
தோழர் பகத்சிங் : இந்திய புரட்சியின் வினையூக்கி
மார்ச் 23: பகத்சிங் நினைவுதினம்
ஜி. செல்வா
1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி பிறந்து, ஏகாதிபத்திய – காலனியாதிக்க அதிகார கூட்டத்தினால் 1931ஆம் ஆண்டு மார்ச் 23இல் தூக்கிலேற்றி கொல்லப்பட்ட 23 வயது இளைஞன் மாவீரன் பகத்சிங்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெரும் முதலாளித்துவ நிலப்பரப்புத்துவ கட்டமைப்புக்கு எதிராக கூர்மையாக செயலாற்றியவர் தோழர் பகத்சிங். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பகத்சிங் இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான தமிழ் நிலப்பரப்பு வரை தனது சிந்தனைகளால் செயல்பாடுகளால் வியாபித்து நின்றிருந்தார். “தேசப்பிதா மகாத்மா காந்திக்கு இணையாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவராக பகத்சிங் திகழ்ந்தார்” என்பதை காங்கிரஸ் இயக்கத்தின் அதிகாரபூர்வ வரலாற்று நூல் பதிவு செய்துள்ளது. பகத்சிங் தூக்கில் ஏற்றி கொல்லப்பட்ட காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பகத்சிங் படம் போட்ட தீப்பெட்டி உருவாக்கப் பட்டிருந்தது. பகத்சிங் எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” பிரசுரம் தந்தை பெரியார் இயக்கத்தினால் தமிழில் வெளியிடப்பட்டது. “மகாத்மா காந்தி வாழ்க, காங்கிரஸ் வாழ்க” என முழக்கங்கள் எழுப்பப்பட்ட காலத்தில் “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கம் இந்திய துணைக் கண்டம் எங்கும் உக்கிரமாக ஒலிக்க வைத்தவர் பகத்சிங்.
கம்யூனிஸ்ட் இயக்கமும், கம்யூனிஸ்ட் நூல்களும் தடை செய்யப்பட்ட காலத்தில் பொதுவுடமை இலட்சியத்தை நோக்கி இயல்பாக முன்னேறியவர், தன் சகாக்களை அவ்வாறே செயல்பட வழி நடத்தியவர். குறிப்பாக, இந்துஸ்தான் ரிபப்ளிக் அசோசியேசன் (HRA) என்கிற தனது அமைப்பின் பெயரை இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிப்பளிக் அசோசியேசன் (HSRA) என பெயர் மாற்றம் செய்தார். மாமேதை லெனினுக்கு வாழ்த்து மடல் தீட்டியவர். அடிமை இந்தியா பொதுவுடமை இலட்சிய பாதையை நோக்கி செல்வதற்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவர் பகத்சிங்.
பகத்சிங் மற்றும் அவரது அமைப்பு முன்னெடுத்த “புரட்சிகர மற்றும் வகுப்புவாதமற்ற தேசியவாதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்திருந்தது என்பதை “அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்” (They Lived Dangerously) நூலில் மன்மத் நாத் குப்தா சுட்டிக்காட்டி உள்ளார்.
1927ஆம் ஆண்டில் புரட்சிகர சோசலிச தத்துவத்தை முதன்முதலாக ஏற்றுக் கொண்ட இளைஞர் குழுவாக பகத்சிங் தலைமையிலான அமைப்பு இருந்ததை எடுத்துக்காட்டி, இத்தகைய அடிச்சுவட்டில் காந்தி, நேரு, ஜின்னா போன்றோர் நடந்திருந்தால் இந்திய துணை கண்டத்தின் வரலாறு வேறு விதமாக, சிறப்பு வாய்ந்ததாக மாறி இருக்கும் என விடுதலைப் போராட்ட வீரர் மன்மத் நாத் குப்தா பதிவு செய்துள்ளார்.
இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிப்பளிக் அசோசியேசன் 1928 காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு போன்று செயல்பட பகத்சிங் வழிநடத்தியுள்ளார். “புரட்சி என்பதன் பொருள், தற்போது நிலவிக் கொண்டிருக்கும் சமூக ஒழுங்கை அடியோடு முற்று முழுதாகத் தூக்கியெறிந்து விட்டு, அதற்கு மாற்றாக சோஷலிஸ்ட் சமூக ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதே” என குறிப்பிடும் பகத்சிங்., “அந்தக் குறிக்கோளுக்காக நமது உடனடியான இலக்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவது. அரசு, அரசாங்க இயந்திரம் ஆகிய அமைப்புகள், ஆளும் வர்க்கத்திற்குத் தங்களின் நலன்களை முன்னெடுப்பதற்கும், பாதுகாத்துக்கொள்வதற்கும் உரிய ஓர் ஆயுதம் என்பது உண்மை தான். நாம் அதே இயந்திரத்தைப் பறித்தெடுத்துக் கொண்டு, நமது இலட்சியமான, மார்க்சிஸ்ட் கருத்தியல் அடிப்படையில் இச்சமூகத்தைச் சிறப்பான முறையில் மறுகட்டுமானம் செய்ய விரும்புகிறோம்; அந்தக் குறிக்கோளுக்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறோம் இந்தக் குறிக்கோளுக்காக அரசாங்க இயந்திரத்தைக் கையாளுவதற்கு நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த எல்லாவற்றோடும் நமது சமூகத் திட்டத்திற்கான ஏற்றதொரு சாதகமான சூழலை உருவாக்குவதற்கு, பரந்து பட்ட வெகுமக்கள் திரளுக்குக் கல்வி கற்பித்தே ஆக வேண்டும். போராட்டங்களில் அவர்களுக்கு ஆகச்சிறந்த முறையில் பயிற்சியளித்துக் கற்பிக்க முடியும்.” என்கிறார்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலகட்டத்தில் இந்திய மக்களின் பின் தங்கியிருந்த அரசியல் உணர்வு நிலையிலிருந்து விழிப்புணர் உருவாக்க எழுச்சியை ஏற்படுத்த லாகூர் மாணவர் சங்கம், பால் மாணவர் சங்கம் மற்றும் பால் பாரத் சபா போன்ற பல வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதில் முன்நின்றார் பகத்சிங்.
பன்னிரண்டு முதல் பதினாறு வயது வரையிலான பள்ளி மாணவர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக “பால் பாரத் சபா” செயல்பட்டது. தாய்நாட்டு விடுதலைக்காக செயலாற்றிய “பால் பாரத் சபா” அமைப்பின் 11 வயது கொண்ட கஷன் சந்த் (Kashan Chand) மூன்று மாத காலம் தீவிர சிறை தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். இந்த அமைப்பின் தீவிர செயல்பாடுகளின் காரணமாக விடுதலைப் போராட்டத்தின் வீரியம் பன்மடங்கு பெருகும் என்பதால் அக்கால கட்டத்தில் 15 வயதுக்குட்பட்ட 1192 பாலர் சங்கர் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்களை, மாணவர்களை அரசியல் மையப்படுத்திய பகத்சிங்கின் வரலாற்று ஆளுமை இன்று வரை அதிகாரப்பூர்வமான வரலாற்று ஏடுகள் அங்கீகரிக்காமல் மவுனம் காக்கின்றன.
புரட்சிகர செயல்பாட்டில் நடைமுறை உத்தியை வகுப்பதில் பகத்சிங்கின் அறிவார்ந்த புரிதல் முக்கியமானது. “உங்கள் எதிரியிடமிருந்து நீங்கள் பதினாறு அணாக்களைப் பெற்று விட வேண்டுமென்று போராடுகிறீர்கள். ஆனால், ஒரே ஓர் அணாவைத்தான் உங்களால் பெற முடிந்தென்றால் அதைச் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு எஞ்சிய அணாக்களுக்காகப் போராட வேண்டும். ஆனால் மிதவாதிகளிடம் நாம் கவனிக்கூடியது என்னவென்றால், அவர்களுடைய இலட்சியமே ஒரே ஓர் அணாவைப் பெறுவது தான்; அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. புரட்சிக்காரர்கள் எப்போதுமே தங்களின் மனதில் கட்டாயம் இருத்திக் கொண்டிருக்க வேண்டிய ஒன்று, தாங்கள் போராடிக்கொண்டிருப்பது முழுமையான ஒரு புரட்சிக்காகத்தான் என்பதையே. தங்களின் கரங்களில் அதிகாரத்தை முற்றாகத் தேர்ச்சி மிக்க வகையில் கையாள வேண்டும் என்பதையே. சமரசங்கள் நமக்கு அச்சம் தருபவையாக இருக்கின்றன. காரணம், பழைமைவாதிகள், சமரசங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் புதைமணற் குவியல்கள் போன்ற படுகுழிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் புரட்சிகரமான சக்திகளைக் கலைத்து விரட்டி விட முயல்கிறார்கள். அத்தகைய அபாயகரமான சூழல்களில், உண்மையான பிரச்னைகளிலிருந்து நம்மைத் திசை திருப்பும் எவ்விதமான குழப்பங்களும் நேர்ந்து விடாமல், குறிப்பாக நமது இலட்சியத்திலிருந்து திசை திருப்பி விடாமல் நாம் கட்டாயமாக மிகவும் கவனமாக இருந்தாக வேண்டும்” என எழுதி உள்ளார் பகத்சிங்.
இந்திய மண்ணில் மத அடிப்படையில் பிளவு படுத்தும் கருத்தியல் வலுவாக வேரூன்றிய காலகட்டத்தில் அதற்கு எதிரான நிலையில் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை, தேசிய விடுதலை, சோசலிசம் ஆகிய கருத்தோட்டங்களை நோக்கி 23 வயதுக்குட்பட்ட இளைஞன் பகத்சிங் முன்னின்று நகர்த்திய விடுதலைப் போர் புரட்சிகரமானது.
ஆனால், காங்கிரஸ் இயக்கம் இந்து மத அடிப்படைவாத கருத்துக்களோடு இணைந்து இயங்கியது. விளைவு, 1931 ல் பகத்சிங் தூக்கிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தொண்டர்கள் கான்பூரில் முழு அடைப்பு செய்யுமாறு பொதுமக்களை கட்டாயப்படுத்தி வன்செயல்களில் இறங்க அதுவே கான்பூரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான முழு மதக்கலவரமாக முடிந்தது. கிலாபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கங்களின் போது இந்து – இஸ்லாமியரிடையே இருந்த நட்புணர்வு எங்கோ சென்று மறைந்து விட்டது. நாற்பத்தி ரெண்டு மசூதிகளும் பதினெட்டு இந்து ஆலயங்களும் அழிக்கப்பட்டன. பல மனித உயிர்கள் பறிக்கப்பட்டன.” என பத்திரிகயாளர் அக்ஷய முகுல் ” இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்” ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரன் பகத்சிங் கனவு கண்ட அடிப்படையில் தேசம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து போராடி அரசியல் விடுதலை பெற்றுவிட்டது. ஆனால் பகத்சிங் திட்டமிட்டு செயலாற்றிய சமூகப் பொருளாதார விடுதலைக்கான போராட்டங்கள் அப்படியே நின்று கொண்டிருக்கின்றன. அதிலும் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் – பாஜக விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களை முழுமையாக சிதைத்து சீரழித்து வரும் நிலையில் சமகால முதலாளித்துவத்திற்கு எதிராக உறுதிமிக்க செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பிற்போக்கு மத, சாதிய, பாலின அடிப்படை வாத கருத்துகளுக்கு எதிராக அரசியல் விழிப்புணர்வு களத்தில் துடிப்புடன் செயலாற்ற பகத்சிங் அவர் காலத்தில் முன்னெடுத்த நடவடிக்கைகளை நினைவில் நிறுத்தி செயலாற்றுவோம்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply