இந்தியாவில் தேசிய இனப்பிரச்சனை
கே. முத்தையா
தோழர் கே. முத்தையா நூற்றாண்டு
[தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியும், மார்க்சிய சிந்தனையாளருமான தோழர் கே.முத்தையா, எழுத்தும் இயக்கச் செயல்பாடும் பின்னிப் பிணைந்த வாழ்க்கைக்கு சொந்தக்காரர். ஜனசக்தி இதழில் ஜீவானந்தத்துடன் இணைந்து பணியாற்றிய அவர், தீக்கதிர், செம்மலர் ஆகிய ஏடுகளின் ஆசிரியராக செயல்பட்டு, அந்த இதழ்களை வார்த்து எடுத்தவர். தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்து, வர்க்கப் பார்வையில் அவற்றை எடைபோட்டுப் புரிந்துகொள்வதற்கு தோழர் கே.எம். எழுத்துக்கள் இன்றும் வழிகாட்டுகின்றன. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதை நிலைநாட்டி, முன்னோக்கிச் செல்வதில் தவிர்க்கவியலாத பாத்திரம் வகித்தார். மார்க்சிஸ்ட் வாசகர்களுக்காக அவருடைய கீழ்க்காணும் கட்டுரை மார்க்சிஸ்ட் ‘கருவூலத்தில்’ இருந்து மறுபதிப்பு செய்யப்படுகிறது. – ஆசிரியர் குழு]
“இந்தியாவில் தொழிலாளி வர்க்க இயக்கம், வளர்ச்சியின் இன்றைய கட்டத்தில் இருகடமைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஒருபுறத்தில், பெருமுதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசாங்கத்தின் வர்க்க கொள்கைகளால் ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மையும், சீர்குலைவையும் சந்தித்து கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், குறுகிய தேசியவாத பிராந்திய சீர்குலைவு சக்திகளை நாடு சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில், இந்திய தேசிய இனங்கள் குறித்தும், அவை இந்திய ஒன்றியத்தில் ஒருமைப்பாட்டுடன் அமைவது குறித்தும், தன்னுடைய திட்டவட்டமான கொள்கையை வகுக்கும்படி தொழிலாளி வர்க்கம் அறைகூவி அழைக்கின்றது.
“இந்திய ஒற்றுமை, தொழிலாளிவர்க்க சர்வதேசியம் என்பனவற்றின் உண்மையான உணர்வில் போதனையளித்து, தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்தி, அணிதிரட்டுவதற்குப் பதிலாக, நாடுகளுக்கும், தேசிய இனங்களுக்கும் – பிரிந்து செல்லும் உரிமை உள்ளிட்ட, சுயநிர்ணய உரிமை என்ற முழக்கமானது குறுகிய தேசிய வாதம், இனவெறி கிளப்பும் சீர்குலைவு சக்திகளுக்கு சலுகைகள் அளிப்பதற்குச் சமமாகும்”.
“இந்தியாவில் தேசிய இனப்பிரச்சனை” குறித்து இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் இன்றைய விசேட கடமை என்ன என்பது குறித்து நீண்ட விவாதத்திற்குப்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவு இது. இந்த முடிவுக்கு வருவதற்கான காரணமென்ன? இந்தியாவில் தேசிய இனங்கள் தோன்றியதன் பின்னணி என்ன?
“செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்று பாரதியும், அவருக்குப்பின்
”தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா” என்று நாமக்கல் ராமலிங்கப் பிள்ளையும் முழங்கினர்.
இதையே சுதந்திரப் போராட்ட காலத்தில் தோன்றிய தேசிய இன எழுச்சியின் எதிரொலி என்கிறோம். இந்த எழுச்சியின் இன்றைய நிலை என்ன என்பதை ஆராய்வதற்குமுன், இந்தியாவில் அந்தப் பிரச்னை தோன்றிய வரலாறு குறித்தும், இந்திய வரலாறு உருவாக்கிய ஒரு பிரச்சினையை இந்திய விடுதலைக்காகப் போராடிய தேசிய காங்கிரஸ் எவ்வாறு அணுகியது என்பது குறித்தும், அதன் விளைவுகள் என்ன என்பதையும், புரிந்து கொள்வது அவசியமாகும்.
தேசிய இனம் என்றால் என்ன? அதன் அர்த்தமென்ன? தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியில் வாழக்கூடிய, அதன் மிகப் பெரும்பாலோர் ஒரே மொழியை பேசக்கூடிய, கிட்டத்தட்ட ஒரே விதமான பண்பாடு, கலாச்சார ஒருமைப்பாடு கொண்டது. அத்துடன் நெருக்கமான பொருளாதார உறவுகளையும் கொண்டுள்ள ஒரு பிரதேசத்தில் வாழும் மக்களையே ஒரு தேசிய இனம் என்று மார்க்சியம் கூறுகிறது.
இப்படிப்பட்ட ஒரு தேசிய இன மக்களிடையே உருவாகிய ஒற்றுமையின் உணர்வையே மேலே கூறிய பாரதி, நாமக்கல் கவிஞர் ஆகியோரின் பாடல்களில் காண்கிறோம். இவ்வாறு தமிழகம், கேரளம், கன்னடம், ஆந்திரம், மராட்டியம், வங்கம் போன்ற தேசிய இனங்கள் இங்கு தோன்றின. இவை இந்திய வரலாற்றில் குறிப்பிட்டதொரு காலகட்டத்தில் உருவான வரலாற்று உண்மை.
இந்த தேசிய இனங்கள் தோன்றி வளருவதற்கான ஆரம்பகால சின்னங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டன. எனினும், அவை தேசிய இனங்களாக, அதாவது, தேசிய இன உணர்வுடன் வளர்ந்து உருப்பெற்ற நிகழ்ச்சி நிகழ்ந்தது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான்.
பண்டைய இந்தியா என்பது தெற்கே, சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு என்ற அரசமைப்புகள் என்றும், வடக்கே, கோசலம், மகதம், அங்கம், வங்கம், கலிங்கம், பாஞ்சாலம் என்று 56 அரசர்கள் ஆண்ட நாடுகளைக் கொண்டதாகவும் இருந்தது. அந்த மன்னர்களின் படை பலத்திற்கேற்ப அந்த அரசர்களின் எண்ணிக்கை கூடுதலாகவும், குறைவாகவும் மாறி மாறி அமைந்திருந்தது என்பதே உண்மை வரலாறு.
பிரிட்டிஷார் நமது நாட்டை அடிமைப் படுத்திவிட்ட காலகட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியா என்றும், அத்துடன் 560க்கு மேற்பட்ட ராஜாக்களின் சமஸ்தானங்களாகவும் இருந்தன. இந்தியா என்கிற ஒரு “நாடு” அன்னிய ஆட்சியின் கீழ்தான் ஒருங்கிணைந்த இந்தியாவாக உருப்பெற்றது. இதற்குப் பின்னரே திட்டவட்டமான மொழிவழி தேசிய இனங்கள் தோன்றுகின்றன. அவை தேசிய இன உணர்வுடன் செயல்படத் துவங்கின.
வடக்கே நெடுங்காலங்களுக்கு முன்பு மக்கள் பேசிய பாலி, பிராகிருதம் போன்ற பிரதேச மொழிகளுடன் சமஸ்கிருத மொழி கலந்தது. பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த இந்த கலப்பு நிகழ்ச்சியின் விளைவே இந்தி, ஒரியா, வங்காளி, குஜராத்தி, மராத்தி, அசாமி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகள் தோன்றிய வரலாறு. இந்த மொழிகளுக்கென்று இலக்கணமும் (பாணிணி) தோன்றியது. தென்னகத்தில் அதனின்று சற்று மாறுபட்ட நிகழ்ச்சிப் போக்கினை காண்கிறோம். இங்கிருந்த பிரதேச மொழியுடன் சமஸ்கிருதம் கலந்தது எனினும், தென்னிந்தியாவில் உருவான மொழிகள் கிட்டத்தட்ட ஒரே விதமான இலக்கண அமைப்பினை உடைய, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய திராவிட மொழிகளாகும். இந்த திராவிட மொழிகள் பேசும் தென்னிந்திய மக்கள் அனைவருமே, ஒரே திராவிட தேசிய இனமாய் உருவாகவில்லை. மாறாக, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான், ரயில்வே, தபால், தந்தி போக்குவரத்து சாதனங்கள் ஒரே மொழி பேசிய மக்களிடையே தொடர்புகளை அதிகரித்தன. மேற்கூறிய ஒவ்வொரு மொழி பேசிய மக்களிடையே நெருக்கமான உறவுகள் அதிகரித்தன. ஒவ்வொரு மொழி பேசுவோரிடையேயும் கலாச்சார உறவுகளும் தொடர்புகளும் அதிகரித்தன. தத்தமது மொழிவழி இலக்கியங்களும், கலாச்சார பரிவர்த்தனைகளும் அதிகரித்தன.
இந்த வளர்ச்சி போக்கு நிகழ்ந்த சூழ்நிலை எது? ஏகாதிபத்திய ஆட்சி இந்தியாவில் தனது பண்முகச் சுரண்டலை ஒருமுகப்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் சுரண்டிக் கொள்ளையடித்த சூழ்நிலையில், இந்த மொழிவழி தேசிய, இன உணர்வு எழுந்தது. அது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலை போராட்டத்துடன் இணைந்து பிணைந்து அலைமோதி அடித்தது. இதற்கு பாரதியின் பாடலையே உதாரணமாகக் கூறலாம்.
“தமிழ் திருநாடு தன்னைப் பெற்ற – எங்கள் தாயென்று கும்மியடி பாப்பா அமிழ்தில் இனியதடி பாப்பா – நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா”
என்கிறார் பாரதி.
“செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்று பாடியவர். இந்த நம் தமிழ்நாட்டை “ஈன்றெடுத்தாய்” யாரென்பதை பாப்பா பாட்டின் அடுத்த பாடலில் தெளிவாக்கி விடுகிறார்.
“வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில் வாழும் குமரிமுனை – பாப்பா கிடக்கும் பெரிய கடல் கண்டாய் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா”
இவ்வாறு அன்று வளர்ந்துவிட்ட தேசிய இன உணர்வை வெளிப்படுத்திய பாரதி, இந்தியாவின் ஒற்றுமை என்ற பின்னணியிலேயே அதை வெளிப்படுத்துகிறார். இந்தியாவில் உருவான ஒவ்வொரு தேசிய இன இலக்கியத்திலும் இவ்வாறு இந்திய ஒற்றுமை உணர்வு வெளிப்படுகிறது. ஆங்கில மொழியை நம்மிடையே திணித்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி. அத்துடன் தங்களுடைய கலாச்சாரங்களையும் இங்கே புகுத்தியபோது, இந்தியாவில் அனைத்து தேசிய இனப் பிரதேசங்களிலிருந்தும் எதிர்ப்புகள் தோன்றின. இந்த எதிர்ப்பு, மத ரீதியான எதிர்ப்பாகவும் மாறியது. மறுபுறத்தில், ஆங்கிலேய பொருளாதார சுரண்டலுக்கு எதிராக சுதேசிய இயக்கமும் வளர்ந்தது. இந்த இயக்கம், இந்திய முதலாளித்துவம் வளர ஊக்கமளித்தது. தேசிய விடுதலை இயக்க வளர்ச்சியுடன் இந்திய முதலாளித்துவ வளர்ச்சியும் ஏற்பட்டது.
தேசிய இன உணர்வுக்கு உரமூட்டிய பொருளாதாரப் பின்னணி இது. இந்தப் பொருளாதார வளர்ச்சியில், ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது இயல்பு. இதற்குக் காரணம் ஏகாதிபத்திய சுரண்டலின் தன்மையே. அன்னிய முதலாளிகளுக்கு வசதியான பிரதேசங்களில் தங்களது தொழில்களைத் துவக்கினர். அன்னிய சுரண்டலின் விளைவு இது. இந்தியாவில் தேசிய இனங்களின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் இந்த அசமத்துவ வளர்ச்சி தேசிய இனப் பொறாமைகளையும், கசப்புணர்வுகளையும் கிளறிவிடுகின்றன. இதை முதலாளி வர்க்கக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. பிரிவினை கோஷங்களையும் எழுப்புகின்றன. இப்படிப்பட்ட கோஷங்களுக்கு அன்றும், இன்றும் ஏகாதிபத்தியம் ஊக்கமளித்து வருகிறது என்பது உலகறிந்த விஷயம்.
இந்திய வராற்றில் ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கியது என்ற பிரச்சனை இல்லை. மாறாக, ஒடுக்கப்பட்டு வந்த இந்திய தேசிய இனங்கள், ஒடுக்குகின்ற ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நின்றதே வரலாறு. இந்திய விடுதலைப் போராட்ட இயக்க காலத்தில் நிகழ்ந்த அனைத்து வகையான போராட்டங்களிலும் இதன் எதிரொலியை காணலாம்.
“தமிழ்த்திரு நாடுதனை – பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா” என்று பாடிய பாரதிதான்,
“கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்”
என்று ஒருமைப்பாட்டினை முழங்கினார்.
“வெள்ளிப்பனி மலையின் மீதுலவுவோம் மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம். அடி பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் – எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்”
-என பெருமையுடன் தோள் கொட்டினார் பாரதியார். இதேபோன்ற விடுதலைப் பாடல்கள் கேரளம், ஆந்திரம், வங்கம், மராட்டியம், இந்தி மொழி பேசிய பரந்த பிரதேசங்களிலும் உருவாகின. தமிழ் இன உணர்வும், தமிழ்நாடு என்ற சிந்தனையும், பாரத தேசம் எனும் எண்ண ஓட்டத்துடன் இணைந்தே வருகின்றன. இந்திய தேசிய இனங்கள் உணர்வு பெறுவதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், அவற்றின் ஒன்றுபட்ட நோக்கம்தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு, விடுதலை இயக்கம். இது வீறு கொண்ட போராட்ட அலைகளாய் எழுகின்றது என்பதனையே பார்க்கிறோம். இது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குறிக்கோளிலும், அமைப்பிலும் பிரதிபலித்தது.
1928-ஆம் ஆண்டில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் மாநாடு, இந்தியாவின் அரசியல் சட்டத்திற்கான கோட்பாடுகளைத் தீர்மானிப்பதற்காக பண்டிட் மோதிலால் நேரு தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அது கூறியதாவது:-
“கல்வி, அதைப் போன்றே பொதுவான கலாச்சாரம், வாழ்க்கையின் பல பிரிவுகள் ஆகியவற்றின் தீவிர முன்னேற்றமானது, மொழியையே சார்ந்திருக்கின்றன என்பது மிகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மொழியாக ஒரு அன்னிய மொழி இருக்குமேயானால், நாட்டின் உயிர்நாடியான வர்த்தகத்தின் வளர்ச்சியை குன்றச் செய்துவிடும். ஒரு ஜனநாயகம் அவற்றை நன்றாக அறிந்திருக்க வேண்டும். எனவே, நாட்டின் வர்த்தகத்தையும், அரசியலையும் மக்களால் புரிந்துகொள்ளப்படும் ஒரு மொழியில் நடத்துவது அவசியமாகிறது. மாகாணங்கள் சம்பந்தப்பட்டவரை இது மாகாண மொழியிலேயே இருக்கவேண்டும்.
எனவே, ஒரே மொழி வழி அடிப்படையில் மாகாணங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்” பண்டிட் மோதிலால் நேரு அறிக்கை (பக்கம் – 61,62)
தேசிய விடுதலைப் போராட்டத்தின் தேவையிலிருந்து, தேசிய ஒற்றுமையின் ஒரு பகுதியாகத்தான், தேசிய இன உணர்வின் அடிப்படையில் மொழிவழி மாநில கோரிக்கையும் எழுந்தன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
எதார்த்த நிலைமைகள் இவ்வாறு இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சி இதனை அங்கீகரிக்கவில்லை. அங்கீகரித்து அமுல் நடத்தவில்லை. நம் நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கியபோது, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு தேசம்தான் இது என்பதை சுதந்திர இந்தியாவின் தலைவர்கள் ஏற்க மறுத்தனர். இந்தியா என்பது “ஒரே தேசிய இனம்” என்றே எதார்த்தத்திற்கு புறம்பான கருத்தினைப் பேசினர். ஒருமைப்பாடுள்ள பல இந்திய தேசிய இனங்களின் ஒற்றுமையை உருவாக்குவதின் அவசியத்தை மறுத்தனர்.
வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் இந்து மத வாதத்தை சுதந்திர இயக்கத்துடன் இணைத்தனர். விளைவு?
சிறுபான்மையினரான முஸ்லீம் மக்களின் அச்சத்தினை அணி திரட்டிய முஸ்லீம் மதவாதம் தலைதூக்கியது. முஸ்லீம்கள் அனைவரும் ஓரினம், இந்துக்கள் அனைவரும் ஒரினம் என்ற மத அடிப்படையிலான விளக்கத்தை அது முன் வைத்தது. இந்திய மக்களையே அது இரண்டாக்கி கூறுபோட்டது. பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த ஏகாதிபத்திய குள்ளநரிகள் இருபுறமும் மத வெறியை தூபமிட்டு வளர்த்தனர். இறுதியில், சுதந்திரம் பெறும் போது முஸ்லீம்கள் பெரும்பான்மையான கிழக்கு வங்கதேசம், மேற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் பாகிஸ்தான் என்றும், மற்ற பகுதிகள் இந்திய யூனியன் என்றும், இந்திய நாட்டைக் கூறுபோட்டன.
ஜின்னா கூறிய மத ரீதியான ‘தேசிய இனம்’ அதாவது, இந்தியா என்பது இந்து, முஸ்லீம் என்ற இரு தேசிய இனங்களைக் கொண்டது என்ற தத்துவம் இன்று நடைமுறையில் என்ன ஆனது? மத அடிப்படையில் உருவான பாகிஸ்தான், இன்று மேற்கு பாகிஸ்தான், வங்க தேசம் என மேலும் இருகூறாகப் பிரிவதற்கே சென்றது. ஆக, ஜின்னாவின் மதவாத தத்துவம் முற்றிலும் தவறானது என்பதையே காலம் நிரூபித்து விட்டது. அதேபோல், பண்டைய வருண – இன அடிப்படையில், திராவிட இன பிரிவினை என்ற வருண – இனப் பிரிவினை கோஷத்தையும் மக்கள் ஏற்கவில்லை.
இது ஒரு புறமிருக்க “இந்திய யூனியன்” என்ற பெயரைக் கொண்டுள்ள இந்தியா உருவான பிறகு நடந்ததென்ன?
இந்தியா என்பது ஒரே ‘தேசிய இனம்’ என்ற தவறான தத்துவத்தையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பக் கூறியது காங்கிரஸ் தலைமை. மொழிவழி மாநிலங்கள் என்ற அடிப்படையில், காங்கிரஸ் ஸ்தாபனம் அமைக்கப்பட்ட கொள்கையைக் கூட, அரசு அமைப்பில் நடைமுறைப்படுத்த மறுத்தது. இந்த நிலைமையில், அன்று கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுதான் மொழிவழி மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினர். 1945-ஆம் ஆண்டில் இந்தக் கருத்தை ஆதாரமாகக் கொண்டு விரிவான இயக்கம் நடத்தினர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்திய பன்மொழி மாநிலங்களையும், இந்திய சமஸ்தானங்களையும் திருத்தி, மொழிவழி மாநிலங்களாக அமைக்க வேண்டும் என்றனர்.
உதாரணமாக, சென்னை மாகாணம், பிரிட்டிஷ் கவர்னரின் நேரடி ஆளுகையில் கீழிருந்த பிரதேசம். இது மலையாள மொழி பேசிய மலபார் மாவட்டம், கன்னட மொழி பேசிய தென் கன்னட மாவட்டம், தமிழகத்தில் பெரும்பகுதி, தெலுங்கு மொழி பேசிய பல மாவட்டங்கள், ஒரிய மொழி பேசிய ஒரு சிறு பகுதி அடங்கிய பன்மொழி மாகாணமாக அமைக்கப்பட்டிருந்தது. மொழிவழி தேசிய இன உணர்வு வளர்ந்துவிட்ட புதிய கால கட்டத்தில், மேற்கூறிய சென்னை மாகாணம், காலம் கடந்துவிட்ட ஒரு அமைப்பாகவே நீடித்தது.
எனவேதான், கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்திலும், அண்டையிலுள்ள திருவாங்கூர்-கொச்சி, புதுக்கோட்டை, மைசூர், ஹைதராபாத் ஆகிய மொழிவழி தேசிய இனங்களை மாநிலங்களாக அமைக்கக் கோரினர். இவ்வாறு மொழிவழி அமைப்புகளைக் கலைத்துவிட்டு மாநிலங்களாக அமைப்பதே இன்றைய யதார்த்தங்களை பிரதிபலிக்கும்; மக்களது ஜனநாயக உணர்வுகளை பிரதிபலிக்கும் என்றனர்.
இந்தப் பார்வையிலிருந்து எழுந்த நம் கோஷங்களே ‘புதிய தமிழகம்’ (புதுக்கோட்டை, திருவாங்கூர்- கொச்சியின் ஒரு பகுதியான குமரி மாவட்டமும் இணைந்த அமைப்பு). அதேபோல் எஞ்சிய திருவாங்கூர்- கொச்சி, மலபார் மாவட்டம், தென் கன்னடத்தின் ஒரு பகுதி இணைந்த “ஐக்கிய கேரளம்”. எஞ்சிய சென்னை மாகாணத்தின் தெலுங்கு பேசும் மாவட்டங்களும், ஹைதராபாத் சமஸ்தானத்திலிருந்த தெலுங்கானாவும் இணைந்த விசால ஆந்திரம். மைசூர் சமஸ்தானத்தின் பெரும் பகுதியும், ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதியும், சென்னை மாகாணத்தின் தென் கன்னடப் பகுதியும் இணைந்த “ஐக்கிய கன்னடம்”. பம்பாய் மாகாணத்தின் மராட்டிய மொழி பேசும் மாவட்டங்களும், ஹைதராபாத் சமஸ்தானத்தின் மராட்டிய பகுதியும் இணைந்த ‘சம்யுக்த மஹாராஷ்டிரம்’ என்ற மொழிவழி மாநிலம்.
இவ்வாறே இந்தியா முழுவதிலும் மொழிவழி தேசிய இனங்களாக உருவாகி இருப்பதை அங்கீகரித்து, அதனடிப்படையில் தேசிய இனங்களின் மாநில எல்லைகளை திருத்தி அமைக்க வேண்டுமென்று கோரினர்.இவ்வாறு திருத்தி அமைத்து, பூரண மாநில சுயாட்சி உரிமையும் வழங்கினால், இந்தியா மத அடிப்படையில் இந்துஸ்தான், பாகிஸ்தான் என்று பிரிக்க வேண்டுமென்ற முஸ்லீம் லீக் கிளர்ச்சியை சமாளித்து, இந்திய ஒற்றுமையைப் பாதுகாக்கலாம் என்று கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் நடத்தியது. இந்த அடிப்படையில் இந்தியாவின் எதிர்காலம் பற்றி இந்திய அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச வந்த, பிரிட்டிஷ் அரசாங்க மந்திரிசபை தூது கோஷ்டியிடமும் விண்ணப்ப அறிக்கை ஒன்றையும் கம்யூனிஸ்ட் கட்சி அளித்தது. ஆனால் இது ஏற்கப்படவில்லை. மத அடிப்படையில் நாட்டை பிரிவினை செய்ய முடிவு செய்துவிட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இதை மறுத்ததில் ஆச்சர்யமில்லை. மத அடிப்படையில் இந்தியாவைப் பிரித்தாளும் சூழ்ச்சியையே, இந்தியத் தலைவர்களிடம் சுதந்திர நாட்டின் அதிகாரத்தை ஒப்படைக்கும் சமயத்திலும் பின்பற்றியது. இதன் விளைவே இந்தியா, பாகிஸ்தான் என்று உருவான வரலாறு.
இவ்வாறு பிரிக்கப்பட்ட பாகிஸ்தானுக்குள்ளும், இந்தியாவுக்குள்ளும் ஒற்றுமை நிலவவில்லை. காரணம், இருநாடுகளிலும் பதவியில் அமர்ந்த காங்கிரஸ், முஸ்லீம் லீக் தலைவர்கள், இந்திய வரலாற்றில் நனவாகிவிட்ட தேசிய இனங்களை அங்கீகரிக்க மறுத்தனர். அதன் விளைவாக, இருநாடுகளிலும் ஒற்றுமைக்கு எதிரான பிரிவினைக் கிளர்ச்சிகள் உருவாயின.
மத அடிப்படையில் உருவான கிழக்குப் பாகிஸ்தான் (பங்களாதேஷ்) மேற்கு பாகிஸ்தானிலிருந்து (பஞ்சாபியர், சிந்தியர், பலுசிஸ்தானியர், பஸ்டு மொழி பேசும் வடமேற்கு எல்லை மாகாணத்தியர் அடங்கியது) பிரிந்தது. தற்போதுள்ள பாகிஸ்தானுக்குள்ளும், இந்த இன வளர்ச்சி உணர்வுக்கு மதிப்பு அளிக்காததினால், அங்கும் பிரிவினைப் போக்குகள் தொடருகின்றன. இதே போன்ற பிரச்சினையையே இன்று நாமும் சந்திக்க வேண்டியதேவையுள்ளது. தேசிய இனப் பிரச்னையை சரியானபடி அணுகாததின் விளைவாகத்தான் காலிஸ்தான், போடோ, ஜார்கண்ட் போன்ற பிரிவினை கிளர்ச்சிகள், இங்கெல்லாம் தோன்றின. சீர்குலைவு சக்திகள் மக்களது நியாயமான பிரதேச சுயாட்சிக் கோரிக்கைகளை, பிரிவினைவாதமாக மாற்ற முயற்சி செய்கின்றன. மக்களிடையே நிலவும் தேசிய இன உணர்வினை இன வெறியாக மாற்றிட முயற்சி செய்கின்றன. இதனை ஏகாதிபத்தியம் ஊக்குவிக்கிறது. இதற்கு முழுமுதற் காரணம் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பின்பற்றும் தவறான கொள்கையே. அவர்கள் பின்பற்றும் இந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ நலன்களைப் பாதுகாக்கும் கொள்கையில் மக்களது ஜனநாயகம் காவு கொடுக்கப்படுகிறது. வேட்கைக்காக
பெரிய நாடுகள் துண்டாடப்படுவது ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு
ஏற்றது. ஏனெனில் துண்டாடப்பட்ட பகுதிகளை ஏகாதிபத்தியம் சுலபமாக அடிமைப்படுத்திவிடும். ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட ஜனநாயக இயக்கங்களையும், பாட்டாளி வர்க்க ஒற்றுமையையும் சீர்குலைக்கவாவது, இவை பயன்படும். இதன் மூலம் தன் ஆதிக்கத்தை உருவாக்கிட முடியும் என்றும் ஏகாதிபத்தியங்கள் கணக்கு போடுகின்றன.
1979-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதியிட்டு சி.ஐ.ஏ. ஏஜெண்டுகளுக்கு அமெரிக்காவின் தகவல் நிலையம் “பிரம்மபுத்திரா” என்ற திட்டம் ஒன்றை அனுப்பி அது பற்றி ஆய்வு செய்யுமாறு கூறியது. அந்தச் சுற்றறிக்கையில் ஒரு பகுதி பின்வருமாறு:-
“சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவின் கிழக்குப்புற மாநிலங்களில் பிற்போக்கு பிரிவினைவாதங்களைக் கண்டுபிடிக்க வேண்டும், ஒரு சுதந்திர நாடு வேண்டுமென்ற கிளர்ச்சியைத் துவக்குவதற்காக அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தியாவில் பிரிவினை கோரிக்கை என்பது இன்று ஏகாதிபத்தியவாதிகளின் சூதாட்டப் பொருளாக மாறிவிட்டது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கும், சதிச் செயலல்லவா இது?
ஆனால், இன்றைய இந்த உண்மைகளை எல்லாம் புறக்கணித்து விட்டு, சிலர் கூப்பாடு போடுகின்றனர். சோவியத் யூனியனில் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கியுள்ள போது, இங்கு மட்டும் மறுப்பது கம்யூனிசமா? சோஷலிஸமா? என்றெல்லாம் யாந்திரீகமான கேள்விகளை எழுப்பி மக்களைக் குழப்ப சீர்குலைவுச் சக்திகள்
குறிப்பாக, நக்ஸலைட்டுகள் – முயற்சி செய்கின்றனர். அன்று சோவியத் யூனியனில் நிலவியது ஒரு விசேஷமான நிலைமை. மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகளுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த ஜார் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, ரஷ்ய நாட்டின் அனைத்து தேசிய இனங்களையும் அணி திரட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. ஜார் ஏகாதிபத்தியம் என்பது “பல தேசிய இனங்களின் சிறைக்கூடமாக விளங்கியது” என்றார் லெனின். ஜாரை வீழ்த்துவதின் மூலம் தங்களுக்கும் விடுதலை உண்டு என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால்தான் அந்த தேசிய இனங்களுக்கே பிரிந்துபோகும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை உண்டு என்றார் லெனின்.
சுயநிர்ணய உரிமையை வழங்கிய மாமேதை லெனின், மேற்கூறிய நிலைமை ‘சோவியத் யூனியனில் நிலவிய விசேஷ நிலைமை’ என்றார். அது அன்று, அவசரத் தேவையாயிருந்தது என்பதையும் விளக்கினார். ரோசா லக்சம்பர்க் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எழுதினார் .
“தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக ரஷ்யாவிலுள்ள விசேஷ நிலைமைகள் ஆஸ்திரியா நாட்டில் நாம் காண்பதற்கு முற்றிலும் மாறுபட்டது… ரஷ்யாவிலுள்ள தேசியப் பிரச்சினையில் இங்குள்ள விசேஷமான, திட்டவட்டமான, சரித்திர அம்சங்கள்தாம், தற்சமயத்தில் சுயநிர்ணய உரிமை பேசுவதற்கு நாடுகளுக்குள்ள உரிமையை அங்கீகரிப்பது நமது நாட்டின் விசேஷமான அவசரத் தேவையாக்கியுள்ளது.
(லெனின் தொகுதி நூல்கள் பாகம். 20. பக்கங்கள் 407-408) அதோடு மட்டுமல்லாது 1917-ஆம் ஆண்டு மே மாதத்தில் சுயநிர்ணய உரிமையைப் பற்றி பேசும்போது, லெனின் எச்சரிக்கை ஒன்றும் விடுத்தார். அவர் கூறினார்:
“சுதந்திரமாக நாடுகளுக்குள்ள பிரிந்து செல்லும் உரிமை என்பதை, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறித்த நாட்டிற்கு பிரிவினை தேவை என்று கூறப்படுவதோடு சேர்த்து பார்த்துக் குழப்பம் கொள்ளக்கூடாது. தொழிலாளி வர்க்கக் கட்சியானது ஒவ்வொரு குறிப்பிட்ட பிரச்னையிலும், முற்றிலும் சுதந்திரமாகத் தீர்மானிக்கவேண்டும். அவ்வாறு தீர்மானிக்கும்போது, ஒட்டு மொத்தமாக சமூக வளர்ச்சின் நலன்களையும், சோஷலிஸத்திற்காக தொழிலாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்ட நலன்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்”
(லெனின் தொகுதி நூல்கள்: பாகம் 24, பக்கங்கள் 302-303)
சுதந்திரத்திற்கு முன்னர், இந்திய மக்கள் தங்களுக்குள்ளேயே பிளவுபட்டு, பிரிந்து நின்றதை பயன்படுத்தியே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டை வளைத்துப் பிடித்தது. இன்று நம் நாட்டில் எழுந்துள்ள தேசிய இன எழுச்சிகளைப் பயன்படுத்தி, பிரிவினையைத் தூண்டி, நமது நாட்டில் நவீன காலனி ஆட்சியாக்கி அடிமைப்படுத்த சதி செய்கிறது. எனவே, பிரிவினை என்பது இன்று ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான கோஷமாகவே, இந்தியாவில் வைக்கப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் துவங்கி, இன்று காங்கிரஸ் ஆட்சியில் பின்பற்றப்படும் முதலாளித்துவ பாதையில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதற்கு இங்குள்ள ஒரு தேசிய இனம் மற்ற தேசிய இனங்களை அடக்குவதல்ல காரணம். அப்படிப்பட்ட நிலைமை இங்கு இல்லை. காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பின்பற்றும் பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கையே காரணம்.
“வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!” என்ற முழக்கத்துடன் திராவிட நாடு பிரிவினை கோஷம் வைக்கப்பட்டது. தெற்கேயுள்ள நான்கு தேசிய இனங்களின் மக்கள் அதனை ஏற்கவில்லை. தங்கள், தங்கள் மொழிவழி மாநில அமைப்புகளையே உருவாக்கக் கோரினர்.
தங்கள் தொழிலுக்கும், சுரண்டலுக்கும் ஏதுவான பகுதிகளில் வடக்கேயும், தெற்கேயும் உள்ள முதலாளிகள், சாதி,மதம், மொழி, இனம் பார்க்காமல் தொழில்களை உருவாக்குகின்றனர். இதன் விளைவாக, பிரதேச வளர்ச்சிகளில் அசமத்துவம் ஏற்படுவது இயல்பு. முறையான திட்டமிட்ட வளர்ச்சி மூலமே இதை மாற்ற முடியும். எனவே, காங்கிரஸ் ஆட்சியாளரின் பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கையை மாற்றுவதே இன்றைய பிரதான பிரச்னை.
இந்தக் குறிக்கோளுடன், இந்திய மக்களது ஜனநாயக ஒற்றுமை என்ற பதாகையை உயர்த்திப் பிடிக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. மாநிலங்களுக்கு சுயாட்சி, மொழிகளுக்கு சம அந்தஸ்து என்ற கோரிக்கைகளுடன் தேசிய இனங்களின் ஒற்றுமை என்ற முழக்கத்தை முன் வைக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி! இதுவே தேசிய இனப் பிரச்னை குறித்த தெளிவான அணுகுமுறை. இந்த நாட்டில், இல்லாத தேசிய இன ஒடுக்குமுறை இருப்பதாகக் கூறி தவறு செய்யாமல், இந்திய ஒற்றுமை, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற உண்மையான உணர்வில் தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டுகிறது. ஏகபோக முதலாளிகளின் பிரதிநிதியான காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, மக்கள் ஜனநாயகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் தேசிய இனப் பிரச்சனைக்கு இறுதியான தீர்வு காண முடியும்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
