடுக்கின்றனர்.
சங் பரிவாரத்தின் அரசியலும் மரபணு அறிவியலும்
மனித குல வரலாற்றின் பல்வேறு அம்சங்களை, குறிப்பாக ஆப்பிரிக்காவிலிருந்து 60,000 முதல் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஹோமோ சேப்பியன் எனப்படும் நவீன மனிதன், புலம்பெயர்வை நிர்ணயிப்பதில், மரபணு அறிவியல்முறை சமீப காலங்களில் மிக முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த மரபணு ஆய்வுகள், சிந்து நாகரிகம் மற்றும் ஆரிய நாகரிகம் குறித்தும், சில கண்டுபிடிப்புகளை முன்வைத்துள்ளன. ராகிகாரி எனும் சிந்து சமவெளி அகழாய்வு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் எலும்புக்கூட்டிலிருந்து பெறப்பட்ட மரபணுவை, ஸ்டெப்பி சமவெளி (ஆரியர்களின் பூர்வீகம்) பழங்கால மரபணுவுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது அது ஒத்திசைந்து இல்லை. எனவே, சிந்து சமவெளி மக்கள் ஆரியர்கள் அல்ல என்பதை இது மேலும் உறுதியாக்கியுள்ளது. எனினும் சில மரபணு ஆய்வாளர்களையும் தன்பக்கம் வென்றெடுக்க, சங் பரிவாரம் கடுமையாக முயல்கிறது. வெற்றியும் பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
மரபணு ஆய்வாளர் டேவிட் ரீச் தனது அனுபவத்தை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“என் அறிவியல் ஆய்வு வாழ்வின் மிகவும் மன அழுத்தமான நாட்களின் 24 மணி நேரம், நான் எனது கூட்டாளி நிக் பேட்டர்சனுடன் 2008ஆம் ஆண்டு ஹைதராபாத் வந்து (இந்திய மரபணு ஆய்வாளர்கள்) குமாரசாமி தங்கராசுடனும் லால்ஜி சிங்குடனும் விவாதித்தபோது ஏற்பட்டது. எங்கள் திட்டத்தையே தடுக்கும் விதத்தில், தங்கராஜ் மற்றும் லால்ஜி சிங்கின் வாதங்கள் இருந்தன. எங்கள் ஆய்வுப்படி, இன்றைய இந்தியர்கள் வேறுபட்ட இரு பிரிவினரின் கலப்பினம் எனவும், அவர்களில் ஒரு பிரிவினர் மேற்கு யூரேஷிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், நிலைநாட்டியிருந்தோம். ஆனால் இந்திய ஆய்வாளர்கள் இதனை மறுத்தனர். அவர்களின் மரபணு ஆய்வுப்படி, இந்தியர்கள் பல பத்தாயிரம் ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்தனர்; வெளியிலிருந்து வரவில்லை என வாதிட்டனர். மேலும், ஏன் இந்தியாவிலிருந்து மனிதர்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்திருக்க கூடாது எனவும், அவர்கள் வினவினர். ஆனால் எங்கள் ஆய்வின் முடிவுகள் நேர்மாறாக இருந்தன. எங்களது நிலையை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்த மரபணு ஆய்வு திட்டத்திலிருந்து விலகுவோம் எனும் அளவுக்கு அவர்கள் பேசினர். இன்றைய இந்தியர்கள் வெளியிலிருந்து இங்கு புலம் பெயர்ந்தனர் என முன்வைக்கும் எந்த ஆய்விலும் தாங்கள் பங்கேற்பதை விரும்பவில்லை எனவும், அவ்வாறு கூறப்பட்டால் அது பல அரசியல் அதிர்வுகளை உருவாக்கும் என பொருள்படும்படியும் அவர்கள் பேசினர்”.
எனவே இந்த மரபணு ஆய்வுத்திட்டத்தை முன்னெடுக்க, ஒரு சமரச திட்டம் உருவானது. அதன்படி, இன்றைய இந்தியர்கள், ஆதி வட இந்தியர்கள் (ANI) மற்றும் ஆதி தென் இந்தியர்கள் (ASI) எனும் முற்றிலும் வேற்பட்ட இரு பிரிவினரிடையே உருவான கலப்பினம் என முன்வைக்கப்பட்டது. ஆனால் ஆதி வட இந்தியர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை வரையறுப்பது தவிர்க்கப்பட்டது. டேவிட் ரீச் மற்றும் அவரது குழுவினரின் ஆய்வுப்படி, ஆதி வட இந்தியர்கள் மேற்கு யூரேஷியாவிலிருந்து வந்தவர்கள். ஆதி தென் இந்தியர்கள் மரபணுவில் இந்த நிலை இல்லை. ஆனால் இந்தியாவில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக, இதனை ஒருமித்த கருத்தாக சொல்ல இயலவில்லை என டேவிட் ரீச் குறிப்பிடுகிறார். அறிவியல்பூர்வமான முடிவுகளைக்கூட முன்வைப்பதில் எவ்வளவு சிக்கல்களை சங் பரிவாரம் தோற்றுவித்துள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது. பின்னர் ஒரு கட்டத்தில், ஆதி வட இந்தியர்களும் ஆதி தென் இந்தியர்களும் ஒன்றாக கலந்தனர். இன்றைய இந்திய மக்கள்தொகை இந்த இரு பிரிவினரின் கலப்பினம்தான் என குறிப்பிடும் டேவிட் ரீச், இந்தியாவில் தற்பொழுது உள்ள அனைத்து மக்களும் கலப்பினம்தான். எவரும் தனது மரபணு தூய்மையானது; மேலானது என பெருமைகொள்ள முடியாது என்பதை குறிப்பிடுகிறார். இன்னும் தெளிவாக கூறுவதானால், டேவிட் ரீச் மற்றும் அவரது குழுவினரின் மரபணு ஆய்வுப்படி, உலகில் எந்த குழுவும் அல்லது இனமும் தங்களது மரபணு தூய்மையானது; மற்றவர்களைவிட மேலானது என கூறிக்கொள்ள முடியாது. (David Reich/ Who we are and How we got here)
ஆய்வாளரின் அந்தர் பல்டி
அதேபோல டேவிட் ரீச் குழுவினருடன் இணைந்து மரபணு ஆய்வறிக்கையை வெளியிட்டவர்களில் ஒருவர் வசந்த் ஷிண்டே. இவர் புனேவில் உள்ள டெக்கான் பல்கலைகழகத்தின் துணை வேந்தர். சிந்து சமவெளி மக்களின் மரபணுக்கும் ஸ்டெப்பி பகுதியிலிருந்து வந்த ஆரியர்களின் மரபணுவுக்கும் தொடர்பு இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட ஷிண்டே, பின்னர் பல்டி அடித்தார். சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம்தான் எனவும், ஹரப்பா மொழி சமஸ்கிருதத்தின் ஒரு வடிவம்தான் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக வாதிட்டார். இதனை பல ஊடகங்கள் பெரிய செய்தியாக வெளியிட்டன. ஆனால் ஷிண்டேவின் கருத்துகள் உண்மைக்கு மாறானவை என இந்த ஆய்வறிக்கையை வெளியிட்ட ஏனைய ஆய்வாளர்கள் டேவிட் ரீச்/ வகீஷ் நரசிம்மன்/ நிக் பேட்டர்சன்/ நிரஜ் ராய் ஆகியோர் வலுவாக மறுத்தனர். சிந்து நாகரிகம் உட்பட இந்தியாவின் தொல் நாகரிகம் அனைத்தும் ஆரிய நாகரிகம்தான் என நிலைநாட்ட வலதுசாரிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது.
“இந்துக்கள் வேறு எங்கிருந்தும் இந்த நிலப்பகுதிக்கு வரவில்லை. அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். நினைவுக்கு அப்பாற்பட்ட காலத்திலிருந்து அவர்கள் இந்த மண்ணை சார்ந்தவர்கள். இதுதான் ஒரு தேசம் என்பதற்கு மிக மிக முக்கிய உட்கூறு. “என கோல்வல்கர் கூறுகிறார். அதனை நிலைநாட்டவே, சங் பரிவாரம் அனைத்து வழிகளிலும் முனைகின்றது. அதற்கு, சிந்து சமவெளி நாகரிகமும் ஆரிய நாகரிகம்தான் என்பதை அவர்கள் நிலைநாட்ட வேண்டியுள்ளது.
சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் ஆரிய அல்லது வேத நாகரிகத்துக்கும் மறுக்க முடியாத பல வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் சில:
- சிந்து சமவெளி நாகரிகம் நகர நாகரிகமாக இருந்தது. வேத நாகரிகம் நகரங்களை கொண்டிருக்கவில்லை.
- சிந்து சமவெளி மக்கள் விலங்குகளை தெய்வமாக வணங்கினர். ஆரியர்களின் தெய்வம் இந்திரன்/அக்னி ஆகியோர்.
- சிந்து சமவெளியில் எருதுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால், வேத காலத்தில் பசுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
- சிந்து சமவெளியில் குதிரை அறவே இல்லை. ஆரியர்களின் முக்கிய விலங்கு குதிரை. குதிரை பூட்டிய ரதங்கள் மூலம்தான் அவர்கள் எதிரிகளை வீழ்த்தினர்.
- சிந்து சமவெளியில் பெண் தெய்வங்களின் முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் ரிக் வேதத்தில் பெண் தெய்வம் என்பது இல்லை.
- சிந்து மக்கள் பெரும்பாலும் இறந்தவர்களை புதைத்தனர். வேத கால மக்கள் இறந்தவர்களை எரித்தனர்.
- வேதங்களில் பழமையான ரிக் வேதத்தின் காலம் கி.மு. 1500. ஆனால் சிந்து சமவெளியின் காலம் கி.மு. 3000 முதல் 1900.
- ஆரிய நாகரிகத்தில் இருந்த வர்ணாசிரமம் சிந்து நாகரிகத்தில் இல்லை.
சிந்து நாகரிகமும் சங்க கால இலக்கியங்களும்
சங்ககால இலக்கியங்கள் சிந்து நாகரிகத்தை மீள்பதிவு செய்துள்ளன என திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு கருதுகோளை முன்வைக்கிறார். இந்த ஆய்வுக்காக திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உழைப்பும் கடுமையான முயற்சிகளும் பிரமிக்கத்தக்கவை. அதே அமயத்தில் அவர் முன்வைக்கும் கருதுகோள்கள் விவாதத்துக்குரியவை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சங்க இலக்கியங்கள் தமிழின் தொன்மையையும் ஆழமான கருத்து செறிவும் கொண்டவை என்பது ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால், அவை சிந்து நாகரிகத்தை மீள்பதிவு செய்கின்றனவா என்பது விவாதத்துக்குரியது. சங்க இலக்கியங்களின் காலம் குறித்து பல மதிப்பீடுகள் இருந்தாலும், அதிகபட்சம் அவற்றின் தொடக்கம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்று மதிப்பிடப்பட்டுள்ளன. கீழடி ஆய்வுக்கு பின்னர் இதை கி.மு.6ஆம் நூற்றாண்டு என வைத்துக்கொண்டாலும், சிந்து நாகரிகம் கி.மு. 19ஆம் நூற்றாண்டில் சரியத் தொடங்கிவிட்டது. இடையில் 1,300 ஆண்டுகள் உள்ளன.
சங்ககால இலக்கியங்கள் இருவித சமூக அமைப்புகளை பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியாக உள்ளன. ஒன்று, ஆதிப்பொதுவுடமை சமூகத்தின் கடைசி கட்டம். இரண்டு, அதற்கு பின்னர் உருவான வர்க்கபேத சமூகம். ஆதிப்பொதுவுடமை சமூக காலகட்டத்தை ஏங்கெல்ஸ் 6 கட்டங்களாக பிரிக்கிறார். இந்த 6 கட்டங்களில் உணவு சேகரிக்கும் சமூகம்/ வேட்டை சமூகம்/ மேய்ச்சல் சமூகம்/ விவசாய சமூகம் என பரிணமித்ததை விளக்குகிறார். உணவு சேகரிக்கும் சமூகமாக இருந்த பொழுது பழங்களையும் கிழங்குகளையுமே பெரும்பாலும் மனிதன் சாப்பிட்டான் என சொல்கிறார் ஏங்கெல்ஸ். (The Origin of the Family, Private Property and the State).
இதனை சங்க இலக்கியங்கள் குறிஞ்சி பாடல்களில் கீழ்கண்டவாறு பிரதிபலிக்கின்றன:
“சிறுகுடியீரே சிறுகுடியீரே
வள்ளி கீழ்விழா வரைமிசைத் தேன்தொடா
கொல்லை குரல் வாங்கி ஈனா மலைவாழ்னர்
அல்ல புரிந்து ஒழுகலான்”
இதன் பொருள் – குடி மக்களே நீங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்காவிட்டால், பூமிக்கடியில் கிழங்குகள் கிடைக்கமாட்டா; மலைகளில் தேனீக்கள் கூடு கட்டமாட்டா. எனவே தேன் கிடைக்காது என்பதாகும். இன்னொரு பாடலில் இரும்பொறை எனும் மன்னனை வாழ்த்தும் புலவர்கள், “பழங்களும் கிழங்குகளும் உண்ண உண்ண ஆறாது எக்காலத்திலும் விளையும்படி வாழ்வாயாக!” என பாடுகின்றனர். இது உணவு சேகரிக்கும் சமூகம் இருந்ததன் பிரதிபலிப்பு.
சமூக அமைப்புகளின் நிலைக்கண்ணாடியாக சங்க இலக்கியங்கள்
சங்க இலக்கியத்தின் நற்றிணைப்பாடல் ஒன்று “கானவன் அம்பு எய்து கொன்ற முள்ளம்பன்றியின் இறைச்சியை வெட்டி எடுத்து, அவன் மனைவி கொடிச்சி அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்தாள்.” என பொருள்படும்படி உள்ளது. இங்கு இரு அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும். 1. வேட்டை சமூகம்- வில் அம்பு இல்லாமல் வேட்டை சாத்தியமில்லை. வில் அம்பு என்பது ஆதிப்பொதுவுடமை சமூகத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம்.2. பங்கிட்டு கொடுக்கும் உரிமை பெண்ணுக்கு. குடும்பத்தின் தலைமைப்பொறுப்பு பெண்ணிடம் இருந்தது. இது தாய்வழி சமூகம் இருந்ததை பிரதிபலிக்கிறது.
அதேபோல, சங்க இலக்கியங்கள் ஆநிரை சமூகம் குறித்து ஏராளமான பதிவுகளை கொண்டுள்ளன. கால்நடைகளை வளர்த்தல் – அவற்றை பராமரித்தல் – இன்னொரு குழு அவற்றை கவர்தல் – அதற்காக போர்கள் மற்றும் இறந்த வீரர்களுக்கு நடுகல் வைத்தல் என ஏராளமான பாடல்கள் உள்ளன. இது மேய்ச்சல் சமூகத்தை பிரதிபலிக்கும் பாடல்கள் ஆகும். இப்படி உணவு சேகரித்தல்/ வேட்டை ஆடுதல்/ மேய்ச்சல் சமூகம் என ஆதிப்பொதுவுடமை சமூகத்தின் கடைசி கட்டத்தை பிரதிபலிக்கும் பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. (சிலம்பு நா. செல்வராசு/ வரலாற்றுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்)
பின்னர் உருவான வர்க்க பேதமுள்ள சமூக அமைப்பை சங்க இலக்கியங்கள் பிரதிபலித்தன என்பதையும் கீழ்கண்டவாறு விளக்குகிறார் தோழர் கே. முத்தையா:
- “படையுங் கொடியுங் குடையுமுரசு
நடை நவில் புரவியுங் களிறுந்தேருந்
தாரு முடியு நேர்வன பிறவுந்
தெரிவு கொள் செங்கோ லரசர்க் குரிய”
படையும் ஆயுதங்களும் கொடியும் முரசும் குதிரையும் தேரும் முதலியன அரசர்களுக்கு உரியவை.
- “நூலே கரக முக்கோல் மனையே
ஆயுங் காலை யந்தணர்க்குரிய”
மூதாதைய நூல்களும் நீர்குண்டானும் முக்கோலும் மனையும் பிராமணர்களுக்குரியவை.
- “வைசிகன் பெறுமே
வணிக வாழ்க்கை”
வைசியர்களுக்கு வணிகம் தொழில்.
- “வேளாண் மாந்தர்க்கு
உழுதூண்ணல்லது
பிறவகை நிகழ்ச்சி”
விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உழுது படைப்பது மட்டுமல்லாமல் வேறு உரிமைகள் இல்லை.
- “அன்னராயினும் இழிந்
தோர்க்கில்லை”
மன்னவர் போல செல்வம் பெற்றிருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் அரச உரிமை பெறமாட்டார்கள்.
(கே. முத்தையா/ சங்க கால சமுதாயம்)
இப்படி சங்க இலக்கியங்கள் ஆதிப்பொதுவுடமை சமூகத்தின் இறுதிக்கட்டத்தையும், வர்க்கபேதமுள்ள சமூகத்தின் கட்டத்தையும் நிலைக்கண்ணாடிபோல துல்லியமாக பிரதிபலித்தன. அந்தப் பிரதிபலிப்புகளில் தமிழ்மொழியின் செழுமை இணையற்ற வகையில் வெளிப்பட்டது. ஆனால், அவற்றில் சிந்து சமவெளி நாகரிகத்தின் மீள்பதிவுகள் இருந்தன எனில், அதற்கான அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
கீழடியின் சிந்து சமவெளி தொடர்பு:
கீழடி மற்றும் தமிழ்நாட்டில் வேறு சில இடங்களில் நடக்கும் அகழாய்வில் கிடைக்கும் பல பொருட்கள் சிந்து நாகரிக அகழாய்வில் கிடைத்த பொருட்களுடன் ஒத்திசைந்து உள்ளன. இது பிரமிக்கத்தக்க சிறப்பான அம்சம். சிந்து நாகரிகம் சரிய தொடங்கிய பின்னர், அந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி இந்தியாவின் மேற்கு பகுதி/ மத்திய பகுதி/ மற்றும் தென்பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். அப்பொழுது இருவகை இடம் பெயர்வுகள் நடந்தன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒருபுறத்தில் சிந்து மக்களில் ஒரு பிரிவினர் அப்பொழுது இந்தியாவுக்குள் வந்த ஆரியர்களுடன் கலந்து கலப்பினம் உருவானது. இன்னொருபுறத்தில், ஆரியர்களுடன் கலப்பதை தவிர்த்த சிந்து நாகரிக மக்களில் ஒரு பிரிவினர், தமிழ்நாடு உட்பட தென் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களுடன் சிந்து நாகரிகத்தின் நினைவுகளையும் பண்பாடு கூறுகளையும் சுமந்து வந்தனர். இதன்விளைவாக, அவர்கள் இடம்பெயர்ந்த பகுதிகளில் சிந்து நாகரிகத்தின் பண்பாட்டு கூறுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. சிந்து நாகரிகத்தின் இந்த பயணம் பிரமிக்கத்தக்கது என்பதில் ஐயமில்லை!
அதேசமயத்தில் வேறுசில அம்சங்களையும் கவனத்தில் கொள்வது அவசியம். சிந்து மக்கள் தென்பகுதிக்கு வந்தபோது, ஏற்கெனவே இங்கு மக்கள் வாழ்ந்துவந்தனர். சமீபத்தில், வெம்பக்கோட்டையில் நடந்த அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட இரும்பின் வயது கி.மு.2172 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 2022 மே மாதம் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதாவது, சிந்து நாகரிகம் உச்சத்தில் இருந்த அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் இரும்பை பயன்படுத்தியுள்ளனர். சிந்து மக்கள் இரும்பைப் பயன்படுத்தவில்லை. இதன் பொருள் என்னவெனில், சிந்து நாகரிக மக்கள் இங்கு வருவதற்கு முன்பே, தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைந்த ஒரு பிரிவினர் இங்கு வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் பேசிய மொழி என்ன? நிச்சயமாக அது இந்தோ ஆரிய மொழியோ அல்லது சமஸ்கிருதமோ அல்ல. அது பெரும்பாலும் திராவிட குடும்பத்தின் மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அவர்கள் பேசிய மொழியும் சிந்து மக்களின் மொழியும் இணையாக இருந்தனவா? அல்லது அவை ஒன்றிணைந்ததா? புது மொழி உருவானதா? இவற்றுக்கான பதில்கள், ஆய்வுகள் மூலம் கிடைக்க வேண்டியுள்ளது. ஹரப்பா மொழிபோல, கீழடி மொழியும் குறிவிலக்கு செய்யப்படவில்லை. எனவே இத்தகைய பல பதில்களுக்கு நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. சிந்து மக்கள் தென்இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெயர்ந்தனர். அத்தகைய இடங்களிலும் சிந்து நாகரிகத்தின் கூறுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுக்க இயலாது.
இர்ஃபான் ஹபீப் அவர்களின் எச்சரிக்கை
ஹரப்பா மொழி குறித்து பல்வேறு விவாதங்களை குறிப்பிடும் பேராசிரியர் இர்ஃபான் ஹபீப், கீழ்கண்டவாறு எச்சரிக்கிறார்:
“சிந்து சமவெளியின் மிகப்பெரிய சாதனை, எழுத்துகளை கண்டுபிடித்ததுதான். கி.மு. 2500இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எழுத்துகள், கி.மு.2000க்கு பிறகு இந்த நாகரிகம் மறைந்த பொழுது அவையும் மறைந்துவிட்டன. ஹரப்பா மொழி உலகின் முதல் நான்கு எழுத்து வடிவங்களில் ஒன்று. ஆனால் இது எப்படி பரிணமித்தது எனும் விவரங்கள் இல்லை. இதற்கு முன்பு இருந்த தொடக்ககால எலமைட் மொழியின் தாக்கத்திலிருந்து இது உருவாகியிருக்கலாம். தென்மேற்கு ஈரானில் தோன்றிய எலமைட் மொழி, சிந்து சமவெளியின் எல்லைக்கு அருகே உள்ள ஷாஹர்-இ-சோக்டா வரை வந்துள்ளது. தொடக்ககால எலமைட் மொழியும் ஹரப்பா மொழியும் ஒன்றல்ல என்றாலும், ஒரே மாதிரியான எழுத்துக்கள் அல்லது குறியீடுகளை பெற்றுள்ளன. துரதிர்ஷ்டவசமாக இரு மொழிகளும் இன்னும் (decode) குறிவிலக்கப்படாமல் புரிந்துகொள்ளப்படாத தன்மையில்தான் உள்ளன.”
“சிந்து சமவெளியின் எழுத்துக்கள் குறிவிலக்கப்படாத (decode செய்யப்படாத) வரை இந்த முத்திரைகளின் அல்லது கல்வெட்டுகளின் உள்ளடக்கம் என்ன என்பதை நிலைநாட்ட முடியாது”
“(ஹரப்பா மொழி குறித்து) சில தொடக்கநிலை தற்காலிக மதிப்பீடுகளை தாண்டிச் செல்வது ஆபத்தானது. சிந்து சமவெளி குறித்து, அதன் மொழியே நமக்கு சொல்ல வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அந்த நாகரிகத்தின் சமூக அம்சங்கள்/ சடங்குகள்/ நம்பிக்கைகள் ஆகியவற்றை குறித்து, நாம் என்ன நினைக்கிறோம் என்பதன் அடிப்படையில், அந்த மொழி அல்லது எழுத்துக்கள் மீது திணிப்பது கூடாது. ஆரிய அல்லது வேதகால அம்சங்களை திணிக்க, பல்வேறு முயற்சிகள் நடக்கின்றன. (உதாரணத்துக்கு எஸ்.ஆர். ராவ்/ சுபாஷ் காக்/ என்.ஜா/ என்.எஸ். ராஜாராம் ஆகியோர் ஹரப்பா மொழியை கண்டுபிடித்து விட்டதாக கூறி, ஆரிய அம்சங்களை திணிக்க முயல்கின்றனர்.) இவை பொருத்தமற்றது என்பது மட்டுமல்ல; எவ்வித அடிப்படையும் இல்லாமல் இந்த கருத்துகள் உருவாக்கப்பட்டுள்ளதால், இவை நிராகரிக்கப்பட வேண்டியவை.
இதேபோல சிந்து சமவெளியின் பல குறியீடுகளுக்கு தொடக்ககால திராவிட ஒலிச்சொற்களை முழுவதுமாக தந்து, அந்த மொழியை புரிந்துகொள்ள முயல்வதும் ஒரு வகையில் தவறுதான். (உதாரணத்துக்கு அருட்தந்தை எச். ஹெராஸ்/ வால்டர் ஏ. ஃபேர் சர்விஸ்). எனினும், ஒருவேளை தொடக்ககால திராவிட மொழிக்கு சில தகுதிகள் இல்லை என்று கூறிவிட முடியாது.”
ஹரப்பா மொழியின் திராவிடத் தொடர்பு குறித்த கருதுகோளை கவனத்தில் கொள்ளும் அதேசமயத்தில், அது அறிவியல் அடிப்படையில் நிலைநாட்டப்பட்ட உண்மை அல்ல என்பதையும், அதற்காக ஹரப்பா மொழி குறிவிலக்கு செய்யப்படும்வரை பொறுத்திருப்பதுதான் பொருத்தமான அணுகுமுறையாகவும் இருக்க இயலும். அதேசமயத்தில், சிந்துவெளி ஆய்வறிக்கையின் நூற்றாண்டைக் கொண்டாடும்போது, நமது முன்னுரிமை, ஏற்கெனவே அறிவியல்பூர்வமாக நிலைநாட்டப்பட்ட உண்மைகளை, மக்களிடம் கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். அவை:
1. சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் அல்ல.
2. சிந்து சமவெளி மக்கள் ஆரியர்கள் அல்ல; அல்லது ஆரியர்களின் கலப்பினமும் அல்ல. சிந்து சமவெளி மக்கள்-ஆரியர் கலப்பினம் பிற்காலத்தில்தான் உருவானது.
3. சிந்து நாகரிக மக்களின் மொழி சமஸ்கிருதம் அல்ல.
அறிவியல் அடிப்படையில் நிலைநாட்டப்பட்ட மேற்கண்ட உண்மைகள் மூலம், சங் பரிவாரத்தின் திசைதிருப்பல்களை முறியடிப்பதுதான், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி அறிக்கையின் நூற்றாண்டு காலத்தில், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களாக இருக்க இயலும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
