
மெய் சிலிர்க்க வைக்கும் கையூர் தோழர்களின் உயிர்த்தியாகம்!
மார்ச் 29: கையூர் தியாகிகள் நினைவுதினம்
அன்வர் உசேன்
1943ஆம் ஆண்டு மார்ச் 29ம் நாள் அபுபக்கர், சிறுகண்டன், மடாத்தில் அப்பு, குன்ஹாம்பு நாயர் ஆகிய 25க்கும் குறைவான வயதுடைய 4 இளம் கம்யூனிஸ்டுகள் பிரிட்டஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டனர். கையூர் தியாகிகள் என நீங்கா புகழ்பெற்ற இவர்கள் கேரளாவின் காசர்கோடு மாவட்டம் கையூரில் நடந்த போராட்டத்தில் ஒரு விவசாயிகள் போராட்டத்தில் காவலர் இறந்ததை குற்றச்சாட்டாக முன்வைத்து தூக்கு தண்டனை தரப்பட்டது. இந்த தூக்கு தண்டனை மூலம் பிரிட்டஷ் அரசின் நோக்கம் என்னவெனில் கேரளாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை முளையிலேயே அழிப்பது ஆகும். ஆனால் இந்த மகத்தான கம்யூனிடுகளின் தியாகம் இயக்கத்தை பன்மடங்கு வளர்த்தது.
தூக்கிலிருவதற்கு சில நாட்களுக்கு முன்பு இவர்களை கட்சியின் அன்றைய பொது செயலாளர் பி.சி. ஜோஷி, பி. சுந்தரையா, கிருஷ்ணப்பிள்ளை ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ஜோஷி எழுதியது:
“உங்களை சந்திப்பதற்கு எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு என் வாழ்க்கையின் மிகப்பெரிய பேறு என நான் எண்ணுகிறேன். உங்களின் உயிரைவிட மேலாக நீங்கள் நேசிக்கும் கட்சியிடமிருந்து நான் வாழ்த்துக்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன். இங்கிருந்து நேராக உங்களின் கிராமமான கையூருக்குதான் செல்கிறேன். உங்களின் குடும்பங்களை நான் சந்திக்க செல்கிறேன். அவர்களுக்கு உங்களிடமிருந்து ஏதாவது செய்தி உள்ளதா?”
“அவர்களை கவலைப்பட வேண்டாம் எனவும் தைரியமாக இருக்கும்படியும் கூறுங்கள்” என அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.
வேறு ஏதாவது கூற வேண்டியுள்ளதா என நான் கேட்டேன்.
“எங்களின் மனதில் என்ன இருந்ததோ அனைத்தையும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்” என அவர்களில் ஒரு தோழர் கூறினார்.
“இல்லை! இல்லை! இந்த நேர்காணலில் எவ்வளவு நேரம் உள்ளதோ அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் வெளியில் உள்ள தோழர்களிடம் கூற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் என்னை கிழித்துவிடுவார்கள். எனக்கு கூர்மையான நினைவாற்றல் உண்டு. எனவே உங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்களிடம் நான் கொண்டு செல்வேன்” என நான் சிரித்து கொண்டே கூறினேன்.
சிறை அதிகாரி கடிகாரத்தை பார்த்தார். நான் தோழர்களை விரைவாக பேசுமாறு கூறினேன்.
முதல் அறையில் இருந்த தோழர் கும்ஹாம்பு பேசினார்.
“மக்களுக்கு நான் என்ன செய்தேனோ அதனை செய்ய என்னை ஆளாக்கியது கட்சிதான்! எனது கடமையை நான் சரியாக செய்து முடித்தேன் என கட்சி மதிப்பிட்டால் அது ஒன்றுதான் என் வாழ்வின் ஒரே விருப்பமாக இருக்க முடியும்!”
தோழர் அப்பு கூறினார்:
“கட்சி வளர்ந்து கொண்டுள்ளது எனும் மகத்தான செய்தியை நீங்கள் கொண்டு வந்துள்ளீர்கள். இப்பொழுது கூடுதல் மன உறுதியுடன் நாங்கள் தூக்கு மேடை ஏறுவோம். இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடவும் உயிரை அர்ப்பணிக்கவும்தான் நாங்கள் கட்சியில் இணைந்தோம்.”
தோழர் சிறுகண்டன் கூறினார்:
“நாங்கள் வெறும் நான்கு விவசாயிகள்தான்! ஆனால் இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். எங்களை அவர்கள் தூக்கு மேடைக்கு அனுப்பலாம். ஆனால் ஏனைய விவசாயிகளை அவர்கள் அழிக்க இயலாது. இந்த உறுதிதான் எங்களின் மன வலிமையை நீடிக்க செய்துள்ளது. இத்தகைய தேசத்தின் மக்களுக்காக பணியாற்றிட வாழ முடியாமல் போகிறதே எனும் வருத்தம்தான் தேசத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து வந்துள்ள இந்த கடிதங்களை பார்க்கும் போது உருவாகிறது. எங்களுக்கு வேறு எந்த ஒரு வருத்தமும் இல்லை. எங்களுக்கு பல பிறவிகள் இருந்தால் மீண்டும் மீண்டும் நமது இலட்சியத்திற்காக நாங்கள் உயிரை விடுவோம்”
தோழர் சிறுகண்டன் இரண்டு பெரிய விவசாய போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
இறுதியாக தோழர் அபுபக்கர் கூறினார்:
“நமது தியாகிகளின் வாழ்விலிருந்துதான் நாங்கள் உத்வேகம் பெற்றோம். நாங்களும் அந்த பெருமையின் ஒரு அங்கமாக இருப்போம் என கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. எந்த பயமும் இல்லாமல் நாங்கள் தூக்குமேடை ஏறுவோம் என தோழர்களிடம் கூறுங்கள். எனது தாயார் வயதானவர். அவரை தைரியமாக இருக்க சொல்லுங்கள். எனது சகோதரர்கள் மிகவும் இளையவர்கள். அவர்களை கட்சி பணிக்காக கல்வி புகட்டுங்கள். நான்தான் குடும்பத்தின் மூத்த பிள்ளை. அவர்களை பார்த்துகொள்ள வேறு எவரும் இல்லை.”
அபுபக்கர் தனது இறுதி வார்த்தையை கூறுவதற்கும் சிறை அதிகாரி நேரம் முடிந்துவிட்டது என கூறுவதற்கும் சரியாக இருந்தது.
நான் வராந்தாவை பார்த்தேன். அங்கு மலர்களை படுக்கை போல விரித்து வைத்திருந்தனர். நான் கூறினேன்:
“இந்த மலர்கள் அழிந்துவிடக்கூடும். ஆனால் தோழர்களே நீங்கள் மனிதத்தின் மலர்கள். உங்களுக்கு அழிவு என்பதே இல்லை.”
நானும் சுந்தரைய்யாவும் தனியாக இருந்த பொழுது அதுவரை மவுனம் காத்த சுந்தரைய்யா ஆழ்ந்த சிந்தனையுடன் கூறினார்:
“அவர்களுக்கு தைரியம் சொல்லத்தான் நீங்கள் வந்தீர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு தைரியத்தை தந்துள்ளனர்” என்றார்.
நான் கூறினேன்: “அவர்கள் நமது தியாகிகள். அவர்களுக்கு தைரியம் தேவை இல்லை. அவர்கள் தூக்கிலிடப்பட்டால் அவர்களின் தோழனாகிய நான்தான் தனிமைப்படுவேன். எனவே தைரியம் எனக்கு தேவையாக இருந்தது; அதனை நான் பெற்றேன்” இந்த பதிலைதான் நான் சுந்தரய்யாவுக்கு தர முடிந்தது.”
இத்தகைய மகத்தான தியாகங்கள்தான் கம்யூனிஸ்டு இயக்கத்தின் அடித்தளம். எந்த சக்தியும் கம்யூனிஸ்டு இயக்கத்தை அழிக்க இயலாமல் தோல்வி அடைவதற்கு இத்தகைய மகத்தான தியாகம்தான் காரணம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply